சங்கீதாவின் கோள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 4,922 
 

கோள் விசும்பை நோக்கி வளரும் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தும் அதற்கே என்று வாங்கிய பெரியதொரு பூச்சாடியில் அதை வீட்டிற்குள் கொலுவிருத்தினாள். அரம்பையின் எண்ணம் வேறாகியது.

இலங்கையில் இருந்து அதைக் கடத்திக் கொண்டு வருவதற்குச் செய்த பிரயத்தனம் சங்கீதாவின் நினைவில் வந்து போயிற்று. இலங்கையில் இருந்து அதன் கிழங்கைச் சட்டப்படி நோர்வேக்குள் கொண்டுவர முடியாது. ஈட்டி இலைக் கிழங்கை மிகவும் சிறிய முளை உடன் கொண்டு சென்றால் மட்டுமே அது பிழைத்து வாழ்வதற்குச் சாத்தியமாய் இருக்கும் என்று அத்தை அவிப்பிராயப்பட்டார். அவர் அனுபவம் உள்ளவர். அவர் அவிப்பிராயம் அதில் நிச்சயம் பிழைக்காது. அதுவும் இந்த வான்பயிரைப் பிடுங்கி நடுவது பற்றிய அவர் அவிப்பிராம் என்றும் பிழைப்பதே இல்லை. பிள்ளைகளைவிட அவருக்கு அவற்றில்தான் அதிக அக்கறையும் பரிவும். உலக இருப்பிற்கு எது அவசியம் என்பதில் அவர் செயல் நிதர்சனத்தை உணர்ந்த சித்தர்கள் போன்றது. பிள்ளைகள் எப்போதும் கொண்டுவா கொண்டுவா என்று வறுக நிற்கிறார்கள் என்பார். அம்பணம் கொடுப்பதற்கு மேல் அள்ளிக் கொடுக்கும் தாவரம் என்பார். பயணம் புறப்பட்ட அன்று அத்தை சங்கீதாவுக்காக சிறிய கிழங்காகப் பார்த்து அவர் வளவில் இருந்து அவரே அதைத் தொண்டி எடுத்துக் கொண்டு வந்தார். பின்பு அதற்கு ஏற்ற முறையில் அதைச் சிறிய “றெயிபோம்” பெட்டியில் மடலின் இறந்த பாகங்கள் சுற்றிவரச் சடைந்து வைத்து, முளை உடையாது இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்து, பின்பு அதை மரப்பெட்டிக்குள் வைத்து, மூடி ஆணி அறைந்து, துணியால் சுற்றிச் சங்கீதாவின் பெரிய பயணப் பெட்டிக்குள் வைத்தார். சங்கீதா இம்முறை பனசத்திற்காக பயத்தம் பணியாரத்தையும், மிளகாய்த் தூளையும் தியாகம் செய்ய வேண்டி வந்தது. அவை போனாலும் பருவாய் இல்லை அரம்பைக் கன்று ஒன்றை நோர்வேயில் வளர்க்க வேண்டும் என்கின்ற அடங்காத மோகம் அவளுக்குத் தீரும் என்கின்ற எண்ணம். அதை நிறைவேற்றுவதில் இமயத்தின் உச்சியில் ஏறி நின்ற சந்தோசம்.

அப்படியாகக் கடத்திவரப்பட்ட அம்பணக்கிழங்கிற்குப் பிரத்தியேக வெப்பமும், ஒளியும் பாச்சி மூட்டை மூட்டையாக வாங்கி வந்த கறுத்தப் பசளை மண்ணைக் கொட்டித்தான் அந்தப் பெரிய சாடியில் அதைக் கொலுவிருத்தினாள். சாடி அவளைப் பரிதாபமாகப் பார்த்தது. தாவரத்திற்கு வெப்பம், ஒளி, நல்ல மண், நீர் இருந்தால் அவை தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் என்பதை சங்கீதாவின் கோளும் நிரூபித்தது. அதன் சிறிய முளை மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.

விதையில் இருந்து சிறு பயிராக, கிழங்கில் இருந்து சிறு முளையாக என்று தோற்றம் பெறுபவையே இறுதியில் பெரும் விருட்சங்கள் ஆகின்றன. மூலம் சிறிதிலும் சிறிது என்றாலும் முடிவு பெரிதாகவே இருக்கிறது. அது உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் பொருந்துகிறது. பிரச்சனைகளுக்கும் பொருந்துகிறது.

சங்கீதா நோர்வேக்கு அகதியாக வந்தாள். வந்த பின்பும் கொண்டு வந்த யாழ்ப்பாணக் கௌரவத்தால் உந்தப்பட்டு ஆர்வத்தோடு படித்தாள். மருத்துவரான அவளுக்கு நல்ல வேலையும், அதற்கு ஏற்ப சம்பளமும் கிடைக்கிறது. இனிக் கலியாணம் தானே என்கின்ற வாழ்க்கையின் அடுத்த படிநிலை அவளுக்கும் தவிர்க்க முடியாது வந்தது. மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், விபரங்களும் வந்தன. மாப்பிள்ளைக்குப் படிப்பு இருந்தால் அழகு, நிறம் இருக்காது. அழகு, நிறம் இருந்தால் படிப்பு இருக்காது. எல்லாம் இருந்தால் வயது தோதாக வராது. அதையும் விட்டால் குறிப்புப் பொருந்தாது. சிலவேளைப் பட்டிக்காட்டான் போலத் தோன்றுவான். சிலவேளை ஆடையைக் கிழித்துவிட்டு நிற்பான். இவையும் தாண்டினால் சாதி மாற முடியாது. சமயம் மாற முடியாது. யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவராக மட்டும் தான் இருக்க வேண்டும். இன்னும்… இன்னும் பல பல நிபந்தனைகள். பிடிப்பது மிகவும் சில. அவற்றில் சில நபர்களுடன் கதைத்தும் இருக்கிறாள். அவள் எண்ணங்களுக்கும் அவர்கள் எண்ணங்களுக்கும், அவள் விருப்பங்களுக்கும் அவர்கள் விருப்பங்களுக்கும் பல வேளை ஒத்து வராத எதிர்த் திசையாக இருக்கும். சிலவேளை இலங்கையில் இருந்து எடுக்க வேண்டி இருக்கும். அப்போது இனி அங்கிருந்து எடுப்பதற்குச் சிரமப்பட வேண்டுமா என்றும் அவளுக்குத் தோன்றும். அப்படி யாராவது ஒத்துக் கொண்டாலும் ஏதோ யோசித்துவிட்டுச் சொல்லுகிறோம் என்பார்கள். அல்லது இருப்பதைவிடப் பல மடங்கு சீதனம் தரவேண்டும் என்பார்கள். நீ எப்படித் தனித்து வாழ்ந்தாய் என்று அவளைக் கேட்பார்கள். இரண்டு பகுதியும் கொப்பில் ஏறிக் கொள்வார்கள். சமாதானமாக பின்பு பதில் வரும் என்பார்கள். பின்பு பதில் வராதே காலம் போகும். திரும்பக் கேட்க அவளது கௌரவம் தடுக்கும். அவை எல்லாம் வெளிக் காரணங்கள் என்று நினைத்தாள். இருந்தும் அவள் கட்டிய பல சுவர்கள் அவள் தெரிவுக்குத் தடையாகியது அவளுக்கு ஒருபோதும் விளங்கியது இல்லை. தந்த காலத்திற்குள் தான் நினைத்ததைச் செய்துவிடு அல்லது இந்தப் பூமியை விட்டுப் போய்விடு என்பதில் இயற்கை தனது கடும் போக்கை எப்போதும் கைவிட்டதாக இல்லை. மருத்துவர் என்றோ பொறியியலாளர் என்றோ அதற்குக் கவலை இல்லை.

*

சங்கீதாவின் கோளிற்கு ஆரம்பக்காலம் ஆனந்தமாய் இருந்தது. கொஞ்ச நாளிலேயே அதன் வளர்ச்சி சங்கீதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மின் ஒளி முகட்டில் இருந்து படும்படியாக மாற்றிச் செய்ய வேண்டி வந்தது. அதற்காகச் சில ஆயிரம் குரோணர்கள் பார்த்தும் பாராமலும் அவள் செலவு செய்தாள்.

*

இந்தியாவில் இருந்தும் நிறை ஆட்கள் நோர்வேக்குக் கணினித்துறையில் பணிபுரிவதற்கு வருகிறார்கள். இந்தியாவில் திருமணம் செய்வது என்கின்ற எண்ணத்தையே அவள் ஒரு போதும் விரும்பியது இல்லை. சீதனத்திற்காக உயிரோடு கொளுத்துவார்கள் என்கின்ற ஒரு பொதுவான பயமும், அவிப்பிராயமும் அவளிடம் உண்டு. அதைவிட யாழ்ப்பாணத்தில் அன்றும் இன்றும் அது நல்ல முறையாக யாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதும் இல்லை என்பது அவள் எண்ணம். மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளியில் திருமணம் செய்தாலே அவர்கள் விலக்கப்படுவது சட்டத்திற்கும் அடங்காத நடைமுறை என்று அவளுக்குத் தெரியும்.

பல நாட்கள் சங்கீதா தலைக்குச் சாயம் பூசவில்லை. அன்று கண்ணாடியில் நின்று தன்னைப் பார்த்தவள் திடுக்குற்றாள் என்று பொய் சொல்ல முடியாது. ஆனால் திரும்பி வரமுடியாத சோர்வை எய்தினாள் என்று சொல்லலாம். இப்படிச் சோர்வு எய்தும் போது இனி அடுத்துக் கிடைக்கும் யாரையாவது திருமணம் செய்யது கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பாள். ஆனால் அடுத்த முறை புகைப்படம் வரும் பொழுது அல்லது கதைக்கும் பொழுது அது மறந்துவிடும். திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறைதான் வரும். அதில் அவசரம் காட்டக்கூடாது என்று பழைய சோர்விற்கான புதிய உற்சாகமாய் அது அவளது அந்தச் சமாதானங்களைத் தூக்கி எறியும். மீண்டும் மீண்டும் சமந்தங்களும் வந்து போகும். மீண்டும் மீண்டும் அதைத் தட்டி விடுவதற்கு முறையான காரணங்களும் அவளிடம் தோன்றி மறையும்.

*

அரம்பைக் கன்று வளர்ந்து முகட்டைத் தொட்டது. அதை இனிக் கன்று என்று சொல்ல முடியாது. அதன் வளர்ச்சியின் வேகம் காலத்திற்குக் கட்டப்பட்டாலும் வீட்டிற்குள் கட்டி வைக்க முடியாதோ என்கின்ற பயம் சங்கீதாவுக்கு ஏற்பட்டது. கலியாணம் செய்யாது இருந்துவிட்டுக் கடைசி காலத்தின் தனிமையில், அந்தத் தனிமையில் சாவின் பயம் வரும் போது தவண்டை அடிப்பது போல ஒருவிதமான கலக்கம். என்றாலும் அவள் அன்பாக ஆசையோடு கொண்டு வந்து வளர்க்கும் அம்பணம் அது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். வாழையடி வாழையாகத் தொடர்ந்தும் அதன் சந்ததி அவள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். “இதைத்தானே அப்பா, அம்மா, சகோதரங்கள், சுற்றம் என்று எல்லோரும் அடிக்கடி சொன்னார்கள்?” அவர்கள் அப்படிச் சொல்லும் போது சில வேளை சங்கீதாவிற்கு சினம் வரும். “எனக்குத் தெரியாதா?” என்கின்ற கேள்வி எழும். “நல்லதாக அமைந்தால் செய்வேன் தானே?” என்று அவள் தன்முடிவில் மாறாது தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வாள். சமாதானம் சொல்லும்வரைதான் சொல்லலாம். அது சொல்ல முடியாத காலமும் சில வேளை வரும். அப்போது ஏதாவது செய்ய வேண்டும். யாரையாவது…? முதலில் அவளுக்கு அப்படித்தான் தோன்றும். அது சோர்வில் மட்டும் தோன்றுவது. பின்பு மீண்டும் அது விலகும். அனைத்தும் ஒரு அளவிற்குள் இருக்க வேண்டும். அந்த அளவை மீறிப் போனால் பின்பு நாங்கள் விரும்பினாலும் இலகுவில் அந்த இடத்திற்குத் திரும்பி வந்துவிட முடியாது என்றும் அவளுக்கு அதிசயமாக எண்ணத் தோன்றும். முடிவு எடுக்க வேண்டும். பெண்களுக்கு இயற்கையின் விடாப்பிடியான வயது இருக்கிறது. அதைத் தாண்டினால் காய்க்காத மரங்கள் போல. அதுவும் கலியாணம் செய்யாமல் கன்னியாக இருப்பதும் ஒன்றுதான். இயற்கையை மீறினால் அது தயவு காட்டவே காட்டாது. பல வேளைகளில் அவள் புத்திசாலியாக இருந்து இருக்கிறாள். ஆனால் இந்த விசயத்தில் தான் சுயநலவாதியாக இருந்து விட்டேனோ என்று அவளுக்கு இப்போது இடைக்கிடை எண்ணத் தோன்றுவது உண்டு.

*

சங்கீதாவின் கோள் முகட்டைத் தொட்டது மாத்திரம் இல்லாது ஒரு தகட்டை வேறு சிறிது பேர்த்து விட்டது. அது விழுந்து விடப் போகும் பல் போல் முகட்டில் தொங்கியது. சாடி வெடித்துப் பிளப்பதற்குத் தயாராக நின்றது. வாழ்ந்தது போதும் என்று அது வானம் பார்க்கத் தயாரானது. சங்கீதா அதைச் சுற்றிக் கயிற்றால் கட்டி வாழ வைத்தாள். அதனால் மடலிற்கு அளவு நீர் மட்டுமே இப்போது.

இதற்கு மேல் என்ன செய்வது என்று சங்கீதாவிற்கு விளங்கவில்லை. தச்சு வேலை செய்யும் தனது நோர்வேஜிய நண்பர் ஒருவரைக் கூட்டி வந்து காண்பித்தாள். “அரம்பை தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் முகட்டைப் பிரிக்க வேண்டும். முகட்டைப் பிரித்து மேலே எழுப்புவதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டும். அது முதலில் இப்படி ஒரு ஒழுங்கற்ற வீடு வருவதற்கு அனுமதி தருமா என்பது சந்தேகமே. அப்படிச் செய்தாலும் வீடு விற்கும் போது அது ஒரு பிரச்சனையாக வரும். மீண்டும் முகட்டைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும். அரம்பைக்கு முன்பும், பின்பும் பல இலட்சங்கள் நீங்கள் செலவு செய்ய வேண்டும். இதை எல்லாம் நீங்கள் முதலில் யோசித்து இருக்கலாம். நான் தென் அமரிக்கா போய் வருவேன். அங்கு மூன்று அடி உயரம் மட்டுமே வளரும் பனசங்களைப் பார்த்து இருக்கிறேன். நீங்கள் அப்படி ஒரு பனசத்தை வளர்த்து இருக்கலாம். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்று தீர்க்கமாக முடிவு செய்யுங்கள். உங்கள் முடிவைப் பொறுத்து நான் எது வேண்டும் என்றாலும் செய்து தருகிறேன்.” என்று அவர் கூறினார்.

“சரி நீங்கள் போய் வாருங்கள். நான் முடிவு செய்த உடன் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.” என்று கூறி அவரை அனுப்பிவிட்டாள்.

அதன் பின்பு அவள் நித்திரை இல்லாது பல நாட்கள் புரண்டு புரண்டு படுத்தாள். கதலி சாடியைவிட்டு வெளியேறப் போவதாகச் சத்தம் போட்டது. எப்படி எண்ணினாலும் அவளுக்கு வேறு முடிவுகள் தோதாகத் தெரியவில்லை. என்றோ ஒருநாள் வரும் முடிவும் அதுதான். கடைசியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். தனது நண்பரைத் தொடர்பு கொண்டு வரச் சொன்னாள். வந்தவர் அவளைப் பார்த்து,

“நீங்கள் கவலையாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.” என்றார்.

“நான் முதலில் கவலையாகத்தான் இருந்தேன். நன்கு யோசித்த பின்பு நான் கவலைப்பட இதில் எதுவும் இல்லை என்பது எனக்கு விளங்கியது.” என்றாள். பின்பு அவரைப் பார்த்து,

“இனி சிறிய, அடக்கமான, பூச்செடி ஒன்றை வளர்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன்.” என்று கூறினாள்.

– செப்ரெம்பர் 29, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *