கௌரவர் சபை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 6,711 
 

இவன் வேண்டாம் என்றுதான் சொன்னான் ; அப்பா கேட்கவில்லை. ஆனால் இந்த முறையும் ஏமாறாமல், அந்த வேலை மாத்திரம் கிடைத்திருந்தால் குடும்பத்தின் திணறலுக்கு விடுதலையாய்த்தான் இருந்திருக்கும். இப்போது வேலையும் கிடைக்காமல், பணமும் தெருவில் போய்விட்டது. ஒன்றிரண்டில்லை. கிட்டத்தட்ட நாலாயிரம்.

குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல்தான் அப்பா இதற்குச் சம்மதித்திருக்க வேண்டும். இளமையின் மதமதப்பிலும், அப்போது கையிலிருந்த பணத்தின் ஈரப் பசப்பிலும் உறவினர்களைத் தூக்கி எறிந்தாகிவிட்டது. இனி எவனும் தீக்குச்சி கூடக் கொடுக்கமாட்டான். அக்கா கல்யாணத்தின் போதே இது இவனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னைப் போல் தன் பிள்ளைகளும், எல்லா வருடமும் அநேகமாய்ப் பொய்த்துவிடும் மழையையும், மிளகாய் விலைகளையும் நம்பிப் போய் நடுத்தெருவிற்கு வந்து விடக்கூடாது என்றுதான் இவனை எம்.ஏ. படிக்கச் செலவழித்தார். ஆனால் அந்தச் செடி பூக்காமலேயே கருகி விட்டது.

இன்னும் கே,ஆரைப் பிடிக்க முடியவில்லை. இன்று காலை, இந்த ‘ ரிக்ரெட் ’ கார்டு வந்ததிலிருந்து மூன்று தரம் போய்த் தேடியாயிற்று. வீட்டிலும், வழக்கமாய் உட்கார்ந்திருக்கும் கடையிலும் ஆளைக் காணோம். கிடைத்தால்…

பாய்ந்து, சட்டையைப் பற்றி முறுக்கிக் கொண்டு கெட்ட வார்த்தை சொல்லி இரைய வேண்டும். ஊர் கூட்டி வேட்டியை உரித்துத் துரத்த வேண்டும். முகத்தில் அறைந்து நியாயம் கேட்க வேண்டும்… முடியாது, இது அந்தக் காலங்கள் இல்லை. அவனுக்கு அதிகாரத்தினிடம் இருக்கும் செல்வாக்கின் முன் எல்லாம் பணிந்து போகும். படிப்பு, தர்மம், நியாயம் கேட்கும் நெஞ்சுரம் எல்லாம். இது கௌரவர் சபை.

இதன் முன்னர் அப்பாவே பணிந்து போனார். நாலாயிரம் முன்வைத்து, அந்த முதல் சந்திப்ழு இன்னும் நினைவில் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் அப்பா, பெரிய கும்பிடாய்ப் போட்டார்.

“ வாங்க பிள்ளைவாள், என்ன விஷயம் ? ” கே. ஆருக்கு நல்ல குரல், மேடையில் பேசிப் பேசிக் கனமேறிய குரல்.

“ இவன் நம்ம பையன். ”

அவர் நிமிர்ந்து இவனைப் பார்த்தார்.

“ வாங்க தம்பி, என்ன படிச்சிருக்கீங்க ? ”

“ எம். ஏ. ”

“ இவன் விஷயமாய்த்தான் வந்தேன். முடிச்சு இரண்டு வருஷமாச்சு. இன்னும் ஒரு வேலை குதிரலை. ”

“ அடடே ! ”

“ இப்போ… இடத்திலே ஆள் எடுக்கிறாங்கனு மனுப் போட்டிருக்கான். நீங்கதான் ஏதாச்சும் வழி காட்டணும்.”

“ ம் … பார்ப்போம். தம்பி, நாளைக்கு அப்ளிகேஷன் காப்பி ஒண்ணு எங்கிட்ட கொடு.”

அப்பா மீண்டும் வாசலில் தயங்கிக் கும்பிட்டார்.

“ நீங்கதான் … ”

“ ம் … கவனிச்சுக்கலாமுங்க … ”

அப்புறமும், அப்பாவும் அவரும் மெட்ராஸ் போனார்கள். இவனும் கூடப்போனான். அவரே ஒரு டாக்ஸி பிடித்து ஒரு ‘ நல்ல ’ ஓட்டலில் இறங்கினார். யார் யாரையோ அடுத்தடுத்துச் சந்தித்தார்கள். டாக்ஸி மீட்டர்களிலும் ஓட்டல் சிற்றுண்டிகளிலும் 400 ரூபாய் கரைந்து போனது. இரண்டாம் நாள் மாலை, “பிள்ளைவாள், வழியிலிருக்கிறவங்களுக்கு எல்லாம் போட வேண்டியிருக்கு. இரண்டாயிரம் ஆகும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டேங்குதே…” என்றார்.

அப்பா கொஞ்சம் யோசித்தார். ஊருக்கு வந்து புரட்டிக் கொடுக்கிறேன் என்றார்.

ஒன்றும் புரட்டவில்லை. நிலத்தை ஒத்திவைக்கிறேன் என்றார். அம்மா, காளியாய்க் கத்தினாள். அப்புறம், ஒரு நாள் அழுதுகொண்டே, அக்காவிற்குப் போட்டது போக, மீந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். ஆனால், இரண்டு மாதம் கழித்து கே.ஆர். கூப்பிட்டு விட்டபோது, நிலத்தை ஒத்திவைக்க வேண்டியே வந்துவிட்டது. இன்னோர் இரண்டாயிரம்…

“ தூ … ! ’’

படியேறி மணியை ஒலித்தான். இந்த முறையும் அவள்தான் திறந்தாள். கையில் ஒரு வாரப் பத்திரிகை : இவனைப் பார்த்ததும் தாவணியை இழுத்து விட்டுக் கொண்டாள்.

“ அப்பா … யாரோ வந்திருக்காங்க … ” என்று உள்ளே போனாள்.

“ வாங்க தம்பி … ”

இப்போதும் அந்த முறுவல், பொய்களுக்கு நடுவே எப்போதும் பொய்க்காத அந்த முறுவல். இவன் அந்தக் கார்டை நீட்டினான். ஆத்திரத்தில் பேச வார்த்தைகள் அற்று மௌனமாய் அவர் முகத்தைப் படித்தான்.

“ என்ன இதுனு புரியலையே. நடுவிலே யாரோ வேலை செய்திருக்காங்க. அடுத்தவாரம் மெட்ராஸ் போறேன், பார்க்கறேன். நீங்க கவலைப்படாதீங்க தம்பி, முடிச்சுடுவோம் … ”

ஒரு முறுவலைச் சூடிக்கொண்டு எவ்வளவு இயல்பாய் பொய் சொல்ல முடிகிறது இவனால். சளைக்காமல் எத்தனை அப்பாக்களின் இருப்புக்களை உரிந்து எரிய முடிகிறது. இதற்குப் பின்னும் இவனால் இங்கு கூச்சமின்றித் தலை நிமிர்ந்து நடக்க முடியும். இது கொளரவர் சபை.

காம்பௌண்டின் இரும்புக் கதவை அறைந்து சாத்தினான். பக்கத்துக் குப்பைத் தொட்டியில் மேய்ந்து கொண்டிருந்த நாய் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தது. இவன் பொருட்படுத்தாமல் மேலே நடந்தான். திடுமென நினைப்புக் கொண்டு சில அடிகளுக்குப் பின் நின்றான். காலில் இடறிய கல்லை எடுத்து வீசினான். ‘ ஊவ் ’ என்று வீறிட்டு, நொண்டிக் கொண்டு மறைந்தது. இவனால் இந்த நாய்களைத்தான் அடிக்க முடியும். இந்த நாய்களை மாத்திரம்தான்.

– 26-01-1975

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *