கோமள விலாஸ்

 

பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு ட்ரிப் அடித்தால் என்ன?” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் பொத்துக்கொண்டது. ஏனென்றால் இருபது வருடங்களுக்கு முன் நான் Hewlett Packard கம்பெனியின் ஹெச்.ஆரில் வேலை பார்த்தபோது சிங்கப்பூர் ஹெச்.ஆருக்கு ஒரு வருடம் அனுப்பப் பட்டேன். ஆனால் அந்த ஒரு வருடம் பணி நிமித்தமாக இரண்டு வருடங்களாக நீட்டிக்கப் பட்டது. அந்த இரண்டு வருடங்களும் நான் சொர்க்கத்தில்தான் வசித்தேன் என்றால் அது மிகையல்ல.

அப்போது எனக்கு நாற்பது வயது. சிங்கப்பூரின் மூலை முடுக்குகளை நன்றாக அறிமுகப் படுத்திக்கொண்டேன். வார இறுதிகளில் சிங்கப்பூரின் சுற்றுலாத் தளங்களை அடிக்கடி தரிசித்தேன். இரண்டு முறைகள் காரில் மலேஷியாவும் ஒருமுறை இந்தோனேஷியாவும் சென்று வந்தேன்.

சிங்கப்பூரில் இருந்த அந்த இரண்டு வருடங்களும் நான் மிகவும் நேசித்த ஒரு இடம் லிட்டில் இந்தியாவில் சரங்கூன் ரோடில் இருக்கும் கோமள விலாஸ். அங்குதான் தமிழனான எனக்கு நம்ம ஊர் ருசியில் டிபன், காபி, சாப்பாடு என்று விதம் விதமாக கிடைத்தது. அவைகளை ரசித்துச் சாப்பிட்டேன். உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் உடனே அவர்களை கோமள விலாஸ் கூட்டிச் சென்றுவிடுவேன்.

நாளடைவில் கோமள விலாஸின் பூரி மசால் கிழங்கிற்கும்; மசால் தோசைக்கும்; வாயில் மணக்கும் காபிக்கும்; வக்கணையான சாப்பாட்டிற்கும் நான் சொக்கிப் போனேன்.

இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு சிங்கப்பூர் டாலர் கிட்டத்தட்ட முப்பது ரூபாய். எனவே ஒவ்வொரு டாலர் செலவழிக்கும் போதும் அதை இந்தியக் கணக்கில் ஒப்பிட்டுப் பார்த்து முதல் சில மாதங்கள் மலைத்துப் போய் நின்றேன். அப்புறம்தான் அதிலிருந்து மீண்டு வந்தேன். கோமள விலாஸில் மிகத் தரமான உணவுகள் மிக நியாயமான விலையில் விற்கப்பட்டன. அதனால் அங்கு எப்போதும் கூட்டம் அம்மியது.

கோமள விலாஸ் கல்லாப் பெட்டியில் அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் உட்கார்ந்திருப்பார். சிவந்த நிறத்தில், எப்போதும் நெற்றியில் பெரிய குங்குகப் பொட்டுடன் சாந்தமான முகத்தில் காட்சியளிப்பார். அவர்தான் அந்த ஹோட்டலின் ஓனர் கோமளம் என்பதை விசாரித்து தெரிந்துகொண்டேன்.

ஒவ்வொரு முறை கோமள விலாஸில் சாப்பிடப் போகும் போதும் மரியாதை நிமித்தமாக அந்த அம்மாளைப் பார்த்து நான் புன்னகைப்பேன். அவரும் பதிலுக்கு பாசமாக ஒரு புன்னகையை வீசுவார். இரண்டு வருடங்களாக எங்களுக்குள் இந்தப் புன்னகை மரியாதை தொடர்ந்தது. .

சிங்கப்பூரில் ஹெச்.ஆர் பணி முடிந்ததும் பெங்களூருக்கு என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அதனால் சிங்கப்பூரையும், கோமள விலாசையும் மிகவும் வேதனையோடு பிரிந்தேன். பிரியும் முன், கடைசி நாள் கோமள விலாசில் சாப்பிட்டபோது அந்த அம்மாளிடம் இந்தியா திரும்புவதாகச் சொல்லி நான் விடை பெற்றுக்கொண்டேன்.

அப்போது அவரிடம், “இந்த இரண்டு வருடங்களும் உங்களின் தயவால் தரமான, ருசியான உணவுகளை ரசித்துச் சாப்பிட்டேன். ஒரு தாயின் அன்புடன் இந்த ஹோட்டல் என்னைக் கவனித்துக் கொண்டது. ஒருநாள் கூட இங்கு சாப்பிட்டதினால் வயிறு சரியில்லை என்ற நிலைமை எனக்கு ஏற்பட்டதில்லை…” என்றேன்.

அதற்கு அந்த அம்மாள் சந்தோஷத்துடன், “என்னை ஒரு தாயாக நினைத்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கு வரலாம்… இது உங்க ஹோட்டல், அடுத்த தடவை குடும்பத்துடன் கண்டிப்பா வாங்க…” என்று அன்புடன் சொன்னார். டேபிளைத் திறந்து ஹோட்டலின் விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

அதன்பிறகு இந்தியாவில் நான் எந்த சிட்டியிலும் இன்று வரை கோமள விலாஸ் தரத்தினையும் ருசியையும் பார்க்கவில்லை. கோமள விலாஸ் என் கனவில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது…

என் மகன் சிங்கப்பூர் குடும்பத்துடன் போகலாம் என்றதும் நான் என்னுடைய லேப்டாப்பைத் திறந்து தமிழ் கூகுளில் முதலில் தேடியது கோமள விலாஸின் பெயரைத்தான். அந்த ஹோட்டல் நன்கு வளர்ந்து விருத்தியாகி தற்போது சிங்கப்பூரில் மூன்று இடங்களில் உள்ளது என்பதை கூகுளில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

நான் என் மகனிடம், சிங்கப்பூரில் ஹோட்டலில் தங்கப் போகும் எல்லா நாட்களும் லிட்டில் இந்தியாவில் தங்கினோமானால் தினசரி நம்முடைய உணவை கோமள விலாஸில் முடித்துக் கொள்ளலாம் என்றேன்.

அவன் உடனே கோமள விலாஸ் அருகில் இருக்கும் ஆல்பர்ட் வில்லேஜ் ஸ்டார் ஹோட்டலில் மூன்று அறைகளை எங்களுக்காக பதிவு செய்துகொண்டான். பிப்ரவரி 16 அன்று சைனீஸ் புத்தாண்டு என்பதால் நாங்கள் 14ம் தேதியிலிருந்து ஐந்து நாட்கள் அந்த ஹோட்டலில் தங்க முடிவு செய்து, நான் என் மனைவி; என் சம்மந்தி அவர் மனைவி; என் மகன் ராகுல், மருமகள் ஜனனி மற்றும் பேத்தி விபா ஆகியோர் சிங்கப்பூருக்கு கிளம்பிச் சென்றோம்.

குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றடைந்ததும் அன்று காலையே லிட்டில் இந்தியாவில் இருக்கும் முஸ்தபா சென்டருக்கு ஷாப்பிங் சென்றுவிட்டு, அருகிலுள்ள கோமள விலாஸுக்கு மதிய உணவிற்காக சென்றோம். கல்லாப் பெட்டியில் இருபது வருடங்களுக்கு முன் நான் பார்த்த அந்த அம்மாள் இல்லை. வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். மாடிக்குச் சென்று வக்கணையாக வடை, பாயாசம், அப்பளத்துடன் ருசியான மதிய உணவு சாப்பிட்டோம். பரிமாறிய அனைவரும் புதிதாகக் காணப்பட்டனர். என்னுடைய ஒன்றரை வயதுப் பேத்தி விபாவை அந்த ஹோட்டலில் ஒரு உயரமான நாற்காலியில் அமரச்செய்து நன்றாகக் கவனித்தனர்.

இருபது வருடங்கள் தாண்டியும் கோமள விலாஸின் தரமும், சுவையும், அன்பான கவனிப்பும் மாறவில்லை என எண்ணிக்கொண்டேன். அதனால்தான் மேலும் இரண்டு கிளைகள் அதே சிங்கப்பூரில் முளைத்திருக்கின்றன போலும்…

சாப்பிட்டு முடிந்ததும் என்னுடைய சம்மந்தி, “சென்னையில்கூட இவ்வளவு அருமையான சாப்பாடு கிடைக்காது…” என்றார்.

சாப்பாடு முடிந்து நாங்கள் அனைவரும் கீழே இறங்கிவந்தோம். நான் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த லேடியிடம் சென்று, “இருபது வருடங்களுக்கு முன்னால் சிங்கப்பூரில் இருந்தபோது நான் இந்த ஹோட்டலில்தான் இரண்டு வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டேன்… ஒரு வயதான அம்மாள் இங்கு இருப்பாரே… அவரை நான் பார்க்கணும்” என்றேன்.

அந்த லேடி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “ஆமாம்…அவங்க என்னோட அம்மா. அவங்க இறந்து போயி ஒரு வருடம் முடிந்து இன்னிக்கி காலேலதான் அவரோட முதல் திவசம் ஆச்சு… அதுனாலதான் என் அண்ணனுக்கு பதிலா நான் இங்க கல்லாப் பெட்டியில் அமர்ந்திருகேன்…” என்றார்.

நான் டாலரை எண்ணிக் கொடுக்கும் முன், என்னுடைய சம்மந்தி முந்திக்கொண்டு, ஆறு சாப்பாட்டிற்கான நாற்பத்தியெட்டு டாலர்களைக் கொடுத்துவிட்டார்.

அந்த அம்மாளின் இறப்பையும்; அவருக்கு இன்றைக்குத்தான் முதல் திவசம் என்பதையும் கேட்ட எனக்கு மனசே சரியில்லை.

அதெப்படி இருபது வருடங்களுக்குப் பிறகு, மிகச் சரியாக அவருடைய முதல் திவசம் அன்று நான் கோமள விலாஸ் வந்து சாப்பிட நேர்ந்தது….அதுவும் அந்தச் சாப்பாட்டிற்காக என்னைச் செலவழிக்க விடாமல்?

கடைசியாகப் பார்த்தபோது “குடும்பத்துடன் வாருங்கள்…” என்றாரே. நான் என் குடும்பத்துடன் வந்தபோது அவர் இல்லையே…

அன்று இரவு ஆல்பர்ட் வில்லேஜ் ஹோட்டல் அறையில் எனக்குத் தூக்கமே வரவில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும் சிறுகதைகள்.காம் ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகள். எஸ்.கண்ணன். ******************* சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை வந்தது. அப்போது என்னுடன் சென்னையில் ஐடி கம்பெனியில் பணி புரியும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மணிவண்ணனைப் பிடிக்காதது சுகந்திக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வங்கியில் தன்னுடன் வேலைசெய்யும் அவனை கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறாள். அவனுக்கு போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ப்ரமோஷனுடன் டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. சென்னை செல்லும்முன் அவனை வீட்டிற்கு ஒருமுறை அழைத்துவந்து தன் பெற்றோர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
திங்கட்கிழமை. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தொடர் ஆடிட் இருப்பதால் அந்த வங்கி சுறுசுறுப்பாக காணப்பட்டது. தலைமை அலுவலகத்திலிருந்து ஆடிட்டர் ரங்கராஜன் வந்திருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். எந்தத் தவறைபும் கண்டு பிடித்து விடுவார். அவர் ஆடிட் வருகிறார் என்றால் வங்கி மனேஜர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆடிட் ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய பெயர் சம்யுக்தா. வயது இருபத்திமூன்று. சொந்த ஊர் திம்மராஜபுரம். பாளையங்கோட்டையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லை. என் பெற்றோருக்கு நான் இரண்டாவது கடைசிப் பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டேன். நன்றாகச் சாப்பிடுவேன், தூங்குவேன், டிவி பார்ப்பேன். நல்ல ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு உட்கார்ந்தபோது, காசியின் பெண்டாட்டிக்கு கூச்சம் தாங்க முடியவில்லை. அதனால் கொஞ்ச நேரத்திற்கு அவளால் வாயைத்திறந்து பேசவே முடியவில்லை. அதற்காக எத்தனை நேரத்திற்குக் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘காமராஜ் நாற்காலி‘ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இனி அவருடைய சாப்பாட்டில் மாமிச உணவை சேர்த்துக் கொள்ளப் போவதாக, மெட்ராஸில் இருந்த அவனுக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார். அந்தக் கடிதத்தைப் படித்ததும் அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. நம்ப முடியாமல் இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில். கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. சிகிச்சைகளால் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார். கமலா சித்திக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். மகன் ராஜாராமன் மூத்தவன். சித்தியின் கணவர் இறந்து ...
மேலும் கதையை படிக்க...
டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
முருகேசன் தன் பதினெட்டு வயது மகன் பார்த்திபன் வரவிற்காக வீடடின் கூடத்தில் மனைவியுடன் காத்திருந்தார். “பாத்தியாடி மணி பத்தாச்சு...ஒரே பிள்ளை ஒரே பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தியே, அவன் வீட்டுக்கு எப்ப வரான், போறான்னு ஏதாவது உனக்குத் தெரியுமா? அவன ஒரு நாளாவது ...
மேலும் கதையை படிக்க...
சென்னை தியாகராயநகர். திங்கட்கிழமை கிழமை காலை, பதிப்பகம் கிளம்பும் அவசரத்தில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் பூஜையறையில் நுழைந்து அங்கிருந்த சுவாமி படங்களின் மத்தியில் சஷ்டிக்கவசம் சொல்ல ஆரம்பித்தார் கேசவன். இது அவருக்கு தினசரி வாடிக்கைதான். மனிதர் பாவம் கடந்த இருபது வருடங்களாக ஒரே பதிப்பகத்தில் புரூப் ...
மேலும் கதையை படிக்க...
போன ஜென்மத்து மனைவி
சுகந்தியின் காதல்
ஒரு நீதிக் கதை
தேன்நிலா
ஓசி பேப்பர்
அப்பாவின் அசைவச் சாப்பாடு
கமலா சித்தி
உதவி
தனி ஒருவன்
கடவுள் வந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)