கோபாலா…கோபாலா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 5,211 
 

புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு!

வரவேற்பறையில்…. புது சோபா, புது பாலிமர் நாற்காலி. சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். ஷோ கேசில் பொம்மைகள், பூக்கள்.

” இந்த வீட்ல டி. வி. மட்டும்தான்ப்பா பழசு..! ” என் பெரிய மகன் நிர்மல் வாய்விட்டே சொல்லிவிட்டான்.

” வித்துட்டு புதுசு வாங்கலாம்ப்பா. .! ” அடுத்தவன் விமல் ஆலோசனை சொன்னான்.

அருகே இருந்த என் மனைவிக்குப் பொறுக்க முடியவில்லை.

” திருஷ்டிக்காக இருக்கட்டும்டா. .! ” அவள் சொன்னாள்.

” என்ன ! திருஷ்டி அது இதுன்னு ரொம்ப கர்நாடகமா இருக்கே. ..? ” பெரியவன் பாய்ந்தான்,

” புது வீடு கட்டி இங்கே எல்லாம் புதுசா இருக்கும்போது இது மட்டும் பழசு. சேனல் மாற்றி பார்க்கிறதுக்கு ரிமோட் கண்ட்ரோல் இல்லே. நீதான் எல்லா சேனல்கள்லேயும் மெகா சீரியல் பார்க்கிறதுக்கு ஓடி ஓடி அழுத்தி அலுத்துக்கிறே. இதுல பதினாறு சேனல்கள்தான் இருக்கு. நூறு, இருநூறு சேனல்கள் பார்க்கிற அளவுக்கு டி. வி இருக்கு. பணம் இல்லேன்னா விட்டுத் தள்ளலாம். இருக்கும்போது அனுபவிக்கிறதுல என்ன தப்பு. .? ” நிறுத்தினான்.

விசாலம் வாய் திறக்கவில்லை.

எனக்கும் டி. வி. பழசாய் இருப்பதில் உறுத்தல்.

பிள்ளைகள் குறை வேறு.

” சரி. வாங்கிடலாம். .! ” சொன்னேன்.

அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி.

” சரி. இதை என்ன செய்ய. .?” விசாலம் கேட்டாள்.

” வித்துடலாம். .! ” – விமல்.

” எப்படி. .? ”

” டி. வி. ரிப்பேர் கடையில் சொன்னா வித்து கொடுத்துடுவான். .! ”

” என்ன விலை. .? ”

” மூவாயிரம் போகும் ! ”

” அடிமாட்டு விலையா. .? அப்போ பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கியது. இப்படி விக்கறதை விட ஒரு ஏழை பாழைகிட்ட கொடுத்தாலாவது நன்றி, விசுவாசமாய் இருப்பாங்க. ” விசாலம் சாதாரணமாகத்தான் சொன்னாள்.

எனக்குள் பொறி தட்டியது.

எனக்குத் தெரிந்த பையன் கோபாலன். வயசு 30. பிறவியிலேயே ஏழை. அப்பா வேறு இல்லை. அம்மா பத்து இடங்களில் பத்து பாத்திரங்கள் தேய்த்து பிள்ளையை ஆளாக்கினாள். அவள் உழைப்பை உறிஞ்சி படித்த அவனுக்குச் சமீபத்தில்தான் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்தவுடன் முதல் வேலையாய் செய்தது அம்மாவை வேலையை விட்டு நிறுத்தியது. அடுத்து… ஒண்டு குடிசையில் இருந்ததை வாடகைக்கு மாறி கொஞ்சம் வசதியான இடத்தில் வந்தது.

” என்னப்பா ! தடாலடி வேலையெல்லாம் செஞ்சிருக்கே. .? ” என்று நான் கேட்டபோது. …

” அம்மா ரொம்ப கஷ்டப்பட்டவங்க சார். இனிமேலும் கஷ்டப்படக்கூடாது. வீடு மாத்தினதும் அதான். அவுங்க பொழுது போக்குக்கு ஒரு டி. வி வாங்கி வச்சுட்டேன்னா. .அவுங்க பாடு நிம்மதி. திருப்தி ! ” சொன்னான்.

‘ அவனுக்கு கொடுத்தாலென்னா. ?.’ என் மனசுக்குப் பட்டது.

” சரி. கொடுக்கலாம். .! ” நானாகவே சொன்னேன்.

” என்னப்பா. .? ” நிர்மல், விமல் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

விபரம் சொன்னேன்.

மேலும். …

” நல்ல பையன்டா. அம்மா மேல பாசம் கொண்டவன். வாழ்க்கையில் முன்னேற துடிக்கிறவன். இந்த உதவி அவனுக்குப் பெரிசு. நம்மை வாழ்க்கையில் மறக்க மாட்டான் .” சொன்னேன்.

” சரிப்பா. உன் இஷ்டம். நீங்க எதை செய்தாலும் சரியாத்தான் செய்வீங்க. உடனே புறப்பட்டுப் போய் கோபால்கிட்ட விசயத்தைச் சொல்லி நாளைக்கே இந்த டி. வி பெட்டியை ஒரு ரிஷ்ஷா வச்சு எடுத்துக் போகச் சொல்லுங்க. .” மகன்கள் சொன்னார்கள்.

விசாலத்தைப் பார்த்தேன்.

அவளும் தலையாட்டினாள்.

உடனே செயலில் இறங்கினேன்.

நான் சென்ற பொது வீட்டில் கோபால் மட்டும் இருந்தான்.

” வாங்க சார் ” வரவேற்றான்.

” வீட்ல அம்மா இல்லே. .? ” எதிரில் அமர்ந்தேன்.

” இல்லே சார். வெளியில போயிருக்காங்க. ”

” சுத்தி வளைக்காம நேரடியா விசயத்துக்கு வர்றேன். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ”

” சொல்லுங்க சார். .? ”

” நான் புதுசா டி . வி. வாங்கப்போறேன். அதனால் என் பழைய டி. வி. யை உனக்கு இனாமாகத் தர்றதா முடிவு பண்ணி இருக்கேன். ”

கோபால் மலரவில்லை.

” நிஜம்ப்பா! என் வீட்ல எல்லோருக்கும் சம்மதம். உனக்கு வீண் செலவு வேண்டாம்ன்னு சொல்றேன். ”

”……………………”

” என்ன தயக்கம். .? மௌனம். .! ”

” உங்க அன்புக்கு ரொம்ப நன்றி சார். ஆனா உங்க அன்பளிப்பை நான் ஏத்துக்க முடியாத நிலையில இருக்கேன். பெட்டியைத் தூக்கி வந்து உடைச்சி புதுசுன்னு காட்டினாத்தான் அம்மா மனசு திருப்தி படும்னு எனக்குத் தோணுது சார். மகன் கடனோ உடனோ தனக்காகக் கஷ்டப்பட்டு வாங்கியிருப்பான்னு நினைப்பாங்க சார். உங்க பெட்டியை நான் கொண்டு வந்து வச்சேன்னா உனக்காக வாங்கினதுன்னு உண்மையைச் சொன்னால் கூட, ‘ என்மேல எது கரிசனம். ஓசியில கிடைச்சுதுன்னு வாங்கி வச்சிருக்கே. ஒப்புக்குச் சொல்றே! ‘ ன்னு நினைப்பாங்க சார். சொல்லுவாங்க!! ‘எனக்கெல்லாம் புதுசு பார்க்க கொடுத்து வைக்குமா. ? பொண்டாட்டி வந்தால் வாங்க வைப்போன்!ன்னு என் மேல குறை வேற வரும் . அவுங்களைச் சொல்லி குத்தமில்லே. பெண்புத்தி.!! தயவுசெய்து உங்க உதவிய நான் ஏற்க முடியாமலிருக்கிறதுக்கு மன்னிக்கணும். ” கெஞ்சலாய் சொல்லி நிறுத்தினான்.

‘ மனித உணர்வுகளைத் துல்லியமாகத் தெரிந்த நல்ல பிள்ளை ! ‘ எனக்குத் திருப்தியாக இருந்தது.

” சரிப்பா. ” எழுந்தேன்.

டி. வி. விற்க வேண்டும். !!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *