கொம்புளானா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,552 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகத்து சிறுவர்களை எல்லாம் நடுங்க வைக்கும் திறமை கொண்ட ஒரு தமிழ் எழுத்து இருக்கிறது. அது வேறொன்று மில்லை, கொம்புளானாதான். ‘ழ’ இருக்கிறது ‘ல’ இருக்கிறது. அதற்கு நடுவில் இது என்ன பெரிசாகக் கொம்பு வைத்துக்கொண்டு என்று அவள் சிறுவயதில் யோசித்திருக்கிறாள். இலக்கணப் பெரியவர்களைத் திருப்திபடுத்தும் ஒரே நோக்கத்தோடு படைக்கப்பட்ட இந்த ‘ளா’னா இன்று தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டது.

ஒன்பது வயதுகூட நிரம்பாத அவளுடைய மகன் சாந்தன் கோபத்தில் கொப்பியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே போய்விட்டான். பனி தூவிக்கொண்டு இருந்ததையும் கவனிக்காமல் மேலங்கியை அவசரமாக மாட்டி, தொப்பிகூட அணியாமல் சென்றுவிட்டான். பத்மாவதிக்குக் கோபமாக வந்தது. கண்ணீர் காவலர்கள் தடுமாறினர். கோபம் சாந்தன் மீதா அல்லது கொம்புளானா மீதா என்ற தீர்மானதுக்கு அவளால் வர முடியவில்லை.

பத்மாவதிக்குக் கணவன் சொல்வது வேத மந்திரம். அவருடைய இரண்டு மந்திர வார்த்தை ‘பாரம்பரியம்’, ‘காலச்சாரம்’ என்பவைதான். அகதியாக கனடாவுக்கு தஞ்சம் கேட்டு வந்த பிறகு இந்த மந்திரச் சொற்களுக்கு வேகம் கூடியது. அதுதான் பத்மாவதி சனிக்கிழமை கால நேரங்களில் சாந்தனுக்குத் தமிழ் சொல்லித் தரவேண்டும் என்ற ஏற்பாடு. ஒரு வருடப் பயிற்சியில் அவன் எழுத்துக்கூட்;டி வாசிப்பான். ஆனால் இந்த கொம்புளானா கொடுமையில் இன்று மாட்டிவிட்டான். ‘ல’ எழுத வேண்டிய இடத்தில் ‘ள’ போட்டு பிரளயம் வந்துவிட்டது. ‘வட் இஸ் திஸ்? கொம்புளானா! கொம்புளானா! I don’t like it’ என்று கத்தியபடி போய்விட்டான்.

அவள் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களில் பாதிக்கு மேல் இந்த கொம்புளானாவால் ஏற்பட்டதுதான். அவள் தகப்பனார் தமிழில் புலமை வாய்ந்த அளவுக்குப் பொறுமையில் புகழ் பெறாதவர். ஒவ்வொரு பிழைக்கும் தலையில் குட்டு விழுந்தபடியே இருக்கும். சிறுவர் கொடுமை பிரபலமாகாத அந்தக் காலத்தில் சரி. இந்தக் காலத்தில் சாந்தனிடம் தான் இப்படி நடத்து கொண்டதற்காக வருத்தப்பட்டாள்.

பத்மாவதிக்கு ஆறாம் வகுப்பு மாணவிபோல முகம். ஒரு கூட்டத்திலே தொலைந்து போனால் கண்டுபிடிக்க முடியாது. எல்லோருடைய முகமும் அவளுடையது போலவே இருக்கும். பார்த்தவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்ற ஆசையை அது தூண்டிவிடும். பாரம்பரியம் மாறாமல் காலையிலிருந்து இரவு படுக்கும்வரை சமையலறையிலேயே வாசம் செய்தாள்.

அவள் பிறக்கும்போதே இப்படிப் பிறக்கவில்லை. இலக்கியத்தில் அவளுக்கு நல்ல ஆர்வம் இருந்தது. வார சஞ்சிகைகள் மாத நாவல்கள் அல்ல. தமிழில் மிகவும் குறைவாக வாசிக்கப்பட்ட சிறந்த படைப்பாளிகளுடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்திருந்தாள். அதன் தாக்கத்தில், தன் வீட்டில் நடந்த சம்பவங்களைக் கவிதையாக்கூட எழுதியிருக்கிறாள்.

அவர்கள் என் அண்ணனை
இழுத்துப் போனார்கள்.
பிணையில் விடுவதற்கு
பணம் கேட்டார்கள்,
கொடுத்தோம்.
பிறகு,
பிணத்தைத் தரவும்
பணம் கேட்டார்கள்.

இவற்றை எல்லாம் ரூல் போடாத அப்பியாசக் கொப்பியின் கடைசி ஒற்றையில் எழுதி வைத்திருந்தாள். இடம் பெயர்ந்தபோது அவையும் தொலைந்துவிட்டன.

அப்பொழுதெல்லாம் அவள் உடம்பு பாம்புபோல இருக்கும் பள்ளிக்கூட ஓட்டப் போட்டிகளில் எப்பவும் முதலாவதாக வருவாள். மணமான புதிதில் தானும் வெளியே போய் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசையை ஒருநாள் சொன்னாள். அந்த வார்த்தை அவளை அறியாமலே வெளியே வந்து விழுந்துவிட்டது. சிறுமியாக இருந்த போது தவறாக விழுந்த ஒரு வார்த்தையை அழிரப்பரால் திருப்பித் திருப்பி அழிப்பாள். அப்படியே தம்பிராசாவும் அவளுடைய அதரங்களில் எழுதப்பட்ட தவறான வார்த்தையைத் தன் தடித்த உதடுகளால் திருப்பித் திருப்பி அழித்தார். அந்தச் சமயம் தம்பிராசா சொன்னார். அவர்களுடைய பாரம்பரியத்துக்கு வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்று. அவர் என்ன சொன்னாலும் அது சரியாய்தான் இருக்கும்.

அவள் ‘ஏ’ லெவல் படிக்கும்போது சயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி அவர்களுக்குப் பாடமாயிருந்தது. குலோத்துங்க சோழனைக் காண இளம் மகளிர் வரும் கட்டம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். திருப்பித் திருப்பிப் படிப்பாள்.

எங்கும் உள மென்கதலி, எங்கும் உள
தண் கமுகம், எங்கும் உள பொங்கும் இளநீர்
எங்கும் உள பைங்குமிழ்கள், எங்கும் உள
செங்குமுதம், எங்கும் உள செங்கயல்களே.

வாழை, கமுகு, இளநீர், குமிழம்பூ, குமுதமலர் என்று பெண்ணின் அங்கங்களைத் தாவரங்களாகவே வர்ணித்த கவி, கண்களை ஒப்பிட மட்டும் கயல் மீனுக்குத் தாவியது ஏன் என்ற அவள் கேட்டதற்கு ஆசிரியர் சொன்ன பதில் அவளை அசரவைத்தது. அதற்குப் பிறகுதான் இந்த பழங்கால இலக்கியங்களை மும்முரமாகக் கற்கத் தொடங்கினாள். ஆங்கிலத்தில் சார்ல்ஸ் டிக்கின்ஸ், ஒஸ்கார் வைல்டில் இருந்து கிரஹம் கிரீன் வரைக்கும் படித்திருக்கிறாள். தற்போதைக்கு கஷுவோ இஷிகுரோவைப் படிக்க மிகவும் ஆசை. கணவரிடம் பலமுறை கேட்டிருக்கிறாள். அவர் இந்தப் புத்தகங்களை வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்னால் அவர் கட்டாயம் செய்வார்.

தம்பிராசா அவளுக்குத் தூரத்து உறவுதான். கட்டுபெத்தவில் என்ஜினியரிங் படித்தவர் இங்கே வந்து இன்னொருவருடன் கூட்டு சேர்ந்து கார் கராஜ் வைத்திருந்தார். பழுதுபார்க்கும் கலை அவருக்கு இயற்கை தந்த நோய், மணமுடித்த நாளில் இருந்து இன்றுவரை பத்மாவதி புதுக் காரைக் கண்டதில்லை. எப்பவும் உடைந்த கார்தான். சனி, ஞாயிறு காலங்களில் அதன் கீழே படுத்துவிடுவார். கட்டையான மனிதர் என்றபடியால் காருக்குக் குறுக்காக அவர் படுத்து அதன் அடிப்பாகத்தை ஆராயும்போது அவருடைய கால்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் அபாயம் இல்லை. அந்தக் கார் நிமிர்ந்து ஒரு தரத்துக்கு வரும்போது நல்ல விலை வந்ததென்று விற்றுவிடுவார். மீண்டும் லொட லொட சவாரிதான். அவருடன் போகும்போது கார் எந்தப் பனிப்பிரதேசத்தில், எப்போது நின்றுவிடுமோ என்ற பயம் அவளைக் கவ்வியபடியே இருக்கும்.

தம்பிராசா உருண்டையாக வருவதற்கு முன்பு வடிவாகத்தான் இருந்தார். அப்பொழுதெல்லாம் அவருடைய தலைமயிர் வழுக்கை விழாமல், உச்சி பிரிக்காமல் இழுத்து சிலுப்பிக்கொண்டு நிற்கும். அவர்களுடைய திருமணப் படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். அவருக்கு இலக்கியத்தில் ஒரு ஆர்வமும் கிடையாது. நாலு பியருக்கு மேல் அவர் மூளை நாப்பது வாட்டில் வேலை செய்யும் தருணங்களில் கொஞ்சம் அரசியல் பேசுவார். அதிலும் கூடிய காலங்களில் ‘கலாச்சாரம்’, ‘பண்பாடு’ பற்றி நீண்ட பிரசங்கம் செய்வார்.மற்றும்படி அவருடைய தற்போதைய லட்சியம் எப்பாடு பட்டாவது சீட்டுக்காசை எடுத்து மகளுடைய சாமத்தியச் சடங்கை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்பதுதான்.

வெளியே பனிப்புயல் அடித்து உயிரை உறையவைக்கும் அதிகாலைக் குளிரில், பலவித படைக்கலங்களால் உடம்பை மறைத்து, ஏதோ எதிரிகளை வீழ்த்தக் கிளம்பிய ஒரு குறுநில மன்னர்போல அவர் புறப்படுவார். ஐந்து நிமிட தொடர் முயற்சியில் காரை ஸ்டார்ட் பண்ணி போனால் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் திரும்புவார். அப்படி வரும்போது, பத்மாவதி பிள்ளைகளுடைய ஹோம்வேர்க்கை முடித்து, உணவைப் பரிமாறி, அவருக்கான சாப்பாட்டை இன்னொருமுறை சூடாக்கக் காத்துக் கொண்டிருப்பாள்.

வாசல் மணி அடித்தது. திடுக்கென்றது. இன்னும் மைதிலி ரெடியாகவில்லை. இன்று மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்கிறாள். கணவர் அறிவுறுத்தியபடி பாரதியார் வேடம்தான் போட வேண்டும் என்று யோசித்திருந்தாள். என்னதான் நாடு மாறி பிழைப்புக்கு வந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது என்ற கொள்கை இருந்தது.

‘ஹூ இஸ் பறாதியா?’ என்ற மைதிலியின் ஒரு கேள்வியில் இந்த கலாச்சாரம் அடிபட்டுபோனது. ‘துயில் அழகி’ வேஷம் நல்லாயிருக்கும் என்ற தீர்மானித்தார்கள். ‘துயில் அழகி’ என்றால் நித்திரையாக அல்லவோ இருக்கவேண்டும் என்ற சந்தேகம் ஒன்றை மைதிலி கிளப்பியதில் அந்த யோசனையும் கைவிடப்பட்டு சென்ற முறை போல தேவதை உடுப்பில் போவது என்றே முடிவானது.

பத்மாவதி இதை முன்பே எதிர்பார்த்திருந்தாள். நிலவறையில் மடித்து வைத்து மறந்துபோன, பாரதிராஜா பார்த்து பொறாமைப் படும்படியான நீண்ட வெள்ளைத் துகில் ஆடை இருந்தது. இடை சுருக்கி, மார்புகள் பெருக்கி, கரை மடிப்பு இரண்டு அங்குலம் அவிழ்த்து நீட்டி, உலர் சலவை செய்து புது நீல ரிப்பனில் அலங்கார வளைவுகள் பொருத்தி கவர்ச்சியாக இருந்தது. அதை மகளுக்கு அணிவித்துச் சரி பார்த்தாள். இறக்கைகள் சரிவர பொருந்தவில்லை. ஒரு இறக்கை வளைந்தும், சரிந்தும் எதிர்த்தும், பழுது பார்த்தும் மசியவில்லை. உண்மையில் பறக்கவா போகிறாள்? பிடரியில் மைதிலிக்குக் கண் இல்லாதது வசதியாகப் போய்விட்டது. உடைந்த செட்டை தேவதை தயாரானாள்.

இந்த அவசரித்தல்களின் நடுவே டயான் வந்துவிட்டாள். மைதிலியுடன் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண், ஒரே வயது என்றாலும் அங்கங்கள் நிறைந்து வளர்த்தியானவள். ரத்தச் சிவப்பு உடையில் அவளுடைய குஞ்சங்கள் நாலு திசையிலும் பறந்தன. முகமும், கழுத்தும், வெண்தோள்களும் தவிர்த்து எல்லாமே சிவப்பு மயம். தொடையில் இருந்து தொடங்கி நீண்டு உள்ளங்காலில் முடியும் மெல்லிய கருஞ்சிவப்பு காலுறைகள். அதற்குப் பொருத்தமாக சிவப்பு காலணி. தலைமயிர் எல்லாம் முள்ளம்பன்றி போல நேராக்கப் பட்டு, குத்திக்கொண்டு நின்று அவையும் பெரும் சிகப்பில் பிரகாசித்தன.

‘இது என்ன வேஷம்?’ என்று கேட்டதற்கு ‘நெருப்புச் சுவாலை’ என்று செவ்வாயைத் திறந்து பதில் சொல்லிவிட்டு மீண்டும் சூயிங்கத்தை அரைக்கத் தொடங்கிவிட்டாள். அப்படிச் சொன்ன போது உண்மையிலேயே அவள் தோற்றம் தீப்பிழம்பாக மாறியது. பக்கத்தில் நிற்கும்போது வெக்கையாகக்கூட இருந்தது. தொடை தெரிய கவுனை ஒரு சுழட்டு சுழட்டிக்கொண்டு எழுந்து நின்றாள். தேவதையம், நெருப்புச் சுவாலையும் டயானின் தகப்பனாருடைய காரில் ஏறியபோது ‘கவனம் மகளே!’ என்றாள் பத்மாவதி, ஒரு தாயின் பரிவுடன். ‘Don’t worry, Amma’ என்றாள் அவள் எரிச்சலுடன்.

அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. கேக் செய்யவேண்டும். இரவு இவருடைய நண்பர்கள் சாப்பிட வருவார்கள். அவளுடைய பிறந்த நாள் அது. 36 வயது ஆகிவிட்டது. வெளியே ஓடர் கொடுத்தால் வாழ்த்து எழுதி, பெயர் பொறித்து நல்ல கேக் வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்களாம். ஆனால் அவர் சொல்லிவிட்டார் அவளைச் செய்யும்படி. அவர் சொன்னால் அதில் ஞாயம் இருக்கும்.

சமையலறையைப் பார்த்தவளுக்குத் தலை சுற்றியது. நேற்றைய பாத்திரங்களும், பிளேட்களும், கிளாஸ்களும் நிறைந்து கிடந்தன. இதைக் கழுவி முடிக்க இரண்டு மணி நேரம் எடுக்கும். கேக் வேலையை முடிந்த பிறகு இருபது பேருக்கு சமைக்கத் தொடங்க வேண்டும். உலர்ந்த உடுப்பை இன்னும் அயர்ன் பண்ணவில்லை. நாரியை நிமிர்த்தி வேலையைத் தொடங்கினாள்.

வெளியே பனிக்குமிழிகள் துள்ளிக்கொண்டு போட்டி போட்டன.

ஸ்னோ வைற் கதையில் வரும் அரசியிடம் ஒரு மந்திரக் கண்ணாடி இருந்தது. அது அவளுடைய அழகை எடைபோட்டுக் கூறிவிடுமாம். பத்மாவதி வீட்டிலும் எல்லோருக்கும் பொதுவான ஒரு கண்ணாடி இருந்தது. அதில் பார்ப்பதற்குத் தந்திரம் தேவை. இது கைக்கண்ணாடியிலும் பெரியது. முகக்கண்ணாடியிலும் பெரியது, நிலைக்கண்ணாடியிலும் சிறியது. அவள் தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்ட சேவை கட்டும் நாட்களில் தலைப்பு சரியா என்று பார்க்கும்போது கால்கள் தெரியாது. கால்களைப் பார்த்தால் தலை தெரியாது. பாதி பாதியாகப் பார்த்துத்தான் உடுத்தி முடிப்பாள்.

மகள், தாயின் சேலைக் கரையெல்லாம் நிலத்துக்கு சமனாக இழுத்துவிட்டு, பொட்டு, முந்தானை, நாரி இடைவெளிகளை அட்ஜஸ்ட் செய்வாள். அப்படியும் தீராமல் கணவன் முன் போய் நின்று ‘சரியா’ என்று சிறு பிள்ளைபோல தலையைச் சரித்துக் கேட்பாள். அவனும் பியர்கானில் இருந்து வாயை எடுக்காமல் ‘சோக்காயிருக்கு, இப்பதான் தேவலோகத்தில் இருந்து சுடச்சுட இறக்கினதுபோல’ என்பான். அவளும் அப்படியே புளகித்துப்போவாள்.

இன்றும் அப்படியே, இளம் சூட்டு நீர்க் குளியல் முகத்துக்குப் புதுப்பொலிவைக் கொடுத்தது. பிளாஸ்டிக் உறையில் இருந்து அப்போதுதான் பிரித்த அடர் தகடுபோல பளபளவென்று இருந்தாள். பத்து வருடங்களுக்கு முன்பே fashion போன காஞ்சிபுரம் பட்டுச்சேலையை உடுத்தி வந்தாள். பழம் பாடல்களில் புலவர்கள் வர்ணித்தது போல அவள் வயிற்று மடிப்புகள் ஆற்றின் அலைகளைப் போல சிறுத்து இருந்தன. தலை மயிர் கத்தையாகக் கவிழ்ந்து கன்னத்தில் பாதியை மறைத்தது. நீண்ட கழுத்து அவளை இன்னும் கூடுதலாகப் பார்க்க அனுமதித்தது. அவளுடைய பிறந்த நாளில் அவளாகவே கேக் செய்து, அவளாகவே சமைத்து, அவளாகவே உடுத்தி, அவளாகவே காத்திருந்தாள், தனியாக. கணவரும் பிள்ளைகளும் இன்னும் வரவில்லை.

சாந்தன் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான். அவன் தலைகளிலும் கோட்டிலும் பனிப்பூக்கள் பூத்திருந்தன. நனைந்து, புதைந்து மாசுபட்ட காலணிகளை நடையிலேயே கழற்றி வைத்தான். கோட்டைக் கழற்றி மாட்டினான். தலையைக் குனிந்து, மேல் கண்களால் குற்றமாகப் பார்த்தான். உள்ளங்கையைத் தாயின் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்து அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான். அவள் கண்ணிலே கண்ணீரைப் பார்த்ததும் கலங்கி விட்டான். அப்படியே தன் தாயின் இடைகளைக் கட்டியணைத்து ‘சொறி’ என்று சொன்னான்.

இனிமேல் சாந்தன் எந்த ளானாவும் போடட்டும். எங்கே வேண்டுமென்றாலும் போடட்டும். அவள் கோபிக்கப் போவதில்லை. இந்த கொம்புளானா சுயநலம் கருதாமல் தமிழுக்கு எவ்வளவு உழைக்கிறது. ஆனால் ஒருவருக்கும் அதன் மதிப்புத் தெரியவில்லை. அதன் உபயோகத்தையே சந்தேகிக்கிறார்கள். தேவையில்லாத எழுத்து என்ற எரிச்சல் வேறு. ஒரு வேளை அதற்கும் தன்னுடைய நிலைதானோ என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது.

கணவனும் பிள்ளைகளும் அவசரப்படுத்தினார்கள். கேக்கின் மேல் மெழுகுவர்த்திகள் எரிந்தன. இவள் கேக்கை வெட்டிய பிறகு மிகவும் அலங்காரமாகச் சுற்றிய ஒரு பரிசுப் பொருளைக் கணவன் அவளிடம் கொடுத்தான். பிள்ளைகள் இருவரும் பக்கத்தில் நெருக்கி ஆவலோடு பார்த்துக்கொண்டு இருக்க, பத்மாவதி பார்சலை ஸ்பரிசித்தாள். தடவிப் பார்த்தாள். குலுக்கினாள், பாரம் து}க்கினாள், பிறகு மணந்தாள். அப்படியும் என்னவென்று பிடிபடவில்லை.

ஒருவேளை அவள் கேட்ட நைக்கி நடக்கும் சப்பாத்தாக இருக்குமோ? அல்லது ஜிம் உடுப்பாகவும் இருக்கலாம். ஜிம் போகும் ஆசையைக் கணவனுக்குச் சாடைமாடையாக சொல்லியிருந்தாள். இவ்வளவு பெரிதாகவும், பாரமாகவும் இருக்கிறதே? புக்கர் பரிசு பெற்ற புத்தகம் ஒன்று கேட்டிருந்தாள், அதுவாகவும் இருக்கலாம். இவ்வளவு பெரிய புத்தகமா? அவளை ஆவல் பிடித்துத் தாக்கியது.

அவளுக்கு அவர் ஒரு பரிசு வாங்கியிருந்தால் அது சரியாய்தான் இருக்கும்.

பார்சலைப் பிரித்தாள். திகைப்பாகவும், அவமானமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. முகம் கறுத்து பேர்லின் சுவர் போல விழுந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான். 1/10000 ஸ்பீட் கமிராகூட படம் எடுக்க முடியாதபடியான வேகத்தில் அவள் செயல்பட்டாள். உடம்பிலே இருக்கும் அவ்வளவு ரத்தத்தையும் முகத்துக்குப் பாய்ச்சி சிவப்பாக்கி, இன்பமாகச் சிரித்து பெரு மகிழ்ச்சியைக் காட்டினாள். கணவனை அணைத்து இரண்டு கன்னங்களிலும் சின்னச் சின்ன முத்தங்கள் தொடாமல் வைத்தாள். பின் ‘தாங்யூ’ என்று முனகினாள், ஏமாற்றத்தை மறைப்பதற்குக்கூட இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறதே என்று மனது வேதனைப்பட்டது.

அவளுக்குக் கிடைத்தது சைனிஸ் வொக். சைனிஸ் நூடில்ஸ் போன்ற உணவு வகைகளைச் சமைப்பதற்கு ஏதுவான பாத்திரம். எட்டுப் பேருக்கு ஒரே சமயத்தில் நூடில்ஸ் சமைப்பதற்குத் தோதான, குண்டாளமான பெரிய பாத்திரம். ஒரு பக்கம் கைப்பிடியும், மறுபக்கம் காதும் கொண்ட இந்த வொக் அடிப்பாகத்தில் கறுப்பு மைபூசி ஒட்டாத தன்மையுடனும், வெளிப்புறம் செங்கல் நிறத்தில் பளபளப்பு கொண்டதாகவும் இருந்தது.

பத்மாவதியின் கண்களுக்குப் பின்னால் ஒரு சமுத்திரம் குடியிருந்தது. அவள் சாடை கொடுத்தால் போதும், அது பிரவகித்து வரத் தயாராக இருக்கும். இப்பொழுது அவள் கண்கள் காவல் வேலையைச் சரிவரச் செய்து சமுத்திரத்தைத் தடுத்து வைத்தன. அதற்கு அவள் மிகவும் பிரயாசைப்பட வேண்டியதாகிவிட்டது.

‘சாளரம் 2000’ வெளியீட்டு விழாவை பில்கேட்ஸ் மேற்பார்வை செய்வதுபோல, தம்பிராசா கொஞ்சம் தள்ளி நின்று நெஞ்சிலே கைகளைக் குறுக்காக் கட்டி, தன் மனையாளைப் பெருமையோடு பார்த்தார். ‘அம்மா, அம்மா இனிமேல் நூடில்ஸ் செய்யுங்கோ!’ என்றாள் பெண். ‘எனக்கும் நூடில்ஸ்’ என்றான் மகன்.

இனிமேல் புட்டு, இடியப்பம், தோசை, இட்லி, அப்பம், உப்புமா, புளிச்சாதம் என்ற சமையல் சாகரத்தில் நூடில்ஸும் சேர்ந்துவிடும். அதிகாலைகளில் எழும்பி, கணவனையும், பிள்ளைகளையும் திருப்திப்படுத்த, அவள் இனிமேல் பெரிய நூடில்ஸ், சிறிய நூடில்ஸ் என்று மாறிமாறி அவளுடைய புதிய சைனிஸ் வொக்கில் செய்வாள். அவர்கள் வீட்டு ரசனைக்கு ஏற்ப நூடில்ஸில் கறிவேப்பிலையும், பச்சை மிளகாயும், பெருங்காயமும் போட்டு ஒரு புதிப்பிக்கப்ட்ட சுவை மணக்கக் கிளறுவாள். அவர்கள் ரசித்துச் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு நன்றிகூட கூறாமல், உண்ட பிளேட்டை அப்படியே விட்டுவிட்டு எழுந்து போவார்கள். தண்ணீர் போக்கியில் கைகளைக் கழுவி, வாய்களைக் கொப்பளிப்பார்கள்.

அடுத்த பிறந்த தினத்துக்கு இன்னும் 364 நாட்கள் இருந்தன. அதன் வரவை நினைத்தால் அவளுக்குக் கிலி பிடித்தது. அந்த தினத்தில், பிறந்த நாள் பரிசாக பீட்ஸா பாத்திரம் கிடைத்துவிடக் கூடும் என்ற பீதி இப்பொழுதே அவளைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது.

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “கொம்புளானா

  1. வணக்கம்.தடம் இலக்கியத் திங்கள் இதழினூடாக உங்கள் எழுத்துகள் அறிமுகமாகின. அதுவரை ஈழத்து நெடுங்கதைகளைப் படித்திருந்த போதிலும் சிறுகதைகள் வாய்க்கப்பெறவில்லை. எனினும் உங்கள் எழுத்துக்கள் ஈழத்துப் படைப்புகள் என்பதற்கும் அப்பால் தமிழின் தேர்ந்த நடையாகக் கொள்ளத்தக்கதாக இலக்கியவாதிகள் கருதுவார்களேயானால் அஃது அவர்தம் மொழிக்காற்றிய சிறப்பாகும். தவிர ஈழத்து சொல்லாடல்களில் உள்ள புரிதலுடனும் இன்னபிற அச்சு வழுக்கள் நீக்கப்பட்டும் வரின் மேலும் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *