கொடுத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 8,008 
 

சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விடவேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந்தக் குருவிக்கு என்ன மகிழ்ச்சியோ? இப்படி விடிவதற்கு முன்னர் வந்து பாடத் தொடங்கிவிடுகிறது. அதற்குச் சாப்பாட்டைப் பற்றிய கவலை இல்லை. இங்கிருந்து பறந்து போய் எங்காவது கொட்டிக் கிடக்கும் இரையைத் தேடிக்கொள்ளும்.

நேற்றைய இரவும் அவர் வீட்டுக்கு வந்தபோது நேரம் கடந்துவிட்டது. வெறும் கையோடுதான் வந்தார்

“இஞ்சரும்…! ஏதாவது இருக்கே?” ஓ! அவரது வயிறும் வெறுமையாகவே இருக்கிறது. அவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளைகளும் வயிற்றுப் பசியோடு கிடந்ததைப் பொறுக்கமுடியாதிருந்தவள்.. ‘இப்ப இந்த மனிசனும் அலைஞ்சுபோட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் வருகுதே!’ – தங்களது இயலாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுக துக்கங்களில் சமபங்கு கொண்டு அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப்போகிறாரே என்ற வேதனை தொண்டயை உடைத்துக் கொண்டு வந்தது.

ஆறுமுகம் மனைவியைத் தேற்றினார். ‘சரி சரி… ஏனப்பா இப்ப அழுகிறாய்…? நான் சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான். உங்கடை பாடு எப்பிடி எண்டுதான் கேட்டனான்..” என ஒரு பொய்யைக்கூறினார். அவர்களுடைய பாடு எப்படி இருந்திருக்கும் என்பதும் அவர் அறியாததல்ல.

பிள்ளைகளின் வயிறு காய்வதை பார்த்துக்கொண்டு ஒரு தாயினால் எப்படித்தான் சும்மாயிருக்க முடியும்? வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு. மத்தியானம் ஒரு பேணி அரிசியில் (அதுகூடக் கடன்பட்டு) கஞ்சியாகக் காய்ச்சி ஊற்றினாள். இரண்டு குமர், மூன்று சிறுசுகள், நடுவில் இரண்டு படிக்கிற வயசுப் பெடியள். எத்தனை நாட்களுக்கு இப்படி மற்றவர்களை இரந்துகொண்டு போவது, அவர்களது நொட்டைக் கதைகளைக் கேட்பது? பவளத்திற்கு நெஞ்சு பொறுக்காத கவலை முட்டியது.

‘இஞ்சருங்கோ…. பிள்ளையளுக்கெல்லாம் நஞ்சைக் குடுத்திட்டு, நாங்களும் சாவமே?”

‘உனக்கென்ன விசரே…? இப்ப என்ன குடி முழுகிப் போச்செண்டே இந்தக் கதை கதைக்கிறாய்?” மனைவியே தனது தன்மானத்துக்குச் சவால் விடுவதாக நினைத்துக்கொண்டு ஆறுமுகம் சீறிப் பாய்ந்தார்.

அவள் அதற்குமேற் பேசவில்லை. ‘அந்த மனிசனும்தான் என்ன செய்யிறது?’

ஆறுமுகம் பாயைத் தட்டிப் போட்டுக்கொண்டு படுக்கப் போனபொழுது பவளம் ஒரு பேணியிற் சுடுதண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள்: ‘இந்தாங்கோ…. வெறுவயித்தோடை கிடக்கக்கூடாது..” அவர் ஒன்றும் பேசாமல் தண்ணீரை வேண்டி மொடுமொடென்று குடித்துவிட்டுப் படுத்தார்.

பவளம் திண்ணையில் சேலைத்தலைப்பை விரித்து ‘சிவனே!’ எனப் படுத்துக்கொண்டாள்.

பாவம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத்தைக் கண்டிருக்கிறாள் எனக் கவலை தோன்றியது.

‘இந்தக் குளிருக்குள்ளை… ஏன் வெறும் திண்ணையிலை படுக்கிறீர்…? பாயை எடுத்துப் போட்டுக்கொண்டு படுங்கோவன்!” அடங்காத இரக்கத்தோடுதான் சொன்னார். அவர் சொல்வது கேட்காதது போல பவளம் படுத்திருந்தாள்.

அவரும் பேசவில்லை. இரக்கப்படத்தான் முடிகிறது. அவர்களது தேவைகளையெல்லாம் பூரணமாகக் கொடுக்க முடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தினார். பிறகு சொன்னார்: ‘நாளைக்கு எப்படியாவது ஒரு வழியைப் பாப்பம்..!” ஒரு ஆறுதலுக்காகவாவது அப்படிச் சொல்லவேண்டியிருந்தது. ஆனால் நாளைக்கு என்ன செய்யப்போகிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

நித்திரை வர மறுத்தது. நாளைக்கு என்ன செய்யலாம்? எங்கே போகலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனைவியும், குழந்தைகளும்கூட உறங்காமலிருக்கிற அசுகை தெரிகிறது. என்னவென்று புரியாத வேதனை மனதை அலைத்தது.

ஒரு வேலை கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில் அவரும் அலையாத இடமில்லை. கார் சாரதியாக முப்பது வருடங்களாகக் காலத்தைக் கடத்தியவர். கடைசியாக ஓடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. பெற்றோல் விலை ஏறியதும், இனிக் கட்டுப்படியாகாது என முதலாளி வாகனத்தை விற்கப்போகிறாராம்.

நன்கு அனுபவமுள்ள கார் டிரைவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறார்கள் – நேரில் வரவும்! குழந்தை குட்டிகளையும், பொறுப்புகளையும் மறந்து கொழும்பிற்குப் போகமுடியாது. என்னப்பா, யாழ்ப்பாணத்தில் அப்படியொரு வேலை இல்லாமற் போய்விட்டதா எனக் காரணமற்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஒரு வேலை கிடைக்கும்வரை என்று சொல்லிக்கொண்டு பெண்சாதி பிள்ளைகளின் காதில், கழுத்தில் தப்பியொட்டிக் கிடந்தவற்றையும் விற்றுச் “சரிக்கட்டிய” நாட்களும் போய்விட்டன. பல நினைவுகளோடும் விடியப்புறமாகத்தான் உறங்கியிருக்கவேண்டும்.. மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத்திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந்தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார்.

ஆறுமுகம் வெளியே போக ஆயத்தமாக வந்தபொழுது பவளம் ஏற்கனவே எழுந்து வீடு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நிற்பதைக் கண்டார். அன்றுதொட்டே அவளிடம் உள்ள பழக்கம் இது. நிலம் விடிவதற்கு முன்னரே எழுந்து பாத்திரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்புரவு செய்து….

அதற்கு மேல் அவரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.. அதற்குப் பிறகு அவள் கைச்சுறுக்காகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். அந்த நாட்கள் இனித் திரும்ப வராதா..?

வெறும் தேயிலைச்சாயத்தை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தாள் பவளம். சூடாக இருந்ததால் அவ்வளவு கசப்புத் தெரியவில்லை.

‘எப்பிடியும் பத்துப் பதினொரு மணிக்கு முதல் ஏதாவது பார்த்துக்கொண்டு வாறன்..” எனச் சமாதானம் கூறிவிட்டு நடந்தார் ஆறுமுகம். அவள் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய்க் குற்றியை அவிழ்த்து அவரிடம் கொடுத்தாள்!

‘இந்தாங்கோ… நேற்று முழுக்கச் சாப்பிட்டிருக்கமாட்டியள்… முதல்லை ஏதாவது சாப்பிட்டிட்டு போற இடத்துக்குப் போங்கோ!”

அவர் ஏன், ஏது என்று ஒன்றுமே கேட்காமல் காசை வேண்டிக்கொண்டு போனார்.

வேலையொன்று இல்லாமல் கணவன் அலைவதையும் குடும்ப நிலைமையையும் பொறுக்காமல் நேர்த்திக்கடனாக இந்த ரூபாயை நினைத்து வைத்திருந்தாள். ‘அப்பனே! அவருக்கு கெதியிலை, ஒரு வேலை கிடைக்கவேணும்..” இன்றைக்கு மனது கேளாமல் அதையும் எடுத்துக் கொடுத்துவிட்டாள். “எனக்கு அவர்தான் கடவுள் எல்லாம்!” என மனதுக்குச் சமாதானமும் சொல்லிக்கொண்டாள்.

அவரைப் போகவிட்டு அழுவாரைப்போலப் பார்த்துக்கொண்டு நின்றாள் பவளம்.. ‘ஏன்தான் இந்தக் கண்கெட்ட கடவுள் இப்பிடி மனிசனைப் போட்டு அலைக்குதோ!”

மூத்த பெண் கமலா எழுந்து அம்மாவைத் தேடிக்கொண்டு வாசலுக்கு வந்தாள். பிள்ளைகளுக்கு நஞ்சைக் கொடுத்துவிட்டுத் தாங்களும் சாகிற கதையை இரவு அம்மா சொன்னபொழுது அவளும் கேட்டுக்கொண்டே படுத்திருந்தாள். அம்மா அப்படி ஏதாவது ஏறுக்குமாறாய் செய்துவிடுவாளோ என்ற பயம்.

‘ஆரையம்மா பாத்துக்கொண்டு நிக்கிறாய்?”

‘நான் ஆரைப் பாக்கிறது…? கொய்யாவைத்தான் அனுப்பிப்போட்டு நிக்கிறன் பிள்ளை..”

‘இப்ப யோசிச்சுக்கொண்டு நின்று என்ன செய்யிறது…? எங்களைப் படைச்ச கடவுள் ஒரு வழியையும் காட்டாமல் விடப்போறாரே… வாங்கோ! உள்ளுக்குப் போவம்!”

தம்பிமார் பாடசாலைக்குப் போக ஆயத்தமானபொழுது கமலா தாயிடம் சொன்னாள்.

‘வீட்டிலை இருக்கிற நாங்கள் சும்மா இருக்கலாம்… பள்ளிக்குப் போகிற பெடியள் என்னெண்டணை பசி கிடக்கேலும்?”

அம்மாதான் என்ன செய்வாள்?

‘எடேய், ராசா! சின்னத்தம்பி கடையிலை ஓடிப்போய் ரெண்டு றாத்தல் பாண் கேட்டுப் பாரப்பு…! பின்னேரம் ஐயா வந்தவுடனை காசு தரலாமெண்டு..!”

‘நான் போகமாட்டன் போ…! இவ்வளவு நாளும் வேண்டின காசு குடுக்கயில்லை…. அவன் அங்கை ஆக்களுக்கு முன்னாலை தாறுமாறாய்ப் பேசிறான்..”

‘என்ரை குஞ்செல்லே! போட்டு வாடி…! பிறகு அப்புஅவைக்குத்தானே பசிக்கும்?”

‘பசி கிடந்து செத்தாலும் பறவாயில்லை.. அவனிட்டைப் போய் அந்தமாதிரிப் பேச்சுக் கேட்கமாட்டன்!”

‘இவன் உரிச்சுப் படைச்சுத் தேப்பன்தான்… சரியான ரோசக்காறன்..!” என ஒருவித பெருமையுணர்வோடு சொன்னாள் அம்மா.

அவனுக்கு அடுத்தவனைக் கூப்பிட்டு அனுப்பினாள் கமலா. யார் சொல்லாவிட்டாலும் போய்க் கேட்கிற நிலையிற்தான் அவன் இருந்தான். வயிற்றைத் தடவியபடியே கடையை நோக்கி ஓடினான். ஆனால் போன கையோடு திரும்பி வந்தான்.

‘நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்தன்… அவன் தரேலாதெண்டிட்டான்… குடுக்கவேண்டிய கடனைக் குடுத்துப்போட்டு பிறகு வரட்டாம்… ஆக்களுக்கு முன்னாலை பெரிய லோ எல்லாம் பேசினான். இனி உன்ரை கடைப்பக்கம் வரமாட்டன் எண்டு சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்.” – அவன் உணர்ச்சிவசப்பட்டுப் போயிருந்தான். “பாவம், பிள்ளை பசிக்கொடுமையிலை அவனோடை சண்டை பிடிச்சிருக்குப்போல..” என அம்மா நினைத்துக் கொண்டாள்.

‘உதுக்குத்தான் அப்பவே சொன்னனான்… போகவேண்டாமென்று!” என வெடித்துக்கொண்டு புறப்பட்டுப் போனான் மூத்தமகன்.

‘போட்டு வாங்கோடி ராசா… மத்தியானம் ஐயா ஏதேனும் கொண்டுவந்திடுவார்… சமைச்சு வைக்கிறன்..”

இனி, விடிய எழுந்த நேரம் முதலே சிணுங்கிக் கொண்டிருக்கும் சின்னவனைச் சமாளித்தாக வேண்டும்..

00

சந்தியில் இன்னும் சனநடமாட்டம் அதிகரிக்கவில்லை. சில கடைகளும் திறக்கப்படவில்லை. தேநீர்க்கடை முருகேசு மாத்திரம் கடையைத் திறந்து தண்ணீர் தெளித்து வாழைக்குலையை எடுத்து வெளியே தொங்கவிட்டுக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்து வெளியேறி வந்த ஆறுமுகம் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு நின்றார். இதே சந்தியிற்தான் முன்னர் அவர் கார் வைத்து ஓடியவர். அதனால் இவ்விடத்தில் உள்ளவர்கள், கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அவருக்குப் பழக்கம். பழைய ட்றைவர்மார்களில் இன்னும் இரண்டொருவர் கார் வைத்திருக்கிறார்கள். என்றாலும் உழைப்புக் குறைவுதானாம். எப்பொழுதாவது இருந்துவிட்டுத்தான் ஒரு சவாரி கொத்தும்.

கடை திறப்பதற்கு வந்த சலூன்காரப் பெடியன் ஆறுமுகத்தின் கோலத்தைக் கண்டு, ‘என்னண்ணை இந்தப் பக்கம் மறந்து போச்சோ?” என்றான்.

கஷ்டப்பட்டு அவனுக்கு ஒரு சிரிப்பை வெளிப்படுத்திக் காட்டினார்.. ‘எங்கை தம்பி நேரம் கிடைக்குது?”

ஆனால் இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவர் எந்த நேரமும் இங்கு வந்து “சும்மா” நிற்கிறாரே! பல நாட்களாகச் “சேவ்” பண்ணப்படாததால் முட்களாகக் குற்றி வளருகிற தாடி! நாடியைச் சொறிந்தவாறு வீதியை வெறித்தார்.

பாடசாலைக்குப் போகின்ற சிறுவர், சிறுமியர்கள்! அவருக்கு அந்தப் பாக்கியம்கூடக் கிடைக்கவில்லை. பதினேழு வயசாயிருக்கும்போதே அவரோடு சேர்ந்த இரண்டு சகோதரிகளையும் இரு சகோதரர்களையும் தாயையும் அவரது பொறுப்பில் விட்டுவிட்டுத் தந்தை காலமாகினார். ஆறுமுகம் படிப்பை இடைநிறுத்தி உழைப்பாளியாக மாறவேண்டியிருந்தது. கதிரவேலுவின் லொறியில் கிளீனராகச் சேர்ந்து, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஓடிய காலங்களில் சாரத்தியம் பழகி, லொறிச் சாரதியாக இரவு பகல் பாராது உழைத்து உழைத்து, ஓரளவு கடனும் பட்டு, ஒரு காருக்குச் சொந்தக்காரனாகி சகோதரிகளை ஒவ்வொருத்தனின் கையில் ஒப்படைத்து, தம்பிமாரைப் படிப்பித்து ஆளாக்கி…

அப்பொழுதெல்லாம் அம்மா சொல்லுவாள்: ‘தம்பி… இந்தக் குடும்பத்துக்காக இந்த வயசிலையே… உழைச்சு உழைச்சு ஓடாய்ப்போனாய்…. கடவுள் உன்னைக் கைவிடமாட்டார்… பின்னடிக்கு நல்லாய் இருப்பாய்..” ஓர் ஆசீர்வாதம்போல தனது மன ஆறுதலுக்காகவோ அல்லது அவரது மன ஆறுதலுக்காகவோதான் அம்மா அப்படிச் சொன்னாளா என்பதும் தெரியாது. அந்த அம்மாவே அவரைக் கைவிட்டு இறைவனடி சேர்ந்தபின்னர் இறைவனுக்கு அவர்பால் என்ன கரிசனை?

இப்பொழுது குடும்பசமேதராகி கொழும்புவாழ்க்கை நடத்துகிற தம்பிமார்களும் வருவது குறைவு. அரசாங்க உத்தியோகக்காறர்.. பல தொல்கைள் இருக்கும். ஒரு நல்லநாள் பெருநாளில் அக்கா, தங்கை தம்பிமார் எல்லோரும் வந்து நிற்பார்கள். எவ்வளவு கலகலப்பாயிருக்கும்! அந்த நாட்களின் இனிமையை நினைத்து ஏங்கினார். எவ்வளவு சுமையென்றாலும் மனதை அழுத்தாத சுகம் இருந்தது. இப்பொழுது, ‘அண்ணை பாவம்…! கஷ்டப்பட்டுப்போச்சுது…. நெடுகலும் நாங்கள் போய்த் தொல்லை குடுக்கக்கூடாது!” என்ற பெரிய மனசு அவர்களுக்கு.

கார்க்காரச் சண்முகம் – அவரிடம் கார் பழகியவன் ரௌனுக்குப் போகிறான் போலிருக்கிறது… அவரைக் கண்டதும் காரை ஸிலோ பண்ணி வெளியே தலையை நீட்டி, ‘என்னண்ணை ரௌனுக்கோ?” என்று கேட்டான். குருவுக்குக் கொடுக்கிற மரியாதை! அவர் ‘இல்லை..சும்மாதான் நிக்கிறன்..” எனச் சொல்லிவிட்டு நின்றார்.

சொந்தமாக இருந்த தனது காரையும் கடைசித் தங்கையின் திருமணத்தின்போது விற்றது எவ்வளவு மடத்தனம் என எண்ணினார்.

தன்னிடம் இப்பொழுது எதுவுமே இல்லை எனவும் நினைத்துக்கொண்டார். இப்படி ஒரு கஷ்டம் அவருக்கு ஒருநாளும் வந்ததில்லை. இல்லையென்று சொல்லாமல் எத்தனை பேருக்கு அள்ளிக்கொடுத்த கை வறண்டு போய்விட்டது. எப்பொழுதுமே அவர் தனக்காக எதையும் சேர்த்தவரல்ல. நிறைய இல்லாமல் உழைப்பதையெல்லாம் கொடுத்தவர்! அவரிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையென்றதும் விலகிவிட்ட உறவுகள்!

விருத்தெரிந்த காலம் முதலே தனக்கு வாழ்க்கை ஒரு சவாலாக அமைந்துவிட்டதை நினைத்துப் பார்த்தார். ஒரு போராளியாகவே வாழ்க்கையை எதிர்கொண்ட நெஞ்சுரம் வேறு யாருக்கு வரும் எனத் தன்னை எண்ணிப் பெருமையும் அடைந்தார். இப்பொழுது சோர்ந்துபோய்விட்டேனா அல்லது தோல்வியா எனப் பயம்கொண்டு, அடுத்தகணமே.. இது தோல்வியல்ல தற்காலிகமான சிறு தடங்கலே என மனதைத் தேற்றிக்கொண்டார்.

வீதியில் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. வாகனங்கள், சைக்கிள்காரர், சம்பாதிக்கப் போகின்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், இன்னும் கூட்டம் கூட்டமாகப் போகிற பாடசாலைப் பிள்ளைகள் – “கடவுளே! ஏன்ட பிள்ளையள் சாப்பிடாமற்தான் போகுதுகளோ என்னவோ?”

தான் இப்பொழுது இறைவனைப் பற்றியெல்லாம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. நண்பர்களோடு சேர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து திரிந்த நாட்கள்! அந்த இளமைக் காலங்கள் – கோபால், மணி, சுந்தரம், முத்துராசா…

கோபாலும் மணியும் கார் சாரதிகள். கோபால் சொந்தமாகக் கார் வைத்திருந்தான். மணி சம்பளத்துக்கு ஓடியவன். சுந்தரம் தேநீர் கடையில் நின்றவன். நன்றாக ரீ போடுவான். நல்ல பாட்டுக்காரன் (என்று ஒரு நினைவு!). எல்லோருமாகச் சேர்ந்து சினிமா செக்கன்ட் ஷோவிற்குப் போவார்கள். அதற்குத்தான் நேரம் ஒத்துவரும். அடுத்தநாள் சுந்தரம் அந்தப் பாட்டுக்களைப் பாடிக் காட்டுவான். ஆறுமுகம் “சபாஷ்” போடுவார். அது ஏளனமா? அல்லது புகழ்ச்சியா என்று புரியாமல் தன்னை மறந்து பாடுவான் அவன். முத்துராசா விழுந்து சிரிப்பான்.

முத்துராசாவிற்கு அப்பொழுது ஒரு முயற்சியும் இல்லை. வறிய குடும்பத்துப் பொடியன். நோய்காரத் தந்தை. அன்றாடம் சாப்பாட்டுக்கே இல்லாத குறைபாடு அவனை அவர்களோடு சேர்த்து வைத்தது. அவனென்றால் அவர்களது புண்ணியத்தில் ஏதாவது போட்டுக் கொள்வான். வீட்டிலே பட்டினிதான்.. ஆறுமுகத்திற்கு ஒரு “ஐடியா” தோன்றியது.

அதன்படி, ஒரு சுபநாளில் யாழ்ப்பாண நகரத்தில் முத்துராசாவிற்குச் சொந்தமாக ஒரு “ரீ றூம்” திறக்கப்பட்டது. பணமாகவும் வேறு வகையிலும் எல்லா உதவிகளையும் நண்பர்களின் ஒத்தாசையோடு ஆறுமுகம் செய்துவைத்தார். இன்றைக்கு அது வெறும் “ரீ றூம்” மட்டுமல்ல! தங்குமிட வசதிகள், அறுசுவை உணவுகள் வழங்கும் பெரிய ஹோட்டலாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

மின்னலைப்போல ஓர் உணர்வு தட்டியது. முத்துராசாவிடம் சென்றால் என்ன?

அந்த நினைவு வந்ததுமே சந்தோஷமடைந்தவராய் நடக்கத் தொடங்கினார். பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிட்டதுபோல மனசு தளர்ந்து பறந்தது. புதிய உற்சாகம் பிறந்துவிட்டது. அவர் ஓடியே போயிருப்பார். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நடக்கவேண்டியிருந்தது.

“என்ரை கெட்டகாலத்துக்கு… முத்துராசா இருக்கிறானோ, இல்லையோ தெரியாது… கடவுளே அவன் இருக்கவேணும்!” என மனது பிரார்த்தனை செய்தது.

ஹோட்டல் வாசலில் முத்துராசாவின் கார் நின்றது. “அப்பாடா! ஆள் இருக்கிறான்!” வாசல்வரை சென்று சற்றுப் பின்வாங்கி நின்றார் ஆறுமுகம். எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? எப்பவுமே கூச்சப்பட்ட சுபாவம்.

வெறும் கஞ்சித்தண்ணியோடு கிடக்கின்ற குழந்தைகளின் நினைவு சட்டென்று அவரை உந்தித் தள்ளியது.

காசு மேசையில் முத்துராசா ராசாவென இருந்தான். (மன்னிக்கவும்… இருந்தார்) ஒருமையிலா, பன்மையிலா சம்பாஷிக்கலாம் என்ற சங்கடம் ஏற்பட்டது. முன்பென்றால் ஒருமை.. அவன் தனி ஆளாக இருந்தான். இப்பொழுது பொருள், பண்டம், சொத்துப் பத்து எனப் பெருகிப் பன்மையாக இருக்கிறார்.

வியர்க்க விறுவிறுக்க வந்து நின்ற ஆறுமுகத்தைக் கண்டு முத்துராசாவின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. அல்லது அந்த முகத்தில் இயற்கையாக உள்ள மலர்ச்சியோ தெரியாது.

‘என்ன ஆறுமுகம் இந்தப் பக்கம்?”

‘ஒன்றுமில்லை… சும்மாதான்…”

உணவருந்திவிட்டு வெளியேறுகிற சிலர் பணம் செலுத்துவதற்காக இவர் ஒதுங்கி நின்றார். பிறகு கேட்டார்..

‘ஒரு முக்கியமான அலுவலாத்தான் வந்தனான்… கடைசியாய் கார் ஓடின இடத்திலையும் வேலையை நிப்பாட்டியிட்டாங்கள்.. ஒரு மாதத்துக்கு மேலையாகுது… வேறை இடமும் கிடைச்சபாடில்லை…. கையிலை மடியிலை இருந்ததுகளும் கரைஞ்சுபோச்சு…. வீட்டிலையெண்டால் பெரிய கஷ்டம்… ஆரிட்டையம் கைநீட்டிப் போகவும் விருப்பமில்லை…. ஒன்டுக்கும் வழியில்லாமல்தான் இஞ்சை வந்தனான்..”

முத்துராசவின் முகம் இதைக் கேட்டு இருட்சி அடைந்தது. ‘கவலையோ?”

சரி வரும்போலிருந்தது. ‘எங்கட முத்துராசாதானே.. என்றாலும் எடுத்தவாக்கில் அதிகமாகக் கேட்கவும்கூடாது.. இன்றையப்பாட்டுக்கு ஏதாவது கிடைச்சால் போதும்..’ ஆறுமுகமே தொடர்ந்து பேசினார்.

‘… ஒரு நூறு ரூபாயெண்டாலும் தந்தால் பெரிய உதவியாயிருக்கும்!”

முத்துராசா சமாதானமாகச் சிரித்தார்.

‘இதுதானே…? நீ முதல்லை உள்ளுக்குப் போய் ஒரு ரீ குடிச்சிட்டு வாவன்… களைச்சுப்போய் நிக்கிறாய்” என்றவாறு உட்புறம் திரும்பி ஒரு “ரீ”க்கு ஓடர் கொடுத்தார்.

ஆறுமுகத்தின் கண்கள் பனித்தன. அது உதவி என்று கேட்டு வந்தபொழுது மனிசத்தனத்தோடு தன்னைக் கௌரவிக்கின்ற முத்துராசாவின் பெருந்தன்மையை நினைத்தா? அல்லது பெண்சாதி பிள்ளைகள் வயிராற இன்றைக்குச் சாப்பிடப்போகிறார்கள் என்ற சந்தோஷத்திலா என்று புரியவில்லை.

தேநீரைக் குடித்ததும் அரைவாசி உயிர் வந்தது போலிருந்தது.

முத்துராசாவிற்கு முன்னால் போய் வலிந்து சிரிப்பை வெளிப்படுத்தினார் ஆறுமுகம்.

‘என்ன ஆறுமுகம்… நிலைமை விளங்காதமாதிரிக் கதைக்கிறாய்…? நூறு ரூபாய்க்கு… இப்ப நினைச்சவுடனே நான் எங்கை போறது…? நீ வந்து நின்ற கோலத்தைப் பாத்திட்டுத்தான்… என்னென்று சொல்லுறதெண்டு தெரியாமல் ரீயைக் குடிச்சிட்டு வா எண்டனான்…”

அவர் ஆளாக்கிவிட்ட பழைய முத்துராசாவா பேசுகிறான்? “இவனிட்டைப் போய்த் தேத்தண்ணியை வேண்டிக் குடிச்சனே..” என்ற தாழ்வுணர்வு மனதை அழுத்தியபொழுது, மனைவி கொடுத்துவிட்ட ஒரு ரூபாய் நினைவில் வந்து தலையை நிமிர்த்தியது.

‘இந்தா… தேத்தண்ணிக் காசை எடு!” என்று காசைக் கொடுத்தார். காலையில் இரக்கத்தோடு வழியனுப்பி வைத்த அந்தப் புண்ணியவதியின் தோற்றம், அவளது துணை நெஞ்சிற் தைரியத்தைக் கொடுத்தது.

(சிரித்திரன், 1980)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *