Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கொஞ்ச தூரம்

 

அன்று காலையில் எழுந்தது முதல், அவன் மனது சரியாக இல்லை . கிராமத்தில் தன் தனி வீட்டில் கடந்த ஆறுமாதமாக அவன் நடத்திய வாழ்க்கையில், அவன் மூளைக்கு ஒன்றுமே சாரமாகப்படவில்லை. படித்து முடிந்து, நகரத்தினின்றும் ஊர் சேர்ந்து அங்கேயே இருந்தான். நான்கு மாதத்திற்கு முன்பு, கடைசியாக, தன் கல்லூரி சிநேகிதி மிஸ். ரோஜாவிற்கு எழுதின கடிதந்தான் அவனுடைய பழைய வாழ்க்கை நினைவின் அறிகுறி போன்றது.

எழுந்தவன் வாயில் திண்ணையில் நின்றுகொண்டு பார்த்தான். கீழிறங்கி தெருவின் வழியாக நடந்து சென்று, சிறிது தூரத்தில் அவ்வூர் எல்லையில் ஓடும் வாய்க்கால் கரையில் நின்றுகொண்டு கிழக்கே வெகு தூரம் வரையில் பார்த்தான். அடிவானத்தில் சிறு சிறு மேகங்கள் வெண்மை யாகத் திட்டுகள் போன்று அசைவற்று இருந்தன. கண்ணுக் கெட்டிய வரையில், தனித்தனி மரங்கள் தனிப்பட்டே தோன்றின. சிறிய குடிசைகள், அங்குமிங்கும் மரங்க ளிடையே தெரிந்தன. இரண்டொரு ஆடுமாடுகள் செய்வதறியாது காலந் தவறி மேய்வது போன்று மேய்ந்து கொண்டிருந்தன. அவன் காலடியின் கீழ், அச்சிறு வாய்க்காலில், தெளிவாக, அடிமணல் தெரிய ஜலம் அரித்தோடிக் கொண்டிருந்தது. ஜலத்தின் மீது உலர்ந்த இலைகள் மிதந்து சிறு சுழலில் சுழன்று, மேலும் கீழுமாக அழுத்தமாக, மெதுவாக, ஜல ஓட்டத்தில் இழுக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தன.

எல்லாம், ஒரே இடத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. பழையபடியே தான் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ஆவலாக, இருந்த இடத்தில் காண நினைத்தது, “அங்கு இல்லை, எங்கும் காணவில்லை” என்று எண்ணியது போன்று சலிப்புற்று வீட்டிற்குத் திரும்பி வந்தான். கதவை அடைத்து உட்சென்று சாப்பிட்டான்.

மத்தியானம் சுமார் ஒரு மணி இருக்கும் போது இவன் வீட்டை விட்டுக் கிளம்பினான். தெருக்கோடியில் உள்ள சிவன் கோவிலையும், அவ்வூர் வாய்க்காலையும் கடந்தான். வாய்க்காலைக் கடந்தவன் சிறிது நின்றான். பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். அச்சிறிய கிராமமும், பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் தெளிவுற்ற பார்வையைக் கொடுக்கவில்லை. இடிந்த மதிற்சுவரின் இடையே கோவில் பிராகாரத்தில் உள்ள புஷ்பச் செடிகள் தெரிந்தன. வாழ்க்கைத் திரையில் தீட்டப்பட்ட சித்திர உருக் காட்சியையே இவன் மனதில் கொண்டான். சில சில புஷ்பங்கள் கொய்யப்படாமலே ஒரு பசுமைத் தோற்றத்தின் நடு நடுவே இருந்தன. மெய்மறந்த இன்பத்தில் அச்சித்திரக் காரன் அறியாது, மிகுந்த பகட்டுடன், சிறு திட்டு வர்ணப் பூச்சுகளை அத்திரையில் தீட்டினது போன்றுதான் அப்புஷ்பங்கள் பசுமையில் பதிந்திருந்தன. வாய்க்காலில் துணி துவைக்கும் பாராங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச் செடியில் “ஏன்-எங்கே-’ என்று கத்திக் கொண்டு மறைந்துவிட்டது. “கொஞ்ச தூரம்” என்று அப்போதுதான் எண்ணியவன் போன்று தனியே தன் வழி நடக்கலுற்றான்.

மிக உஷ்ணமான பிற்பகல். உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றத்தைக் கொண்டது. வெப்பத்தைத் தாங்காது ஆலமரத்தடியில் மாடுகள் தங்கி இருந்தன. கண்களை மூடியவண்ணம் படுத்திருந்தன சில. கண்கள் மூடியே அசை போட்டுக் கொண்டு, அலுப்பில் சமாதானமின்றி, அலைவது போன்று அங்குமிங்கும் நிழலில், சில ஊர்ந்தன. நடு நடுவே, திடீரென்று வானம் கிழிய, ஒன்றிரண்டு மாடுகள் அலறிய சப்தமும், நிசப்தத்தில் மறைந்து போயிற்று. மேலே, மரக்கிளைகளில் பக்ஷிகள், ஆரவாரித்தன. உலக அலுப்பே, குமுறி முனகுவது போன்று, அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின. அவைகளின் இரைச்சல் திடீரென்று நிற்கும் போது, இடையிடையே சீர் இல்லாமல் பொத்தென்று கீழே விழும் முதிர்ந்த ஆலம்பழங்களின் சப்தம். எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தி யது. இவன் போய்க்கொண்டே இருந்தான். கண்ணுக் கெட்டிய தூரத்தில் கானல் சலனத் தோற்றம். வெகு தூரத்திலிருந்து “ஹோ-ஹொ ஹொ-ஹொய்-” என்று கேட்டது, மானிடக்குரல். பின்னிருந்து இடைப்பையன் களின் அர்த்தமற்ற கானம். எங்கும் நிசப்தம்தான், அமைதி, இவனுக்கு, மனத்திற்கு இசையாத சாந்தம்.

உலகம் அலுப்பு மயம், களைப்பு மயம். இவன் நடந்து கொண்டுதான் இருந்தான். சூரியன் அன்று வெகு உக்கிரம். ஒருவகை மனப் பளுவும் வருத்தமும் இவன் மனத்தில் குடி கொண்டன. உலகமும் அவற்றைத்தான் தோற்றுவித்தது. முதல் நாள் இரவிலிருந்து கொண்ட மன இருள், இரவில் இருளில் சிறிது ஆறுதல் கொண்டது போன்று இவனை அவ்வளவு துன்புறுத்தவில்லை . பகல் ஒளியிலும் மனதிருள் மறையாதது இவனால் சகிக்க முடியவில்லை. பொறுக்க முடியவில்லை . உலக இரைச்சலும் பயங்கரத் தனித் தோற்றத்தையே கொடுத்தது. வீட்டினுள் இருக்க முடியாமல், போவதின் பயன் தெரியாமல் வெளி நடந்தவன் இவன்.

இவன் நடந்து கொண்டே சென்றான். சிறிது நேரத்திற்கு முன்பு, வெகு தூரத்தில் கண்ட ஒரு தனி மரம். இவனுக்கு எல்லையைக் கொடுத்தது போன்று; அதனிடம் வந்ததும், அதன் கீழ் சிறிது உட்கார்ந்தான். கையில் கொண்டுவந்த ஒரு குப்பியிலிருந்ததைக் கொஞ்சம் குடித்தான். மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம், இவனைச் சந்தேகமாய்த் தலைசாய்த்துப் பார்த்தது. உடனே அது மிக விகாரமாகக் கத்திக் கொண்டு பறந்து விட்டது. இவன் தலைப்பளு கொஞ்சம் குறையலுற்றது. முகத்தில் இரத்தமேறியது. உலகத்தின் பேரிரைச்சலும் காதில் சப்தித்தது. மிகுந்த உற்சாகம் கொண்டான். நடக்க ஆரம்பித்தான். பின்னிருந்து பறவைகளின் சந்தோஷமான ‘எங்கே-எங்கு” கேள்விகள்.

“இல்லை இல்லை, கொஞ்சதூரம், இருட்டுமளவும்” என்று முனகிக் கொண்டே நடந்தான். சூரியன் மேற்கே கீழடிபோக வாரம்பித்தான். மெதுவாகச் சிறிது கீழ் சென்றதும், இவன் நிழல் வெகுவாக முன் நீண்டது. காற்று மெல்லென வீச ஆரம்பித்தது. இரண்டொருவர் ஆடுமாடு களை வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு போயினர். பக்ஷிகள் பகல் வேலை முடிவையும், இரவு ஓய்வு சந்தோஷத்தையும் பாடித் தெரிவித்தன. மரக்கிளையில் இருந்த பக்ஷிக் கும்பலில் சில அங்குமிங்கும் பறந்து திரும்பி வந்து உட்கார்ந்தன. வேலையினால் அலுப்பு, களைப்பு, வேலை முடியும் எண்ணம், ஓய்வில் சந்தோஷம்.

தனிப்பட்ட, கடைசி ஆடும் இடையனால் திரும்ப வீடு ஓட்டிச் செல்லப்பட்டது. அலுப்பு மிகுதியில், காரணமற்றே, இடையன், அதை நையப் புடைத்து நடத்திக் கொண்டு போனான்.

சிறிது சென்று, இவன் நின்று கொண்டே மறுமுறை குப்பியிலிருந்ததைக் குடித்து முடித்தான். குப்பியை வீசி எறிந்தான். பக்கத்துச் சப்பாத்திப் புதரில் அது விழுந்தது. இரண்டொரு வண்ணாத்திப் பூச்சிகளும், ஈசல்களும், மேலே பறந்தன. அவன் நடக்க ஆரம்பித்தான். அவன் சாலையை அடைந்தான். அவன் முகம் மிகச் சிவந்தது. தலை வெகுவாகச் சுழன்றது. மனத்தில் அர்த்தமில்லாத ஆநந்தம் தோன்றித் தோன்றி மறைந்தது. அந்தி மங்கல் வெளிச்சமும் மங்கலுற்றது.

கடைசிக் காகமும் பயந்து, தான் தனிப்பட்டதை உணர்ந்து, கரைந்துகொண்டே பறந்து விட்டது. முதல் நக்ஷத்திரம், சிறு ஒளியொன்று தென்பட்டது. கடைசியாகத் தன் இருப்பை நிரூபிப்பது போல இருள் கொஞ்சம் கொஞ்சமாக உலகை மூட ஆரம்பித்தது. அன்று பகலும், பயமின்றி நேரே வரும் இரவிற்காக ஒதுங்கி, மிக வருத்தமாக வழிவிட்டுச் சென்றது.

மரங்களினிடையே சலலப்புச் சப்தம் நின்றதுவருத்தமாகத்தான்-ஜன சஞ்சாரம் குறைந்துவிட்டது. பக்கத்துப் பாழடைந்த மண்டபத்திலிருந்து ஆந்தை ஒன்று அலறியது. எதிரொலித்தும் குறைவுபட்டும், அதன் அலறல் நிசப்தமாகாது போன்று, வெகு தூரத்திலிருந்து, மற்றொன்று பிரதி தொனித்தது. எங்கும் வாய்விட்டு அலறும் வருத்தம் சூழ்ந்த து.

அவன் போய்க்கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் நடையில் நிதானம் இல்லை. அவன் தள்ளாட ஆரம்பித்தான். சிறிது நிற்பான். திரும்பிப் பார்ப்பான். நடப்பான்-சாலை வழியாகவே, அலுப்பு, களைப்பு, வருத்தம் அவனால் தாங்கமுடியவில்லை. தலையோ சுழன்று சுழன்று தனியே போவதாகத் தோன்றியது.

கொஞ்சம் முன்னால் ஐந்தாறு பேர் போய்க் கொண்டிருந்ததை இவன் இருட்டில் கண்டான். நின்று நின்றும், நடந்து கொண்டும், அர்த்தமற்றுக் கத்திக் கொண்டும் அவர்கள் போனார்கள். பின்னால் இவன் திரும்பிப் பார்த்தான். இரண்டு பிரகாசமான கண்கள் இவனைப் பார்ப்பதாகத் தோன்றியது.

இரவு நன்கு இருண்டது. நக்ஷத்திரங்களின் சிறு ஒளியும் பிரகாசமடைந்து தோன்றியது. இவன் நடந்தான். அவர்களைக் கடந்தபோது, இவன் மிகத் தள்ளாட ஆரம்பித்தான். ஒருதரம் நிதானிக்க முயன்றும் பயனின்றிக் கீழே விழுந்தான். அவர்கள் இவனைச் சூழ்ந்து கொண்டனர். சாலை ஓரத்தில் இவனைக் கொண்டு கிடத்தினர். நிமிர்த்தி உட்காரவைத்துப் பிடித்துக் கொண்டனர். இவன் கண்கள் சுழன்று சுழன்று, ஒரு பெரிய ஜனக்கூட்டத்தைத் தான் கண்டன. ஏதோ உளறினான். சிறிது சென்று “அ, ஆ அப்படி இல்லை . இப்படித்தான் போக வேண்டும், அது வந்த வழி-வர வழி-ரோஜா?,” என்றவன் கைகளைத் தூக்கி ஏதோ காட்ட முயன்றவன் முடியாமல் கீழே விட்டான். வாய்விட்டு அசட்டு, அலக்ஷிய சிரிப்புச் சிரித்தான். எதை முடியாதென்று உணர்ந்தானோ! அவன் கண்கள் மூடின.

சுற்றி நிற்பவர்களின் மூளையும் சுழன்று கொண் டிருந்தது. ஆனால் அது அவர்களுடைய பழக்கமான சுழலல். அவனை அவர்கள் தெரிந்து கொண்டனர். “அவ்வூர் அக்கிரகாரத்தில் இருக்கும், பட்டினம் ஐயா அவன்.” அவனைச் சூழ்ந்து நின்று ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பின்னிருந்து ஒரு வெளிச்சம் தெரிந்தது. சிறிது சென்று மோட்டார் சப்தமும் கேட்டது. அந்த மோட்டார் இவர்களை மெதுவாகக் கடக்கும் போது, அதன் உள்ளிருந்து “என்ன?” என்ற கேள்வி வந்தது.

“ஐயா நிதானம் தவறி இருக்காரு” என்று எல்லாருடைய ஒருமித்த குரல் கிளம்பியது. மோட்டார் சென்று விட்டது. சிறிது தூரம் வரையில் இவர்கள் பார்வையையும் கூட இழுத்துக் கொண்டுதான் சென்றது. இவர்கள் திரும்பியதும் “ஐயாவிற்கு மூச்சுப் பேச் சில்லையே என்றான் ஒருவன்.

ஊருக்குள் ஒரு கார் வந்து நின்றது. அந்நேரத்தில் ஏன், என்று அவ்வூரார்களுக்குப் புரியவில்லை . அவ்வூரார் ஒருவனை விசாரித்து இவன் வீட்டடியில் நிறுத்தப்பட்டது. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வூர் பெரிய வீட்டிற்கு, வந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ரோஜா கருப்பு உடை அணிந்து மிக அழகாக விருந்தாள். அவளோடு வந்தவன் ஒழுங்காக ஆடை உடுத்தி உன்னதமாகத் தோன்றினான். |

“அந்த வீட்டுக்காரர் எங்கே?” என்றாள் ரோஜா.

“வெளியில் போயிருக்கலாம் – மத்தியானமுதல் காணவில்லை, எங்கேயாவது பிரயாணம் போயிருக்க லாம்-” என்றார் அப்பெரிய வீட்டுக்காரர்.

“உங்களுக்குத் தெரியாதா-?”

“அவனுக்கே, இப்போது அவன் செய்கிறது தெரிகிற தில்லை .”

“அப்படியென்றால்.”

“இரண்டு மூன்று மாதமாக அவன் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறான்” என்றார் அப்பெரிய வீட்டுக்காரர்.

“ஒரு மாதிரியாக ஏன்?” என்று மெதுவாகக் கேட்டாள் ரோஜா. தன்னைத் தானே கேட்டுக் கொள்வது போன்று தான் இருந்தது. “ஏனோ” என்று அவள் திகைக்கச் சொன்னார் வீட்டுக்காரர். ரோஜாவைப் பார்த்து அவளுடன் வந்தவர் “நாம் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார்.

“சிறிது இருந்து பார்க்கலாம்” என்றாள். “பிறகு?” “பிறகு” என்றாள் ரோஜா. சிறிது மௌனமாயிருந்து.

“என் பிரியமான ரோஜா-நீ செய்வது பிடிக்கவில்லை . பள்ளித் தோழன்தான். சிநேகிதத்திற்கும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு எல்லை உண்டு. என்னவோ, எனக்கு இப்போது உன் காரியமும், அதனால் அவனையும் பிடிக்கவில்லை” என்றான் ரோஜாவுடன் வந்தவன்.

“ஆமாம். எவ்வகைக்கும் ஒவ்வொரு சமயத்தில் எல்லையுண்டு. சரிதான், ஆனால் சில-இல்லை இல்லை. அவன் எனக்கு எழுதிய கடிதத்தை உன்னிடம் காட்டி னேனோ? அவனுக்கு என் மணம் நடந்தது தெரியாது. தெரிந்து இருக்கலாம். அவனைவிட என் கலியாணத்தில் ஆனந்தமடைகிறவர் வேறு ஒருவருமே இல்லை. ‘உன்னை நான் என் கிராமத்தில் காண நினைக்கிறேன்’ என்று எழுதினது சாதாரண மேற்போக்கு உணர்ச்சியினால் அல்ல .”

“சரி, அவன் இங்கேதான் இருக்கிறானா? ஏன் இங்கே இருக்கிறான்? வேலைக்குப் போகவில்லையா?”

“இனிமேல் போகலாம்” என்றாள் ரோஜா.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவன் வீடு திறக்கப்பட்டது. அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் உள்ளே கொண்டுபோய் அவனைக் கிடத்தினர். இவ்விருவரும் அவன் வீட்டிற்குச் சென்றனர்.

பிரகாசமில்லாத வெளிச்சத்தில் அவனை, மூடின கண்களோடு பார்த்தாள் ரோஜா. அவள் அம்மாதிரி அவனைப் பார்த்தது இதுதான் முதல் தரம். புதுமாதிரியே அவன் தோன்றினான். ஒவ்வொரு தடவையும் இவளுக்கு ஒவ்வொரு மாதிரியாகவும் புதுமாதிரியாகவும்தான் தோன்றுவான். ஒரே மாதிரியாகத் தோன்றினால் அல்லவா ஒருக்கால் அவனிடம் ஒருவகை எண்ணம் கொள்ள முடிந்திருக்கும்.

இவ்வகையிலே அவனைப் பார்த்தது, இதுதான் முதல் தரம். முதல் தரத்தின் புதுவகையும், ஒரு மாதிரியாகத்தான் அவளுக்குத் தோன்றியது. -

அவன் இருதயம் சிறிது துடித்துக் கொண்டிருந்தது. அவன் வாயினின்றும் மது வாசனை மிக வீசியது. ரோஜா அருகில் நின்றிருந்த அவ்வூர் வாசி ஒருவரைப் பார்த்து “இவர் குடிப்பதுண்டா ” என்று கேட்டாள். “இவனாவது குடிப்பதாவது. நான் நேருக்கு நேராகக் கண்டாலும், நம்பமாட்டேன்” என்றார் அவர். ரோஜா கண்மூடிப் படுத்திருந்த தன் சினேகிதனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றாள்.

“தெரிந்தது நான் பாராவிட்டாலும் நம்புகிறேன். ஆம், வேறு வழி உனக்கு இல்லைபோலும். நண்பா; உன்னை நான் வேறு விதத்திலன்றோ பார்ப்பதாக எண்ணி வந்தேன். ஏன், இப்படிப் பார்ப்பதும் எனக்கு ஆச்சரியமாக இல்லை . அதிசயமாக இல்லை . ஆனால் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறதே நண்பா? ஏன் இவ்வகையானாய் என்று எனக்குத் தெரிந்தால், ஏன்-ஏன் இப்படி” என்று மிக உணர்ச்சி பெற்றுச் சொன்ன வார்த்தைகள் திடீரென்று வெளிப்பட்டு நின்றது போன்று நின்றன. அவள் கணவன், அவன் முகத்தையே பார்த்து நின்றிருந்தான். மூடின கண்களோடு இருப்பினும், அவன் முகத்தோற்றம் உன்னதமாகவே தோன்றியது.

ரோஜா தன் கணவனைப் பார்த்தாள். அவனால் இவளை நேரே நோக்க முடியவில்லை. குனிந்தவாறே நின்றிருந்தான்.

“அவனைத் திறந்த கண்களோடு பார்க்கக் கூடாது. அவன் பேசும் போதும் முடியாது. ஏன்-அவன் ஒருவருக்கும் எட்டாத தூரத்தின் அதிசயம், ஆனந்தம், பயம். அவனையன்றோ -அவனுக்கும் எட்டாதது எது? எப்படித் தோன்றுகிறது என்று கேட்க வேண்டும்” என்று தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள் ரோஜா.

ரோஜா அவன் முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்தாள். அவன் கண்கள் சிறிது திறந்தன. எதிரில் இருப்பது நன்றாக விளங்கவில்லை. எட்டியவைகள் கலங்கிய தோற்றம் கொடுத்தன. மனசில் ஒரு பெரிய பளு. தலை சுழலல்.

இந்நிலையில், தன் முன்னால் ஒரு கருப்புத் தோற்றம், கொஞ்சம் கொஞ்சமாக அவன் எண்ணங்கள் கூடலாயின. வேறு வகையில் நிச்சயம் கொள்ளும் முன்பே, ரோஜா தன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். நம்பமுடியாமல் இருக்கவில்லை . அவன் முதலில் பேசின பேச்சுகள், முணுமுணுப்பில் கேட்காமலே போயின. பிறகு “ரோஜா நீதானே, நீ கருப்பில் எவ்வளவு அழகாக உருக்கொள்ளு கிறாய். ஆனால் எதில் நீ நன்றாக இருக்க மாட்டாய்! அதோ அவர்” என்றான்.

“அவர் என் கணவர். என் கலியாணத்தைப் பற்றி உனக்குத் தெரிவிக்கவில்லை” என்றாள் ரோஜா.

“ஏன்-?”

“ஏன்-ஏன் இப்படி இருக்கிறாய்?”

“எனக்குத் தெரியும் ரோஜா-” வார்த்தைகள் சிறிது தடைப்பட்டு மறுபடியும் அவன் பேச ஆரம்பித்தான். “ரோஜா-” என்று ஆரம்பித்து முடித்துவிட்டான். கண்களை மூடிக்கொண்டான். சிறிது சென்று திறந்தவை இவர் இருவரையும் பார்த்தன. ஆனந்தம் அடைந்து பிரகாசமாகத் தோன்றின. திரும்ப மூடிக் கொண்டன.

இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேக மறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத்துளிகளிலும் வெய்யிலைக் காண நிற்கும் சிறுவர்களே போன்று, இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை . ஆகாயத்தில் வெகு தூரத்தில், இராப் பறக்கும் பறவைக் கூட்டத்திலிருந்து “கோக்-கோக் கோக்.” என்ற சப்தம் கேட்டது. அவன் விழிப்பில்லாத தூக்கம் ஆரம்பித்தது.

தன் முழு ஒளிபெற்ற கண்களோடு, ரோஜா தன் கணவனைப் பார்த்தாள். அவன் கண்கள் சிறிது ஈரமுற்று இருப்பதைக் கண்டாள். ஆனால் ரோஜா முகத்தில் மிகுந்த சோபை குடிகொண்டிருந்தது அப்போது.

இருவரும் அவ்வீட்டைவிட்டு வெளியேறினர். அவ்வூரி லேயே அவ்விரவைக் கழித்தனர். சிறிது இருட்டு இருக்கும் போதே ஊரைவிட்டகன்றனர். அந்த ஊர் வாய்க்காலைத் தாண்டுமட்டும் இருவரும் பேசவில்லை. மோட்டார் வாய்க்காலைத் தாண்டும் போது முதல் காகம் கத்தியது.

அவ்வூர் பள்ளத்தெருச் சேவலும் கூவியது. கிழக்கு வெளுக்கலுற்றது. அவ்வோடையைத் தாண்டியதும் ரோஜா போய்க்கொண்டிருந்த காரிலிருந்து பின் திரும்பி அவ்வூரை நோக்கினாள். கலங்கமில்லாமல் நிசப்தமாக ஓடிய அவ்வோடை நீர் கலங்கித் தத்தளித்துச் சேற்றால் கலக்கப் பட்டிருந்தது. அவ்வூர்க்கோவில் மங்கல வெளிச்சத்தில் மறைவு நீங்கி வெளிக்கோட்டுருவம் கொள்ள ஆரம்பித்தது.

எதிரில் மரங்கள் வெளிச்சத் திரையின் முன்பு, கருப்புருவம் கொண்டு தெரியலாயின. வெளிச்சம் கண்ட வெகு தூரத்தை உன்னிப்பாய் கவனித்தால் அன்று மிகச் சோதிகொண்டது போன்ற காலைச் சூரியன் உதய மாவதைக் காணக் கண் கூசியது. மேலே அண்ணாந்து பார்க்கும் போதும் ஒரே வெளிச்சத் தோற்றமேயன்றி தனித்தோற்றம் ஒன்றும் காணக்கூடவில்லை. போகப்போக “ஏதோ” காணப்படும் என்பது போன்ற உணர்ச்சியுடன் ரோஜா சாந்தமானாள். ஆனால் போவதின் எல்லையை மதிக்க முடியாதது கண்டு திகைத்துப் பெருமூச்செறிவது போன்று ஒரு தரம் அவள் மார்பு விம்மி நின்றது.

“அவன் தானே, நீ அடிக்கடி சொல்லும்…” என்றான் மோட்டாரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன். பதிலில்லை.

“நாம் ஊருக்குத்தானே”-என்றான் அவன். “ஆமாம், என் பிரியமானவனே” என்றாள் ரோஜா.

அவன் கன்னத்தில் ஒரு முத்தம்; அவன் கன்னத்தில் கொஞ்சம் ஈரம்; அவனுக்கு ஜில்லென்ற உணர்ச்சி மிகுந்த ஆனந்தம்.

- மணிக்கொடி 1936 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்றைய தினம் அன்று காலை அவன் மனங்கெட்டுத் திரிந்தான். அன்று நடுப்பகல் மேகமூட்டுக்கொண்டு இருண்டு இருந்தது. ஆலமரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள் தொங்கிக் கொண்டு தன்னை அழைப்பதைக் கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப் பார்த்தான். ...
மேலும் கதையை படிக்க...
பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள், கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி, அவர் அந்தஸ்தும் கெளரவமும் ...
மேலும் கதையை படிக்க...
காதல் சாலை
குடும்பத்தேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)