கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 8,619 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டினுள் இருந்து சத்தம் கேட்டதும், வெளியில் டிரைவேயில் தனது காருக்குக் கிட்ட நின்று புலம்பிக்கொண்டிருந்த நந்தகுமாருக்கு பிரக்ஞை வந்தது.”இல்ல அது வந்து …போஸ்ட்மன் வந்தான் ..அவனோடு பேசினேன்” தடுமாற்றத்துடன் பதில் சொன்னான் நந்தகுமார். அவனுக்கு வீட்டுக்குள் செல்வதற்கு மனமே இல்லை. தனது கார் தரித்து நின்ற டிரைவேயில் நின்றுகொண்டு அதைச்சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், தொட்டுப்பார்த்துப் பெருமூச்சு விட்டும், காரின் கதவைத் திறந்து அதனுள் ஏறி இருந்ததும் தன்நிலை மறந்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்து லண்டனுக்கு வந்தவன். இலங்கையில் தொண்ணூறுகளில் போர் அச்சுறுத்தல் அதிகரிக்க ஜெர்மனி சென்றவன் பின்னர் தன் குடும்பத்தை அங்கு அழைத்துக்கொண்டவன். பதின்ம வயதுப் பிள்ளைகள்..ஓர் ஆண், ஒரு பெண். தன் மனைவிக்கு அங்கு இருக்கப் பிடிக்காததாலும், பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியில் படிப்பிக்க வேண்டும் என்பதற்காகவும், குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு வந்தவன் தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் வாடகைக்கு ஒரு வீடுஎடுத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல்கள் எடுப்பதற்காக பஸ்களில் ஏறி இறங்கித்திரிந்தவன், அவ்வப்போது லண்டனில் இருந்த நண்பர்களும் அவனுக்கு உதவி இருக்கிறார்கள்.தங்கள் கார்களில் கூட்டிச் சென்று பள்ளிக்கூடங்கள் பார்த்து இருக்கிறார்கள். இப்படி அலைந்து தனது பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல்கள் எடுத்துக்கொண்டவன் நந்தகுமார். தன் முயற்சியாலும், நண்பர்களின் வழிகாட்டல் மூலமாகவும் ஒரு வேலையும் எடுத்துக்கொண்டான்.

மகன் ஸ்கூலுக்கு பஸ்ஸில் போய் வருகிறான். மகளின் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து நடந்துபோகிற தூரம்தான். கொஞ்ச நாட்களின் பின்னர் தன் மனைவிக்கும் ஒரு வேலை கிடைக்க வாழ்க்கை இயந்திர மயமாக மாறியது. வீடு,வேலை என்று இருந்தபொழுது..பிள்ளைகளுக்கு டியூசன் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. டியூசன் மாஸ்டரின் வீடு தொலைவில் இருந்தபடியால் பிள்ளைகளை பஸ்ஸில் அனுப்புவது சிரமமாக இருந்தது.

நந்தகுமாரின் மனைவி சுசிலாவுக்கும் பிள்ளைகளை அவ்வளவு தூரம் தனிமையில் அனுப்ப பிடிக்கவில்லை.

ஒருநாள் சனிக்கிழமை பிள்ளைகள் இருவரையும் டியூசனுக்கு கொண்டுவிட்டுவிட்டு வந்த நந்த குமாரை கேட்டாள் சுசிலா.

“என்னப்பா உங்களுக்கு கஸ்டமாக இல்லையே..வேலைக்கு, கடைகளுக்கு, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு டியூசனுக்கு எண்டு பஸ்ஸில் அலைகிறியள். கார் ஒன்றைப் பார்த்து செக்கண்ட் ஹான்டாகவாவது வாங்குங்கோவன்”

“சுசி, நான் நினைப்பதைத்தான் நீ சொல்லுகிறாய். நமக்கு தெரிந்த ஒருவர் தன்ர காரை கொடுத்துவிட்டு வேற கார் வாங்கப் போறாராம். நமக்கு வேணுமென்றால் வந்து பார்த்து வாங்கிக் கொள்ளட்டாம். நீ என்ன சொல்லுறாய்..போய் பார்ப்பமே”

“நான் என்னத்தை சொல்ல…போய் பார்த்து நல்லதாக இருந்தால் வாங்கிடுவம்” பரபரத்தாள் சுசிலா. “பொறு பொறு. நான் முதல்ல அவருக்கு போன் பண்ணுறன். அவர் வரச் சொன்னால் போய்ப் பார்ப்போம்” என்றவன், தன் மொபைல் போனிலிருந்து தன் நண்பனுடன் பேசினான். அவரும் வரும்படி சொல்ல, இருவரும் அவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

அவரும் அவர்களை வரவேற்றுக் கொண்டு, தன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி இருந்த கருப்பு நிற “நிசான் சன்னி” காரைக் காண்பித்து. “இதுதான் கார் நந்தன். நல்ல கொண்டிசன். ஒரு பிரச்சினையும் இல்லை. ‘எம்.ஓ.டி’,

‘ரோட் டக்ஸ்’, எல்லாம் போன மாதம்தான் எடுத்த நான். ஒரு வருசத்துக்கு பிரச்சினை இல்லை. நீ ஓட்டிப் பார்த்துகொள். இந்த கீ ” என்று கார் திறப்பை நீட்டினார். நந்தன் வாங்கிக் கொண்டு காரில் ஏறிவிட்டு பின்னர் சுசீலாவையும் ஏற்றிக் கொண்டான்.

காரை அந்தச் சுற்று வட்டாரத்தில் பல ரோட்டுகளில் ஓட்டிச் சென்றான் நந்தகுமார்.

“என்னப்பா கார் நல்லாத்தான் இருக்கு இல்லையா” “ம்..ம் நல்லாத்தான் இருக்கு. அவர் தனிய, அவர் மட்டும் ஓடிய கார்தனே.அதுவும் அவர் தூர இடங்களுக்கு போனதில்லை. நமக்கு இப்போதைக்கு இது போதும்.”

என்றவன் காரைக் கொண்டு நண்பரின் வீட்டுக்கு முன் நிறுத்தினான். நண்பர்

சத்தம் கேட்டு வெளியே வந்து கேட்டார்

“என்ன நந்தன் கார் ஓக்கேயா,பிடிச்சிருக்கா”

“ஆ.ஓக்கேதான் ..நல்லா இருக்கு,”

“அப்ப,பிறகென்ன ‘லோக் புக்’க நிரப்பி சைன் பண்ணித்தாறன்.பணத்தை தந்துவிட்டு

இப்போதே எடுத்துக்கொண்டு போங்கோவன்” என்றார்.

“சரி. பத்திரத்தை நிரப்புங்க ..சொன்ன விலையில இருந்து கொஞ்சம் குறைச்சுக் கொள்ளுங்க”

“நந்தன் உள்ள வாங்க. அதப்பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர்களை வீட்டுக்கு உள்ளே அழைத்து அமரச் செய்தார்.

பத்திரம் பூர்த்தியானதும், அவர் சற்று குறைத்துக் கொண்டு கூறிய பணத்தைக்

கொடுத்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு அவசரமாக கிளம்பினான் நந்தகுமார் பிள்ளைகளின் டியூசன் கிளாஸ் முடிகிற நேரம் நெருங்கியது. ஏதோ ஆறுமாதங்களாக பஸ்ஸில் பிரயாணம் செய்தவனுக்கு இந்தக் கார் பிரயாணம் மிக சந்தோசத்தைக் கொடுத்தது. அவனைவிட சுசிலாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பிள்ளைகளை இனி கூட்டிக்கொண்டு பல இடங்களுக்குப் போகலாம். சாதி கட்டிகொண்டு கோவிலுக்கு பஸ்ஸில் போவது அவளுக்கு பல சமயங்களில் அசௌகரியமாக இருந்திருக்கிறது. இனி காரிலே கோவிலுக்கு போகலாம். இப்போது இந்தக் கார் வாங்கியது, அவள் சிரமங்களில் இருந்து விடுபடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

நந்தகுமார் சற்று வேகமாக ஓட்டி டியூசன் மாஸ்டர் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் நிறுத்தி விட்டுப் பிள்ளைகளுக்காகக் காத்து நின்றான். அவர்கள் வெளியில் வரும் நேரம் வருவதற்கு சற்று முன்னர் காரிலிருந்து இறங்கி அவர்களை எதிர் கொள்ள மாஸ்டர் வீட்டடியில காத்து நின்றான். அவர்கள் இருவரும் வெளியில் வந்தார்கள்..

“என்ன பிள்ளைகள் நன்றாக படிச்சீங்களா?”

“அப்பா எனக்கு கெமிஸ்ட்ரி பாடத்தில் உள்ள பல கேள்விகளுக்கு இப்போ விடைகள் தெரியும். நல்ல சொல்லித்தாறார் மாஸ்டர்.” மகள் சொன்னாள்.

“எனக்கும் பிசிஸ்க் பாடம் ஸ்கூலில் கஷ்டமாக இருந்தது. டியூசன் மாஸ்டரிடம் வந்தபின்பு நல்லா விளங்குது. கண்டிப்பா எக்சாமில ஏ எடுப்பேன்” மகன் உறுதியுடன் சொன்னான். சொன்னதோடு மட்டும் இல்ல… தொடர்ந்து அவசரப்பட்டான்

“அப்பா, வாங்க பஸ் வந்திடும். இந்த பஸ் போனால் அடுத்த பஸ் இனி அரைமணி சென்றுதான் வரும். எனக்கு நல்லா பசிக்குது. கெதியா வாங்க” “மகேஷ் அவசரப் படாதே..போகலாம்” மகனைப் பார்த்து சொன்னார் நந்தகுமார். “ஏனப்பா எனக்கும் பசிக்குது. போவோம் பஸ் வர த்ரீ மினிட்ஸ்தான் இருக்கு” மகள் அனுஜா அழைத்தாள்.

“போகலாம்.. போய் காரில் ஏறுங்க. அம்மாவும் காரில் இருக்கிறார்” என்று சர்வ சாதாரணமா சொன்னான் நந்தகுமார்.

“காரா…காருக்குள்ள அம்மாவா” ஆச்சரியமாக கேட்டான் மகேஷ்.

“எங்கப்பா கார்…அம்மா எங்கே” ஆவலோடு கேட்டாள் அனுஜா.

“அதோ நிற்குதே கறுத்த கார். அதுதான்” நந்தகுமார் கார் நின்ற இடத்தைக் காட்டினான்.

“ஆ..! அதுவா” என்றவர்கள் ஓடிச் சென்று அந்தக் காரை அடைந்தார்கள்.

காரினுள் அம்மா சுசிலாவைக் கண்டதும் இருவரும் சந்தோசப்பட்டார்கள்.

காரின் முன் கதவை திறந்து மகன் மகேஷ் ஏறிக்கொண்டான். பின் கதவை திறந்து தனது அம்மாவுக்கு பக்கத்தில் இருந்துகொண்டாள் மகள் அனுஜா.

“என்னம்மா எங்களுக்குச் சொல்லவே இல்ல. கார் வாங்கின விசயத்தை” மகேஷ் கேட்டான்.

“இல்ல மகன், இது திடீர் என்று நீங்க டியூசனுக்கு வந்த பின் அப்பா எடுத்த முடிவு.

அதுதான் உங்களுக்குச் சொல்ல முடியாமல் போனது” “சரி பரவாயில்லம்மா நமக்கு இனி கார்ல எல்லா இடமும் போகலாம் என்னம்மா” தன் மகிழ்ச்சியை பேச்சின் மூலம் வெளிப்படுத்தினான் மகேஷ். ஆனால் அனுஜா பேசாமல் இருந்தாள்.

“என்ன பிள்ளைகள் உங்களுக்கு கார் பிடித்திருக்கிறதா” என்று கேட்டுகொண்டே வந்து முன்னால் ட்ரைவிங் சீட்டில் அமர்ந்தான் நந்தகுமார். “எனக்கு ஓக்கே அப்பா. கார் இல்லாம இருந்த நமக்கு இப்போதைக்கு இது ஓக்கே”

மகேஷ் சொன்னான்.

“என்ன அனுஜா ஒன்றும் பேசாமல் இருக்கிறாய். உனக்கு பிடிச்சிருக்கா மகள்”

“எனக்குப் பெரிசா பிடிக்கயில்ல. இதவிட நல்ல கார் வாங்கி இருக்கலாம்”

“அனுஜா காரே இல்லாமல் நாம பஸ்ஸில் கஷ்டபட்டு போனதற்கு இது எவ்வளவோ மேல். இல்லையா அப்பா” மகேஷ் சொன்னான்.

“கொஞ்ச நாட்கள் போனபின் வேற நல்ல கார் வாங்கலாம் பிள்ளையள், இப்போதைக்கு இது இருக்கட்டும்” சுசிலா சொன்னாள். அம்மாவும் பிள்ளைகளும் பலதையும் பேசிக்கொண்டே வர, நந்தகுமார் காரை ஓட்டிக்கொண்டு வந்து ஒரு ‘மக் டொனால்ட்’ உணவகத்தில் நிற்பாட்டினான்.

“என்னங்க இங்கே நிற்பாட்டுறியள். வீட்டில சாப்பாடு இருக்கு” சுசிலா சொன்னாள்.

“அம்மா, எனக்குப் பசிக்குதம்மா இங்கே” சிக்கின்பெர்கரும், சிப்சும் வாங்கி சாப்பிடுவம், என்ற மகேஷ் காரைவிட்டு இறங்கிக் கொண்டான்.

அவனைத் தொடர்ந்து அனுஜாவும் இறங்கினாள். பின்னர் நந்தகுமார்,சுசிலா இருவரும் இறங்கிப் போனார்கள்.

“ஜங் பூட்” எப்போதாவது இருந்துவிட்டுத்தான் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பான் நந்தகுமார். அது சுவையாக இருக்கும் என்பதையும் தாண்டி, அதில் இருக்கும் தீமைகளும் ஓரளவு அவனுக்கும்,

மனைவி சுசிலாவுக்கும் தெரியும்.

சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். அன்று முழுவதும் கார் வாங்கியது, அதில் பிரயாணம் செய்தது, என்பது பற்றியே பேச்சுகள் நடந்து முடிந்தன . அனுஜா மட்டும் இவர்கள் பேச்சில் இருந்து ஒதுங்கியே இருந்தாள். நாட்கள் நகர்ந்தன. நந்தகுமாரும் வேலை,வீடு, அனுஜாவை கொண்டு பள்ளிக்கூடத்துக்கு விடுவது என்று இயந்திரமாக இயங்கினான்.

ஒரு நாள் தன் மகளை ஏற்றிக் கொண்டு அவளின் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் அவள் பேசினாள்.

“அப்பா நாளையிலிருந்து நான் பழையபடி நடந்தே ஸ்கூலுக்கு வாறன். நீங்க கூட்டி கொண்டு விடவேணாம்”

“ஏன் மகள். எனக்கு கஷ்டம் ஒன்றுமில்லையே… உன்னை ட்ரோப் பண்ணிட்டு நான் வேலைக்கு போவதில் எனக்கு சிரமம் இல்லையே”

“அது வந்துப்பா ..” தயங்கினாள் அனுஜா .

“சொல்லு ..என்ன விசயம்” அமைதியாக கேட்டான் நந்தகுமார்.

“என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுறாங்க. நான் பழைய காரில் வருகிறேனாம்” சற்று வருத்தப் பட்டுச் சொன்னாள் மகள் அனுஜா.

“அப்படியா மகள் நீ ஒன்றும் யோசிக்காதே.. நாம் ஒரு நல்ல கார் வாங்குவோம். உன் படிப்பை கவனமாகப் பார்த்துக்கொள் என்ன” சாந்தமாக பதில் சொன்னான்

“சரிப்பா ..பாய்” இறங்கி போனாள் அனுஜா. அவள் போவதையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் இருந்தான் நந்தகுமார். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்தன.

வேலைக்குச் சென்ற நந்தகுமார் மனசு ஒரு நிலையில் இல்லாமல் உழன்றான். சற்று நேரத்துக்குபின் அரைநாள் லீவு போட்டுவிட்டு..நேரே அவனது வங்கிக்குச் சென்றான். மனேஜரைச் சந்தித்துத் தனக்கு ஒரு லோன் தர முடியுமா? என்று கேட்க, அவரும் அவனது கிரெடிட் ஸ்கோர் பார்த்துவிட்டு,

இப்போது ஐயாயிரம் பவுண்ட்ஸ் உடனே உங்கள் கணக்கில் போட முடியும் நீங்கள் விரும்பினால் என்றுசொன்னதும் நந்தகுமாருக்கு பெரும் மகிழ்ச்சி. தன் சம்மதத்தைச் சொல்லி விட்டான். பணமும் அவன் வங்கிக் கணக்கில் இடப்பட்டது. பின் நேரே டொயோட்டா கார் டீலரிடம் சென்றான். அங்கு அவனுக்கு பல கார்கள் காண்பிக்கப்பட்டன.

அதில் நீலநிற “டொயோடா கரீனா” கார் அம்சமாக இருந்தது. ஆட்டோமெற்றிக் கியர்.

மெற்ராளிக் பெய்ன்ட்.. உள்ளுக்குள் லெதர் சீட், இண்டேரியர் பிட்டிங்க்ஸ் எல்லாம் பக்காவா இருந்தது.

கண்டிப்பாக மகள் அனுஜாவுக்கு இது பிடிக்கும் என்று நினைத்தவன், தன் டீலரிடம் தனக்கு அது பிடித்திருக்கு, ஆனால் ஒரு சிக்கல், என்று சொன்னான். அவர் என்ன என்று கேட்டார். தனது பழைய காரை கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர். அது ஒன்றும் ப்ரோப்ளம் இல்லை. நாங்களே ஒரு விலைபோட்டு எடுத்துக்கொள்வோம் என்றதும் நந்தகுமார் உடனே சம்மதித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லா பேப்பர் வேர்க்குகளும் முடிந்தன. சகல டோக்குமென்டுகளும் பூர்த்தி செய்து கார் கீ களும் கொடுக்கப்பட்டன.

நந்தகுமார் நேரத்தைப் பார்த்தான் இன்னும் கால் மணி நேரத்தில் அனுஜாவின் ஸ்கூல் முடிந்திடும்.

டீலருக்கு நன்றி சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் புறப்பட்டான். அவனுக்கே ஓட்டுவதற்கு அலாதிப் பிரியமாக இருந்தது. சிடி பிளையர், ரேடியோ, என்று எல்லாம் சிறப்பாக இருந்தன. ஸ்கூல் வந்ததும் ஒரு ஓரமாய் காரை நிறுத்தி விட்டுத் தன் மகளுக்காக காத்திருந்தான். எல்லாப் பிள்ளைகளையும் ஏற்றிச் செல்வதற்காகப் புதுப் புது கார்கள் வந்தவண்ணம் இருந்தன. அவனுக்கு மனசு சங்கடப் பட்டது. இவ்வளவு நாளும் அந்தப் பழைய காரில் வந்து போனது என்னவோபோல் இருந்தாலும் எல்லாவற்றிக்கும் ஒரு நேரம் வரவேண்டுமல்லவா? என்று சமாதானம் அடைந்தான்.

கார் உள் கண்ணாடியில் பார்த்தான் தன் மகள் அனுஜா புத்தகப் பையை தூக்கிக் கொண்டு அமைதியாக, ஓரமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவனுக்கு மனசு கேட்கல்ல..காரிலிருந்து இறங்கி..எதிர்சென்றான். அனுஜா பார்த்துவிட்டாள்.

“அப்பா நான் சொன்னந்தானே வரவேண்டாம் என்று..ஏனப்பா” கேட்டாள்.

“தா மகள், புத்தக பையத் தா நான் கொண்டுவாரன்” என்றவன் அவள் கழுத்தில் தொங்கிய பையை எடுத்துகொண்டான்.

“எங்கப்பா உங்க கார்” என்றாள்

“அதோ நிக்குதே” என்று முன்னால் காட்டினான். “அப்பா அது டொயோட்ட கார் அப்பா. எனக்குப் பிடிச்ச கலர். யாருடையதோ தெரியாது நம்மட கார் எங்கப்பா”

“அதுதான் நம்மட கார். உனக்கு பிடிச்சிருக்குத்தானே மகள்” பவ்மியமாகக் கேட்டான் நந்தகுமார். “அப்பா பகிடி விடுறீயளா”

“இல்லமகள் நான் உண்மையத்தான் சொன்னனான். அதுதான் நம்மட கார். நீ நம்பல்லத்தானே ஓகே பரவாயில்ல..இப்பபார்” என்றவன் தன் கையில் இருந்த ரிமோட் கீயை அழுத்தினான். கார் ‘கிக் ‘ என்ற சத்தத்துடன் லைற்றும் மின்னி நின்றது.

“அப்பா..ஐ லவ் யூ அப்பா” என்று அவனைக் கட்டி அணைத்துவிட்டு ஓடிச் சென்று முன் கதவை திறத்து ஏறிகொண்டாள்.

நந்தகுமார் ஒரு மன நிறைவுடன், தன் மகளின் புத்தகப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு காரின் பக்கம் சென்று பின் சீட்டில் பையைப் போட்டு விட்டு முன்னால் அமர்ந்து கொண்டான். அனுஜா சந்தோஷத்தில் திக்குமுக்காடி திணறிப் போனாள்.

“அப்பா எப்படி உடனே எனக்கு பிடித்தமான கலரில் இந்த நல்ல கார் வாங்கமுடிந்தது” என்று கேட்ட அனுஜாவுக்கு, அந்த சில மணி நேரங்களில் நடந்த விடயங்களை விளக்கமாக சொன்னான்.

அனுஜாவிற்கு அவளின் அப்பா மீது அளவு கடந்த அன்பு பெருகியது. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டபின், நந்தகுமார் காரை செலுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அனுஜாவுக்குத் தன் அண்ணனிடம் சொல்லவேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள தன் கைபேசியில்,அவன் நம்பரை அழுத்தி பேசினாள்.

“அண்ணா பஸ் எடுத்திட்டீரா…அப்படியா ..கெதியா வா அண்ணா..அப்பா புது கார் வங்கி இருக்கார்”

அவன் மறுமுனையில் என்ன சொன்னானோ தெரியாது,,அவள் போனை கட் பண்ணிட்டாள்.

வீடு வந்ததும் அம்மாவுக்கு அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மகேசும் வந்துவிட்டான்.

பிறகு என்ன, எல்லோருக்கும் நந்தகுமார் நடந்த விடயங்களைச் சொன்னதும், சகலருக்கும் சந்தோசம். பின்னேரம் பிள்ளையார் கோவிலுக்கு காரை எடுத்துச் சென்று அதற்குப் பரிகாரம் எல்லாம் செய்து, எலுமிச்சம்பழம் நசுக்கப் பண்ணி, விபூதி, சந்தனம் எல்லாம் பூசி மிக சந்தோசத்துடன் வீடு திரும்பினார்கள்.

அடுத்த கிழமையே வேல்ஸ் முருகன் கோவிலுக்கு ஐநூறு கிலோமீற்றர் தூரம் பயணித்து போய்வந்தார்கள். எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டு இருந்தது.” மனைவி, வாகனம்

பிள்ளைகள், எல்லாம் ஒரு மனிதனுக்கு வந்து அமையவேணும்” என்று சொல்வதுபோல் நந்தகுமாருக்கு எல்லாம் அமைந்தது. பிள்ளைகள் இருவருக்கும் தானே ட்ரைவிங் பழக்கினான்.

அவர்களும் நன்றாக கற்றுக் கொண்டு யூ.கே. லைசென்ஸ் எடுத்துக் கொண்டார்கள்.

காலச் சக்கரம் சுழன்றது. அவன் சொந்தமாக ஒரு வீடு நல்ல இடத்தில வாங்கிக் கொண்டான்.

பிள்ளைகள் நன்றாகப் படித்து பாஸ் பண்ணி பல்கலைக் கழகம் சென்றார்கள். இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் பிள்ளைகளை அவனது காரில் கொண்டு விடுவதும், பின்னர் சாப்பாடு கொண்டு கொடுப்பதும் இப்படியாக நாட்கள் நகர்ந்தன. தனது மற்றுமொரு பிள்ளைபோல்தான் தன் காரை பார்த்துக்கொண்டான் நந்தகுமார். அவனது நண்பர்கள் அதற்குப் பின்னர் பல கார்கள் மாற்றியபோதும் இவன் மாற்றவில்லை. காரணம் அவன் கார் எந்த பிரச்சினையும் கொடுக்கவில்லை.

காலம் உருண்டோடியது. …

மகேசும், அனுஜாவும் முதல் தரத்தில் பாஸ் செய்தார்கள். வேலையும் இருவருக்கும் கிடைத்தன.

அவர்கள் தனித் தனி புதுக் கார் வாங்கிக்கொண்டார்கள். நந்தகுமாருக்கு சந்தோசம். ஆனால் தன் காரை அவன் இன்னும் நேசித்தான். சில வருடங்கள் போக பிள்ளைகள் திருமணம் முடித்து

செல்ல வேண்டிய நேரமும் வந்து முடிந்தது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருக்க நந்தகுமாரும், சுசிலாவும் ஓர் அப்பார்மென்ட் பார்த்து வாங்கிகொண்டு தனியே சென்றுவிட்டார்கள். பிள்ளைகளின் வீட்டுக்குச் சென்று வரும்போதெல்லாம் அவர்கள், அப்பா காரை மாற்றுங்கோ பத்து வருசமாக வைத்து இருக்கிறீங்க.. சத்தங்கள் கேட்குது …என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

சுசிலாவும் சொல்வதுண்டு..இந்த கார் நமக்கு பெரிசுங்க…நமக்கு ஒரு சின்னக் கார் வாங்கினால் போதும்..என்று..

இப்படி எல்லோரும் தன் காரை கரிச்சிக் கொட்டுகிறார்களே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது.

எவ்வளவு வேலைகளை அந்தக் கார் அவனுக்கு செய்திருக்கும். வீடு வாங்கி, அதன் திருத்த வேலைகள் செய்தபொழுது முழு சிலும்பல்கள், உடைஞ்சதுகள், குப்பை கூளங்கள் எல்லாம் ஏற்றி கொண்டு றிசைகிளிங் சென்றறில் கொண்டு போட உதவி இருக்கிறது. கடைகளில் பில்டிங் சாமான்கள் ஏற்றி இறக்கி இருக்கிறது. பெரிய டிக்கி என்றபடியால் நிறை சாமான்கள் எல்லாம் போட்டுகொண்டு செல்லமுடிந்தது. எல்லாவற்றிக்கும் தனக்குத் தோள் கொடுத்த கார், இப்போ சற்று வயசாகிப்போச்சோ என்று எண்ணுமளவிற்கு அது ஸ்ராட்டிங் ட்ரபிள் கொடுக்குது..இதையே எல்லோரும்சாக்காகச் சொல்லி இதை கொடுக்கச் சொல்லி விட்டார்கள். நந்தகுமாரும் பல தடவைகள் யோசித்து, மனமில்லாமல் சரி கொடுப்போம் என்று சொல்லிப்போட்டான்.

மகன் மகேஷ் ஏற்பாடு செய்த கலெக்ட்டிங் கொம்பனி காரை பார்த்துக் கொண்டு வெளியில் நின்ற நந்தகுமார்தான் தன் மனப் போக்கில் தன் காருடன் பேசிக்கொண்டு இருந்தான்.

கார் கொண்டு போகிறவர்கள்தான் வந்து விட்டார்களா என்று சுசிலா உள்ளிருந்து கேட்டாள்.

காருக்குள் அமர்ந்திருந்த நந்தகுமாருக்கு ரோட்டில் பெரிய லொறி மாதிரி ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு காரிலிருந்து இறங்கினான். கார்கள் ஏற்றி செல்லும் வாகனம் அது.

அதிலிருந்து ஒருவன் நந்தகுமாரை நெருங்கி….

“மிஸ்டர் .நந்தகுமார் “

“ஏஸ் ..நந்தகுமார்…”

“யே.யே..தட்ஸ் இட்.. ஐ வில் டேக் யுவர் கார். மிஸ்டர்…நந்தா..”

வெள்ளைக்காரருக்குத் தமிழ் பெயர்கள் சொல்ல கொஞ்சம் கஷ்டம்.

“ஓகே..திஸ் இஸ் மை கார்.” என்ற நந்தகுமார். எல்லா டாக்குமெண்டுகளையும்

கொடுத்துக் கீகளையும் கொடுத்தான். வெள்ளக்காரனும் தனது வேலையைச் சீக்கிரம் முடித்து, நந்த குமாரின் காரைத் தனது பாரிய வண்டியில் மேல் தளத்தில் ஏற்றிக்கொண்டு, நந்தகுமாருக்கு நன்றி சொல்லி விடை பெற்றான். தனது நல்லது கெட்டதுகளில் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாகத் தன்னுடன் இருந்த கார், தன் கை விட்டுப் போவதைத் தாங்க முடியாமல் நந்தகுமார் நிலை குலைந்து தன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டான்.

“என்னங்க எங்க இருக்கிறியள்…” என்ற சுசிலாவின் குரல் உள்ளிருந்து மீண்டும் கேட்டது.

– ஜனவரி 2016

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *