Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கைகள்

 

பல வருடங்களுக்கு முன் நான் டைட்டான் வாட்சஸ் கம்பெனியின் பெங்களூர் தலைமையகத்தில் வேலை செய்தபோது என்னுடைய  மேனஜராக லெப்டினன்ட் கேனல் ராஜேந்திர குமார் இருந்தார்.

அவர் கடைசியாக ராணுவத்தில் லே என்கிற உயரமான இடத்தில் பணியாற்றி வாலன்டரி ஓய்வுபெற்று; அதன்பின் டைட்டான் வாட்சஸ் கம்பெனியில் அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவரை நான் சமீபத்தில் பெங்களூர் ப்ரிகேட் ரோடில் சந்திக்க நேரிட்டது.

என்னைப் பார்த்ததும் பழைய டைட்டான் நாட்களை  நினைவு கூர்ந்து பிறகு இந்திரா நகரில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்தார்.

நான் அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

கலகலவென பேசிக் கொண்டிருந்தோம்.  அவருடன் மதிய உணவு சாப்பிடும்போது டைனிங் ஹால் சுவற்றில் இரண்டு கைகளின் புகைப்படம் ஒன்று லாமினேட் செய்யப்பட்டு மாட்டியிருந்தது.

யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக் கூடும் என்று நினைத்து அதுபற்றி அவரிடம் நான் எதுவும் கேட்கவில்லை.

அடுத்தமுறை அவரோடு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் அவர் காரில்  பார்த்தேன்.

எனக்குள் ஒரு ஆவல் உந்த “அது யாருடைய கைகள் கேனல்?” என்று கேட்டேன்.

“அந்தப் புடைப்படத்தை நீதான் கைகளில் எடுத்துப் பாரேன்…”

உடனே நான் புகைப்படத்தை என் கைகளில் எடுத்துக்கொண்டு அதை உற்றுப் பார்த்தேன்.

அது ஒரு வயதான பெண்ணின் கைகள் மாதிரியும் இருந்தது, அதே சமயம் ஒருவேளை அந்தக் கைகள் ஏதோ ஒரு துறவி அல்லது ஒரு ஞானியின் கைகளாக இருக்குமோ என்றும் நினைத்தேன்.

முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள்;  நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன; நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன.

நான் குழப்பமடைந்தேன்.

“எனக்குப் புரியலை கேனல்… யாருடைய கைகள்?”

கேனல் ராஜேந்திர குமார் ஒரு ஆதங்கமான குரலில், “அது என்னுடைய அம்மாவின் கைகள்…” என்று சொன்னார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக எடுத்து வைத்திருகிறீர்கள்?”

“அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன கண்ணன்…”

ராஜ்குமாரின் கண்கள் கலங்கி, குரல் உடைந்தது.  காரை சாலையின் ஓரத்திலுள்ள மர நிழலில் நிறுத்தி இன்ஜினை அணைத்தார்.

“என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன.  அம்மாவின் முகத்தைவிட அவரின் கைகளைக் காணும்போதுதான் நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன்… அம்மா இறப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்பாக இந்தப் புகைப்படத்தை நான் எடுத்தேன்.  இந்தக் கைகள் இப்போது உயிருடன் இல்லை.   ஆனால் இதே கைகளால் பாசமுடன் வளர்க்கப்பட்டவன் உன் முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன்.”

“………………………………”

“என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை…

என் அப்பா பொறுப்பற்ற முறையில் ஏராளமாகக் குடித்து எங்களின் குடும்ப சொத்தை அழித்து, லிவர் ஸிரோஸிஸ் வந்து தன்னுடைய 42 ஆவது வயதில் செத்துப் போனார்.

அதன் பிறகு அம்மாதான் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாள்.

அம்மா படிக்காதவள்;  நாங்கள் மூன்று பிள்ளைகள்.

அம்மா ஒரு லாயர் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார்.

பகல் முழுவதும் லாயரின் வீட்டைச் சுத்தம் செய்து; பாத்திரம் கழுவி; துணிகளைத் துவைத்து; நாய்களைப் பராமரிப்பது போன்ற வேலைகளை முடித்துவிட்டு மாலையில் இன்னும் இரண்டு வீடுகளில்  பத்துப் பாத்திரம் தேய்த்துவிட்டு பிறகு சோர்ந்துபோய் இரவுதான் வீட்டுக்கு வருவார்.

எத்தனை ஆயிரம் பாத்திரங்களை என் அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு சமைத்து, எங்களைச் சாப்பிட வைத்து; பிறகு எங்களை உறங்கச் செய்துவிட்டு; அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து குண்டான்களில் ரொப்பி வைத்துவிட்டு; தூங்கும் எங்களை ஒருமுறை அமைதியாகப் பார்த்துவிட்டு,  சமையில் அறையில்தான் தான் மட்டும் படுத்து உறங்குவாள்.

அப்போதும் அம்மாவின் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும்.

எங்கள் மூவரையம் காலையில் பள்ளிக்கூடம் அழைத்துப் போகும்போது, யார் அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் பெரிய போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக் கொள்வதில் எங்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையும், நெருக்கமும் கிடைக்கும்.

அதுபோலவே எங்களுக்கு உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி எங்களது நெற்றியைத் தடவியபடியே இருக்கும்.

அம்மா ஒரு நாளாவது நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.

தனது எல்லா சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை நல்லபடியாக வளர்த்தபடியே இருந்தாள்.

ஒருநாள் லாயர் வீட்டில் அம்மா ஊறுகாய் ஜாடியை உடைத்து விட்டாள் என்று அம்மாவின் கன்னத்தில் லாயரின் மனைவி மாறி மாறி அறைந்தாள்.

அம்மா அழவே இல்லை.

ஆனால் நான் பார்த்தக்கொண்டு இருப்பதை தாங்க முடியாமல், விடுவிடென என்னை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்.  .

வழியில் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

வாழ்ந்த நாட்களில் அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல் படுத்தவோ; அணைத்துக் கொள்ளவோ இல்லை.

அம்மாவுக்கு எப்போதும் வேலை….வேலை.  தன் பிள்ளைகளின் முன்னேற்றத்தை மட்டுமே இலக்காகக்கொண்டு அலுப்பின்றி இயங்கிக் கொண்டிருந்தாள்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.

அம்மா எதற்கும் கோபித்துக் கொண்டதே இல்லை.

அம்மா கஷடப் படுகிறாளே என்று எனக்குத் தெரிந்தபோதும்;  யார் அவளை இப்படிக் கஷ்டப் படச்சொன்னது என்றுதான் அந்த நாளில் எனக்குத் தோன்றியது.

கல்லூரி நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும்; புதுப்புது ஆடைகள் வாங்கவும்; குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் அம்மா அதற்காக என்னை ஒருபோதும் கோபித்துக் கொண்டதேயில்லை.

என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டில் அம்மாவுக்கு மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.

அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது.

அதன்பிறகு என்னை நான் திருத்திக்கொண்டேன்.

தீவிரமாகப் படிக்கத் துவங்கி ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்து சில பதவி உயர்வுகளையும் பெற்றேன்.

அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன்.

நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும் அம்மா ஒருபோதும் என்னிடம் எதையும் கேட்டதேயில்லை.

நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தரவேண்டும் என்று நினைத்து தங்க வளையல்கள் வாங்கித்தர கடைக்கு அவளை அழைத்துப் போனேன்.

அம்மா என்னிடம் மிகுந்த கூச்சத்துடன், “சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்… ஆனால் அது நடக்கவே இல்லை; எனக்குள் இருந்த கடிகாரம் மட்டும் ஓடு, ஓடு என்று என்னை விரட்டத் துவங்கியது.  அலாரம் இல்லாமலே எழுந்து கொள்ளப் பழகிவிட்டேன்.  ஆனால் இப்போது வயதாகிவிட்டது.  சில நாட்கள் என்னையறியாமல் காலை ஆறுமணி வரை உறங்கிவிடுகிறேன்.  எனக்கு ஒரேயொரு வாட்ச் வேண்டும்…. வாங்கித் தருவாயா?” என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடியே ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன்.

ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக எல்லோரிடமும் அம்மா காட்டினாள்.  அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழவைத்தது.

ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து அம்மாதான் எனக்கு திருமணமும் செய்துவைத்தார்.

ஒருமுறை டெல்லியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அப்போது கூடவே இருந்த நான், “நான் உன்னை ஏமாற்றிய போதெல்லாம் ஏன் என்னை ஒருவார்த்தை கூடத் திட்டவில்லை?” என்று கேட்டேன்.

“அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது, ஆனால் அன்று நான் கோபப் பட்டிருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்…” என்று சொல்லி தன் கையை என்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன்.

அது எவ்வளவு உழைத்திருக்கிறது; எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது; எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது…

அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

அடுத்தநாளே என் காமிராவை எடுத்துவந்து அந்தக் கைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

இன்று அம்மா என்னோடு இல்லை.

ஆனால் இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன.

ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன.

இதை வணங்குவதைத் தவிர நான் வேறு என்ன செய்துவிட முடியும்?”

ராஜேந்திர குமார் கண்கள் கலங்க என்னைப் பார்த்தார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியினுடைய,  முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன்.

அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை…

உழைத்து உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் உலகெங்கும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன.

எதையும் யாசிப்பதில்லை; அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும்; அன்பு காட்டவுமே அவைகள் நீளுகின்றன.

அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம்; அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

அந்தக் கைகளுக்கு நாம் என்ன நன்றி செய்திருக்கிறோம்?

ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

‘கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது, இன்னொரு கைகளை நம்மோடு சேர்த்துக் கொள்ளத்தான்’ என்று எங்கோ படித்தேன்.

அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘இசக்கியும் ஜோசியரும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி அண்ணாச்சியின் மனசுக்குள் ஏதோ ஒண்ணு புன்னகை செஞ்சது. ஆனால் என்ன சொல்வது என்று பேசாமல் இருந்தார். “ஒங்க சம்சாரத்துக்கு என்ன வயசாகுது அண்ணாச்சி?” சிநேகிதர் கேட்டார். “அவளுக்கும் நாப்பத்தி நாலு, ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘பணக்கார இசக்கி’ கதையை படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி சேர்த்துவைத்த பணம் நான்கு தலைமுறைகளுக்குப் போதும். அதனால்தான் இசக்கி எல்லா வியாபாரத்தையும் ஒருநாள் நிறுத்தி விட்டான். சும்மா ‘லொங்கு லொங்கு’ன்னு ஓடி ஓடி துட்டு சம்பாரிச்சு என்ன செய்ய? ...
மேலும் கதையை படிக்க...
இரவு எட்டு மணி. பாம்பே ரயில்வே ஸ்டேஷன். அகமதாபாத் செல்ல வேண்டிய குஜராத் மெயில் முதல் பிளாட்பரத்தில் வந்து நிற்பதற்கு இன்னமும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. அகமதாபாத் செல்வதற்காக அன்று மதியம்தான் தாதர் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து பம்பாய் வந்திருந்தான் பாலாஜி. சென்னையில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும் ஓடிப்போய்விட்டான்கள். அதுவும் எப்படி? ‘வெளி வேசத்தைப் பார்த்து யாரையும் நம்பக்கூடாது’ என்று பேசியபடி... செந்தூர் பயல்களே இப்படிப் பேசினான்கள் என்றால் பாளை வியாபாரிகள் ...
மேலும் கதையை படிக்க...
அவன் பெயர் பார்த்தசாரதி. பி.ஈ படித்திருக்கிறான். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியர். நந்தனத்தில் அலுவலகம். அவன் மனைவி வந்தனா. ஓஎம்ஆர் ரோடில் ஒரு பிரபல மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் ப்ராஜக்ட் மானேஜர். பி.ஈ, எம்.பி.ஏ. படித்திருக்கிறாள். அடிக்கடி அலுவலக விஷயமாக ...
மேலும் கதையை படிக்க...
வாரிசு
இசக்கியின் அம்மா
ஹர்ஷிதா எனும் அழகி
பூரணி
புரிதல்

கைகள் மீது 2 கருத்துக்கள்

  1. Jo says:

    Super sir romba touching

    • JAYARAMAN R, CHENNAI says:

      குட் touching ஸ்டோரி கண்ணன். you presented the story from different angle i e hands of a mother .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)