கேசவனின் கவலை

 

இன்று வெள்ளிக்கிழமை. லே-அவுட்டில் வசிக்கும் பெண்கள் நான்குபேர் ஐந்துபேராக சேர்ந்து கொண்டு பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப் போகும் நாள். பாலம்மாளின் காதில் காலையில் விழுந்த செய்தி மாலைக்குள் எல்லோரையும் எட்டிவிட்டதில் ஆச்சரியமில்லை.

“கேசவன் கல்யாணம் செய்துக்கப் போறானாமே?”

“அந்தப் பெண்ணுக்கு புருஷன் தவறிட்டானாம். அஞ்சு வயசுல ஒரு பெண்குழந்தையும் இருக்காம்.”

இவர்கள் பார்க்கும் ஸீரியலில் ஒன்று அடுத்த கட்டத்துக்கு நகர்வதான சுவாரஸ்யமோ தான் இப்படி குதர்க்கமாக நினைப்பது அனாவசியம் என்றும் பாலம்மாளுக்குத் தோன்றியது. இவர்கள் எல்லோருக்கும் கேசவன் மீது அக்கறை உண்டு.

கேசவனின் கவலைபுறநகரில் இருக்கும் இந்த லே-அவுட்டின் அடிப்படை வசதிகளைக் கவனித்துக் கொள்ள கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தமாகியிருந்தது. அந்த கம்பெனியின் சார்பில் பிளம்மிங், மின் இணைப்பு போன்ற தேவைகளைக் கவனிக்க வந்தவன்தான் கேசவன்.

கல்லூரி மாணவனைப்போல் துருதுருவென்ற தோற்றம். கபடமில்லாத பார்வை. முதியவர்களுக்கும், பெண்களுக்கும் அவனைப் பிடித்துப் போனது. கமிஷன் அடிக்கிறானோ என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட ஆடிட்டர் ஜானகிராமனுக்கும், எஞ்ஜினியர் இளங்கோவனுக்கும்கூட பிடித்துவிட்டது.

தன் வேலை என்பதையும் தாண்டி எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டுவான் கேசவன். எஸ்.7ல் பீரோவை நகர்த்த வேண்டுமா? எம்.3க்கு ரேஷன்கார்டு கிடைக்கவில்லையா? வங்கிக்கு போக உதவி வேண்டுமா? வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமா? கேசவா என்ற குரல் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை எங்கேயாவது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவனுடைய அலைபேசிக்கும் ஓய்விருக்காது.

இரண்டு வருஷத்துக்கு முன்பு கேசவனுக்கு கல்யாணமானது.

லே-அவுட் ஜனங்கள் அத்தனைபேரும் கலந்துகொண்டார்கள். “”ஒரு மாதம் லீவு எடுத்துக்கப்பா. இந்தப் பக்கமே வராதே” என்று பெரிய மனதுடன் சொன்னார்கள். இரண்டே நாளில் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான் கேசவன்.

அவன் கட்டிக்கொண்ட பெண் ஏற்கெனவே யாரையோ காதலிக்கிறாளாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக இவனைக் கல்யாணம் செய்துகொண்டாளாம். கல்யாணத்தன்று மாலையே இவனிடம் உண்மையை சொல்லி அழுதிருக்கிறாள். அவளை அப்படியே கெüரவமாக பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தானாம்.

லே-அவுட்டே கொந்தளித்தது. “”என்ன அநியாயம்? இப்படிக்கூட ஒரு பொண்ணு செய்யுமா? கல்யாணத்துக்கு முன்பே சொல்லத் தைரியம் இல்லையாமா? இவனை என்ன இளிச்சவாயன்னு நினைச்சாளா?”

இப்படி இவர்கள் வசைபாடுவதுகூட கேசவனுக்குப் பிடிக்காது என்பது பாலம்மாளின் திடமான நம்பிக்கை. மற்ற எல்லோரையும்விட அவருக்குக் கேசவனை நன்றாகத் தெரியும். சில சாமானிய மனிதர்களின் அற்புத பரிமாணங்கள் எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை.

ஒருநாள் பாலம்மாளை சக்கர நாற்காலியில் வைத்து பூங்கா வரை அழைத்துப்போனான் கேசவன். அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்ற விவரங்களைக் கேட்டார் பாலம்மாள்.

“வீட்டுல நான், அம்மா, தம்பி மட்டும்தான். தம்பி காலேஜுல படிக்கறான்.”

“அப்பா?”

“அவரு எப்பவுமே எங்ககூட இருந்ததில்லை. அவருக்கு வேறு வீடு உண்டு. நான் அப்ப சின்ன பையன். ஒண்ணாந் தேதியானா அப்பாகிட்ட பணம் வாங்கி வர நானும், தம்பியும் அந்த வீட்டுக்குப் போவோம். வெளியவே நிப்போம். கால் வலிக்கும். அந்தம்மா எங்க கண்ணு முன்னாலேயே நாய்க்கு பிஸ்கெட் போடுவாங்க. பாவம், தம்பிதான் அதை ஏக்கத்தோட பார்ப்பான்”

முகத்தில் புன்னகை மாறாமல் இவனால் எப்படி விவரிக்க முடிகிறது

“அப்புறம் அப்பா ஆட்டோவுல வந்து இறங்குவார். அவரும் எங்களை உள்ள வான்னு கூப்பிடமாட்டாரு. மாச செலவுக்கு நானூறு ரூபாய் தருவாரு. சாக்லேட்டு வாங்கிக்க தனியா ரெண்டு ரூபா தருவாரு. ரொம்ப வருஷமா இப்படித்தான் இருந்துச்சு. ஒருநாள் அவர் மாரடைப்புல இறந்துட்டார்னு செய்தி வந்துச்சு. அவர் பாங்கில வெச்சிருந்த பணத்தையெல்லாம் அந்தம்மாவே எடுத்துக்கிட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் கிடைக்கல. அதிகமா படிக்க முடியாததால இந்த வேலைதான் கிடைச்சுது. நல்லவேளையா தம்பிய காலேஜுல சேர்த்துட்டேன்”

இத்தனை செய்திகளையும் கசப்புணர்வு சிறிதுமில்லாமல் ஒருவனால் சொல்ல முடியுமா? இதோ இவன் சொல்கிறானே?

“உன் அப்பா மேல உனக்கு கோபமே இல்லையா?”

“அவரு நல்ல உயரமா கம்பீரமா இருப்பாரம்மா. எப்பவும் வெள்ளை வெளேர்னு உடுத்துவார். இவர்தான் நம்ப அப்பான்னு தூரத்துலேர்ந்து பார்க்கறதுக்கே பெருமையா இருக்கும்.”

கசப்பு இல்லை என்பதற்கு மேல் பெருமை வேறு. என்ன பிறவி இவன்? இது அப்பாவித்தனமா, அல்லது எவரையும் வெறுக்காத மனநிலையா?

ஒருநாள் கேசவனின் அம்மாவை சந்தித்தார் பாலம்மாள். அவனுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதைச் சொன்னார். வேலை கிடைத்து திருச்சிக்குப் போன கேசவனின் தம்பி தொடர்பே இல்லாமல் ஆகிவிட்டதைச் சொல்லி வருத்தப்பட்டாள்.

வாழ்க்கை முழுக்க துரோகத்தைத் தவிர வேறெதையும் கேசவன் பார்க்கமாட்டானோ? பாலம்மாளின் ஆற்றாமையை சர்வசாதாரணமாக ஒதுக்கினான் கேசவன்.

” தம்பி எப்பவுமே கொஞ்சம் ஒதுக்கமாத்தான் இருப்பான். வேலைக்குப் போன இடத்துல என்ன கஷ்டமோ வாய்விட்டு சொல்லாம மனசுக்குள்ளே புழுங்குவான். பாவம்”

அவன் பாவமாம். இவன் சொல்கிறான். இதையெல்லாம் இந்த எழுபது வயசுல நான் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கு தன் மருமகளிடம் ஆயாசப்பட்டார் பாலம்மாள்.

இப்போது கேசவனின் மறு கல்யாணச் செய்தி. மாலையில் வாக்கிங் போகும் வழியில் ராஜப்பா தடியை ஊன்றியபடி வந்தார்.

“நீங்களாவது அவனுடைய அம்மாவுக்கு சொல்லக்கூடாதா? என்ன தப்பு செஞ்சான்னு அவனுக்கு இப்படி ஒரு பெண்ணைப் பார்த்தாங்க சின்ன வயசுக்காரன். எதுக்காக ஒரு ஐந்து வயசு குழந்தையோட அம்மாவைக் கல்யாணம் செஞ்சிக்கணும்? ரெண்டு நாளா அவன் முகமே சரியில்லை. இந்த கல்யாண ஏற்பாடு அவனுக்குப் பிடிக்கலையோன்னு தோணுது.”

ராஜப்பா பேசிவிட்டுப் போனதுமே பாலம்மாளின் மனசு பிராண்டத் தொடங்கியது. கேசவனுக்கு இந்த ஏற்பாட்டில் இஷ்டமில்லையோ? இவனால் அந்த குழந்தையை ஏற்கமுடியாதோ? அப்படியிருந்தால் இது அந்தக் குழந்தைக்கும் நல்லதில்லையே? வயதும், தளர்ச்சியும் கூடிப்போனதால் அவநம்பிக்கை காளானைப்போல் படர்ந்து கனமாக அழுத்தியது.

அந்திப்பொழுதில் வாக்கரின் உதவியுடன் பார்க்கை நோக்கி நடந்தார் பாலம்மாள். அங்கே பாதாம் மரத்தடியில் உட்கார்ந்திருந்த கேசவனின் முகத்தில் தீவிர சிந்தனை. இவரைப் பார்த்ததும் எழுந்து வந்தான்.

“ஏம்மா, கொஞ்சம் வெளிச்சத்தோட நடக்கலாமில்ல. இருட்டுல தனியா வரலாமா?” கனிவான அவன் குரல் முதியவளை நெகிழ்த்தியது.

“நீ ஏனப்பா சோர்வா இருக்கே? கவலையா?”

“ஹும்…”

“எத்தனை பெரிய பொறுப்புக்கு தலையாட்டி வெச்சிருக்கே. கவலை இருக்கத்தானே செய்யும்?”

“என் கவலை அதில்லைங்கம்மா. அந்தக் குழந்தை என்னை அப்பாவா ஏத்துக்கணுமே. அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கு என்னை பிடிக்கணுமே?”

அவனை ஊடுருவிப் பார்த்தார் பாலம்மாள். கணப்பொழுதில் மனம் நிரம்பி வழிந்து புன்னகையாய்ப் பூத்தது. எப்போதும் வால் பிடித்ததுபோல் சுற்றிவரும் ஒரு பெண்குழந்தையுடன் கேசவன் லே-அவுட்டில் வளைய வரும் எதிர்கால காட்சி ஒன்று உறுதியாயிற்று. செல்லமாக அவன் முதுகில் தட்ட கை உயர்ந்தது.

- கே.பாரதி (ஜூலை 2015) 

தொடர்புடைய சிறுகதைகள்
'என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல' இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும் ரயில் நிலையத்தரைகள், எறும்பின் சுறுசுறுப்புடன் பல இனமுகங்கள், சாலையில் வரிசையாய் வழுக்கிக் கொண்டோடும் வாகனங்கள், விண்ணைத்தொட்ட கட்டிடங்கள், கருத்துடன் வளர்க்கப்படும் ...
மேலும் கதையை படிக்க...
“என்ன மச்சான், வெளிக்கிட்டாச்சா? இன்னும் நேரமிருக்கே!” “இப்போதே போனால் தான்டா சரியாக இருக்கும். வழியில் ட்ராஃபிக்காக இருந்தாலும் நேரத்துக்கே போய் விடுவோமே!” பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான் கோகுலன். “சரிதான், ஹாண்ட் லகேஜை எடுத்துக்கொண்டு வா; நான் இதைக் கொண்டு இறங்குகிறேன்.” பையை ...
மேலும் கதையை படிக்க...
அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டது ஜெகனை உறுத்திற்று. மணியைப் பார்த்தான். பதினொன்று ஆகி இருந்தது . வீட்டில் ராதா வேலகைளை முடித்து விட்டு ஓய்வாகத்தான் இருப்பாள். போன் செய்து ‘சாரி டியர்’ என்று சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
உயிர்வெளி
சுந்தரமூர்த்தி, டேய் ""சுந்தரமூர்த்தி''... திரும்பத் திரும்ப யாரோ கூப்பிடுவது காதில் விழுவது போலிருக்கிறது. எங்கோ தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல குரல். எனக்கு நான் படுத்திருக்கிறேனா, உட்கார்ந்திருக்கிறேனா என்று எதுவும் புரியாத ஒரு நிலை. மொத்த உடம்பும் இல்லாததுபோல் இருக்கிறது. இலேசாக ...
மேலும் கதையை படிக்க...
வீட்டுக்குள்ள நுழைஞ்ச முத்துக்கருப்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஆத்திரதுக்குக் காரணம், தொலைபேசி அலறிக்கொண்டிருந்ததும் அது எங்க இருக்குங்குறது தெரியாததும் தான். ஏண்டா இந்தக் கார்ட்லெஸ் போன் வாங்கினோம்னு அலுத்துக்கிட்டான். எதுவுமே இருந்த இடத்தில இருக்குறதே இல்ல. எத்தன தடவ சொல்லியாச்சு. தொலைபேசிக்கு மேல ...
மேலும் கதையை படிக்க...
ஈரம்
கோகுலனும் தமக்கையும்!
எங்கே போனாள் ராதா..! – ஒரு பக்க கதை
உயிர்வெளி
போதிமரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)