கூறாமல்

 

இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை… இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள்.

மாடியில் இங்கே தன்னுடைய இந்த சின்னஞ்சிறிய தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பார்க்கையில், இக்கணமே இங்கே தன் வீட்டின் மீது வேரற்றுச் சாய்ந்து விடப்போவதாய் பயங்காட்டி பேயாட்டம் போடும் பக்கத்துத் தோப்பு வானளாவிய தென்னைகள்…

தென்னந்தோப்பை மீறிய பாதையில் செந்நீரின் சிற்றோடைகளாய்ப் பாயும் சேற்றில் நனையாதிருக்க சாரியை சற்று கையால் உயர்த்தியவாறு, குடையும் கையுமாய் காலூன்றி, சற்று முன் நடந்து சென்ற தன் இல்லாள்.

குத்துக்கல் போல் மேலே மாடியில் இப்படியொருவன் இருக்கிறானே என்ற உணர்வு பாவி மகளுக்கு இருக்கவேணுமே ?

உம் ஹ்உம்… பேசப்படாது.. பெண்விமோசனப் போராளிகள் யார் காதிலாவது விழுந்துவிடப் போகுது. அவர் சட்டென்று தன் அகக் குரலைக்கூட குரல்வளையைப் பிடித்து அமுக்கி அடக்கிக் கொண்டார்…

பிள்ளைகள்…

சின்னக் குழந்தைகளாய் இருந்தபொழுது அப்பா டாட்டா என்று சொல்லி விடைபெற்றதெல்லாம் இன்று பழங்கனவாகி விட்டன…

இப்போது சிறகுகள் முளைத்து விட்டன.

மேலும் அத்தகைய விடை வாங்கல்கள் எல்லாம் கூட இன்று பத்தாம்பசலித்தனமல்லவா ?

அப்படியென்றால் ?

என்ன, சாப்பிட நேரமாகலியா ?மணி ரெண்டாச்சு.

ஓ. வெளியில போனவள் அதுக்குள் வந்துட்டாளா ? தாறுமாறான நினைவுகளில் ஆட்பட்டிருந்தால்தானா, நடந்து சென்ற சேற்றுப்பாதை வழியாகவே திரும்பி நடந்து வந்திருக்கும் இவள், அந்த பாதையிலேயே கண் நட்டிருக்கும் தன் கண்ணில் விழவே இல்லையா ?

மழையில் நனைந்துபோன ஊதாநிறப் புடவைக்குப் பதில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கையில் சாதாரணமாய் கட்டும் கசங்கிய நூல் புடவை.

இதென்ன சத்திரமா சாவடியா ? இங்கே ஒருத்தன் இருக்கான், சொல்லிட்டுப் போகணுமேண்ணு இல்லாமல் ஒன்பாட்டுக்கு இறங்கிப் போற, வாறே ‘

தன் உடம்பின் கிடுகிடுவென்ற இந்த நடுக்கமும், சொற்களின் தந்தியடிப்பும் மழையின் குளிரினாலா, இல்லை நரம்புகளில் கொதித்து சிரசுக்கு ஓடும் ரத்தத்தினாலா ?

இன்னிக்குக் காலம்பரேயே உங்ககிட்டெ சொன்னேனே டாக்டர்கிட்டே போகணுமுண்ணு ‘ உங்களுக்கு எப்பவும் ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு இருக்கணும். சரி…சரி. சாப்பிடணுமுண்ணா இறங்கி வாங்க.

நீ இப்ப பரிமாறித்தான் நான் சாப்பிடணுமுண்ணு கட்டாயமா ? நா வந்து எடுத்துப் போட்டுக் கொட்டிக்கிறேன் என் வாய்க்கரிசியை ‘

இவர் கத்தலுக்குப் பதிலாய் சூடாய் என்னவோ கத்தியவாறு – காதில விழவில்லை – அவள் கீழிறங்கிச் சென்று, இப்போது ஒரு மணி நேரம் இருக்காதா ?

பசிக் கொடுமையா ? இல்லை, இந்த ஐம்பத்தைந்தான பிராயத்தில் எதிர்கொள்ளமுடியாத அவமதிப்பின் உபாதையா ?

மழை லேசாய்விட்டது போலிருக்கிறது.

எதற்கும் இன்று இந்த வீட்டுச் சோறு தொண்டையை விட்டு இறங்குமென்று தோன்றவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு, குடைகூட எடுக்காது வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடந்தார்.

சூடாகியிருந்த தலையில் பன்னீராய் விழும் தூறல். வெறிச்சோடிப் போய்க்கிடந்த தெருவைத் தாண்டிச் சற்று நடந்திருக்க மாட்டார், மீண்டும் துளிக்கொரு குடமாய் வலுத்துவிட்ட பெருமழை.

ரோட்டோர சொளைமாடன் கோயில் நடையில் ஏறி நின்றார். மாடன் நனையாதிருக்க மேலே வேய்ந்திருந்த ஓலைக்கீற்றுக் கூரையைப் பங்கிட தன்னைத்தவிர இன்னொரு ஜீவன் ‘

கீழே குந்தி முடங்கியிருக்கும் கந்தலாகிப் போன காவியுடை கிழப்பண்டாரம்.

யாரும் யார்கிட்டையும் சொல்லிகிட்டு வரலை, சொல்லிகிட்டுப் போகமாட்டோம்.

இவர் திடுக்கிட்டார்…

பண்டாரம் தன்னைப் பார்த்துச் சொல்லவில்லை, தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த வார்த்தைகள்.

புதியவை அல்ல.

பழகித் தோய்ந்த சொற்கள்தான்.

இருந்தும் இப்பக் கேட்கையில்….

இந்தப் பண்டாரமும் கூறாமல் இக்கோலம் பூண்டவரோ..

மேலே அவர் ஒன்றும் யோசிக்கவில்லை, ரோட்டில் இறங்கி விறுவிறுவென்று நடந்தார்.

சோவென்று மேலே பெய்யும் அடைமழையும் முழங்கால்வரை கீழே புதையும் சேறும் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அவருக்கு. 

தொடர்புடைய சிறுகதைகள்
கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்க் கிழவியின் கர்ண பரம்பரக் ...
மேலும் கதையை படிக்க...
ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் ...
மேலும் கதையை படிக்க...
வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை... வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர ...
மேலும் கதையை படிக்க...
'அம்மா...' மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை. செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன. நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு ...
மேலும் கதையை படிக்க...
மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான். கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப் பார்த்துச் சிரித்தான் நெல்லையப்பன். பதிலுக்குச் சிரித்துவிட்டு அவன் முன்னால் நின்றான் ...
மேலும் கதையை படிக்க...
நைவேத்தியம்
ஊமைத் துயரம்
மண்ணின் மகன்
சண்டையும் சமாதானமும்
[அ]லட்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)