கூனி சுந்தரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 4,763 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இந்த மாதிரியான வேலைகளில் இறங்குவது அபாயம். கமலம். வேண்டாம். நான் சொல்வதைக் கேள்.”

“ஒரு அபாயமும் இல்லை. காமு. நம் கையெழுத்து அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலுமென்ன? பார்க்க லாமே ஒரு வேடிக்கை!’

“சரி, நீயே எழுது கமலம். என் பேனா ஓட வில்லை .”

“கொடு இங்கே . நான் எழுதுகிறேன். இதில் என்ன கஷ்டம்”.

இவ்வாறு சென்னை வீரேசலிங்கம் மாணவிகள் விடுதியில் ஓர் அறையில் பேச்சு நடந்தது. கமலமும் காமாட்சியும் பி. ஏ. வகுப்பில் படித்தார்கள். இருவ ரும் சேர்ந்து ரகசியமாக ஒரு மொட்டைக் குறும் புக் கடிதம் தயாரித்தார்கள்.

கீதாப் பிரசங்க சிரோமணி ஸ்ரீமான் நரசிம்ம சாஸ்திரி அவர்களுக்கு நமஸ்காரம்.

ஐயா, வீரேசலிங்கம் விடுதியைச் சேர்ந்த சிறு பெண்களாகிய நாங்கள் அனைவரும் பணி வுடன் செய்து கொள்ளும் விண்ணப்பம் என்ன வென்றால்,

தாங்கள் பெரிய உத்தியோகத்திலிருந்து அதைவிட்டு பகவத் விஷயத்தில் ஈடுபட்டு சாஸ் திரங்களை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லித் தரும் சேவை செய்து வருவதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். சென்ற ஞாயிற்றுக்கிழமை வசந்த மண்டபத்தில் தாங்கள் செய்த அரிய சொற்பொழிவைப்போல் இதற்கு முன் நாங்கள் கேட்டதே இல்லை. இதுவரை யாருமே கீதையை யும் வேதாந்தத்தையும் இவ்வளவு அழகாக விளக் கிச் சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள் இவ் வளவு திறமையுடன் மற்றவர்களுக்கு எடுத்து உபதேசிக்கும் உண்மைகள் ஏன் உங்களுக்கே பயன்படாமல் போய்விட்டன?

ஆமையானது தனது அங்கங்களை உள்ளே இழுத்துக் கொள்ளுவது போல் வெளிச் செல்லும் புலன்களை விஷயானுபவங்களிலிருந்து உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பஞ்சேந் திரியங்களான குதிரைகளைக் கடிவாளம் போட்டு அடக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் குதிரை களோடு வண்டி நெறி தவறிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகும் என்றும் இவ்வாறெல்லாம் எவ்வளவு அழகாக நீங்கள் பிரசங்கம் செய்தீர்கள்? அதை நீங்கள் ஏன் பின்பற்றி நடக்கவில்லை? பிரசங்கம் செய்தபோது அங்கு இருந்த பெண்களைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க் காமல் இரண்டு மணிநேரம் பிரசங்கம் செய்து முடித்தீர்களே! அதைப் பார்த்து, தாங்கள் காஷா யம் தரிக்காத சன்னியாசியே என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் சென்ற இரண்டு நாளாகத் தங்கள் நடவடிக்கை இதற்கு முற்றி லும் மாறாயிருக்கிறது. நெறி தவறிப் பள்ளத்தில் விழுவதாக இருக்கிறீர்கள். தங்களுடைய கண் களைத் தாங்கள் அடக்க முயன்றதாகக் காணப் படவில்லை. பிரின்ஸிபல் அவர்களுக்குச் சொல்லி, விடலாமென்று எங்களுள் சிலர் யோசித்தோம்.

ஆனால் தங்களை அவமானப்படுத்தலாகாது என்றே அப்படிச் செய்யாமல் இந்தக் கடிதத்தை எழுதத் தீர்மானித்தோம்.

தங்களுடைய மனைவி இறந்த பின் மறுபடி ஏன் தாங்கள் வழக்கம் போல் மறுவிவாகம் செய்து கொள்ளவில்லை? செய்து கொண்டிருந்தால் இந்த ராக விகாரங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய நேர்ந்திராது. தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். கீதைப் பிரசங்கங்கள் இனி வேண் டாம். ஊருக்குத் திரும்பிப்போய் விவாகம் செய்து கொள்ளுங்கள். தங்களுக்கு அதிக வயது ஆக வில்லை. ஐம்பதுதானிருக்கும் என்று எண்ணு கிறோம். ஒரு பெண்ணை உங்களுக்காகப் பார்த் திருக்கிறோம். ரேணிகுண்டா ஸ்டேஷனை யடுத்துள்ள வங்கீபுரத்தில் தெற்குத் தெரு பெரிய மாளிகை கோவிந்தய்யர் என்பவருக்கு ஒரு புதல்வி இருக்கிறாள். அவளுக்கு வயது இருபத்திரண்டு. உங்களுக்குச் சம்மதமாயிருந்தால், கலியாணம் செய்துவைத்து விடுகிறோம். எங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும். மெத்தையில் கயிற் றுக் கொடியில் உங்கள் பட்டுக்கரை உத்தரீ யத்தை விரித்துப்போட்டு, அதன்மேல் உங்கள் கறுப்புக் குடையைத் தொங்க வைத்தால் இவ் விடத்திலிருந்து எங்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்லும் யோசனை உங்களுக்குச் சம்மதம் என் பதற்கு அதுவே அடையாளம். மற்ற ஏற்பாடு கள் எல்லாம் நாங்கள் செய்கிறோம். பெண் வீட் டில் நாங்கள் சொல்லிச் சம்மதிக்கச் செய்துவிடுகிறோம்.

அவமானத்துக்கு ஆளாக வேண்டாம். நல்ல பெயரைப் பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம். இனிமேல் வேலையில்லாமல் மெத்தை மேல் நிற்க வேண்டாம்.

தங்கள் நன்மையைக் கோரும்
வீரேசலிங்கம் விடுதி மாணவிகள்

***

மகாதானபுரம் நரசிம்ம சாஸ்திரி. ஜில்லா முனி சீபு பதவியில் பன்னிரண்டு வருஷம் ஒரு புகாரும் இல்லாமல் உத்தியோகம் செய்த பிறகு, ஒரு வருஷம் ஆக்டிங் சப்-ஜட்ஜாகவும் இருந்தார். விவாகமாகிப் பதினைந்து வருஷம் குழந்தையில்லாமல் பதினாறாவது வருஷத்தில் மனைவி கருப்பம் தரித்தாள். வெகு ஜாக் கிரதையாக எல்லாச் சவுகரியங்களும் வைத்திய ஏற் பாடுகளும் செய்திருந்தார். ஆனபோதிலும். பிரசவ மாகி ஏழாம் நாள் விஷசுரம் கண்டு பல வைத்தியர் கள் பார்த்தும் குணப்படாமல், பெண் குழந்தையை மட்டும் விட்டுவிட்டு மனைவி மறைந்து போனாள். சாஸ்திரி ஆறாத் துயரத்தில் மூழ்கினார்.

அவருடைய தமக்கை விதவையாகி, அவருடைய வீட்டிலேயே இருந்து வந்தாள். இவள் குழந்தையை மிகவும் அன்பாக வளர்த்து வந்தாள். மறுவிவாகம் செய்து கொள்ளும்படி தம்பியை வற்புறுத்தி வந்தாள். ஆனால் அவர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். கச்சேரி வேலையிலும் பகவத் விஷய நூல்கள் படிப்பதிலும் வைராக்கியமாகக் காலங் கழித்துவந்தார்.

நரசிம்ம சாஸ்திரியின் துரதிருஷ்டம் இதனுடன் தீரவில்லை. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மார்கழி ஏகாதசி தரிசனத்திற்கு ஸ்ரீரங்கம் போக வேண்டும் என்று தமக்கையம்மாள் பிடிவாதம் பிடித் தாள். அங்கே போனாள். போன இடத்தில் வாந்தி பேதி கண்டு திடீரென்று இறந்துவிட்டாள். குழந்தைக்கு இன்னும் இரண்டு வருஷம் சரியாக நிறையவில்லை.

மறுபடியும் பெண்களைப் பெற்ற உறவினர் சாஸ் திரியாரிடம் வந்தார்கள். குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவாவது விவாகம் செய்து கொள்ளுங் கள் என்று ரொம்ப வற்புறுத்திப் பார்த்தார்கள். வேண்டாமென்று சாஸ்திரியார் மறுத்ததோடல்லாமல் வேலையையும் விட்டு விலகினார். புதுப் படிப்பும் பழைய படிப்பும் நன்றாகக் கூடியிருந்தபடியால் நரசிம்ம சாஸ் திரியார் வெகு சீக்கிரத்தில் காலட்சேப உலகத்தில் பெரும் புகழ் அடைந்தார். சென்னையில் அவருடைய பிரசங்கம் என்றால் பாட்டுக் கச்சேரிக்குக் கூடுவது போல் ஏராளமான கூட்டம் கூடிவிடும். எல்லாச் சாதியாரும் ஆண்களும் பெண்களும் படித்தவர்களும் பாமரர்களும் கூடுவார்கள். ஜனங்கள் கீதாப் பிரசங்க சிரோமணி என்று அவருக்குப் பட்டப் பெயர் கொடுத்தார்கள்.

இவ்வாறு பல மாதங்கள் கழிந்தன. ஊழ்வினைப் பயனைத் தடுக்க முடியுமா? வெகுநாள் வைராக்கிய மாக நடந்து வந்தவர் : அந்தப் புதன்கிழமை இரவில் அவர் புத்தி தடுமாறிவிட்டது .

வீரேசலிங்கம் மாணவி ஹாஸ்டல் பின்புறமுள்ள தெருவில் ஒரு மெத்தை வீட்டில் அவர் தங்கியிருந்தார். சில மாணவிகள் ஓய்வுக்கு மெத்தைமேல் நின்றதும் சாஸ்திரியார் தன் வீட்டு மெத்தை மேல் நின்றதும் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தது. அது முதல் ஒரு மயக்கம் ஏற்பட்டது. சாஸ்திரியாரின் கண்கள் விஷயானுபவத்தில் இறங்கின. இரண்டாம் நாளும் மூன் றாம் நாளும் இவ்வாறு நடந்தது. இது மாணவிகளுக்குப் பிடிக்கவில்லை. இதன் பயன் தான் மேலே சொன்ன மொட்டைக் கடிதம்.

***

தபாற்காரன் கதவைத் தட்டியதும் எழுந்து சென்று தாமே கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடிதத்தை நெருப்பில் போடப் போனார். எதிர் பாராத அவமானத்தில் சிக்கிக் கொண்டேனே என்று தத்தளித்தார். மறுபடியும் யோசித்து, அதை மடித்துப் பத்திரப்படுத்தினார்.

எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை என்னவாயிற்று. படித்த படிப்பு என்ன பயன்பட்டது. இந்த அவமா னத்தை எவ்வாறு தாங்குவது என்று நொந்து கொண்டார்.

ஒன்றும் தோன்றாமல் ஏதோ ஒரு புஸ்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார்ந்தார். கவனம் படிப்பில் செல்லவில்லை. “ஹே சீதாராமா, என் மூளையும் கெட்டுப் போயிற்றா?” என்று தம் இஷ்டதேவதையிடம் முறையிட்டுக்கொண்டார்.

அன்றிரவு தூக்கமே வரவில்லை. இறந்து போன மனைவியையும் தமக்கையையும் நினைத்துக்கொண்டார். சென்னையைவிட்டு ஊருக்குத் திரும்பிப் போவது என்று நிச்சயம் செய்தார். ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை சிந்தாதிரிப்பேட்டையில் ஜவுளிக்கடை ராம நாதஞ் செட்டியார் வீட்டில் கீதாப் பிரசங்கம் ஏற் பாடாயிருப்பதை எவ்வாறு நடத்தாமல் போகமுடியும்? பிரசங்கம்தான் எப்படி செய்ய முடியும்? யோசித்து யோசித்து இரவு முழுதும் தூக்கமில்லாமல் கழித்தார்.

***

மாணவிகள் ஏமாற்றமடைந்தார்கள். அடுத்த நாள் சிரோமணியார் மெத்தையில் கொடிமேல் உத்தரீயமும் குடையும் தென்படவில்லை. மறுநாளும் இல்லை. தங்களுடைய குறும்பு பலிக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.

“இன்னொரு நாள் பார்க்கலாம். காமாட்சி என்றாள் கமலம்.

“ஒருநாளும் ஏமாற மாட்டார். பாகவதர் எம காதகர்’ என்றாள் காமாட்சி.

“பந்தயம்!”

“இரண்டேகால் ரூபாய்”.

“சரி. பார்க்கலாம். இன்னும் இரண்டு நாள் கெடுவு கொடு” என்றாள் கமலம்.

மூன்றாம் நாள் இரவு சாஸ்திரியார் வானத்தைப் பார்த்தபடி மொட்டை மாடிமேல் உட்கார்ந்திருந்தார்.

“இந்த அழகும் பெருமையும் பொருந்திய விசுவ மண்டலத்தில் நானும் ஒரு துகள், தொத்திச் சுழன்று கொண்டிருக்கிறேன், என் சிறுமையை என்னென்று சொல்லிப் பழிப்பது என் கவலையும் பயமும், கடவுளே. உனக்கு ஒரு பொருட்டாகுமா? என்னைக் காக்க வேண்டும். என்று கண்ணீர் வடித்தும் ஏங்கியும் வெகுநேரம் கழித்தார். அப்படியே தூங்கிவிட்டார். இறந்துபோன மனைவி கனவில் தோன்றினாள். கையில் தட்டும் தட்டில் வெற்றிலைப் பாக்கும் கொண்டு வந்து கொடுத்து, ‘நீங்கள் ஏங்கவேண்டாம் என்று சொல்லி மறைந்துவிட்டாள். இந்தக் கனவைக் கண்ட தும் சாஸ்திரியாரின் மனம் ஒருவாறு தெளிவு கொண் டது. கனவில் ஸ்திரீ தரிசனம் மங்களகரம் என்பது சாஸ்திரம். காரிய சித்திக்கு அது நல்ல சகுனம். மறு விவாகம் செய்து கொள்வதே நலம் என்று இறந்து போன மனைவியே வந்து தனக்குச் சொன்னதாகப் பொருள் படுத்திக் கொண்டார். மாணவிகள் சொல் வது மிகவும் சரி. பக்குவப்படாத நிலையில் பிரகிரு தியை அடக்கப் பார்ப்பதில் என்ன பயன்? மனத்தில் மாசு இருக்க. பலாத்கார இந்திரிய நிக்கிரகத்தினால் என்ன லாபம்? அகங்காரத்தினால் சாஸ்திரத்தைப் புறக்கணித்தேன். விவாகம் செய்து கொள்வதே நலம் என்று தீர்மானித்தார். இந்த மாணவிகளின் வேலை பகவதாக்ஞை என்று கண்டார்.

மறுநாள் காலையில் பட்டுக்கரை உத்தரீயத்தைக் கொடியில் பிரித்துப் போட்டு அதன்மேல் தன் குடையையும் தொங்கவிட்டார்!

***

ஹாஸ்டலில் கமலத்துக்கும் காமாட்சிக்கும் தாங்க முடியாத குதூகலம். குதித்துக் கூத்தாடினார்கள்.

“கொண்டுவா இரண்டேகால் ரூபாய்!’ என்றாள் கமலம்.

“சரி , நீ புறப்படு வங்கீபுரத்திற்கு” என்றாள் காமாட்சி.

“கிழவர் சிக்கினார் வலையில்” என்றாள் கமலம்.

***

வங்கீபுரம் கோவிந்தய்யர் சொத்துக்காரர். பரம் பரையாகப் பண்டித குடும்பம். அவரும் நல்ல வித்து வான். அவருக்கு . சுந்தரி என்று ஒரே ஒரு பெண். பிள்ளை கிடையாது. பெண்ணுக்கு சம்ஸ்கிருதம் நன் றாய்ச் சொல்லித் தந்தார். பன்னிரண்டாவது வயதில் விவாகம் செய்ய வரன் தேடிக் கொண்டிருந்த சமயம். பெண்ணுக்கு ஒரு கடுஞ் சுரம் கண்டு, அதன் பயனாக கால் கட்டிக்கொண்டு முதுகும் கூனிப் போயிற்று. எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் பயன்பட வில்லை. விவாகமாகாத குழந்தைக்கு இப்படி ஆய்விட் டதே என்று அந்தக் கவலையினாலேயே கோவிந்தய்ய ருடைய மனைவி மெலிந்து வாடிப்போய் இறந்து போனாள்.

கோவிந்தய்யர். மகளுக்கு . எப்படியாவது சாஸ் திரப்படி விவாகம் செய்து முடிக்க வேண்டுமென்று எவ்வளவோ முயன்றார். ஏராளமாக வரதட்சிணை கொடுப்பதாகவும் சொல்லிப் பார்த்தார். கூனியும் சப்பாணியுமான பெண்ணைக் கட்டிக்கொள்ள யாரும் முன் வரவில்லை. ஆனால் பெண் தைரியசாலி. தன் துர்ப்பாக்கியத்தைப் பொறுமையாகவே சமாளித்துக் கொண்டு தகப்பனாருக்குத் தன்னாலான அளவு சமா தானம் சொல்லி வந்தாள். தமிழும் சமஸ்கிருதமும் நன்றாகப் பயின்று சந்தோஷமாகவே இருந்தாள்.

உடலில் இவ்வளவு குறையிருந்த போதிலும், வீட்டில் எல்லாக் காரியமும் சுந்தரியே மிகச் சாதுரியமாக எப்படியோ செய்து வந்தாள். சுந்தரி என்றுதான் அவளுக்குப் பெயர்! பெயர் வைத்தபோது, பாவம். அவள் தாயார் தன் மகள் இப்படி குரூபி ஆவாள் என்று என்ன கண்டாள்? பெயர் வைத்த போது பொருத்தமாகத்தான் இருந்தது. தன் உறவினர்களின் குழந்தைகளை விட தன் குழந்தை அழகு என்றுதான் தாயார் நினைத்தாள். மாநிறந்தான். ஆனால் என்ன கண்ணும் மூக்கும் நெற்றியும் புருவங்களும் சித்திரம் போல் அமைந்திருந்தன. கூனியாய்ப் போன பிறகுங்கூட, முதுகும் கால்களும் பார்க்காமல் முகத்தை மட்டும் பார்த்தால் அனேகப் பெண்களைப் போலவே இவளும் இருந்தாள். சப்பாணியாய்ப் போனதற்காகப் பெயரை மாற்ற முடியுமா? பெயரின் பொருளும் வங்கீபுரத்தில் மறந்து போயிற்று. அந்தக் கிராமத்தில் சுந்தரி என்றால் இந்த அபாக்கியவதியின் வடிவம் தான் பொருள்.

***

பி.ஏ. படித்துக்கொண்டிருந்த கமலம் அதே ஊரில் பெரிய மிராசுதாரின் செல்லப் பெண். அவள் கோவிந்தய்யர் வீட்டுக்கு வருவது வழக்கம். சுந்தரி யிடம் ஓர் அளவு நட்பும் உண்டு .

‘என்ன கமலம்! இப்போ ஏது பள்ளிக்கூட லீவு? ஏன் ஊருக்கு வந்துவிட்டாய்?’ என்றார் கோவிந்தய்யர்.

“மாமா! நான் சுந்தரிக்கு ஓர் அகமுடையான் சம்பாதித்திருக்கிறேன். நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றாள்.

முதலில், வேடிக்கை செய்கிறாள் என்று கோவிந் தய்யருக்குக் கோபம் வந்தது. பிறகு விஷயத்தை முழுவதும் கமலம் அவருக்குச் சொன்னாள்.

“இது சிறு பெண் விளையாட்டு ; சுந்தரியை எங்கே அவர் ஒப்புக்கொள்ளப் போகிறார்? என் துக்கம் இவ்வளவு சுலபமாய்த் தீருமா?..” என்று வழக்கம் போல் அவர் துயரத்தில் ஆழ்ந்தார்.

“இல்லை. மாமா. நம் கையில் அவர் சிக்கியிருக் கிறார். கட்டாயம் ஒப்புக்கொள்ளச் செய்கிறேன்” என்றாள் கமலம்.

‘நீ தைரியசாலிதான். கமலம். ஆனால் ஈசுவரன் கருணை செய்ய வேண்டுமே!’ என்று விம்மி விம்மி அழுதார்.

“அப்பா! நீங்கள் எனக்காக வருந்த வேண்டாம்” என்றாள் சுந்தரி.

***

அடுத்த நாள் காலை வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. கமலம் எண்ணியபடியே நரசிம்ம சாஸ்திரி யார் வண்டியிலிருந்து இறங்கினார்.

நிதானமாகவும் கம்பீரமாகவும் வண்டியிலிருந்து இறங்கினார். கமலம் அவரை எதிர்கொண்டு, ‘வாருங் கள், சிரோமணி மாமா என்று வீட்டுக்குள் அழைத் துப் போனாள். இந்தக் காலத்துப் படித்த பெண்களின் தைரியத்தைப்பற்றிச் சொல்ல வேண்டுமா?

***

நரசிம்ம சாஸ்திரியார். வீட்டு வாசலில் வண்டியி லிருந்து இறங்கியதும், கலியாணத்துக்குரிய பெண். தன்னை எதிர்கொண் டழைத்துப்போன கமலம் தான் என்று எண்ணி, உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந் தார். பிறகு விஷயம் விளங்கிச் சுந்தரியைப் பார்த்த வுடன் ஏமாற்றம் அடைந்தார். ஒரு கணம் வெறுப்பு தோன்றிற்று. முகத்திலும் அது வெளிப்பட்டிருக்க லாம். உடனே சமாளித்துக் கொண்டார். படித்த படிப்பு வீணாய்ப் போகுமா?

சென்னையிலிருந்து கிளம்பியபோதே இது பகவான் ஆக்ஞை என்று ஒரு வைராக்கிய மனோநிலையில் புறப் பட்டவர். சுந்தரியைப் பார்த்த பின். “சரிதான். இது எனக்கு ஆண்டவன் இட்ட சோதனை. இதில் நான் வெற்றி பெறவேண்டும். சாஸ்திரத்திற்கும் படிப் புக்குமே அவமானம் கொண்டுவந்த என் பிழைக்கு இது தகுந்த பிராயச்சித்தம். ஏங்கித் தவிக்கும் இந்தப் பெண்ணுக்கு நான் ஒரு புகலிடமாவது பெரும் பாக்கி யங்கூட ஆகுமல்லவா?” என்றிவ்வாறு மனதை நிதானப்படுத்திக்கொண்டார்.

கமலமும் சும்மா இருக்கவில்லை. சாமர்த்தியமாகப் பேச்சை நடத்தி, சுந்தரியின் படிப்பையும், முக்கிய மாக, சம்ஸ்கிருத நூல்களில் அவள் பெற்ற பயிற்சி யையும் சோபிக்கச் செய்தாள். சாஸ்திரியார் மனதில் பூரண திருப்தி உதயமாயிற்று. சுந்தரியின் பேச்சைக் கேட்கும் போது அவள் வடிவம் கரைந்து போயிற்று. தன் குழந்தை லக்ஷ்மியை இவள் நன்றாகவே பார்த்துக் கொள்வாள் என்று மனதில் எண்ணினார் . ” படிந்த அழுக்கு தீர்ந்து நான் நல்ல கதியைப் பெறுவேன். உடல் வேறு. உயிர் வேறு என்பதை இன்னும் என் மனம் உணரவில்லையே ! அந்தப் பேதை மனத்திற்குப் புத்தி உண்டாக்க வேண்டும். கூனுடலுக்குள் இருக் கும் சுத்த ஆத்மாவின் அழகுக்கு என்ன குறைவு? அது அழகும் ஆனந்தமும் கொண்ட தனிப் பொருள் தானே ! இது சாஸ்திர உறுதி அல்லவோ ” என்றிவ் வாறு தான் கற்ற வேதாந்தத் தத்துவங்களை யெல்லாம் நினைவுக்குத் தந்து கொண்டார்.

***

பேச்சு தீர்ந்தது. விவாகம் ஏற்பாடாயிற்று. கோவிந்தய்யருடைய மகிழ்ச்சியானது கரை கடந்து போயிற்று.

“சுவாமி, தாங்கள் எனக்கு ஆதிமூல மூர்த்தி யாகவே வந்தீர்கள். நீங்கள் எனக்கு மாப்பிள்ளை யல்ல, மகா விஷ்ணுவே! என்று கண்ணீர் வடிய அவர் கால்களைத் தொட்டு நமஸ்கரித்தார். இறந்து போன மனைவியை நினைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதார்.

“மாமா, அழக்கூடாது. மங்கள முகூர்த்தம் பேசி நிச்சயம் செய்யும் போது அழலாமா?” என்றாள் கமலம்.

“குழந்தாய்! நீ தீர்க்காயுசா யிருக்க வேண்டும். உனக்கு எல்லா மங்களமும் உண்டாகுக. என்று கோவிந்தய்யர் . தட்டில் தேங்காய் வைத்துக் கமலத் துக்குக் கொடுத்தார் . அவள் கண்களிலும் நீர் ததும்பிற்று.

‘கீதா சிரோமணியார் ரொம்ப நல்லவர். காமாட்சி. நாம் என்னவோ வேடிக்கை பண்ணி அவ மானப்படுத்தலாம் என்று எண்ணினோம். நிஜமாகவே கலியாணம் ஏற்பாடாகிவிட்டது” என்று ஆரம்பித்து. கதை முழுவதையும் கமலம் தன் தோழிக்குச் சொன்னாள்.

“திருப்பதியில் இந்த மாதம் பதினைந்தாம் தேதி கோயிலில் ஒருநாள் கல்யாணம். நானும் போகப் போகிறேன் . நீ வராமல் முடியவே முடியாது என்கிறார் கோவிந்தய்யர்” என்றாள் கமலம்.

“ப்ரின்ஸ்பாலம்மா லீவ் கொடுக்கமாட்டாள்” – என்றாள் காமாட்சி.

“எல்லாம் கொடுப்பாள். போயே தீரவேண்டும் என்றாள் கமலம்.

“நீ போவதாயிருந்தால் நானும் வருவேன்” – என்றாள் காமாட்சி.

இன்னும் இரண்டு மூன்று மாணவிகளும் இந்தச் சந்தோஷத்தில் கலந்துகொண்டார்கள். எல்லாரும் திருப்பதி போவதாக நிச்சயித்தார்கள். ‘ கிழவர் கலியாணம் வெகு விமரிசைதான்” என்று மாணவி கள் எல்லோரும் வெகு குதூகலத்துடன் முகூர்த்தத் தினத்தை எதிர் பார்த்தவர்களாக இருந்தார்கள்.

***

சென்னையில் சமாசாரம் பரவிவிட்டது. பக்த ஜனக் கூட்டங்களில் வெகு அமர்க்களம். கீதா சிரோமணி சாஸ்திரியாருக்கு விவாகமாமே, பெண் ணுக்கு என்ன வயது. எந்த ஊர் என்று பலர் கேட் பதும், சிலர் காஞ்சிபுரம் என்றும், சிலர் மதுரை என்றும், எட்டு வயதுப் பெண் என்றும், இல்லை பன்னிரண்டு வயது, நல்ல வளர்ந்த பெண் என்று வேறு சிலரும் ட்ராமிலும் பஸ்ஸிலும் எங்கும் பேசி வந்தார்கள் : சமூகச் சீர்திருத்தக்காரர்கள் மிக்க ஆத்திரங் கொண்டார்கள்.

ஆழ்வார்பேட்டை அகில இந்திய ஸ்திரீ சம உரிமைச் சங்கத்தில் ஒரு கூட்டம் கூடிக் கடுமையான தீர்மானம் நிறைவேற்றினார்கள். நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட ஒருவர் விவாகம் செய்துகொள் வதைச் சட்டப்படி உடனே தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் பிரரேபிக்கப்பட்டது. முடிவில் அதை நாற்பத்தொன்பது வயது என்று மாற்றினார் கள். ஒரு விதி விலக்கும் சேர்த்தார்கள். விவாகத் துக்கு நிச்சயித்த பெண் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டிருந்தால் குற்றமில்லையென்று தீர்மானத்தை மாற்றினார்கள்.

***

இரண்டு வருஷமாகிவிட்டது. காவேரிக் கரை யில் ஒரு கிராமம். “அம்மா. நீ நன்னாயில்லே ங் கிறாளே எல்லாரும், என்னம்மா உனக்கு? நன்னாத் தான் இருக்கயே . இம்மாதிரி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது, நரசிம்ம சாஸ்திரியாரின் முதல் தாரத்தின் பெண் லக்ஷ்மி.

“என் கண்ணே ! என் முதுகைப் பார். வில் போல் வளைந்திருக்கிறது. மற்றவர்களெல்லாரும் அப்படியில்லை பார். அதனால் தான் என்னைக் கண்டு எல்லாரும் ஏளனம் செய்கிறார்கள்’ என்றாள் சுந்தரி .

“உனக்கு வலிக்கிறதா அம்மா முதுகு? ‘ இல்லை குழந்தாய், வலியில்லை…

“கூனலாயிருந்தால் என்ன அம்மா? கன்றுக்குட்டி கூட உன்னைப்போல் தானே நடக்கிறது. அது நன் னாத்தானே இருக்கு?

“என்ன சொல்லுகிறாள் லக்ஷ்மி ?… என்று சொல்லிக்கொண்டு நரசிம்ம சாஸ்திரியார் எங்கேயோ போயிருந்தவர் வீட்டுக்குள்ளே நுழைந்தார்.

“நான் கன்றுக்குட்டி போல் அழகாக இருக்கிறே னாம். நான் அழகாக இல்லை என்று ஊரார் சொல்லுவ தெல்லாம் தப்பு என்கிறாள் லக்ஷ்மி. நீங்கள் என்ன அபிப்பிராயப்படுகிறீர்கள்?’ என்றாள் சுந்தரி.

“நானும் லக்ஷ்மி போலத்தான் எண்ணுகிறேன்” என்றார் சாஸ்திரியார்.

அப்பா வந்ததும் குழந்தைக்குப் பேச்சு வளர்ந் தது. தாயார் எதிரில் நின்று கொண்டு, ‘இதோ பார். உன்னைப் பார்த்தால் நீதானே தெரிகிறாய்? உன் உடம்பு தெரியவில்லையே ! என்றது குழந்தை.

“நன்றாய்க் கண்ணைத் திறந்து பார்த்தால் என் உடம்பு தெரியும்” என்றாள் சுந்தரி.

“இல்லை அம்மா , இல்லை . உடம்பைப் பார்த்தால் உடம்புதான் தெரிகிறது. நீ தெரியவில்லை. உன்னைப் பார்த்தால், உன் உடம்பு தெரியவில்லை” என்றது குழந்தை .

“சுந்தரி , குழந்தை சொன்னது தெரிந்ததா? என்றார் சாஸ்திரியார்.

“குழந்தை என்னவோ குழந்தைப் பேச்சுப் பேசு கிறது. அதற்குப் பொருள் ஏது!” என்றாள் சுந்தரி.

குழந்தையைக் கட்டி அணைத்துக்கொண்டு தகப்ப னார் தாங்கமுடியாத சந்தோஷத்தில் மூழ்கி நின்றார்.

“சுந்தரி. இன்று லக்ஷ்மி சொன்னதைக் கேட்ட பிறகுதான் எனக்கு உபநிஷத்தில் ஒரு மந்திரத்தின் பொருள் சரியாக விளங்கிற்று. குழந்தைகளைப் போல் தான் உபநிஷத்தும் பேசுகிறது” என்றார்.

“எனக்கும் சொல்லுங்களேன்” என்றாள் சுந்தரி

“அக்ஷிணி புருஷோ த்ருசியத ஏஷ ஆத்மா என்ற மந்திரம் இருக்கிறதே. கண்ணில் தெரிகிறானே அந்தப் புருஷன் தான் ஆத்மா ‘ – இதற்குப் பொருள். லக்ஷமி இப்போது சொன்னதுதான். உன்னை நான்

அடைந்தபோது இந்த மந்திரம் ஒருவாறு எனக்கு அர்த்தமானது போல் இருந்தது. இன்று குழந்தை சொன்ன பேச்சுத்தான் நன்றாக அதைத் தெளிவு படுத்திவிட்டது. உள்ளத்தில் அன்புடன் ஒருவரை யொருவர் பார்க்கும்போது திருஷ்டியிலிருந்து உடல் முற்றிலும் எங்கேயோ மறைந்து போகிறது. ஆத்மாவை ஆத்மா பார்க்கிறது. இதைத்தான் லக்ஷமி சொல்லுகி றாள். மந்திரமும் இதைத்தான் சொல்லுகிறது.

“ஆத்மா வேறு, உடல் வேறு என்கிறீர்கள். அவ்வளவுதானே?” என்றாள் சுந்தரி.

“இல்லை சுந்தரி , அதுவும் தான். ஆனால் அதுமட்டு மல்ல. இதோ பார். உன்னை நான் பார்க்கிறேன். அப் படிப் பார்க்கும் போது உன் உடல் என் உணர்ச்சியில் இல்லை: மறைந்து போயிற்று. கண், மூக்கு, காது, முகம் எல்லாம் மறைந்துபோய் நீ காணப்படுகிறாய். அதுவே கண்ணில் காணப்படும் உன் ஜீவன்”என்றார்.

சுந்தரியும் உபநிஷத்துக்களைப் படித்தவள் தான்.

இதற்கு வேறே அர்த்தம் சொல்லுகிறார்களே? ‘கண்ணில் தெரியும் புருஷன் என்றால் ஞானியான வன் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தால், தன் ஆத்மாவை மனக்கண்ணில் காண் பான் என்றல்லவோ பொருள் சொல்லுகிறார்கள்? என்றாள்.

“அதுவும் பொருள் தான். ஆனால் லக்ஷ்மி சொன் னதே பிரத்தியட்ச முறையில் சிறந்த பொருள். ஞானி யுமல்ல, யோகியுமல்ல நான். உன்னை அன்புடன் பார்க்கும் போது உன் உடலையா பார்க்கிறேன்? உன் ஆத்மாவே என் கண்ணுக்குப் பிரத்தியட்சமாகப் புலப் பட்டு உள்ளம் திருப்தியடைகிறது. உன் கண்களும் என் கண்களும் சேர்ந்து ஒருவரையொருவர் பார்த்து மகிழும்போது, உன் முகமல்ல, உன் உள்ளமே எனக் குத் தரிசனமாகிறது. மூக்கையோ. நெற்றியையோ நெற்றியிலுள்ள பொட்டையோ, புருவத்தையோ பார்த்தால், மூக்கோ , நெற்றியோ, பொட்டோ , புருவமோதான் தெரிகிறது. நீ மறைந்து போகிறாய்.”

மொத்தத்தில் நரசிம்ம சாஸ்திரியும் கூனி சுந்தரியும் மிக்க அன்புடன் உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

அழகு என்பது அன்பே. உடலில் மெய்யாக நிற் பது குணமே. உடலின் ரூபமும் விரூபமும் விவாக மாகும் வரையில் தான். விவாகம் முடிந்து இருவர் உள்ளமும் அன்புடன் கூடியதும் முகமும் உடலும் எங்கேயோ மறைந்துவிடும். இந்த உண்மை ஆணுக்கும் ஒன்றே, பெண்ணுக்கும் ஒன்றே. அவள் மூக்கைப் பார். அவள் பல்லைப் பார். வாயைப் பார் – என்பதெல்லாம் மற்றவர்களுடைய பேச்சும் தகராறும். அன்பைக் கண்ட தம்பதிகளுக்கு மூக்கும் வாயும் தீர்ந்து போன விஷயம்.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *