குழந்தைகளின் அறியாமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 5,533 
 

குழந்தைகளின் சின்ன உலகத்தில் வினோதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறதே… நிஜமாகவே மனதைத் தொடுகிற அந்த எழிலான அறியாமைகள்தான் குழந்தைகள் உலகத்தின் மிகப்பெரிய சிறப்பு.

என் தங்கைக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ரம்யா, இளையவள் ஹேமா. ஹேமாவுக்கு அப்போது மூன்று வயது.

தங்கையின் கணவர் ஐஓபி திருநெல்வேலி ஜங்க்ஷன் கிளையில் மானேஜராக இருந்தார்.

ஒரு டிசம்பர்மாத ஞாயிற்றுக்கிழமையில், நானும் என் தங்கையின் குடும்பத்தினரும் டவுன் ரத்னா தியேட்டரின் அருகில் இருக்கும் கார்ப்பரேஷன் மைதானத்தில் நடந்துகொண்டிருந்த பொருட்காட்சிக்கு சென்றிருந்தோம்.

மாலை ஐந்து மணியளவில் போய்ச் சுற்ற வேண்டிய அளவிற்கு பொருட்காட்சியை சுற்றிப் பார்த்தாகிவிட்டது. பணத்தைச் செலவழிக்க வேண்டிய அளவிற்குச் செலவழித்தும் ஆகிவிட்டது. மணி இரவு எழரையாகி விட்டது. அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொருட்காட்சியில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நாங்கள் அந்தக் கூட்டத்தோடு ஏதோ வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தோம்.

திடீரென்று ரம்யாவைக் காணோம். சுற்றிலும் தேடிப் பார்த்தோம். ரம்யா எங்கள் பார்வையில் தென்படவே இல்லை. அந்த ஜனக்கூட்டத்தில் எங்கு போய்த் தேடுவது? நாங்கள் பதட்டமாகிவிட்டோம்.

எந்தத் திசையில் போய்த் தேடுவது? என் தங்கை அழ ஆரம்பித்துவிட்டாள். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துவிட்டால், உடனே மனசுக்குள் ஆயிரம் கற்பனை பயங்கள் வேறு வந்து விடுகின்றன. ரம்யா அப்போது ஆறுவயதுக் குழந்தைதான். யாராவது நயமாகப்பேசி அவளை ஏமாற்றி அழைத்துக்கொண்டு போய்விட்டால்?

செய்வதறியாமல் ரம்யாவைத் தேடி ஆளுக்கொரு பக்கமாக ஓடத் தயாரானபோது, நான் உடனே, “இருங்க அவசரப்படாதீங்க, ஆளுக்கொரு பக்கம் எல்லோரும் தேடி ஓடினோம்னா எல்லோருமே காணமப் போய்விடுவோம்! நீங்கள்லாம் இங்கேயே நில்லுங்க, நான் நான்கு திசைகளிலும் கொஞ்ச தூரத்துக்கு ஓடிப்போய் பார்த்துட்டு வரேன்…. ரம்யா ரொம்ப தூரத்துக்கெல்லாம் போயிருக்க முடியாது” – சொல்லிவிட்டு ஓடிப் பார்த்துவிட்டு வந்தேன். ரம்யா எங்குமே தென்படவில்லை. என் தங்கை தவித்துப் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். தங்கையின் கணவரும் சற்றுநேரம் ஓடிப்போய்த் தேடினார். ரம்யாவைக் காணோம்.

என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் ஒருவிதமான பேதலிப்புடன் நின்று கொண்டிருந்தபோதுதான் என் தங்கையின் இரண்டாவது மகள் மூன்று வயது ஹேமாவின் முகத்தை நான் தற்செயலாகக் கவனித்தேன். அவளின் முகத்தில் ஏதோ ஒரு த்ரில்லிங்கான காட்சி ஒன்றைப் பார்க்கிற மாதிரியான ஒருவித பரவசமான மலைப்பு நிறைந்து போயிருந்தது.

ஒருவிதமான ஆவலுடன் அவள் அம்மாவிடம், “என்னாச்சும்மா ?” என்று கேட்டாள். “ரம்யா காணாமப் போயிட்டாடி…”

“காணாமப் போயிட்டாளா?” ஆச்சரியமான தொனியில் கேட்டாள்.

“ஆமா, காணாமப் போயிட்டா… எங்கே போனாள்னு தெரியல.”

சில வினாடிகள் மெளனமாக இருந்துவிட்டு ஹேமா கேட்டாள். “அப்படீன்னா இனிமே நமக்கு வேற ரம்யா வருவாளா?”

என்ன ஒரு அறியாமை?

ஆனால் என் தங்கை அந்த நேரத்தில் அந்த அறியாமையை ரசிக்கின்ற மனநிலையிலா இருந்தாள்?

பயங்கர கோபம் வந்து, “ஏண்டி என் பொண்ணைக் காணும்னு நானே கதி கலங்கிப்போய் நிக்கறேன்…வேற ரம்யா வருவாளான்னு கேள்வியா கேக்குற?” – அவள் முதுகில் ஓங்கி அறைந்தாள்.

ஆனால் முதுகில் விழுந்த அடியும், வசவும் ஹேமாவின் முகத்தில் நிறைந்திருந்த பரவசமான மலைப்பைக் குறைக்கக் காணோம்!

நானும் என் தங்கையின் கணவரும், பொருட்காட்சிக்குள் ‘பெவிலியன்’ அமைத்துச் செயல்படும் காவல்துறையினரிடம் போய் ரம்யா காணாமல் போய்விட்டதை புகார் பண்ணிவிட வேண்டியதுதான் என்று முடிவுசெய்து, என் தங்கையையும், ஹேமாவையும் அந்த இடத்தைவிட்டு வேறு எங்கும் நகர வேண்டாம் என்று சொல்லி, அவர்களை அங்கேயே நிற்க வைத்துவிட்டு பெவிலியனை நோக்கி விரைந்தோம்.

அப்போது பொருட்காட்சி ஒலி பெருக்கிகளில், “ரம்யா என்ற ஆறு வயது மதிக்கும்படியான சிறுமி பெற்றோர்களைப் பிரிந்து அழுது கொண்டிருந்தாள். இப்போது அவள் காவல்துறையினரின் பெவிலியனில் இருக்கிறாள். அப்பா பெயர் பாலு என்றும், ஐஓபியில் பணிபுரிகிறார் என்றும் குழந்தை சொல்கிறாள். பெற்றோர்கள் அவளை உடனே வந்து அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.”

இந்த அறிவிப்பைக் கேட்டதும் நாங்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. ஓட்டமும் நடையுமாக மைதானத்தின் அடுத்த ஓரத்தில் இருந்த பெவிலியனை அடைந்தோம். டிசம்பர் குளிரிலும் எங்களுக்கு ஏராளமாக வியர்த்துக் கொட்டியது.

ரம்யா ஒரு உயரமான மேஜையில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். அவளின் ஒரு கையில் பாப்கார்ன், இன்னொரு கையில் கோன் ஐஸ்.

எங்களைப் பார்த்ததும் ரம்யா அருகில் நின்றிருந்த போலீஸ்காரரிடம், “அதோ என் அப்பாவும், மாமாவும் வராங்க…” என்று எங்களை கைநீட்டிக் காண்பித்துச் சொன்னாள். அவள் கன்னங்களில் கண்ணீர்க் கறைகள் காயவில்லை.

போலீஸ்காரர் எங்களுக்கு நன்றாக டோஸ் விட்டார். குழந்தை காணாமல் போனதையும், பின்பு காவல்துறை பெவிலியனில் கிடைத்து விட்டதையும் எழுதித் தரச்சொன்னார். அப்படியே செய்துவிட்டு, அவருக்கு நன்றி கூறிவிட்டு, ரம்யாவை அழைத்துக்கொண்டு திரும்பி நடந்தோம்.

என் தங்கைக்கு மகளைப் பாத்ததும்தான் உயிரே வந்தது. நாங்கள் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானோம். நான் ஹேமாவின் முகத்தைப் பார்த்தேன். அதே பரவசமான மலைப்பு இன்னமும் அவள் முகத்தில் நிறைந்து கிடந்தது.

விளையாட்டாக அவளிடம், “ஹேமா, பாத்தியா நமக்கு இன்னொரு ரம்யா வந்தாச்சு..” என்றேன்.

அவ்வளவுதான்! ஹேமாவின் முகத்தில் மேலும் மலைப்பு, மேலும் அதிக பரவசம்… சாதரணமாகவே அவள் கண்கள் பெரிது. நான் இப்படிச் சொன்னதும் அவளுடைய முட்டைக் கண்கள் இரட்டிப்பாக விரிந்தன.

வைத்தகண் எடுக்காமல் ரம்யாவைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன், “அட ஆமாம்! நம்ம ரம்யா மாதிரியே இருக்கா!” என்றாள்.

என்னுடைய தம்பிக்கு மீனலோச்சினி என்று ஒருமகள் இருக்கிறாள். அதென்னமோ அவளுக்கு அந்தப் பெயரில் அப்படியொரு அதிருப்தி. இப்படி ஒரு கர்நாடகமான பெயரைப்போய் அப்பா தனக்கு வைத்துவிட்டாரே என்கிற ஏராளமான ஆதங்கம் அவளுக்கு.

இந்த ஆறாத ஆதங்கம் அவளுடைய எத்தனையாவது வயதில் தெரியுமா? ஐந்தாவது வயதில்! அதுவும் பள்ளிக்கூடம் போய்ச்சேர்ந்ததும் அவளுடைய வயதுப் பெண்களுக்கு எவ்வளவு அழகழகான பெயர்கள் இருக்கின்றன என்று சொல்லிசொல்லி நொந்துபோய் விட்டாள்.

அவள் வகுப்பில் காயத்ரி என்று ஒரு சிறுமி இருந்தாள். மீனலோச்சினியைப் பொறுத்தவரை அந்த காயத்ரி என்ற பெயருக்கு ஈடாக வேறு ஒரு அழகான பெயர் கிடையாது. காயத்ரி என்ற அந்தப் பெயரை கண்களில் ஓர் இன்ப மின்னல் மின்ன எத்தனையோ தடவைகள் என்னிடம் சொல்லி மாய்ந்து போயிருக்கிறாள்.

ஒருநாள் நான் அவளிடம், “அதனால என்ன… உனக்கு அந்தப் பெயர் ரொம்பப் பிடிச்சிருக்கிறதால, இனிமே உன் பெயரையும் காயத்ரின்னு மாத்தி வச்சுடலாம்…” என்றேன்.

மீனலோச்சினி கண்கள் விரிய ஆச்சர்யத்துடன், “அதெப்படி பெரியப்பா? நான் அவ பேரை வச்சிக்கிட்டா பெறகு அவ என்ன செய்வா?”

எவ்வளவு சுத்தமான அறியாமை?

அந்தக் காயத்ரியின் பெயரை இவளுக்கு மாற்றி வைத்துவிட்டால், காயத்ரிக்கு அந்தப் பெயர் இல்லாமல் போய்விடுமாம்! பாவம், அவள் என்ன செய்வாள்? என்ன ஒரு கரிசனம்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *