குற்ற உணர்ச்சி

 

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வரவேண்டாம்”

அப்பா அவரிடம் சொல்லிக்கொண்டிருந்த்தை கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்த சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக்கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, சரிங்க முதலாளி “இனிமே நேரத்துல வந்துடறேன்.இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும்.

இவனும் பல முறை அப்பாவிடம் புகார் சொல்லி விட்டான், அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிச்சுட்டா ஒதுங்கிக்குவாரு. சொன்னவனை சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு “வேணாம் கண்ணா இன்னும் கொஞ்ச நாள் வேலை பாக்கட்டும், சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் கம்பெனியில் சுமார் நூறு பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணன் படித்து முடிக்கும் வரை அவன் அப்பாதான் பார்த்துக்கொண்டிருந்தார். இவன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து அப்பாவுக்கு துணயாய்

வந்த பின்னால் சில மாற்றங்களை செய்தான். கொஞ்சம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தான். வயதானவர்களை அனுப்பி விட சொன்ன போது அவன் அப்பா தயங்கினார்.

கண்ணா அவங்களை வேண்டாமுன்னு அனுப்ப வேண்டாம், அவங்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம் அப்படீன்னு சொல்லி கையில் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பனும்.

சொன்னபடியே ஐம்பத்து எட்டை தாண்டியவர்களுக்கு ஓய்வு என்ற திட்டத்தை கொண்டு வந்து அவர்கள் செய்த பணிகளுக்கு பணிக்கொடையும் கொடுத்து அனுப்பினான்.

தினமும் வேலை நேரம் தாண்டியே, வந்து கொண்டிருந்த இவரையும் அனுப்பி விடலாம் என்று முடிவு செய்த போது அப்பா தடுத்து விட்டார்.இவர் இன்னும் கொஞ்ச நாள் வேலை செய்யட்டும், கம்பெனிக்குள்ள வேண்டாமுன்னாலும், என் ஆபிசுல உட்கார்ந்து இருக்கட்டும். சொன்னபடியே சாமிநாதன் இனிமே உங்களுக்கு என் ஆபிசுல தான் வேலை. காலையில ஒன்பது மணிக்கெல்லாம் வந்து ஆபிச ஒழுங்குபடுத்தி வச்சிருக்க வேண்டியது உங்க பொறுப்பு.

சரி என்று தலையாட்டிய சாமிநாதனின் முகத்தில் தென்பட்டது மகிழ்ச்சியா, அல்லது அதிர்ச்சியா என்று இவனுக்கு புரியவில்லை. வழக்கம்போலவே தாமதமாகத்தான் வந்து கொண்டிருந்தார். அப்பாவும் அவரை வழக்கம்போல திட்டிக்கொண்டேதான் இருந்தார்

கண்ணனுக்கு அப்பாவிடம் வற்புறுத்தி சொல்ல முடியாத சூழ்நிலை. இவனே.இப்பொழுதுதான் இந்த கம்பெனிக்கு பொறுப்பு எடுத்திருக்கிறான். அப்பாவோ இருபத்தி ஐந்து வருடங்களாக இதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறார். அதனால் அவரை வற்புறுத்த இவன் மனம் இடங்கொடுக்கவில்லை.

மற்றபடி சாமிநாதன் கடுமையான உழைப்பாளியாகத்தன் இருந்தார். எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்தார். அது போல பலருடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பது, அடாவடி பேச்சு, இவைகள் எப்பொழுதும் இவரிடம் இவன் பார்த்த்தில்லை.ஆனால் கம்பெனி சட்டம் என்று ஒன்றை போட்டுவிட்டு இவர் மட்டும் விதி விலக்கு என்று இருப்பது இவனுக்கு ஒவ்வாததாக இருந்தது.அப்பாவிடம் இதை பற்றி விவாதிப்பதற்கும் தயக்கமாக இருந்தது.அப்பாவுடன் அந்த காலத்திலிருந்தே இவர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை மற்றவர்கள் சொலியிருக்கிறார்கள். என்றாலும், இவரை போல மற்ற பணியாளர்களும் இவருடன் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டபோது இவரை மட்டும் விதி விலக்காய் அப்பா ஏன் வைத்திருக்கிறார் என்பது இவனுக்கு புரியவில்லை.

இன்றைய கால கட்ட சூழ்நிலையில் கம்பெனி பல்வேறு போட்டிகளுக்கிடையிலே போராட வேண்டி இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தகுந்த பணியாளர்களை பணிக்கு வைத்து தரமான பொருட்களை தயாரிக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுது இவருக்கு அளிக்கும் ஊதியத்தில் இவரை விட தரமான பணியாளர் இருவர் எடுத்து விடலாம் என்று இவன் கணக்கு போட்டான்.

இரண்டு மூன்று நாட்களாக சாமிநாதனை காணவில்லை. விடுமுறை என்று முன்னறிவிப்பும் செய்யவில்லை.மூன்று நாட்கள் ஆகியும் காணாத நிலையில் கண்ணனை அழைத்து சாமிநாதன் மூன்று நாளா வரலை, யாரையாவது ஆளை அனுப்பி என்னாச்சுன்னு பாத்துட்டு வா. சொன்னவரை வியப்புடன் பார்த்தான் கண்ணன். ஒரு தொழிலாளிக்கு ஏன் இவ்வளவு பரிந்து போகிறார்.அதுவும் எந்த அறிவிப்புமில்லாமல் விடுமுறை எடுத்ததற்கு கோப படாமல், பதட்டப்படுகிறார் என்று புரியவில்லை, என்றாலும், அப்பா சொன்னபடி ஒரு ஆளை அனுப்பி என்ன விசயம் என்று கேட்டு வர சொல்கிறான்.

வந்து சொன்ன செய்தி உண்மையிலேயே இவனுக்கு வருத்தமடைய செய்தது.

அவருடைய மனைவி இறந்து விட்டார்களாம்.அதுவும் நீண்ட நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து நேற்று இறந்து விட்டதாகவும், சாமிநாதன் மறுபடி பணிக்கு வருவது சந்தேகமே என்றும் அந்த பணியாள் சொன்னான். கண்ணனுக்கு மனசு கனத்து போயிற்று.

தனக்கே இப்படி என்றால் அப்பாவுக்கு எப்படி இருக்கும்? மனசுக்குள் நினைத்து பார்த்தவன் மெல்ல சென்று அவர் மனசு அதிச்சியடையா வண்ணம் இந்த செய்தியை சொன்னான்.

அதைக்கேட்ட அப்பா அப்படியே உறைந்து விட்ட்து போல கண்ணை மூடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவரின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த்து. சிறிது நேரம்தான் அப்படி இருந்தார். சட்டென விழித்து கண்களை துடைத்துக்கொண்டு, இனி அவன் வேலைக்கு வரமாட்டான் என்று முணு முணுத்தார். கண்ணனுக்கு வியப்போ வியப்பு, சாமிநாதனின் முடிவை பற்றி இவர் எவ்வளவு உறுதியாக சொல்கிறார்.

சரி வா போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கண்ணனை அழைத்துக்கொண்டு அப்பா சாமிநாதன் வீட்டுக்கு செல்கிறார்.அங்கு சாமிநாதன் இவரை கண்டவுடன் மெல்ல எழ முயற்சிக்க வேண்டாம் எழுந்திருக்காதே, என்று சொல்லி விட்டு இவர் அவனருகில் உட்கார்ந்து அவன் தோளை பற்றிக்கொள்கிறார். இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடுகிறது.இவன் எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு நாற்காலியில் மெளனமாய் உட்கார்ந்திருக்கிறான். குடிப்பதற்கு பானம் கொண்டு வந்தவர் சாமிநாதனின் மகனாய் இருக்க வேண்டும். இவன் ஒன்றும் வேண்டாம் என்று சைகையிலேயே சொல்கிறான். அப்பாவுக்கு சைகையிலேயே கேட்டவருக்கு அவருக்கும் ஒன்றும் வேண்டாம் சைகையிலேயே சொன்னான்.

அரை மணி நேரம் கழித்து காரில் திரும்பி கொண்டிருந்த கண்ணனிடம் அவன் அப்பா சொல்லிக்கொண்டு வந்தார். இப்ப நீ உயிரோட இருக்கறதுக்கு காரணமே அவன்தான், அதே மாதிரி அவன் வாழ்க்கை பாழானதுக்கு காரணமும் நீதான்.சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்க்க, கண்ணன் அதிர்ந்து போனான். புரியலேப்பா, சொன்ன கண்ணனிடம், இந்த கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, நானும் சாமிநாதனும் ஒண்ணாத்தான் ஒரு கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தோம். நான் எப்படியாவது முன்னுக்கு வரணும்னு துடிச்சுகிட்டு இருந்த நேரம்.

நாங்க ஒரு நாள் ஊட்டிக்கு பிக்னிக் கிளம்பி போனோம், அங்கிருக்கற போட் ஹவுசுல நான், கைக்குழந்தயா இருந்த நீ, உன அம்மா, மூணு பேரும், இன்னொரு படகுல சாமிநாதன்,அவன் சம்சாரம், இவங்க இரண்டு பேரும் இருந்தாங்க. நல்ல வேலையா அவனோட குழந்தைங்க இரண்டு பேரும், அப்ப அவங்க ஊர்ல திருவிழான்னு சொல்லி ஊருக்கு போயிருந்தாங்க.

நாம போயிட்டிருந்த படகு திடீருன்னு ஒரு சுழல் காத்துல சுத்தி உங்கம்மா கையில இருந்த நீ தண்ணிக்குள்ள விழுந்திட்டே. அதே மாதிரி சாமிநாதன் போன படகும் சுழலுல மாட்டி சுத்திட்டு இருந்தப்ப இவன் எங்க படகுல இருந்து குழந்தை விழுகிறத பாத்துட்டு உடனே தண்ணிக்குள்ள பாஞ்சு வந்து உன்னை எப்படியோ தூக்கி படகுல போட்டுட்டான். அதுக்குள்ள படகும் கொஞ்சம் நிலையா நின்னுடுச்சு, அதே நேரத்துல சாமநாதனோட படகு திடீருன்னு இவன் குதிச்சதுனால குப்புற கவுந்திடுச்சு, உன்னைய போட்டுட்டு உடனே அவன் நீந்தி படகுக்குள்ள இருந்த அவன் மனைவிய காப்பாத்திட்டான். இருந்தாலும், அவர் மெல்ல நிறுத்தினார்.

அப்புறம் என்னப்பா ஆச்சு?

அந்த அதிர்ச்சியினால அவன் மனைவிக்கு புத்தி பேதலிச்சு போச்சு. இவனும் எல்லா மருத்துவமும் பார்த்துட்டான், அப்புறம்தான் அவளை இத்தனை வருசம் குழந்தைய பாக்கற மாதிரி பாத்துட்டு,குழந்தைகளையும் வளத்தி ஆளாக்கிட்டான்.நான் கூட ஒரு நாள் சொன்னேன், நீ வீட்டுலயே இருந்து உன் மனைவியை பார்த்துக்க, நான் வேணா மாசா மாசம் பணம் கொடுத்துடறேன்னு.

அவன் சொன்னான்,என் மனைவியை பாத்துக்கறதுக்கு, நான் உன் கிட்ட சம்பளம் வாங்குனா, அது எனக்கு நல்லாயிருக்காது.நான் எப்படியும் சமாளிச்சு வேலைக்கு வந்துடுவேன். நீ கம்பெனி ஆரம்பிச்ச பின்னாடி அங்க எனக்கு ஒரு வேலை போட்டு கொடு. நான் உன் கிட்ட வேலைக்கு வந்திடுறேன்.

இருபத்தி அஞ்சு வருசமா அவளை பாத்து வந்திருக்கான்.ஒரு நாள் அவனே சொன்னான், அவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதுக்கப்புறம் நான் வேலைக்கு வர்றதை நிறுத்திக்குவேன் அப்படீன்னான். நானும் என்னாலதான இவனுக்கு இப்படீ ஆயிடுச்சு.! அப்படீங்கற குற்ற உண்ர்ச்சியிலயே இருந்தேன்.

சொல்லிவிட்டு குரல் கம்ம சொன்னார், இப்ப நீ அவனுக்கு பதிலா வேற ஆளை எடுத்துக்கலாம். அவர் குரல் சோகத்தில் கரகரத்திருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு என்றார் போஸ்ட் மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர், சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு ...
மேலும் கதையை படிக்க...
சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு மனிதன் சுதந்திரமாக வெளியே போகலாம் என்றால் எல்லாவற்றுக்கும் தடை, இல்லையென்றால் என்னையும் கூட்டிச்செல் என்று நச்சரிப்பு, அட ஒரு கோயிலுக்குச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் ஆலமர காலனியில் அன்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அப்படி பேர் வந்ததற்கே காரணமான நூறு வயதை கடந்து விட்ட அந்த ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. அந்த மரத்துக்கு பத்தடி தள்ளி திசை வாரியாக வீடுகள் வரிசையாக இருந்தன. அவைகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஆரஞ்சுப்பழம் என்னப்பா விலை? கிலோ நாற்பது ரூபா சார். சரி அதுல அரை கிலோ கொடு, பர்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுத்து பழத்தை வாங்கியவன், மிகுந்த எச்சரிக்கையுடன் இரு புறமும் பார்த்து வாகனங்கள் வராத நேரம் பாதையை தாண்டி எதிரில் ...
மேலும் கதையை படிக்க...
எது தவறு?
சாமியார்
ஆலமர காலனி
புரிந்துகொண்டவன் பிழை
முகவரி தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)