குற்ற உணர்ச்சியே கருணையாக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 5,879 
 

“சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!”

ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகம்மாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார்.

வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தனை போக, சிரிப்பு வந்தது. இப்படியா பரிந்து, பரிந்து ஒரு பூனைக்குட்டிக்கு ஆகாரம் அளிப்பார்கள்?

ஒரு வேளை, அவளுடைய குற்ற உணர்ச்சிதான் இப்படி இன்னொரு வழியில் வடிகால் காண்கிறதோ?

அன்று அழுதபடி வீட்டுக்குள் வந்தாள் விமலி. அவர் தன்னுடன் போட்டி போட்டு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த மடிக்கணினி மீதிருந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.

எதுவும் கேட்குமுன், “ஒரு பூனைக்குட்டிமேல காரை ஏத்திட்டேன். அது அப்படியே நசுங்கி..,” மேலே தொடரமுடியாது, விசும்பினாள்.

`இதற்கா இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்!’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கினார் க.நா.

அவர்கள் இருந்த பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு பெரிய மாடி வீட்டை இடித்து, புதிதாக ஏதாவது கட்டிக் கொண்டிருப்பார்கள் சீனர்கள். `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்துதான் பணம் கொட்டுகிறதோ!’ என்று அதிசயித்திருக்கிறார் க.நா. ஒரு நண்பரை விசாரித்தபோது, `Feng Shui (ஃபெங் ஷ்வி — சீனர்களின் வாஸ்து) சரியாக இல்லை!’ என்றார்.

கட்டுமானத் தொழிலாளிகள் வேலை செய்ய வரும்போது தமது உபகரணங்களுடன், எங்கிருந்தாவது ஒரு பூனைக்குட்டியையும் தூக்கி வருவது வழக்கமாக இருந்தது. சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் கழித்து, அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் போய்விடுவார்கள் — பூனையை விட்டுவிட்டு.

இதனால், அந்தக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு தெருக்களிலும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ணங்களில் பூனைகள் உலவிக்கொண்டு, தங்கள் இனப்பெருக்கத்திற்கு தம்மால் ஆன கடமையைச் செய்துகொண்டிருந்தன.

`நீ நிதானமா காரை ஓட்டியிருக்கணும், விமலி. நம்ப தெருவிலே எப்போ ஒரு பூனையோ, நாயோ குறுக்கே வரும்னு சொல்லவே முடியாது!’ என்றார், நிதானமாக.

தன் துயரத்தில் பங்கு கொள்ளாது, புத்தி வேறு சொல்கிறாரே! விமலியின் துக்கம் ஆத்திரமாக மாற, “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” என்று இரைந்துவிட்டு, `இதயமே இல்லாத ஜன்மம்!’ என்று முணுமுணுத்தபடி அப்பால் போனாள்.

சில மாதங்கள் கழித்து, “இங்கே வந்து பாருங்களேன்!” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் கூவிக்கொண்டு வந்தாள் விமலி.

முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டார் க.நா. நிம்மதியாக ஆடுவோம் என்றால் விடுகிறாளா? கணினியை அடியிலிருந்த மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

மனைவி கையில் மூன்று நிறங்கள் கலந்த ஒரு பூனைக்குட்டி!

“ஏது?”

“பார்க்கிலே இருந்திச்சு. நடந்து போறப்போ பாத்தேனா! தூக்கிட்டு வந்துட்டேன்”.

“திருடிக்கிட்டு வந்தேன்னு சொல்லு!” என்றார் கண்டிப்பான குரலில். “அதோட அம்மா தேடாதா?”

அவள் முகம் இறுகியது. “ஒண்ணு காணாமப் போனா அம்மா பூனைக்குத் தெரியவா போகுது! மூணு, நாலு குட்டி போட்டிருக்கும்!” என்று தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள்.

பத்து குழந்தைகள் பெற்ற தாய்கூட ஒரு குழந்தை இறந்துவிட்டால், வாழ்நாளெல்லாம் துக்கத்தில் உழலுகிறாளே! பூனையும் தான் ஈன்றதைப் பால் கொடுத்து வளர்க்கும் ஜீவன்தானே? அதற்கு மட்டும் உணர்ச்சிகள் கிடையாதா? அல்லது, எத்தனை குட்டிகளை ஈன்றோம் என்பதுதான் தெரியாதா?

இவளுக்கு ஏன் இந்த சின்ன விஷயம் புரியவில்லை?

பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ? தாய்மை அடைந்தால்தான் இன்னொரு தாயின் வேதனை புரியுமோ?

ஒரு பெண் தாய்மை அடையாவிட்டால், என்றுமே குழந்தைத்தனம் மாறாமல் இருந்துவிடுகிறாள் என்றெல்லாம் மனைவியைச்சுற்றி அவரது எண்ணங்கள் ஓடின.

தான் ஏதாவது சொல்லப்போனால், அழுது ஆகாத்தியம் செய்வாள். அன்று சமையல் வாயில் வைக்க வழங்காது என்று வாயை மூடிக்கொண்டார் க.நா. எல்லாம் இருபது ஆண்டுகால இல்லற வாழ்க்கை கற்றுக்கொடுத்த விவேகம்தான்.

பிள்ளை இல்லாவீட்டில் அந்த பூனைக்குட்டி துள்ளி விளையாடியது. தினசரியைக் குதறியது. சர்வசுதந்திரமாக சோபாவில் படுத்து, பகலெல்லாம் தூங்கியது. சாப்பாட்டு மேசையில் ஏறி, அதன்மேலிருந்தவற்றை முகர்ந்து பார்க்கவும் தவறவில்லை.

`அடீ! அடீ!’ என்று அதன் பின்னாலேயே ஓடும் மனைவியைப் பார்த்தால் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருந்தது கமலநாதனுக்கு.

“ஒன் பூனைக்குப் பேர் கிடையாதா?” என்று ஒரு நாள் மனைவியைச் சீண்ட, “குட்டின்னு பேர் வெச்சிருக்கேன். நல்லா இருக்கில்லே?” என்றாள் அப்பாவித்தனமாக. அவர் தன் செல்லப்பிராணியின்மேல் அக்கறை வைதிருக்கிறாரே என்ற மகிழ்ச்சி பிறந்தது அவளுக்கு.

“ஒரிஜினலா இருக்கு!” என்று அவர் கேலியாகப் பாராட்டியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால். இன்னும் பூரித்தாள்.

வேளை தவறாது தனக்கு ஆகாரமும், குடிநீரும் கொடுத்துவந்த விமலிக்கு ஏதோ தன்னால் ஆன உதவியாக, தான் மிதித்துக் கொன்ற பல்லியையும், கரப்பான் பூச்சியையும் அவள் செருப்பின்மேல் கொண்டுவந்து போட்டது குட்டி.

அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேண்டா, குஞ்சு!” என்று கொஞ்சினாள்.

தன் ஆசாரத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேரங்காடிகளில் பூனைகளுக்கென பிரத்தியேகமாக விற்கும் உணவை வாங்கிவந்தாள்.

“நாத்தம்!” என்று முகத்தைச் சுளித்த கணவரைப் பார்த்துச் சீறினாள். “பின்னே என்ன, பூனை தயிர் சாதமா சாப்பிடும்? மீன் வாசனை அப்படித்தான் இருக்கும். நீங்க ஒண்ணும் அதுக்குப் போட வேண்டாம்! நான் பாத்துக்கறேன்!”

குட்டியின்மேல் தனக்கிருந்த பிடிப்பை கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற ஆதங்கம் சிறிது நேரத்தில் மறைந்தது — “இந்தக் குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆன்ட்டி!” பக்கத்து வீட்டுக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தொழிலாளி கூறியபோது. வீட்டுக்கு வெளியே இருந்த செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விமலிக்குப் பெருமை தாங்கவில்லை. “எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள், மலாயில்.

“வியட்நாம்!” என்று பதில் வந்தது. பிறகு, அவளுடைய அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவன்போல், “என் பேரு டாவ்!” என்று தெரிவித்தான். சோனியாக இருந்தான். ஆனால், கடினமான உழைப்பால் பெற்ற வலு கைகளில் தெரிந்தது.

ரப்பர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் தன்மேல் தெறித்துவிடாமல் ஜாக்கிரதையாக, சற்றுத் தொலைவில் நின்று, வைத்த விழி வாங்காமல் எஜமானியம்மாளைப் பார்த்துகொண்டிருந்தது குட்டி.

அதைப் பார்த்ததும் சிகரெட்டால் கறுத்திருந்த அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. அதைத் தூக்கி அணைத்து, அதன் மென்மையான உடலை அருமையாகத் தடவிக்கொடுத்தான். “அழகா இருக்கு!”

சில வாரங்கள் கடந்தன. டாவும் குட்டியும் நண்பர்களாகிப்போனார்கள்.

“குட்டியைப் பாத்தீங்களா? நேத்து சாயந்திரத்திலேருந்து காணோமே! சாப்பிடக்கூட வரலே!” மனைவியின் கவலை தோய்ந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தார் க.நா.

“பெரிசாப் போச்சில்ல? பாம்பு, தவளை எதையாவது பிடிச்சுத் தின்னிருக்கும்!” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார். “தானே நாளைக்கு அதிகாலையில வந்து..,” சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டார். `மியாவ் மியாவ்னு கத்தி பிராணனை எடுக்கும், பாரு!’ என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல அவருக்கென்ன புத்தி மாறாட்டமா!

ஆனால் மறுநாள் குட்டி வரவில்லை.

இரண்டு நாட்களாகின. விமலியின் துயரம் ஆத்திரமாக மாறியது.

“அந்த வியட்நாம் தடியன் குட்டிகிட்ட பாசமா இருக்கிறமாதிரி நடிக்கிறபோதே எனக்குச் சந்தேகம்தான்!” என்று பொரிந்தாள்.

“அவன் எதுக்காக நடிக்கணும்?”

“தெரியாதமாதிரி கேக்கறீங்களே! இவங்களோ பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்கு வந்திருக்காங்க. சிக்கனும் மட்டனும் வாங்கக் கட்டுப்படியாகுமா? குட்டியோ கொழுகொழுன்னு இருக்கு!”

“சீச்சீ!”

பரிவுடன் அவன் குட்டியை அணைப்பதைப் பார்த்திருந்தவருக்கு அவள் சொல்வது அபத்தம் என்று பட்டது.

`ஒரு வேளை, இவள் சொல்வதில் உண்மை இருக்குமோ?’ என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை.

`இந்தப் பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு இனாம் தரப்படும்!’ என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, தெருக்கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் துண்டுக் காகிதங்களின் ஒரே மாதிரியான வாசகம் நினைவில் எழுந்தது. சில சமயம், பூனை மட்டுமின்றி, அழகழகான நாய்களின் படங்களும் இருக்குமே!

“விடு, போ! நாளைக்கு சனிக்கிழமை! லீவு! கடைக்குப் போய் அழகான பாரசீகப் பூனை வாங்கிக்கலாம்,” என்றார், சமாதானமாக.

காலை ஒன்பது மணிக்குச் சாவகாசமாகத் தூங்கி எழுந்த க.நா, பக்கத்து வீட்டிலிருந்து பெரிய இரைச்சல் கேட்க, வாசலுக்கு விரைந்தார்.

சிறிது பொறுத்து, வீடு திரும்பியவர் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள். அவைகளை வெளியில் கொட்ட மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தார். “ஒன்னோட குட்டியைத் தூக்கிவெச்சுட்டுக் கொஞ்சுவானே! அந்த வியட்நாம்காரன் அரைகுறையாக் கட்டியிருந்த மாடி பால்கனியிலேருந்து விழுந்துட்டான்!”

நறுக்கிக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்தாள் விமலி. அவர் சொல்ல வந்தது இன்னும் சுவாரசியமாக இருக்கும்போலிருந்தது. “உசிரு போயிடுச்சா?”

“சரியான அடி! வலி தாங்காம துடிக்கிறான், பாவம்! `ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போடா’ன்னு நான் மேஸ்திரிகிட்ட சொல்றேன், அவன், `அதெல்லாம் வேணாம், ஸார். சும்மா மசாஜ் செஞ்சா சரியாப்போயிடும்!’ அப்படிங்கிறான்”.

கணவர் எவனோ ஒருவனுக்காக அவ்வளவு உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு அலுப்பாக இருந்தது.

க.நா தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார்: “அந்த ஆள் சட்டபூர்வமா இங்க வரலியாம். அதனால அவனை வேலைக்கு வெச்சிருந்த குத்தத்துக்காக இந்த மேஸ்திரியைத் தண்டிப்பாங்க. கொஞ்சமா கூலி குடுத்து, நிறைய வேலை வாங்கலாமேங்கிற பேராசை இவனுக்கு. சீனவங்க புத்தியைக் காட்டிட்டான்!” யார்மேலாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய இனத்தையே மொத்தமாகப் பழித்தால்தான் சிலருக்குத் திருப்தி.

விமலிக்கும் திருப்தியாக இருந்தது. “என் குட்டியை வெட்டித் தின்னானே, படுபாவி! நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்! இப்போ அவனும் படட்டும்!”

க.நாவிற்கு எரிச்சலாக இருந்தது. “அவன் தின்னதைப் பார்த்தாப்போல பேசாதே. சாப்பிட வழியில்லேன்னுதானே இப்படி சொந்தபந்தம் எல்லாரையும் விட்டுட்டு இங்கே வந்திருக்கான்? இருபது முப்பது பேர்கூட ஒரே அறையிலே தங்கிக்கிட்டுத் திண்டாடறான், பாவம்!” மீண்டும் பரிதாபப்பட்டார்.

தன்னைப்போல ஓர் ஆணைப்பற்றி இவள் — கேவலம், பெண் — தரக்குறைவாகப் பேசுவதா! அவருடைய ஆண்மை விழித்துக்கொண்டது.

“பூனைகிட்ட காட்டற பரிவில கொஞ்சமாவது இவங்கமேல இருக்கா ஒனக்கு?” என்று, அபூர்வமாக மனைவியை எதிர்த்தார், எதிர் விளைவுகளைப்பற்றி யோசிக்காது.

ஒரு வாரம் இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லை. அவரோ, அதைச் சற்றும் பொருட்படுத்தாது, மேஸ்திரியிடம் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழாமல் போகவில்லை.

அவனுடைய காலை வெட்டி எடுத்துவிட்டார்களாமே!

`நன்றாக வேண்டும்!’ என்று கறுவினாள்.

நள்ளிரவு.

“மியாவ்!”

விமலிக்கு உடனே விழிப்புக் கொடுத்தது. இந்த வேளையில் தனியாக வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதா! தனது கோபத்தை மறந்தவளாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பினாள்.

“வாசல்லே பூனை கத்துது. நம்ப குட்டியாத்தான் இருக்கும். வாங்க, பாக்கலாம்!” என்று பெரிய எதிர்ப்புடன் மாடிப்படியின் கீழ் இறங்கி ஓடினாள்.

இரவு வேளைகளில் வாசலில் போட்டிருக்கும் விலையுயர்ந்த காலணிகளைக் களவாடுபவர்களைத் தவிர்க்க போடப்பட்டிருந்த விளக்கு வெளியில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.

அங்கே குட்டி மட்டுமில்லை, அதனுடன் இன்னொரு குட்டி, சிறிய பந்துமாதிரி!

“இங்கே பாருங்களேன்! குட்டி அம்மாவா ஆகிடுச்சு!” பூரிப்புடன் விமலி கத்தியது அந்த நிசப்தமான இரவில் நாலைந்து வீடுகளுக்குக் கேட்டிருக்கும்.

`இனிமேல் நம்மை எங்கே கவனிக்கப்போகிறாள்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பொறாமையும் எழ, “அந்த வியட்நாம்காரனைச் சபிச்சியே!” என்று குத்திக் காட்டாமல் இருக்க முடியவில்லை க.நாவால்.

அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பெரிய குட்டி, சின்ன குட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துபோனாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *