குமார ‘சாமி’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 10,227 
 

கதிரவனின் காய்தலில் தோன்றிய கானல் நீரில் மக்கள் நீந்திக்கொண்டிருந்த நேரம் அது. வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சாலைகளின் துணுக்குகளும் வெப்பமும் சேர்ந்து ஒரு புதிய ரசயனக்கலவையயை உருவாக்கி இருந்தன.இந்திய மருத்துவமனைகள் மருந்து வாடைகள் கக்கும் மாறுவேஷங்களில்  இருந்தன. குறிப்பாக இந்த ஒரு மருத்துவமனையை அப்படி விவரித்ததாக வேண்டும்.ஆங்காங்கே சீழ்களும் இரத்தமுமாய் கிடந்த தரையின் மேல குப்பைகளாய் கொட்டப்பட்டு இருந்தனர் ,அங்கு வந்த நோயாளிகள்.சுகாதாரம் பல அவதாரம் அங்கே எடுத்திருந்தது.

இம்மக்களில் முக்கால் வாசி பேர் முன்பின் மச்சு வீடுகளே பார்த்திராத கிராமத்தினர். மழை பொய்த்தபின் தழையும் பொய்த்து வாழ்பவர்கள்.கிட்டத்தட்ட உயிரற்ற உடல்கள் .எப்போதும் உடல் தின்னும் பூமி இப்பொது அவர்கள் உயிர் தின்ன ஆரம்பித்துவிட்டது.

அரசு மருத்துவமனையின் வசதிக்குறைவால் திருப்பி அனுப்பப்படுகிறவர்களின் புகலிடம் இம்மருத்துவமனை.ஊர்ப் பக்கம் கேட்டால் ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி என்பர்.ஒரு ருபாய் கொடுத்து சளி,ஜுரம் போன்ற சாதாரண வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்.பெரிய வியாதிகளுக்கு கொஞ்சம் தொகை கூடும்.

அகதிகள் போல் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் தன் எண்ணத்தொழிற்சாலையை கிளறிக்கொண்டு அமர்ந்திருந்தவன் குமாரசாமி.மெட்டர்னிட்டி வார்டுகள் வேறெங்கும் இல்லாமையே அவன் இங்கு அமர்ந்திருப்பதற்கு காரணம்.

ஒரு முழு நேர விவசாயியின் அடுத்த கட்ட சுமை அவன் குழந்தை.காரணம் எப்போதும் போல் வரும் இல்லைப் பாட்டு தான்.

‘என்ன செய்வது இன்னும் பத்து நாள் பொறுத்திருந்தால் வறட்சி நிதின்னு எதாவது காசு குடுத்திருக்கும் கவர்மெண்டு,இவளுக்கு சனியன் இவ்வளவு சீக்கரம் வலி வருன்னு எவன் கண்டான்’

‘இதுல மாட்டு வண்டி வேற வச்சு கூட்டீட்டு வந்துட்டோம் அவசரப்பட்டு,பச்சப்பசேல்னு இருந்திருந்தா போகும் போது கூட பச்ச ஒடம்ப மாட்டு வண்டி வச்சு கூட்டீட்டு போகலாம்,பணம், இல்லாம பொணம் கூட தூக்க முடியதுன்னுவாணுக சரியாத்தான் இருக்கு சாமி‘

இதெல்லாம் அழுக்கு நகங்களைக்கொண்டு காரை பேர்ந்த தரையை நோண்டிக்கொண்டு குமாரசாமி சிந்தை கக்கியவைகள்.

குமாரசாமியின் மனைவி கமலம்.அவள் ஒரு கொடி,குமாரசாமி என்னும் கொழுகொம்பில் சுற்றப்பட்ட கொடி. தாய்மையை தாங்க முடியாத உடல்.அவள் வயிற்றில் வளரும் குழந்தை கூட அவளை விட இரண்டு கிலோ மிகுதியாக இருக்கும் போல என்று நினைக்கும் அளவுக்கு மெலிவு.

தன் புகையிலை படிந்த பற்களை குச்சியால் நோண்டிக்கொண்டே இருந்த குமாரசாமிக்கு விழுந்தது,

“கமலம் கமலம்” என்று.

“இங்க கமலத்துகாக யாராவது வந்துருக்கீங்களா??”

இதோ கமலத்துக்காக அவன். அவன் ஒருவன் மட்டும் இவ்வுலகில்.தான் இல்லாமலா?இந்த எண்ணத்திற்கு முன்னே அவன் உதடுகள் தெரிவித்தன.

“நான் தாங்க அய்யா “

“நீங்க மட்டும் உள்ள வாங்க“

முன்னர் நடந்தது போல் அவன் எண்ணத்தை மீறி காய்ந்து போன உதடுகள் வெகு நாட்களுக்குப்பின் சிரித்திருந்தன.இப்போது கொடிக்காக கொழுகொம்பு ஏங்கியது.நினைவிருந்த வரை கடவுளை வணங்கியதில்லை தன் நிலம் தவிர நீர் தவிர முதன் முதலாய் வணங்கியது வெள்ளை கோட்டு அணிந்த அத் தெய்வங்களை.

“அய்யா கொழந்த ஆம்பளையா பொம்பளயாங்க?”

“அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது ,நீங்க அவங்களோட வீட்டுக்காரரா?”

“ஆமாங்க”

“அவங்களுக்கு கொழந்த பெத்துக்கர சக்தி இல்ல, ரொம்ப வீக்கா இருக்காங்க.இதுல தாய் இல்ல கொழந்த ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர தான் காப்பாத்த முடியும் அதுவும் உறுதியா சொல்ல முடியாது”

“அய்யா எப்படியாவது கொழந்த பொறந்திருமில்ல,கமலம் போழச்சுடுமில்ல”

குமாரசாமி ,பிறக்காத குழந்தைக்கும் பிழைக்க தவிக்கும் மனைவிக்கும் நடுவில் பிரசவத்திற்காக மதில் மேல் ஓடிக்கொண்டிருக்கும் பூனை.

“எங்க கைல எதுவும் இல்லன்னு அப்பவே சொன்னேனே ,நீங்க ஒரு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வச்சுக்கோங்க எல்லாம் முடிஞ்சஒடனே காசு கட்டிடணும்”

கையில் இருக்கும் சில நூறுகளை எண்ணிக்கொண்டே தேவையை கணக்கிட்டான். கழுத்தில் இருந்த துண்டை தலையில் முண்டாசு போல கட்டிக்கொண்டு தரைக்காரையை தேய்த்துக் கொண்டே நடந்தான்.

மூளையின் மூலைகளில் சிந்தனைகள் சேர்ந்த வண்ணம் இருந்தது .

‘நம்ம ஊர் காரப்பய ஒருத்தன் இங்க தான் பக்கத்துல வியாபாரம் பண்றான்னு சொல்லி இங்க வந்த கண்டிப்பா கடைக்கு வா முருகன் ஸ்டோர்ஸ்னு பேரு கவர்மெண்டு ஆஸ்பத்திரி பக்கத்துல தான் இருக்குன்னு சொன்னானே அவனப்போய் பாப்போமா ‘

முருகன் ஸ்டோர்ஸ்ஐ நோக்கி கண்களும் கால்களும் விரைந்தன.

முருகன் ஸ்டோர்ஸின் மகத்தான ஷட்டர் மூடப்பட்டு செவ்வாயன்று விடுமுறை ஆக்கப்பட்டிருந்தது . குமாரசாமி எனும் பூனைக்கு கிடைத்த ஏணி ஒன்றில் ஆணி ஒன்றும் இல்லாததால் மதில் மேலேயே தங்கிவிட்டது .

பல நாட்கள் உணவின்றி மங்கிப்போன கண்களின் பார்வையில் ஷட்டர் மேலே தென்பட்டது,

ஆண்கள் கருத்தடை திட்டத்திற்காக ஊக்கத்தொகை ரூ 1௦௦௦

இடம்: அரசு மருத்துவமனை

வறண்டிருந்த கண்கள் எப்படியோ அச்செய்தியை ஈர்த்துவிட்டன.

கால்கள் இவ்வளவு வேகமாக ஓட்டம் கண்டதில்லை.கண்களே மூளையாய் மாறி கால்களுக்கு தெரிவித்திருக்கும் போல .குடும்பக்கட்டுபாட்டுக்கு பிறகும் ஆயிரம் ருபாய் வாங்க தன் கைகள் நடுங்கவில்லை.

ஆயிரத்து இருநூறு ரூபாயும் குமாரசாமியின் கால்களும் மனைவி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை நோக்கி விரைந்தன .

குமாரசாமி ஒரு விஷயத்தில் வருத்தப்பட்டான்.உயிர்கள் விளையும் மண்ணிலும், என்னிலும் மண்ணுக்கு மட்டும் ஏன் மதிப்பில்லை என்று.

தன்னை அறியாமல் கைகள் தரைக்காரைகளை நோண்ட,

“கமலத்தோட யாரவது வந்திருக்கீங்களா?” குமாரசாமியின் தலை தூக்கியது.

“எல்லாம் முடிஞ்சுடுச்சு ,நீங்க ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போய்டலாம்”

எட்டி நோக்கிய குமாரசாமிக்கு தெரிந்தது தன மனைவியின் கட்டை விரல் இரண்டும் கட்டிய உடல்.

ஆயிரத்து இருநூறு ரூபாயும் குமாரசாமியும் கண்ணீரால் நனைந்து தரையில் சிதறினர் .

வெள்ளை கோட்டு அணிந்த தெய்வங்கள் தரையில் சிதறிய ரூபாய்களை ‘மட்டும்’ பொறுக்கிக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *