குப்புச்சியும் கோழிகளும்

 

தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான்.

அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால், இடம் விட்டு இடம் பெயரும் இவள் கணவன், ஒரு நாள் ஆள் அரவமில்லாத ஓர் இடத்தில் ஏதோ இடித்து உதவிக்கு ஆள் இல்லாமல் நிர்க்கதியாய் உயிர் விட்டிருப்பான் என்ற ஆரூடம், சாவு வீட்டில் பேசப்பட்டிருந்தது.

நாலு பேர் கூடிவிட்ட இறப்பு வீட்டில் சாங்கியத்துக்காக அழலாம் என்றாலும், அந்தப் பாழாய்ப் போன கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட உதிர்க்க முடியாமல் போனது அவளுக்கு மட்டும் அதிசயமாய்ப் படவில்லை.

வேலைதேடி தனியே விட்டுப்போனப்பிறகு குப்புச்சிக்கு என்ன நடந்தது? அவள் எப்படி இருந்தாள்? என்ன ஆனாள்? அவளை விட்டுப் போனபோது இருந்த பரிசுத்தம் இப்போதும் இருக்கிறதா ? என தெரிந்து கொள்ளும் கரிசனை கூட இல்லாத புருஷனை நினைத்து எப்படி அழுவது? ஒவ்வொரு வேளையும் தவறாமல் சோறு போடுவதற்கு உழைக்கும் வக்கனை இல்லாதவனுக்காக கண்ணீர் எப்படி வழியும்?

உடலை மறைக்கவாவது வருஷா வருஷம் வந்து விட்டுப் போகும் தீபாவளிக்காகவாவது துணிமணி வாங்கித் தர வக்கில்லாத புருஷனுக்காக எப்படி இயற்கைத் திவலைகள் வெளியாகும்? மனுஷியாய்ப் பிறந்து இவனைக் கட்டிக் கொண்ட பிறகு மனுஷியே அல்லாத ஏதோ ஒரு ஜடப் பிறவியாய் உருமாறிப் போன குப்புச்சிக்கு எங்கிருந்து வரும் அந்தக் கண்களில் ஊற்று? கணவனை மறந்து போய்விட்டது உள்ளிருக்கும் ஜீவன்.

கணவனின் அந்த புத்திச்சுவாதினம் இல்லாத நிலைக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அந்தச் சம்சுவின் ஆதிக்கம் அவனோடு போயிருந்தால்தான் தேவலை. அந்த ஆதிக்கத்தின் சுகானுபவத்தை குப்புச்சியின் மேலுமல்லவா செலுத்தி விட்டுப் போயிருந்தான்.

ஒருநாளைக்கு மருந்து மாத்திரை மாதிரி மூன்று வேளை ஊற்றிக் கொள்ளவில்லையாயின் அவளின் உடலில் உண்டாகும் நடுக்கம், பார்வையில் உண்டாகும் ஒளிக்குறைவு , அவள் வாழ்வின் சுவையே அற்றுப் போனவளாய் உயிர் வாழ்வதன் அர்த்தத்தையே அழித்துக் கொண்டவளாய் ஆக்கிவிடுகின்றது. அது வேண்டும் அவளுக்கு அவசியமாய்.

என்ன புண்ணியம் செய்தாளோ! இப்போது அவளுக்கு அது தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. நாளுக்கு மூன்று வேளை உணவும் தவுக்கே வாங்கி வந்து கொடுத்துவிடுவான். உணவோடு நெகிழிப் பையில் அதுவும் கிடைத்து விடும். தீபாவளியோ சீனப்புத்தாண்டோ வருஷத்துக்கு இரண்டு முறையாவது உடம்புக்கு துணியும் வந்து கொடுத்து விடுவான்.

மனசுக்குள் கணவனை விட இவன் எவ்வளவோ மேல் என்ற ஆத்ம திருப்தியில் அவள் நிரந்தரமாய் இந்தக் கோழிப் பண்ணையில் குடிபுகுந்து விட்டாள்.

பண்ணையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளுக்கு இவள் ஒருத்தி மட்டுமே ஆதாரம். கோழிகளுக்குத் தீனி போடுவதிலிருந்து – நீர் ஊற்றுவதிலிருந்து – அவை ஏற்றுமதியாக்கப் படும் வரை அவற்றின் நலனபிவிருத்திக்கெல்லாம் இந்தக் குப்புச்சியை விட்டால் வேறு ஆள் இல்லை.

குப்புச்சி ஒருத்தியே போதும், தவுக்கேவின் வங்கி இருப்பை வலிமைப்படுத்துவதற்கு. இரவில் அவளுக்கும், கோழிகளுக்கு காவலாய் இருக்கும் மூன்று அல்சேஷன் நாய்களுக்கும் சேர்த்தே வந்து விடும் உணவு.

தவுக்கே வந்து பார்த்துவிட்டுப் போகும் போதெல்லாம் “இன்றைக்கு வேறு ஏதும் வேண்டுமா? கோழிகளுக்குத் தீனி போதுமா…? நாய்களுக்கு வேறு ஏதும் வேண்டுமா… உனக்கும் ஏதும் தேவைப்படுகிறதா?” என்று அவைகளின் தேவைகளோடு இவளுடைய தேவையையும் கேட்கும் கரிசனைக்காக அவள் மனம் மகிழ்ந்ததுண்டு. அதனால்தான் இவன் வேற்று சாதிக்காரனாய் இருந்தாலும் கணவனை விட இவன் எத்தனையோ படி மேல் என்று நினைத்தாள். இப்படி கணவன் அவளை ஒரு நாளாவது கேட்டிருப்பானா? அந்தத் தவுக்கேயின் கரிசனை அத்தோடு முடிந்து விடுவதில்லை!

அவள் கோழிகளுக்குத் தீனி போடும் போதும், பண்ணையைச் சுத்தம் செய்யும்போதும் பக்கத்திலிருந்து பார்வையிடும் வேளையில்,

“குப் சீ… கமு ரஜின்… கெலிஜா, வா… சுக்கா குப் சீ…” என்று சொல்லும் போதும், ஒரு முதலாளி என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி இவளை முகமனுக்காகப் பாராட்டும் போது அவள் உள்ளபடி நெகிழ்ந்தே போகிறாள். தவுக்கேயின் மேல் அவளுக்கு இருந்த மரியாதை விஸ்தாரம் காணுகிறது!

“குப் சீ… வா தா போலே பிச்சாயா… லு அடா அன்னாம் ஓலாங் அனாக் ஓ…” என்று தவுக்கே தன் வாளிப்பான – ஆறு பெற்றும் உடைந்து விடாத மேனியைப் பார்த்து தரும் சான்றிதழ்கூட அவளை மெல்லியதாய் கிரங்க வைத்ததுண்டு. இப்படியெல்லாம் பேச்சை அச்சாரமாய் ஆரம்பித்தானானால் அன்று நேரங்கழித்துத்தான் தவுக்கே தன் வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாகிவிட்ட நிகழ்வுகளாகி விடுகிறது!

இந்த அரணில்லாத வாழ்க்கையை விட்டு அவள் போக வேண்டிய அவசியமுமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கை போகத்திலிருக்கும் காரணத்தால் யாருக்கும் நிர்ப்பந்தமாக வேண்டும் என்ற அழுத்தத்திலும் அவள் இல்லை.

விடுதலை உரிமை அறவே மறந்துபோன கோழிகளுடன் இருப்பது ஒருவகையில் அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. கதவைத் திறந்து விட்டு வெளியே விரட்டினாலும் அடித்துத் துரத்தினாலும் ஓடத் திராணியில்லாமல் அப்படியே மண் புற்று மாதிரி ஸ்தம்பித்துப் போய் நிற்கும் இந்தக் கோழிகளுடனான அலைச்சலில்லாத வாழ்க்கை பழகிப்போயிருந்தது.

ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதுகூட தவுக்கே ஞாபகப்படுத்தும்போது, பொறியைத் தட்டுகிறதே… அதோடு சரி…

புருஷன் என்பவன் செத்துப் போன பிறகு அங்கேயும் போய் இருந்து பார்த்துவிட்டு வந்துவள்தான்! மகன் ஒவ்வொருவனும் சுயமாய்க் கல்யாணம் என்கிற பேரில் தான் விரும்பிய கழிசடைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

குப்புச்சி அவர்கள் வீட்டுக்குப் போய் பார்த்தபோதுதான் தெரிகிறது வண்டவாளம். அப்பனைப் போல் ஆண் பிள்ளைகள் ஐந்து பேரும் சம்சுக்கு ‘சலாம் போடும்’ சங்கதி. இந்தப் பழக்கம் கூட அப்பனால் வந்ததாகக் கூட இருக்கலாம்.

மருமகள்களுக்கு முன்னால் தன் சுதந்திரம் பறிபோனது… மகன்கள் முன்னாலேயே அதுகள் மாமியாரை மரியாதையில்லாமல் நடத்தியது… வாய்ச்சண்டை, குடுமிப்பிடி சண்டையாகி… பிறகு… ‘ச்சே… இந்த நாய்கள் முன்னால் இருப்பதே கேவலம்; இதைவிட பிச்சையெடுத்து உண்ணலாம்’ என்று ஓடி வந்தவள்தான். எப்போதோ கணவனும், இவளும் கொஞ்ச நாள் வேலை செய்து வயிறு வளர்த்தது ஞாபகம் வரவே இந்தக் கொழிப்பண்ணைக்கே மறுபிரவேசம் செய்திருந்தாள்.

இங்கே சகலமும் சாதகமாகும் போது அதுகள் வாசற்படி துச்சமாய் இருந்தது. ஆறாவதாக இருக்கும் பெண் பிள்ளை சாரதாவின் நிலைதான் மனதுக்குள் தேய்ந்த பிம்பமாய் வந்து போய் விடுகிறது! ஐந்து ஆண் பிள்ளைகளில் யாராவது ஒருவன் வீட்டில் இவளுக்கு சோறு கிடைக்காமலா போய் விடும் என்ற ‘இருக்கட்டும் பரவாயில்லை’ என்ற எண்ணம் அவளைத் திருப்தியடையச் செய்திருந்தது. மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய்விடுவான்? அதுகூட அவள் போதையில் இருக்கும்போது அற்றுப் போய் விடுகிறது.

பண்ணையில் எல்லா வேலைகளும் முடியும் போது சூரியன் மெதுவாய் மலைகளுக்கிடையே அமுங்கி மறைந்து விடுகிறான். அந்தக் கோழிப் பண்ணையில் அக்கடா என்ற பெருமூச்சோடு உட்காரும் போது, அன்றைக்கு வளைந்து, நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ததன் வலி தெரிகிறது. அவள் குடி வைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடிசைகூட கோழிப் பண்ணைக் கூண்டுகளில் ஒன்றா என்று சந்தேகப்படத் தோன்றும்.

தகரக்கூரை. அறைகளே இல்லாது ஒரே ஒரு படுக்கையும், அவ்வப்போது அவசியம் ஏற்படும் போது தண்ணி போடுவதற்கு விறகடுப்பும், நாற்பது வாட் பல்பும், கோழிகளுக்குப் போடப்பட்ட குழாய்களில் ஒன்றிலிருந்து குடித்து குளித்துக் கொள்ள வேண்டிய சூழல்தான் அவளுக்கு.

பிள்ளைகள் வீட்டுலிருந்து ‘ச்சீ’ வாங்கி காலத்தைக் கழிப்பதைவிட, இந்தக் கோழிகளினால் வரும் நாற்றம் மேல் என்பதாலேயே இது எவ்வளவோ தேவலாம் என்றிருந்தாள்.

குப்புச்சியின் வாழ்க்கை பிறர் கண்ணுக்கு எவ்வளவுதான் மோசமாகப்பட்டாலும் அவளுக்கு இந்த வகை வாழ்க்கை நிலையே திருப்தியைக் கொடுத்திருந்தது.

ஒருநாள் காலை பண்ணையில் பெரிய லாரி ஒன்று வந்து முகாமிட்டிருந்தது. அந்த லாரியிலேயே தவுக்கேயும் தொத்திக் கொண்டு வந்திருந்தான். முதல் நாளே கோழிகளுக்குத் தீனி அதீதமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தான்.

லாரி வந்த கொஞ்ச நேரத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து இறங்கினர். குப்புச்சியின் மூத்த மகனும் அவள் கடைக்குட்டி சாரதாவும்தான் என அடையாளம் கண்டுக்கொண்டாள்.

சாரதாவின் கையில் துணி பிதுங்கிய ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது. குப்புச்சி புரிந்து கொண்டாள்.

“அம்மா… இந்தக் கழுதைய நீயே பாத்துக்கே.. இது அடங்காது… என் பொண்டாட்டிக்கும் இதுக்கும் ஒத்து வரல. தம்பிங்க வூட்லேயும் சண்ட சச்சரவானதால நான் கொண்டாந்து வெச்சுப் பாத்தேன்.. சரிப்பட்டு வரல” என்று விறைப்பாய் நின்று கொண்டிருந்தான் மகன்.

குப்புச்சி கோழிகளுக்குத் தீனி போடுவதை நிறுத்தி சற்று ஏறிட்டுப் பார்த்தாள்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் தெளிவாய்த் தெரிந்தது. இந்தப் பதினைந்து பதினாறு வயதில் அவள் தோற்றம் ஒரு பூரண வடிவெடுத்து பெண்ணாய் வார்க்கப் பட்டிருந்தாள். சிவந்த மேனி, இடை வரை நெளிந்து நிற்கும் கூந்தல், எவரையும் ஈர்க்கும் விழிகள், மொட்டெடுத்த புதிய மலர்ச்செடிபோல மனதுக்கு ரம்மியம் தந்து கொண்டிருந்தாள். இருக்கும் நிலையில் இவளை எப்படி வைத்து பார்த்துக்கொள்வது என குழப்பமும் அச்சமும் மனதில் பரவியது.

மூத்த மகன் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான். அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவன் வந்த வழியே திரும்பி விட்டான்.

லாரியில் கோழிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

“இனி சாப்பா…?” தவுக்கே அருகில் வந்தவனாய் தீர்க்கமாய்ப் பார்த்தான் சாரதாவை.

“சாயா அனாக்…” என்றாள்.

“வா ச்சாந்திக் மாச்சாம் லு லா!” என்று தவுக்கே கூறும் போது அவனுள் இளமை நரம்புகள் நர்த்தனம் ஆடுவது குப்புச்சிக்கும் புரிந்தது. அவன் பார்வை சாரதாவை விட்டு விலகவில்லை .

கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கெட் விற்பனையின் அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சாரதாவைப் பராமரித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் தௌகேவைப் பார்த்துச் சிரித்தாள் குப்புச்சி. 

தொடர்புடைய சிறுகதைகள்
அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம். அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? ...
மேலும் கதையை படிக்க...
அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை துறந்து திடீரென அம்மண கோலம் பூண்டது போல சிமிந்துத் தரை விரிந்து திறந்தபடி கிடந்தது. வெற்றுத் தரையில் முற்றிய மாலை ...
மேலும் கதையை படிக்க...
நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் ...
மேலும் கதையை படிக்க...
இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது. ...
மேலும் கதையை படிக்க...
கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “இது 1001வதா” என்பர். ...
மேலும் கதையை படிக்க...
தொடுதூரம்
தரிசனம்
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
வழித்தடம்
புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)