குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

 

“”என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு அவஸ்தையா இருக்கு பாத்தியா?” டை முடிச்சை லூசாக்கி, மேல் பொத்தானை கழட்டி, காற்று வாங்கிக் கொண்டான் மனோகர்.
மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான், மணி பதினொன்று… இரண்டு மணிக்கு சைட்டில் இருந்தாக வேண்டும். சென்னைக்கும், திருப்பந்தளத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டாகி விட்டது.
“”சாரி சார்… நேத்துக் கூட நல்லாத்தான் இருந்தது… வெயிட் பண்ணுங்க சார்… ரெடி பண்ணிடறேன்.” ஸ்பேனருடன் நகர்ந்தான்
சுந்தரம்.
குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!கொஞ்சம் முன்னே நடந்து, தெரு முனையில் வந்து நின்றான் மனோகர். பக்கவாட்டில் இருந்த அந்தப் பெரிய மளிகைக் கடை, சற்று கவனம்
ஈர்த்தது. சின்ன வயசில் திருத்தணியில் இருந்த போது, இவர்களுடைய வீட்டிற்கு பக்கத்தில், இதுபோன்றதொரு மளிகைக் கடை இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது இன்னும். குதிரை முத்து மளிகை – கொஞ்சம் வித்தியாசமான பேர் பலகை, நீல நிறத்தில், அங்கங்கே திட்டுதிட்டாய் பெயின்ட் உதிர்ந்து தென்பட்டது.
கை வைத்த அழுக்கு பனியன்; மேடிட்ட தொந்தி வயிறு; அழுக்கான கரை வேட்டி; தடித்த ப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி; வட்டமான சொட்டை தலை; காதிடுக்கில் பேனா; நிச்சயம் அவர் பெயர் தான் குதிரை முத்தாக இருக்க வேண்டும்.
காதில் சொருகி இருந்த பேனாவை எடுத்து, கையில் இருந்த அட்டைக் கணக்கை திருத்திக் கொண்டு இருந்தவர், மனோகர் வருவதைப் பார்த்ததும்…
“”சுப்பு… அண்ணாச்சி வர்றாக, என்ன வேணும்ன்னு கவனி…” என்றார்.
கடைப் பையன் சுப்பு எழுந்து வருவதற்குள், மனோகர் தயக்கமாய், தான் சாமான் வாங்க வரவில்லை, வண்டி ரெடியாகும் வரை கொஞ்சம் இளைப்பாற வந்ததாக கூறவும், குதிரை முத்து, தெத்துப் பல் தெரிய புன்னகைத்தார்.
“”அதனால என்ன அண்ணாச்சி, சுப்பு… அய்யாவுக்கு நாற்காலியை எடுத்துப் போடுவே…”
உப்பு மூட்டைக்கும், பருப்பு மூட்டைக்கும் நடுவே, நிழல் கொட்டிக் கிடந்த இடத்தில், நாற்காலி போடப்பட்டது. உப்பு, புளி, மிளகாயின் பலசரக்கு வாடைக்கு மத்தியில், நிதானமாய் அமர்ந்து கொண்டான் மனோகர்.
“”என்ன அண்ணாச்சி, மூணு நாளாச்சு, சாமான் கொண்டாறச் சொல்லி லிஸ்ட் குடுத்து; இன்னும் கொண்டாந்து தரல… இப்ப எல்லாம், அம்புட்டு சூப்பர் மார்க்கெட்டுலயும் குளுகுளுன்னு மிஷினை போட்டு வச்சு, நம்பள சாமான் எடுக்க சொல்றாங்க… இலவசமா வீட்டுலயே கொண்டாந்து இறக்குரானுக… ஏதோ, நம்ப அண்ணாச்சி கடையேன்னு வந்து நின்னா, ரொம்பதான் தெனாவட்டா போச்சு…” நடுத்தர வயசுப் பெண்ணொருத்தி, அண்ணாச்சியிடம் வந்து உரிமையாய் கோபித்து கொண்டாள்.
“”டேய் சுப்பு… விக்ரம் அம்மா எம்புட்டு கோவுச்சுக்கறாக பாரு… ஆக்கங்கெட்ட கூவடா நீ… இன்னைக்காச்சும் எப்படியும் கொண்டாந்து போடறேன்னு நம்பிக்கையா பேசுவே…” சுப்புவை கடிந்து கொண்டார் அண்ணாச்சி.
“”விக்ரம் அம்மா கோவிச்சுக்கிடாதீங்க… அண்ணாச்சி கடையில குளுகுளு மிஷின் இல்ல… ஆனா, அண்ணாச்சி வார்த்தை குளுகுளுன்னு இருக்கும் எப்போதும். நீங்க சொல்ற கடைகள்ல, எல்லா வசதியையும் காட்டி, அந்த காசை பொருள்லயில ஏத்திப்புடறான் பயமக்க… நம்பகிட்ட அப்படியா? இப்போ பிளாஸ்டிக் பைக்கும் காசு போடுறானாம்ல…” வாய்கொள்ளா சிரிப்போடு, சூழலின் சூடு தணித்தார் அண்ணாச்சி.
“”அதுசரி… இம்புட்டு வௌரம், வியாக்யானம் பேசாட்டி, தூத்துக்குடியில இருந்து வந்து, சென்னையில குப்பை கொட்ட முடியுமாக்கும்,” விக்ரம் அம்மா கோபம் தணிந்து வாயாட ஆரம்பிக்க, சாமான் வாங்க வந்த நபர், அவர்கள் பேச்சில் ஐக்கியமானார்.
“”என்னது… இது சென்னையா? நாலு மாவட்ட தூரத்தை ஒண்ணாக்கி, சென்னை புறநகர்ன்னு சொன்னா, நாங்க ஒத்துக்கிடுவமாக்கும்.” அந்த நபர் சொல்ல, வாய்விட்டு சிரித்தனர் மற்றவர்கள்.
“”அண்ணாச்சி… புளி அரை கிலோ கட்டுங்க…” இன்னொரு பெண் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
“”புளி எதுக்கு… சாம்பாருக்கா? நாட்டு தக்காளி ரெண்டை கூட பிசைந்து ஊத்து… சாம்பாரு தூக்கலா இருக்கும்… ஜெர்மனில பண்ணின ஆராய்ச்சியில, புளி சேர்த்தா புத்தி கெட்டு போகும்ன்னு நேத்து ராத்திரி பி.பி.சி.,ல சொன்னாங்க. சுப்பு… அக்காவுக்கு பழமா அரைகிலோ தக்காளி கட்டு.”
“”ஏன்… புளி இல்லையாக்கும்?”
“”சாயந்தரம் மூடை வருது…”
“”அதானே பார்த்தேன்… இல்லைங்கற வார்த்தை, உம்மகிட்ட வராதே.”
“”அண்ணாச்சி… கல் உப்பு பாக்கெட் குடுங்க…” மேசை உசரம் கூட இல்லாத பொடியன் வந்து நின்றான்.
“”டேய் அருணு… பாக்கெட் உப்பை விட, அண்ணாச்சி கடையில அழுக்கு கலர்ல இருக்கிற உப்புத்தேன் ஆரோக்கியம்ன்னு, அம்மாட்ட சொல்லு…” உப்பை பொட்டலம் கட்டி, பொடியனிடம் கொடுத்தனுப்பினார்.
“”சில்லறை வர்த்தகத்தில், அன்னிய முதலீடுன்னு பேச்சு அடிபடுதே… அப்படி ஏதும் வந்துட்டா அண்ணாச்சி, தூத்துக்குடி கடல்ல மீட்டர் போட் ஓட்ட போயிடுவீகளா?” தான் வாங்கிய பொருளை சரிபார்த்தபடி, அண்ணாச்சியை வம்புக்கு இழுத்தார் ஒருவர்.
“”அண்ணாச்சி வாழைப்பழம் எவ்வளவு?”
“”ரெண்டு அம்பது…”
“”அதெல்லாம் ஆவறதுக்கு இல்ல… ரெண்டு ரூவா மேனிக்கு, அஞ்சு குடுங்க. இருங்க… இருங்க… நானே பிச்சுக்கறேன்.” தலைக்கு மேல் தொங்கிய தாரில், தனக்கு பிடித்த பழங்களாய் பதம்பார்த்து பிய்த்துக் கொண்டு சென்ற பெண்ணைக் காட்டி, தன்னிடம் கேள்வி கேட்ட நபரிடம் கூறினார் அண்ணாச்சி.
“”ரெண்டு ரூவா பழத்தைக் கூட, அழுத்தியம் பண்ணி வாங்கினாத்தான் நம்ம மக்களுக்கு தூக்கமே வரும். அவுகளுக்கு பழத்தை எடைபோட்டு வாங்க புடிக்குமா? நாப்பது வருஷமாச்சு, இங்கன பொழைக்க வந்து… தாயாப் புள்ளையா நிக்கோம். பச்சையும், சிவப்புமா போர்டு மாட்டிட்டு வந்த சூப்பர் மார்க்கெட்டுகள பாத்தப்ப, லேசா புளி கரைச்சது நிசம்தான்… ஆனா, இப்ப எல்லாம் போச்சு.”
அண்ணாச்சி வெகு யதார்த்தமாய் தான் சொன்னார். அவர் வார்த்தையின் நிசம், மனோகரின் மனதை தைத்தது.
லே – அவுட் என்ற அரக்கனுக்கு அடிமையாகி, வேளாண் தொழில் வீணாகிப் போனது ஒரு பக்கம் என்றால், அண்ணாச்சி சொன்னது போல், பச்சை, சிகப்பு எழுத்து சூப்பர் மார்க்கெட்டுகளால், இவர் போன்ற சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடுமோ… அவனும் இதுபோன்ற வேலைக்காகத் தானே வந்திருக்கிறான்.
திருப்பந்தளத்தில், வணிக அங்காடி அமைப்பதற்கான பணிக்காக, இடம் பார்ப்பதற்கு அமைக்கப்பட்ட டீமிற்கு, மனோகர் தான் தலைவராய் இருக்கிறான். அவன் தேர்வு செய்யும் இடத்தில் தான், அந்த பிரபல வணிக நிறுவனத்தின் தொடர் அங்காடி அமையும்.
குதிரை முத்து அண்ணாச்சியை போல், பாரம்பரியமாய் வணிகம் செய்கிறவர்களுக்கு, நிச்சயமாய் அந்த அங்காடிகள் வெகு சவாலாகத்தான் அமையும். காலப்போக்கில், இதுபோன்ற கடைத்தெருக்களே கூட இல்லாமல் போகலாம்… வயல் செத்துப்போன கிராமங்கள் போல, வர்த்தகம் செத்துப்போன கடைத்தெருவும் அவலம்தானே…
நிச்சயம் இவன் ஒருவனால் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்திட முடியாது… ஆனால், இவனுடைய சிந்தனை, மற்றவர்களின் மனங்களில் ஏற்படும் வரைக்கும் தள்ளிப்போட உதவலாம் இல்லயா?
எழுந்து கொண்டான்… அண்ணாச்சியிடம் விடை பெற்று, நாலடி தான் நடந்திருப்பான். மொபைல் போன் சிணுங்கியது… டீம் ஹெட் தான்…
“”என்ன மனோகர்… இடம் பாத்துட்டீங்களா? உங்களுக்கு பிடிச்சிருக்கா?”
“”ம்ம்… பார்த்தேன் சார்… ஆனா, நாம நினைக்கிற மாதிரி இடம் அமையல சார்… தவிர, இது பெஸ்ட் மார்க்கெட் பிளேசாகவும் தெரியல… நாம வேற இடம் பார்க்கலாம் சார்…” அமைதியாய் சொல்லி விட்டு, அண்ணாச்சியை திரும்பி அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான். அண்ணாச்சி வழக்கம்போல தம்முடைய நோட்டு புத்தகத்தில் மூழ்கி இருந்தார்… அடுத்து வரப்போகிற வாடிக்கையாளரை எதிர்பார்த்து.

- எஸ். பர்வின் பானு (செப்டம்பர் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்தபோது, சித்திக் பாய் தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால், அப்பா மல்லுக்கு நிற்பார். அல்லது ...
மேலும் கதையை படிக்க...
கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை. திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது. திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..” கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார். ”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட ...
மேலும் கதையை படிக்க...
அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார் ஃபிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாயிரத்து நூற்று பதினாறாம் வருடம் ஜனவரி முதல் தேதி புது வருட கொண்டாட்டத்தில் இருந்த சுசில், தன் நண்பன் பிஜோவிடம் கேட்டான். “ஹாய் பிஜோ!! உங்க அப்பா அம்மாவ போய் பார்த்தியா?” “நோ... சுசில். இன்னைக்கு பார்ட்டி இருக்கில்ல. அதான் போகல. அடுத்த விசேசத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
1 நான் உடல் நீ சிறகு இது கவிதை 2 வார்த்தைகளோடு மிதக்கிறது எழுத்தாளனின் பிணம் 3 இறந்த பறவையின் ஆவி சுற்றி வருகிறது பூமியை 4 கனவுகண்டு கொண்டிருக்கிறபோதே தூங்கிவிட்டேன் 5 கல்லறை நிழலில் சீட்டாடுகிறார்கள் 6 மரங்களை எனக்குப் பிடிக்கும். மர நிழலில் ஓய்வு கொள்ள முடிந்தாலும் சற்று நிமிர்ந்தால் ஆகாயபாத்யதை என்பது தனி அனுபவம். விருட்சங்களில் காலம் தங்கி ஓய்வு ...
மேலும் கதையை படிக்க...
லுங்கி
ஆசை – ஒரு பக்க கதை
எது துரோகம்?
எங்கே என் தலைமுறை
வசீகரப்பொய்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)