குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 9,813 
 

நெல்லில் எழுதும் பெயர் நிலைத்திருக்கிறதோ என்னவோ ஆனால் சின்ன வயதில் வைக்கும் பெட் நேம் நிலைத்து விடுகின்றன, சாகிற வரை சுண்டு என்ற சுந்தரவடிவேலு, டக்லூ என்கிற .டக்லஸ், மண்டூ என்கிற மண்டோதரி……. இப்படி நினைவில் ஆணி அடிக்கப்படுகிறது. தி ஹிண்டுவில் வரும் ஆபிச்சுவரி வரை நினைவு வைக்கப்படுகிறது .

இதில் விதி விலக்கு பத்மினி. பிறந்த போதே எல்லோரும் மூக்கில் விரல் வைத்தார்கள்.. மூன்று கேஜிதான் வெயிட் என்றாலும் பம்பளிமாஸ் போல நிறைய மாஸ் உடன் இருந்தாள்.

குண்டாக இருந்தாலும் பார்க்க அழகாக இருந்த்தாள். பத்மினியின் மிகப்பெரிய பிராப்ளம் அவளால் ஒரு வயது ஆனபின்னும் குப்புறப் படுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் வளர்ந்து ஒரு வழியாக் நடக்க ஆரம்பித்தாள். .

அவள் தெருவில் பப்பிளி ஒரு ஸ்பெஷல் குழந்தை.

“மெது மெதுன்னு எவ்வளவு சாஃப்டா இருக்கு பாரேன்”

”சிரிச்சா கன்னத்தைக்கடிச்சு சாப்பிடலாம் போல”

”நம்ம பப்பிளி தொப்பையில சாஞ்சுண்டா சுகம்மா தூங்கலாம்.”

அவளுக்கு வாழ்க்கை சுகமாகத்தான் போயிற்று எட்டு வயது வரை.

பப்பினியின் அக்காவிற்கு கல்யாணம். வீடே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து, சமையலுக்கு அத்தை, முறுக்கிப்பிழிவதுக்கு மாமி, தையலுக்கு சித்தி என்று குடும்பமே ஏதோ வேலை செய்தபடி இருந்த்து.

“ என்னடி பொண்ணுக்கு ப்ளவுசு தெச்சு முடிச்சுட்டியா? இப்ப என்ன பெட்டிகோட்டா ?:”

”இல்லடி பப்பிளி டிரைன்ல மேல் பர்த்துல படுத்த்துக்க வேண்டி வந்தால்..அதான் அவளுக்கு கால் வைத்த ஜட்டி தெக்கிறேன்.”

பப்பிளி அன்றுதான் சுய பச்சாதாபத்தில் முதல் முதல் நெளிய ஆரம்பித்தாள்.

இந்த பத்மினி Fatty என்ற அடையாளப் பெயர் பெற ஆரம்பித்த்து. அவள் மிட் ஸ்கூலில் வேறு ஒரு பள்ளிக்கு மாறிய போது.

”யார் அது புது அட்மிஷன்..வேர் ஈஸ் தட் கேர்ள்?”

புதுப்பெயர் சூட்டப்பட்டது.

”Miss! this fatty miss.!”.

அன்றிலிருந்து பத்மினியின் பட்டப்பெயர் fatty

”ஏய் fatty! டனல் ரிலேக்கு என் முன்னால நிக்காத. 70 எம் எம் ஸ்க்ரீன் மாதிரி மறைக்குது!”

”மிஸ் இன்னிக்கு ஸ்கூல் பஸ் ப்ரேக் டௌன், அதான் நாங்க லேட். இந்த fattyதான் பஸ் டயர்மேல இருக்கற சீட்டுல உட்கார்ந்தா. டயர் டணால்னு வெடிச்சுடுத்து!”

”Pulling the rope க்கு fatty எங்க சைடுதான். நாங்க தான் முதல்ல சொன்னோம்”

”மிஸ்! fattyக்கு தனி பெஞ்சு கொடுங்க! எங்க யாருக்குமே அதுல இடம் இல்லை”

இப்படியான அனுபவங்கள்.

ஹைஸ்கூலில் மறுபடி மாற்றம். மறுபடி பெயரும் மாறியது. ”குண்டூஸ்”!

”ஏங்க பத்மினிக்கு ஏதானும் ப்ராப்ளம் இருக்குமா? பத்தாவது வந்தாச்சு இன்னும் உட்காரல்லியே?”

”சரி டாக்டர்கிட்ட கான்பிக்கலாம்”

”ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் பப்பி fat னாலதான். இந்த டிலே! தானா சரியாகிவிடும். உடம்பும் வெயிட் குறஞ்சுடும்”

இந்த வார்த்தைகளை நம்பி பத்மினியும் கனவு காண ஆரம்பித்தாள். கனவில் வித விதமாக மினி ,மாக்ஸி, மிடி ஜீன்ஸ்… ம்ஹும் எல்லாம் கனவில்தான்.

காலம்தான் போயிற்றே தவிர குண்டூஸ் அப்படியேதான் இருந்தாள்.

அப்போதுதான் அவளுக்கு கடவுள் மேல் கோபம் வர ஆரம்பித்தது.

“ஏன் கடவுளே என்னை மட்டும் இப்படி குண்டா வெச்சிருக்கே?”

அந்த வயசுக்கான ஆசைகள் வர விடாமல் உடம்பு பயமுறுத்தியது. ரொம்ப நல்ல பெண்னாய் காலேஜ் சேர்ந்து குண்டூஸ், பொத்துமினி என்ற பட்டப்பெயர் பெற்றாள்.

“ஏங்க இவளை எப்படி கல்யாணம் பன்னிக்கொடுக்கப்போறோம்? நிறைய செலவு செஞ்சாலும் ஆள் கிடக்குமா?”

”மேடம்! இந்த தடவை ப்ளட் டொனேஷன் எங்க டீம் தான் ரெகார்ட். நிச்சயமா, நம்ம பொத்துமினி கிட்டெர்ந்து லிட்டர் கணக்குல எடுக்கலாம்!”

”எனக்கு ஹீமாக்க்ளோபின் ரொம்ப குறைவு. பாக்கத்தான் குண்டாய் இருக்கேன்”

ஹீனமான குரலில் பத்மினி சொன்னதை யாரும் கேட்கும் நிலையில் இல்லை.

மேக்னாவுக்கு சுரேஷ், சந்தியாவுக்கு பிரபு எல்லோருக்கும் யாரோ யாரோ என்று நிச்சயமானபோது பத்மினி இரவு முழுவதும் அழுதாள்.

கடவுள் மேல் மிகவும் கோபம் கொண்டாள்.காலையில் விளக்கேற்றுவதை விட்டாள். பிள்ளையாருக்கு தலையில் குட்டிக்கொள்வதை மறந்தாள்

”ஏன் எதற்கு எனக்கு மட்டும்? கடவுளே! உனக்கு கண்ணும் இல்லை மனசும் இல்லை”

”ஏய் பத்மினி நம்ம குலதெய்வம் கோவிலுக்குப்போய் உன்னை மாவிளக்கு போடச்சொல்லி ஜோசியர் சொல்லியிருக்கார். வா, ஒரு எட்டு நம்ம கிராமத்துக்குப்போய்விட்டு வந்துவிடலாம்”

அவளுக்கு எரிச்சல், ”ஆமா இது ஒண்ணுதான் பாக்கி”

“அம்மா நீங்க இங்க உக்காருங்க, இந்தம்மா பின் சீட்டில் உட்காரட்டும்”

பின் சீட்டில் ஆறு பேரோடு உட்காரவைக்கப்பட்டாள்.

”ஐய்யோ!” அலறலுடன் பின் சீட்டில் இருந்தவர்கள் முன்னே போய் விழுந்தனர், பஸ் சடன் ப்ரேக் போட்டது

எல்லோருக்கும் கை, கால், இடுப்பு என்று சரமாரியாக ஃப்ரக்சர். பத்மினி சௌகரியமாக படுத்துக்கிடந்தாள். அவள் மேல் ஒரு சின்ன குழந்தை சிரித்துக்கொண்டே அடிபடாமல்!

”அம்மா அந்த காளி அம்மனே நீதாம்மா. எம்புள்ளய காப்பத்திட்டீங்க. ஆத்தா உனக்கு பால் அபிஷேகம் கூடச்செய்யலாம்”.

”அம்மா மகமாயி எம்புள்ளய காப்பாத்தின காளி ஆத்தா”

இப்படி இன்னும் நிறைய பெயர்கள் இடப்பட்டது

பத்மினி புரிந்து கொண்டாள். கடவுள் எது செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு காரணம் இருக்கும்.

மாவிளக்குப்போட சந்தோஷமாக மீண்டும் பஸ் ஏறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *