கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,764 
 

உமாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்?

உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்!

ஆபீஸ், வீடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம்… இவற்றுக்கு இடையே உழைத்து, நினைத்ததைச் சாதித்து, ஓய்வும் பெற்றுவிட்டாள்.

இதோ, இன்று… பெரியவன் சுரேஷ் அமெரிக்காவில் இருக்கிறான். பெரிய சயின்டிஸ்ட். அமெரிக்கப் பெண்ணை மணந்து, பேரும் புகழுமாக இருக்கிறான். இளையவன் ரமேஷ§க்கு லண்டனில் மேல்படிப்புக்காக ஸ்காலர்ஷிப் கிடைத்து, பதினைந்து நாட்களுக்கு முன்புதான் லண்டன் சென்றான்.

“நீ தனியா இருக்கணுமேம்மா!” என்று கவலைப்பட்டவனுக்குத் தைரியம் சொல்லி, சந்தோஷமாக விடைகொடுத்து, விமானம் மறையும் வரை பார்த்துவிட்டு வந்த நாளிலிலிருந்து அவளுக்கு உறக்கமில்லை.

உமா எழுந்து உட்கார்ந்துகொண்டு லைட்டைப் போட்டாள். அலமாரியைத் திறந்து, இரண்டு பழைய ஆல்பங்களை எடுத்துத் தூசி தட்டினாள். படுக்கையில் உட்கார்ந்து, ஒன்றை எடுத்துப் புரட்டினாள். எல்லாமே கறுப்பு & வெள்ளைப் புகைப்படங்கள்!

அதோ, அந்தப் படம்… மெய்சிலிர்த் தது. அதில்… உமாவின் கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா… அவள் மடியில் உமா!

இப்போது… முதல், இரண்டாவது தலைமுறைகள் இல்லை. விஸ்வமும் அவளை விட்டுவிட்டுப் போய்விட்டான். துக்கம் நெஞ்சை அடைக்க, பெருமூச்சு விட்டபடி மீண்டும் படத்தைப் பார்த்தாள் உமா. அதில், அம்மா மடியில் உட்கார்ந்திருந்த உமாவின் மடியில் இருந்தது, அவளுடைய செல்ல பொம்மை!

சிறுமியாக இருந்த அவளுக்கு, அவள் அப்பா தந்த அன்புப் பரிசு!

“குசலா… குசலாக் குட்டி!” என்று அதைச் செல்லப் பெயரிட்டுக் கூப்பிட்டு அகமகிழ்ந்துபோனாள் உமா.

அன்றிலிருந்து, குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டாள் குசலா. தினமும் குசலாவுக்குக் குளிப்பாட்டி, உடை மாற்றி, உணவு ஊட்டி, முத்தமிட்டுத் தூங்க வைப்பாள் உமா. பள்ளியிலிருந்து வந்தவுடன் புத்தகப் பையை வீசிவிட்டு, குசலாவை எடுத்து வைத்துக்கொண்டு, பள்ளியில் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்வாள்.

“உமா… நீ கல்யாணமாகிப் போகும்போது, குசலாவையும் கூட்டிக்கிட்டா போவே?” என்று யாராவது கேலி செய்தால்கூட, “கண்டிப்பா! குசலா பாவம், என்னை விட்டுட்டு இங்கே தனியா எப்படி இருப்பா?” என்று கள்ளம்கபடு இல்லாமல் சொல்லி, குசலாவை அணைத்துக் கொள்வாள்.

அந்த நாளும் வந்தது. உமா, விஸ்வத்தைக் கைப்பிடித்தாள். கணவன் வீட்டுக்கு அவள் சென்றபோது, அவள் தன் பெட்டியில், புடவைகளுக்கு நடுவே ஒளித்து வைத்துக்கொண்டது குசலாவை!

உமாவின் கண்ணீர், போட்டோவில் பட்டுத் தெறித்தது. நடு நிசி மணி 2.

இப்போது குசலா எங்கே?

யோசித்துப் பார்த்த உமாவின் நினைவுக்கு வந்தது, பரண்மேல் கிடக்கும் மூன்று சூட்கேஸ்கள். ‘அதில், ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக குசலா இருப்பாள்!’.

உடனே நாற்காலியில் ஏறி, மேஜை மேல் ஏறி, பரணைத் திறந்து, சூட்கேஸ் களைக் கீழே இறக்கி வைத்தாள் உமா.

முதல் பெட்டியைத் திறந்தாள். உள்ளே ஏதேதோ காகிதங்கள், சர்ட்டிபிகேட்டுகள், கடிதங்கள்…

இரண்டாவது பெட்டியில், ஹை… குசலாவுக்காக அம்மா தைத்துக் கொடுத்த ஜிகினாப் பாவாடை!

மேலும் சில பழைய துணிகளை வெளியே எடுத்துப் போட்டதும், அதோ… அவளது செல்ல குசலா! பால்ய சிநேகிதி. அவளுடைய துணை!

அதே பெரிய விழிகள், சிறிய மூக்கு, குவித்த சிவப்பு உதடுகள், குண்டான ரோஜா நிறக் கன்னங்கள்… வயதே ஏறாத அதே பழைய குசலா!

அது தன் பெரிய விழிகளை உருட்டி, “இத்தனை வருஷமா என்னை மறந்துட்டே இல்லே?” என்று உமாவைக் கேட்டது. அந்த பொம்மை.

குசலாவை இறுக அணைத்துச் சமாதானப்படுத்தினாள் உமா. அவள் மனம் லேசாகிப் பறந்தது. உமா, இனி தனி மனுஷி இல்லை. அவளுக்கு இனி தனிமைப் பயம் இல்லை!

இரண்டே நிமிடங்கள்… அமைதியான, ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தாள் உமா!

பக்கத்தில் குசலா கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு உமாவுக்குத் துணை இருந்தது.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *