குங்குமச் சிமிழ்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 18,487 
 

நான் புறப்படப் போகிறேன்.

பிறந்த வீடு என்ற நெருக்கமான பந்தத்தோடு இருபது வருட காலமாய் நான் உறவு கொண்டாடி வந்த இந்த வீட்டை விட்டுப் போகப் போகிறேன். நான் பிறந்த இடம், தவழ்ந்த இடம், விளையாடிய இடம் என்றெல்லாம் ஆகிவிட்ட இந்த வீட்டின் ஒவ்வோர் அங்குலமும் எனக்கு அந்நியமாகப் போகின்றன. எங்கோ இருக்கும் ஏதோ ஒரு வீட்டை நான் இனி நிரந்தரமாகக் கொள்ள வேண்டி, என்னை வழியனுப்பக் காத்திருக்கின்றனர் என் பெற்றோர். எனக்குப் பொங்கிப் பொங்கி வருகிறது அழுகை.

வாசலில் நின்றிருந்த வில் வண்டியில் கட்டப் பட்டிருந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் உடலைக் குலுக்கிக் கொண்டதில் ‘கண கண’வென்ற சதங்கை ஒலி எழுந்தது. அம்மாவுக்கு அது நல்ல சகுனமாய்ப் பட்டிருக்க வேண்டும். “புறப்படுகிற வேளை மங்களமாய் இருக்கு கோமு, கிளம்பு” என்று என்னைத் துரிதப்படுத்தினாள். “ஆமாம், ஆமாம்” என்று அனைவரும் ஆமோதித்தனர். இவர்களுக்கெல்லாம் என்னைக் கிளப்பி விடுவதில் ஏன் தான் இத்தனை அவசரமோ? இவர்களைப் பிரிந்து போகிறோமே என்று, நான் படுகிற பாட்டையும், வடிக்கிற கண்ணீரையும் இவர்கள் சற்றேனும் உணர்கிறார்களா? இவர்களின் உள்ளங்கள்தான் கல்லாகிவிட்டதென்றால், என்னாலும் அப்படியிருக்க முடியுமா?

“மணி நாலே கால்” என்று குரல் கொடுத்தான் வண்டிக்கார முத்தையன். எல்லோருமாய் என்னைத் துரிதப்படுத்தினார்கள். பொலபொலவென்று காற்றில் உதிர்ந்த வேப்பம் பூவாய் கொட்டிய விழி நீரைத் துடைத்துக் கொள்ளக்கூடத் திறனற்றவளாய் நான் அடி பெயர்ந்தேன். உடலில் வாரிச் சுற்றியிருந்த கூறைப் புடவைக்குள் வேர்வை வெள்ளமாய்ப் பெருகிற்று. ஆளுக்கு ஓர் அறிவுரை சொல்ல, அனைத்தையும் மௌனமாய்ச் செவிமடுத்துக் கொண்டு, வெளிவாசலுக்கு வந்தேன். திண்ணையோரம் அவர் நிலை கொள்ளாமல் நின்றிருந்தார். பாவம், நெடு நேரமாய்க் காத்திருக்கிறார் போலிருக்கிறது.

வண்டியில் ஏறுமுன்பு திரும்பி, “போய் வருகிறேன்” என்று கம்மிய குரலில் நான் விடைபெற்றபோது குபுக்கென்று பொங்கிய கண்ணீர் புதுப்புடவையை நனைத்தது. அனைவரும் கண் கலங்குகிற காட்சியைத் தவிர, மற்றப்படி அமைதியாயிருந்தது வீடு. வேதனை நெஞ்சைக் கசக்க நான் வண்டியில் அமர்ந்தபோது அம்மா விம்மினாள். அவர், அனைவருக்கும் பொதுவாகக் கைகூப்பி, விடை பெற்றுக் கொண்டார். வண்டியும் நகர்ந்தது.

வண்டி நிறைய சாமான்கள் இருந்தததால், கொஞ்சம் உரசிக்கொண்டுதான் உட்கார வேண்டியிருந்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. போதாக்குறைக்கு வேர்வையின் கசகசப்பு வேறே.

ரயிலுக்குப் போகிற பாதை கொஞ்சம் கரடுமுரடானது. மழைக்காலத்தில் சேரும் சகதியுமாய் இருந்த இடம் இந்த வெயிலின் உக்கிரத்தால், மண் திட்டுகளாய் மாறியிருந்தன. அதில் வண்டிச் சக்கரம் உருண்டபோது, தடக் தடக்கென்று உடம்பை ஒரேயடியாய்க் குலுக்குப் போட்டது. அம்மாதிரி சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் மீது நான் மோதிக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்போதெல்லாம் அவர் கடைக்கண்ணால் என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பார். எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்னும். இன்ப நினைவுகளும், வேதனை உணர்வுகளும் சேர்ந்த ஒரு புது உணர்ச்சியின் இறுக்கத்தால் நான் தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

மேத்தனூர் மண் ரோட்டைக் கடந்து தோப்புத்துறை தார் ரோட்டில் வண்டி விரைந்தபோது, கிணுங் கிணுங் என்ற சைக்கிள் மணியோசை வண்டியின் அருகாமையில் கேட்டது. அது எனக்குப் பழக்கப்பட்ட ஓசை மாதிரி தோன்றவே, சட்டென்று ஒரு ஆவலாம் உந்தப்பட்டு, வெளியே எட்டிப் பார்த்தேன். துணுக்கென்றது. நெஞ்சைக் கப் என்று எதுவோ அடைத்துக் கொண்டது. நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிற சாக்கில் விழிகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டேன். இந்த ராமு அத்தான் இந்த நேரம் பார்த்துத்தானா இப்படிப் போக வேண்டும்?

பழைய நினைவுகள் ஒவ்வொன்றாய் நெஞ்சினுள் கிளர்ந்தன. இந்தச் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொண்டு, நான் அவரோடு ஊர் சுற்றிய நாட்கள் கொஞ்சமா? அதோ, அந்தத் தென்னந்தோப்புக்களில் நாங்கள் பேசிய நாட்கள் மறக்கக் கூடியவைதானா? எல்லாம் கனவாகி விட்டன. நினைக்கவே கூடாத நினைவுகளாகிவிட்டன.

கண்ணீராய்ப் பெருகத் துடித்த துயரங்களை — அவற்றால் கிளறப்பட்ட நினைவுகளை — மறக்க முயன்றேன். அது வீண் பிரயத்தனமாயிற்று. மளமளவெனப் பொங்கிப் பெருகிய என் விழி நீரைக் கண்டதும் பதறிப் போனார் இவர். “என்ன இது கோமு, குழந்தை மாதிரி. அப்பாவையும் அம்மாவையும் விட்டு நிரந்தரமாகவா பிரியப் போகிறாய்? இன்னும் இரண்டொரு மாதங்களில் இங்கே வந்தால் போயிற்று, அசடு! கண்ணைத் துடைத்துக் கொள்” என்று அவர் பரிவுடன் கடிந்து கொண்டபோது என் நெஞ்சை அந்தப் பரிவே உறுத்தியது.

என் வேதனையின் காரணம் பெற்றோரின் நினைவல்ல என்பது அவருக்குத் தெரியாதவரை எனக்கு நிம்மதிதான். நான் இவருக்கு மனைவியாக்கப் பட்டுவிட்ட பிறகு, எனக்கென்று ரகசியம் ஒன்று இருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? மறைக்கப்பட வேண்டிய சில உண்மகள் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றனவே!

ராமு அத்தானின் சைக்கிள் எங்கள் வண்டியை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது. அவர் நினைவு மட்டும் என்னை மிகவும் சமீபித்து வந்தது. கல்யாணத்தின்போது அவர் எனக்கு அன்பளிப்பாய்க் கொடுத்திருந்த அந்த வெள்ளிக் குங்குமச் சிமிழின் நினைவும் வந்தது. நல்ல வேளையாக அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். இல்லாவிட்டால் அதைப் பார்க்கும்போதெல்லாம் அவரின் ஞாபகம் வேறு வந்து தொலைக்கும்.

*

புதுவீடு. தனிக்குடித்தனம். இது எல்லாம் எனக்குப் புதுமையான அனுபவங்கள். வீட்டினுள் நுழைந்ததும், மலைத்து மலைத்து நின்ற என்னைக் கண்டு அவர் கேலியாகச் சிரித்தார். “என்ன கோமு, என்னவோ அதிசய உலகத்தில் நுழைந்த மாதிரி பிரமித்துப் போய் நிற்கிறாய் அப்படி? ஐம்பது ரூபாய் வாடகை வீடுதான் இது. தைரியமாய் உள்ளே வா”.

நான் சிரித்துக் கொண்டே உள்ளே போனேன். சுமாரான வீடுதான். மாடி கூட இருக்கிறது. ஆனாலும் வாடகை அதிகம்தான். “வாடகை ரொம்ப அதிகம்தான்” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் அவரிடம்.

“சரிதான் போ, மேந்தனூர் மாதிரி இதுவும் நாட்டுப்புறம் என்று நினைத்தாயா? திருச்சி டவுனாக்கும். இங்கெல்லாம் ஐம்பது ரூபாய்க்கு வீடு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” எனக்கூறிவிட்டுக் கடகடவென்று சிரித்தார் அவர். என்னவோ, வீடு கிடைத்த மட்டில் திருப்திதான்.

நான் மளமளவென்று சாமான்களைப் பிரித்து, வைக்க வேண்டிய இடத்தில் வைக்கத் தொடங்கினேன். வீட்டுக்கு நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். பிறகு வீட்டைச் சுத்தமாகப் பெருக்கி, வெயிலில் சூடேறிப் போன முற்றத்தில் இரண்டு வாளித் தண்ணீர் இறைத்தேன். எல்லாம் ஆன பிறகு, பெட்டியிலிருந்து விநாயகர் படத்தை எடுத்துச் சுவரில் மாட்டினேன். தஞ்சாவூர் ஜங்ஷனில் அவர் ஆசையோடு வாங்கித் தந்த கதம்ப மலர்ப் பொட்டலம் பிளாஸ்டிக் கூடையில் அப்படியே இருந்தது. பேச்சுப் பராக்கில் சூடிக்கொள்ளக்கூட மறந்து விட்டேன். அதை சுவாமி படத்துக்குச் சூட்டி வணங்கி நின்றேன்.

வாசல் பக்கம் பால்காரனின் சைக்கிள் மணியோசை கேட்டது. உள்ளே போய் ஒரு எவர்சில்வர் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரும்பிய நான், அவரின் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு நாலணா நாணயத்தையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தேன்.

பால்காரன் ஊற்றிய நீர், சோற்றுத் தண்ணீர் போன்ற அந்த திரவத்தை வயிற்றெரிச்சலோடுதான் வாங்கிக்கொண்டு வந்தேன். மேந்தனூரில் எருமைப்பால் கள்ளிச் சொட்டு மாதிரி இருக்காதா? இப்படியெல்லாம் பால் விற்றால் சுகாதார அதிகாரிகள் கேஸ் போட்டு, ஆயிரம், ஐந்நூறு அபராதம் செலுத்த வைத்துவிடுவார்களே? இங்கென்னடா வென்றால், இப்படிப் பகிரங்கமாய் விற்கிறார்கள்.

கொல்லையில் மாமரங்கள் பல நின்றிருந்தன. அவற்றின் கிளைகள் உதிர்த்து விட்டிருந்த காய்ந்த சருகுகளையும், சிறு சிறு சுள்ளிகளையும் பொறுக்கி வந்து அடுப்பை மூட்டினேன். பாலைப் பானையில் ஊற்றி அடுப்பில் வைத்தேன். சற்றைக்கெல்லாம் பால் பதமாகக் காய்ந்து விட்டது. அதை ஒரு வெள்ளி டபரா செட்டில் ஊற்றி எடுத்துக்கொண்டு நான் உள்ளே வரவும், அவர் பல் துலக்கிவிட்டு வீட்டில் வந்து நுழையவும் சரியாக இருந்தது.

“பால்” என்றேன்.

“அடடே, காப்பி போடக்கூடாதா? நான் காப்பி என்றல்லவா நினைத்துக் கொண்டு நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு வந்தேன்?” என்றார் அவர்.

“முதல் முறையாகக் குடித்தனம் வருபவர்கள் பால்தான் காய்ச்ச வேண்டும்”.

“ஏன்?’

“பால் பொங்குகிற மாதிரி வாழ்வு பொங்க வேண்டும் என்று…”

“ஓ, இது உங்களூர்ப் பழக்கமா?”

“எல்லோருடைய ஊர்ப்பழக்கமும் இதுவேதான்”

அவர் சிரித்துக் கொண்டார். அந்தக் கதம்பத்தைத் தலையில் சூடி, நெற்றியில் கொஞ்சம் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது?” என்று கேட்டார்.

“இதோ” என்று கூறிவிட்டு உள்ளே வந்த நான் பெட்டியைத் துழாவினேன். அம்மாவின் ப்ளாஸ்டிக் குங்குமச் சிமிழை இதில்தானே எடுத்து வைத்தேன்! எங்கே போயிற்று?

பெட்டியை அடைத்துக் கொண்டிருந்த புதுப்புடவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டு அடிப்புறம் துழாவினேன். கையிலே தட்டுப்பட்ட அந்தச் சிமிழை வெளியே எடுத்துப் பார்த்தபோது, நான் திடுக்கிட்டேன். நெஞ்சினுள் ஊசியால் நெருடுகிற மாதிரி ஓர் உணர்வு. பாழாய்ப் போன அந்த வெள்ளிச் சிமிழை யார் இதில் எடுத்து வைத்தார்கள்? அம்மாதான் வைத்திருப்பாள். புதுக்குடித்தனம் போகிற மகள் வெள்ளிச் சிமிழையே எடுத்துப் போகட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் வைத்திருப்பாள். அது என் மனத்தில் எத்தகைய சூறாவளியையும் பிரளயத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை அவள் அறிவாளா? கண நேரத்துக்குள் கட்டிய கணவரின் நினைவையே அழித்து விட்டு அந்நியராகிப் போன ஒருவரின் நினைவை ஏற்படுத்தி வைத்து என்னையே ஒரு கிளர்ச்சிக்குள் சுழல விடுவதை அம்மா உணர்வாளா?

நெஞ்செனும் பஞ்சுப் பொதியில் தீப்பொறியாய் விழுந்த ராமு அத்தானின் நினைவு என் உள்ளத்தையே முழுமையாய் ஆக்ரமித்துக் கொண்டது. மேந்தனூர் ஆற்றங்கரையில் அவரும் நானும் வருங்கால வாழ்வைப் பற்றிக் கதைகதையாய் பேசிக்கழித்த நாட்கள் நெஞ்சினுள் பசுமையாய்த் தெரிந்தன. எத்தனை எத்தனையோ இன்பக் கற்பனைகள்! எல்லாம் பாலை நிலத்தில் வார்த்த பாலாய் மறைந்து விட்டன. என் வாழ்க்கையே இப்போது முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் திரும்பி விட்ட பிறகு, அந்தப் பாழும் நினைவுகள்தான் ஏன்?

நினைக்கக் கூடாது — நினைக்கவே கூடாது என்று நான் உறுதி பூண்டிருந்த நினைவுகளெல்லாம் நெஞ்சினுள் நெளிந்தன. இந்த வேதனைக்கும் இப்படியொரு நிலைக்கும் காரணமே இந்தப் பாழும் நினைவுகள்தானே! இன்றையை இந்த நிகழ்ச்சி எனக்குப் புது அனுபவம்தானா? அல்லவே! கடந்த மூன்று மாதகாலமாய் – இந்தத் தனிக் குடித்தனம் தொடங்கிய நாளிலிருந்து – இப்படி எங்காவது ஒரு சினிமாவுக்கோ, டிராமாவுக்கோ புறப்படும்போது, என்னைச் சமாதானப் படுத்தியவைதானே! நான் குங்குமம் இட்டுக் கொள்வதையே வெறுத்து ஒதுக்குகிற அளவுக்கு என்னை வேதனைக்குள்ளாக்கியதே இந்தக் குங்குமச் சிமிழ்தான். குற்றம் சிமிழ்மீது அல்ல. அதை எனக்கு அன்பளிப்பாய்க் கொடுத்தாரே, அவர் மீதுதான். என்னை மணந்து கொள்ள முடியாமல் போன நிராசையால், அதனால் உந்தப்பட்ட ஒரு வெறியுணர்வினால்தான் இப்படியொரு பரிசை எனக்குத் தந்தாரோ?

நான் கண்டேனா, விளவு இப்படி ஆகுமென்று? நானும் அவரும் உயிருக்கு உயிராய்த்தான் நேசித்தோம். இடையில் அண்ணனுக்கும் தங்கைக்கும் கேவலம் ஒரு குழி நிலத்தில் ஏற்பட்ட தகராறு இப்படி ஜென்மப் பகையாய் முற்றிப் போகுமென்று யார்தான் எதிர்பார்த்தார்கள்? அப்பா எனக்குத் திருமணம் செய்ய நிச்சயித்து வரன் தேடத் தலைப்பட்டுவிட்டார். திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை என்னுடையது. முடிவில் தம் நண்பரொருவரின் மகனையே எனக்கு மாப்பிள்ளை பேசியபோது, நான் மனத்திற்குள் மறுகினேன். எனக்கு விருப்பமில்லாத்தைப் பலமுறை ஜாடையாகத் தெரிவித்தும், அப்பாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி மனத்திற்குள் ஆழக்குழி யொன்றை வெட்டி அதில் புதைத்தேன் அத்தானின் நினைவுகளை. எங்கள் வீட்டோடு வெகு காலமாய்த் தங்கிவிட்ட விதவை அத்தை பாகீரதி அம்மாள் மட்டும் ‘ராமுவைத்தான் கோமுவுக்கு முடிக்க வேண்டும்’ என்று அப்பாவிடம் பலமுறை கூறியும் பயனற்றுப் போயிற்று. அவளும் ஓய்ந்து அடங்கிவிட்டபோது என்னுள் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் தளர்ந்துவிட்டது. கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்தன.

கல்யாணத்தன்று எங்களுக்கு ஏராளமாய்ப் பரிசுப் பொருள்கள் வந்து குவிந்தன. அத்தானும் கல்யாணத்துக்கு வந்திருந்தார். கையோடு கொண்டு வந்திருந்த ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழை எனக்குப் பரிசளித்துவிட்டு, வந்த சுருக்கில் புறப்பட்டும் விட்டார். அன்று தொடங்கி இன்றுவரை எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்விட்டது. அந்தச் சிமிழைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நினைவு வந்துவிடுகிறது. அங்கே போனோமே, அப்படி இருந்தோமே, இப்படிப் பேசினோமே, என்றெல்லாம் பழைய நிகழ்ச்சிகளின் நினைவுகள்தான். அவற்றிலிருந்து மீண்டதும், ஒரு பாரதப் பெண்ணுக்குரிய தூய்மையான கற்பு நெறியிலிருந்து வழிபிசகிச் சென்றுவிட்ட மாதிரி ஒரு குறுகுறுப்பு. அந்த வேதனைத் தீயின் கொடும் வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கிற எனக்கு எப்படி அமைதி இருக்கும்? இன்னொருவருக்கு மனைவியான பிறகு அப்படிப்பட்ட நினைவுகளை எண்ணுவதே தவறு என்று நான் உணராமலில்லை. நான்தான் என்ன செய்வேன்? நெஞ்சினுள் வந்து மண்டுகிற அவற்றை ஒதுக்கித் தள்ளினாலும் ஒதுங்குகிறதா?

இப்படி என் அமைதியையே குலைக்கிற அந்த குங்குமத்தை இட்டுக் கொள்ளவே கூடாது என்று நான் முடிவு செய்திருந்தாலும், இவரே நினைவூட்டி இட்டுக்கொள்ளும்படி வற்புறுத்துகிறார். “உன் நெற்றிக்குக் குங்குமம் எப்படி இருக்கிறது தெரியுமா? வெள்ளை வானத்தில் செந்நிலவு ஜொலிக்கிற மாதிரி, போ” என்று பெரிதாகப் புகழ்கிறார். அவர் சொல்லும்போது மறுக்கவா முடியும்?

“என்ன கோமு, அப்படி உட்கார்ந்துவிட்டாய்?

அவர்தான் கேட்டார். நான் சமாளித்துக் கொண்டு எழுந்தேன். அந்த வெள்ளிச் சிமிழிலிருந்த குங்குமத்தை விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டபோது, என்னுள் மகிழ்ச்சியில்லை. அவர்தான் ஏதேதோ பேசிக்கொண்டு போனார். என் மனம் அதிலெல்லாம் லயிக்காமல் ஒரு நிலையின்றி அலைந்தது. அந்த அலைச்சலில் சுழன்று வந்ததெல்லாம் ராமு அத்தானின் நினைவுதான்.

நெஞ்சுக்குள் அடங்காத குமுறல். எழுகின்ற எண்ணங்களே இதயத்தை சுள்ளாணியாய்த் தைக்கிற வேதனை. அமுதமாய்த் தித்தித்த கடந்த நிகழ்ச்சிகளின் நினைவு, காலப்போக்கில் விஷமாய்த் திரிந்ததனால் விளைந்த கசப்பு. படக் காட்சியைப் போல் – நான் விரும்பாவிட்டாலும் – நெஞ்சினுள் அந்தச் சம்பவங்களின் தொடர் நிழலாட்டம். நான் உணர்வற்ற சித்திரமாய்ச் சமைந்து நின்றேன். என்னெதிரே ஆளுயரம் நின்ற அந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த என் உருவையோ, மேசை மீது குவிந்து கிடந்த பலவகை அலங்கார சாதனங்களையோ எனக்கு ரசிக்கத் தோன்றவில்லை. ’ஆ’வென வாய் பிளந்து என்னை விழுங்கக் காத்திருக்கும் கொடும் அரக்கனாய் எனக்கு எதிரே திறந்து கிடந்தது அந்தக் குங்குமச் சிமிழ். கண நேரத்தில் என்னுள் ஒரு புயலையே தோற்றுவித்து, என் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தையும் ஒடுங்கச் செய்து, தகாத நினைவுகளையெல்லாம் தீயாய் மூட்டி விட்ட அந்தச் சிமிழையே வெறித்தபடி நின்றேன் நான்.

“கோமு, மணி ஐந்தே முக்காலாயிற்றே, இன்னுமா புறப்படவில்லை?”

அறைக்கு வெளியே நின்றிருந்த அவர், குரல் கொடுத்தார். ‘இதோ ஆயிற்று’ என பதிலிறுக்கக்கூட சக்தியற்று நின்றிருந்தேன். அவரே உள்ளே வந்துவிட்டார். ஸ்தம்பித்த என் நிலையைக் கண்டு சற்றே துணுக்குற்றவராய், “என்ன கோமு?” என்று பரபரப்புடன் வினவினார்.

சட்டென சுய உணர்வு பெற்ற நான், “ஒன்றுமில்லை, ஏதோ ஏதோ பழைய நினைவு. இல்லையில்லை, புறப்படலாமா?” என்று குழறினேன்.

“டாக்டருக்குப் போன் செய்யட்டுமா?” என்று கனிவுடன் கேட்டார் அவர். அது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. “வேண்டாம், வெறும் தலைவலிதான்” என்று சற்றே தெம்பு வரப் பெற்றவளாய்க் கூறினேன். எங்களுக்கிடையில் கண நேரம் அமைதி நிலவியது.

”சினிமாவுக்கு அவசியம் போகத்தான் வேண்டுமா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டேன் நான். சற்று நேரம் மௌனமாய் நின்ற அவரது முகமெங்கும் ஆழ்ந்த சிந்தனைக் கோடுகள் குழைந்தன. பிறகு, என்னை ஏறிட்டு நோக்கி, “பரவாயில்லை கோமு, உனக்கு முடியாவிட்டால், ஓய்வெடுத்துக் கொள். நான் என் சினேகிதர்களிடம் அவசியம் வருவதாய்ச் சொல்லிவிட்டேன். நான் மட்டும் போய் வந்துவிடுகிறேன், என்ன?” என்று கூறிவிட்டு, அவசரமாய்ப் புறப்பட்டுவிட்டார் அவர். என் பதிலைக்கூட எதிர்பாராமல்.

நான் வேதனையோடு படுக்கையில் விழுந்தேன். சற்று முன் அவரோடு சினிமாவுக்குப் புறப்பட ஆயத்தமானபோது எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! எல்லாம் ஒரு கண நேரத்தில் எப்படித்தான் மறைந்தனவோ?

மறுநாள் காலை, அவருக்கு உப்புமா கிளறிக் கொண்டிருந்தேன் அடுப்பில். நேற்றைய வேதனைகளின் சுவடின்றி மனம் நிச்சலனமாயிருந்தது.

“கோமு” என்ற அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினேன் நான். பின்னால் அவர்தான் நின்றிருந்தார். ஏனோ மனம் படபடத்தது.

“ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. அப்பாதான் எழுதியிருக்கிறார். யாரோ உன் அத்தானாமே, ராமு! வயலுக்கு உரங்கள் வாங்குவதற்காக அவர், இங்கே வருவார் என்று எழுதியிருக்கிறார். எதுவும் செய்திகள் இருந்தால் சொல்லேன், எழுதிவிடுகிறேன்”.

எனக்குத் திகீரென்றது. இப்போதிருக்கிற மனக்குழப்பமும் வேதனையும் போதாதென்று, அதை அதிகப் படுத்த, நேரில் வேறு வருகிறாரோ, அந்த ராமு அத்தான்? என்னை ஒரேயடியாய்க் குமையச் செய்து வாழ்க்கையையே நரகமாக்கி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாரோ! நான் மௌனமாயிருந்தேன்.

“இப்போது உனக்கு உடம்பு எப்படி இருக்கிறது கோமு?” என்று பரிவுடன் கேட்டார்.

“பரவாயில்லை” என்றேன்.

“எனக்கென்னவோ உன் உடம்பில் எதுவுமிருப்பதாய்த் தோன்றவில்லை. மனசில்தான் ஏதோ கோளாறு. வேண்டுமானால் ஒன்று செய்யேன். ஊரிலிருந்து வந்திருக்கிற உன் அத்தான் இங்கு வந்தால், அவரோடு நீயும் ஒருதரம் ஊருக்குப் போய்விட்டு வாயேன். மனம் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்” என்றார் அவர். என் விழிகள் பிரவாகமெடுத்தன. இவரைக் கணவராக அடைய உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்தான். இத்தனை நல்ல மனிதருக்கு நான் செய்வது துரோகம்தானா?

“எனக்கு மனசில் எதுவுமே இல்லை. ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கவும் இல்லை. நீங்கள்தான் தப்பாக நினைத்துவிட்டீர்கள்” என்றேன் கரகரத்த குரலில்.

”சரி, சரி, அதற்காக அழுவார்களா யாராவது? கண்ணைத் துடை கோமு” என்று அன்பாகக் கடிந்து கொண்டார் அவர். என்னால் மெல்லவும் முடியாத, விழுங்கவும் இயலாத ஒரு நிலை. என்னை வாட்டியெடுக்கிற அந்த உண்மையைச் சொல்லி விட்டால் இவர் உள்ளத்தில் ஒரு கறை ஏற்படாதென்பது என்ன நிச்சயம்? சொல்லமலிருந்துவிட்டாலோ இந்த உத்தமமான கணவரிடம் ஓர் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறோமே என்று இதயத்தை வாளால் அறுக்கும் எண்ணங்கள். என்னதான் செய்வேன் நான்? மனத்திற்குள்ளேயே வைத்துப் புழுங்கிப் புழுங்கி இப்படி அணு அணுவாய்ச் சாவதைவிட ஏதாவது விஷத்தைத் தின்றுவிட்டு ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்து விடலாமே! எல்லாவற்றிற்கும் சிகரம் வைக்கிற மாதிரி அத்தான் வேறு வருகிறாராம்! இதற்கொரு முடிவு கிடையாதா கடவுளே?

”இன்றைக்கும் உனக்குப் பிடித்தமான ஒரு ப்ரொக்ராம்” என்றார் அவர்.

என்ன அது என்று கேட்டேன் ஆவலோடு.

“எதிலும் சஸ்பென்ஸ் வேண்டும் கோமு, புறப்படேன்” என்றார் அவர்.

“தயவு செய்து சொல்லுங்களேன்” என்று ஆவல் மிகுதியால் பரபரத்தேன்.

ரொம்பவும் பிகு செய்துவிட்டுக் கடைசியில் சொன்னார். ”கீதை உபன்னியாசம். பிரபல மடாதிபதி ஒருவர் சொல்லுகிறாராம்.”

எனக்கோ தாள முடியாத வியப்பு. கீதை கேட்க வேண்டும் என்று எப்போதோ ஒரு முறை இவரிடம் சொல்லியிருந்தேன். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே, இன்றும்! நான் அவசர அவசரமாய்ச் சமயலறை வேலைகளை முடித்து, உடை மாற்றிக் கொள்வதற்காக உள்ளே விரைந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிஷத்துக்கெல்லாம், புது வடிவமெடுத்த நான், கண்ணாடியில் என்னை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரிதான். நெற்றிதான் வெறிச்சென்றிருந்தது. குங்கும்ம் இட்டுக் கொள்ள எண்ணி மாடியில் இருந்த என் அறையை நோக்கி விரைந்தேன். மேஜையில் இருந்த அந்தக் குங்குமச் சிமிழைக் கையில் எடுத்தபோது குப்பென்று நெஞ்சில் அடர்ந்தது ராமு அத்தானின் நினைவு!

ராமு அத்தான் ஏதோ வேலையாக அங்கே வந்திருப்பதாகவும், அங்கே வருவாரென்று எழுதியிருந்தாரே அப்பா! இன்னும் காணோமே! அவர் சுபாவமே விசித்திரமானது. மனம் விரும்பியதைச் செய்ய மாட்டார். “மனத்திற்கு நாம் அடிமையாகக் கூடாது கோமு. நமக்குத்தான் அதை அடிமையாக்கிக் கொள்ள வேண்டும்” என்பார்.

தறி கெட்டு ஓடிய சிந்தனையைச் சிரமத்துடன் இழுத்துப் பிடித்தேன். எந்த நினைவுகளை எண்ணவே பயந்தேனோ, அந்த நினைவுகள்தானா மீண்டும் வரவேண்டும்? ‘யாரோ’ ஆகிவிட்ட ஒருவரை எண்ணி மனம் சாம்புவது பாரதப் பெண்ணுக்கு அழகுதானா? சே, சே! அப்படிப்பட்ட நினைவுகளை நினைப்பதே பாவம். அந்தக் குங்குமச் சிமிழில் அப்படி என்னதான் மந்திரத்தை ஓதித் தந்தாரோ, தெரியவில்லை. இது வந்த்தில் இருந்து வாழ்க்கையில் சுவையே வற்றிவிட்ட்து.

அன்றைக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் வரலாற்றைப் படித்துக் காட்டினார். அதில் வந்த அந்த இரண்டு வரிகள், அப்பப்பா! என்னைக் கூரீட்டிகளாய்த் தைத்து, என் நெஞ்சைப் பிளந்துவிட்டதே – ஒரு பெண்ணின் கற்பு கெடுவது அவள் பிற ஆடவனோடு கூடுவதால் மட்டுமல்ல, பிற ஆடவனின் நினைவை மனத்தால் எண்ணினால்கூடக் கற்பிழந்தவள்தான்! இப்போது மீண்டும் அந்த அந்நியரின் நினைவா? இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும்.

நான் விருட்டென்று எழுந்தேன். ஜன்னல் வழியே உட்புறம் பாய்ந்து வந்த சூரியனின் பிரகாசக் கதிர்களின் ஒளியில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அந்தக் குங்குமச் சிமிழைத் தாவி எடுத்தேன் கையில். மனம் இரும்பாய்க் கனத்தது. கண்களிலோ வெள்ளப் பெருக்கு. மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே வீசி எறிந்தேன் அதை.

வேதனை நெஞ்சைக் கொறித்தது. அப்படியே மேஜை மீது தலை கவிழ்த்தி கண்கள் பிழியப் பிழிய அழுதேன். நெஞ்சின் துயரங்கள் கண்ணீராய்ப் பெருகி ஓடியதும், சற்றே நிம்மதி பிறந்தது. என் உறுதியான முடிவு தளர்ந்து போகுமுன் காரியத்தைச் செய்து முடித்து விட்டதில் ஒரு திருப்தி படர்ந்தது.

ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தேன். அந்தக் குங்குமச் சிமிழ் என்னவாயிற்று என்று அறிய மனம் துடித்தது. அந்த ஆவலால் உந்தப்பட்ட நான், தளர்ந்த நடையுடன் ஜன்னலோரம் வந்தேன். பார்வையைச் சாலையில் பதித்ததும் மனம் துணுக்குற்றது. யாரோ இளைஞர் ஒருவர் இத்தனை நேரம் தீண்டுவாரின்றி நடு ரோட்டில் கிடந்த அதை எடுக்கக் குனிவது தெரிந்தது. எடுத்துக் கொண்டு அவர் நிமிர்ந்தபோது என்னுள் ஆயிரமாயிரம் இடிகள் விழுந்த நடுக்கம்.

யார், ராமு அத்தானா அது?

கையிலே குங்குமச் சிமிழும், பார்வையில் திகைப்புமாய் அவர் நிமிர்ந்தார். நான் வெடுக்கெனத் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதேன், கரங்களில் முகம் புதைத்து.

மீண்டும் நான் சாலையைப் பார்த்தபோது, அவர் போய்க்கொண்டிருந்தார். கையிலே என் நினைவுகளைச் சுமந்து கொண்டு. ஒரு பெருமூச்சுடன் நான் கீழிறங்கி வந்தேன். மனம் பஞ்சு போல் லேசாகி இருந்தது. நாமும் ஒரு பாரதப் பெண் என்ற நினைவே நெஞ்செல்லாம் இனிக்கச் செய்தது.

(ஆனந்த விகடன், 23.08.64).

Print Friendly, PDF & Email

1 thought on “குங்குமச் சிமிழ்

  1. அருமையாக இருக்கிறது கதை வாழ்த்துக்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *