கிழிக்கப்படாத கடிதங்கள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 8,012 
 

மனைவி நம்பற அளவுக்கு நேர்மையானவனா, நம்பிக்கையானவனா இருக்க முடியலையேங்கற மன உளைச்சல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. எனக்கும், மனைவி, பிள்ளைகளோடு பேசி சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருக்கிறது. ஆனால் ஆழமாக மனசுக்குள் நின்றுப் போன அலமேலுவின் நினைவுகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி விடுகிறது.

கணவனிடம், மனைவி எதிர்பார்க்கின்ற அத்தனை அம்சங்களையும் என் மனைவி என்னிடம் எதிர்பார்த்தாள். என்னுடைய நினைவுகளெல்லாம் அலமேலு மேலேயே இருப்பதினால் ஒரு சராசரிக் கணவனா, அவள் எதிர்பார்க்கிற கணவனா இருக்க முடிவதில்லை. என்னிடம் காணப்படுகிற சிடுசிடுப்பு, வெறுப்பு, சோகம், தனிமை. ஏனென்று புரியாமல் குழம்பிப் போய், “”என்ன… ஏதாவது பிரச்னையா… ஒடம்புகிடம்பு சரியில்லையா…?” என்று கேட்டுக் கொண்டே கிட்டே நெருங்கி கழுத்தில் கை வைத்துப் பார்க்க வருவாள். முறைப்பேன்.

கிழிக்கப்படாத கடிதங்கள்

“”கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரியாப்பூடும்” என்று பதற்றமில்லாமல் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் தெரிவாள். அவளின் பாச வலைக்குள் சிக்க முடியாதபடி அலமேலுவின் நினைவுகள் போர்க்குணத்தோடு அவளை எதிர்க்க வைக்கிறது. வெறுக்க வைக்கிறது. நான் எவ்வளவுதான் வெறுப்பைக் காட்டினாலும், கொஞ்சங்கூட சஞ்சலப்படாமல், வெறுப்படையாமல், இன்னும் அதிகப்படியான பாசத்தைக் காட்டுகிறாள். அது இன்னும் எனக்கு வேதனையைக் கொடுப்பதாய் இருக்கிறது.

இனியும் அலமேலுவின் நினைவுகளோடு இருப்பதென்பது மனைவிக்குச் செய்யும் துரோகமென்று எண்ணுகிறேன். ஒருமுறைதான் ஒருத்தி விஷயத்தில் ஏமாந்து இருந்து விட்டேன். மனைவியான இவளிடமும் நல்ல கணவனாக நடந்து கொள்ள முடியாத தைரியமில்லாத – கோழையாக இருந்துவிடக் கூடாதே… அசரீரியாய் ஏதோ ஒன்று என்னை அச்சுறுத்துவது போல அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது.

அலமேலு சம்பந்தப்பட்டவை அனைத்தையும் அழித்துவிடவேண்டும். அவள் நினைவுகளிலிருந்து முழுமையாக விடுபட கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொள்ள வேண்டும். முதலில் அவள் எழுதிய கடிதங்களையெல்லாம் மனைவிக்குத் தெரியாமல் கிழித்து எறிந்துவிட வேண்டுமென்று முடிவு கட்டினேன்.

எங்கள் வீட்டு வேலைக்கார பாட்டியுடைய பேத்திதான் அலமேலு. சின்ன வயசிலே அம்மாவை இழந்ததுனால பாட்டிதான் வளத்திட்டு வந்தா. வேலைக்காரின்னா வீட்டு வேலையில்லை. தோட்ட வேலை. தொழுவத்தில் சாணி அள்ளிப் போடுவது. தோட்டம் பெருக்குவது. ஆடுமாடு ஓட்டிக்கிட்டுப் போய் மேய்த்துவிட்டு வருவது. இப்படித்தான். ஏழெட்டு மாடுகள் இருந்தன. ஆடுகள்தான் அதிகம். பேத்தியைப் படிக்க வைக்கிற அளவுக்கு கிழவிக்கு யோசனையிருந்ததாகவே தெரியவில்லை. தனக்குத் தெரிந்த வேலையை அவளுக்கும் கற்றுக் கொடுத்து எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும் என்பதாகத்தான் கிழவியின் எண்ணம் இருந்திருக்க வேண்டும். எப்பவும் தன்னுடனேயே அழைத்துக் கொண்டு வந்தபடியிருந்தாள். அவளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்க வேண்டியதுதானே என்று யாராவது கேட்டிருப்பார்களா? இல்லையா…? என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளாகவே அவள் பாட்டியோடுதான் வந்து கொண்டிருந்தாள். ஒருநாள் கூட அவள் பள்ளிக்கூடம் போனதை நான் பார்த்ததுமில்லை. பள்ளிக்கூடம் போய்ட்டிருக்கிறேன் என்று சொல்லிக் கேட்டதுமில்லை. கிழவிக்கு ஒத்தாசையாக அவளும் கூடமாட வேலை செய்து கொண்டு, அம்மா கொடுக்கிற பழையதையோ சுடுசோத்தையோ வாங்கிக்கிட்டுப் போவா. நிறைய நாள் பழையது போட்டுத்தான் பார்த்திருக்கிறேன். அம்மா கொடுக்கும் பழையதைச் சாப்பிட்டுட்டு, ஆடு, மாடுகளை ஓட்டிட்டுப் போய் சாயந்திரம் வரையிலும் இருந்து மேய்ச்சிட்டு வரணும். வந்து ஒவ்வொரு நாளைக்கு இருந்து ராச்சாப்பாட்டையும் வாங்கிக்கிட்டே போயிடுவாங்க. இதுதான் அன்னன்னைய நெலமை. சம்பளம் தனி. எவ்வளவென்று எனக்கது நினைவில்லை.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.ஏ., பர்ஸ்ட் இயர் படிச்சிக்கிட்டிருந்த சமயம், வாசல்ல ஒக்காந்து எழுதிக்கிட்டிருந்த நான் நோட்டுப் பேனாவ அப்படியே வச்சிட்டு எதுக்கோ உள்ள எழுந்து வந்திட்டேன். அலமேலு வேலைய முடிச்சிட்டு சோறு வாங்கறதுக்காக நின்னிட்டிருந்தவ சாணி அள்ளுன கைய, சரியா கழுவாமக் கூட எம்பேனாவ எடுத்து நோட்டுல கிறுக்கிக்கிட்டிருந்தா. உள்ளேயிருந்து வந்த எனக்கு இவ கிறுக்கிக்கிட்டிருந்ததப் பாத்ததும் கடுப்பாயிடுச்சி. தலையில ஓங்கி “மடேர்’ன்னு ஒரு கொட்டு வச்சிட்டேன். “”அய்யோ… அம்மா”ன்னு தலையப் புடுச்சிக்கிட்டு அப்படியே கொஞ்சம் நாழி ஒக்காந்திட்டா. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சி. சோறு போட வந்த அம்மா பாத்திட்டாங்க. தலையில கொட்டிட்டனேயொழிய, அவ கலங்கிப் போய் தலைய புடுச்சிக்கிட்டு அப்படியே சரிஞ்சி ஒக்காந்ததப் பாத்ததும் எனக்கு என்னமோ போல ஆயிடுச்சி. “”ஏன்டா அவளக் கொட்டுன?”ன்னாங்க. அம்மா கேட்டதுக்கு என்ன சொல்றதுன்னே புரியில. அவளையும் பேனாவையும் மாறி மாறிப் பாத்தேன்.

நோட்டுல அ, ஆ மாதிரி கிறுக்கியிருந்தத வச்சி அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க.

“”போடா. போடா.. பைத்தியக்காரா..”ன்னாங்க. அவளப் பாத்து, “”நீ ஏன்டி அவன் நோட்டுல கைய வச்ச? வந்தமா, வேலயப் பாத்தமான்னு இருக்க வேண்டிதான?”ன்னு சொல்லிக்கிட்டே தூக்கு வாளியில சோத்தக் கொட்டிட்டுப் போயிட்டாங்க. தலையில கொட்டுன இடத்தில் கை வைத்துப் பார்க்க எண்ணி கையை நீட்டினேன். அவள் பயந்து போய் தலையை இழுத்துக் கொண்டவள், பரிதாபமாய் என்னைப் பாத்தாள். எனக்கு அவள் மேல் இரக்கம் வந்திடுச்சி. “”இனிமேல் கொட்டமாட்டேன் என்ன…?” என்று தலையசைத்துச் சொன்னேன். ஆனாலும் அவளுக்குப் பயம் போன மாதிரி தெரியவில்லை. சோறு இருந்த தூக்குவாளி, நோட்டுப் பேனா. என்னை மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்குப் பாடம் கத்துக்குடுக்கணும்ன்னு அப்பத்தான் யோசிச்சேன்.

“”நீ பள்ளிக்கூடம் போவலியா…?”

“”ம்கூம்…”

“”சரி… நான் உனக்கு ஆனா ஆவன்னா கத்துக் கொடுக்கறேன்” என்றேன்.

“”வேணாம்…” அவள் கண்களில் பயம் தெரிந்தது.

“”அதான் இனிமேக் கொட்ட மாட்டேன்னு சொல்லிட்டேன்ல்ல…” என்றேன் கொஞ்சம் கோபமாகவே.

“”ம்…” என்றாள் ஒற்றையாய்.

தினமும் நோட்டில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து அதில் அ-னா, ஆ-வன்னான்னு எழுதி பேப்பரும் பென்சிலும் குடுத்திடுவேன். எழுதியதை மறுநாள் எங்கிட்ட குடுத்திட்டு வேற பாடம் எழுதி வாங்கிட்டுப் போவா. ஒன்றரை வருஷங்கள் அப்படியே ஓடின. அந்தச் சமயத்தில்தான் தொடர்ந்தாற் போல பத்து பதினைந்து நாட்களுக்கும் மேல் அவள் வேலைக்கு வராமல் கிழவி மட்டுமே வந்து கொண்டிருந்தாள். அவள் ஏன் வருவதில்லை என்பதுகூட என் நினைவுகளில் எட்டியதாகத் தெரியவில்லை. அவளைப் பற்றிய சிந்தனை துளியும் இல்லாமலிருந்தேன். எப்பவும் பாவாடை சட்டையில் பார்த்திருந்த அவளை திடீரென்று ஒரு நாள் தாவணியில் பார்க்க நேரிட்டதும் ஏனோ கண்கள் அவளையே வெறித்துப் பார்க்கும்படியாகச் செய்தது. என்னிடம் அவள் பேச தயங்குவதுப் போல தெரிந்தாள். எனக்கும் அவளிடம் பேச ஏதோ போல இருந்தது. ஆனாலும், அதனாலென்ன அவளிடம்தான் நான் பேசியிருக்கிறேனே? பாடம் எழுதி வரச்சொல்லிக் கொடுத்திருக்கிறேனே.. என்று நினைத்தவனாய், “”கொண்டு வந்திருக்கியா… ?” என்றேன். கண்களை நிமிர்த்தி புன்னகைப் பூக்க சிரித்தாள். மெதுவாய், “இல்லை’ என்பதுபோல முகத்தை ஆட்டினாள். “”சரி பரவாயில்லை இன்னைக்கு எழுதித் தாரேன்” என்று சொல்லி ஒரு பேப்பரைக் கிழித்து அதில் அவளுக்குப் பாடம் எழுதிக் கொடுத்தேன். எதேச்சையாய் என் கைவிரல்கள் அவள் மீது பட்டதும் என் உடம்பு கூசுவது போலிருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்குமென்று எண்ணுகிறேன். ஒருவித சிலுசிலுப்பை உணர்ந்தவளாய் என் விரல்பட்ட இடத்தை அவளின் இன்னொரு கை விரலினால் தொட்டு என்னைப் பார்த்தாள். அதில் ஓர் ஏக்கம் தெரிவது போலிருந்தது. இதற்கு முன்பெல்லாம் என் கைகள் அவள் மீதும் அவள் கைகள் என் மீதும் எத்தனையோ தடவைகள் பட்டிருக்கின்றன. எந்தவொரு வித்தியாசமான உணர்வுகளும் எங்களுக்குள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. முதன் முதலாய் அன்றுதான் அவள் ஸ்பரிசத்தினால் நானும், என் ஸ்பரிசத்தினால் அவளும் பேச்சற்றவர்களாய் மனம் ஒரு நிலையில் இல்லாதவாறு தத்தளித்துக் கொண்டிருந்தோம். முன்னப் பாத்த மாதிரியில்ல. முகம் சிரித்து அழகாய்த் தெரிந்தாள். பாடம் தொடர்ந்தது. ஓரளவிற்கு அவள் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். நெருங்கிப் பழகும்படியா ஆனதுல அவ மேல அளவுகடந்த பிரியம் உண்டாயிடுச்சி. பயத்தோடயே இருந்தவ, நான் குடுத்த தைரியத்துல என்னை நேசிக்க ஆரம்பிச்சா. பூவரசு இலையில பீப்பி ஊத சுருட்டியதுபோல சுருட்டி வைத்திருந்த பழுப்பேறிப் போயிருந்த ஓர் அழுக்குப் பேப்பரை என்னிடம் நீட்டினாள்.

“”என்னது…” என்றேன்.

“”க.. டு.. தா.. சி”

வாயிலிருந்து காற்று வந்தது. வார்த்தை விட்டுவிட்டுத்தான் வந்தது. புரிந்து கொண்டு, “”கடுதாசியா… குடு பாப்போம்” என்றேன். சுருட்டியிருந்த பேப்பரை மெதுவாய் விரித்து பிரித்தேன்.

“ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் நெத்தியில…

ஓல ஒண்ணு நான் எழுதி ஓடவிட்டேன் தண்ணியில

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளில…’

ஒரு சினிமாப்பாடலின் நான்கு வரிகளை அவள் கொடுத்திருந்தப் பேப்பர் முழுக்க பத்து வரிகளுக்கும் மேல் நேர் இல்லாமலும், குண்டு குண்டாய் பென்சிலால் எழுதியிருந்தாள்.

“”அடி சிறுக்கி… இது சினிமாப் பாட்டுடி..” என்றேன்.

முகத்தைக் கோணலாய் ஒரு ஆட்டு ஆட்டி, “”ஆமாம்… அதான் கடுதாசிப் போ…” என்றாள்.

“”ஏய்… இங்க வா…”

“”ம்… வந்தேன்” என்னை உராய்வது போல பக்கத்தில் வந்து நின்றாள்.

மெதுவாய் காதில் கை வைத்து திருகுவது போல பாவனை செய்தேன்.

“”அடிக்கள்ளி… சினிமாப்பாட்டப் பாத்து எழுதிக் குடுக்கிறதுக்குப் பேரு கடுதாசி இல்லடி. நாலு வரின்னாலும் நீயா சிந்திச்சி ஏதாவது எழுதிக் கொடுக்கணும்” என்றேன்.

“”அதெல்லாம் எனக்கு வராது”

“”ஏய் இந்தா பேனா. நான் சொல்லச் சொல்ல எழுது” என்றேன்.

“”பேனா புடிக்கத் தெரியாது”

“”பென்சில் எப்படிப் புடிக்கறியோ அப்படித்தான் பேனாவும். புடி…” என்று சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்து பேனாவைப் பிடிக்க வைத்தேன்.

“”எழுது”

“” நான் காலையில இட்லி சாப்பிட்டேன். நீ என்னா சாப்பிட்ட?”

“”அய்யே… பொய் சொல்ற…”

“”பொய்தாம்புள்ள. சரி… அடுத்த வாரம்… பாட்டி ஊருல இல்ல. நான் தனியாத்தான் வீட்டில் இருக்கிறேன்”

“”அய்… அஸ்க்கு புஸ்க்கு. பாட்டி ஊட்லதான் இருக்கு. அது எங்கயும் போவாது”

“”சரி… அடுத்தது இங்கிலீஸ்ல ஒரு வார்த்த கத்துக் குடுக்கட்டுமா…?”

“”இங்கிலீசல்லாம் வராது” முகம் சுளித்துச் சொன்னாள்.

“”வரும்புள்ள… சரி எழுதலேன்னாப் பரவாயில்ல. வாயாலயாவது சொல்லிப்பாரு. ஐ லவ் யூ” என்று அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவாய் அவளைப் பக்கத்தில் இழுத்து நிறுத்திச் சொன்னேன். என் பிடியிலிருந்து விலகிக்கொண்டே, “”ச்சீ அசிங்கம் கெட்ட வார்த்தையெல்லாம் வருது” என்று சிணுங்கலாய்ச் சொல்லி நகர்ந்து நின்றாள்.

“”கெட்ட வார்த்தையெல்லாம் இல்ல புள்ள. நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா இணைக்கிற வார்த்த. எங்கே சொல்லு பாப்போம்” என்றேன்.

“”அய்யே… மூஞ்சப்பாரு… நீ கடுதாசி எழுதவேக் கத்துக் குடுக்க வேணாம். நானே எழுதிக்கறேன்”

“”ஏய் அலமேலு அங்க என்ன பண்ற…? அவன்ட்ட என்னடி வார்த்த அடிச்சிக்கிட்டிருக்க. சாணி அள்ளிட்டியா?” உள்ளேயிருந்து அம்மாவின் குரல் தெரிந்தால் போல் கேள்வியாய் வந்து கொண்டிருந்தது.

“”ம்… ஆச்சிம்மா” என்றவள், “”அம்மா கூப்பிட்

றாங்க…” என்று மெதுவாய்ச் சொன்னாள்.

“”தெருவுல போய் ஏன்டி நின்னுக்கற? அப்படியே தோட்டத்தாண்ட வரவேண்டியதுதான…?” சோறு வாங்குவதற்காகச் சொன்னாள் அம்மா. வெளிப்பக்கமாய் வீட்டைச் சுற்றிக் கொண்டு வந்து நின்றவள், “”வந்திட்டேம்மா…” என்றாள்.

“”பழையத வாங்கிட்டுப் போறியா இல்ல தோசை வார்க்கறேன். இருந்து அதை வாங்கிட்டுப் போறியா…?” என்றாள் அம்மா.

தெருவிலிருந்து வீட்டினுள்ளேயே வந்து தோட்டத்துப் பக்கமாய் அம்மாவின் அருகில் நின்று கொண்டு, அவள் சொல்வதற்கும் முன்பாகவே நான் முந்திக் கொண்டு, “”இருந்து தோசை வாங்கிட்டுப் போவாம்மா..” என்றேன்.

“”அத அவ சொல்லுவா. அதிகப் பிரசங்கி போடா அந்தப் பக்கம்” என்று என்னை உள்ளே துரத்தினாள் அம்மா.

“”பழையதே போதும்மா. தோசை பொழுதுக்கும் தண்ணித் தாகம் கட்டாதும்மா” என்று அவள் சொல்வது என் காதுகளில் விழுந்தது.

“”சரி வாங்கிட்டுப் போ…” என்றவள், “”எங்கேடி உன் பாட்டியக் காணோம்?” என்றாள்.

“”பாட்டி ஒடம்பு சரியில்ல. வர ரெண்டு நாள் ஆவும்னு சொல்லச் சொல்லிச்சி” மெதுவாய் அம்மாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள். எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காய் அவள் மெதுவாய்ச் சொன்னது அம்மாவுக்கு. அது புரியாதவளாய், “”என்னடி பாட்டிக்கு ஒடம்பு சரியில்லேன்றத ஏதோ ரகசியம் சொல்றாப்பல சொல்ற?” என்று வேகமாய்க் கேட்டு எனக்கு காதில் விழும்படியாகச் செய்து விட்டாள் அம்மா.

வழக்கமா கெழவியும் பேத்தியுமாவே வருவாங்க போவாங்க. செல நாள்ல கெழவிக்கு ஒடம்பு சொகமில்லேன்னுட்டு அலமேலுதான் வருவா. அப்பல்லாம் “”அவ மாட்டுக்கிட்ட படற அவஸ்தை இருக்கே.. சகிக்காது. அவ பாட்டிக்கு ஒடம்பு சரியில்லையாம். பாவம் ஒண்டியாக்கெடந்து கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கா. போய் கூடமாட ஒத்தாசப் பண்ணுடா” ன்னு ஒருநாள் அம்மா சொன்னாங்க. அதிலிருந்து நாந்தான் அப்பப்ப உதவி பண்ணிட்டிருந்தேன். தொழுவத்துல சாணி அள்ளிப் போடறதுக்குத் தோதா, மாட்ட அவுத்து தோட்டத்தில உள்ள மரங்கள் மொளக்குச்சி போன்றவைகளில் மாத்திக் கட்டுவேன். அதுவும் அவ மேல பிரியம் இருந்ததாலதான் செஞ்சிட்டிருந்தேன். சாணி அள்ளிப் போடறதுல ஒத்தாசைப் பண்ணிட்டு இருந்ததே வழக்கமாயிடுச்சி.

“”குளுருல காலையிலயே ஏஞ்சி நீ வரவேணாம். சாணி அள்ளிப் போடுற வேலய நான் பாத்துக்கறேன். ஆடு, மாடு உடுற நேரத்துக்கு வந்தாப் போதும்” ன்னு கெழவியப் பேசி சரிக்கட்டிட்டா. எல்லாம் நாங்குடுத்த ஐடியாத்தான்.

அம்மா லேட்டாத்தான் எழுந்திரிப்பாங்க. இவ பளபளன்னு விடிய வந்திடுவா. எப்பவும் ஏழு மணி எட்டு மணி வரையும் தூங்குற நான், இவளோட பழக ஆரம்பிச்சப் பிறகு தூக்கம் வர்றதில்ல. எப்ப விடியும்ன்னுதான் பாத்திருப்பேன். என்னையும் மீறி தூங்கனாத்தான் உண்டு. அப்படியும் விடியாத நாலு நாலரைக்கெல்லாம் முழிச்சிக்குவேன். அவ வந்ததும் ரெண்டு பேருமாத்தான் தொழுவத்துக்குப் போவோம்.

கட்டுத்தறியில கெடக்கிற சாணிய இரும்பு மொறத்தால சொருவி அள்ளி கொடித் தட்டுல ரொம்பற வரையிலும் போடுவேன். கீழே எரையறது, மொறத்துல சிக்காதது எல்லாத்தையும் கையால தெரிச்சி-வழிச்சி அள்ளி தட்டுல போடுவா. அவ ஒரு பக்கமா, நான் ஒரு பக்கமா ரெண்டு கையாலும் புடுச்சி தூக்கியாந்து குப்பையிலக் கொட்டுவோம். அது முடிஞ்சதும் ஆட்டுத் தொழுவம். ஆட்டுப் புழுக்கையெல்லாம் மூத்திரத்துல நனைஞ்சி பொதபொதன்னு ஊறிப் போயி, ஆடுங்க அது மேலயே படுத்திருந்ததுல தரையோடு தரையா ஒட்டிப்போய் இருக்கும். உள்ள நுழைஞ்சதும் நாத்தம் அடிக்கும். எனக்கு கொமட்டலாத்தான் இருக்கும். இருந்தாலும் அவகூட இருந்ததால அதெல்லாம் பெரிசாத் தெரிஞ்சிக்கல. இரும்பு மொறத்தப் போட்டு ஒரு கடேசியிலயிருந்து சொரண்டிட்டு வந்திடுவேன். அவ அடிகட்ட வெளக்கமாத்த போட்டு வருக்கு வருக்குன்னு தேச்சி பின்னாடியே கூட்டிட்டு வந்திடுவா. அவ கூடமாட நின்னுக்கிட்டு சும்மா சின்ன சின்ன வேல செய்யறதுக்கே இடுப்பு நாந்தெல்லாம் ஒடிஞ்சிப்போ

றாப்பல இருக்கும். என்னமாத்தான் இம்மாம் வேலையும் செஞ்சிட்டு ரவ பழையதத் தின்னுட்டு பொழுதிக்கும் ஆடு, மாட மேய்ச்சிட்டு வராளோ தெரியிலன்னு அவ மேல உள்ள பிரியத்தால சங்கடப்படுவேன்.

ஒருசமயம் மாட்டுத் தொழுவத்தில இருக்கும்போது ஈ அடிக்கிறேன்னு ஒரு மாடு, வாலால அடிச்சிக்கிட்டே கொஞ்சம் திருப்பி சிலும்பினதும் பயந்து போய் வேகமா நவுந்தவ மூத்திரத்துல வழுக்கி உழுந்திட்டா. பதறியோடி அவளத் தொட்டுத் தூக்கிட்டு இருந்தேன். வாசல்ல தெளிக்க சாணம் எடுத்துப் போறதுக்காக அந்த நேரம் பாத்து அம்மா உள்ள வந்திட்டாங்க. சட்டுன்னு அவளும் எழுந்திட்டாள்.

“”ஏன்டி பாத்து செய்யக்கூடாது. அதான் சிலும்புற மாடுன்னு தெரியுமில்ல. எத்தன நாளு செஞ்சாலும் புத்தியிருக்காதுடி”ன்னு அவள ஏசிக்கிட்டே எம்பக்கம் திரும்பி, “”என்னையும் மொறைச்சாங்க. இனிமே அவ வேலய அவ பாத்துக்குவா. நீ உன் வேலயப் பாருடா” ன்னு சொல்லிட்டு அம்மா கொஞ்சபோது கையில சாணிய எடுத்துக்கிட்டு என்னையும் வெளியேத்திட்டுப் போயிட்டாங்க.

எத்தனையோ வருஷமா அந்நியோன்யமா பழகுனாப்பல ஓர் உணர்ச்சி – வேகம் எனக்குள்ள பரவ ஆரம்பிச்சிடுச்சி. படிப்பு முடிஞ்சி வேலை தேட ஆரம்பிச்சிருந்தேன். அப்பத்தான் அவளுக்கும் கிழவி மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்திருப்பதாக அம்மா சொல்லக் கேட்டு அதிர்ந்து போனேன். என்ன நெனச்சாங்களோ தெரியில… சொல்லி வைச்சாப்பல எனக்கும் அதிரடியா கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சாங்க.

நான் அலமேலுவ மனசுல நெனச்சிக்கிட்டு எனக்கு இப்ப கல்யாணம் வேணாமுன்னு பல தடவ சொன்னனேயொழிய, ஒருதடவ கூட அவதான் வேணும்ன்னு சொல்லவேயில்ல. அவ தாழ்ந்த சாதிப் பொண்ணுன்றதுனாலயோ…? என் வீட்டு வேலைக்காரின்றதுனாலயோ…? இல்லன்னு மட்டும் நிச்சயமா சொல்ல முடியும்.

நான் அவள விரும்பறேன்றத அம்மா புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். அவுங்களுக்குத் தெரியாதுன்னு தவறாக நான் புரிஞ்சிக்கிட்டு, ஏமாந்திட்டேன். அதுதான் உண்மை. அந்த நேரத்துல-வயசுல எனக்கு கல்யாணம் வேணாமுன்னுதான் சொல்ல முடிஞ்சிதே ஒழிய, அவளக் காதலிக்கறேன்னு சொல்ற அளவுக்கு தைரியம் வரல. அதே சமயத்துல நேருக்கு நேரா என்னை அவளோட சம்பந்தப்படுத்தி ஒரு தடவையாவது ஏசியிருந்தாங்கன்னா எனக்கு அந்தத் துணிச்சல் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அப்படி எதுவும் நடக்கல. அவளும் என்னைப் பார்க்க வருவதை சட்டென்று நிறுத்திக் கொண்டாள். நான் ஒருநாள் கிழவியிடம் கேட்டேன். “”அலமேலு இப்பல்லாம் ஏன் வர்றது இல்ல…?” என்றேன்.

“” கண்ணாலம் கட்டிக்குடுக்கலாம்னு யோசனையா இருக்கோம் தம்பி” என்றார்கள்.

எப்பொழுதும் அவள் நினைவாகவே, அவளையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்த எனக்கு, அவள் இல்லையென்று ஆன பிறகு அவளே நேரா என்னிடம் பேசுவதுபோல நினைத்து அவள் எழுதிய கடிதங்களையெல்லாம் நான் தனியாக இருக்கும்பொழுது படித்திருக்கிறேன். படிப்பதற்காகவே தனியாக இருக்க வேண்டுமென்று விரும்புவேன். மனம் விட்டு படிப்பேன். மனம் விட்டு சிரிப்பேன். ஏன்…? சில நேரங்களில் அழுதுமிருக்கிறேன். அவளால் வரும் அழுகை என்பதையறியாமல் ஆறுதல் சொல்லும் மனைவியைப் பரிதாபமாய்க் காணுகிறபோது எனக்குள் வேதனை அதிகமாகும். அவள் எனக்கு எழுதிய கடிதங்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாக கிழித்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாய் அவள் பார்க்க நேரிட்டாலும், நான் எழுதும் கதைகளில் ஏதோ சரியாக வராததினால் கிழித்துக் கொண்டிருக்கிறேன் என்றுதான் அவள் நினைக்கக்கூடும். அந்தத் தைரியத்தில்தான் மனைவி வீட்டில் இருக்கும்போதே அவளின் கடிதங்களை எடுத்துப் படித்து கிழித்துக் கொண்டிருக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு ஒருநாள் அவள் தன் கணவன் மற்றும் பாட்டியோடு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள், அம்மா கொடுத்த சீதனத்தை மடியேந்திப் பெற்றுக் கொண்டவளாய் எனக்கு மட்டும் தெரியும்படியாக ஒரு காகிதத்தைக் கீழே போட்டு ஓரக் கண்ணால் சமிக்ஞை செய்தாள். என்னை எடுத்துக் கொள்ள அறிவுறுத்திய அவள் கடைசியாய் எனக்கு எழுதியிருந்த அந்தக் கடிதம்…

நினைவுகள் எல்லாக் காலங்களிலும்-நேரங்களிலும் சாதாரணமாக நிகழ்வதில்லை. சந்தர்ப்பம் வாய்க்கிறபோது அது தானாகவே ஏற்படுகிறது. பழைய நினைவுகளெல்லாம் கேட்காமலே கிடைக்கின்ற சுகமான வரங்கள்தாங்கறது என்னோட அசைக்கமுடியாத நம்பிக்கையாயிருந்தது. ஆகவே அவை நெஞ்சை ஆக்ரமித்துக் கொள்கிறபோது அதனை முழுமையாக அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். ஏனென்றால் அவை மீண்டும் வராமலேயே கூட போய்விடலாம் என்பது என்னுடைய எண்ணம். அதனால் அவள் எனக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை மறுபடியும் படிக்க வேண்டும் போல தோன்றியது. படித்தேன். அதில் கடைசி வரியாக, “என்னை உங்களிடமிருந்து தூக்கி எறிந்ததுபோல இந்தக் கடிதத்தையும் கிழித்து தூக்கி எறிந்து விடுங்கள். என்னைப் போல், என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாதிருக்கட்டும்’ என்று எழுதியிருந்தாள்.

நடுநிசி நேரம். படித்துக் கொண்டிருக்கும்போதே, நான் நினைத்ததுப் போலவே திடுதிப்பென்று என் மனைவியின் குரல். “”தூங்காம ஒடம்ப கெடுத்துக்கிட்டு இன்னுமா எழுதிக்கிட்டிருக்கீங்க…?” என்று கேட்டுக் கொண்டே நான் இருந்த அறையினுள் எட்டிப் பார்த்தாள். வழக்கம்போல இன்றும் கதைதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். அவள் உள்ளே வருவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காததினால் திடுக்கிட்டுப் போனேன். சுதாரித்துக் கொண்டு, “”ஒரு கதைக்கு முடிவு சரியாக வரல. அதான் எழுதி எழுதி கிழிச்சிக்கிட்டிருக்கேன்” என்று பதற்றமில்லாமல் சொல்லி கையிலிருந்த அந்தக் கடைசிக் கடிதத்தையும் கிழித்து மூலையில் போட்டேன்.

– கோவிந்தராசு.ப (பெப்ரவரி 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *