கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 4,875 
 

கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான்.

அவன் கால்களை நீட்டிய போது இடது கால் பெருவிரலை கௌவுவது போல் பற்றிக் கொள்ளும் பார்வதி, இழுத்து அதனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டாள்.
கிருஷ்ணனின் முகம் வேதனையில் பொங்கி வாடிக்கிடக்கிறது. பற்கள் நெரிபட கண்கள் மூடுண்டு, இமைகள் அழுந்திக் கிடக்க, சகிப்புடன் ‘மறுசூடு எப்பொழுது விழும்’ என மனம் துடிக்கிறது.

ஆணி குத்திய இடத்தின் அடிபாகத்தில் முதல் சூட்டை வைத்த நேரத்தில் சுளீரெனச் சதையைப் பியத்துக் கொண்ட அக்கினியின் ஊடுருவலைப் பொறுக்க முடியாமல் துடித்து காலை உதறி விருட்டென இழுத்த பொழுது பார்வதிக்கும் புருஷனின் வேதனை தாக்குகின்றது.

சூடு என்றால் லேசான மிதி சூடா அது, சுள்ளென உச்சம் தலைவரை வெட்டிக் கிழித்துக்கொண்டு ஊடுருவிச் சதையைத் தீய்க்கிறதே.

கிருஷ்ணன் கட்டுமஸ்தான உடல்வாகு படைத்த ஆண்பிள்ளைதான். கல் சுமக்கும், உடைக்கும் கூலியாளின் சரீரம் திடகாத்திரமாகத்தான் இருக்கும். என்றாலும் பச்சைச் சதையை நெருப்பால் பொசுக்குவது விளையாட்டா என்ன?

பார்வதிக்கு வைத்தியம் தெரியுமோ என்னவோ, இரவு வெகுநேரம் சென்று திரும்பிய புருஷன் வேலை செய்யும் பொழுது காலில் ஆணி குத்திவிட்டதாகச் சொன்ன பிறகு அவளுக்கு அம்மா தெய்வானையின் நினைவு வந்தது.

சிறுமியாக இருந்த காலத்தில் ஒரு நாள் இப்படித்தான் பார்வதி காலில் ஆணியைக் குத்திக்கொண்டு வந்தபோது, அம்மா அவளைப் படுக்க வைத்தாள். காலை நீட்டிப் பிடித்து சதை கிழிந்த இடத்தில் ஓர் உப்புக் கல்லை அழுந்தப் பிடித்து தேங்காயெண்ணெய்த் திரியால் சூடு வைத்தாள்.

ஒன்று, இரண்டு சூடா…… அடேங்கப்பா ! சிறுமி பார்வதியின் மரண ஓலத்தால் பெரும் அல்லோல கல்லோலமாகி விட்டது.

அந்த அனுபவம் இன்று கைகொடுக்கிறது.

***

கிருஷ்ணன் பார்வதி தம்பதிகள் இல்லற வாழ்வின் புதிய குருத்துக்கள். திருமணம் முடித்து மூன்றே மூன்று மாதங்கள்தானாகின்றன. வேலைக்குப் போனால் உடம்பில் ஏதாவது ரணகாயங்களுடன்தான் கிருஷ்ணன் வீடு திரும்புவான். ஆனாலும் அவன் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இரவில் குப்பிலாம்பின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்த ரணகாயங்களைப் பார்க்கின்ற போது பார்வதி வெலவெலத்துப் போவாள்.

”என்னங்க, முட்டுக்கையிலே இப்படி தோல் உரிஞ்சி கெடக்கு….” இப்படி எதையாவது கேட்டு ஏங்குவாள்.

முகத்திற்கு நேராகத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் குப்பிலாம்பின் வெளிச்சத்தில் கிருஷ்ணனின் முகமெங்கும் முத்து முத்தாக வியர்வை மணிகள் முகிழ்த்துக் கிடப்பதும், முகம் நடுங்குவதும் தெரியும்.

கிருஷ்ணன் ‘கடகட’ வெனச் சிரிப்பான். முழங்கையை மடித்து தூக்கிக் காயத்தைப் பார்த்துவிட்டு “சே….. இதென்ன காயம். ஒருநாள் பியதாச ஒசரமான பில்டிங் மேலே சிமிந்தி தூக்கிக்கிட்டுப் போர நேரத்துலே கால் வழுக்கி மேலே இருந்து பந்து மாதிரி பறந்து வந்து ரோட்டிலே உழுந்து மண்டை வெடிச்சி செத்துப் போனானே….”

‘ஐய்யய்யோ ‘ வெனப் பார்வதியின் அலறலால் குடிசை நடுங்கும். அவனால் அந்தக் கதையை முடிக்க முடியாது.

“சே…. சே…. என்ன பொறவி நீ. இதுக்கெல்லாம் போய் இடி விழுந்த மாதிரி கத்துரே…. தொழில்னா அதுலே ஆபத்து இருக்கும். நாமதான் கவனமாச் செய்யணும்.” அவன் மிருதுவான குரலில் சொல்வான்.

“என்னங்க, இந்த கட்டுமான தொழில் விட்டா வேற தொழிலே இல்லியா…?”

“இருக்கு.”

“அப்ப செய்யுங்களேன்.”

அப்பொழுதும் அவன் அந்த புலித்தேவன் சிரிப்பைச் சிந்துவான்.

“என்ன சிரிப்பு இது? வில்லன் வீரப்பா மாதிரி!” நாடியில் லேசான இடி விழும்.

அவளின் கண்டிப்பு கலந்த ஒரு செல்லமான சிணுங்களுடன் விரல்கள் கிருஷ்ணனின் முகவிதானத்தில் வருடலுடன் அபிநயிக்கும்.

”சிரிக்காம முடியுமா? எங்கப்பன் செய்தது கட்டுமான வேலை. நான் செய்யுரதும் அதுதான். எங்கப்பன் இதத் தவிர வேற எத படிச்சுக் கொடுத்தான். பேரு எழுத நாலு எழுத்தாவது, உம் கும் சம்பளம் வாங்குறதே கையடையாளம் போட்டுத்தானே! இந்த லட்சணத்துலே வேற வேலை எப்படிக் கெடைக்கும்…” கிருஷ்ணனின் குரலில் வெறுப்புத் தொனிக்கும். கண்களில் நீரின் வெளிச்சம் மினுமினுப்புக் காட்டும். பீடியைப் பற்ற வைத்து உறிஞ்சியவாறே யோசனையில் ஆழ்ந்து
போவான்.

தனக்கு நாலு எழுத்துக்களைக் கற்றுத் தராத தந்தை மீது அவன் மனம் வசை பாடும்.
யோசனைகள் அலைகளென் உருளும். பார்வதிக்கு சங்கடம். என்னடா அவருயன்சு தெரியாம என்னமோ சொல்லி துக்கம் உண்டாக்கிட்டேனா’ என நினைத்து பதறி கண்களில் நீர் துளிரப்பாள்.

அவன் யோசனையிலிருந்து விடுபட்டு, அவள் நாடியைப் பிடித்து கண்களை ஆழமாக ஊடுருவி, கன்னங்களை வருடி “பார்வதி இந்த ஒலகத்திலே என்ன நேர்மையான தொழிலையும் செய்யலாம். அது அசிங்கம் அள்ளுறதா இருந்தாலும், இல்லே கல்லொடைக்கிறதா இருந்தாலும் பரவாயில்லை. அநீதியானதாக விருக்கக் கூடாது. மத்தவங்கப் பொருள் அபகரிக்கிறதாக விருக்கக்கூடாது. எதப் படிச்சிக் கொடுக்காட்டியும் என் தகப்பன் இதப் படிச்சிக் கொடுத்திருக்கான்…” அவன் சொல்வான்.

வார்த்தைகளில் பெருமை துளிர்க்கும்.

“நான் அத சொல்லலிங்க…”

“இங்கே பாரு. எங்க மொதலாளி கிட்ட நான் சின்ன காலத்துலேயிருந்து வேலை செய்யுரேன். சிமிந்தி போடுரதுலேயோ கல்லு ஒடைக்கிறதிலேயோ என் கூட எவரும் நிற்க முடியாதுன்னு மொதலாளி சொல்வாரு. அதுலே நான் ஒரு சிங்கம். என் கை கால் பலத்துலே அவருக்கு அவ்வளவு நம்பிக்கை …”

பெருமையின் ஒளிர்வில் அவன் முகத்தில் பிரகாசிப்பு தக தகக்கும்.

“இந்த ரப்பர் கம்பெனி ஒபிஸ் ராஜமாளிகை மாதிரிப் பெரிய கட்டிடம். அது நெருப்புப் புடிச்சு மூளியாக நிண்ட நேரம் அதை ஒடச்சி கட்டிக் கொடுக்கணும்னு எட்வடைஸ்மன் வந்துட்டுதா எத்தனையோ கண்ராக்காரங் களெல்லாம் வந்துட்டு பார்த்துட்டு ‘அடேயப்பா என்னா பில்டிங் இது, இத எப்படி ஒரு வருஷத்துக்குள்ளே மறுபடியும் கட்டிக் குடுக்கறதுன்னு!’ வாய்ப் பொளந்துட்டு போய்ட்டாங்க. ஆனா எங்க மொதலாளி…”

அவன் முழுக்கதையையும் சொல்லி முடிக்காமல் புலித்தேவன் புன்னகையை உதடுகளில் மிளிரச் செய்தான்.

கன்னத்தில் கை வைத்து அவன் கதை சொல்லும் அழகை ரசித்துக் கொண்டிருந்த பார்வதி ‘உம்… அப்புறம்’ என கதைக்கு ஊறுகாய் வைக்கிறாள்.

“அட கிருஷ்ணா …! சிங்கம் மாதிரி நீயும், இரும்பு மாதிரி உன் கை காலும் இருக்கிற நேரத்துலே ஒரு வருஷம் என்னப்பா ஆறு மாசத்திலே கடகடன்னு கட்டிடம் எழும்பிடுமே’ என்று முதுகைத் தட்டினாரு…”

கிருஷ்ணனின் முதலாளி மகாத்மியம்’ தொடர்கதையாக நீண்டு செல்லும்.

***

மூன்று மாதங்கள் பனிக்கட்டிகளென கரைசலாகின. கட்டிடத்தின் முக்கால் பாகமும் சடசடவென சரிந்துவிட இரும்புத் தூண்களும் அஸ்திவார இரும்பு உருளைகளும் பிடுங்கியெறியப்பட்டன. வாகன வீதியை ஒட்டினாற்போலுள்ள கட்டிடம் டங் டங் என உளிகளின் ஓசை.

இருபது முப்பது தொழிலாளர்கள் கிருஷ்ணனைச் சுற்றும் உப கிரகங்களாகத் தொழிற்பட்டார்கள். இரவும் பகலும் கடுமையான வேலை. எரிந்த கட்டிடம் ‘மள மள’ வென சரிந்து கொண்டிருந்ததுடன் அதன் பெறுமதிமிக்க செங்கற்கள் சேதமின்றி பெயர்த்தெடுக்கப்பட்டன. முதலாளிக்கு ரெட்டை இலாபம்.

வெயிலென்ன, மழையென்ன, பனியென்ன உற்சாகமான வேலை.

இந்தக் கட்டிட வேலை முடிந்த பின்னர் முதலாளி லட்சாதிபதியாகி விடுவார். அடேயப்பா! அவருக்கு எவ்வளவு பண நோட்டுக்கள் சுளை சுளையாகக் கிடைக்கப் போகின்றன. அப்படி நினைப்பதுவும் கிருஷ்ணனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.

***

கோடை வெயிலின் ‘சுள் ‘ளென்ற தகிப்பு. வாகனங்களின் காதைப் பிளக்கும் இரைச்சலின் மத்தியில் படரும் தூசி.

‘ச் சோ , அப்பப்பா’ என்ன வெயில்.

அங்கலாய்ப்புடன் நடமாடும் பாதசாரிகள்.

பகல் பொழுது.

வெம்மை தார் வீதியையும் உருகச் செய்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணன் தூண் ஒன்றைச் சரித்து விட்டு ‘சட்’டெனத் தாவிப் பாய்கின்றபோது ‘நறுக்’ கென ஆணியொன்று காலினுள் ஊடுருவுகின்றது.

‘ஆ! அம்மா !’

துருப்பிடித்த ஆணி இரண்டங்குலம் புதைந்து விட்டது. இடது கால் துடித்தது.

நிலத்தில் உட்கார்ந்து வெடுக்கென பிடுங்கியெறிந்து விட்டான். லேசான இரத்தக் கசிவு, விண் விண்’ னென மெதுவான வலி கொஞ்ச நேரமிருந்தது. அவனும் நொண்டி நடந்து அதனை வேலை மும்முரத்தில் முற்றாகவே மறந்து போனான். வீடுவந்த பின்னர் வலி அதிகரிக்கவே பார்வதியின் உப்புக்கல் ஒத்தடம் தொடங்கியது.

***

இரவு லேசாகக் காய்ச்சல். காலின் மீது பாறாங்கல் வைக்கப்பட்டது போல் கனம். சதைக் கோளங்கள் மரத்துப் போகின்றன. நித்திரையில் வேதனை முனகல். பார்வதியைப் பயம் கௌவிக் கொள்ள அவள் அவன் பக்கத்திலேயே ‘கொட்டுகொட் டென விழித்துக் கொண்டிருந்தாள். நடுச்சாமம் கடந்த பின்னரே கண்கள் அயர்ந்தன.

விழிப்பு வந்தபோது வெயில் சுள்ளென எரித்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் முதலாளியின் கார் வேறு குடிசை வாசலில் நின்று கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் முதலாளியின் பழைய வாகனம் ‘கடகட’ வென நடுங்கிக் கொண்டிருக்கிறது.

“என்னப்பா இப்படித் தூங்குறே… ஒன்ன தட்டி எழுப்ப நான் வரணும் போல….”

‘பள பள’ வென பொலிசாகிவிட்டிருந்த முதலாளி தங்கப்பல் டாலடிக்க கிண்டலும் நக்கலுமாகக் கேட்டார்.

கிருஷ்ணன் கண் பீளையைத் துடைத்து நொண்டி நொண்டி அவரை நோக்கி நடந்தான்.

“என்ன நொண்டுரே…..?”

“ஆணி குத்திட்டு மொதலாளி!”

”அட அதுக்கு இப்படி தூங்கிட்டிருக்கலாமா? மருந்து கட்டிட்டா போச்சி…. அது கெடக்கு. சீக்கிரம் வா. நெறைய வேல இருக்கு. இந்த மாசத்துக்குள்ளே கட்டிடத்தை தரமட்டமாக்கிடணும்.” ரொம்பவும் கரிசனையுடன் சொன்னார்.

கிருஷ்ணன் காரில் ஏறிக்கொண்டான். அது பறந்தது.

நிலைக்கதவை பிடித்தவாறு நின்றிருந்த பார்வதி கன்னத்தில் கை வைத்தவண்ணம் குடிசை வாசலில் அமர்ந்தாள். கண்களில் நீர் முகிழ்த்து வழிய , அதைத்துடைத்த வண்ணம், திடீரென வெயில் மறைவதையும், அடிவானில் சூல் கொண்ட மழை மேகம் உருண்டு திரள்வதையும் வெறித்தாள்.

ஆண்டவனே! மழை வேற வரப்போவுதே! மனம் அழுதது.

அன்று முழுவதும் கடுமையாக மழை பொழிந்தது. எனினும் அந்தக் கட்டிடத்தில் டங் டங் டங் கென்ற அலவாங்குகளின் சப்தம் ஓய்வு கொள்ளவில்லை.

***

கிருஷ்ணன் காய்ச்சலால் படுத்துவிட்டான். ஏழெட்டு நாட்களாகப் படுத்த படுக்கை. காய்ச்சல் இறங்கவில்லை. ஆணி குத்திய கால் கடூரவலி கொடுத்து சர்வாங்கத்தையும் விண்ணென உதறலெடுக்கச் செய்தது.

முதலாளியின் கார் எந்நாளும் குடிசை வாசலுக்கு வந்தது.

மருந்து குடித்து வீட்டில் சும்மா கிடப்பது பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்குச் சென்று கணவனை வார்ட்டில் சேர்ப்பது என பார்வதி முடிவு கொண்டாள்.

முதலாளியின் காரில் தான் அவன் கொண்டு செல்லப்பட்டான்.

டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

“மிகவும் தாமதித்துவிட்டாய் அம்மா…” அவர் துன்பமுடன் முணுமுணுத்தார்.

”என்ன ….?”

திகிலில் மருண்ட மனத்தவளாக பார்வதி கைகளைப் பிணைகிறாள், பிசைகிறாள்.

”ஆணி குத்துனகால் மொழங்காலுக்கு மேலே வெஷம் ஏறி பழுத்துட்டு. எல்லாமே சீழோடி கெடக்கு. முட்டுக் காலுக்குக் கீழே கழற்றுனாதான் உயிருக்கு ஆபத்தில்ல…”

‘ஓ’ வென அலறுகிறாள் பார்வதி.

அதற்குப் பிறகு முதலாளியின் கார் கிருஷ்ணனைத் தேடிவருவது நின்றுவிட்டது.

– நூல் தலைப்பு: அன்னையின் நிழல், மணிமேகலைப் பிரசுரம், முதல் பதிப்பு: 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *