காபி கோப்பைக்குள் நிறையும் கடல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 11,757 
 

செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா… வராதா எனப் போக்குக் காட்டும் மழையின் முதல் துளிபோல் ஒரு சத்தம். மழை கிளர்த்தும் மண்வாசனையைப்போல ஃபில்டர் காபிக்கும் ஒரு வாசம் உண்டு. வீடு முழுவதும் நிறையும். அதுவும் அத்தையின் காபி, தெரு முழுவதும் வாசம் நிறைக்கும்.

இவ்வளவு சீக்கிரமாகவா அத்தையும் மாமாவும் வந்து விட்டார்கள்? கைக் கடிகாரத் தைப் பார்த்தேன். இல்லை, நான் தான் தாமதமாக வந்திருக்கிறேன். எனக்குத்தான் அலுவலகம், வேலை, விடுமுறை எல்லாம். அத்தைக்கும் மாமாவுக்கும் அதெல்லாம் இல்லை. ஆனால், பணிக்குத் தயாராகும் பரபரப்புடனும் நேர்த்தியுடனும்தான் தினமும் கிளம்புவார்கள். மாலை ஐந்து மணிபோல கிளம்பி, சங்கு முகத்துக்குச் சென்றால், திரும்புவதற்கு எப்படியும் ஏழு மணி ஆகும். அவர்கள் கிளம்புவதும் திரும்புவதும் அத்தனை அழகு. விடுமுறை நாட்களில் அதை வேடிக்கை பார்ப்பதுதான் எனது உச்சபட்ச சந்தோஷம்.

மாலை ஐந்து மணியானால் போதும். ஏதோ ரயிலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பதற்றத்தில் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டு மாமா பரபரவென வெளியேறும் காட்சி, ஒரு சினிமாவைப்போல் இருக்கும். கடற்கரையில் அப்படி என்னதான் பேசுவார்கள் எனத் தெரியாது. சுமார் ஏழு மணிவாக்கில் திரும்பிவருவார்கள். அப்படி வரும்போது அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். அத்தை மட்டும் வெடுக்கென உள்ளே நுழைந்துவிடுவார். அடம்பிடிக்கும் குழந்தையைக் கதறக்கதற வீட்டுக்கு அழைத்து வருவதுபோல் இருக்கும் அவரது உடல்மொழி. கூர்ந்து கவனித்தால், அவர் காபி போடும்போது தனக்குள் சின்னதாகப் புன்னகைத்துக்கொண்டிருப்பார். மாமா, அப்படி அல்ல. வாசலில் மணல் துகள்களை எல்லாம் தட்டி ஒருமுறைக்கு பலமுறை கால்களைக் கழுவிய பின்னரே உள்ளே வருவார். அவர் வரும்போது காபி தயாராக இருக்கும். அந்த நேரத்தில் மாமாவின் முகத்தில் அலாதியான அமைதி இருக்கும்… இதைத் தாண்டி வாழ்க்கையில் வேறு எதுவும் தேவை இல்லை என்பதுபோல. அந்தப் பரிபூரணமான சாந்தத்துக்குக் காரணம் கடலா… காபியா… அத்தையா என எனக்குத் தெரியாது.

அத்தை கையில் வைத்த காபி, அலுவலக எரிச்சல்களை எல்லாம் ஆற்றிக்கொண்டிருந்தது. முற்றத்தில் உட்கார்ந்து மாமாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

‘போரடிக்கலையா மாமா? ஒரு நாள் விடாம நாப்பது வருஷமா பீச்சுக்குப் போறீங்களே?’ என்றேன்.

‘எங்க ஒரு நாள் விடாம போயிட்டிருக்கோம்… நடுவுல ஒரு மூணு மாசம் விட்டுப்போச்சு. அப்போ என்னை சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் போட்டான். 83-லதானேடி?’ என, உள்ளே குரல்கொடுத்துவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் பேச்சைத் தொடர்ந்தார். ‘மூணு மாசம்தான். யார் யாரையோ புடிச்சு, கையில கால்ல விழுந்து, திரும்பவும் இங்கே வந்தாச்சு. அந்த மூணு மாசத்தை எப்படிச் சரிகட்டுறதுனே தெரியலை’ என்றார்.

‘ஏன், சென்னையில் பீச் இல்லையா… இதைவிடப் பெருசா இருக்குமே.’

‘இருக்கு… இருக்கு. பீச்சா அது? உனக்குப் புடிச்சிருந்துச்சாம்மா அந்த பீச்?’ என மீண்டும் உள்ளே குரல்கொடுத்தார்

‘ஒருமுறை அவளைக் கெஞ்சிக் கூத்தாடி சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். மூணாவது நாள் ஊருக்குப் போகணும்னு ஒரே அடம். ஜுரமே வந்துருச்சு. நான் லீவு போட்டு, கொண்டுவந்து விட்ட பிறகுதான் டிரான்ஸ்ஃபருக் கான வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன்.’

அத்தை ஏதோ வேலையாக இருக்கிறார் போலிருக்கிறது. இன்று எங்களது பேச்சில் அவர் கலந்துகொள்ளவில்லை. நான் அலுவலகத்தில் இருந்து எடுத்துவந்த ஒரு பிரின்ட்அவுட்டை மாமாவிடம் நீட்டினேன். ‘இன்னிக்கு நெட்ல இந்தச் செய்தியை அனு காட்டினா மாமா. ரொம்ப உன்னதமான காதல் இல்ல? நீங்க அவசியம் படிக்கணும்னு எடுத்துட்டு வந்தேன்’ என்றேன்.

75 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக மரணித்த ஜோடி ஒன்றைப் பற்றிய செய்தி அது. படித்துவிட்டு மாமா வெகுநேரம் பேசாமல் இருந்தார்.

‘இதை எப்படிம்மா ‘உன்னதமான காதல்’னு சொல்றே?’ என்றார் மெதுவாக. எப்போதும் கணீரெனக் ஒலிக்கும் குரல் அது. இப்போது அதில் கமறலோ அழுகையோ ஏதோ ஒன்று இருந்தது.

‘உனக்கு நான், எனக்கு ‘நீ’ங்கிறதுதான் வாழ்க்கை, உறவு எல்லாம். ஆனா, ‘உனக்கு மட்டும்தான் நான்… எனக்கு மட்டும்தான் நீ’னு எப்படி இருக்க முடியும்? அந்த வாழ்க்கை கொஞ்ச நாளிலேயே சலிப்பு அடைஞ்சுடாதா லதா?’

என்னிடம் பதில் இல்லை.

‘காதல்ங்கிறது, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருக்கிறது இல்லை லதா. ஒருகட்டத்துக்கு மேல அதுதான் ரொம்ப போரடிக்கும். ரெண்டு கண்களும் சேர்ந்து ஒரே பாதையைப் பார்க்கிறது. அதில் நெருக்கம் முக்கியம்… கூடவே கொஞ்சம் விலகலும். உங்க அத்தையும் நானும் பல விஷயங்களில் அனுசரிச்சுப்போயிடுவோம். ஆனா, சில விஷயங்களில் அவ ரசனை வேற… என் ரசனை வேற. அந்த வேறுபாடுகளைப் பார்த்துக்கிட்டு இருந்தா, நாங்க சண்டை மட்டும்தான் போட்டுக் கிட்டு இருப்போம். அவ ரசனைக்கு ஏற்றமாதிரி ஒரு நட்பு வட்டம் இருக்கு… அதே மாதிரி எனக்கும். அந்த இடைவெளி இருக்கிறதாலதான், இந்த நாப்பது வருஷம் பெரிய விஷயமாத் தெரியலை’ என்றார்.

‘ஆனா மாமா, இந்த ஜோடி ஒண்ணா சாகிற அளவுக்குக் காதல் இருந்திருக்கே. இதை ஏன் நீங்க மறுக்கிறீங்க?’

‘அவங்க காதல், ‘ஒருத்தர் செத்தா இன்னொருத்தரும் சாகணும்’னு சொல்ற காதல். அது சரியா… தப்பானு சொல்லத் தெரியலை. அதுல எனக்கு உடன்பாடும் இல்லை, அவ்வளவுதான். எங்க காதல், எங்கள்ல ஒருத்தர் செத்த அப்புறமும் இன்னொருத்தர்கிட்ட ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கணும்னு நினைக்கிறேன். இருக்கும்… நிறைய வடிவங்களில் இருக்கும். இன்னொருவரும் இறக்கிற வரைக்கும் அந்தக் காதலில் திளைக்கணும். பிரபுகூட எங்க காதலின் ஏதோ ஒரு வடிவம்தானே?’

நான் சிரித்தேன்.

‘அதனாலதான் அவரை, உங்கக்கூட பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போக மாட்டேங்கிறீங்களா?’

சூழல், சட்டென இலகுவானது.

”அது வேற… இது வேற லதா. நீயும் அவனும் பீச்சுக்குப் போயிட்டு வாங்க. நிச்சயமா, ‘நாங்களும் கூட வர்றோம்’னு சொல்ல மாட்டோம்’ என மாமா சிரிக்கவும், பிரபு வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

”அது சரி’ என்றபடியே உரையாடலில் இணைந்தான் பிரபு.

நான் ஏற்கெனவே பல முறை கேட்டிருந்த அந்தக் கதையை மீண்டும் சொல்லத் தொடங்கினான். அவனுக்கு 15 வயது இருக்கும்போது, ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் வேறு உடைக்கு மாறித் தயாராக இருந்திருக்கிறான்.

‘எங்க கிளம்பிட்டே?’ என மாமா கேட்டிருக்கிறார்.

‘பீச்சுக்குதான். உங்களோட இன்னிக்கு நானும் வர்றேன்.’

மாமா, பதில் ஒன்றும் பேசாமல் பெட்ரூமுக்குச் சென்றார். வெளியே வரும்போது அவர் கையில் பணம்.

அதை பிரபுவின் சட்டைப்பைக்குள் திணித்துவிட்டுச் சொன்னாராம், ‘பீச் ரொம்பப் பெருசுடா கண்ணா. நீ வேற பஸ்ஸுல போ… வேற இடத்துல உட்காரு. எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடு… என்ன? ஆயாகிட்ட நான் சொல்லிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

”அடடா, நீ இன்னும் அதை மறக்கலியா?’ எனச் சொல்லிக்கொண்டே அத்தை, பிரபுவுக்குக் காபி எடுத்து வந்தார்.

மறக்கவில்லை. ஆனால், பிரபு அதை ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றே தோன்றியது. என் கைகளைப் பற்றிக்கொண்டே கடந்த முறை பிரபு இந்த விஷயத்தைச் சொன்னபோது, அதில் ஒரு சின்னப் பெருமிதம் இருந்தது. ‘என் அப்பாவைப்போலவே நானும் இருப்பேன்’ என எனக்கு சன்னதம் சொல்வதுபோல.

பிரியத்தை, ‘பிரியம்’ என நேரடியாகச் சொல்ல வேண்டியது இல்லையே. இப்போதும் அவன் அதைச் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், நான் உணர்ந்துகொண்டிருந்தேன். காபியின் மணம், மாமாவின் பேச்சு, பிரபுவின் புன்னகை. இந்த வீட்டில் காதலும் ஓர் உறுப்பினர்போல. வெகு இயல்பாக விளையாடவும் சீண்டவும் செய்துகொண்டிருக்கிறது. இன்னதென அதற்கு எந்தப் பாகுபாடும் இல்லை. எங்கள் எல்லோரிடத்திலும் ஒரு குழந்தையைப்போல அது ஆடிக்கொண்டிருந்தது. மனம், ஒரு நெகிழ் நிலையில் இருந்தது.

இந்தத் தருணத்தை நீட்டிக்க வேண்டும்.

‘சொல்லுங்க மாமா, அத்தையை எப்போ பார்த்தீங்க?’

கேட்கச் சலிக்காத கேள்வி அது. மாமாவும் பதில் சொல்ல சலிப்பது இல்லை.

‘இந்தக் கிராமத்திலேயே காலேஜுக்குப் போன முதல் பொண்ணு அவ. அவங்க அப்பா தைரியமா அனுப்பிவைச்சாரு…’ எனத் தொடங்கினார்.

அப்போதுதான் மாமாவுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருந்தது… உத்தியோக நிமித்தமாக காரும். பேருந்து நிலையத்தில் இருந்து காலேஜுக்கு நடந்துபோகும் அத்தைக்குப் பின்னால் மாமாவின் காரும் ஊர்ந்துபோவதை தெருவே வேடிக்கை பார்க்குமாம். இருவரும் பேசிக்கொண்டதே இல்லை.

ஒருநாள் அத்தையின் வீட்டுக்குப் போய் பெண் கேட்டிருக்கிறார் மாமா. அத்தைக்கு, அப்பா மட்டும்தான். அவருக்கு, மாமாவின் தைரியத்தைப் பார்த்து சரியான கோபம்.

”கவர்மென்ட் உத்தியோகம்னா, கண்ணை மூடிக்கிட்டு பொண்ணைக் கொடுத்திடுவோமா? முடியாது போ” என விரட்டியிருக்கிறார்.

‘நீங்க சரின்னா, நீங்க சொல்ற தேதியில கல்யாணம். இல்லைன்னா அடுத்த முகூர்த்தம். எப்படி இருந்தாலும் கல்யாணம் நடக்கும்’ எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறி விட்டாலும், உடல் எல்லாம் நனைந்துவிட்டது மாமாவுக்கு.

அன்று இரவு தூங்கவே இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றம். எல்லாவற்றுக்கும் மேல் அத்தைக்கு இதில் விருப்பம் இருக்குமா என்ற கேள்வி, அவரைக் குடைந்துகொண்டே இருந்தது. அடுத்த நாள் காலை, கல்லூரிக்குப் போக வேண்டாம் என முடிவெடுத்திருந்தார். அலுவலகத்தில் வேலையும் ஓடவில்லை. முன்மதிய பொழுதில் பியூன், அவரிடம் வந்து ‘ஒரு இளம் பெண் உங்களைத் தேடி வந்திருக்காங்க’ எனச் சொன்னார்.

‘காலையில் ஏன் வரல?’ – அத்தை, மாமாவிடம் பேசிய முதல் வார்த்தை. அட்சரம் பிசகாமல் அதே தொனியில் இப்போதும் சொல்லிக்காட்டுவார் மாமா.

‘இல்ல… அது வந்து…’ என அவர் முடிக்கும் முன்பே அத்தையே மீண்டும் பேசியிருக்கிறார்.

‘அப்பா, உங்களை வரச் சொன்னாரு.’

‘இப்பவேவா?’ என, பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை மூட எத்தனிக்கும்போதே இடைமறித்திருக்கிறார்.

‘அவசரம் இல்லை. வேலை எல்லாம் முடிச்சுட்டு சாயங்காலம் பதறாம வாங்க. ‘கவர்மென்ட் வேலை கொஞ்சம் கெடுபிடியா இருக்கும்’னு அப்பாகிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.

மாலை வருவதற்குள், நூறு முறை செத்துப் பிழைத்திருப்பார் மாமா. முதல் நாள் இருந்த வெட்டி ஜம்பத்தை எல்லாம் விட்டுவிட்டு, காரையும் தூரத்திலேயே நிறுத்தி, ஐந்து நிமிடங்கள் நடந்து, அத்தையின் வீட்டை அடைந்திருக்கிறார். பதவிசாக அவர் சேரில் உட்கார்ந்த விதத்தைப் பார்த்து, அத்தை உள்ளுக்குள் சிரித்திருக்க வேண்டும். அரை புன்னகையுடனேயே காபியைக் கொண்டுவந்து தந்தார். இப்போதும் மாறாத அதே சுவை.

பிறகு, அத்தையின் அப்பா வந்திருக்கிறார். அன்று மாமாவிடம் இருந்து வெளிப்பட்ட அதீத மரியாதையுணர்வு அவரை ஆச்சர்யப்படுத்தியிருக்க வேண்டும்.

‘நான் உங்க ரெண்டு பேரு ஜாதகத்தையும் பார்த்து, நாள் குறிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண முடியுமா… இல்லை, அடுத்த முகூர்த்தத்திலேயேதான் வெச்சுக்கணுமா?’ என எடுத்தவுடன் அவர் கேட்டதும் மாமா குழம்பிவிட்டார்.

‘என்னது?’ என அவர் கேட்க…

‘உங்க கல்யாணம்தான்’ எனச் சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார். ஒரே நாளில் எப்படி இந்த மாற்றம் என மாமாவுக்குப் புரியவேயில்லை. புதிரை, அவரே விடுவித்திருக்கிறார்.

‘நேத்திக்கு நீங்க போனவுடன், அரை மணி நேரம் வீடே அமைதியா இருந்துச்சு தம்பி. அப்புறம் காபியைக் கொண்டுவந்து கொடுத்து என் பொண்ணு பேச ஆரம்பிச்சா.’

இதுதான் அத்தை சொன்னது, ‘உங்களுக்கு அவரைப் புடிக்கலைனு தெரியுதுப்பா. பரவாயில்லை. நீங்க யாரையாவது பாருங்க. நான் கட்டிக்கிறேன். ஆனா, அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் நான் சாகிற வரைக்கும் சந்தோஷமா இருப்பேன். நான், உங்க பொண்ணுப்பா; விரோதி இல்லை. அப்படி ஆக்கிடாதீங்க’ எனச் சொல்லிவிட்டுப் பூஜை அறைக்குள் சென்றவள்தான்.

தண்ணீர் இல்லை, சோறு இல்லை, தூக்கம் இல்லை. அடுத்த நாள் காலையில் அப்பா வந்து அழைக்கும் வரை பூஜை அறையில் இருந்து அத்தை வெளியே வரவே இல்லை.

எத்தனை முறை சொன்னாலும் இதைச் சொல்லும்போது குரல் கமறும் மாமாவுக்கு.

‘சாகிற வரைக்கும் அவளைச் சந்தோஷமா வெச்சிருக்கணும்’ என்றார் அத்தைக்கு எட்டாத குரலில்.

அடுத்த நாள், வழக்கம்போல அத்தையை கார் தொடர்ந்தது. வழியில் வாகை மரத்தடியில் அத்தை நின்றுவிட்டார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாமா பேசினார். ‘உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது. உனக்கு என்ன பிடிக்கும்… எது செஞ்சா நீ சந்தோஷமா இருப்ப?’ எனக் கேட்டிருக்கிறார்.

ஒரு நொடிகூட அத்தை யோசிக்கவில்லை. ‘கடற்கரைக்குப் போகணும்’ என்றிருக்கிறார்.

சின்ன வயதில், அப்பா – அம்மாவோடு போனது. வளர்ந்த பிறகு, ‘பெண் குழந்தை எல்லாம் கடற்கரைக்குப் போவது உசிதம் அல்ல’ என, அத்தையின் அப்பா தடுத்துவிட்டார். அன்று முழுவதும் கடற்கரையில் அத்தை ஆடித் தீர்த்தார். சொல்லும்போதெல்லாம் மாமாவுக்குக் கண்கள் நிறையும்.

‘அவ்வளவு சந்தோஷம் அவ முகத்துல’ என்றார்.

‘கல்யாணத்துக்கு அப்புறம் ‘உன்னைத் தினமும் கடற்கரைக்குக் கூட்டிக்கிட்டு வர்றேன். நீ இதே மாதிரி சந்தோஷமா இருப்பேன்னு சத்தியம் செஞ்சு கொடு’ என, தலையில் அடித்து மாமா சத்தியம் வாங்கியபோதுகூட, அந்த வாக்கை இவ்வளவு தூரம் அவர் காப்பாற்றுவார் என அத்தை நினைத்திருக்க மாட்டார்.

எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரைத் துளிர்க்கவைக்கும் கதை அது. அத்தையின் கையைப் பிடித்து அவரது நெற்றியில் முத்தமிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், அத்தை கூச்சப்படுவார். மாமா தவிர, வேறு யாரிடமும் இயல்பாகப் பேசுவாரா என்றே தெரியவில்லை. பிரபுவிடம் ஓரளவுக்குப் பேசுவாராக இருக்கலாம். அத்தையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். பாத்திரங்களை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தவரிடம் காரணம் இல்லாத ஒரு சின்னப் புன்னகை. சன்னமான வெளிச்சத்தையே கொண்ட சமையலறையில், அந்தப் புன்னகை கோயில் விளக்கின் ஒளியைப்போல் இருந்தது. அரூபமான இரண்டு கைகள் அந்த ஒளியைக் காப்பாற்றிக்கொண்டிருப்பது போலவும்.

மாமாவைப் பார்த்தேன். பிரபுவுடன் அவனது அலுவலகம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

அன்று அலுவலகத்தில் வழக்கத்துக்கும் அதிகமான வேலை. சென்னையில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள். மீட்டிங்கில் இருந்ததால், பிரபு கால் செய்ததைக் கவனிக்கவில்லை. அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டபோது அவன் பதற்றத்தில் இருந்தான்.

‘அப்பாவுக்கு நெஞ்சுவலி லதா. சாமி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கோம்.’

நான் உடனடியாகக் கிளம்பிவிட்டேன். ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்குள் நுழைவதற்குள் எல்லாமே முடிந்திருந்தன. மாமா, ரசனையும் அன்பும் நிறைந்தவர். கேரளாவிலும் சென்னையிலும் சிதறியிருந்த அவரது நட்பும் சுற்றமும் வந்த பிறகே, அடுத்தடுத்து வேலைகள் நடக்கத் தொடங்கின.

மறுநாள் மதியம்போல மாமாவை நெருப்புக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தான் பிரபு. அழுகை, கொஞ்சம் அடங்கியிருந்தது. மிக வேண்டியவர்கள் தவிர, வீட்டில் யாரும் இல்லை.

காதல் கொஞ்சி விளையாடிய வீட்டில், இப்போது மயானத்தின் பேரமைதி தனது பகடைக்காய்களை உருட்டுகிறது. எனக்கு நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. அமைதியை உடைத்து பெருங்குரலெடுத்து அழத்

தொடங்கினேன். அத்தை மெதுவாக என் தலை வருடினார். பிறகு, கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நான் போயிட்டு வர்றேன்’ என்றார். அப்போதுதான் கடிகாரம் பார்த்தேன். மணி ஐந்து.

”நான் வேணும்னா வரட்டுமா அம்மா?’ என பிரபு கேட்டான்.

அத்தை வேண்டாம் என்றுதான் சொல்வார். நான் சமையலறைக்குள் நுழைந்து காபிப் பொடியை எடுத்தேன்!

– டிசம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *