காதுகள்

 

ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக் கிள்ளி சுறுசுறுப்பாக்குகிற வாத்தியார் இல்லாமல் போய்விட்டார். வலது காதிலிருந்து கையை எடுத்தபோது, அருண் வந்து நின்றான்.

”காதையே தடவிக்கிட்டு இருக்கீங்களேப்பா. நீங்க ளும் ரிங் போட்டுக்கணுமா. ரிங் போட ஆசையா என்ன?” – அவனின் கேள்வி புரியாமல் பார்த்தேன். அவனின் இடது காதில், அட! ரிங் ஒன்றை மாட்டிக் கொண்டு இருக்கிறானே.

”என்ன இது புதுசா?”

”ஃபேஷன்ப்பா. நீங்க ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தோணுது. நானும் குழப்பமாதான் இருந்தேன். இந்த ரிங்கை வலது காதுல போடுறதா, இடது காதுல போடறதான்னு? கடைசியில் இடது காதில் போட்டுட்டேன். உங்களுக்கும் இடதுதானே புடிக்கும். நீங்க எப்பவும் லெஃப்ட்டிஸ்ட்தானே?”

”தங்கமாடா?”

”தங்கத்திலே போடுற அளவுக்கு நீங்க பாக்கெட் பணம் குடுக்கிறீங்களா என்ன? சாதாரண கவரிங்தான். வெள்ளியாச்சும் போடணும். வலியில்லாம காதைக் குத்திக்கிட்டேன். எங்க காலேஜ்ல காதுல ரிங் போடுறவங்கன்னு ஒரு க்ளப் ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா!”

நான் வலது காதில் கை வைத்து நீவிப் பார்த்துக் கொண்டேன். சின்ன வயதில் காது குத்தின அடையாளம் முழுக்க மறைந்து போய்விட்டது. அருணுக்குச் சின்ன வயதில் மொட்டை போட்டுக் காது குத்துவதில் அக்கறையாக இருந்தாள் கண்ணகி. அது மறந்து போயிருக்கும் அவனுக்கும். இப்போது ரிங் குத்திக்கொண்டு இருப்பது மட்டும் இனியும் ஞாபகத்தில் இருக்கும். காது குத்திக்கொள்ளாதவர்களைச் சுடுகாட்டுக் குழியில் இறக்கும்போது சுடலைமாடன் அனுமதிக்க மறுப்பான். காது குத்தாத உடம்புகளா? ஒரு நிமிஷம் என்று ஏதோ ஆணியையாவது எடுத்து வந்து காதில் ஓட்டைகளைப் போட்டு பிணத்தைக் குழிக்குள் வைப்பான். பாட்டி காது வளர்த்து தண்டட்டி போட்டிருந்தது ஞாபகம் வந்தது.

சின்னக் குழந்தைகளோ, புதியவர்களோ, பாட்டியின் தண்டட்டியைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே இல்லை.

”காது குத்தி காது வளக்கிறதே…” என்று சத்தம் போட்டுக்கொண்டு கிராம வீதிகளில் பாட்டி செல்லும்போது, பல நாட்கள் அவளுடன் போயிருக்கிறேன். காது குத்திக் கெடா வெட்டும் விசேஷங்களில் பாட்டிக்கு மரியாதை இருந்திருக்கிறது. பாட்டியின் சத்தம் கேட்டு வீட்டுப் பெண்கள் வாசலில் வந்து நிற்பார்கள். ‘அடுத்த வாரம் வர்றியா?’ என்பார்கள்.

தேவகி என்னோடு இரண்டாம் வகுப்பு படித்தவள். அவள் வீட்டுக்குக் காது குத்திவிட பாட்டியோடு சென்றது ஞாபகம் இருக்கிறது. வீட்டின் பின்புறம் எங்களை வரச் சொன்னார்கள். நான் ஒரு வகையில் திகைப்புடன் நின்றுகொண்டு இருந்தேன். ”இவங்கெல்லாம் மேல்சாதிக்காரங்க. இவங்க வூட்டுக்குள்ள வுட மாட்டாங்க. இங்க உக்காரவெச்சுதா குத்தணும்.”

தேவகி உடம்பில் ஒரு வெள்ளை வேஷ்டியைப் போர்த்தியிருந்தார்கள். விடுக்கென பாட்டி காது குத்தியதும் தேவகி அலறினாள். அவளின் வாயில் யாரோ லட்டோ, ஜிலேபியோ திணித்தார்கள். கண்களில் நீர் வழிய அவள் அதைச் சாப்பிட்டபடியே வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்தாள். காது குத்தி முடிந்த பின் குளிக்கச் செய்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். அவளின் காதில் மாட்டின தோட்டில் நட்சத்திர டிசைன் மினுங்கிக்கொண்டு இருந்தது. அடுத்த வாரம் தேவகி வீட்டுக்குப் போகலாம் என்று பாட்டி கூட்டிக்கொண்டு போயிருந்தாள்.

கம்மலைக் கழட்ட தேவகிக்கு மனசில்லை. கம்மலைக் கழட்டிவிட்டு உரித்த சோளத் தட்டையைத் திரித்து, சிறு தண்டு மாதிரியாக்கி அந்த ஓட்டையில் திணித்தாள். தினமும் சோளத் தட்டையைத் தண்ணீர் விட்டு நனைத்தபடி இருக்கச் சொல்லிவிட்டு வந்தோம்.

இன்னொரு பத்து நாள் கழித்துப் போனோம். இம்முறை சோளத்தட்டை எடுத்துவிட்டு பனை ஓலையை மடிப்பு மடிப்பாகச் சுருட்டி காது ஓட்டைக்குள் திணித்தாள். கொஞ்சநாளில் காது ஓட்டை பெரிதாகிவிட்டது. அடுத்த வாரம் போனபோது ‘குறுக்கை’ மாட்டிவிட்டாள். காது நன்கு கீழ் இழுத்து தொங்கின பின்பு ‘குறுக்கை’ கழட்டிவிட்டு தங்கத்தில் செய்திருந்த தண்டட்டியை மாட்டிவிட்டாள்.

தேவகியைத் தொங்கும் காதுகளுடனும் தண்டட்டியுடனும் பார்க்க அழகாக இருக்கும். ரொம்ப வருடங்கள் கழித்து, தேவகியை சென்னையில் பார்த்தபோது ரொம்பவும் மாறிப்போயிருந்தாள். காது வளர்ந்து தண்டட்டியுடன் தொங்கிக்கொண்டு இருக்கிற, சவுரி வைத்து தலைமுடியைக் கொண்டையாக்கிய கிராமத் துப் பெண்ணாகி இருந்தாள். ”என்ன… எதுவரைக்கும் படிச்சே?”

”எங்க படிக்கிறது. இந்தத் தண்டட்டியும், காதும், கொண்டையும் வெச்சுட்டு கிராமத்தை வுட்டு படிப்புக்குன்னுதா போக முடியுமா..?”

பாட்டி காது வளர்க்கக் கேட்டு கூவிக்கொண்டு போகும்போது, பின்னப்பட்ட மூங்கில் கூடைகளை வைத்திருப்பாள். கூடைகள் எப்படியும் ஓரிரண்டு விற்கும். காது வளர்ப்பதற்குக் கூலியாக கம்பு, சோளம், பழைய துணியெல்லாம் கிடைக்கிறபோது வாங்கி வருவாள். நான் முதன் முதலில் போட்ட பேன்ட் அப்படிப் பழைய துணியில் வந்ததுதான்.

சிவகாமி விஷயத்தில் பாட்டிக்குச் சங்கடமாகிவிட்டது. எல்லாம் சரியாகத்தான் செய்ததாகப் பாட்டி சொன்னாள். ஆனால், சிவகாமிக்குக் காது புண்ணாகிவிட்டது. சிவகாமியின் காது புண் ஆறுவதற்குப் பாட்டிதான் வைத்தியம் செய்தாள். குறுமிளகை வெள்ளைத் துணியில் கட்டி மண்ணெண்ணெய் விளக்கில் விட்டாள். அதைத் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து புண் இருக்கிற இடத்தில் பத்து போட்டாள். அதுவும் சரியாகாமல், ஈரம் பூத்து புண் மினிங்கிக்கொண்டு இருந்தது. குறுமிளகைப் பச்சையாக அரைத்துப் பத்து போட்டாள். தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக முகம்கூடக் கழுவாமல் சிவகாமி வீட்டு வாசலில் போய் நின்றுகொள்வாள்.

அப்படிக் கவனம் இருந்தும் காது அறுந்து போய்விட்டது. அறுந்துவிட்டதைச் சரியாகத் தெரிந்துகொண்ட நாளில் சிவகாமி அழுதாள். ஊரே கூடிவிட்டது. பாட்டியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. கண்களில் நீர் வழிந்தது. ”சாமி…” என்றபடி கைகளைக் கூப்பி அனைவரையும் பார்த்தாள். பொது மன்னிப்பு தரும் பாவனையில் எல்லோரும் பார்த்தார்கள். பிறகு, சிவகாமியின் அறுந்துபோன காதை நன்கு சுத்தம் செய்துவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டெடுத்த ஊசி நூலால் தைத்துவிட்டாள். முட்டை போடும் வெடக்கோழியை அறுத்து அதன் ரத்தத்தைத் தைத்த இடத்தில் தொட்டுவைத்தாள். ரொம்ப நேரம் அப்படி பொட்டுப் பொட்டாக வைத்துக்கொண்டு இருந்தாள். வெடக்கோழியை என் கையில் கொடுத்துவிட்டார்கள். அம்மா கோழியைச் சமைப்பதில் கெட்டிக்காரி. ஆனால், சிவகாமி வீட்டுக் கோழியை ருசிக்க இயலவில்லை பாட்டிக்கு.

அம்மா தண்டட்டி போட்டு காதின் மேல் புறங்களில் தங்கக் கம்மல்களைக் குத்தியிருப்பாள். அப்படி தண்டட்டி போடாதவர்களை ‘மூளிக்காரி’ என்பார். அம்மா அப்படிச் சொல்வதைக் கேட்டபடி இருந்த பாட்டி, ஒரு நாள் ”நானும் மூளிக்காரிதா” என்றாள்.

தாத்தா தொடுப்பு வைத்திருந்த பெண் தண்டட்டி போட்டு காது வளர்த்ததில்லை. மினுங்கும் தங்கக் கம்மல்களைப் போட்டிருப்பாள். காது நுனியில் கடுகளவு தங்கத் துணுக்கு மினுங்கிக்கொண்டு இருக்கும். பார்க்க அழகாக இருக்கும். சாகும் வரைக்கும் தாத்தா பாட்டியிடம் திரும்பவில்லை.
”தண்டட்டி போடாதவளுக மட்டுந்தா மூளிக்காரியா?” என்று பாட்டி முனகிக்கொண்டு இருப்பது சாகிற வரைக்கும் வெகு சாதாரணமாக இருந்தது.

”காது குத்தி காது வளக்கிறதே” என்ற பாட்டியின் குரல் தெருக்களில் ஓய்ந்தபோது, அவள் தன்னை மூளிக்காரி என்று சொல்லிக்கொண்டது ஓயாமல் தெருக்களில் மிதந்துகொண்டு இருந்தது!

- 20th ஆகஸ்ட் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் ...
மேலும் கதையை படிக்க...
“இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.” முதலில் பெயரை ...
மேலும் கதையை படிக்க...
தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன் அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில் யாருடனாவது களைத்து விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் ...
மேலும் கதையை படிக்க...
கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. 'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுடிதாரில் அவள் ...
மேலும் கதையை படிக்க...
நிர்வாணி
வேட்டை
வெள்ளம்
அணைப்பு
ஷரோனின் மோதிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)