Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காட்டில் வாழும் நரி

 

சொன்னா கேளுங்க இப்ப அவ தூங்க மாட்டா என்று சமையலறையிலிருந்து வந்த திவ்யாவின் குரல்,தமிழ் சினிமாக்களில் சேலன்ஞ் என்று இடைவேளை விடும் சமயத்தில் திரையெல்லாம் ஆக்ரமித்து நிற்கும் கட்டைவிரல் மாதிரி என் ஈகோவின் முன்னே சவாலாய் விரிந்து நின்றது.

பாப்பா தூங்கு பாப்பா மணி பத்தரையாச்சு இன்னும் ஆடிட்டிருக்க.

அப்பா யேனாம்ப்பா யேனாம்ப்பா என்று கைகளுக்கிடையே திமிறிக் கொண்டிருந்த நிவேதிதா, அய்யய்யோ மரப்பல்லி வந்துட்டான்டா என்றதும் சட்டென்று அமைதியாகி சின்னஞ்சிறு விழிகளில் பயம் மின்ன போ போ என்றாள்.

கண்ண முடிக்க பாப்பா.

அப்பா கல்லை.

கடலையா குடும்பக்கட்டுப்பாடு சன்னத்தை நினைவுபுடுத்தும் காகிதத்தில் பொதியப்பட்டு டைனிங்டேபிளில் இருந்த கடலை எப்படி இவள் கண்களில் பட்டது?

அப்பா கல்லைப்பா என்றாள் மறுபடி.

வேணாம்மா காலைல தர்றேன்.

அப்பா கட்டி கட்டி என்றாள்.

சரி கட்டிட்டு தூங்கு என்று நெருங்கிப் படுத்தேன்.

மல்லிகைப் பூச்சரம் போன்ற சிறு கைகளால் இயன்ற அளவு என் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா கல்லை சொல்லு என்றாள்.

கடவுளே கதை கேட்கிறாள்.

கதையா?

ம் அழகாக தலையசைத்தாள்.

சில வினாடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்த அனுபவத்தைத் தருவது அவளுக்கு எப்படி சாத்தியமாகிறது.

பாப்பா வாயில விரல வைக்காதேன்னு சொன்னேல்ல என்று குரலை உயர்த்தியதும் சட்டென்று கட்டிப்பிடித்து சிரித்தபடி ஒரு முத்தம் தருவதை ஒன்றரை வயது குழந்தைக்கு யார் கற்றுத் தருவது?

காட்டில் வாழும் நரி கதை சொல்லட்டுமா?

முழு கவனத்தையும் என் உதடுகளின் மேல் குவித்து ம் என்றாள்.

காட்டில் வாழும் நரி ஒருநாள் சிங்கத்தை பார்த்து சிங்கண்ணே வாங்க நம்ம ரெண்டு பேரும் வௌயாடலாம்னு கூப்பிட்டுச்சு.

ம்.

உடனே சிங்கம் என்று எனது குரலை உயர்த்தி டேய் நரிப்பயலே என்னையா விளையாட கூப்பிடற உன்ன கடிக்காம விட மாட்டேன்டான்னு நரி மேல பாஞ்சுது.உடனே நரி என்று நடுங்கிய குரலில் என்னை விட்டுடு என்னை விட்டுடுன்னு ஒரே ஓட்டமா ஓடிருச்சு.கொஞ்ச துரம் போனதும் ஒரு புலிய பாத்துச்சு புலி அன்னைக்கு டிவில பாத்தமில்ல.

ம் அம்மா பயமா இருக்கு.

அதுதான் அதே புலிதான் அதுகிட்ட போய் புலியண்ணா விளையாட கூப்பிட்டேன்.அதுக்கு சிங்கம் கடிக்க வருதுன்னு சொல்ல மிகுந்த ப்ரயத்தனப்பட்டு முகத்தை புலி போலாக்கிக் கொண்டு உறுமினேன்.டேய் நரிப்பயலே சிங்கத்துகிட்ட தப்பிச்சிட்ட உன்ன கொல்லாம விட மாட்டேன்டான்னு பாஞ்சுது.நரி மறுபடியும் அய்யய்யயோன்னு தப்பிச்சு ஓடுச்சு.

என்ன இன்னும் தூ ங்கலையா?

திவ்யாவின் குரலைக் கேட்டதும் முகத்தைச் சுருக்கி அம்மா திட்டி என்றாள்.

சரிடா செல்லம் அம்மாவை நான் அடிச்சர்றேன்,நீ கதை கேளு.

நரி அழுதுகிட்டே உட்கார்ந்திருந்துச்சா.அப்ப அந்த பக்கமா ஒரு யானை வந்துச்சுடா.

அப்பா ஆன என்று தலையில் கைவைத்து ப்ஸ் என்று சத்தமெழுப்பி உருமுறை கோவில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கியதை நினைவூட்டிச் சிரித்தாள்.

என்னைப் போலவே என் மகளும் சரியான யானைப் பைத்தியம்.ஒரு அடி உயர ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் யானை,கொம்பு உடைந்த பெரிய யானை,துதிக்க உடைந்த சிறிய மர யானைகள்,துதிக்கை உயர்த்தி பிளிறும் ப்ளாஸ்டிக் யானை,டிரம்ஸ் வைத்திருக்கும் ரப்பர் யானை,முகபடாமெல்லாம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மண் யானை,கடைசியய் வாங்கின சாம்பல் நிற வாஷபிள் யானை என சோழப் பேரரசைப் போல் ஒரு யானைப்படையே எங்கள் வீட்டில் இருக்கறது.

அவள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவதற்காகத்தான் அனிமல் ப்ளேனட்,டிஸ்கவரி,நேஷனல் ஜியாகிரபிக் சேனல்களில் யானைகள் கூட்டமாய் உலவுகின்றன.

அப்பா என்று மீண்டும் கதைக்கு இழுத்தாள்.

யான நரியைப் பாத்து ஏன் அழறன்னு கேட்டுச்சு.விளையாட கூப்பிட்டதுக்கு சிங்கமும் புலியும் அடிக்க வருதுன்னு சொல்லுச்சு.சரி நீ பயப்படாம என் கூட வான்னு யான நரிய கூட்டீட்டு போய் அந்த சிங்கத்தையும் புலியையும் அடி அடின்னு துதிக்கயிலயே அடிச்சதும் ரெண்டும் அய்யோ என்ன விட்டுருன்னு கத்திகிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போயிருச்சாம் என்றதும் தலையை பின்னே சாய்த்து சந்தோஷமாக சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

உடனே காட்டில் வாழும் நரி சிரிச்சுகிட்டே யானைக்கு ஒரு முத்தம் குடுத்துச்சுடா என்றதும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

தொடர்ந்து பெய்திருந்த மழையினால் அடர்ந்திருந்த பசிய வனத்தின் பின்னணியில் ஒரு யானைக் கூட்டம்.குட்டிகள்,பெரிய யானைகளின் கால்களுக்கடையே உரசிக் கொண்டிருக்க ஏற்கனவே செம்மண் படிந்திருந்த உடலில் துதிக்கையால் செம்மண்ணை வாரி வீசிக் கொண்டன.ஆற்றின் கரையோரம் வளர்ந்திருந்த புற்களை பிடுங்கி நீரில் அலசி அலசி துதிக்கையை வளைத்து தொங்கும் வாயினுள் நுழைத்துக் கொண்டன.

இவ்வளவு பக்கத்தில் நிற்கும் என்னை அவை கண்டு கொள்ளவில்லையே என்ற ஆச்சர்யத்தையும் மீறி எப்படி ஓடித் தப்பிப்பது என்று நான் நினைத்த வேளையில் பெரும் முழக்கமாய் எழுந்த பிளிறல், திடுக்கட்டு திரும்ப வைத்தது

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த மலைத்தொடரின் ஒரு பகுதியென மிகப்பெரிய யானையொன்று பூமி அதிர அதிர வனத்தினுள் இருந்து வெளியே வந்தது.இருபுறமுத் கால்கள் தொங்க அதன் மத்தகத்தில் அமர்ந்திருந்தாள் நிவேதிதா

யானை என் அருகே வந்ததும் என் கால்களின் கீழே பூமி நழுவியது.

அப்பா பயப்படாதப்பா இது யாருன்னு தெரியலையா.இதுமாம்ப்பா காட்டில் வாழும் நரிய காப்பாத்தின ஆன.ஆன அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு என்றதும் துதிக்கையின் நுனி விரல் ஈரத்துடன் என் கன்னத்தில் படவும் விழித்துக் கொண்டேன்.

பக்கத்தில் நிவேதிதாவைக் காணவில்லை

திவ்யா பாப்பா எங்கே?

அவள தூங்க வைக்கறேன்னு வசனம் பேசிட்டு நீங்க தூங்கிட்டீங்க.வந்து பாருங்க உங்க பொண்ணு என்ன பண்றான்ணு வெளியே வந்து பார்த்தேன்.

புலி போ போ என்று சொல்லி அடி அடி என்று காற்றை அடித்து விட்டு மர யானையை எடுத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள் என்ட பொண்ணுமோள். 

தொடர்புடைய சிறுகதைகள்
அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது. கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் ...
மேலும் கதையை படிக்க...
அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் ...
மேலும் கதையை படிக்க...
ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து உண்பதை அவள் காலருகில் இருந்த குழந்தை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கான கார்,ஜெனரேட்டர் பொருத்தப்பட காத்திருந்தது.பட்டுப் புடவைகளில்,மின்னும் நகைகளில், ...
மேலும் கதையை படிக்க...
ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,. திருப்பித் தாக்க இயலாதவளை. பெற்றோர் உறவினர் நண்பர்களை விட்டு என்னையே சதம் என்று நம்பி வந்தவளை, என்னில் ஒரு துளியை ...
மேலும் கதையை படிக்க...
மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின. ஆர் ஏ ஜே ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வினை
மாயா
காதலெனப்படுவது யாதெனின்…
நிறம் மாறும் தேவி
ஆர்ஏஜேஏ ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)