காட்சி மயக்கத்தில் ஒரு காட்டு வழிப் பயணம்

 

கண் கொண்டு பார்த்துக் காட்சி உலகில், மனம் மயங்கி நிலை தடுமாறும் சராசரி மனிதர்கள் போலில்லாமல் தன் சொந்த இருப்பை விட்டு வேர் கழன்று போகாமல் அவள் இருந்த நேரம் எப்படிப் பிடுங்கிக் கசக்கிப் போட்டாலும் மணம் மாறாத துளசி போலிருக்கிற அவள் பெயரும் துளசி தான் .பூத்து அழகு ஒளி வீசாத அந்தத் துளசிச் செடியின் உள் நின்று வாசனை கொட்டுகின்ற அதன் மகத்துவம் போலவே புற வாழ்க்கையில் எடுபடாமல் போன இந்த மானுட துளசியின் நிலையும்

அப்போது கணவனின் வேலை நிமித்தம் இரண்டு ஆண்பிள்ளைகளோடு அவள் மட்டக்களப்புக்கு வந்து குடியேறி ஒரு மாதமேயாகியிருந்தது. பார் வீதியிலே சின்னதாக ஒரு வாடகை வீடு ஒரு சாதாரண கிளார்க்கான அவள் கணவனைப் பொறுத்தவரை இது கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டப் புதையல் கிடைத்த மாதிரி.. யாழ்ப்பாணத்தில் அப்படியான தரம் குறைந்த வாழ்க்கைச் சூழலை எதிர் கொண்டு, வாழ்ந்து பழக்கப்பட்ட அவனுக்கு அந்த வீடும் ஒத்துப் போகிற ஒரு நிலைமை தான். அவளோ கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாக்குப் பிடித்து சமாளிக்கக் கூடிய மனோபலம் அவளுக்கு இயல்பாய் வாய்த்தது.. ஏற்கெனவே சத்தியசோதனையாக நேர்ந்த கல்யாண வாழ்க்கையில் மனசளவில் புடம் கண்டு தேறிய ஒளிக் கிரீடத்தையே தலையில் சுமப்பது போல எதிலும் பங்கமுறாத அவளின் அகக் காட்சி தரிசன எழிற் கோலம். இது வெளிப் புறச் சரிவுகளில் நிழல் தட்டிக் கிடப்பதாகவே உணரும் திறன் படைத்த மனிதர்கள் நடுவே தான் தன் வாழ்க்கை யுகத்தைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு

அதை மெய்யாக்குவது போலவே அவள் சிறிதும் எதிர்பாராதவிதமாக உயிரின் தடங்கள் பொய்த்துப் போன ஒரு நிழல் மனிதனை அவள் எதிர் கொள்ள நேர்ந்தது அவனே அவளைக் காண்பதற்காகக் கார் ஏறி வந்திருந்தான் அப்போது வாசலிலே கார் நிற்கிற சத்தம் கேட்டுக் கைக்குழந்தையும் கையுமாக அவள் வாசலுக்கு வந்த போது நிறையொளியாய் சிரித்தபடி மணலில் கால் புதையுண்ட கோலத்துடன் அவன் நிற்பது தெரிந்தது

“ என்ன துளசி அப்படிப் பாக்கிறாய்? நான் ஆரெண்டு தெரியேலையே? என்னவொரு வீடு எடுத்திருக்கிறியள்? இப்படி மணல் காட்டுக்குள்ளை?”

உண்மைத் தன்மையின்றி மேல் போக்காக அவன் பேசிய இந்த விடயங்கள் குறித்து வாய் திறந்து வெளிப்படையாக அவனோடு தர்க்கம் செய்வதில் அவளுக்கு உடன்பாடு இருக்கவில்லை மனதோடு ஒன்றுபடாமல் விலகி நிற்கிற அந்த முரண்பாடுகளை, மறந்தவளாய் சகஜ நிலைக்கு வந்து குரலை உயர்த்தி அவள் சொன்னாள்

“நான் ஒன்றையும் மறக்கிறேலை சந்துரு. .நீங்கள் என்ரை சித்தப்பா மகன் என்பது முதற் கொண்டு எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. அப்பவெல்லாம் விளையாட எங்கடை வீட்டிற்கு நீங்கள் வந்து போனதெல்லாம், காலத்தோடு கரைஞ்சு போன வெறும் கனவு மாதிரி இப்ப இருக்கு. காலம் திரை போட்டாலும் நான் எதிலும் மாறாத பழைய துளசி தான். உள்ளே வாங்கோ சந்துரு” என்றபடி உள்ளே போகும் அவளைப் பின் தொடர்ந்து வந்த அவனுக்கு நீண்ட நேரம் நிற்க நேர்ந்ததால் கால் உளைய அதை உணர்வுபூர்வமாய் உணர்ந்த அவளுக்குப் பெரும் திடுக்கீடாய், இருந்தது அவன் வசதிக்குத் தகுந்தபடி உட்கார வைக்க ஒரு நல்ல கதிரை கூட இல்லையே. இதை வாங்கித் தராத குற்றம் யாருடையது? இதை பகிரங்கப் படுத்திப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? சரி இருக்கிற ஸ்டூலை இழுத்துப் போடுவம்”

பிறகு அவள் சொன்னாள்

“இருங்கோ சந்துரு”

நீண்டு சலித்த பார்வையுடன் வேறு வழியின்றி முகத்தைத் துடைத்தபடி அதன் விளிம்பில் அமர்ந்தவாறு அவளை வினோதமாக ஏறிட்டுப் பார்த்தவாறு அவன் கேட்டான்

“உன்ரை புருஷனுக்கு என்ன வேலை துளசி?”

“பெரிய கவர்மெண்ட் பிழைப்புத் தான் “

“அப்படித் தெரியேலையே?

“இது நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஒரு சாதாரண கிளார்க் தான் அவர். இதுக்கு மேலே தாண்டுறது கஷ்டம். .சரி உங்கடை கதையை நான் கேக்க மறந்திட்டன். சொல்லுங்கோ! ஊரிலே பாத்துப் பழகிய வெள்ளை சந்துருவைத்தான் இப்ப எனக்கு ஞாபகமிருக்கு”

“அதென்ன வெள்ளைச் சந்துரு? நானென்ன அவ்வளவு வெள்ளையாகவா இருக்கிறன்?

“ஓம் நீங்கள் நல்ல வெள்ளை நிறம் தான்… இப்ப நான் அதை மட்டும் சொல்ல வரேலை.. உங்கடை மனசும் பால் மாதிரி, அவ்வளவு பளிங்கு போல, அப்ப நீங்கள் இருந்தியள். எப்பவும் நீங்கள் எங்கடை வீட்டுக்கு வந்து முற்றத்திலே என்னோடு கூடி விளையாடி மகிழ்கிற போது கன்னம் குழி விழ ஒரு சிரிப்புச் சிரிப்பியளே! அப்படி மனம் விட்டுச் சிரிக்கிற உங்கடை வெள்ளை மனசு தான் இப்பவும் என்ரை கண்ணுக்குள்ளை நிக்குது”

“அது அந்தக் காலம். இப்ப எனக்குள்ளே ஒரு புதுப் பிரவாகம் அணை உடைச்சு ஓடிக் கொண்டிருக்கு. நான் இப்ப ஒரு சாதாரண மனிதனல்ல ஒரு பெரிய என்ஜினியராக்கும்! அம்பாறையிலே இப்ப வேலை எனக்கு””

“ஓ !பெரிய விஷயம் தான். இந்த நிலையிலை கூட என்னை மறக்காமல் வீடு தேடி வந்ததுக்கு நான் ரொம்பச் சந்தோஷப்படுறன். இருந்து நீங்கள் சாப்பிட்டுத் தான் போக வேணும் இது என்ரை கடமை இல்லையா”

“சாப்பிடுறதா? இந்த வீட்டைப் பார்த்த பிறகு சாப்பிட மனம் வருமோ? முதலிலை வீட்டை மாத்து ..பிறகு வந்து சாப்பிறன் தேத்தண்ணி கூட அதுக்குப் பிறகு தான்”“

அவள் அதைக் கேட்டு அப்படியே உறைந்து போனாள் எதைப் பார்த்து அல்லது எடை போட்டு இப்படியொரு கேள்விக் கணை இந்தப் பேச்சு அவன் வாயிலிருந்து? எடை போடுவதற்கு வெறும் வீடு மட்டும் தானா கிடைத்தது?. இப்ப நாடு இருக்கிற நிலைமையிலை அதுவும் எங்கடை யாழ்ப்பாணத்திலை வீடு எங்கை இருக்கு? கண் முன்னாலை அதுகளெல்லாம் சரிஞ்சு விழுறதைப் பார்த்த பிறகும் இப்படிக் கேக்கிறானென்றால் பணத்தைக் கொண்டு அளக்கிற புத்தி தானே இது ? அதுவும் காலத்தால் அழிகிற ஓர் அற்ப வீடு ஓ இவன் இப்ப இருக்கிற நிலைமையிலை எல்லாம் மறந்து போய் பகட்டு வாழ்க்கையிலை மிதந்து பணத்தையே உயிராய் நம்பி வழிபடுகிற இவன் கண்களுக்கு மனத்தாலை மட்டும் அன்பு மறந்து போகாத ஒரு கோபுரமாய் நான் விசுபரூபம் எடுத்து நிக்கிறது எப்படிப் பிடிபட முடியும்? மனசென்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அது ஒரு மறை பொருளாக எனக்குள்ளேயே இருக்கட்டும் இவன் கண்ணை உறுத்துகின்ற அந்தக் கொரூரத்தை நானும் தான் பார்க்கிறன். ஒரு நல்ல அடுப்படி கூட இல்லை பூச்சுக் கூட இல்லாத வெறும் செங்கட்டிச் சுவரைப் பாத்திட்டுச் சாப்பிட மறுக்கிற இவனை நினைச்சு வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியேலை.. இது இவன் குற்றம் இல்லை. மனித சுபாவமே இப்படித் தான்.. உயிரற்ற நிழல்கள் மீது தான் எப்பவும் கவனம் வைக்கிறது.. அவன் பார்வையை விட்டு எப்ப இந்த நிழல் சங்கதிகள் கரையத்தொடங்குமோ அப்பதான் உயிரை மட்டுமே காணத் தோன்றுகிற உண்மை வெளிச்சம் அவன் கண்களுக்குள் களை கட்டித் தோன்றும்… என் உள்மனதின் அன்பின் ஆழமும் பிடிபடும்”

அவள் இதை மனதில் நிறுத்தித் தீர்க்கமாய யோசித்துக் கொண்டிருக்கும் போதே, முகத்தில் சிரிப்பு வழிய போக எழுந்த அவன் குரல் சன்னமாய் பேசியவாறே நடை தொடர்ந்து போகும் போது பின்னால் வாயடைத்த மெளனத்துடன் வந்து கொண்டிருந்த அவளுக்குக் கணப் பொழுதில் அவன் கேள்வியின் தாற்பரியம் பிடிபட்ட மாதிரி வெகுவாகத் திடுக்கிட்டு நின்றாள் அவளைப் பார்த்து அவன் கேட்ட கேள்விக் கணையின் அழுத்தம் அவ்வாறு இருந்தது அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையோடு அப்போது அவன் கேட்டான்

“என்னடி யோசிக்கிறாய்?”

சின்ன வயதிலே மனம் நிறையப் பாசத்தை வைத்துக் கொண்டு அவன் இவ்வாறு தான் அவளோடு சகஜ பாவத்தோடு உரிமை மறவாமல் பேசுவான்

அந்தப் பழைய உறவு நெருக்கம் மறந்து போகாமல் அவன் மிகவும் உரிமையோடு கேட்கிற மாதிரி ஒரு பாவனை தெரிந்தாலும் அது உண்மையில்லை என்று அவள் மனம் சோகம் கொண்டு தனக்குள் அழுது தீர்த்தவள், பின்னர் கனவில் திடுக்கிட்டு விழித்த உணர்வு கொண்டவளாய்த் தன்னை ஆசுவாசப்படுத்தித் தேற்றிக் கொண்டு அன்பு ஒளி வீசும் கண்களை அகல விரித்து அவனை நிமிர்ந்து பார்த்து அவள் மென்மையாகக் கூறினாள்

“ஒன்றுமில்லை”

அதை ஏதோ நினைவில் புறப் பிரக்ஞை மறந்து,, அக்கறையின்றிக் கேட்டவாறே அவன் அவசரமாகப் போக எழுந்த போது மெளனம் கனக்க அவள் அவனையே பார்த்தவாறு மெய் மறந்து நின்று கொண்டிருந்தாள். காலத்தால் உறவின் நெருக்கம் அழிந்து போனாலும் உயிரின் தடங்களையே பற்றிக் கொண்டு வாழ்ந்த அந்தச் சிரஞ்சீவி ஞாபகங்களைத் தான் இன்னும் மறக்கவில்லை என்பது போல் கண்களில் அபரிதமான கனவுக் களை சொட்ட அவள் அப்படி நிற்பதையே கண்டு கொள்ளத் தவறிய தனக்கே இயல்பாகிப் போன பிரமை மயக்கத்துடன் வாசல் கடந்து போகும் வழி பார்த்த வண்ணம் அவன் கூறுவது கேட்டது

“நான் போயிட்டு வாறன்”

அதைக் கனவு மறந்து போகாத விழிப்பு நிலையில் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கேட்டருகே நிற்கும் தன் கப்பல் போன்ற அழகான காரை நோக்கி அவன் தனக்கேயுரித்தான கம்பீரக் களையோடு வேக நடை போட்டுச் சென்றவன் ஏதோ நினைத்தவனாய் ஒரு புன்முறுவலோடு அவளைத் திரும்பிப் பார்த்துக் கூறியது காற்றோடு கலந்து வந்து அவள் காதில் விழுந்தது

“மறக்காதை துளசி நீ வீடு மாறினால் தான் நான் சாப்பிட வருவன்”

இதற்குப் பதில்சொல்வது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாய் மனதில் உறைக்கவே அவள் நெஞ்சம் கனக்க வாயடைத்துப் போய் மெளனமாகத் தலை ஆட்டினாள் அவனுடைய இந்த உணர்வுகள் மரத்துப் போன அல்லது தன்னுடைய உண்மை நிலையை உள்ளபடி புரிந்து கொள்ளத் தவறிய, அவனது இந்த அன்பு விட்டுப் போன விபரீத ஆசைக்குத் துணை போகிற மாதிரிப் பதில் ஏதுமின்றித் தான் கட்டிக் காக்கின்ற தன்னுடைய இந்த மெளனம் அவனின் மேல் போக்கான காட்சி மயக்கத்தைப் பூண்டோடு அழித்து அவன் அன்பு நிறைவான ஒரு முழு மனிதனாவதற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லையென்பது, காலம் கடந்த ஞானமாகவே அவளுக்கு உறைத்தது.. இதைப் பற்றி மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு உள்ளார்ந்த ஆத்ம விழிப்புடன் வாழ்க்கையை எதிலும் பங்கமுறாத ஒரு வேள்வியாக்கி , தான் வாழ்ந்து வருகின்ற இனிய அனுபங்கள் குறித்து,, நிறைய விளக்கங்களோடு அவனுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் அவன் என்ன நினைத்திருப்பான்? அதைக் கேட்டு ஒரு வேளை அவன் இத்தகைய பொய்மையிலேயே வளரும் காட்சி மயக்கத்தையே ஒரு கெட்ட கனவாக மறந்து போயிருக்கவும் கூடும் அவனோடு இது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தனக்கு அப்போது ஏற்பட்ட அந்த மிகப் பெரிய தார்மீகக் கடமையை மறந்து தான் வாயடைத்து நிற்க நேர்ந்தை எண்ணி அவள் பெரும் கவலை கொண்டாள் அதிலேயே மனம் நொந்து கண்கலங்கியவாறு அவள் நிற்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்ற வேகத்தில் அவள் கண்களைக் காட்சி நிழல் கொண்டு மறைப்பது போல் அடர்ந்து செறிந்த தெருப்புழுதியில் அவன் பார்க்கின்ற அந்தக் காட்சி உலகமே பிடிபடாமல் இருள் வந்து அவள் மீது கவிந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மஞ்சுவோடு பல காலமாக மிகவும் உறவு நெருக்கத்துடன் மனம் திறந்து பேசிப் பழகியிருப்பது போல், அவள் சிறிதும் எதிர்பாராத விதமாகத் தொலைபேசியில், தனபாலன் சரளமாகக் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டவாறே அவள் ஒன்றும் பேசத் தோன்றாமல் வாய் அடைத்துப் போய் மெளனமாக ...
மேலும் கதையை படிக்க...
உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற ஒளி குன்றாத, அந்தச் சிரஞ்சீவி, நாட்களில், அவனின் ஆத்மார்த்தமான இலட்சியத் தேடல்களுக்கு, ஒரு நல்ல துணையாகவும், ஆதர்ஸம் மிக்க, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள் அவளுடைய போதாத காலம் சுமார் ஒரு வருட காலமாக மேலும் அவள் சிலுவையில் தொங்கி உதிரம் கொட்டுகிற நிலைமை. . ...
மேலும் கதையை படிக்க...
மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் ...
மேலும் கதையை படிக்க...
உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை கேட்க, அவள் அமர்ந்திருக்கும் நேரம் சுகமான ஓர் அந்தி மாலைப் பொழுது. கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே இறை வழிபாடு ...
மேலும் கதையை படிக்க...
உண்மை சுடும்
வழிபாடு
கடவுளுக்கு ஒரு கருணை மனு
ஒரு சம நிலை வைத்தியம்
பாத பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)