கா(ஞ்)சித் துண்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,553 
 

பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள். பெரியவர் ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார். அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித் துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார்.

எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு. காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப்பட்டபோது வாங்குவார். அந்தத் துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? அந்தத் துண்டு மெலிதாக இருக்கும். அதன் காரணமாக குளித்துவிட்டு துடைத்துக் கொள்ள உடலுக்கு உறுத்தாத வண்ணம் இருக்கும். கொடியில் போட்ட குறுகிய நேரத்திலேயே காய்ந்துவிடும். பெட்டியில் அடுக்கும்போது அதிக இடம் அடைக்காது.

கா(ஞ்)சித் துண்டுகாசித்துண்டை உபயோகிக்க இவ்வளவு வலுவான காரணங்கள் இருந்தும் காசிக்குப் போனால் முதலில் இந்தக் காசித்துண்டை விட்டுவிடலாம் என்று அவர் செய்ததற்கு முக்கியமான காரணம் உண்டு. அவரிடம் இருந்த துண்டுகள் எல்லாம் நைந்துவிட்டன. அதனால் மீண்டும் காசித்துண்டு வாங்க வேண்டும் என்று ஒருநாள் அவர் மனைவிடம் தைரியமாகச் சொன்னார்.

எதையுமே சற்று நிதானித்து யோசித்துச் செய்யும் அவர் மனைவி ராஜம் சற்றும் தாமதியாமல் உடனே, “”சரி வாங்கிவிடுவோம்” என்றாள்.

அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும். தவறினார்.

மறுநாள் அவர் மனைவி ராஜம் அவளாகவே, “”ஏங்க, காசித்துண்டு வாங்கணும்னு சொன்னீங்களே” என்று நினைவூட்டினாள். சாதாரணமாக இவர் ஏதாவது சொன்னால் கண்டுகொள்ளாமல் இருக்கும் ராஜம், இன்று அவளாகவே வலிய வந்து இவர் தேவையை நினைவூட்டினாள். அப்போதாவது அவர் கவனித்து யோசித்திருக்க வேண்டும்.

“”ஏங்க, எப்பவுமே காசித்துண்டு காஞ்சிபுரத்தில் நல்லா இருக்கும். நாம ரெண்டு பேரும் காஞ்சிபுரம் போயி காசித்துண்டு வாங்கி வரலாமா?” என்று கேட்டவுடன் மயங்கிப்போய், அடடா நம் மேல் எவ்வளவு அக்கறை என்று மகிழ்ந்தாரே, அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும்.

வீட்டருகே உள்ள பல கடைகளில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் காசித்துண்டு, அதற்கு ஏன் காஞ்சிபுரம் போக வேண்டும் என்று யோசனை வந்தாலும், துண்டு நல்ல தரமாக காஞ்சிபுரத்தில்தான் கிடைக்கும் என்று மனைவி கூறியதன் மர்மத்தை அவர் அப்போதாவது யோசித்திருக்க வேண்டும்.

அவர் எண்ண ஓட்டத்தை படித்தவள் போல்,””காஞ்சிபுரம் போய் ஏன் துண்டு வாங்க வேண்டும். இங்கே கிடைக்காதா? என்றுதானே யோசிக்கிறீங்க” என்றாள் ராஜம். அதற்கு அவளாகவே ஒரு விளக்கமும் அளித்தாள். “”காஞ்சிபுரம் போய் துண்டு வாங்கும் சாக்கில் அப்படியே காஞ்சி காமாக்ஷியையும், வரதராஜரையும் அங்கே உள்ள மற்ற திருத்தலங்களையும் தரிசித்து வரலாமே, ஒரு கல்லில் இருமாங்காய்” என்றாள் ராஜம்.

மறுநாள் காஞ்சிபுரம் போக ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தார்.

ராஜம் யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.

பேசி முடித்துவிட்டு ராகவனிடம் திரும்பிய ராஜம், “”ஏங்க, எப்படியும் நா கார்லதானே போய்ட்டு வரப் போறோம். என் தங்கை கல்யாணியும் வரேங்கறா, கூட்டிட்டுப் போலாமா?” என்றாள்.

அவருக்கும் அது நியாயமாகவே தோன்றியது.

“”சரி வரச்சொல்லு” என்றார். அப்போதாவது யோசித்திருக்கலாம்.

“”ஏங்க இப்போ கல்யாணி வரும்போது அவளோட குழந்தைகளை யார்கிட்ட விட்டுட்டு வருவா? அதுனால குழந்தைகளையும் அந்தக் குழந்தைகளைப் பொறுப்பா பாத்துக்க அவளோட மச்சினர் பொண்ணு ராதிகாவையும் கூட்டிண்டு வரேன்னு சொன்னா” என்றாள். “”சரி” என்றார் ராகவன்.

“”அதுனாலே சின்னக் கார் போறாது, பெரிய காரே ஏற்பாடு செஞ்சிருங்கோ” என்றாள். அதற்கும் சரி என்றார் ராகவன்.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு பெரிய காரில் ராகவனும், ராஜமும் ஏறி அமர்ந்தனர்.

“”ஏங்க நாம் போற வழியிலதானே தாம்பரம். அங்கே இந்து மிஷன் ஹாஸ்பிடல் கிட்ட கல்யாணி வந்துடறேன்னு சொன்னா. அங்க போயி அவங்களையும் கூட்டிகிட்டு போகலாம்” என்றாள் ராஜம்.

கார் விரைந்தது.

“”சார் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்க டீசல் போட்டுக்கறேன். அப்புறமா கணக்கு பார்த்துக் கழிச்சிக்கலாம்” என்றார் டிரைவர். ராகவன் சரி என்றார். தாம்பரம் போய் கல்யாணி, ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனி எல்லோரையும் ஏற்றிக்கொண்டு அப்படியே ஹைவே ஹோட்டலில் போய் கார் நின்றது காலை உணவுக்காக. காலை உணவு முடித்துவிட்டு ஹோட்டலுக்கு ரூ. 400. அதன் பிறகு வெளியே இருந்த கடையில் குழந்தைகள் விளையாட பொம்மைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு ஆக மொத்தம் ரூ. 1500 செலவில் கார் தாம்பரத்தைத் தாண்டி நெடுஞ்சாலையில் விரைந்தது. டோல்கேட்டில் அவர்கள் கேட்ட பணத்தை ராகவன் தன் பையிலிருந்து எடுத்துக்கொடுக்க டோல்கேட்டையும் தாண்டி ஒரு வழியாக காஞ்சிபுரம் வந்தாயிற்று.

“”ஏங்க, முதல்லே நாம பச்சையப்ப முதலியார் கடைக்குப் போயி காசித்துண்டை வாங்கிட்டு, அப்புறம் கோயிலுக்கெல்லாம் போகலாம்” என்றாள் ராஜம். அப்போது மணி காலை 9.

கார் பச்சையப்ப முதலியார் கடைக்கு முன்னால் நின்றது. அனைவரும் கடைக்குள் சென்றனர். அதற்குள்ளாகவே அந்தக் கடையில் பெண்கள் கூட்டம்.

“”நீங்க அதோ அங்கே காசித்துண்டு இருக்கு. அந்தக் கெüண்டர்லே வாங்குங்க. நாங்க சும்மா உள்ளே போயி பட்டுப் புடவையெல்லாம் புதுசா ஏதாவது வந்திருக்கான்னு பார்த்துட்டு வந்துடறோம். ஜானகி கல்யாணத்துக்கு இங்கேதான் வாங்கப் போறோம்” என்றாள் ராஜம்.

“”நீங்க இந்தக் குழந்தைகளை உங்க கூட வெச்சுக்கோங்க” என்றபடி பெண்கள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்கள் பெண்மணிகள். குழந்தைகளை வைத்துக்கொண்டு ராகவன் சமாளித்துக் கொண்டிருந்தார். கடை ஊழியர் சொன்னார், “”சார் ஒரு போன் போட்டு கேட்டுகிட்டு வரக்கூடாதா. காசித்துண்டு இருந்ததெல்லாம் வித்துப் போச்சு. நாளைக்கு வந்துடும்” என்றார்.

வெகுநேரம் பொறுமையோடு காத்திருந்து நாகரிகம் கருதி தன் கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு ராஜத்தை தேடிக்கொண்டு கடையுள்ளே பேந்தப் பேந்த விழித்தபடி உலாத்தினார் ராகவன். இரு புறமும் குழந்தைகளை கையில் பிடித்தபடி.

“”பெரியப்பா எனக்கு ஒண்ணுக்குப் போகணும்” என்றான் கிஷோர். கடைக்காரரை அணுகி, “”ஏம்பா இந்தப் பையன் ஒன் பாத்ரூம் போகணுமாம். பாத்ரூம் இருக்கா?” என்றார். ஒரு வழியாக அவர்களை அழைத்துக்கொண்டுபோய் கையெல்லாம் சுத்தம் செய்து அழைத்து வந்தார் ராகவன்.

ஜனனி, “”பெரியப்பா பக்கத்து தெருவுல ஒரு பட்டாணிக்கடை இருக்கு. நாங்க இங்க வரும்போதெல்லாம் எங்க அம்மா அங்க கூட்டிட்டுப் போயி சுடச்சுட கடலை வாங்கிக் கொடுப்பாங்க” என்றாள்.

இருவரையும் அழைத்துப்போய் “”கடலை கொடுப்பா” என்றார்.

அந்தக் கடைக்காரர் “”அடடே! வாம்மா! உங்க அம்மா வரலையா? அடிக்கடி வருவாங்களே” என்றார்.

ராகவனுக்கு திக்கென்றது. ஒரு வழியாக மீண்டும் கடைக்கு வந்து உள்ளே சென்று அவர்களைக் கண்டுபிடித்து “”என்னம்மா செய்யறீங்க மணியாச்சு, சீக்கிரம் வாங்க. கோயிலுக்குப் போகணும்” என்றார்.

கடை ஊழியர், “”சார் பொறுமையா இருங்க. இப்போ ஒரு மணி ஆவுது. கோயிலெல்லாம் மூடி இருப்பாங்க. நாலு மணிக்குத்தான் திறப்பாங்க” என்றார். சரி என்றார் ராகவன்.

“”சரி எல்லாருக்கும் பசிக்கும். எல்லாரும் போய் உங்க சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திருங்க. நீங்க கேட்டபடி எல்லாப் புடவையையும் எடுத்து வைக்கிறோம் வந்து பாருங்க” என்றார் கடைக்காரர்.

அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். கார் ஹோட்டல் சரவணபவனுக்குள் நுழைந்தது. அங்கே உட்கார இடம் கிடைக்காமல் காத்திருந்து பின்னர் ஒரு வழியாக கிடைத்த இடத்தில் உட்கார்ந்து உணவை முடித்துவிட்டு மீண்டும் கடைக்கு வந்தனர்.

முகமலர்ச்சியுடன் வரவேற்றார் கடைக்காரர். மீண்டும் குழந்தைகளோடு போராடி எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்தார் ராகவன்.

“”மணி நாலு. சரி கோயிலுக்குக் கிளம்பலாம்” என்றார். கையில் ஒரு பெரிய பட்டுப் புடவை மூட்டையுடன் ராஜம். கடைக்காரர் கொடுத்த ரசீதுச்சீட்டைப் பார்த்தார் ராகவன். ரூ. 10,318.00. தன்னுடைய பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து மெüனமாக அவரிடம் அளித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினார்.

கடைக்கு வெளியே வந்தவுடன் கல்யாணி, “”ஐயோ, மறந்தே போச்சு. இன்னிக்கு ராத்திரி என் வீட்டுக்காரர் சிங்கப்பூருக்கு போறார். இனிமே கோயிலுக்கெல்லாம் போயிட்டு எப்போ வீட்டுக்குப் போறது. கோயிலெல்லாம் இன்னொருநாள் பாத்துக்கலாம். எங்க வீட்டுக்காரருக்கு இவரை மாதிரி எல்லாம் பொறுமை கிடையாது. கத்துவார்” என்றாள் ராகவனைக் காட்டி.

ராகவன் சரி என்றார். கார் நேராக தாம்பரம் வந்து கல்யாணி, ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனி எல்லோரையும் சேலையூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியது.

வாடகைக் கார் டிரைவர், “”சார், நீங்க 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. அதுபோக மீதி கொடுத்தா போதும்” என்று சொல்லி ராகவன் கொடுத்த ரூ.1460-ஐ வாங்கிக் கொண்டு தலையைச் சொரிந்தார். புரிந்தது ராகவனுக்கு. தனியாக ட்ரைவருக்கு ரூ.100 அளித்துவிட்டு ராஜம் வாங்கியிருந்த புடவை மூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். மின்சார வெட்டு, லிப்ட் வேலை செய்யவில்லை. இரண்டு மாடிகளை ஏறி வீட்டுக்குள் நுழைந்து பெருமூச்சுவிட்டார் ராகவன்.

மின்சாரம் வந்து விளக்குகள் பளீரென எரிய ஆரம்பித்தன. விர்ரென்று லிப்ட் இயங்கியது. ராஜம்,””ஏங்க இந்தப் பட்டுப் புடவையை பாருங்க ஜொலிக்குதுல்ல” என்றாள்.

“”ஏங்க நம்ம அண்ணாநகர்லேயே காதி கிராமோத்பவன் இருக்கு. அங்கே போயி காசித்துண்டு வாங்கலாம்” என்றாள்.

“”சரி, அதை நான் பாத்துக்கறேன். இப்படி பொடி நடையா போயி வாங்கிட்டு வந்துடறேன்” என்றார் ராகவன்.

காசிக்குப் போனால்தானா எதையாவது விடவேண்டும்? ராகவன் யோசித்தார். சென்னையிலேயே காசித்துண்டை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். ராகவன் எப்போதுமே புத்திசாலி.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *