களவாடிய பொழுதுகள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 6,795 
 

மாயாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையாக நான் மாயாவை காதலிக்கிறேன். காதல் என்பது இரு மனிதர்களுக்கு இடையே ஏற்படுவது. இதில் மற்றவர்களின் எண்ணம்தான் என்னை கஷ்டப் படுத்துகிறது. நான் ஒரு திருநங்கையோ திருநம்பியோ அல்ல. ஒரு சாதாரணமான ஆண். ஆனால் என் மனைவி மாயா ஒரு திருநங்கை. திருநங்கைகளிடம் கணிசமாக பணம் இருக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் தவறானது. உண்மை என்ன தெரியுமா? நானும் மாயாவும் பத்து அடிக்கு பத்து அடி அளவுள்ள ஒரு அறையில் வசிக்கிறோம். ஒரு ‘போலக்’கும் (கையால் இசைக்கும் வாத்தியக் கருவி, மிருதங்கம் போன்றது) ஒரு துர்க்கை அம்மனின் சிலை மட்டுமே எங்களின் சொத்து. துர்க்கைக்கும், போலக்குக்கும் மாயா பூஜை செய்வார். இதைத்தவிர படுத்துக்கொள்ள படுக்கை ஒன்று.

எங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றி குடும்பத்தினருக்கே சொல்லிப் புரியவைக்க முடியாதபோது, உலகத்தில் உள்ளவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? அப்படியே புரிந்து கொண்டாலும் என்ன பயன் இருக்கிறது?

எனவேதான் நானும் மாயாவும் குடும்பத்தினரைப் பற்றியும், உறவுகள் பற்றியும் வெளியே யாரிடமும் பேசுவதில்லை.

மாயாவைப் பார்க்கும்போது ஒரு காதாநாயகியைப் பார்ப்பது போலத்தான் எனக்குத் தோன்றும். பெரிய கண்கள், மனதைக் கவரும் சிவப்பு நிறம், நெற்றியில் பெரிய பொட்டு.. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களாக அறிமுகமானோம்.

அப்போது மாயாவின் பெயர் மாரி. இருவரும் ஒரே பகுதியில் வசித்தோம். முதல் முறையாக மாரியை சந்தித்தபோது, பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நான் ஆறாவது வகுப்பிக்கற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டேன். படிக்க வேண்டியதின் அவசியத்தை என் குடும்பத்தினர் என்னிடம் கடுமையாக வலிறுத்தினாலும், படிப்பது எனக்கு வேப்பங்காயாக இருந்தது. என்னை ஒரு ஹீரோவாகப் பாவித்துக்கொண்டேன்.

படித்தவன் மட்டும்தான் வாழ்வானா? படிக்காதவனுக்குத் திறமை இல்லையா என்று போதித்த ‘தவறான’ நட்புகளும், பார்த்த திரைப்படங்களும் என்னை ஒரு கதாநாயகநாகவே உசுப்பேற்றி உருவேற்றின.

அன்று என்னைச் சுற்றி இருந்தவர்களின் கருத்துக்கள் என்னை அதிகமாக ஈர்த்தன. “வாழ்க்கை என்பது வாழ்வதற்கே; படிச்சவன் பாட்டைக் கொடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்..” என்பது போன்ற வார்த்தைகள் என்னைக் கவர்ந்தன.

அப்பாவின் புத்திமதியும், அம்மாவின் கெஞசலும், அண்ணனின் அறிவுரையும் அந்த நேரத்திற்கு சரியாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் நண்பர்களைப் பார்க்கும்போது பேசாமல் இருக்க முடியாது. அவர்களிடம் பேசும்போது மனம் மாறிவிடும். “வீடுன்னு இருந்தா அட்வைஸ் மழை பொழிவாங்க, அதையெல்லாம் நினைச்சு கவலைப்படக் கூடாது. கவலைப்பட்டவன் என்னத்தை கிழிச்சான்? படிச்சுட்டு எவனோ ஒருத்தனுக்கு வேலை செய்யறதுதான் வாழ்க்கையா?” என்பது போன்ற வார்த்தைகள் எனது மந்த புத்திக்கு தூபம் போட்டன.

சொந்தத் தொழிலே வாழ்க்கைக்கு நல்லது என்கிற முடிவில் திருமணத்திற்குச் சென்று பாட்டுப்பாடி பணம் சம்பாதிக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து செல்வேன். (வட இந்தியாவில் ‘டோல்’ என்ற வாத்தியக் கருவியை இசைத்துக்கொண்டு திருநங்கைகள் சுப காரியங்களுக்கு சென்று பாடுவார்கள். அவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்படும். இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.)

தவறான நட்பு என்று இன்று நான் குறிப்பிடும் உறவுகள்தான் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவர்களின் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தன. ஏனெனில் அவர்கள் எதற்கும் என்னை கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் குடும்பத்தினர் எப்போதும் இதைச்செய் அதைச் செய்யாதே என்று சொல்வது எரிச்சலாக இருக்கும்.

பதினாறு வயதிலேயே எனக்குத் தேவையான பணம் சம்பாதிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டேன். மாரி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் வயதுக்கு வாராதவராக இருந்தோம். ஆனால் காதலித்தோம். அவன் ஆணா, பெண்ணா என்பது எனக்கு எந்தவொரு நேரத்திலும் பெரிய விஷயமாக இருந்ததில்லை.

அதேபோல்தான் அவனுக்கும். நான் ஆண் என்பது அவனுக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதோ அல்லது பெண்ணைப் போல நடந்து கொள்வதோ, என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நான் அவனைப் பார்க்கும்போது அவன் பேண்ட்-சட்டை போட்டுக்கொண்டு ஆண் போலதான் இருப்பான்.

ஒரு பெண்ணுடனானா உறவு எப்படி இருக்கும் என்பது எனக்கு மாரியுடன் பழகுவதற்கு முன்பே தெரியும். ஏனெனில் மாரியை சந்திப்பதற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் இரண்டு வருடங்களாக பழகிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் என்னைவிட எட்டு வயது பெரியவள். அவளுக்கு திருமணம் ஆனதும் எங்கள் உறவு முறிந்து போனது.

மாரியுடன் இருப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வீட்டில் நான் கணவன். மாரி என்கிற மாயா எனது மனைவி. மாயா சிறு வயதில் இருந்தே தன்னை ஆணாக உணரவில்லை. பெண்ணாகவே உணர்ந்தார். அதனால்தான் அவர் மனைவி. நான் கணவன். வேறு எந்தக் காரணமும் இல்லை. மேக்கப் செய்வது மாயாவுக்கு மிகவும் பிடிக்கும். 12வது படிக்கும்போதே காது குத்திக்கொண்டு முடி வளர்க்க ஆரம்பித்தாள். அதுவரை மாயாவுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

ஆனால் தங்கள் மகன் ஓரினச் சேர்க்கையாளர் என்றும், என்னுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்பதும் மாரியின் குடும்பத்திற்கு தெரிய வந்தபோது மாரியை கயிற்றில் கட்டிவைத்து கண்மூடித்தனமாக அடித்தார்கள். இந்தக் குடும்ப வன்முறை ஒருநாளோடு நின்றுவிடவில்லை.. தொடர்கதையானது.

மாரி என்னைவிட நன்றாகப் படித்தவர். படிப்பது எப்போதுமே நல்ல வாழ்க்கையைத் தரும், வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற அம்மாவின் வார்த்தைகள் என் காதில் ஏறவேயில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தவர் நன்றாகப் படித்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நன்றாகப் படித்த மாரியின் வாழ்க்கையை மாற்ற படிப்பு உதவவில்லை.

‘ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வேலை கிடையாது; திருநங்கைகளுக்கு வேலை கிடையாது’ என்பது போன்ற வார்த்தைகள் மாரியை விடாமல் துரத்தியது. இந்த ஒரே காரணத்தால் மட்டுமே, தனது பெயரை மாயா என்று மாற்றிக்கொண்டு திருநங்கைகளின் குழுவில் இணைந்தான் மாரி. வாழ்வாதாரத்திற்கான வேறு எந்த வழியும் எங்களுக்கு புலப்படவில்லை.

திருநங்கைகளின் குழுவில் சேர்ந்தால், திருமணங்களிலும், சுபநிகழ்ச்சிகளிலும் சென்று ஆடிப்பாட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் கொடுக்கும் சன்மானமே எங்களுக்கு சோறுபோடும் என்பதும் புரிந்தது.

‘டோல்’ வாத்தியத்தை எடுத்துக்கொண்டு மாயா அந்தத் தொழிலில் இறங்கிய நாளை என்னால் மறக்கவே முடியாது. கைகளை தட்டிக்கொண்டு, டோலை இசைத்துக்கொண்டு திருநங்கையர்களின் குழுவில் ஒருவராக அதீதமான அலங்காரத்தில் மாயாவாக மாரி சென்றதைப் பார்த்தபோது மனது வலித்தது.

மாயாவின் குடும்பத்தினரும், சமூகமும் மாயாவின் உணர்வுகளை மதித்து ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது வாழ்க்கையே மாறி இருக்கும். வேறு வழியில்லாமல் கட்டாயத்திலேயே அவர் இந்தத் தொழிலில் இறங்கினார். ஒருவரின் பாலின உணர்வும், உள்ளார்ந்த விருப்பங்களும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், அவர்கள் இயல்பாக வாழலாம்.

மாயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா மாற்றங்கக்களிலும் நான் அவளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். சில தினங்களில் மாயாவை நான் திருமணம் செய்துகொண்டேன். திருமணப் பதிவு அலுவலகத்திற்கு சென்று, எங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமென்று சொன்னோம். அவர்கள் மறுத்து விட்டார்கள். எனவே எங்கள் திருமணத்திற்கு எந்தவிதமான ஆவணப் பதிவுகளோ அல்லது சட்டபூர்வமான அங்கீகாரமோ இதுவரை கிடைக்கவில்லை. இதேபோல பலர் உள்ளனர்.

எனக்கு இரண்டு பெரிய ஆசைகள் உள்ளன. சற்று பெரிய வீடு வாங்க வேண்டும்; ஒரு குழந்தையை தத்து எடுத்து, நல்லமுறையில் வளர்த்து அதற்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும். எங்கள் திருமணத்திற்கு என்னால் செலவு செய்ய முடியவில்லை. எங்களுக்கு மாப்பிள்ளை அழைப்போ, திருமண விருந்தோ நடக்கவிளை என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கிறது.

இந்தக் காதலுடனே எங்களால் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “களவாடிய பொழுதுகள்

  1. Hello sir, My name is Gowri thirisha. Iam currently doing my bachelors of arts in English at Women’s Christian College, Chennai. As a part of my course, I need to interview a contemporary tamil writer and I recently came across your works, and got intrigued by your views and works. Would it be possible for me to have a e-mail interview with you sir? If you approve the idea, please respond. Thank you , Sir. For your time and consideration.

    1. Dear Ms.Gowri, Unfortunately Mr.Kannan is no longer with us. Happy to see his work was big inspiration for you. Thanks for reaching out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *