கல் தடுத்த தண்ணீர்

 

ஒன்பது மணியாகி விட்டது என்பதை அறிவிப்பது போல, சில விநாடிகள் ஒலித்து, பின் அடங்கி விட்டது முனிசிபாலிட்டியின் சங்கு. தெருவிலும் சந்தடி குறையத் தொடங்கி விட்டது. காதர் பாட்சாவும், கடிகார கடையை மூடிவிட்டு, கால் ரப்பர் செருப்பு, “டப்டப்’ என்றடிக்க, அடுத்த தெருவிலிருக்கும் தன் வீட்டிற்கு, இந்த தெரு வழியாகப் போய்விட்டார்.
மூன்று சக்கர சைக்கிளில், சிகப்புத் துணியைப் போட்டு மூடி, காஸ்லைட் விளக்குடன் குல்பி ஐஸ் வண்டி, மணியை அடித்துக் கொண்டு போயிற்று.
கல் தடுத்த தண்ணீர்இனிமேல் யாராவது வந்தால், அப்போது மட்டும் குரைத்தால் போது மென்று, தன் வழக்கமாக படுக்கும் இடத்தை சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து பார்த்து விட்டு, காற்று வரும் திசை நோக்கி மூக்கை வைத்துக் கொண்டது தெரு நாய்.
வாசற்கதவை திறந்து வைத்து, அக்கதவின் மீது சாய்ந்து, மடியில் குழந்தையைப் போட்டு, அதன் முதுகில் தட்டி தூங்க வைத்துக் கொண்டிருந்த சிவகாமி, தெருக் கோடியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்ச நேரமானால், சினிமா முடிந்து விடும். அப்போது ஏழெட்டு பேர், சத்தமாக பேசிக் கொண்டு, அந்த தெரு வழியாகப் போவர்; அவ்வளவு தான். அப்புறம் தெருவில் ஜன நடமாட்டமே தெரியாது.
காலையில் நான்கு மணிக்கு, ஓட்டல்களுக்கு பால் கறந்து கொடுக்க, இரண்டு, மூன்று எருமைகளை ஓட்டிக் கொண்டு, கக்கத்தில் பால் கறக்கும் பாத்திரத்தை இடுக்கி போவான் சுப்பையா.
தெருக் கோடியில் யாரோ இரண்டு, மூன்று பேர் வருவது தெரிந்தது. அவர்களில் ஒருவராக, தன் கணவன் கோபி இருப்பானோ என்றெண்ணினாள் சிவகாமி. “கோபியாகவே இருக்க வேண்டும் முருகா…’ என்று, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமியை, வேண்டிக் கொண்டாள் அவள்.
தினசரி மாலை ஆறு மணிக்கு, ஆபிசிலிருந்து வந்து விடுவான் கோபி. சில நாள் கூட ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ ஆகும். அன்று ஆபிசில் வேலை அதிகம் என்பான் கோபி.
கேஷியர் வேலை கோபிக்கு. தினசரி அரை லட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை பணப் புழக்கம் இருக்கும்.
பணத்தை வாங்கிக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் இருக்கும் கோபி, பாங்கில் பணம் கட்டவோ, எடுத்து வரவோ, டி.டி., எடுக்கவோ வேறு சென்றாக வேண்டும்.
அன்று மட்டும் அவன், பாங்க் போய் விட்டு வருவதற்காக ஐம்பது ரூபாய், பேட்டா கொடுப்பர்; அதை அன்றன்றே கொடுத்து விடுவர். அதைக் கொண்டு வந்து அப்படியே சிவகாமியிடம் கொடுத்து விடுவான் கோபி.
“பாங்க்ல எவ்வளவு பணம் கட்ட எடுத்துட்டுப் போனீங்க இன்னிக்கு?’ என்று கேட்பாள் சிவகாமி.
“ஐம்பதாயிரம் ரூபாய் சிவகாமி!’ என்பான் கோபி.
“தனியாவா எடுத்துட்டுப் போனீங்க?’
“ஆமாம்!’
“பயமா இல்லையா?’
“பயமா… ஏன்?’
“நீங்கள் பணத்தை கட்ட பாங்குக்கு எடுத்துக் கிட்டு போறதை தெரிஞ்சுக்கிட்டு, யாராவது உங்க பின்னாடியே வந்து, ஒரு அடி அடிச்சோ, கத்தியைக் காட்டி பயமுறுத்தியோ, பணத்தை பறிச்சுக்கிட்டுப் போயிட்டா?’
“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது சிவகாமி, நீயா எதை எதையோ நெனைச்சு கற்பனை செஞ்சுக்கிட்டு பயந்து, பயந்து சாகாதே… பணத்தை எடுத்துக்கிட்டு பாங்குக்குப் போய் கட்டறதும், அங்கேயிருந்து பணம் எடுத்துக்கிட்டு வர்றதும் பழக்கமாயிடிச்சு எனக்கு…
“இதை நான் ஒருத்தன் மட்டுமில்லை சிவகாமி, தினம் நூற்றுக்கணக்கான பேர், இந்த ஊர்ல செய்யறாங்க… யாருக்கும் எதுவும், என்னிக்கும் நடக்கலே… எனக்கும் நடக்காது; கவலைப்படாதே…’ என்பான் கோபி, அவள் தலையை தடவிக் கொடுத்து.
ஆயினும், சிவகாமி பயப்படவே செய்தாள். சட்டைப் பையில் பத்து ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டே வெளியில் செல்ல முடியவில்லை. தினசரி ஆயிரக்கணக்கில் பணம் எடுத்துச் செல்வதும், பத்திரமாக திரும்பி வருவதும், சாதாரண விஷயமா?
வழக்கமாக கோபி வீடு திரும்பும் நேரத்தை விட, சற்று கூடுதல் நேரமாகி அவன் வராவிட்டால், சிவகாமி கவலைப்பட ஆரம்பித்து விடுவாள். மனம் ஏதேதோ நினைக்க துவங்கி விடும். ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வாள்; வாசலே கதியாக கிடப்பாள். கோபி வந்து சேர்ந்த பிறகுதான், நிம்மதி பெருமூச்சு விடுவாள்.
மூவரும் தன் வீட்டை நோக்கி வருவதை கவனித்தாள் சிவகாமி.
அவர்களின், நடுவே கோபி தலை குனிந்தபடி வருவதும் தெரிந்தது. அவன் நடை, தோற்றம் எதுவுமே இயல்பாக இல்லை. நடையில் தளர்வும், தோற்றத்தில் ஏதோ ஒரு தவறும் தெரிந்தது.
கூட வருகிறவர்கள் யாரென்று பார்த்தாள் சிவகாமி, ஆபிஸ்காரர்கள் தான். கணபதியும், சாமுவே<லும் தான்; போலீஸ்காரர்கள் இல்லை.
எழுந்து நின்றாள் சிவகாமி. “தான் இத்தனை நாள் பயந்து கொண்டிருந்தது இன்றைக்கு நடந்து விட்டதா? எவ்வளவு பணம் பறிபோயிற்று, அதற்கு ஆபிசில் என்ன கூறினர்; வேலை போய் விடுமா? நல்லவன் என்பதால் செக்யூரிட்டி பணம் கூட வாங்காமல் கோபிக்கு, கேஷியர் வேலை கொடுத்திருந்தனரே… செக்யூரிட்டி பணம் என்று ஒன்றை கட்டியிருந்தால் தொலைந்த பணத்தை அதில் ஈடு செய்திருக்கலாமே இப்போது… அதுவும் இல்லையே…’ என நினைத்தாள்.
“”கவலைப்படாதே கோபி… நீ எவ்வளவோ ஜாக்கிரதையாக இருக்கிறவன் தான்… தொலைஞ்சுப் போனது பெரிய தொகை இல்லை; இருபதாயிரம் ரூபாய் தான். நாளைக்கு சாயங்காலம் வரை டைம் கொடுத்திருக்காங்க ஆபிஸ்ல… பார்க்கலாம்,” என்று கூறினர் கணேசனும், சாமுவேலும்.
“”எவ்வளவு பணம் தொலைஞ்சுப் போச்சு?” என்றாள் சிவகாமி.
“”இருபதாயிரம்!”என்றார் கணேசன்.
“”தொலைஞ்சுப் போச்சா இல்லை எவனாச்சும் பறிச்சுக்கிட்டு போயிட்டானா?”
“”தொலைஞ்சுதான் போச்சு… டி.டி., எடுக்க இருபதாயிரம் எடுத்துக்கிட்டுப் போயிருக்கான்…” என்று சொல்லி விட்டு இருவரும் போய் விட்டனர்.
“”என்னங்க இது?” என்று பதறியபடி கேட்டாள் சிவகாமி.
“”எவ்வளவோ ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன் சிவகாமி… ஒரு லட்சம், ரெண்டு லட்சம் எல்லாம் பாங்குக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்கேன், வந்திருக்கேன். அப்போல்லாம் ஒண்ணும் நடக்கலே… இன்னைக்கு என் போதாத காலம், இப்படி நடந்துடிச்சு…” என்றான் கோபி.
“”நாளைக்குள்ளே பணம் கட்டாட்டா என்னாகும்?” என்று கவலையுடன் கேட்டாள் சிவகாமி.
இரண்டு உள்ளங்கைகளையும் மடித்து ஒரு கையின் மீது மற்ற கையை வைத்து காட்டினான் கோபி.
“”ஜெயிலா?”
மவுனமாக தலையை குனிந்து கொண்டான் கோபி.
“”விக்கலாம்ன்னா பொட்டுத் தங்கம் கூட இல்லை… சேமிப்புன்னு சொல்லிக்க எதுவுமில்லை… என்னங்க செய்யறது?”
“”நாளைக்கு வரை டைம் இருக்கு சிவகாமி… கடவுளை நம்பறதை தவிர வேற வழியில்லை,” என்ற கோபி வெறும் தரையில் படுத்து, தலைக்கு கையை வைத்துக் கொண்டான்.
குழந்தை தூங்கி விட்டது; சிவகாமிக்கு தூக்கம் வரவில்லை. ஜெயில் நினைப்பாகவே இருந்தது. கோபியைப் பார்த்தாள் அவள். நாளை இந்நேரம் அவன் ஜெயிலினுள் படுத்திருப்பானோ?
யார் உதவியை நாடுவது?
கோபியின் அப்பா, மயிலாப்பூரில் இருக்கிறார். அவர், கடைசிப் பெண் திருமணத்தை கூட நடத்த முடியாமல், பணக் கஷ்டத்தில் இருக்கிறார். நிலைமையை அவரிடம் சொன்னால் கூட, அவரால் பண உதவி செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர் ஏதாவது வழியில் முயற்சி செய்யலாம்.
மாமனாருக்கு போன் செய்யலாமென்று கோபியின் மொபைலை கையிலெடுத்தாள் சிவகாமி; ஆனால், பேசவில்லை. அவரிடம் பேச தனக்கு எந்த தகுதியும் கிடையாது என்று, அவள் அந்தராத்மா தடுத்தது அவளை.
மாமனாரிடம், மாமியாரிடம், மச்சினியிடம் எல்லாம் வெறுப்பைக் காட்டியவள் சிவகாமி. அவர்களை, பிள்ளை வீட்டுக்கு வரமுடியாமல் செய்துவிட்டவள். நல்லது, கெட்டதுக்கு, பண்டிகைக்கு கூட, அவர்கள் யாரும் தன் வீட்டுக்கு வரக்கூடாது; தன் கணவன் கோபியும், அவர்கள் வீட்டுக்கு போகக் கூடாதென்று தடை விதித்துள்ளவள் சிவகாமி.
இப்போது, அவர்களிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது?
மொபைல் போன் ஒலித்தது.
“”சிவகாமி… போனை எடு… ஆபிஸ்காரங்க யாராவது பேசறாங்களான்னு பாரு,” என்றான் கோபி.
சிவகாமி போனை, “ஆன்’ செய்து, “ஹலோ…’ என்றாள்.
“”சிவகாமியா? நான் தான் மாமனார் பேசறேன்… உன்கிட்டே கொஞ்சம் பேசலாமா?” என்றார் கோபியின் அப்பா மகாலிங்கம்.
“”கொஞ்சம் என்ன மாமா? நிறைய பேசுங்க!” என்றாள் சிவகாமி.
“”இன்னைக்கு கோபி எங்க வீட்டுக்கு வந்திருந்தாம்மா… அப்ப நான் வீட்டிலே இல்லை… அம்மா தான் இருந்திருக்காங்க… தங்கச்சி கல்யாணத்துக்கு நான் கஷ்டப்படறது கோபிக்கு தெரிஞ்சுச்சாம்… அம்மாகிட்டே இருபதாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப் போயிருக்கான். அவனுக்கு ஏது அவ்வளவு பணம்ன்னு அவன் கூட வேலை செய்யற இமானுவேலைக் கேட்டேன். அவன் நடந்ததை சொன்னான். திக்கென்று ஆயிடுச்சு எனக்கு.
“”எனக்கு உதவி செய்யணும்ன்னு நெனைச்சு, ஆபிஸ் பணம் இருபதாயிரம் தொலைஞ்சுப் போயிடிச்சுன்னு நாடகமாடி இருக்கான் கோபி… இதனால் என்ன நடக்கும்ன்னு தெரிஞ்சே அவன், இந்த தப்பை செஞ்சிருக்கான். உடனே, இமானுவேலோட, ரூபாய் இருபதாயிரத்தை கோபி ஆபிஸ் மானேஜரை பார்த்துக் கொடுத்து, அவனை மன்னிச்சுடச் சொன்னேன்… அவரும் மன்னிச்சுட்டார். அவனை இனிமே, கேஷியர் வேலைக்கு வைச்சுக்க முடியாது. கிளார்க் வேலைதான்னும் சொன்னார் அவர்…” என்றார் மகாலிங்கம்.
நல்லவன் ஒருவனை தீயவனாக மாற்றி விடுவது, அவன் கூட இருப்பவர்களின் செயல் தான் என்பது புரிந்தது சிவகாமிக்கு. கோபிக்கும், அவன் வீட்டாருக்கும் தான் விதித்த கட்டுப்பாடு, தடைகள் தான் அவரை இப்படி நடக்கச் செய்துவிட்டன என்பது தெரிந்ததும், அழுகை அழுகையாக வந்தது சிவகாமிக்கு. கல் தடுத்தால், தண்ணீர் பாயும் திசை மாறும்.
தன் தவறை உணர்ந்தவளாக, “”உங்களை எல்லாம் நான் ரொம்ப கொடுமைப் படுத்திட்டேன் மாமா… நீங்க உடனே எல்லாரையும் கூட்டிக்கிட்டு, ராத்திரின்னு கூட பாக்காம வாங்க… நான் உங்கள் கால்ல விழணும், மன்னிப்பு கேட்கணும்…” என்ற சிவகாமி, கோபியை எழுப்பினாள்.
“”உங்க அப்பா ஆபிஸ்ல பணத்தை கட்டிட்டாராம்; இனிமே நீங்க உங்க அப்பா, அம்மா, தங்கச்சிக்கிட்டே எல்லாம் பேசலாம், பழகலாம்; அன்பு, பிரியம் காட்டலாம்… உங்களை பண மோசடி செய்ய தூண்டின என்னை மன்னிச்சுடுங்க,” என்று கணவனின் காலடியில் விழுந்து கதறினாள் சிவகாமி.

- அக்டோபர் 2010 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)