கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 5,231 
 

வா மாப்ள வா வா , என்ன விசேசம், கையிலே கவர் கட்டோட வந்திருக்கே, கல்யாண பத்திரிக்கையா? கல்யாணம் யாருக்கு? உனக்கா? குரலில் கிண்டலா,வருத்தமா என்று தெரியவில்லை, அல்லது உனக்கெல்லாம் கல்யாணமா என்ற கேள்வி கூட இந்த வார்த்தையில் அடங்கியிருக்கலாம்.

பரந்தாமனுக்கு பற்றிக்கொண்டு வந்தது, சுட சுட பதில் சொல்லிவிடலாம், இருந்தாலும் பல்லை கடித்துக்கொண்டு முன்புறுவல் பூத்தான். ஆமாப்பா, எனக்குத்தான் கல்யாணம் வர்ற வியாழக்கிழமை லட்சுமியம்மாள் கல்யாண மண்டபத்துல வச்சிருக்கேன்.

உனக்கா, கல்யாணமா? சொல்லவேயில்லை, அப்புறம் ரொம்ப சந்தோசம், கண்டிப்பா வந்திடுறேன்.

எல்லாம் நேரம்டா ! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட பரந்தாமன், உன் சம்சாரத்துகிட்ட சொல்லிடு, இரண்டு பேரும் வந்திடணும்.

வீட்டுக்காரியையும் கூட்டிட்டு வர முயற்சி பண்றேன். நான் கட்டாயம் வந்திடுவேன்.

கை கூப்பினான்.கிளம்பு என்கிறானா?

பரந்தாமன் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவனாக காணப்பட்டான். முதல் பத்திரிக்கை பால்ய கால நண்பனாச்சே என்று கொடுக்க வந்தால் குரலில் கிண்டல், கேலி. எல்லாம் இவர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி விட்டது, என்ற எண்ணம். ஹூம்..பெரு மூச்சுடன் அடுத்த தெருவில் இருக்கும் நண்பன் என்ன சொல்ல போகிறானோ என்று பயத்துடன் நடக்க ஆரம்பித்தான்.

இவனின் வருத்தமும் ஞாயமானதே. அவன் என்ன செய்வான்.எப்பொழுதுமே சொன்னபடி கேட்கும் பிள்ளையாய், குடும்ப விவகாரங்களில் இழுத்து போட்டு வேலை செய்யும் பிள்ளையாய், நமக்கு என்று ஒரு பெண் வருவாள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் எல்லா வித ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் இவனுக்கும் தேடி வந்த்து.

இதற்கும் இவன் ஒரே பையன், எல்லாவித வசதிகளும் உள்ளவன், வசதி என்றவுடன் கார், பங்களா என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், அவனுக்கு வரும் வருமானத்திலும், அவன் பெற்றோர் சேர்த்து வைத்த ஒரு வீடு, கொஞ்சம் வங்கிப்பணம், இவைகளே இவன் உட்பட இவன் பெற்றோர்களுக்கு போதுமானதாக இருந்தது.அது போக அவன் அம்மா, அப்பா கேட்கும் பிள்ளையாய் இருந்தது வேறு இவன் பெற்றோருக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. இவனது இருபத்தி ஐந்தாவது வயதிலேயே இவன் திருமண பேச்சை எடுத்து விட்டனர் இவன் பெற்றோர். அப்பொழுதெல்லாம் இந்த பேச்சை எடுத்தவுடன் மிகுந்த வெட்கப்படுவான்.

கல்யாணப்பேச்சை எடுத்தவுடன் இவன் மனதில் ஏற்பட்ட பரவச நிலையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. கண்ணில் தென்படும், பெண்களை பார்ப்பவன் எனக்கு வரும் பெண், இந்த பெண்ணை போல் இருப்பாளா, அல்லது இந்த பெண்ணை போல இருப்பாளா என்று கனவுகளுடனே இருந்தான்.

முதலில் இவன் ஜாதகம் சுத்தமான ஜாதகம், பெண் கிடைப்பது சுலபம் என்றார்கள்.

இதனால் இவனுக்கு நெஞ்சு நிமிர்ந்தது. அம்மாவிடம் மெதுவாக சொன்னான், அம்மா பொண்ணு கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்கும். அம்மாவுக்கு ஒரே சந்தோசம் பையன் வாய் திறந்து கேட்டுட்டான், அப்படியே பார்ப்போம் ராசா, என்று உச்சி முகர்ந்தாள்.

அப்புறம் வரதட்சணை, அது, இது அப்படீன்னு அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது.

அம்மாவுக்கு இந்த வார்த்தைகள் கசப்பாக இருந்தாலும், ஒரே பையன் அவன் சொன்னபடி தலையாட்டி வைப்போம். அப்புறம் பார்க்கலாம் என்று தலையாட்டி வைத்தாள். கூட இருந்த அவனின் தகப்பனும், பொண்டாட்டியே தலையாட்டிட்டா, அப்புறம் என்ன? நாமும் தலையை ஆட்டி வைப்போம் என்று முடிவு செய்தவர் போல தலையை ஆட்டி வைத்தார்.

சுத்த ஜாதகம் பெண் கிடைப்பது சுலபம் என்று சொன்னவர்கள், ஜாதம் தரகரிடம் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகியும் கிணற்றில் போட்ட கல்லைபோல இருந்தார். இவனுக்கு என்னவாயிற்று என்று கேட்க தயக்கம், அலையறான் பாரு அப்படீன்னு சொல்லிடுவாங்களோ என்று தயக்கம். மூன்று மாதம் கழித்து இவன் வீடு வழியாக வந்தவரை, அம்மாதான் கேட்டாள்.என்ன தரகரே இப்பவே பொண்ணு ரெடி, அப்படீன்னு ஜாதகம் வாங்கி போனீர், பதிலையே காணோம்.

அம்மா பாத்துகிட்டே இருக்கேன், சுத்தமான ஜாதகமில்லையா, அதுதான் கிடைக்க மாட்டேங்குது. உள்ளறையில் கேட்டுக்கொண்டிருந்த இவனுக்கு ஆத்திரமாய் வந்தது. சுத்தமான ஜாதகம், பெண் கிடைப்பது சுலபம் என்றவர் இப்பொழுது இப்படி பேசுவதை கேட்டவுடன் போய் இதை கேட்டுவிடலாமா என்று நினைத்தவன் அம்மா ஏதாவது நினைத்துக்கொள்வாள் என்று பேசாமல் இருந்து விட்டான்.

ஆறாவது மாதம் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்தார். பெண் கொஞ்சம் மாநிறம், ஆனா நல்லா படிச்சிருக்கு, கவர்ன்மெண்ட் உத்தியோகம், என்ன சொல்றீங்க. இதை கேட்டவுடன் இவன் அம்மாவிற்கு ஒரே மகிழ்ச்சி, கவர்மெண்ட் பொண்ணு கிடைச்சா பையனுக்கு எதிர்காலத்துல பிரச்சினை இருக்காது, சரிங்க, பாத்துடலாம், தரகர் கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு, ஒரு நாள் சொல்றேன், அப்ப நீங்க வந்து பொண்ணை பாத்துடலாம்.

சொல்லிவிட்டு சென்றவர், அதற்கு பின் ஒரு மாதம் கழித்துத்தான் தலை காட்டினார்,

என்ன தரகரே பொண்ணு பார்க்க ஒரு நாள் போலாம் அப்படீன்னு சொல்லிட்டு காணாம போயிட்டீங்க. அவர் அதை விடுங்கம்மா, நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு அவங்க “செட்” ஆக மாட்டாங்க, இப்ப ஒரு ஜாதகம் வந்திருக்கு, அதைய பாக்கலாம், பொண்ணுக்கு படிப்பு கம்மி, ஆனா வசதி இருக்கு, இதையும் அவனின் அம்மா ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு சரி சீக்கிரம் ஒரு நல்ல நாள் சொல்லுங்க, போய் பார்த்துடுவோம், சொல்லிவிட்டு மறுபடியும் கொஞ்சம் பணம் வாங்கி சென்றவர்தான்.மறுபடியும் தலை மறைவாகிவிட்டார்.

அடுத்த முறை வந்தபொழுது, இவன் அம்மாவிற்கு கோபமான கோபம். என்ன தரகரே, விளையாடறீங்களா? வந்து வந்து பணத்தை வாங்கிட்டு இதா ரெடி, இதாரெடி, அப்படீன்னு சொல்லிட்டு போயிடறீங்க, அப்புறம் ஆளையே காணறதில்லை. உங்களால முடியலியினா சொல்லுங்க, நாங்க வேற ஒருத்தரை பார்த்துக்கறோம்.அம்மா கோபிச்சுக்காதீங்க, காலம் கலி காலமா போச்சு என்று அலுத்துக்கொண்டார். அம்மாவுக்கு சுவாரசியம் தோன்றி விட்டது. என்ன தரகரே, திடீருன்னு அலுத்துக்கறீங்க. அதை ஏன் கேக்கறீங்க என்று ஆரம்பித்தார். இந்த பொண்ணை வச்சிருக்கறவங்க இருக்காங்களே, அவங்க எதிர்பாக்கற மாதிரி எல்லாம் இப்ப பசங்க கிடைப்பாங்கன்னு நினைக்கறீங்க? அம்மாவிடமே கேள்வியை திருப்ப, அம்மா கொஞ்சம் திணறி ஏன் அப்படி சொல்றீங்க? என்று எதிர் கேள்வி கேட்டு தப்பித்துக்கொண்டாள்.

இப்படியே நீண்டு கொண்டு போன இவர்கள் பேச்சு, கடைசியில் தரகர்தான் ஜெயித்தார்.

கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு கிளம்பி விட்டார்.இப்படியாக இவனின் திருமண பேச்சு அடுத்த இருபத்தி ஆறில் இரட்டை படை ஆகாது என்று சொல்லி தள்ளி போடப்பட்டது.

இருபத்தி ஏழில் இரண்டு முறை பெண் பார்க்கும் படலம் வரை போய் இரண்டாம் முறை,அந்த பெண்,இவனை வேண்டாமென்று சொல்லி விட்டதால், இவன் மனம் வெறுத்து அம்மாவிடன் இனிமேல் பெண் பார்க்கும் வேலை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டான். இப்படியாக இவனின் இருபத்து ஏழாவது வயது இப்படி கழிந்து விட்டது அடுத்து வந்த வயது இரட்டை படை என்று சொல்லி விட்டதாலும், இவனும் இனிமேல் பெண் பார்க்க போக கூடாது என்ற வைராக்கியத்தாலும் ஓடி விட்டது.இருபத்தி ஒன்பதில் கொஞ்சம் வேகம்

பிடித்த இவனின் பெண் பார்க்கும் படலம், ஒரு பெண் பார்த்து ஒரு வழியாக முடிவு செய்ய, இவனின் நேரமோ என்னவோ அந்த பெண்ணின் வீட்டில் ஒரு துக்கரமான நிகழ்ச்சி நடந்து விட்டது. அவர்கள் அப்படியே இந்த கல்யாண பேச்சையே முறித்துக்கொண்டார்கள்.

பரந்தாமனுக்கு இந்த கல்யாணம், காட்சி என்பதெல்லம் வெறுத்துப்போயி பேசாமல் சந்நியாசியாகி விடலாம் என்று முடிவு செய்து கொண்டான்.ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை. இதற்குள் இவனது நண்பர்களுக்கெல்லாம் வரிசையாக திருமணம் நடை பெற்றுக்கொண்டு வந்தது.இவனுக்கு அந்த கலியாணங்களுக்கு போவதற்கு வெட்கமாக கூட இருந்தது. என்ன இன்னும் கலியாணம் பண்ணிக்கலியா? உனக்கென்னப்பா பொண்ணா கிடைக்கலை? என்ற பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள பயந்து எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

மறுபடியும் முப்பதில் இரட்டைப்படை வந்து நிற்க, இவனின் திருமண பேச்சு தடை பெற்றது. தரகருக்கு போக வேண்டிய வருமானம் அவ்வப்பொழுது வந்து பெற்றுக்கொண்டுதான் இருந்தார்.இப்படியான இவனது போராட்டம் முப்பத்தி ஒன்றில் முடிவு பெற்று இப்பொழுது பத்திரிக்கை கொடுக்கும் அளவில் வந்து நிற்கிறது. அதற்குள் இருபத்தி ஐந்து வயது தோற்றம் இவனையும் கொஞ்சம் மாற்றித்தான் விட்டது. அதற்காக நண்பர்கள் இவனுக்கென்னவோ ரொம்பவும் வயதாகி விட்டது போல் பேசுவது இவனுக்கு வேதனையாக இருந்தது.

கடைசியாக அலுவலகத்தில் எல்லோருக்கும் பத்திரிக்கையை விநியோகித்தவன் எதிர் சீட்டில் இருந்த மஞ்சுளாவிற்கு அழைப்பிதழை கொடுத்தான்.இவன் கல்யாண தகவலை சொன்னவுடனே அவள் முகம் மெல்ல இருண்டது போல் இவனுக்கு பட்டது. அவள் கையில் பத்திரிக்கை வைத்ததை கூட அவள் தயக்கத்துடனேயே பெற்றுக்கொண்டாள்.

ஒரு வேளை இவள் என்னை விரும்பி இருந்திருப்பாளோ மனசில் தோன்ற, அப்படி நினைத்திருந்தால், ஏதோ ஒரு வகையில் எனக்கு தெரியப்படுத்தி இருக்கலாமில்லையா?

தெரியப்படுத்தி இருப்பாள், நான் தான் கவனிக்காமல் இருந்து விட்டேன். இனி பேசி என்ன லாபம், மனசுக்குள் நினைத்துக்கொண்டவன், சட்டென இப்படி கூட இருக்கலாம், என்னை போல அவர்கள் வீட்டிலும் மாப்பிள்ளை தேடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கலாம், நான் முந்திக்கொண்டதில் கூட அவளுக்கு வருத்தமிருக்கலாம்.

எது எப்படியோ இந்த சமுதாய நடை முறைகளில் நாமும் அங்கீராத்தை பெற்று விட்டோம் என்று மனதில் திருப்தியுடன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *