Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கல்யாணமாம் கல்யாணம்

 

என் தம்பியின் மகள் லதாவுக்கு கல்யாணம் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரிலிருந்து சதாப்தி ரயிலில் சென்னைக்கு கிளம்பினோம். நங்கநல்லூரில் கல்யாணம்.

காலை பத்தரைக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, தம்பியின் பக்கத்து வீடடுப் பையன் குமரேசன் வந்திருந்து எங்களை பொறுப்பாக அழைத்துப்போனான். எனக்கு அவனை கடந்த பத்து வருடங்களாகத் தெரியும். சொந்தமாக வெல்லமண்டி வைத்திருந்தான். ரொம்ப மரியாதைப் பட்டவன். பக்கத்துவீடு என்பதால் என் தம்பிக்கு அவ்வப்போது உதவியாக இருப்பான். இந்தக் கல்யாணத்திற்கு வேண்டிய உதவிகளை அவன்தான் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.

திருமணத்திற்கு முந்தையநாள் காலையிலேயே நாங்கள் அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு சென்றுவிட்டோம். காலை எட்டு மணிக்கு இலை போட்டு டிபன் பரிமாறினார்கள். பரிமாறிய அனைவரும் வெறும் கையினால் பரிமாறினார்கள். அதைப் பார்த்து எனக்கு கோபம் வந்து அவர்களை சத்தம்போட்டு திட்டினேன். உடனே எங்கேயோ போய் கையுறைகள் எடுத்துவந்து அணிந்து கொண்டனர்.

அங்கு வந்த என் தம்பி பொண்டாட்டி, “பாவம் அவாள ஏன் திட்டறேள்?” என்றாள்.

“நீ சும்மா இரு. எனக்குத் தெரியும் இவர்களின் சுத்தம். ஒருத்தனும் இன்னிக்கி குளிக்கல…மூஞ்சியப் பார்த்தாலே தெரியுது. ஒருத்தனும் கை விரல் நகங்களை வெட்டிக்கலை. ஒரே அழுக்கு வேட்டி. உடம்புல எல்லா இடுக்குகளிலும் வண்டி வண்டியா அழுக்கு…வியர்வை நாத்தம். பரிமாறும் முன், எங்கெல்லாம் சொறிந்துகொண்டானோ” என்றேன்.

அவள் “உவ்வே” என்று அந்த இடத்தை காலி செய்து ஓடிவிட்டாள்.

மத்தியான சாப்பாட்டை, பன்னிரண்டு மணிக்கே இலைகளில் பரிமாறி வைத்து விட்டார்கள். பதார்த்தங்கள் அனைத்தும் மின்விசிறியில் காய்ந்து போயின.

நான் மிகவும் கோபத்துடன் “ஏன் அனைவரும் பந்தியில் உட்கார்ந்தவுடன் பரிமாறலாமே! அனைவரும் அமர்ந்தவுடன் இலைபோட்டு, இலையில் தண்ணீர் தெளித்து துடைத்துக் கொண்டவுடன் மெதுவாக பரிமாறலாமே? இலையில் என்ன விழ வேண்டும், வேண்டாம் என்பதை சாப்பிடுபவர்கள்தானே முடிவு செய்ய வேண்டும்? நீங்கள் யார் ஏற்கனவே பரிமாறியதை சாப்பிடச் சொல்ல? நாங்கள் என்ன தெரு நாய்களா?” என்று கத்தினேன்.

சாப்பாடு காண்ட்ராக்ட்டை எடுத்தவர் என்னை வெறுப்புடன் முறைத்தார்.

நான் கத்துவதைகூட பொருட்படுத்தாமல் நிறையப்பேர் பந்தியில் அமர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். பாவம் அவர்கள் அவசரம் அவர்களுக்கு.

நான் கோபித்துக்கொண்டு சரஸ்வதியுடன் மண்டபத்தைவிட்டு வெளியேறி, ஒரு ஆட்டோ பிடித்து நங்கநல்லூர் முருகன் இட்லிக்கடையில் இறங்கிக் கொண்டேன். அங்கு ஏ.சி.யில் நிம்மதியாக அமர்ந்தேன்.

சர்வர்கள் எங்களை மரியாதையுடன் விசாரித்து வேண்டியதை கையுறை அணிந்து, கேட்டு கேட்டு பரிமாறினார்கள். யூனிபார்ம் அணிந்து சுத்தமாக இருந்தார்கள். வயிறார சாப்பிட்டோம். மறுபடியும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.

என்தம்பி என்னிடம் ஓடிவந்து நடந்த தவறுக்கு வருந்தினான்.

“உனக்கு மூளை இல்லை. காண்ட்ராக்ட்டை எடுத்தவன் உன்னை நன்றாக ஏமாற்றுகிறான்…. பரிமாற இரண்டுபேரை மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்கிறான். வெறும் கையினால் பரிமாறி சுத்தம் கிலோ என்னவிலை என்று கேட்கிறான். இவர்களை சூப்பர்வைஸ் பண்ண நீ ஆட்களைப்
போடவில்லை. அது உன் தப்புதான்” என்றேன்.

மறுநாள் காலையில் டிபன் ஒழுங்காக கையுறையுடன் பரிமாறினார்கள். அனைவரும் இலைமுன்பு அமர்ந்தபின் பரிமாறினார்கள். நான்தான் மூத்தவன் என்பதால் என் பெயரைப் போட்டுத்தான் பத்திரிகை அடித்திருந்தார்கள். அதைப் புரிந்து கொண்டது மட்டுமின்றி, என் நியாயமான கோபத்தை உணர்ந்த கல்யாண காண்ட்ராக்ட் ஓனர் சற்று பிரத்தியேக கவனம் எடுத்துக் கொண்டார்.

காலை பத்திலிருந்து பத்தரைக்குள் முகூர்த்தம்.

ஒன்பதுமணிக்கு என்தம்பி என்னிடம் ஓடிவந்து ஒரு கடிதத்தை காண்பித்து கலவரத்துடன் நின்றான். தம்பியின் பெண்டாட்டி ஓலமிட்டு அழுதாள்.
நான் பொறுமையாக அந்தக் கடிதத்தை படித்தேன்.

“நான் ஏற்கனவே ஒருத்தியை மனமாரக் காதலிப்பதால் எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. என் பெற்றோர்களின் கட்டாயத்தால் நான் இதற்கு ஒப்புக்கொண்டு தங்களுக்கு சிரமம் அளித்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னை யாரும் தேடவேண்டாம்.
இப்படிக்கு ராம்குமார்.”

பையனின் அம்மா அப்பா என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்புக் கோரினார்கள். பதட்டப்படாமல் நிதானமாக என் தம்பியைப் பார்த்தேன். அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். என் தம்பியின் பக்கத்தில், அடுத்த வீட்டுக் குமரேசன் நின்று கொண்டிருந்தான்.

“குமரேசா, இங்க வா.”

அருகில் வந்தான்.

“உனக்கு லதாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?”

“என்ன சார்…. நான் வெறும் ப்ளஸ் டூ, லதா பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ். நான் வேற ஜாதி….நீங்க ஐயக்கமாருங்க..” என்று தயக்கத்துடன் இழுத்தான்.

“இத பாரு குமரேசா… நீ ஆம்பள, அவ பொட்டப் புள்ள. ஒரு கல்யாணத்துக்கு அது மட்டும்தான் முக்கியமான தகுதி.”

லதாவைக் கூப்பிட்டேன்.

அவள் “பெரியப்பா…என்று என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள்.

“உனக்கு குமரேசனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”

அழுகையினூடே “பக்கத்துவீடு என்பதால் அவர்மீது எனக்கு மரியாதை உண்டு பெரியப்பா…” என்றாள்.

“அது போதும்மா.”

அடுத்து குமரேசனின் அம்மா, அப்பாவை அருகில் அழைத்தேன்.

அவர்களிடம், “உங்க மவன் குமரேசன் லதாவைக் கட்டிக்க சம்மதமா?” என்றேன்.

“உங்க தம்பி பண்பானவருங்க…உங்க குடும்பத்துல சம்பந்தம் பண்ண எங்களுக்கு குடுத்து வச்சிருன்க்கணும்….ஆனா நீங்க ஐயருங்க, நாங்க தூத்துக்குடி நாடாருங்க….”

“உங்களைப் பத்தியும், உங்க நேர்மையான வணிகத்தைப் பத்தியும் என் தம்பி என்னிடம் நிறைய சொல்லியிருக்காரு…. ஜாதீன்னே ஒண்ணும் கிடையாதுங்க….அதல்லாம் நாம வளர்த்துகிட்ட கற்பனை…. நாம எல்லாரும் ஒரே மனுஷ ஜாதி. உங்க சம்மதமும் ஆசீர்வாதமும் மட்டும் இருந்தாப் போதும்…”

“நீங்க பெரியவங்க, எது சொன்னாலும் சரியா இருக்குமுங்க…”

அருகில் நின்ற என் தம்பியிடம், “முகூர்த்தநேரம் தாண்டறதுக்குள்ள குமரேசன் கையில தாலியை எடுத்துக் கொடுத்து, லதா கழுத்துல மூணு முடிச்சு போடச் சொல்லு” என்றேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் உறவினர்கள் சிலர் ‘அதெப்படி இன்னொரு ஜாதி பையனுக்கு நம்ம லதாவை கல்யாணம் செய்து வைக்கலாம்?’ என முறுக்கிக் கொண்டனர்.

அதற்குள் என் தூரத்து உறவுப்பையன் ஒருவன், “மாமா லதாவை நான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று முன் வந்தான்.

“சும்மா இருடா…கல்யாணம் என்பது நேர்மையாக சம்பாதித்து மனைவியை பாசத்துடனும், பொறுப்புடனும் பார்த்துக்கொண்டு குடித்தனம் நடத்துவது…. உன்னை மாதிரி எப்போதும் மப்பில் திளைத்துக்கொண்டு அலைபவனுக்கு அல்ல…”

எங்களின் பல உறவினர்கள் அந்தக் கல்யாண மண்டபத்தை விட்டு முகம் சுளித்து அகன்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் குமரேசன்-லதா திருமணம் பெரியவர்கள் அட்சதை தூவ சிறப்பாக முறைப்படி நடந்து முடிந்தது.

முகூர்த்த சாப்பாடு, கையில் உறையுடன் நாங்கள் அனைவரும் இலைமுன்பு அமர்ந்தவுடன் பரிமாறப் பட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள். அவர்களின் கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். தற்போது சுஜாதா உயிருடன் இல்லை. ராஜேஷ்குமார் ...
மேலும் கதையை படிக்க...
மூத்த மகள் ராதிகாவின் ஆங்கில அகராதியை எடுத்து புரட்டியபோது, கீழே விழுந்த கடிதத்தை எடுத்துப் படித்தார் சுந்தரம். என் இனியவளுக்கு, இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் ரகசியமாக குறுஞ்செய்திகளையும், கடிதங்களையும் பரிமாறிக் கொள்வது? எனக்கு நம் காதல் போரடிக்கிறது. சீக்கிரமே கல்யாணம் ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி ஐந்து. சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக கான்ட்ராக்டர் ராமசாமியும் மகன் ஆறுமுகமும் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் அருகிலிருக்கும் தன் தந்தையின் அலுவலகத்திற்கு வந்து விட்டுத்தான் வீட்டிற்கு செல்வான் ...
மேலும் கதையை படிக்க...
காலை ஆறு மணி. எனக்கு மாயா மொபைலில் போன் செய்தாள். எடுத்தேன். “குட் மார்னிங் மாயா... உடனே வரட்டுமா?” “விளையாடாதே பாஸ்கர். நான் சரியில்லை”. “ஹேய் வாட் ஹாப்பண்ட்?” “ராத்திரியெல்லாம் ஒரே வாந்தி.” “என்னத்தை சாப்பிட்டாய்?” “எதையும் சாப்பிடலை.” “அப்ப எதுக்கு வாந்தி?” “உன்னால யூகிக்க முடியலையா பாஸ்கர்?” “முடியலை.” “நீ அப்பாவாகப் போகிறாய்... நான் அம்மாவாகப் போகிறேன்.” நான் ...
மேலும் கதையை படிக்க...
டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
என் முதல் கதை
அணுகுதல்
யூனிபார்ம்
தப்புத் தாளங்கள்
உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)