கற்பலங்காரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 8,795 
 

1

காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளியோடின. மான் கூட்டங்கள் மிரண்டு மிரண்டு தாவிப் பாய்ந்து கொண்டிருந்தன. எதிரில் ஏரிகரையில் கொக்குகளும், நாரைகளும் மீன்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. ஏரியின்மீது பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கொக்குகளும் நாரைகளும் தின்ற மிகுதியைக் காகங்கள் கூட்டங்கூடி, உனக்கோ எனக்கோ என ஒன்றோடொன்று சண்டையிட்டு, இங்கும் அங்கும் குதித்துப் பொறுக்கிக் கொண்டிருந்தன. கத்தரி முதலான கீழ்ப் பயிரிடுகிற இடங்களில், பள்ளரும் பண்ணையாள்களும் “பிள்ளையாரே வாரீர்” என்றொரு துரவினிடத்தும், “மூங்கிலிலை மேலே தூங்கு பனிநீராம்” என ஒரு குளத்தினிடத்தும், “பாலாடையுஞ் சங்கும் பாலன்பெறக் கண்டேன். தொட்டிலிலே குழந்தை தூங்க கனாக் கண்டேன்” என ஏரிகாலினிடத்தும், அங்கங்கே ஏற்றப்பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் இறைத்திருந்தனர். அரமனை மதிற்சுவர் வாயிலின் ஸமீபத்திலே, ஒரு பங்களாவில், பொக்கிஷசாலை உத்தியோகஸ்தர்கள், கிஸ்திவசூல் சேவகர் சிப்பந்தி செலவு முதலான கணக்குகளை எழுதிக்கொண்டிருந்தனர். வாயில்காவலர் வாள் உருவி உலாவிக் கொண்டிருந்தனர்.

அரமனையின் மேன்மாடியிலே, பஞ்சணை தைத்த நாற்காலி ஒன்று பலகணியின் பக்கத்தில் இடப்பக்கத்தில் ஒரு சிறிய விசிப்பலகையும் வலப்பக்கத்தில் பத்து நாற்காலியும் இருக்கின்றன. விசிப்பலகையின்மேல் புஸ்தகங்களும் வெற்றிலைப்பாக்குத் தட்டும் சுருட்டுப்பெட்டியும் இருக்கின்றன. சுவரில் சில சிநேகிதர் படங்கள் ஒரு பக்கத்திலும், வெளித் தேசங்களில் உள்ள அரிய காட்சிகளை விளக்கும் படங்கள் ஒரு பக்கத்திலும், அரசனுடைய தாய்தந்தையர் முதலானவருடைய படங்கள் ஒரு பக்கத்திலும் தொங்க விட்டிருந்தன. சாய்வு நாற்காலியின் பின்புறத்தில் உயரமாக வலப்பக்கத்தில் ஸரஸ்வதி படமும், இடப்பக்கத்தில் லக்ஷ்மி படமும் கட்டியிருந்தன. அவ்வறையின்மீது சித்திரவேலை செய்த விதானம் தூக்கியிருந்தது.

காலையில் காலக்கடன்களை முடித்துச் சிற்றுண்டி கொண்ட பிறகு, அரசன் சாய்வுநாற்காலியில் இருந்து, ஒரு சுருட்டில் நெருப்புப் பற்றவைத்துக்கொண்டு, ஏதாவது படிக்கலாம் என்று எண்ணுகின்றவன், சுருட்டின் சாம்பலை விரலால் தட்டும்போது, மந்திரியை நினைத்துக்கொண்டான். “நேற்று முகம் வாடியிருந்த மந்திரியை என்னவென்று கேட்க, வீட்டில் சிறிது சஞ்சலம் உண்டு என்றனனே. வேட்டை பார்க்கப்போய் வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டதுபோல், கல்யாணம் பண்ணிக்கொள்ளும்போது கொண்டாட்டமும் பின்பு திண்டாட்டமுமாய், இப்படி ஸம்ஸாரத்தில் ஆழங்காற்பட்டு இல்லற நொண்டி ஆவானேன். இதையெல்லாம் யோசித்தல்லவா ஸம்ஸாரத்தை ஸாகரம் என்கிறார்கள். ‘பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு’ உழல்வதேன்? என்னைப்போல் ஏகாங்கியாய் இருப்பவர்க்கு ஏதாவது இன்னல் இருக்குமா. காலை யில் எழுந்ததும் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு நல்ல நூல்களை வாசிக்கிறேன். பின்பு நாட்டுக் காரியங்களைப் பார்க்கிறேன். வீட்டுக் காரியங்கள் எனக்கு என்ன இருக்கின்றன? நான் வேட்டையாடி வெகு நாள் ஆகிறது. நாளைக்கு வஸந்தமாளிகைக்குப் போயிருந்து, மறுநாள் அங்குநின்றும் வேட்டையாடப் போதல் வேண்டும். நல்லது, நான் உண்ணுவதும் உறங்குவதும் நாட்டையாள்வதும் வேட்டை யாடுவதுமாய் ஏகாங்கியாகவே இருக்க …………. ……… முன்னோர்கள் இந்த நாட்டை வெகுகாலமாய் வாழையடி வாழையாய் ஆண்டுவந்தனரே. குடிகளும் குறைகூற இடமில்லாமல் இருக்கிறதே. என்னோடு ஸந்ததியற்று அரசியல் அச்சுக்கெட்டுத் தச்சுமாறிவிட்டால், பாவம், குடிகள் என்னசெய்வார்கள்? என்ன நினைப்பார்கள்? ‘இந்த அரசன்,பாவி, தன் ஸுகத்தையே பெரிதாக எண்ணி, கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல், நம்மை இப்படி அந்தரத்தில் விட்டுவிட்டான்’ என நிந்திப்பாரன்றோ? இத்தனை பேருடைய நன்மையை நாடாமல் என்னொருவனுடைய மனோரதத்தையே நாடுவது தகுதியன்று. எனக்கும் இருபத்திரண்டு பிராயம் ஆகிறது. விவாஹம் செய்துகொள்வதானால் இதுதான் தக்க பருவம். கல்யாணம் செய்துகொள்ளுகிறபட்சத்தில், அவளையே—–காலடி சப்தம் கேட்கிறது.”

“யாரங்கே?”

“எம்பேருமானே தேவரீருடைய குடிகளில் பெரியவராய், வயதில் முதியவராய், தங்களைக் காணும் அவாவுடைய நால்வர், வாயிலின்கண் வந்துளர்” என்று துவாரபாலகன் விண்ணப்பித்தான்.அவனைப் பார்த்து அரசன், “அவர்களை அழைத்துவா” என்று சொல்லியனுப்பினான். “இயன்றமட்டில் இந்நாட்டைக் கண்ணும் கருத்துமாய்ப் பரிபாலித்து வருகின்றேன். குறை ஒன்றும் இருக்காதே. ஆனாலும் எல்லாக் குடிகளுடைய மனோபாவத்தையும் அறிய ஒருவனால் ஆகுமா?” என்றாலோசித்து, “அதோ வருகிறார்கள் அவர்களுடைய முகம் கேவலம் குறைகூற வருகின்றவர்போல் தோன்றவில்லை” என யூகித்து, “வாருங்கள், ஐயா வாருங்கள்” என்று சொல்லி உபசரித்தழைத்தான். அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு
பற்பல வாண்டுகள்
வாழிநின் செங்கோல்
வழிவழி வாழ்கவே
என வாழ்த்தின அளவில், அவர்களை நோக்கி அரசன் “எல்லீரும் இவ்விவ் ஆசனங்களில் இனிதிருங்கள். இவ்வருஷம் வெள்ளக்கேடும் வாட்கேடும் இன்றி ஒழுங்காய் மழை பெய்ததே. பயிர் பச்சைகளெல்லாம் நன்றாய்ப் பலித்துள்ளனவா? குடிகளெல்லாம், ஸுகமாய் இருக்கின்றனரா?

அந்தந்த அதிகாரிகள் அனைவரும் பொய் புனைசுருட்டு திருட்டு புரட்டு இல்லாமல் தங்கள் தங்கள் வேலைகளைச் செவ்வையாகச் செய்துவருகின்றார்களா?” என்று கேட்டான். வந்தவர்கள், “எல்லாம் வெகு விமரிசையாகவே நடந்து வருகின்றன. விளைவு வேளாண்மைக்குக் குறைவு இல்லை. தேவரீர் அடியோங்கள்மீது குளிரக் கடாட்சித்திருக்கையில், எங்களுக்கு என்ன குறை இருக்கிறது? ஆனால்-” என்ற அளவில், அரசன்:”அந்தோ! ஆனால் என்னுமளவில் அடி வயிற்றில் இடிவிழுந்ததுபோல் இருக்கிறது.ஏதேனும் குறை இருக்குமாயின் ஒளிக்காமல் உள்ளதை உள்ளபடியே உரையுங்கள். உடனே பரிகாரம் தேடுகிறேன்” என்றான்.

குடிகள்- அடியோங்களைப் பொறுத்த குறை ஒன்றும் இன்று, தேவரீர்க்குக் குறையாவது ஒன்றைக் குடிகள் அனைவரும் குறை கூறி, அதனை நிறைவுபடுத்தும்பொருட்டே எங்களைத் தேவரீர் ஸந்நிதானத்துக்கு அனுப்பினார். உங்களைப் பொறுத்த குறையானால், அது எங்களையும் பொறுத்ததே அன்றோ?

அரசன் — அதுதான் என்னவோ?

குடிகள் — தேவரீர் ஏகாங்கியாக இருப்பதே.

அரசன் — அது குறையாவ தெங்ஙனம்?

குடிகள் — தாங்கள் ஏகாங்கியாக இருப்பது நாளைக்குத் தங்கட்கும் அபவாதம்:எங்கட்கும் தீராத துக்கம்.

அரசன் — அதென்ன?

குடிகள் — தாங்கள் ஏகாங்கியாயிருக்கத் தங்களுக்குப்பின் அரசஸந்ததி அற்றுப்போனால் (அவ்விதம் ஆகலாகாதென்று ப்ரார்த்திக்கிறோம்) நாங்கள் அரசன் இல்லாமல் தங்களைப் பழிப்போம் அல்லவா?

அரசன் — ஏன், குடியரசு ஏற்படுத்திக்கொள்ளலாமே. அதில் எல்லா ஸ்வதந்தரங்களும் குடிகளுக்கு உண்டாகுமே.

குடிகள் –குடியரசில் அநேக உள் கலகங்கள் உண்டாகும்; உயிர்ச்சேதம் உண்டாகும். குடியரசில்தானும் குடிகள் ஏற்படுத்திய
ஒரு தலைவன் இல்லாமல், தலை தலைக்குப் பெரியதனம் கட்டிக்கொள்ள முடியுமா? அடிக்கடி ராஜாங்கத்தில் இடையூறுகள் உண்டாகும். தேச கார்யங்களும் ஸரிவர நடக்கமாட்டா. ‘மயிலாப்பூரி ஏரி உடைத்துக்கொண்டு போகிறது” என்றால், ‘வருகிற கமிட்டிக்குப் பார்க்கலாம்’ என்பதுதான் குடியரசின் லட்சணம். இது கிடக்கட்டும். தங்களைச் சீக்கிரத்தில் கல்யாண கோலமாய்க் காணவேண்டும் என்பதே எங்கள் மனோரதம்.

அரசன். — கல்யாணம் என்பது என்ன, கிள்ளுக் கீரையா? ஆயிரங்காலத்துப் பயிரல்லவா? ஓஹோ, ‘பேய்கொண்டாலுங் கொள்ளலாம் பெண் கொள்ளலாகாது’ என்கின்றனரே.

குடிகள். — நீர் முற்றுந் துறந்த முனிவர் அல்லவே. காட்டில் வசிக்கும் தபசிகள் தாமும் தவப்பன்னியருடன் கூடியிருக்கின்றனர். குருவிகள்கூட ஆணும் பெண்ணுமாக அல்லவோ கூடுகட்டி வசிக்கின்றன.

அரசன். — மெய்தான் கற்புடைய மனையாளைக் காண்பது அரிதன்றோ?

குடிகள். — ஆயினும் அதுபற்றி நல்ல கற்புடைய மாதரை நாடித் தேடி மணஞ்செய்து கொள்ளாமல் விடுகிறதா? ‘தாயைத் தண்ணீர்க் கிணற்றண்டையில் பார்த்தால் பெண்ணை அடுப்பங்கரையில் பார்க்கவேண்டுமா? ‘தாயைப் பார்த்துத் தாரங்கொள்’ என்கின்றனரே.

அரசன். — எத்தனையோ தாய் தந்தையர் உத்தமர்களாக இருந்தும், அவர்களுடைய மக்கள் அதமர்களாய் இருக்கின்றனரே. இப்படிப்பட்டவர் எத்தனை பேரைத் தினந்தோறும் பிரத்யட்சமாகப் பார்த்துவருகிறோம்?

குடிகள். — இங்ஙனம் விதண்டா வாதம் செய்தால் முடிவேது. ஒருத்தி பதிவிரதை என்பது அறிந்து கொள்ள எத்தனையோ உபாயங்கள் இருக்கின்றன. அவற்றை அநுசரித்து ஒரு பெண்மணியைத் தேடிக்கொள்ளலாம்.

அரசன். — ஆமாம், அவ்விதமாகச் சிறந்த கற்புடையவளைத் தேடி அடைவது மிகவும் அருமை. பிள்ளையார் தாரம் தேடிய கதையாகத்தான் முடியும்.

குடிகள். – அந்தக் கவலை உங்கட்கு ஏன்? பல தேசங்களிலும் திரிந்து எவ்விடத்திலாயினும் அருந்ததிபோன்ற ஒருத்தியை நாங்களே தேடிக் கொண்டுவருகிறோம். நீங்கள் கல்யாணம் செய்துகொள்வதாக மாத்ரம் வரங்கொடுத்தால் போதும். மற்றதெல்லாம் எங்கள் பாடு.

அரசன். – யாதொரு கஷ்டமும் இல்லாமல் ஒன்றியாக நாள்கழிக்க விரும்பும் என்னை நீங்கள் இல்லறத் தொழுவில் மாட்டிவைக்கப் பார்க்கிறீர்கள். இது எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயினும் உங்கள் நிமித்தமாக அதற்கு இசைகிறேன். நல்ல பெண்ணைப் பார்க்க நீங்கள் எவரும் தூதுபோகவேண்டாம். நானே ஒருத்தியை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுகிறேன். என் திருமணத்தைக் குறித்துக் கூடிய சீக்ரத்தில் ஊரில் விளம்பரம் பண்ணுகிறேன். தாம்பூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

குடிகள். – உங்களுக்கு மங்கலம் உண்டாக! ஆயுள் பெருகுக! நாங்கள் செலவு பெற்றுக்கொள்ளுகிறோம்.

அவ்வளவிலே அரசன் புரோகிதரை அழைத்து, அடுத்த வாரத்தில் ஒரு முஹூர்த்தநாளை ஏற்படுத்திக்கொண்டு, மந்த்ரியிடத்தில், “வருகிற வாரத்தில் புதன்கிழமை பத்து நாழிகைக்குமேல் நமக்கு விவாஹ மஹோத்ஸவம் என நமது நண்பரான அரசர் பிரபுக்கள் முதலானவர்களுக்குப் பத்ரிகை அனுப்புக. இச்செய்தியை ஊரிலும் விளம்பரப்படுத்தி ஊர் முழுவதும் அலங்காரம் செய்விக்க. புரோகிதருக்குச் சில ஆள்களைத் துணைகூட்டிக் கல்யாணத்துக்கு அவசியமானவைகளை ஆயத்தப்படுத்துக. மற்றும் செய்வன செய்க” என்றுரைத்தான். பின்னும், “நமது குடிகளை அன்று காலையில் எட்டு நாழிகைக்குமேல் அடுத்த குப்பத்தில் கூடியிருக்கும்படி செய்க” என்றான்.

II

அரமணைக்கும் குப்பத்துக்கும் ஒன்றரை நாழிகைதூரம் இருக்கும். அங்கே கிழக்கு மேற்காக ஒரு வீதி உண்டு. அந்த வீதியின் ஒரு கோடியில் நின்று பார்த்தால், மற்றொரு கோடி தெரிவதில்லை. இடையில் மூன்று நான்கு இடத்தில், சில வீடுகள், சதுரக்கல் புதைத்த தெருக்குறடும், பித்தளைப் பூணிட்ட செம்மரத்தூண்கள் நிறுத்திய திண்ணையுமாக இருக்கும். சில வீடுகள் உள்ளடங்கி எதிரில் மாட்டுத்தொழுவம் கட்டியிருக்கும். பல வீடுகள், விழற்கூரை வேய்ந்து, மூங்கில் தூண்கள் வைத்த ஒட்டுத்திண்ணைகளை உடையவைகளாய், ஒரு தூணில் பசுவின் கன்றும் கட்டியிருக்கும். தெற்கு வடக்காக உள்ள மற்றொரு வீதி, பள்ளர் முதலானவர்கள் வசிப்பது. அது வீதியாக ஒழுங்காக இருக்கவில்லை. வழியே போகும்போது, எதிரில் ஒரு சிறு வைக்கோற்போர் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு சிறிது தூரம் போனால், வைக்கோலும் மாட்டுச் சாணமும் சாம்பலும் கலந்து கொட்டிய குப்பைமேடு இருக்கும். ஓரிடத்தில் வறட்டிகளை வட்டமாக அடுக்கி, மேலே பனையோலைகளை மூடி, அதன்மேல் நாலு கூடை மண் கொட்டியிருக்கும். மற்றோரிடத்தில் அவரைப் பந்தலும் பாகற்காய் புடலங்காய்ப் பந்தலும் குறுக்கிட்டிருக்கும். ஒரு மரத்தடியில் சில ஸ்திரீகள் தங்கள் பிள்ளைகளுக்குப் பேன் பார்த்துத் தலையை மரச்சீப்பால் வாரிக்கொண்டிருப்பார்கள். சில கிழவிகள், வெற்றிலைப் பாக்குடனே புகையிலையிட்டு மென்றுகொண்டு, நெல் கேழ்வரகு முதலான தான்யங்களை உலரவைத்து, கையில் ஒரு கழியைப் பிடித்துக் காக்கை ஓட்டிக்கொண்டிருப்பர்.

அரசனுக்கு விவாஹமென்று விதித்திருந்த நாள் வந்து விட்டது. கிழக்கு மேற்காக உள்ள வீதியில், வீடுதோறும் மாவிலைத் தோரணங்கள் கட்டி, திண்ணை குறடுகளை மெழுகி மாக்கோலம் இட்டு, தெருவெல்லாம் மேடுபள்ளம் இன்றிப் புல் பூண்டுகளைச் சீவிச்செதுக்கி, அத்தெருவினர் அனைவரும், குளித்து முழுகிக் குழையலிட்டு, ஸலவை வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, வருவார் போவாரை உபசரித்து வார்த்தைசொல்லிக்கொண் டிருந்தனர். மற்ற க்ராமங்களிலிருந்து சிற்சிலராய்க் கூட்டங்கூட்டமாய்க் குடிகள் வந்து சேர்ந்து, திண்ணைகளின் மீதும் மரநிழலினும் கூடியிருந்தனர்.

எல்லோரும், “அரசன் இந்தக் குப்பத்தில் என்ன செய்யப்போகிறானோ? மாமியார் வீட்டு வரிசை ஏதாவது இங்கிருந்து புறப்படப்போகிறதோ? அல்லது, கல்யாணப் பெண் இந்த வழியாக வர, இங்கே அரசனுடையமனுஷர் அவளை எதிர்கொண்டு அழைத்துப் போவார்களோ? அல்லது இந்தக் குப்பத்தை யடுத்த தேவாலயத்தில் அரசன் ஏதாகிலும் பூஜை புனஸ்காரம் நடத்திவிட்டுப் போவானோ என்னவோ ஒன்றும் தெரியவில்லை” என்று பலவிதமாய் ஒருவரோடொருவர் பேசியிருந்தனர்.

இவர்கள் இவ்விதமாகப் பேசியிருக்கையில், மேற்கூறிய இரண்டு தெருவினின்றும் கல்லெறிதலான தூரத்திலே, ஒரு நல்ல தண்ணீர்க் கிணற்றினின்றும், பதினாறு வயதுடைய ஒரு கன்னிகை, மட்குடம் ஒன்று இடுப்பிலும், தோண்டி ஒன்று வலக்கையிலுமாகத் தண்ணீர் மொண்டுகொண்டு போனாள். அவள் தலையை வாரிப் பின்னல் இட்டுக்கொண்டிருந்தாள். கையில் கண்ணாடி வளையல்கள் கலகலவென்று ஒலிசெய்தன. இடையில் ஒரு தோம்பு பாவாடையும் மேலே ஒரு மஞ்சள் சிற்றாடையும் தரித்திருந்தாள். தண்ணீர்ப் பானையைப் பார்த்து இட்டுக்கொண்ட ஒரு குங்குமப்பொட்டு அவள் நெற்றியில் விளக்கம் பெற்றிருந்தது. கிணற்றுக் கப்பால் கூப்பிடு தூரத்தில் உள்ள ஒரு குடிசையை நோக்கி அவள் அவஸரமாகப் போவதைப் பார்த்தால், சீக்ரம் தண்ணீர்ப்பானையை இறக்கிவைத்துப் பழையது சாப்பிட்டுத் தானும் வேடிக்கை பார்க்க வருவதற்கு அவஸரப்படுவதுபோல் இருந்தது. குடிசையின் வெளியில் மறைவாகக் கட்டியிருந்த தட்டியில் இப்பால் பத்தடி தூரத்திலே போகும்போது, இடப்பக்கத்தில் புழுதி பறப்பதைப் பார்த்து, சிறிது தூரத்திலே குதிரைகள் படபடவென்று ஓடிவருகிற குளம்படி ஓசையைக் கேட்டு, அரசன் இந்த வழியாக வருகிறானோ என்று நினைத்து, மெல்ல அடியெடுத்து வைக்கலானாள். இவள் தட்டியை ஸமீபிக்கையில், “குடமேந்திச் செல்லுங் குணவதியே! உன் தகப்பனார் எங்கே? என்கிற சப்தம் அவள் காதில் விழுந்தது.

“வீட்டில் இருக்கிறார்” என்று சொல்லி, குணவதி “ஐயா, அவரை அழைக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நானே வருகிறேன். ஐயா பெரியவரே, க்ஷேமந்தானா? எப்படி இருக்கிறீர்?” என்று கேட்டுக்கொண்டே போய், குடிசையின் ஒட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்த அரசனைக் கண்டு, அந்தக் கன்னிகையின் தகப்பனான கிழவன், இடக்கையின் விரல்களைக் கண்களின்மேல் விரித்துவைத்து உற்றுப்பார்த்து, “ஐயா மகாராஜாவா!” என்று விதிர்விதிர்த்து, முழங்காலொடு முழங்கால் முட்டக் கைகள் நடுங்கத் தலை தள்ளாடச் சுவரில் சற்றுச் சார்ந்து நிதானமாக நின்றுகொண்டு, “மகாப்பிரபு! அடியேனை வருக என்று கட்டளையிட்டால், தலையால் நடந்து வரமாட்டேனா? இந்தக் குடிசை பண்ணின பாக்யமே பாக்யம். என்ன கார்யம் சொல்லுங்கள். காலாலிட்டதைக் கையாலே செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என நாக்குளறி உரைத்தான்.

அரசன். – உம்முடைய பெண்ணை விவாகம் பண்ணிக் கொள்ள விரும்பியிருக்கிறேன்.

கிழவன். – மஹாராஜா, இதென்ன வேடிக்கை! உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு தூரம்? உங்கள் அடிமைக்கும் அடிமையல்லவோ நான். செய்யவேண்டிய கார்யத்தைக் கட்டளையிடுங்கள்.

அரசன். – நான் என்னவோ விளையாட்டாகவந்தேனென்று எண்ணவேண்டாம். என் உள்ளத்தில் உள்ளதைக் கள்ளமின்றி உரைத்தேன். என்ன சொல்லுகிறீர்?

கிழவன். – அடியேனுடைய பெண்பிள்ளையை மஹாராஜாவே கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பினால், இதற்கு யார் தான் தடைசொல்வர்?

உடனே அரசன், “ஏ குணவதீ! இப்படி எதிரில் வந்து நில். உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பி, உன்னுடைய தகப்பனார் ஸம்மதியைக் கேட்டேன். அவரும் ஸம்மதித்துவிட்டார். உன் உள்ளக் கருத்து என்ன?” என்றுகேட்டான்.

ஒன்றும் உரைக்க வகையறியாமல் பிரமைகொண்ட அந்தக் கன்னிகை, தலைகுனிந்து நின்று, “எம்பெருமானே, திருவுள்ளம்” என்று மெல்லெனச் சொல்லினாள்.

அரசன். – எனக்குச் செய்யவேண்டியா உபசாரங்களை என் மனம் உவக்குமாறு செய்வாயா?

குணவதி. – அப்படியே செய்வேன்.

அரசன். – என் சொல் தவறாமல் வணக்கமாக இருப்பாயா?

குணவதி. – இருப்பேன்.

அரசன். – நான் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் பொறுத்திருப்பாயா?

குணவதி. -பொறுத்திருப்பேன்.

இந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டு, தான் கொண்டுவந்த ஆடையாபரணங்களால் அவளை அலங்காரம் செய்து பல்லாக்கில் ஏற்றித் திரையிட்டான்.

இதற்குள் குடிசையின் வெளியில் திரள் திரளாய் வந்து நெருங்கிய குடிகளைப் பார்த்து, “ஓ என் குடிகளே! இந்த குணவதியை மனைவியாகக் கொள்கிறேன். இதோ அரமனைபோய்ச் சேர்ந்ததும் பாணிக்ரஹணம் செய்துகொள்வேன். எல்லாரும் வாருங்கள்” என்றுசொல்லிப் போய்விட்டாள்.

பின்தொடர்தலான குடிகளில் ஒருவன், “கடைசியாக அரசன் வழிக்கு வந்துவிட்டான். இனி நமக்குக் குறை ஒன்றும் இல்லை” என்றான். அதைக் கேட்ட ஒருவன், “இதற்குள் ஆய்விட்டதா. அரசனுக்கு ஸீமந்தமாகிப் பிள்ளை பிறந்த பிறகு அல்லவோ நம்முடைய குறை முடிந்ததாகும்” என்றான். பக்கத்தில் இருந்த ஒருவன், “முதலுக்கே மோசமாக இருந்ததுபோய் அந்தமட்டில் கல்யாணம் கெட்டியாயிற்று. இனிக் குழந்தைக்கு என்ன குறை! அப்புறம் தெய்வ ஸங்கல்பம் எப்படியோ?” என்றான். இன்னொருவன், “எல்லாம் மெய்தான். தேடித்தேடி அந்தத் தாண்டவராயப் பிள்ளையின் பெண்தானா. பெண் என்று கட்டிக்கொண்டால், மாமியார் வீட்டுக்குப் போக, இரண்டு வேளை விருந்துண்ண, மைத்துனருடனே விளையாட, என்னவாகிலும் உண்டா? அந்தப் பெண்ணுக்குக் கீரைமணிப் பதக்கத்துக்குத்தானும் வழியில்லை. அவர்கள் பாவம் அன்றாடம் கைவேலை செய்து பிழைப்பவர்கள். எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள்! எத்தனை ப்ரபுக்கள் இருக்கிறார்கள். இந்த அரசனுடைய நாவசைந்தால் நாடசையாதா? இவன் ஒரு வார்த்தை சொன்னால், நானோ நீயோ என்று எத்தனை பேர் மேல்விழுந்து தங்கள் தங்கள் பெண்ணைக் கொடுக்க வருவார்கள்” என்றான்.

வேறொருவன், “என்ன ஐயா பைத்யமா. நடந்துபோன கார்யத்துக்கு இனி மேல் என்ன செய்யலாம். ‘போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்’ அல்லவோ?” என்றான். மற்றொருவன் “ப்ராப்தி எப்படியோ அப்படித்தான் முடியும். நாம் வீணாகப் பேசுவதில் என்ன பலன்?” என்றான். “மெய்தான் மெய்தான். அரசனுடைய மனோபாவம் என்னவோ? எவருக்குத் தெரியும்?” என்றான் பின்னொருவன். இதையெல்லாங் கேட்ட ஒரு வயோதிகர், “இப்பொழுது கொண்டதற்குத்தான் என்ன? பெண்களைக் கொள்வதில் அரசர்கள் தங்கள் இனத்திலேயே கொள்ளவேண்டும் என்கிற நியதியில்லை. அல்லாமலும், ‘ஆரறிவார் நல்லாள் பிறக்குங் குடி’ என்று சொல்லியிருக்கிறது. குலத்தில் என்ன இருக்கிறது? நலமொன்றே வேண்டும். பணம் இருந்து என்ன? குணம் ஒன்று தானே அவசியம். ஏதோ ஸம்ஸாரத்துக்கு யோக்கியமாக இருப்பதுதான் முக்யம்” என்றார். இவ்விதம் அவரவர்கள் பேசிக்கொண்டு போயினர்.

III

கல்யாணம் முடிந்தபின் சில நாள் கழித்து, வஸந்த மண்டபச் சிங்காரத் தோட்டத்துக்குப் பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு அரசன் போனான். அங்கே உல்லாஸமாய்ச் சிங்காரக் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகையில், “குணவதீ! குயிலினம் கூவுவது கேளாய், இனியவுன் வாயில் மழலையே போலும்” என்று அரசன் கூற, குணவதி, “நாதரே! தேவரீர் நாதமே போல, நாதம் செய்யும் ஓதநீர்ச் சங்கம், காணீர் குளத்தின் கரையிலே காணீர்” என்றனள். அரசன், “உன்றன்
இடையே ஒத்த வஞ்சிக்கொடி. சென்று சென்று செடிகளின் மீது, தாவித் தாவிப் படர்வது காணாய்” என்றான். குணவதி, “உங்கள் நேத்திரம் போன்ற பங்கயம், அந்தக் குளத்தில் அரசரே காணீர்” என்றாள். அப்பால் அரசன், “என் கண்ணதனிலுன் பாவைபோல, அக்கமலத்தில் அன்னம் காணாய்” என, குணவதி, “அதோ அந்த மலையின் மீது கவிந்திருக்கும் கார்மேகங்கள், கட்டிலில் தங்களைக் கண்டாற் போலும்” என்றனள். அதன்மேல், “மெய்யே அந்த மேகத்தினிடத்தில், மின்னலேயன்றோ என்னிடம் நீயும்” என்றான் அரசன். அதைக் கேட்டுக் குணவதி, “உங்களோடு வாதாட என்னால் ஆகாது. வாயும் இளைத்தது. காலும் ஓய்ந்தது ‘என, அரசன் “ஆனால் கண்ணே வாராய் இந்த மாதவிப் பந்தலில் மரகத மேடையில் இருந்து இளைப்பாறுவோம்” என்றான்.
குணவதி அரசன் தொடையில் தலைவைத்து, “மந்த மாருதம் வீசுகின்றது. உளம் களிகொண்டேன். உரைப்பது அறியேன்” என்றுரைத்துச் சற்றுநேரத்தில் உறங்கி விட்டாள்.

தன் மடியிலே தலைசாய்த்து அயர்ந்துறங்கும் குணவதியைப் பார்த்து அரசன் சிந்திப்பான்: இவள் ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்பதற்கு உதாரணமாயிருக்கிறாள். என்சொல் தவறாத கற்பினையும் உடையாள். பர்த்தாவுக் கேற்ற பதிவிரதா சிரோமணி. இனி எத்தாலும் இவளோடு கூடிவாழக் குறையில்லை. “கொக்கென்று நினைத்தையோ கொங்கணவா’ என்றவளும், ‘பொழுது விடியாமலே ஒழிக’ என்றவளும், இவளுக்கு இணையாவரோ? நான் பாணிக்ரஹணம் செய்யும்போது இவளுக்கு அருந்ததியைக் காட்டினேனே. நானும் இவளும் முதல் யுகத்தில் பிறந்திருந்தால், வசிட்ட முனிவன் இவளையே அருந்ததிக்குக் காட்டியிருப்பான். இப்படிப்பட்ட கற்பலங்காரி எனக்கு மனைவியாக நான் பூர்வத்தில் எவ்வகைத் தவம் செய்தேனோ. ‘ஆன குடிக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்’ என்பார்கள்; இவள் வயிற்றில் ஒரு பிள்ளையும் ஒரு பெண்ணும் பிறந்தால் போதும். இந்திரன் பதவியும் என் பதவிக்கு ஈடாகாது. என் வீடு பரமபதமேயாகும். ஆயினும் நவரத்னங்களைத் தானும் கடைச்சல் பிடித்தன்றோ ஆபரணங்களில் அழுத்துவர். இவளுடைய கற்பைக் கடைமுறையாகப் பரிசோதித்து, நல்வகையால் நாடறியச் செய்து, பின் அமைந்த மனத்துடனே இன்புற்றிருப்பேன் –
அசைகிறாள். கண்ணிமை திறக்கின்றாள்.

அரசன். – காற்று இசைவாய் இருக்கிறதோ? நன்றாய்த் தூங்கினையே.

குணவதி. – நாயகரே, ஒரு கனாக்கண்டு விழித்துக்கொண்டேன்.

அரசன். – கனவா கண்டாய்? கண்ட கனவு என்ன?

குணவதி. – நான் ஒரு மல்லிகைக்கொடி வளர்த்து வந்தேன். அதில் முன்னே ஓர் அரும்பு மலர்ந்தது. மறுபடியும் ஒன்று மலர்ந்தது. இரண்டையும் எவரோ என் கண்ணெதிரில் பறித்துக்கொண்டு போயினர். வெகுவாய் வருந்தினேன். மீண்டும் அம்மலர் இரண்டும் என்னிடம் வந்துசேரக் கண்டு களிப்புற்றேன்.

அரசன்.- மலர் இரண்டும் மீண்டும் உன்னிடம் வந்து சேர்ந்தமையால், தீமை ஒன்றும் உண்டாகாது.

இவ்விதம் இரண்டு மாதம் இன்ப நுகர்ந்து வேடிக்கையாகக் காலங்கழித்து வந்தனர். குணவதி கர்ப்பவதி ஆனாள்.

குணவதி கர்ப்பமடைந்த எட்டா மாதம் ஸீமந்தம் ஸம்ப்ரமமாக நடந்தது. பேரூரில் உள்ள குடிகள் அனைவரும் தங்கள் வீட்டிலே ஸீமந்தம் நடப்பது போல் அதிக ஆனந்தம் அடைந்தனர். வயதில் முதிர்ந்த பெரியோர்கள் தாமும், “அரசனுக்கு இனி இரண்டு மாதத்தில் பிறக்கப்போகிற குழந்தை ஆணோ பெண்ணோ?” என்று ஒருவரோடொருவர் பந்தயம் போட்டுக் கொண்டனர். சிலர் ஜோஸ்யரிடம் போய், “அரசனுக்கு ஆண் குழந்தை பிறக்குமா பாருங்கள்” என்று கேட்டார்கள். சிலர், “அரசனுக்கு ஆண் பிள்ளை பிறந்தால் பிள்ளையாருக்கு இருபது தேங்காய் உடைக்கிறேன். ஒரு வீசை கர்ப்பூரம் கொளுத்துகிறேன்” என்று ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டார்கள். சில பெண்பிள்ளைகள் குறி சொல்லுகிறவரிடம் போய், “நம்முடைய அரசி பிள்ளை பெறுவாளா?” என்று குறி கேட்டார்கள். சிலர், “நம்முடைய ப்ரார்த்தனை வீண் போகுமா. ராஜா தர்மராஜா. அவன் பிள்ளையே பெறுவான்” என்பார்கள்.

அரசனும், “ஆணாய்ப் பிறந்தால் நலம். குடிகளுடைய எண்ணம் நிறைவேறும். பெண்ணாய்ப் பிறந்தாலும் நம்மால் ஆவதென்ன? நாம் ஒன்று எண்ணினால் தெய்வம் ஒன்று எண்ணுகிறது உண்டு. இதெல்லாம் வீணெண்ணம்” என்று எண்ணியிருந்தான். பத்து மாதம் பூர்த்தியாயிற்று. ப்ரஸவகாலம் ஸமீபித்துவிட்டது. ஒருநாள் அரசன் தன்னுடைய அறையிலிருந்து சுருட்டுப் பிடித்துக்கொண்டே ஒரு அபிநவ கதையை வாசித்திருந்தான். இருக்கும்போது, “அடா சேவகா, உள்ளே அந்தப் புரத்தில் ஏதோ அரவம் கேட்கிறது. அதென்னவென்று அறிந்துவா” என்றனுப்பி, “குணவதி கருப்ப வேதனை படுகிறாளோ” என்று நினைத்திருக்கையில், சேவகன் ஓடி வந்து, “அரசியார் இடுப்புநோய் படுகிறார்கள்” என்று சொன்னான். அதைக் கேட்டதும் அரசன், “மருத்துவச்சி மருத்துவர் முதலானவர்கள் வந்திருக்கிறார்களா? என்று கேட்டான். சேவகன், “மஹாப்ரபு, எல்லாம் ஸித்தமாக இருக்கிறது” என்றான்.

சற்று நேரம் பொறுத்து, “அடா, இப்பொழுது ஸந்தடி ஒன்றும் கேட்கவில்லை. சீக்கிரம் போய் என்ன ஸங்கதியென்று அறிந்துவா. வந்தாயா – ” என்றான். சேவகன் ஓடிப்போய் ஓடி வந்து “ஸ்வாமீ, அரசியார் கருவுயிர்த்தனர்” என்று சொன்னான்.
அரசன், “அப்படியா? இப்பொழுது ஸூர்யோ தயமாய் ஒரு நாழிகை ஆகிறது. இன்றைக் கென்ன, வெள்ளிக்கிழமை அல்லவா. ஆண்பிள்ளைய, பெண்பிள்ளையா தெரியுமா?” என்றுகேட்க, சேவகன் “பெண்பிள்ளை ஸ்வாமீ” என்றான். அரசன், “இப்படி வா, இந்த மணிவடத்தைப் பெற்றுக்கொள். ஸந்தோஷச் செய்தி சொன்னதற்கு வெகுமானம் இது. சீக்கிரம் போய்ப் புரோகிதரை அழைத்துவா” என்று அவனை அனுப்பினான்.

அபிநவ கதையைப் பக்கத்தில் வைத்துவிட்டு அரசன் எண்ணுவானாயினா. “பிள்ளையாகப் பிறவாமல் போயிற்றே. குடிகளுடைய எண்ணம் ஈடேறியிருக்குமே. இதற்கு நாம் என்ன செய்யலாம்? கடவுள் திருவுள்ளம் எவருக்குத் தெரியும்? இனிமேல் பிள்ளை பிறந்தால் ஆகாதா? பட்டங்கட்டிக் கொள்ளப் பிள்ளையில்லாத தேசங்களில் பெண்மணிகளும் பட்டங் கட்டிக்கொண்டு அரசாட்சி செய்யவில்லையா? முதற்பேறு பெண்ணாகப் பிறப்பது மங்கலகரம் என்றும், அதிர்ஷ்டத்துக்கு ஹேது என்றும் சொல்வார்கள். மேலும் ‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்பார்கள். பெண்களே எப்போதும் தாய் தந்தையரிடத்தில் தளராத அன்புடையவர்கள். ‘புத்ர சதகுணம் புத்ரி’. சாஸ்த்ராப்யாஸம் செய்வித்துச் செவ்வையாக வளர்த்தால், சில பெண்கள் ஆண்களைக்காட்டிலும் அதிநிபுண ஸாமர்த்யர்களாக இருப்பதைக் கண்டும் கேட்டும் இருக்கிறோமே. இங்க்லண்டில் அரசு செய்த எலிஜபெத் ஸாமான்யமானவளா? தனது தேசத்தை மஹா ஸாமர்த்யத்துடன் எவ்வளவு பத்ரமாய்ப் பரிபாலித்துவந்தாள். ஆசியாவின் வட மேற்கில் பால்மைராவில் ஏகசக்ராதிபத்யம் பண்ணியிருந்த ஜீநோபியா என்பவள், அநேக அரசருடைய வீரதீர பராக்ரம மெல்லாம் ஒருங்கே அமையப்பெற்று ராஜ்ய தந்த்ரங்களில் இணையற்றவளாய் ஜயசீலையாய் ராஜரத்னமாக விளங்கவில்லையா? இது கிடக்கட்டும். இவளூம் இன்று வெள்ளிக்கிழமை ஸூர்யோதயத்துக் கப்புறம் சந்த்ரோதயமானாற்போல் தோன்றினாள். லக்ஷ்மியின் அம்சமாக இருப்பாள் என்பதில் என்ன தடை. இதோ புரோகிதர் வருகிறார்.”

புரோகிதர் வந்தவுடனே, “ஐயா, புரோகிதரே, இங்கே என்ன விசேஷம்!” என்று அரசன் கேட்க, புரோகிதர், “மஹாராஜா, தீர்க்காயுஷ்யமஸ்து. குழந்தை பிறந்ததென்று பக்ஷி பேசுகின்றது” என்று சொல்லி, “என்ன குழந்தை?” என்று கேட்பதற்குள், “பெண் குழந்தை துரையே” என்றும் சொன்னார். அரசன், “ஸரி, குழந்தைக்கு ஜாதகம் குறித்து வாரும்” என்றான். புரோகிதரும், “மஹாப்ரபு, அப்படியே செய்து வருகிறேன்” என்று சொல்லிச் செலவுபெற்றுக் கொண்டு போய்விட்டார்.

அப்பால் அரசன், மந்த்ரியை அழைத்து, “நமக்கு ஒரு புத்ரி பிறந்தாள். இவ்வருஷம் குடிகளுக்கு இறைதவிர்க்க்க்க. தேவாலயங்களையும் தரும சத்திரங்களையும் புதுப்பிக்க. ஏழைகளுக்கு உண்டியும் உடையும் உதவுக. நமது ஸமஸ்தான வித்வான்களுக்குச் சால்வையும் பொருளும் தருக” எனக் கட்டளையிட்டான்.

நற்றாயும் செவிலித்தாயரும் தாலாட்டிச் சீராட்டி வளர்ப்புக் குழந்தையும், செங்கீரையாடியும், சப்பாணி கொட்டியும், மாதா பிதாக்கள் மனங்களிப்ப முத்தந்தந்தும், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. வா என்றால் தத்தித் தடுமாறி நடந்து வரும் தளர் நடைப் பருவம் அடைந்தது. இதையெல்லாம் கண்ட அரச தம்பதிகள் ஆநந்த பரவச மாயினர்.

IV

“கல்யாணமாகி மூன்று வருஷம் ஆகிறது. எந்த விதத்திலாகிலும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றால், இவளிடத்தில் ஒரு குற்றத்தையும் காண்பது அரிதாக இருக்கின்றது. ஆனாலும், நான் எண்ணியிருப்பதைச் செய்யாமல் விடேன். வேறு விதமாக ஒரு குற்றமும் காண முடியாமையால், இனி இவளைப் பலவாறு இன்னல்படுத்திப் பார்ப்பேன். அதற்கும் மனங்கலங்காமல் முன்போலவே என்னிடம் அமைதியாய் அன்புடையவளாக இருப்பின், அதுவே போதும். அப்போதுதான் எனக்கு த்ருப்தி உண்டாகும்” என்று ஒரு நாள் சிந்தித்துக்கொண்டு, உண்ணப்போகாமல் ஒரு கட்டிலின்மேல் அரசன் படுத்துக்கொண்டிருந்தான்.

ஆட்கள் அவனை அழைக்க அஞ்சினர். அதன்மேல் அரசியே அரசனை அடைந்து, “அன்ன பானீயங்கள் எல்லாம் ஆயத்தமாக இருக்கின்றன. ஸ்நாநம் செய்ய எழுந்திருக்கலாமே. பொழுதாகின்றதே. என்ன முகம் ஏதோ வாட்டமுற்றிருப்பதாகத் தோன்றுகிறதே” என்றாள். “என்ன போ, நம்முடைய குழந்தை மனோன்மணிக்கு இரண்டு வயது ஆகிறது. இன்னும் குடிகளுடைய வெறுப்பு அடங்கவில்லை. எந்நேரமும் ‘கொண்டதே ஓர் ஏழைப் பெண். அவள் வயிற்றில் பிறந்ததும் ஒரு பெண்பிள்ளை’ என முணுமுணுப்பதும் முறுமுறுப்பதுமாய் இருக்கின்றனராம். என்ன கலகம் செய்வார்களோ என்று அஞ்சுகிறேன்” என்ற அரசன் வார்த்தையைக் கேட்டு, குணவதி, “தாங்கள், கௌரவத்துக்கும் தேச நன்மைக்கும் பங்கம் வராதபடி, அடியாளை என்ன செய்ய வேண்டினாலும் செய்துகொள்ளுங்கள். அரசபதவி அடியாளுக்கு அடுக்குமா? என் செய்வேன்” என்று சாந்தமாகவே பேசினாள். அதைக் கேட்ட அரசன், “பாவம், நீ என்ன செய்வாய்? என்னைத்தான் நான் பழித்துக்கொள்ளவேண்டும். எவரை நோவேன்? இருக்கிற நோக்கத்தைப் பார்த்தால், ஒன்று குழந்தைக்காகிலும் ஒரு வழி தேடவேண்டும். அல்லது உன்னையாகிலும் பிரித்தல் வேண்டும். வேறு பரிகாரம் இல்லை” என்று சொன்னான். குணவதியும், “மெய்தான்” என்றாள். அரசன் தனக்குள்ளே, “அடடா இதற்கும் இவள் மனம் சலிக்கவில்லை. முகம் வாடுகின்றாளுமில்லை. பாவம், வயிறு நிறைந்த கர்ப்பிணி. இவளுடைய கற்பு எதற்கும் கலங்காமல் கல்போல் உறுதியாக இருக்கிறது” என்று நினைத்துக் கொண்டே அமுதுசெய்யப்போனான்.

ஒருவாரம் கழிந்தபிறகு, ஒருநாள் மாலையில் அந்தப் புரத்தில் தொட்டிலில் உறங்கியிருந்த குழந்தைக்குச் சாந்திட்டு மையிட்டு, அரசி தானும் கூந்தலை முடித்துக் கொண்டையிட்டு அலங்காரம் செய்துகொண்டிருந்தாள். அப்போது ராஜஸேவகன், ஸந்தடி பண்ணாமல் அந்தப்புரம் சென்றடைந்து, “அம்மா, அரசியாரே! அடியேன் ராஜஸேவகன். ரா – ராஜா தங்களிடம் ஒரு வே – வே – வேலையாக அனுப்பினார்” என்று வாய் குளறினான்.

குணவதி. – ராஜாவா! என்ன என்ன?

ஸேவகன். – மற்றொன்றுமில்லை. அம்மணி கு – குழந்தே –

குணவதி. – குழந்தே, என்ன? குழந்தையை எடுத்துவரச் சொன்னாரா? உனக்கென்ன தெத்துவாயா?

ஸேவகன். – இல்லையம்மா, இதோ சொல்லுகிறேன். ராஜா வந்து, கு – குழந்தையெ?

குணவதி. – குழந்தையை அப்புறம் என்ன? என்ன ஐயா, ராஜகார்யமாக வந்திருக்கிறாய்; பயப்படாதே. எனையா அப்படிப் பேய்விழி விழிக்கிறாய்?”

ஸேவகன். – இல்லையம்மா, வந்து ராஜா வானவர் குழந்தையெ, – அப்புறம் வந்து.

குணவதி. – (நகைத்துக் கொண்டே) எப்புறம் வந்து? என்ன ஐயா இவ்வளவு தாமஸமா? அப்புறம் ராஜா கோபிக்கப்போகிறார்.

ஸேவகன். – ராஜா குழந்தையைக் கொண்டுபோய் – ”

குணவதி தனக்குள்ளே, “ஐயோ, ஐயோ, இவன் முகம் குனிந்து நிற்கிறான். அப்புறம் பேசமாட்டாமல் மரம்போல நிற்கிறான். குழந்தையைக் கொண்டுபோய் என்ன செய்யச் சொன்னாரோ எம்பெருமான்? ஒன்றும் தெரியவில்லையே” என்று சிந்தித்து, ” அம்மவோ, குழந்தாய்! என் கண்மணி! சிரோமணி! சிந்தாமணி! மனோன்மணியே!” (எடுத்து மார்போடணைத்து) “உன் தலையில் என்ன புள்ளி போட்டிருக்கிறதோ? ஐயோ! என்ன செய்வேன்? ‘குழந்தைக்கு ஏதாகிலும் ஒரு வழி தேடவேண்டும்’ என்று, அன்று சொல்லினா னல்லவா? என்ன வழி தேடுவாரோ? ஒருவேளை குழந்தையைக் கொல்லும்படி விதித்தாரோ?” என்று பதைபதைத்தாள். மறுபடியும், “இவனா உள்ளதை உரைக்காமல் பேசமுடியாமல் நாக்குத் தடுமாறித் தத்தளிக்கிறான்.
என்ன செய்வேன்? அப்பா, சேவகா, இந்தா! குழந்தை தூங்குகிறது. அதை எழுப்பாமல் மெல்ல எடுத்துக்கொண்டு போ. கொண்டுபோ – ஐயோ என்னமாய்க் கொடுப்பேன். என் கண்ணே (முத்தம்), என் ரத்னமே, மாணிக்கமே (முத்தம்), – இந்தா இரு – இன்னொருதரம் பார்க்கட்டும். அப்பா, அரசர் கட்டளையிட்டாலொழிய இந்தப் பச்சைப் பிள்ளையை நாய் நரியின் வாயில் வைக்காதே. பத்ரம். அப்பா, பத்ரம். காக்கை கழுகு ஏதாகிலும் குத்தப்போகிறது’ என்று அலறினாள்.

ஸேவகன், “அதிக ஜாக்ரதையுடன் எடுத்துக்கொண்டு போகிறேன் அம்மா” என்று விடைபெற்றுக்கொண்டு, “ஐயோ பாவம். பெற்ற மனம் எவ்விதமாய்ப் பற்றியெரிகிறதோ. ஆனாலும் இந்த அரசன் மஹாமர்க்கடமுஷ்டி. மனம் போனதே போக்கா! சீச்சீ, சுத்த பித்தன். சொ சொ, அவள் மனம் எப்படித் துடிக்கிறதோ? நாம் என்ன செய்யலாம். இவனுடைய ஆக்கினை சுக்கிரீவாக்கினைதானே. ராஜாக்கினைக்கு எதிராக்கினை ஏது? நாம் தடுத்துப் பேச முடியுமா?” என்றெண்ணிக்கொண்டு, அரசன் கொடுத்த கடிதத்துடனே அரமனைத் தோட்டத்தில் ஒரு புதரின் மறைவிலிருந்த நுழை வாயிலின் வழியாக இரவில் இருட்டிலே எவர்க்கும் தெரியாமல் போய்விட்டான்.

இரண்டாவது பிறந்த ஆண்பிள்ளையையும் அவளை விட்டுப் பிரித்து முன்போலவே செய்வித்தான். அவள் அதற்கும் ஈடுகொடுத்துப் பொறுத்துக்கொண்டிருந்தாள். ஆஹா! அவள் பொறுமையே பொறுமை என்னவாவது வெறுத்துக் கொண்டாளா? இல்லை. கணவனையாவது பழித்தாளா? அதுவும் இல்லை. தெய்வத்தை யானாலும் தூஷித்தாளா? அது தானும் இல்லை. தன் விதியையாவது நொந்துகொண்டாளா? எதுவும் இல்லை. எல்லாம் எம்பெருமான் அருள் என்றே இருந்தாள்.

V

இதையெல்லாம் கண்ட அரசன், “இன்னும் உறுதியாக ஓர் முறை பரீக்ஷித்துவிடுகிறேன். அதற்கும் சலிப்பாள் என்று எண்ணவில்லை, பார்ப்போம்” என நினைத்து, குணவதியை அழைத்து, “நம்முடைய குழந்தைகள்தான் – அது கிடக்கட்டும். போன ஜுரத்தைப் புளியிட்டழைப்பானேன். இனி ஆகவேண்டிய கார்யத்தை யல்லவோ யோசிக்க வேண்டும்” என்றான்.
குணவதியும் “ஆம், மெய்தான்” என்றாள்.

அரசன். – என்ன செய்வேன்? என்னென்று சொல்வேன்? குடிகள் இன்னும் கறுவிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

குணவதி. – அருமை மக்களைத்தானும் குடிகளுக்காகப் பறிகொடுத்தேன். இனி அதிலும் அருமையானது உங்களை விட வேறு எனக்கு என்ன இருக்கிறது? உங்கள் மனம் நிம்மதியாய் த்ருப்தி அடைந்திருக்க என்ன வேண்டுமானாலும் அப்படியே செய்ய ஸித்தமாக இருக்கிறேன்.

அரசன். – நீ தாழ்வான குலத்தாள் ஆதலால், எனக்கு இப்படிப்பட்ட அபவாதம்; வராத சொட்டெல்லாம் வருகிறது.

குணவதி. – இழிகுலத்தில் பிறந்தது என் குற்றம் அல்லவே. அதற்கு நான் என்ன செய்வேன்? அதை ஒழிக்க ஓர் உபாயமும் எனக்குத் தோன்றவில்லையே, பிராணநாதரே! தாங்கள் என்ன மனோபாவத்துடன் என்னைப் பெண்டாகக் கொண்டீர்களோ? அதுவும் விளங்கவில்லை. தாங்கள் கட்டளையிடுகிறதுபோல் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

அரசன். – கட்டளை என்ன இருக்கிறது? நீ பிறந்தகம் தேடிக்கொண்டு போகவேண்டும்.

குணவதி. – தங்கள் திருவுள்ளம்.

அரசன். – உன்னுடைய சீதனப் பொருள்களை யெல்லாம் எடுத்துக்கொள்.

குணவதி. – கெட்டேன். நான் என்ன சீதனம் கொண்டு வந்தேன். நீங்கள் கொண்டுவந்த உடையை உடுத்துத் தானே என்னைக் கொண்டுவந்தீர்.

அரசன். – ஆனால் நான் கொடுத்த ஆடையாபரணங்களை யெல்லாம் களைந்து வைத்துவிடு.

குணவதி. – ஆபரணங்களை யெல்லாம் இதோ வைத்து விடுகிறேன். மேலாடைகளையும் இதோ வைத்தேன். தேவரீர்க்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்த இந்த மாம்ஸச் சுமையைத் துகிலுரிகோலமாய் அனுப்பினாலும் எனக்கு ஸம்மதமே. ஆயினும் அடியேன் தங்களிடம் வருகையில் கன்னிகையாக வந்தேன். மீண்டும் கன்னிகையாக மீள்வதில்லையே. ஆனதுபற்றி ஒரு கந்தலான புடவை மாத்ரம் கொடுத்தருளினால், மானபங்கம் இன்றி அதைச் சுற்றிக்கொண்டு போகிறேன்.

அந்த வேண்டுகோளுக் கிசைத்து அரசன் கொடுத்த ஒரு பழம் புடவையைத் தரித்துக்கொண்டு வந்த குணவதியைப் பார்த்து, அவளுடைய தகப்பன், “இதென்ன கோலம் அம்மா, குணவதி! என்ன ஸங்கதி? ஏன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருக்கிறாய்? செய்திகளையெல்லாம் நான் அறிய விவரமாய்ச் சொல். அழாதே” என்று கேட்க, குணவதியும், “அப்பா, விசேஷம் ஒன்றும் இல்லை. நான் இழிந்த குலத்தில் பிறந்தவளென்று ஊரினர் யாவரும் கறுவுகின்றார்களாம். அவர்கள் ஏதாவது கலகம் பண்ணினால் நாட்டுக்கு அநர்த்தம் வரப்போகிற தென்று ராஜா அவர்கள் அடியேனைப் பிறந்தகமே போய்ச் சேரும்படி கட்டளையிட்டார். குழந்தைகள் ஸங்கதிதான் உங்களுக்குத் தெரியுமே. குழந்தைகள் போனதும் பெரிதல்ல. அவருடைய அன்புக்குப் பாத்ரமாக இருப்பதே போதுமென்று இருந்தேன். அதையும் இழக்கலாயிற்றே என்பதுதான் துக்கமாயிருக்கின்றது. வேறொன்றும் இல்லை” என்றுரைத்தாள்.

கிழவன். – அதிலும் அரசர்கள் மோந்துகொள்வதுபோல் கடித்துக்கொள்ளுகிறவர்கள். அரசனும் அரவும் நெரும்பும் ஸரி என்பார்கள். ராஜாக்களுக்கெல்லாம் முன்னாலோசனை கிடையாது. மனதில் நினைத்ததைச் செய்துவிட்டால்,பின் அதனால் யாருக்கு நஷ்டம் வருவதானாலும், தங்களுக்குக் கஷ்டம் வருவதானாலும், அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதல்ல. அவர்கள் இட்டதே சட்டம்.

குணவதி. – இவர் அப்படிப்பட்டவரும் அல்லர். ஏதோ என்னுடைய கெட்ட காலமே இதற்குக் காரணமாக இருக்கும். க்ரஹசாரம் யாரையும் விடுகிறதில்லை.

அப்போது அந்தக் கிழவன், “இந்தப் பாவி இப்படிச் செய்தாலும் செய்வானென்றே உன்னுடைய பழைய வஸ்த்ரங்களையெல்லாம் பெட்டியில் பத்ரமாய் வைத்திருக்கிறேன். அவைகளை எடுத்துக் கட்டிக்கொள் என்றான்.
குணவதியும் அப்படியே செய்தாள். பின்பு கிழவன், “இங்கேதான் உனக்கு என்ன குறைவு? பகவான் ஏதோ அரைவயிறு கால் வயிறானாலும் படியளக்கிறான். நான் ஒன்றும் இல்லாத தரித்ரனாய்ப் போய்விடவில்லை. நீ இங்கே இருப்பது எனக்கும் இந்தத் தள்ளாத காலத்தில் உதவியாக இருக்கும்” என்று ஆறுதல் தேறுதல் சொல்லினான். குணவதியும், “மெய்தான் பொழுதாகிறது. சாவியைத் தாருங்கள். தண்ணீர் கொண்டு வரவேண்டும். சமையல் செய்யவேண்டுமே. விதியை வெல்ல எவரால் ஆகும்? கடவுளுடைய திருவுள்ளத்தின்படி ஆகிறது” என்று சொல்லிச் சோறு சமைக்கப் போனாள். அன்று முதல் பழையபடி வீட்டு வேலைகளை க்ரமமாகச் செய்து கொண்டு தன் பிதாவுக்குச் செய்யலான உபசாரங்களைக் குறைவறச் செய்துகொண்டிருந்தாள்.

VI

பேரூருக்குப் பதின்காத தூரத்திலே, பேரூரரசனுக்கு நண்பனான அரசன் ஒருவன், சிற்றூரிலே இருந்து அரசாண்டு வந்தான். ஒருநாள் காலையில் அவனிடம் ஒரு தூதன் ஒருவன் சென்று, “எங்கள் பேரூரரசன் கொடுத்தனுப்பிய திருமுகம் இது. இதில் கண்டுள்ளபடி தயவுசெய்ய வேண்டுமென்று எங்கள் ராஜா பிரார்த்திக்கிறார்” என்றான். குணபூஷணன் என்னும் அவ்வரசன், “உங்கள் நகரம் மூன்றுநாள் பிரயாணந்தானே. இடையில் எப்படியும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நாங்கள் வந்து சேருகிறோம். உங்கள் அரசருக்கு எங்கள் வந்தனம் சொல்லுக” என்று சொன்ன அளவில், தூதனும் மீண்டு அரசனிடம் அடைந்து அச்செய்தியை அறிவித்தான்.

இதற்கு முன்னரே ஒருநாள் பேரூர்க் குடிகளில் சிலர், அரமணையடைந்து அரசனை வணங்கி,”ஐயா, மஹாராஜாவே! பல வருஷங்களுக்கு முன்னே தாங்கள் விவாஹம் செய்து கொண்ட காலத்தில் நாங்கள் என்னென்னவெல்லாம் எண்ணியிருந்தோம். அந்த எண்ணமெல்லாம் வீணாகி மறுபடியும் ஏக்கம் கொண்டோம்” என்றார்கள்.

அரசன். – என்ன செய்யலாம். எல்லாம் ஐயனுடைய செயல்.

குடிகள். – குழந்தைகளை இத்தனை காலமாக எவ்விதம் மறந்திருக்கின்றீர்களோ? ‘தொடர்ந்த மும்மல முருக்கி வெம்பவக்கடல் தொலையக், கடந்துள்ளோர்களும் கடப்பரோ மக்கண்மேற் காதல்?’ இந்தப் புத்ர ரத்னங்களின் கதி இன்னதென்பதும் எவர்க்கும் தெரிந்தபாடில்லை.

அரசன். – அவரவர்கள் வந்த கூத்தை ஆடித்தானே தீர்க்க வேண்டும்.

குடிகள். – குணவதியம்மாளுடைய ஸங்கதி எங்களுக்குத் தீராத துக்கத்தைத் தருகிறது.

அரசன். – என்ன செய்வேன். அதற்காகத்தான் முன்னே உங்களைப் பெண்பார்க்கிற விஷயத்தில் தலையிட்டுக்கொள்ள வேண்டாமென்று நான் சொன்னேன். பழியோ பாவமோ, பாரம் என் தலையில் இறங்கிவிட்டது.

குடிகள். – நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டிய கார்யத்தை யல்லவா நாடவேண்டும்.

அரசன். – நடக்கிற கார்யம் என்ன? முன்பின் பாராமல் மதிமோசம் போகும் பற்பல சிறுவர்போல் கெட்டொழிந்தேன். இது அறிவின்மையின் பயனாயிற்று. ஆகவே குணவதியைப் பிறந்தகமே போக்கினேன். மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன்.

குடிகள். – கடைசியில் கார்யம் இப்படியா திரும்பிவிட்டது. ஸ்வாமி, கோபிக்கவேண்டாம். ‘பின்னற்காரி வந்தாலும் கொண்டைக்காரி ஆவாளா” என்பர் உலகத்தார்.

அரசன். – அந்தக் கதையெல்லாம் என்னிடத்தில் படித்துக் காட்டுவதில் பயனில்லை. அந்த ஏட்டைத் தள்ளி விடுங்கள்.

குடிகள். – இனி எதிர்மொழி ஏது? தங்கள் சித்தம். நீடுழி வாழ்க! செலவு பெற்றுக்கொள்கிறோம்.

அப்பால், சிற்றுருக்குத் தூதனைப் போக்கிய பிறகு, மந்த்ரியை அழைத்து, அரசன், “இன்றைக்கு ஐந்தாவது நாள் எனக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கும் என்று ப்ரஸித்தப்படுத்துக. சிற்றூரரசனுடைய புதல்வியைப் பாணிக்ரஹணம் செய்யப்போகிறேன். நண்பர் முதலானவர்க்கும் செய்தி தெரிவிக்க” என்றான். அப்போது மந்த்ரி, “ஸ்வாமி, அங்ஙனமே செய்கிறேன். ஒரு விண்ணப்பம் – நமது நாட்டில் கல்வி கேள்விகள் உள்ள சில பெரியோர்கள் இது கார்யத்தை வெறுக்கின்றனர்” என்ற அளவிலே, அரசன்: ” சில நாளுக்கு முன் அவர்கள் என்னிடம் வந்தனர். என் முன்னிலையில் அவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டனர். இது பெருத்த விஷயம். உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட நம்மால் ஆகுமா?” என்
வீட்டுக் கார்யத்தில் என் அநுகூலத்தையும் ஸௌகர்யத்தையும் அநுஸரித்தே என் மநோரதப்படி நான் நடப்பேன். நல்லது நீ செலவு பெற்றுக்கொள்க” என்று சொல்லி மந்த்ரியை அனுப்பிவிட்டான்.

பிறகு ஆள்களை அனுப்பிக் குணவதியை அழைத்து, “வாராய், குணவதி! நம்முடைய நகரத்தில் அதிக ஆரவாரமாயிருப்பதன் காரணம் அறிவாயே” என்று கேட்டான்.

குணவதி. – ஒருவாறு அறிவேன்.

அரசன். – நம்முடைய அரமணையில் கல்யாண கார்யத்தைத் தலைமையாக இருந்து நடத்தத்தக்க பெண்கள் எவரும் இல்லாமையால், நீ இங்கே இருந்துகொண்டு செய்வன செய்தல் வேண்டும்.குணவதியும் அதற்கிசைந்து அரமணையில் தங்கியிருந்தாள்.

கல்யாணத்துக்கென்று குறித்த நாளில், திருமணப் பந்தலில், அவரவர்களுக்கென்று அமைத்த ஆசனங்களில் அரசனுடைய நட்பரசரும் ப்ரபுக்களும் ப்ரதானிகளும் எல்லாரும் நிறைந்திருந்தனர். குடிகளில் முதன்மையானவர்கள் அனைவரும் ஒருபால் வந்து கூடியிருந்தனர். ஒரு பக்கம் திரைச்சீலைகளின் பின்னால் அரசியர் முதலான பெண்மணிகள் வந்திருந்தனர். வாழையும் கமுகும் கட்டி மல்லிகை முல்லை முதலான மாலைகள் தொங்கவிட்டுப் பனிநீர் தெளித்து அலங்கரித்த மணப்பந்தலானது அதிக அழகாய்க் கண்களைக் கவரும் காட்சியாக இருந்தது. ஒரு பக்கம் கர்னாம்ருதமாய் வாத்யக்காரர்கள் வாத்யம் வாசித்துக்கொண்டிருந்தனர். கல்யாணச் சடங்குகளை நடத்துவதற்குரிய புரோகிதர்கள் முஹூர்த்த வேளையை எதிர்பார்த்திருந்தனர்.

இவ்விதமான மஹா வைபவம் பொருந்திய கல்யாண மண்டபத்திலே, குணவதி ஒருத்திமாத்ரம், தாஸாநு தாஸையாய்ப் பழம்புடவை உடுத்து, அங்கங்கே உலாவி பெண்டிரை உபசரித்தும், விருந்து முதலானவற்றிற்கு அவசியமானவைகளை அமைக்கும்படி உத்தரவளித்தும், மணமகள் வரவை எதிர்பார்த்தும் இருந்தாள். அதைக் கண்டு, குடிகளில் தலைமைவாய்ந்த ஒருவர் அரசனை நோக்கி, “ஐயனே, ஒரு விண்ணப்பம்:- இந்தக் கார்யங்களை யெல்லாம் இவ்வளவு திறத்துடன் நடத்துகின்ற நம்முடைய குணவதியம்மாள் நல்ல ஆடையாபரணங்களை அணிந்துகொள்ளும்படி தேவரீர் அருள் செய்ய வேண்டும். பாவம்: அந்த அம்மாள் மனம் இப்போது எங்ஙனம் உள்ளே நைந்து உருகுகிறதோ” என்று அந்தரங்கமாகச் சொல்லினர். அதற்கு
அரசன், “இன்னும் சற்று நேரம் பொறுத்தல் வேண்டும்” என்று ஸமாதானம் சொல்லி விட்டு, குணவதியை அழைத்து, “எல்லாரும் வந்து சேர்ந்து விட்டார்கள்; கல்யாணச் சடங்குகள் முடிந்தவுடனே விருந்து நடக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. அதோ வருகிறாரே அரசர், தெரிகிறதா? அவருடன் வருகின்ற மங்கையைக் கண்டனையா? அவள்தான் மணமகள்” என்றுரைத்தான். “இதோ போய் எதிர்கொள்கிறேன்” என்று சொல்லிப் போகின்ற குணவதியானவள், “இவளைக் காணக் காண என் மனம் உருகாநின்றது. இவள் பின்னாலே வருகின்றவன் இவளுடைய ஸஹோதரன்போலும். அட! இதென்ன அதிசயம்? இவனைக் கண்டதும் எனக்கு மார்பு கடுத்துப் பால் சுரகின்றது” என்றெண்ணி, “வாராய் அம்மா, மணமகளே!” என்று உபசரித்து, ஆலாத்தியெடுத்து த்ருஷ்டி பரிகாரமானவைகளைச் செய்தாள். பின் மணமகளையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டுபோய் ஆசனத்தில் இருத்தினாள்.

மணமகளை எதிர்கொள்ளும் ஸங்கீத கோஷத்தில், குடிகளுள் சிலர் பலவிதமாக வார்த்தை சொல்லிக்கொண்டனர். ஒருவர்: “ஐயோ, பாவம், சக்களத்தியைக் கண்டும் குணவதி சலிக்கின்றாளா? இவளன்றோ உத்தமி! ஐயா” என்றனர். “மெய்தான், இந்த அரசன் வேளைக்கொரு குணம் உடையவனாய் இருக்கிறானே. என்ன செய்யலாம்” என்றார் அண்டையில் இருந்த ஒருவர். எதிரில் ஒரு சிறுவர், “ஆனாலும் என்ன? இந்தப் பெண்ணே அரசனுக்குப் பெண்டாய் இருக்கத்தக்கவள்” என்று சொல்ல, இன்னொருவர் “ஆமாம், எப்படியும் ராஜ கன்னிகை; பூர்ண சந்திரன் உதயமானாற்போல் இருக்கிறாள்” என்னும் அளவில், மற்றொருவர் “அது கிடக்கட்டும் ஐயா, குணவதி என்றால் இவளுக்கே தகும்; அவள் முகத்தைப் பாரும். ஏதாவது துக்கக்குறி உண்டா. ஸூர்யோதயத்தில் மலர்ந்த செந்தாமரை போன்று அவள்முகம் விளங்குவதைப் பாரும். ப்ரபஞ்ச முழுவதும் ப்ரதக்ஷிணம் பண்ணிவந்தாலும் இப்படிப்பட்ட ஸுகுணம் உடையவர்கள் கிடைப்பது அருமையினும் அருமை” என்று வியந்தனர். அதைக் கேட்டிருந்தவர், “எங்காகிலும் உண்டா தன் புருஷன் மனம் போனபடியே போகிறவள் அல்லவோ பெண்.
இந்த அரசனுக்கு இப்பொழுது தெரியாது. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் அல்லவா? இந்த இரண்டாவது மனைவி எப்படிப்பட்டவளோ? நாம் எப்படிச் சொல்லலாம். என்னவென்றாலும் குணவதி ஆகமாட்டாள் என்று உறுதியாய்ச் சொல்லமாட்டுவேன். இரும், இரும். அரசன் குணவதிக்காகத் திரும்புகிறான். என்ன செய்யப் போகிறானோ பார்ப்போம்” என்றனர். எல்லாரும் அரசனையும் குணவதியையும் கண்ட கண் இமைகொட்டாமல் பார்த்திருந்தனர்.

வாத்ய கோஷத்தைக் கையமர்த்தி நிறுத்தி, அரசன் குணவதியைப் பார்த்து, உரத்த குரலுடன், “ஏ குணவதி, மணமகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். உடனே குணவதி, “பெருமானே, என்னென்றுரைப்பேன். அவளைப் பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும். அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அன்பு பெருகாநின்றது. அவள் முகமே போல மனமும் நிர்மலமாக இருக்கும் என நினையா நின்றேன். இவள் உமக்குப் பெறாப்பேறு என்றே தோன்றுகின்றது. ஒரு விண்ணப்பம். இவள் முதல் மனைவியைப் போன்றவ ளல்லள்: இன்னல் இடைஞ்சல் ஒன்றும் அறியாதவள்: பெருவாழ்வாய் வாழ்ந்தவள். இவளை மனம் நோகச் செய்யா திருப்பீர்கள் என்று ப்ரார்த்திக்கிறேன். பாவம்: இளந்தையாய் இருக்கிறாள்” என்றுரைத்தாள்.

அவ்வார்த்தை கேட்ட அரசன். ஆநந்தக் கண்ணீர் சொரிந்து, “குணவதி! என்னை இத்தனை வருஷமாக நீ என்னவென்று நினைத்தாயோ? ராக்ஷஸன் படுத்தாத பாடெல்லாம் உன்னைப் படுத்தினேன். குடிகளும் என்னைக் கொடியனென்றே தூஷித்திருப்பர். பொன்னையும் புடமிட்டறியவேண்டும் அல்லவா? நம்முடைய க்ஷேமத்தை நினைத்தே உன்னை இப்படியெல்லாம் நடத்தினேன். உன்னைக் கற்பலங்காரம் என்று தெளிந்தேன்” என்றுரைத்து, குணவதியை இறுகத் தழுவிக் கொண்டான்.

பின்னரும்: “இதோ, உன் துயரையெல்லாம் ஒரு விநாடியில் போக்கிவிடுகிறேன். மணமகள் என்று வந்தவள் நமது ஸீமந்த புத்ரி. அண்டையில் இருப்பவன் நமது குலக்கொழுந்து” என்றான். இதைக்கேட்ட குணவதி ஓடி, “என் மக்களே” என்று இறுகத் தழுவி, “என் கண்மணிகளே” என்று அவர்கள் முகத்தில் முத்தம் பொறித்தாள். அரசனும் குணவதியை ஆடையாபரணங்களால் அலங்கரித்துக்கொண்டு வருக என்றனுப்பினான். மந்த்ரியை அழைத்து ஆண்மக்களுக்குரிய அரிய ஆடைகளைத் தருவித்து, குணவதியின் தகப்பனைப் பார்த்து, “மாமனாரே, என்னை க்ஷமிக்கவேண்டும். இந்த ஆடைகளை அணிந்துகொள்ளும் அரமனையில் ஆரோக்யமாய் இரும்” என்று வேண்டினான். “குடிகளே, உங்களுக்கு வந்தனம். இனி என்னைக் குறைகூற இடமில்லை” என்றான்.

– அபிநவ கதைகள் (1921)

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *