Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கறையில்லா மனம்

 

அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.

“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?”

அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.

“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை.

அவர் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர். நாளை நடக்கவிருக்கும் சுதந்திரதின விழாவின் வரவேற்புரையை எழுதிக் கொண்டிருந்தார்.

“விடும்மா, பசங்களுக்குள்ள என்ன இருக்கு?”

“என்ன இருக்கா, அவன் யார் தெரியுமா? அந்த அருள்மணி நமக்குச் சமமானவனா? அவன்கூட சுத்துறான். அவன் படிக்கிறான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த கல்லூரில இவன சேத்துருக்க மாட்டேன். சேத்தது தப்பாப் போச்சு.”

அருள்மணி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவன். அதனாலேயே மங்கலத்திற்கு அவனுடன் ஆதவன் பழகுவது பிடிக்காது.

அருள்மணியும், ஆதவனும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை.

அடுத்தநாள் காலை கல்லூரிக்கு ஆதவன் இருசக்கர வாகனத்தில் சென்றான்.

மதிய சாப்பாட்டிற்காக‌, முருங்கைக்காய் போட்ட கமகமக்கும் சாம்பார், மிளகுரசம், கடுகு கொண்டு தாளித்த மோர், கேரட் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல் என மங்கலம் அருமையாக சமைத்துக் கொண்டிருந்தார்.

பள்ளியில் மிகஅருமையாக சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. அவர் கூறிய கருத்துக்களைக் கேட்ட ஆதவனின் தந்தை மெய்சிலிர்த்துப் போனார்.

“நான் இராணுவத்தில் இருந்தபோது, என்னுடன் இருந்தவர்கள் ஏற்றத்தாழ்வு, மேல்குலம், கீழ்குலம் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்தியத்தாயின் பிள்ளைகள் என ஒற்றுமையாக இருப்போம். உயிரைக் கொடுத்து நாட்டைக் காப்பாற்ற, எந்நேரமும் தயாராக இருப்போம்.” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும், இராணுவத்தில் இருப்பவர்களின் கறையில்லா மனம் கண்டு, ஆதவனின் தந்தை மகிழ்ச்சி அடைந்தார்; ‘இந்த இடத்தில் மங்கலம் இல்லையே’ என எண்ணினார்.

சிறிது நேரத்தில் பள்ளியின் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தகவல் வந்தது.

ஆதவன் கல்லூரிக்குச் சென்றபோது, எதிரே வந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது. அரசு மருத்துவமனையில் ஆதவன் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார் பேசியவர்.

பதட்டத்துடன் பள்ளியிலிருந்து விரைந்து, மங்கலத்திடம் தகவல் கூறிவிட்டு, அழுதுகொண்டே புறப்பட்டார் ஆதவனின் தந்தை.

மருத்துவர் ஆதவனின் தந்தையிடம் “ஆதவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கின்றது. அவனது இரத்தம் அரிய வகை இரத்தம். இரத்தம் கிடைத்து விட்டால் பிரச்சினையில்லை. உடனடியாக‌ ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். ஆதவனின் தந்தை அலைபேசியில் இரத்தம் பெற பலரிடம் பேசினார்.

அதற்குள் மருத்துவர் வந்து “இரத்தம் கிடைத்துவிட்டது. கல்லூரி மாணவர் ஒருவர் உங்கள் மகனுக்கு இரத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.” என்றார்.

நிம்மதிப் பெருமூச்சுடன் யார் அந்த மாணவன் என்று கண்ணாடிக் கதவுகளின் வழியே பார்த்தார். முதலில் அதிர்ந்த ஆதவனின் தந்தை பின்னர் மகிழ்ந்தார். கண்களில் கண்ணீர் ஆனந்தமாய் வெளிவந்தது.

சற்று நேரத்தில் மங்கலம் அங்கே அழுத கண்களுடன் வந்தார். “யாரோ இரத்தம் தாராங்கன்னு சொன்னீங்களே, அந்த பையனப் பார்க்கனும்.”

உள்ளே ஆதவனின் தந்தை மங்கலத்தை அழைத்துச் சென்றார். அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.

நமக்கு சமமானவன் அல்ல; அவன்கூட பழகாதே, என்று மங்கலம் சொல்லி வந்த அருள்மணியின் இரத்தம்தான் ஆதவனினன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

அதுவரை அமைதியாக இருந்த ஆதவனின் அப்பா பேச தொடங்கினார்.

“ஏன் மங்கலம் நிக்கற. தாழ்த்தப்பட்டவன் இரத்தம் நம் மகன் உயிரை எப்படிக் காப்பாற்றலாம்? போய் தடுத்து நிறுத்து.”

மங்கலம் தலைகுனிந்தார். மேலும் ஆதவனின் தந்தை தொடர்ந்தார்.

“ஒருமனிதன் மற்றொரு மனிதனைச் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். இதில் சாதி, மதம் பார்க்க முடியாது. இதை முதலில் புரிந்துகொள்.”

அருள்மணி வெளியில் வந்து மங்கலத்திடம் “கவலைப்படாதீங்க அம்மா, நம்ம ஆதவனுக்கு எதுவும் ஆகாது” என்றான்.

அவன் கைகளைப் பிடித்து கண்ணீரால் கழுவினார் மங்கலம்.

ஆதவனின் தந்தை, “இதுநாள் வரை கறையுடன் இருந்த உன்னுடைய மனசு இப்பதான் கறையில்லாம இருக்கு. உன்னுடைய கறையில்லா மனம் எனக்கு மனநிறைவைத் தருது.” என்றார் மங்கலத்திடம். 

தொடர்புடைய சிறுகதைகள்
சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான். அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் ...
மேலும் கதையை படிக்க...
அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர். ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார். “இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர ...
மேலும் கதையை படிக்க...
உன்னத உறவு
கல்விக் கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)