கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 36,141 
 

“மாப்ளே.!நாளைக்கு மாசி மகம்டா…திருவிழாவுக்கு கோவில்ல நேர்த்திக்கடன் கிடா வெட்டுவாங்கடா…நம்ம ஊர் தலைகட்டுக்கு வீட்டுக்கு நூறுகிராம் கிடைச்சாலே பெருசு…பத்துநாள் விரதத்தை எலும்பு உறிஞ்சாம எப்படிடா முடிக்கறது..?..முந்நூற்றி எண்பது ரூவா விக்குதேடா ஆட்டுக்கறி…”கோவில் திண்டில் ஆரம்பித்தான் கண்ணன்.

“ஒங்க..கதை அரைகிலோ,முக்கா கிலோவுல முடிஞ்சிடும்டா,என் கதைய கேளு …முதல்முதலா மாமியார் ,மாமனார் வர்றாங்க..கூடவே கொழுந்தியாளும்..!..நல்ல மாதிரியா செய்யனும்னா எங்க குடும்பத்துக்கு மூனு கிலோ வாங்கனும்…முழுசா ஆயிரம் ரூவா வேணும்…செலவில்லாம கறிதிங்க ஏதாவது யோசனை சொல்லுங்கடா”..என்றான் புதுமாப்பிள்ளை மூர்த்தி.

“சரிடா,..இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு இங்க கூடுங்கடா…இத்தினி நாளும் மாங்காயும்…தேங்காயுமா யாருக்கும் பாதிப்பில்லாம திருடி தின்னோம்…இப்ப கொஞ்சம் பெரிசா செய்யப்போறோம்…கறியை நாம திண்ணுட்டு பழியை நரிமேல போட்டுடலாம்…”என்றபடியே கலைந்தார்கள்.

இரவு நான்கு பேரும் சேர்ந்து ஊருக்கு மேற்கே ஆற்றக்கரையில் கூடினார்கள்.நால்வரும் மாறிமாறி நரிகள் போல கூவ,பதிலுக்கு நிஜநரிகளும் எதிர்க்குரல் கொடுக்க …அன்று ஊர் உறங்கவே வெகுநேரம் ஆனது…தங்கள் திட்டம் தங்களுக்கு எதிராய் திரும்பிவிடுமோ என பதட்டமடைந்த நண்பர்களை சமாதானப்படுத்தினான் மூர்த்தி.

“மாப்ளே..இப்ப போய் கிடை ஆட்டுல கைவச்சோம்னா….நாம நல்லி எலும்பு கடிக்க முடியாது…நம்ம சல்லி எலும்பை ஒடிச்சுப்புடுவானுங்க…கீதாரிங்க….ஒருத்தனும் தூங்கல…பேசாம குப்பாயிக்கிழவி கொட்டாய்ல புகுந்துடலாம்டா….கெழவி முக்கி முனகி எழுந்திரிச்சி கத்தரதுக்குள்ள…கறி கொதிச்சிடும்..கம்முன்னு வாங்கடா…”என்றான் கண்ணன்.

குப்பாயிக்கிழவியின் தோட்டத்தில் நுழைந்து…கொட்டாயில் கட்டிக்கிடந்த பெருத்த கிடாவை…அது கணைத்து காட்டிக்கொடுப்பதற்குள் கல் உப்பை கடைவாயில் கொட்டி வாயை சேர்த்து பிடித்துக்கொண்டு ….பனங்கரையை நோக்கி நடந்தார்கள்.

கசாப்பு வேலை முடித்து அவரவர் வீட்டுக்கு திரும்பினார்கள்.

விடியற்காலை அசந்து தூங்கிக்கொண்டிருந்த மூர்த்தியை உலுக்கி எழுப்பினாள் அவனது புது மனைவி கவிதா..”எழுந்திரிங்க..சீக்கிரம்..குப்பாயி பாட்டியோட பேத்தி இந்த செயினை, கொண்டு வந்து கொடுத்தா.!.அவ வீட்டு கொட்டாய்ல கட்டிக்கிடந்த கிடாவை காணோம்னு தேடிகிட்டு போகும்போது…கோயில் அரச மரத்தடியில கிடந்ததாம்…இதுல உள்ள ‘லாக்கெட்’ல உங்க போட்டோ இருத்ததால நம்ம வீடுதேடி வந்து கொடுத்துட்டு போறா…வாயில்லா பிள்ளை…வயசான கிழவிக்கு இவளவிட்டா நாதியில்ல…இவளுக்கும் கிழத்தைவிட்டா ஆதரவு இல்ல…அப்படியும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம வாழ நினைக்கிறாங்க…ஆனா அவங்க பொருளை களவாண்டு போகவும் பிறவி எடுத்திருக்கானுங்க..ஊருக்குள்ள..”

மனைவியின் பிரசங்கம் நீண்ண்ண்ண்டடடடட….கையாக நெஞ்சில் அறைய …

குற்ற உணர்வில் தலைகுனிந்தான் மூர்த்தி.

– 10-3-2013-தினத்தந்தி குடும்பமலர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *