கருப்பு – வெள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 12,767 
 

பள்ளியில் இருந்து சோர்வுடன் திரும்பி வந்த 12 வயது ரோஷினி, பேகை தொப்பென போட்டு விட்டு சோபாவில் விழுந்தாள்.

‘ரோஷிமா, என்னடா செல்லம் ரொம்ப கோபமா தெரியறீங்க? ‘ என மென்மையான புன்னகையுடன் தாய் ரேவதி வினவ, ரோஷினியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

‘நீங்க ஏன் குங்குமப்பூ சாப்பிடல ?’

கோபமாய் கேட்ட மகளை குழப்பத்துடன் பார்த்தாள் ரேவதி.

‘நான் உங்க வயத்துல இருந்தப்போ நீங்க ஏன் குங்குமப்பூ சாப்பிடல ?……. பாருங்க என்னை எல்லாரும் கருப்புன்னு கிண்டல் பண்றாங்க…’

இது நாள் வரை இல்லாது தன் நிறத்தினால் தாழ்வு மனப்பான்மை கொண்டு தவிக்கும் மகளை வியப்புடன் பார்த்தாள் ரேவதி.

‘யாருமா உன்னை கிண்டல் பண்ணியது?’ கோபமாய் கேட்ட ரேவதிக்கு பதிலும் கோபமாய் வந்தது.

‘அந்த முகில், தினகர்…’ என்றவள் குரல் உடைய அழுகை பீறிட்டது.

‘என்னடா கண்ணா இதுக்கு பொய் அழலாமா? அவனுங்க சும்மா கிண்டல் பண்ணி இருப்பாங்க’

‘ம்ஹூம் …’ மறுத்தாள் மகள். கண்ணாடி முன் வந்து நின்று,

‘பாருங்க…. நான் கருப்பாதான் இருக்கேன். நீங்க ஏன் குங்குமப்பூ சாப்பிடல’ வெடித்த மகளை பார்த்தவள் சமாதானப்படுத்தும் நோக்குடன்,

‘ரோஷினி, கலர் எல்லாம் ஜீன் படி அமையரதுடா… நீ அறிவியல் பாடத்துல படிச்சிருப்பியே …’

‘ம் ஆமாம் …..’

‘அப்பாடா’ மனசுக்குள் சொல்லிக்கொண்டாள் ரேவதி.

‘நீ நல்லா சிகப்பா தானே இருக்க…….’ முகம் வாட ‘அப்பா……..’ என கசப்புடன் முடித்தாள்.

ரேவதி அதிர,

‘ஆமாம்…. அப்பா கலர் தான் எனக்கு வந்திருச்சு…. ஐ ஹேட் அப்பா’ என முடித்தாள்.

‘இல்லடா ரோஷி…’ ரேவதியின் பேச்சு அவள் காதுக்கு எட்டும் முன் அவள் அறையுள் நுழைந்து கதவை படீரென சாற்றினாள்.

ரோஷினி , குமார்-ரேவதி தம்பதியரின் ஒரே செல்லக்குழந்தை. தன் கரிய நிறத்திற்கு காரணமான தந்தையை அவள் வெறுத்தாள். இதனால் தானே அனைவரும் கிண்டல் செய்கின்றனர் என அவள் குழந்தை மனம் துன்புற்றது.தாய் தந்தையின் பரிவான வார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை. குமார் மிகவும் நொந்து போனான். தன் உயிருக்கு உயிரான மகளின் ஒதுக்கம் அவனை மிகவும்
வதைத்தது.

ஒரு வாரம் ஓடிவிட, ஊரில் இருந்து குமாரின் தந்தை ராகவன் வந்தார்.

‘ரோஷினி … வாடாமா ..’ ஆசையாய் அழைத்த தாத்தாவை கோபமாய் பார்த்தாள் ரோஷினி.

‘உங்களால தான் எல்லா கஷ்டமும்…’

புரியாது பார்த்தார் பெரியவர்.

‘நீங்க கருப்பா இருப்பதால் தான் எங்க அப்பா கருப்பானார் .. அதனாலதான் நானும் கருப்பா இருக்கேன்… ஐ ஹேட்டே யூ’ என ஓடிவிட்டாள். விக்கித்து போனார் ராகவன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. உணவறையில் அனைவரும் ஆஜர் ஆகினர். சமையல் உதவியாளரான தாயம்மா உணவுப்பதார்த்தங்களை கொண்டு வந்து வைத்தாள்.

‘பெரிய அய்யா , நம்ம ரோஷினிமாவுக்கு இந்த வயசுலேயே தயாள குணமுங்க’ சொன்னவளை அனைவரும் வியந்து நோக்க,

‘ஆமாங்கய்யா, நேத்து என் பேத்திய இங்க கூட்டியாந்தேனுங்க. ரோஷினிம்மா அவளுக்கு ரெண்டு நோட்டு, பென்சிலு , ரப்பரு எல்லாம் குடுத்திருக்காங்க…. அவ சட்ட கிளிஞ்சிருந்தது…. அத பார்த்துட்டு தன்னோட சட்டைய போட்டுக்க குடுத்திருக்காங்க…. என்ன இருந்தாலும் பரம்பரை குணம் விட்டு போகுங்களா? உங்களைபோலவே உங்க பிள்ளை ஏழைகளுக்கு உதவுவாரு… இப்போ வாரிசா உங்க பேத்தியும் அதே போல… கள்ளமில்லா வெள்ளை மனசுங்க …..’ என நெகிழ்ந்தாள்.

அதுவரை உம்மென்று அமர்ந்திருந்த ரோஷினி,

‘ஆமாம் … நான் எங்க தாத்தா அப்பா போல வெல்ல மனசுக்காரியாக்கும்…’ குறும்பாய் கண்களை உருட்டி சொல்லிய ரோஷினியை ஆசையுடன் பார்த்தது குடும்பம். கலீரென சிரித்தவாறு ஓடிச்சென்று தாத்தாவிடமும், அப்பாவிடமும் ‘சாரி’ கேட்டு இரு கன்னத்திலும் முத்தமிட்டாள் ரோஷினி.

ரோஷினியின் வெள்ளை மனசுடன் கூடிய பளீரென்ற புன்னகை, ‘உலக அழகி நானாக்கும்’ என சொல்லாமல் சொல்லியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *