கபாலி கடன் வராமலிருக்கு!

 

சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி.

“என்ன முதலாளி யோசிக்கறீங்க?…ஏதாவது வேலை பாக்கியிருக்கா இதுல?” தயக்கமாய்க் கேட்டான் கடைப்பையன்.

“ம்ம்ம்…ஏதோ வித்தியாசமாத் தெரியுதே?”.. “சொர..சொர” தாடியைத் தேய்த்தபடியே யோசித்தவன் “அது சரி… ஆயில் மாத்தினியா,” கேட்டான்.

“இல்லையே முதலாளி”

“அதான்… போடா… போயி ஆயில் மாத்துற வேலையப் பாருடா” சொல்லிவிட்டுத் திரும்பிய தண்டபாணி கடைக்குள் நுழையும் சுந்தரம் சித்தப்பாவைப் பார்த்து “வாங்க சித்தப்பா… என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்?” சிரித்த முகமாய்க் கேட்டான்.

“இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன்… வர்ற வழில டீக்கடைக்குப் போயி உங்கப்பாவைப் பார்த்தேன்… அப்படியே உன்னையும் ஒரு பார்வை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்… சௌக்கியம்தானே?”

“சௌக்கியத்துக்கு என்ன சித்தப்பா கொறைச்சல்..?” சொல்லியவாறே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவரை உட்காரச் சொன்னவன் பையனை டீக்கு அனுப்பி விட்டு. சித்தப்பாவின் எதிரே அமர்ந்து “சொல்லுங்க சித்தப்பா வேறென்ன விசேஷம்?” சம்பிரதாயமாய்ப் பேச்சைத் துவங்கினான். அவனுக்குத் தெரியும் சித்தப்பா காரியமில்லாமல் வரமாட்டாரென்று.

“தண்டபாணி..நான் ஒண்ணு கேக்கறேன் தப்பா நெனைக்கக் கூடாது” பீடிகையுடன் சொன்னார்.

“எது வேணா கேளுங்க சித்தப்பா” ‘கல..கல’வென்று சிரித்தான் தண்டபாணி.

“ஏம்பா… நீதான் நல்லா சம்பாரிக்கறியே… அப்புறம் எதுக்கப்பா உங்கப்பன் அந்த டீக்கடைய விடாம நடத்திட்டிருக்கான். இழுத்து மூடிட்டு அக்கடான்னு போயி வயசான காலத்துல ஓய்வு எடுக்கப்படாதா?”

மெலிதாய் முறுவலித்த தண்டபாணி, “அதையேதான் சித்தப்பா நானும் சொன்னேன்… “காச்..மூச்”சுன்னு கத்தறார்… “கடைசி வரைக்கும் உழைச்சுத்தான் சாப்பிடுவேன்… சொந்தக்கால்லதான் நிப்பேன்.” அது… இதுன்னு கட்டபொம்மனாட்டம் வீரவசனம் பேசறாரு… நானும் பாத்தேன்.. சரி அவருக்கு எது சந்தோஷமோ அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்”

“அதுக்காக இப்படியா காசு நஷ்டப்படறது?”

“காசு நஷ்டமா?… என்ன சொல்றீங்க சித்தப்பா?”

“பின்னே… கடன் குடுக்கறதும் வாங்குறதும் வியாபாரத்துல இருக்கறதுதான்… அதுக்காக இப்படியா?”

“புரியற மாதிரிதான் சொல்லுங்களேன் சித்தப்பா”

“கணக்குப் புத்தகம் ஒண்ணு வெச்சிருந்தாரு உங்கப்பா! … சும்மா அப்படியே பொரட்டிப் பார்த்தேன்… மொத்தப் பயலுகளுமே கடனுக்குத்தான் சாப்பிடுவானுக போலிருக்கு… ஏகப்பட்ட கடன் கணக்கு… ஆனா பரவாயில்லை… எல்லாம் சின்னச் சின்ன தொகைகள்தான்… அதுவும் ரெண்டொரு மாசத்துக்குள்ளார வசூலாகியிருக்கு”

“அப்புறமென்ன…அதான் வசூலாயிடுச்சல்ல?”

“அதாரு அது?… பேரு கூட என்னமோ… போட்டிருந்தாரே…ம்ம்ம்…”யோசித்தார்… பிறகு சட்டென்று.. “ஆங்…கபாலி… கபாலி” அவன் கணக்குல கிட்டத்தட்ட ஐயாயிரம ருபாய் வராமலே கெடக்கு… அதுவும் ஒன்றரை வருஷமா…”

“அப்படியா… ஏன் வசூல் பண்ணாம விட்டுட்டாரு? ஒரு வேளை அவன் கடைப்பக்கமே வர்றதில்லையோ என்னமோ?”

“இல்லைப்பா… இப்பவும் வந்து சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்கான்… இவரும் கணக்கு எழுதி வெச்சுக்கிட்டேயிருக்கார்… நானும் கூடக் கேட்டேன்.. “ஏன் அவன்கிட்டக் கேட்கறதேயில்லையா?” ன்னு… கேப்பாராம்… அவனும் “தந்துட்டாப் போச்சு” ன்னு சொல்லுவானாம் ஆனா தரவே மாட்டானாம்… எனக்கென்னமோ அது வரும்னு நம்பிக்கையில்லை…”

“அட…இவருதான் ஆகட்டும் ஒரு அதட்டு அதட்ட வேண்டியதுதானே?” சற்றுக் கோபமாகவே சொன்னான் தண்டபாணி.

“ம்ம்ம்… அதையும சொன்னேனே… அதுக்கு உங்கப்பன் ஒரு வியாக்கியானம் சொல்றாரு…. “வசூல் பண்றது ஒரு கலையாம்… அதை பக்குவமாக் கையாளனுமாம் அதாவது நைசாப் பேச வேண்டிய எடத்துல நைசாப் பேசி…. பரிதாபமா நடிக்க வேண்டிய எடத்துல பரிதாபமா நடிச்சு… தோழமை கொண்டாட வேண்டிய எடத்துல தோழமை கொண்டாடித்தான் பணத்தை எப்பவுமே வசூல் பண்ணணுமாம்… தடாலடியா அதட்டினா தரணும்ணு நெனைக்கறவன் கூடத் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிடுவானாம்…”

“இதென்னங்க இது புதுசாயிருக்கு இவரு பேசறது… தொழில் பண்ற எடத்துல இவரு சொல்ற மாதிரி இருந்தா சீக்கிரமே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான்… இப்பெல்லாம் கடன் வாங்கறவன் எவனுமே திருப்பிக் குடுக்கனும்ங்கற எண்ணத்துல வாங்கறதில்லை…” தண்டபாணிக்குத் தந்தையை நினைக்க பரிதாபமாகயிருந்தது.

“ஏப்பா தண்டபாணி… அந்த கபாலி என்ன பெரிய ரவுடியா?… எதுக்குக் கேக்கறேன்னா… அவனை அதட்டிக் கேட்க பயந்துட்டு உங்கப்பன் இந்த வியாக்கியானமெல்லாம் பேசறானோன்னு எனக்குப் படுது…”

சில நிமிடங்கள் அமைதி காத்த தண்டபாணி, “அப்பா அந்த மாதிரியெல்லாம் பயப்படற ஆளில்லையே சித்தப்பா”

“அப்படின்னா… அந்தக் கபாலி… உங்கப்பன்கிட்ட நல்லா இளக்காரம் கண்டுக்கிட்டான்னு நெனைக்கறேன்… வருஷக் கணக்காகியும் மனுஷன் காசு கேக்கறதில்லை… ஆனா கடன் மட்டும் தொடர்ந்து குடுத்துக்கிட்டே இருந்தா எவன்தான் காசு குடுப்பான்?… அந்தக் காசு வராதுப்பா… பாவம் உங்கப்பன்”

கண்களை மூடிக்கொண்டு மேவாயைத் தடவி யோசித்த தண்டபாணி, “சரி சித்தப்பா… நானே நேர்ல போயி அந்தக் கபாலிய ரகசியமா ஒரு அதட்டு அதட்டிட்டு வந்துடறேன்… இந்த விஷயத்தை நீங்க அப்பாகிட்ட சொல்லிட வேண்டாம்” என்றான்.

சித்தப்பா கிளம்பியதும் ஆயில் மாற்றப்பட்ட அந்த யமஹாவை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் தண்டபாணி.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அண்ணனைப் பார்க்க அவரது டீக்கடைக்கு வந்திருந்தார் தண்டபாணியின் சித்தப்பா சுந்தரம்.

“ஏம்ப்பா சுந்தரம் அன்னிக்கு என்னமோ “அதட்டினாத்தான் காசு வசூலாகும்… உங்கள மாதிரியிருந்தா எல்லாப் பயலுகளும் தலைல மொளகா அரைச்சிடுவானுக”ன்னு சொன்னெ… பாத்தியா ஒன்றரை வருஷமா வசூலாகாமக் கெடந்த ஐயாயிரம் ருபாயை அந்தக் கபாலி தானாகவேக் கொண்டாந்து குடுத்துட்டுப் போயிட்டான்… நானென்ன அவனை அதட்டினேனா? இல்ல மெரட்டினேனா? வாயத் தொறந்து ஒரு தடவை கூடக் கேட்டதில்லை தெரியுமா?..”

சுந்தரம் சித்தப்பா மௌனம் சாதிக்க,

“இப்பவாது நான் சொல்றதை ஒத்துக்கறியா?… வியாபாரத்துல வசூல் பண்றது ஒரு கலைப்பா… அது இள வட்டங்களுக்குப் புரியாது… என்னைய மாதிரி வயசானவங்களுக்குத்தான் அது புரியம்”

மனசுக்குள் சிரித்துக் கொண்டார் சுந்தரம் சித்தப்பா. “ஹூம்…தண்டபாணி போனதையும்… கபாலியை மிரட்டியதையும்… அதனால்தான் பணம் வசூலானதையும்… இவரிடம் சொன்னால் பாவம். இவரோட சந்தோஷம் பூராவும் வடிஞ்சு போய்டும்… இருக்கட்டும்… இந்த சந்தோஷம் இப்படியே இருந்துட்டுப் போகட்டும்… அதை நாம ஏன் கெடுக்கணும்?” 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு வாரத்திற்கான பூஜை சாமான்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் பெருமாள் குருக்கள். “வணக்கம் சாமி” “கும்பிடறேன் சாமி” “நமஸ்காரம் குருக்களய்யா” எதிரில் வருபவர்களின் விதவிதமான மரியாதை வெளிப்பாடுகளை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு நடந்தார். பஸ் நிறுத்தத்தை அடைந்து காத்திருந்த போதுதான் அதைக் கவனித்தார். எண்ணை ...
மேலும் கதையை படிக்க...
தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதன் நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை ...
மேலும் கதையை படிக்க...
கலைவாணிக்கு குழப்பமாயிருந்தது. ‘என்னாச்சு இந்தக் குழந்தைக ரெண்டுக்கும். எப்பவும் பாட்டி ஊரிலிருந்து வந்தால்…வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு ‘ஹைய்யா…பாட்டி…பாட்டி..”ன்னு கத்தும்ங்க…இன்னிக்கு என்னடான்னா…பாட்டி உள்ளார வந்தும் கூட கண்டுக்காம உட்கார்ந்திட்டு இருக்குதுகளே…ஏன்?” யோசித்தபடி, ‘வாம்மா…” என்று சொல்லித் தன் தாயிடமிருந்து ...
மேலும் கதையை படிக்க...
அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது. ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த நாகராஜனின் மூளைக்குள் சிந்தனைப் பூச்சிகள் தாறுமாறாய் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. தரையில் அவர் மனைவி பார்வதி சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டியபடி ...
மேலும் கதையை படிக்க...
'கண்ணம்மா… ப்ளீஸ்… புரிஞ்சுக்கம்மா…ஒரு பெரிய கம்பெனில… பொறுப்பான ஆபீஸர் உத்தியோகம் பார்க்கறவன் நான்…தெனமும் நாலு பெரிய மனிதர்களைச் சந்திச்சுப் பேச வேண்டியிருக்கு… பழக வேண்டியிருக்கு… நான் போயி ரவுடியாட்டம்… பெரிய மீசை வெச்சுக்கிட்டா… நல்லாவாயிருக்கும்?…என்னைப் பார்த்தா யாருக்கும் ஒரு மரியாதை வராது… ...
மேலும் கதையை படிக்க...
தெரு ஓவியன்
கலையின் விலை?
கவிதா….சவிதா
இன்று முதல் இவள் செல்வி!
மீசை வைக்க ஆசை…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)