கனவு மெய்ப்பட வேண்டும்!

 

சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்.

நிகழும் விஜ வருஷம் வைகாசித்திங்கள் 11ஆம் நாள், நல்லதொரு சுபவேளையில் அடுத்ததொரு படையெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டார் சற்குணம். ‘இந்த முறையாவது அப்பா வெளிநாடு போய்விடவேண்டும்’ என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் மூத்த மகள் சாகித்தியா. சற்குணமும் மூத்த இரு பெண்களும் கொழும்பிலும், மனைவியும் கடைசி மகளும் யாழ்ப்பாணத்திலும் இருக்கின்றார்கள்.

கோயிலிலிருந்து திரும்பிய சற்று நேரத்தில் மகேஸ்வரிமாமியும் மகன் ரமணனும் சற்குணத்தின் வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

“என்ர மகன் ரமணனுக்கு உங்களோடைதான் ·பிளைட் எண்டு ஏஜன்சிக்காரன் சொன்னவன். அவன்தான் உங்கட விலாசத்தையும் தந்து விட்டவன்” இடம்பெயர்ந்தபின் நீண்டநாட்களாக சந்தித்துக் கொள்ளாத மகேஸ்வரிமாமி மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“வயசும் போயிட்டுது. கனடா போகத்தான் வேணுமோ எண்டு யோசிக்கிறன். மூண்டு பெம்பிளப் பிள்ளையளையும் பெத்துப் போட்டன். மூத்தவளுக்கும் வயசு இருபதாகுது” பெருமூச்சு விட்டார் சற்குணம்.

“அவளவைக்கென்ன! நல்ல வடிவும் படிப்பும் இருக்கு. நீங்களும் கனடா போனால் பிறகென்ன?” எதற்கோ அடிகோலினாள் மகேஸ்வரி.

சாகித்தியா ரீ போட்டுக் கொண்டு வந்து எல்லாருக்கும் குடுத்தாள். அவளின் தங்கை கொம்பியூட்டர் படிப்பதற்காகப் போய்விட்டாள். ரமணனும் சாகித்தியாவும் சின்ன வயசில் பானை சட்டியளுக்கை சோறு கறி சமைத்து விளையாடியவர்கள். அவர்கள் இருவரும் சிரித்துச் சிரித்துக் கதைத்தார்கள். ரமணன் கனடா போய்விட்டால் வேறு யாரையாவது கொத்திக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம் மகேஸ்வரிக்கு உள்ளூர இருந்ததால், அவர்களின் உரையாடலிற்கு மருந்து குடுக்காமல் ரசித்துக் கொண்டாள்.

“ஒவ்வொருமுறையும் நான் வெளிநாடு எண்டு வெளிக்கிடேக்கை ஒரு கிழமைக்கு முதலே என்ர மனிசி வந்து பிள்ளையளோடை நிற்பா. இந்தமுறை பாதைப் பிரச்சினையாலை அதுவும் சரிப்பட்டு வராது.” – சற்குணம் கவலைப்பட்டார்.

“நானும் லொட்ஜிலைதானே சும்மா காசைக் குடுத்துக் கொண்டு நிக்கிறன். உங்களுக்குப் பிரச்சினை இல்லையெண்டால் நீங்கள் போனதுக்குப் பிறகு நான் இஞ்சை வந்து நிக்கிறன். ரமணன் கனடா போனதுக்குப் பிறகுதான் வீட்டை போவன்.” – மகேஸ்வரி.

கதைத்துக் கொண்டதன்படி வெளிநாடு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக, மகேஸ்வரியும் ரமணனும் சற்குணம் வீட்டில் முகாமிட்டனர். ரமணன் சாகித்தியாவைச் சுற்றிச் சுற்றி வர, அவள் மசிந்தி மசிந்தி ஒளித்துத் திரிந்தாள். பிறகு பிரிவு. பிரிவில் ஒரு கலக்கம். கண்ணீர்.

சிங்கப்பூரிற்கு சற்குணமும் ரமணனும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். சிங்கப்பூரிலும் ஒரே ஹோட்டலில்தான் தங்கி நின்றார்கள். அடுத்தகட்டம் நோக்கிப் புறப்படும்போது இருவரும் பிரிந்து கொண்டார்கள். நான்குமாதங்கள் தாய்லாந்தில் தவித்துவிட்டு ரமணன் கனடா போய் சேர்ந்தான். சற்குணம் நைரோபியில் திரும்பவும் தடக்கி நின்று கொண்டார். இந்தமுறையும் அவருக்கு பயணம் சரிப்பட்டு வரவில்லை.

ரமணன் கனடாவில் அகதிகள் வரிசையில் ஒன்றானான். சாகித்தியாவிற்கு ரெலிபோனில் தூது விட்டான். மகேஸ்வரி அவனுக்கொரு கடிதம் போட்டிருந்தாள். சாகித்தியா குடும்பத்தை பொறுப்பாகக் கவனிக்கக்கூடிய அருமையான பிள்ளை என்று அதில் வர்ணித்திருந்தாள். எதற்கும் சற்குணம் கனடா போய்ச் சேரட்டும் என்று முடித்திருந்தாள்.

சற்குணமும் அங்குமிங்குமாக இழுபறிப்பட்டு கடைசியில் கனடா போய்ச் சேர்ந்தார். ரமணன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோது ரெலிபோன் அலறியது. சற்குணம் ‘கார்ட் அற்றாக்’கினால் இறந்து போனார் என்ற செய்தி மறுமுனையிலிருந்து அவலமாக வந்தது. ரமணனே முன்னின்று செத்தவீட்டையும் நடத்த வேண்டியதாயிற்று.

“தம்பி! நல்ல காலமடா. இனிமேல்பட்டு சாகித்தியாவுக்கு ரெலிபோன் எடுத்துப் போடாதையடா. அதுகள் ஒரு விசர்க்குடும்பம். தகப்பன் செத்து இரண்டாம்நாளே பூசி மினுக்கிக் கொண்டு வேலைக்குப் போகிறாள். நான் இப்ப அவையோடை இல்லை. திரும்பவும் லொட்ஜிற்கு வந்திட்டன்” மகேஸ்வரி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ரெலிபோன் எடுத்தாள்.

“அம்மா, நீங்கள்தானே சாகித்தியா நல்ல பிள்ளை எண்டு சொன்னியள். இப்ப இப்பிடிச் சொல்லுறியள்” ஏக்கத்துடன் ரமணன் கேட்டான்.

“நீயும் கொஞ்சம் யோசிச்சுப் பார். உனக்கும் சுய அறிவு இருக்கு. பணம் இல்லாட்டி இந்தக் காலத்திலை ஒண்டும் செய்யேலாது. உனக்கும் ஒரு வயதுக்கு வந்த தங்கைச்சி இருக்கு. அந்தாள் உழைச்சு சீதனம் சீதனமாத் தரும் எண்டிருந்தன். இப்ப அவனும் செத்துப் போனான். நான் உனக்கு நல்ல சீதனத்தோடை பாக்கிறன். அங்கை கட்டு” சூறாவளி அடித்தது போல பேசி முடித்தாள் மகேஸ்வரி. ரமணன் என்ன சொல்லியும் மகேஸ்வரி சமாதானம் கொள்ளவில்லை.

ரமணன் சாகித்தியாவிற்கு ரெலிபோன் செய்தான். அவள் ரெலிபோனை அடித்து மூடிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவ்வளவிற்கு அங்கே மகேஸ்வரி நாடகம் நடித்துவிட்டுப் போய் விட்டாள். வீடு காணி நகை எல்லாவற்றையும் விற்று வெளிநாடு போய் இறந்த தந்தையை நினைத்து அழுதாள். வாழ்க்கையை நினைத்து பணம் தேடி வேலைக்குப் போனால் பூசி மினுக்குகின்றாள் என்று சொலின்றார்களே என வேதனைப்பட்டாள்.

ரமணனின் தாயார் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு யாழ்ப்பாணம் போய்விட்டாள். அவர்களின் கனவுகள் பூச்சூடாமலே போய்விடுமா?

- மார்ச் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது. "இந்தப் பிள்ளை சொல்வழி கேளாது. எல்லா 'லைற்'றையும் எரியவிட்டு வீட்டைத் ...
மேலும் கதையை படிக்க...
அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்? - ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன? - பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றேன். "என்ன எழும்பியாச்சுப் போல!" "இரவு முழுக்கப் பிள்ளை நித்திரை கொள்ள விடேல்லை!" "சரி போட்டு ...
மேலும் கதையை படிக்க...
தொலைபேசி இடைவிடாமல் அடித்தபடி இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம் என்ற நினைப்புடன் விழித்து எழுந்து கொண்டான் ராகவன். பகல் எல்லாம் பட்ட அலைச்சல் உடம்பை முறித்துப் போட்டு விட்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் மணி இரண்டு இருபது. "கனநேரமா ரெலிபோன் அடிக்குது. ஒருக்கா 'போனை' ...
மேலும் கதையை படிக்க...
“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் ...
மேலும் கதையை படிக்க...
தெருவிளக்கும் குப்பிவிளக்கும்
விருந்து
பறக்காத பறவைகள்
விலங்கு மனத்தால்
ஓரு கடிதத்தின் விலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)