கனவு மெய்பட வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 9,980 
 

மனதினுள் அடங்கி அதுவே தானாய் ஒருமுகப்பட்டு உறங்கும் நிலையில், அவர் இருந்த போது தான், எதிர்பாராத விதமாக அந்த விபரீத நிகழ்ச்சி நடந்தேறியது. அதன் முதற் தொடக்கமாக அழுகை குமுறி உச்ச கதி பிராணாவஸ்தையுடன் நிலை குலைந்து தன்வசமிழந்து சாரதா அவரை அழைக்கும் குரல், காற்றலைகளோடு கலந்து வந்து அவர் காதில் விழுந்த நிலையிலும் அவருக்கு விழிப்புத் தட்டவிலை.. அது அவரின் இயல்பு. வாழும் மனிதர்களிடையே, சலனப் பொறி கொண்டு அலைகிற துரும்பு மனமும் அதன் துருப்பிடித்த்ச் வாழ்க்கையையொட்டிய கறைகளும் முற்றாகவே விட்டொழிந்து போன உயிரின் தன்வசமாக இருக்கிற அவருக்கு அவள் அப்படி வந்து நிற்பது கூட மனதில் உறைக்கவில்லை,.ஆனால் அதற்கான காரணத்தையொட்டிய திடுக்கிடும் தகவல்களுக்கு அவர் முகம் கொடுக்கத் தொடங்கி இன்று நேற்றல்ல, ஒரு யுகம் போலாகிறது அந்தக் காலக் கணக்கு

துயரம் மிகுந்த அந்த நாட்களில் அதுவே பழக்கப்பட்டு வாழ்வாகிப் போன நிலையிலும்,. அவர் ஆட்டம் காணாமல் தன்வசமிழக்காமல் இன்று இருப்பது போல், என்றும் இருப்பது தான் அவருடைய சாசுவதமான ஞான நிலை. எதிலும் பங்கமுறாமல் ஆனந்தம் பொங்க இருப்ப. அது அவருடைய ஜீவன் முக்தி நிலை. அப்படி அவர் நிற்க நேர்ந்தாலும் புறப்பிரக்ஞையாய் வந்து, அமைதியான அவரது அக வாழ்க்கையின் உயிர்த்துவமான சந்தோஷக் களையையே அடியோடு கருவறுத்துக் கவிழ்த்து விட்டுப் போகின்ற, கொடிய காலாக்கினியின் தீச்சுவாலைக்குள் அவரும் சிக்க நேர்ந்த கொடுமையை என்னவென்று சொல்லி அழ

நாதியற்றுத் தெருவுக்கே வந்து விட்ட அகதிகளில் ஒருவர் போல அவரும் ஆக நேர்ந்த கலி முற்றிப் போன பாவங்களின் ஓர் உச்சக் கட்ட விதியின் சாபமாகவே,,அது அவர் தலையிலும் வந்து விழுந்தது. அப்படி அவரை விதி எழுதி மாற்றவே, திடுமென்று நேர்ந்த சாரதாவின் உயிர் பதற ஓடி வந்திருக்கும் இந்த நிழற் கோலம்

“அப்பா! கெதியிலை எழும்பி வெளிக்கிடுங்கோ சனங்களெல்லாம் றோட்டிலை மூட்டை முடிச்சுகளோடு, அள்ளுப்பட்டு ஓடுதுகள்.. இனி இஞ்சை நாங்கள் மட்டும் இருக்க ஏலுமே? கெதியிலை எழும்பி வாங்கோ போவம். கிட்டடியிலை ஆமி வந்திட்டாங்களாம்”

“அது தான் தெரியுதே” என்றவர் ஆழ்ந்த துக்கம் மேலிட்டவராய் இன்னும் அலைக்கழிகிற பாவப்பட்ட மனிதர்களின் விமோசனம் கருதி, உள்லார்ந்த கருணைச் சிலிர்ப்புடன் தனக்குள்ளே மனமுருகிப் பிராத்திக்கின்ற பாவனையில் எதையோ ஸ்லோகம் சொல்லியவாறு, தன்னிலை மறந்து அவருள் கனக்கின்ற அந்த மெளனத்தின் பொருளறியாது, தடம் தேடிக் களைத்துப் போன களைப்பு மேலீட்டினால் சாரதா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு விட்ட பின் , சிறிது நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் அவளே ,பதறிய குரலில் அவரைக் கேட்டாள்

“மந்திரம் சொல்லி உயிரைக் காப்பாற்ற முடியுமே> உடல் ஒன்று இருக்கல்லே அது உங்களுக்கும் இருக்குத் தானே அப்படி இருக்கிற உங்களை நான் காப்பாற்ற நினைக்கிறது கூடப் பிழை என்று சொல்லுவியளே? நான் மட்டும் தான் தனியனென்றால் எப்படியும் ஓடி மறைஞ்சிடுவன்.. உங்களை விட்டிட்டு, நான் மட்டும் எப்படிப் போறது? சொல்லுங்கோவப்பா”

அவளுக்கு அவரை விட்டால் வேறு நாதியில்லை அவருக்காகவே அவளது வாழ்க்கைத் தவம் கூட. அதனால் தான் முப்பது வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ள விரும்பாத, ஒரு கன்னித் தபஸ்வினி போல அவள் இருக்கிறாள்/. அவருக்கும் அது தெரியும் அதற்காக அவர் அவளோடு போராடியும் பார்த்து விட்டார். அவளுக்காகச் சீதனம் என்ற பெயரில் நிறையவே சொத்துக்கள் இருந்த [போதிலும் அவளது கல்யாணம் நிறைவேறாத வெறும் கனவாகவே இன்னும் இருக்கிறது. அவளுக்கு அவரே எல்லாமாக இருப்பதால், அவளின் சூழ்நிலை சார்பாக வரும் இந்த வேண்டுகோளுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று படவே மனதில் உறுதி செய்தவாறு, அவர் கூறினார்

“”வா போவம்”

சால்வையை உதறித் தோள் மீது போட்டவாறு, ராஜ நடை போட்டு ,இந்த மண்னை விட்டு வேரோடு கழன்று போக, அவரும் புறப்பட்டு அவள் காட்டிய வழியில் பின் தொடர்ந்து வரும் போது, அந்தக் கொடுமையை எண்ணித் தனக்குளேயே மனம் தாங்காமல் அழுது தீர்ப்பது போல் சாராதாவினுள் கனக்கின்ற மெளனம் அவரையும் சுட்டது.. இப்படிச் சுட்டெரிக்கிற வழிகளே வாழ்க்கையான பின், இதற்கு விமோசனம் பெறத் தானும் இப்படித் தீக்குளிப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று அவர் மனப் பூர்வமாக நம்பினார்.

சாராதாவின் நினைவுக்கெட்டியவரை அவரை மேலங்கி தரித்து பெருமையோடு உலாவும் ஒரு முழு மனிதனாக அவள் பார்த்ததிலை அதற்கான காரணத்தை அவர் கூறாவிட்டாலும் இப்போது இல்லாத அம்மாவின் வாயிலிருந்தே ஆவேசம் கொண்டு அவர் மேலங்கி கழற்றியெறிந்த உண்மையான காரணத்தை அவள் அறிய நேர்ந்தது. தமிழ் மீது மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் மீதும் அவர் கொண்டுள்ள ஆழமான அன்பின் வெளிப்பாடாகவே அதுவும் நேர்ந்தாய், அம்மா உணர்ச்சி புல்லரித்துக் கண் ககங்கியவாறே கூறியதைக் கேட்டு சாரதாவும் மனம் கரைந்து மெய் சிலிர்த்துப் போனாள்.. முதன் முதலாக மாற்றான் கையால் அடி வாங்கி மானமிழக்க நேர்ந்த தனது உயிரினும் மேலான தமிழ் சமூகத்தின் பொருட்டு மேலங்கியே போடுவத்ல்லையென்ற அவரின் உறுதி பூண்ட வைராக்கிய நிலை இன்று வரை மாறவில்லை. அப்படியொரு அப்பழுக்கற்ற நன்கு படித்துத் தேறிய ஒரு மகா புருஷனான அவருக்கே இந்தக் கதியென்றால் வாழ்வின் பளுவையே சுமந்து பழக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் பாவம், என்ன செய்வார்கள்?

மூட்டை முடிச்சுகள் கொண்டு எங்குதான் போவார்கள்? அப்படிப் போகிற அவர்களின் பின்னால் தான், அப்பாவும் நிழல் பிரிந்து எங்கெங்கோ சிதறி விழும் உயிர்த் துளிகளில் ஒன்று போலவே, அசல் எழுதிப் பிரிந்து வந்த அவர் நிலையும்.. அவருக்கு ஊரை விட்டுப் பிரிந்து வந்த துக்கம் மட்டுமல்ல . தனது கண் முன்னால் ,தன் சாதி மட்டுமல்ல முழு தேசமுமே ஒருவரையொருவர் கொன்று தீர்க்கும் போர் வெறியிலகப்பட்டுக் குடி முழுகிப் போய்க் கொண்டிருப்பதற்காகவுமே. அவர் கொண்டிருக்கிற மிகப் பெரிய மன வருத்தம். ஊரிலென்றால் அவர் அப்படியே மனக் கவலை கொள்ள நேர்ந்தாலும் அதைச் சாந்திப்படுத்தத் தினமும் காலை மாலை, இரு வேளைகளிலும் அவர் கோவிலுக்குப் போய் வழிபாடு செய்யத் தவறுவதில்லை அந்தக் கோவிலுக்கு அவரே தர்மகர்த்தாவாக இருக்கிறார்

அந்தி மயங்கும் வேளையில் கோவில் பூசை நடக்கும் போது, வெளியே வாசல் தூணருகே அமர்ந்தவாறு, வட மொழியில் தமக்கு இசைவாகச் ஸ்லோகம் சொல்லியவாறே கண்ணை மூடியவாறு மெய்மறந்து அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலே மனம் புல்லரித்து போகும்.. வாழ்வின் கட்டுக்களிலிருந்து கழன்று போக அது ஒரு வழி இப்போது அந்த வழியும் முற்றாகத் தடைப்பட்டுப் போய் காடு வெறித்த மண்../ அதில் நிழல் விட்டு மறைந்து போகும் மனிதர்கள்.. அவர்களில் ஒருவர் போலவே வீடு வாசல் எல்லாம் இழந்து தெருவே கதியென்று வந்து விட்ட அப்பாவின் நிலையும்.. இனி ஒரு நிலையான இருப்பிடம் தேடி எங்கு தான் போவது?

எல்லாம் காடு வெறித்த மண் தான், கதிகலங்க அடிக்கும் போர் வெறி தான். இப்படிப் பற்றியெரிகிற, பெரு நெருப்பு என்று தான் தணியுமோ? அவருக்கு அதுவே தாகமாய் நெஞ்சை அடைத்தது.. அவரின் இந்தத் துயர வெள்ளத்தில் அகப்பட்டுச் சாரதாவும் மூச்சுத் திணறிய போதிலும், வாழ்வுக்காக இடம் தேடியலையும், அவளது ஒவ்வொரு கணமும் நரகப் பொழுதாகவே கழிந்தது

கடைசியில் எப்படியோ ஓரளவுக்காவது அவர்கள் நிம்மதியாக மூச்சு விட ஒரு சின்ன இடம்.. எங்கோ திசை தெரியாத ஒரு மூலையில், இதுவரை அறியாத மூளாய் நகரம் தான், இரு கரம் கூப்பி அவர்களை வா என்று அழைத்தது.. அவர்களின் ஏழெட்டுப் பரப்பளவைக் கொண், மிக விஸ்தாரமான பெரிய வீடு போலன்றி,இரு அறைகளுடன் கூடிய ஒரு சிறிய வீடு தான் இப்போது அவர்களின் வாழ்விடம் . இதில் ஒன்றாகவே மூன்று குடும்பங்கள்.. நிவாரணப் பொதி கிடைப்பதால், பசி அடங்க ஒரு வேளையாவது நிம்மதியாகச் சாப்பிட முடிகிறது. அப்பாவுக்கு வருகிற பென்ஷனும் நின்று போய் விட்டது. நல்ல வேளை.. இதையெல்லாம் தாண்டி, இவ்வளவு கஷ்ட சூழ்நிலையிலும் அப்பாவின் கோவில் வழிபாடு நடக்கப் பக்கத்திலே ஒரு கோவிலும் இருந்தது அதுவும் பிள்ளையார் கோவில். அப்பாவின் இஷ்ட தெய்வம்.. இக்கோவிலையே காவல் செய்கிற மாதிரி, இராணுவ முகாம், அருகில் நிலை கொண்டிருப்பதாக முதன் முதலாகக் கோவிலைப் பார்த்து விட்டு அப்பா வந்து சொன்ன போது சாரதா பதறிப் போனாள்.

அது அருகிலிருப்பதால் பயம் விட்டுப்,போகாதென்பதை அவள் நன்றாகவே அறிவாள், ஒரு சிறு நெருப்பு மூண்டாலே போதும்..எல்லாமே பற்றியெரியும்.. அப்படி எரிந்தாலும் இனி வேறு போக்கிடமில்லை, .நடப்பது நடக்கட்டும். இதனால் அப்பா. தினமும் கோவிலுக்குப்போய் வருவது இன்றும் தடைப்பட்டுப் போகவில்லை.. அவர்கள்……..அந்தத் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பயந்து, அவர் கோவிலுக்குப் போய் வருவதைத் தவிர்த்து கொண்டு வீட்டிலேயே அடைந்து கிடப்பார் என்று சான்று பூர்வமாக அவளுக்கு நம்பிக்கை வரவில்லை..ஏனென்றால் அப்பாவைப் பொறுத்தவரை மரணபயமே விட்டொழிந்து போன பூரண ஆத்மஞானம் கை கூடிய ஒரு மகான் போலிருக்கிற அவருக்கு இப்படியான போரினால் வருகின்ற நெருக்கடிகள் கூடப் பயத்தைக் கொடுப்பதில்லை. பளிங்கு போல எதையும் தீர்க்கமாகவே பார்க்கிற ஆழ்ந்த நோக்கு அவருடையது. சாரதா அவரை நம்பினாள் சகஜமாகவே அவர் கோவிலுக்குப் போய் வருவது கண் கொள்ளாக் காட்சியாகவே இருக்கும் இதுவே அவரைத் திசை திருப்பி விடும் என்று அவள் கண்டாளா?

அவர்கள் வீட்டிற்கு நல்ல தண்ணீர் எடுப்பதற்காக, சீருடை அணிந்த ஓர் இராணுவ இளைஞன், பிளாஸ்ரிக் கான் எடுத்துக் கொண்டு தவறாது வந்து போவான். அவன் பெயர் அனுரா என்று அப்பாவுக்கு எப்படித் தான் தெரிந்ததோ? அவன் அப்படி வருகிற சமயங்களில் ,அவர் சகஜமாக நின்று முகம் மலர்ந்த சிரிப்போடு , ஆங்கிலத்தில் அவனோடு நிறையவே மனம் விட்டுப் பேசுவார். முன்பு கல்லூரி அதிபராக இருந்த அனுபவம் அவருக்கு. ஆங்கிலம் சரளமாக வரும். அவனும் வரும்போது நெருங்கிய உறவு பாவத்துடன் அவரை அன்பொழுக அப்பா என்று அழைத்தபடியே தான் வருவான் .அதில் இன வேறுபாடுகள் கடந்த ஒரு மேலான அன்பின் சுவடு விட்டுப் போகாத பாச உணர்ச்சியே குழைந்து வருவது போல் சாரதாவுகு உணர்வு தட்டும் . அது அப்பாவை ஏமாற்றுகிற வெறும், நடிப்பாகக் கூட இருக்கலாம். யார் கண்டது?

ஒரு நாள் அவள் சற்றும் எதிர்பாராதவிதமாக, இன்னுமொரு சம்பவம் அப்பாவை மையமாக வைத்து அரங்கேறியது. அது வேறொன்றுமில்லை அவர்களோடு சேர்ந்து அவர் செய்த அந்தப் பயணம் தான்,., கடைசித் தடவையாக அவள் முகம் கொடுக்க நேர்ந்த பெரும் சவாலாய் அவளை வதைத்தது .வருந்தி அழ வைத்த்தது.

அவள் நிம்மதியாக, அறைக்குள் படுத்திருந்த ஒரு மாலை நேரம். வெளியே அனுராவின் குரல் கேட்டு, விழிப்புத் தட்டியவளாய்,, வாசலுக்கு வந்து பார்த்த போது,, சீருடையும் தோளில் சுமந்த துப்பாக்கியுமாய் , அனுரா அவசர நிலையில் நின்று கொண்டிருந்தான்…அவன் குரல் கனம் மாறாமல் மறுபடியும் கேட்டது.

“அப்பா! ரோந்து சுற்றப் போறம்… எங்களோடு வாறியளே? ஊர் பார்க்கப் போக வேணுமென்று சொன்னியளே. கெதியிலை வெளிக்கிட்டு வாங்கோ”. என்றான் அரை குறை ஆங்கிலத்தில்

விறாந்தையில் நின்றிருந்த அப்பாவின் முகம் மலர்ச்சி கண்டது அவர்களோடு ஒன்றாக ஜீப்பில் பயணிக்க அவர் தயாராகிப் போகப் புறப்படும் போது, சாரதா மனம் நிலை கொள்லாமல் படியருகே நின்று அவரை வழி மறித்தபடியே அழுகை குழம்பிக் கேட்டாள்

“அங்கை இனிப் பார்க்க என்ன இருக்கு?”

“நான் ஒன்றும் ஊர் பார்க்கப் போகேலை என்ரை கோவிலைப் பார்க்கத்தான் போறன்”

“அது இருக்கும். நீங்கள் ஒன்றும் இவன்களோடு போக வேண்டாம். .நான் பயத்திலை செத்துப் போடுவன்.”அதுவும் ஆரும் பார்த்தால் என்ன சொல்லுவினம்?””

“இப்படிப் பயந்தால் குடி முழுகிப் போன மாதிரித் தான் நீ நினைக்கிற மாதிரி ஒன்றுமே நடக்காது. என்ரை பிள்ளைகள் மாதிரி அவன்கள். நான் போட்டு வாறன்”

வெறும் நாலுமுழ வேட்டியோடு அவர் அனுராவோடு புற்ப்பட்டு விட்டார்,

அவரைப் பொறுத்தவரை ,இப்படியான பேதங்களையெல்லாம் கடந்த ஒரேயொரு இலட்சியக் கனவு மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. இந்தத் தேசம் முழுமையான மறு மலர்ச்சி கண்டு, வாழ வேண்டுமென்ற, அவரின் அந்த லட்சியக் கனவு ஈடேறவே, இப்படி பயணம் செய்ய அவர் துணிந்தாரோ தெரியவில்லை., போகட்டும் என்று அப்படியே புறம் தள்ளி விடவும் முடியவில்லை.சாரதாவினால். .அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. அப்பா அவர்களோடு ஜீப்பில் பயணம் செய்வது மங்கலான ஒரு நிழல் காட்சி போல் அவள் கண்களை உறுத்திற்று அந்த மங்கித் தெறித்த இருளினூடே,ஒன்றும் அவளுக்குப் புலனாகவில்லை… வெகு நேரமாய் நிலை அழிந்து போய்,,அவ்ள் வாசலிலேயே அவரை எதிர்பார்த்து, மனம் கனக்க நின்று கொண்டிருந்தாள்.

அவர் திரும்பி வர வெகு நேரம் பிடித்தது.. முற்றாக இருள் சூழ்ந்து கண்ணை மறைக்கிறது.. வீட்டினுள் கொளுத்துவதற்கு முகம் கறுத்த எல்லோர் கைகளிலும் ஜாம் போத்தலில் எரியும் தேங்காய் எண்ணெய் விளக்குகள் தாம். . இது விட்டு விட்டு எரியும் மெல்லிய ஒளித் துளிகள் போல அவள் கண்களிலும் நிழல் கொண்டு தெறித்தது.. இது அவர்களின் வாழ்வை மூடியிருக்கும் இருள் விலகப் போதாதென்றே பட்டது. இது மாறி வாழ்வு முழுமையாக ஒளி பெற வேண்டுமானால்., உண்மையான நேர்மையான. வழிகளில் வரக் கூடிய, உயிர்த் தியாகமே அவசியமென்று படுகையில் அப்பாவுக்கும் அது பொருந்துமென்று பட்டது..

அவர் திரும்பி வரும் போது இரவு பத்து மணிக்கு மேலிருக்கும் நல்லபடியாக அவள் நினைத்தது போல் ஒன்றும் நடக்காமல் அவர் மிகவும் செளக்கியமாக வந்து சேர்ந்ததற்கு அடையாளமாக, வாசலில், அவர்களின் ஜீப்,. அதை விட்டு அவர் கீழிறங்கும் போது, இறக்கி விட ஆதரவாக அவரை அணைத்துக் கொண்டு தெய்வகதியாக இரு கைச் சுவடுகள். சாரதா வசலுக்கு ஓடி வந்து அதை நேரிலேயே கண்டாள்

எங்கோவிருந்து முகம் தெரியாமல் வந்து சேர்ந்த, அனுரா என்ற அந்த இராணுவ வீரனே, அப்பாவை அப்படிக் கை தூக்கி அரவணைத்து இறக்கி விட்ட, பேரன்புக்குப் பாத்திரமான ஓர் இலட்சிய இளைஞன் என்பதை நிதர்ஸனமாக நேரில் பார்த்த சாரதா அப்படியே புல்லரித்துப் போனாள். அவன் இப்படி ஓர் அன்பு நெறியாளனாக மாறி, அப்பாவுக்கு அடிபணிந்து சேவையாற்றியது, ந்ம்பவே முடியாத ஒரு பொய்யான பகற் கனவு போல் பட்டாலும்., அப்பாவையே இதற்கொரு உதாரண புருஷனாய், அன்பினால் வென்றெடுக்கக் கூடிய ஒரு சத்திய தரிசனமாய், நேரில் காணும் போது,, இதை எப்படிப் பொய்யென்று நம்புவது? உண்மை தான்

இன்றைய அசாதாரண சூழலில் உயிர் தின்னும் கறைகளாகவே வந்து, மனிதனைப் பாதி மனிதனாக வெறும் நடைப் பிணமாகச் சாகடித்து விட்டுப் போகும் நிலையில், அன்புக்கு முகம் கொடுத்து, இதை மாற்ற வேண்டுமென்ற தீவிர இலட்சிய வேட்ட்கையுடன், , அப்பா அவர்கள் ஜீப்பில் ஏறிப் பயணித்து விட்டு வந்ததன் விளைவாகவே,, அனுராவின் இந்த மனமாற்றமும் கூட, என்று நினைக்கும் போது சாரதாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.. அந்த உணர்ச்சி மேலீட்டினால் அப்பாவை நேர் கொண்டு பார்க்கவே அவள் மனம் கூசினாள். ,அவரைத் தவறாக நினைத்ததற்காகத் தன்னையே நொந்து கொண்டு நிலை வாசலருகே நின்றவாறு அவரை எதிர் கொண்ட போது, குரல் கனிந்து அவர் கேட்டார்

“சாரதா! நீ பயந்த மாதிரி ஒன்றுமே நடக்கேலை. இப்ப உனக்குச் சந்தோஷம் தானே. இவர்களும் என்ரை பிள்ளைகளாய், இருக்கும் வரை பயப்படவோ, பகை சாதிக்கவோ என்ன இருக்கு? எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறும்/ இவர்களோடு நான் ஊர் பார்க்க மட்டுமல்ல, கோவில் பார்க்கவும் தான் போனேன்…அங்கை சண்டைத் தடங்கள் இன்னும் ஓயேலை.,அதனாலை தூர ந்ன்று தான் பார்க்க முடிஞ்சுது” என்றார் சிறிது மனவருத்தத்தோடு. அவரது அந்த மன வருத்தம் அவளிலும் பிடிபடுகிற மாதிரி,, அவள் முகம் திடீரென்று வாடிப் போனது.. அதைச் சுதாரித்துக் கொண்டு,குரல் வரண்டு அவள் கேட்டாள்.

“அப்பா! இது எப்ப மாறும்?”

“நிலைமை சீராக எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியேலை. எனக்கு இது தான் கனவாக இருக்கு. என்ரை முழு தேசமுமே இருள் விலகி வெளிச்சம் காண வேணும்..பரஸ்பரம் பகை நீங்கிய அன்பில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேணும்.. அப்படி வாழ்ந்தாலே இந்தத் தேசம் செழிக்கும். செழிக்க வேணும்”

அவர் இதைச் சொல்லி விட்டு இதற்காக மானஸீகமாக உயிர் கரைந்து பிராத்திப்பது போலக் கண்ணை மூடிக் கொண்டார்..அப்போதல்ல எப்பொழுதுமே அவர் நெஞ்சில் கனல் விட்டெரிகிற துயரத்தீ அது தான். அது அவரின் அப்பழுக்கற்ற, தெய்வ. சாந்தியான முகத்தையே கனல் கொண்டு எரிக்கிற நிலையில் அதுவும் கறுத்து அழுது வடிவது போல அவளுக்கு உணர்ச்சி தட்டிற்று.. அதற்காக அவர் காலடியில் விழுந்து கதறியழ வேண்டும் போல் , அவளுக்கு ஆவேசம் வந்தாலும்,,அவள் சிரமப்பட்டுத் தன்னைஅடக்கியவாறே, அவரைத் தேற்றுவது போல மனம் நெகிழ்ந்து போய்ச் சொன்னாள்

“நிச்சயம் செழிக்கும்”

அப்படிப் பெறக்கூடிய செழிப்பும்,அவர் ஆழமாக விரும்பி நிற்கிற உயிரோட்டமான ,வாழ்க்கை நிலையும் பணத்தினால் பெறக் கூடிய ஒன்றல்ல.. அப்பா நம்புவது போல் பரஸ்பரம் ஒருவரையொருவர் நேசிக்கத் தெரிந்த ,பூரணமான அன்பு வேள்வி ஒன்றை நிலை நிறுத்துவதன் மூலமே ,இது கை கூடும்…அப்பாவின் கனவும் மெய்யாகும்..

– மல்லிகை 2010

.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *