கனவுகளின் மதிப்பெண்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 12,496 
 

இப்போது எல்லாம் இது மாதிரி ஓடுகள் உள்ள கூரையைப் பார்க்க முடியாது. வெள்ளைக்காரன் இந்தியா வுக்கு டாட்டா சொல்லும் முன், கட்டி விட்டுப்போன கட்டடம். அதன் பெரிய சிமென்ட் தூண்களும் மர உத்தரங்களும் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். அருகில் மரங் கள், புல்வெளிகள், மைதானம். மழை பெய்கிற தினங்களில் இவற்றின் ஒட்டு மொத்தக் காட்சி பன் மடங்கு அழகாகி விடும்.

இன்றும் அப்படி ஒரு தினம். லேசான சாரல். மெலிதான குளிர். இந்தச் சூழலில் நீண்ட ஹால்களில் நடப்பது இன்னும் சந்தோஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், யாரிடமும் இல்லை. யாரும் ரசிக்காத மழை, கண்ணீருடன் பெய்தது. அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று எங்களுக்கு ப்ளஸ் டூ பரீட்சை. இயற்பியல்.

மாணவர்களும் மாணவிகளும் கையில் நோட்ஸ்களோடும் புத்தகங்களோடும் கிடைத்த இடத்தில் அமர்ந்து இருந்தனர். புரட்டிக்கொண்டு இருந்தார்கள் சிலர்; படித்துக்கொண்டு இருந்தார்கள் சிலர்; படிக்க முயன்றுகொண்டு இருந்தார்கள் சிலர். படிப்பதில் ஈடுபட்டு இருந்த சிலருடைய வெறித்தனமான முயற்சிகள் தந்த முக பாவங்கள் எனக்குப் பீதியைத் தந்தன. அவர் கள் அருகிலேயே போக அஞ்சி, ஓரமாக நகர்ந்தேன். இவர்களின் பக்கத்தில் சென்றால், இந்தக் கேள்வி படித்தாயா? இது இல்லாமல் கொஸ்டீன் பேப்பரே இல்லை… என்றெல் லாம் தகவல்கள் கிடைக்கும். கடைசி நேர வதந்திகளை நம்புவது நல்லது அல்ல.

KanavugalinMathi1

மகேஸ்வரி வந்தாள். தனது இடது கையின் விரல் இடைவெளிகளுக்குள் – அதாவது, சுண்டு விரலுக்கும் மோதிர விரலுக்கும் நடுவே ஒரு ஸ்கெட்ச்; மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே ஒரு ஸ்கெட்ச்; நடுவிரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடுவே ஒரு ஸ்கெட்ச் என விதவிதமாகச் செருகி, அவற்றை ஆயத்த நிலையில் வைத்திருப்பாள். வலது கையால் வேகமாக எழுதுபவள், திடீரென ஒரு ஸ்கெட்ச்சை உருவி அடிக்கோடு இட்டு, மின்னல் வேகத்தில் திரும்ப அதே இடத்தில் செருகிவிடுவாள். டெஸ்க்கில் இருந்து எடுக்க அவளுக்கு நேரம் இல்லையாம். தேர்வுக் கண்காணிப்பாளர்களே அவளுடைய இந்த வித்தையைக் கண்டு மிரண்ட கதைகள் உண்டு. என்னைப் போன்றோர் எல்லாம் கேள்விகளைப் படித்து, முதல் வரி எழுதுவதற்குள் இரண்டாவது பக்கத்தை முடித்து, அதைப் பார்க்கிற எல்லோருக்கும் பெருந்துயரை அளிப்பாள் மகேஸ்வரி.

என்னைக் கடந்த மகேஸ்வரி ”வெங்கி, எப்படிப் பிரிப்பேர் பண்ணியிருக்க?” என்றாள்.

”ஏதோ…” என்றேன்.

”நான்கூட சரியாவே படிக்கல…” என்றாள்.

பொய்.

மகேஸ்வரியின் வீடு என் வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறது. காலையில் எழுவதா, வேண்டாமா என்று நான் படுக்கையில் புரண்டுகொண்டு இருக்கிறபோதே, அவளு டைய படிப்புச் சத்தம் காற்றில் மிதந்து வரும். இன்று அக்கம் பக்கத்தினர்எல்லோ ராலும் நியூட்டனின் விதிகளையும் திருக் குற்றாலத்தின் அழகையும் தாயுமானவரின் பராபரக் கண்ணிகளையும் சில வேதியியல் சமன்பாடுகளையும் தவளையின் இனப் பெருக்க உறுப்புகளையும் நன்கு விளக்கிக் கூற முடியும்.

அந்தப் படிப்பொலியைக் கேட்கும் எனக்கு, ‘இப்படிப்பட்டவளுடன் போட்டி யிட்டு நான் எங்கே முதல் மதிப்பெண் பெறப்போகிறேன்’ என்ற கவலையும் ‘இப்படிச் சோம்பிக்கிடக்கிறோமே’ என்ற குற்ற உணர்வும் ஏற்பட்டுவிடும். இப்போது என்றில்லை – நான்காம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே தன்னுடைய உரத்த குரலாலும் உருப்போடும் திறமையாலும் அவள் எப்படிப்பட்ட படிப்பாளியையும் கலங்கடித்துவருகிறாள். பெண்கள் பீதி யூட்டுவதில் வல்லவர்களாகவே இருக் கிறார்கள்… என்றைக்குமே.

நன்றாகப் படிப்பதாகக் காட்டிக்கொள் ளும் மாணவியின் வீட்டுக்கு அருகில் வசிக்க நேர்வதுகூட ஒரு சாபம்தான்.

சும்மாவே என் தாத்தா ‘கல்விதான் நம் சொத்து’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ”நேற்று வரை இவர் பணக்கார ராக இருந்தார்; இன்று ஏழையாகிவிட்டார் என்று ஒருவரைப் பார்த்துச் சொல்லலாம். ஆனால், இவர் நேற்று வரை எம்.எஸ்சி. படித்திருந்தார். காலம் செய்த கோலம், பாவம்… இன்று வெறும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார் என்று நம்மால் எவரையும் பார்த்துச் சொல்ல முடியாது. ஆகவே, கல்வி யின் சிறப்பு அழிவில்லாதது…” என்றெல்லாம் விளக்குவார். மகேஸ்வரியின் கூக்குரல் மற்றும் ஓலங்கள் எங்கே தன் பேரனைப் பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்று கவலைப்பட்ட தாத்தா, ”ஹைட்ரஜனின் ஐஸோடோப்புகளான புரோட்டியம், டியுட்ரியம், டிரிட்டியம் பத்தி எல்லாம் நீ இன்னும் படிக்கவே இல்லியே வெங்கி…” என்பார்.

நான் எப்படி பள்ளிக்கூட மரங்களையும் மழையில் நனைகிற ஓடுகளையும் ரசிக்க முடியும்? மார்க்… மார்க்… மேலும் மேலும் மார்க்! மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களுக் குத்தான் பள்ளிக்கூடத்தில் வரவேற்பு என்பது தெரிந்துவிட்ட பிறகு, நானும் என் மெமரி கார்டின் திறனைக் கூட்டிக்கொள்ளத்தானே வேண்டும்?

அரை மார்க் குறைந்தாலும் ஆயுளுக்கும் சிரமம் என போதிக்கப்பட்டதில், பள்ளி வளாகம் முழுக்க மதிப்பெண்களுக்கான அலறல்கள். எந்தத் திசையில், எந்த மாணவரை நோக்கினாலும் புத்தக வரிகள் வாய் வழியாக வும் கண் வழியாகவும் உள்ளிறங்கிக்கொண்டு இருந்தன. என்றாலும், அனைவரும் பரசுராம ரின், ‘நீ கற்ற வித்தை யாவும் தேவைப்படும் நேரத்தில் மறந்துபோகும்’ என்ற சாபத்தைத் தாங்கியவர்களாகத் தென்பட்டார்கள்.

எங்கும் கடைசிக்கட்ட பிரசாரம் தீவிரம் அடைந்துகொண்டு இருந்தது. அப்போது ராஜனைப் பார்த்தேன். படிப்பதற்கே படைக் கப்பட்டு இருந்த அவனுடைய விழிகள் ஓர் அசட்டுக் கண்ணாடிக்குள் இருந்தன. அவனு டைய அப்பா அவனை அதிகாலை நாலரை மணிக்கே எழுப்பிவிடுவார். ஐந்து மணிக்கு டியூஷன் சென்றுவிடுவான். அவன் நல்ல மதிப்பெண்களைக் கொய்துவரும் பொருட்டு, அவனுடைய குடும்பமே உயிர்க் கொலையை விடுத்து, உயர்தர சைவத்துக்கு மாறி உள்ளது. என்னைப் பார்த்ததும் ”ஸ்டேட் லெவல் லட்சியம்… ஸ்கூல் ஃபர்ஸ்ட் நிச்சயம்” என்றான். நான் பீதி அடைந்தேன்.

மதிப்பெண் பெறும் இயந்திரம் ஒன்று சலனம் இன்றிக் கடந்து சென்றது. விமலா வேறு பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தாள். இவளைப் பள்ளி நிர்வாகம் கவர்ந்து வந்துள்ளது. கட்டணம் இன்றி டியூஷன் ஏற்பாடுகள், செய்தித்தாளுக்குக் கொடுப்பதற் காக இப்போதே அவளுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் தயார் நிலையில் இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவளுடைய வீட்டைத் தாண்டிச் செல்லும்போது ஒரே லப… லப… சத்தங்கள். நான் அந்தத் தெருவில் நுழைவதே இல்லை.

எங்கும் பரபரப்பு… அழுத்தம். வினாத்தாளை நெஞ்சோடு அணைத்துச் செல்லும் ஆசிரியை ரகசியச் சிரிப்போடு செல்வதாகப்பட்டது.

போர்க்களம் தயாராகிவிட்டது. வீரர்களும் வீராங்கனைகளும் அணிவகுத்து நிற்கின்றனர். வெள்ளை நிறத்தில் ஒரு யுத்த களம். துவங்கி விட்டது மனப்பாடப் பந்தயம்.

வினாத்தாள் வழங்கப்பட்டதும் தூக்கிவாரிப் போடுகிறது எனக்கு. நான் படித்திருப்பது இயற்பியல், கொஸ்டீன் பேப்பர் வழங்கப்பட்டதோ கணக்குப் பாடத்துக்கு.

பதறிப்போய் கண்காணிப்பாளரிடம் ”சார், இன்னிக்கு இந்தப் பரீட்சையே இல்ல… இயற்பியல்…” என்றேன்.

”யார் சொன்னது? இன்னிக்கு மேத்ஸ். முதல்ல டைம் டேபிளைப் பாரு…”

KanavugalinMathi2

”எனக்கு நல்லாத் தெரியும் சார்… இன்னிக்கு கணக்கு கிடையவே கிடையாது… இது எப்படிச் சாத்தியம்? எங்கோ தவறு நடந்திருக்கிறது. வரலாறு காணாத சதி. விமலா இயற் பியல் என்றுதானே சொன்னாள்?”

”நான் எப்ப சொன்னேன்? இன்னிக்கு மேத்ஸ்.”

ராஜனைப் பார்த்தேன். கணக்கு என்று சொல்லக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ”டிஸ்டர்ப் பண்ணாத.”

நொறுங்கிப்போனேன். என் பரிதாப நிலையைப் பார்த்து ஹாலில் இருந்த எல்லோருக்கும் சிரிக்க ஆசை தான். ஆனால், அந்த நேரம் வீணாகி விடும் என்பதால், சிரத்தையுடன் மதிப்பெண்களைச் சேகரிக்கத் துவங்குகிறார்கள்.

நான் அழத் துவங்குகிறேன். திடீரென எப்படிக் கணக்குப் போட முடியும்? அப்படியே எழுதினாலும், மிஞ்சிப்போனால் பாஸாக முடியும். அந்த மார்க்கை வைத்துக்கொண்டு அட்மிஷன் கேட்கப்போனால்,

கல்லூரியின் கேட் கீப்பரே ஏளன மாகச் சிரிப்பான். தவிர, நான் தேர்வு எழுதுவதைப் பார்க்க என் குடும்பமே மாயரூபத்தில் என் பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிறது. அவர்கள் எப்படி என் பொறுப்பின்மையைச் சகித்துக்கொள்வார்கள்? கடவுளே, டைம் டேபிளைச் சரியாகப் பார்த்துத் தொலைத்திருக்க மாட்டேனா?

”சார், இவனை வெளிய தள்ளுங்க. அழுகையைச் சகிக்க முடியல…” என்றாள் மகேஸ்வரி.

மழையில் வெளியே தள்ளப்பட, கதறினேன். உடலெங்கும் ஈரம் தாக்கியது.

”சார்… சார்… ம்மா… ஹா… ஹா… ஹா…”

”என்னங்க ஆச்சு… ஏன் அலர்றீங்க? கனவு ஏதாவது கண்டீங்களா?” என்று ஆதரவாகத் தொட்டாள் என் மனைவி.

ஒரு நொடியில் உலகம் மாறியது. இன்பத்தில் சிறந்த இன்பம் கெட்ட கனவு ஒன்றில் ஏறக்குறைய செத்து, பின்னர் அது கனவு என்று அறிந்து பெருமூச்சுவிடுவதே.

என் நாற்பதாவது வயதிலும் என்னுள் இதுபோல் ஒரு பரீட்சைக் கனவு சுரக்கிறது. எப்போதோ ஏற்பட்ட பரீட்சைக் காய்ச்ச லுக்குக் காரணமான கிருமிகள் இன்னும் சாகவில்லை என்றால் என்ன செய்ய? மதிப் பெண் முறையைக் கண்டுபிடித்தவனை நரகத்தில் இருந்து விடுவித்து இருப்பார்கள் என்று தோன்றவில்லை.

இன்றைய உலகில் மன அழுத்தத்துக்கு மருந்து கிடைக்கிறது. காரணம், இந்த உலகம்தான் அந்த நோயையே உருவாக்கிவைத்துஇருக்கிறது. ஒரு நோயாளியைக் குறைக்கும் பொருட்டு, ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகனை இதுவரை நான் பரீட்சை பூதத்திடம் பிடித்துக் கொடுக்கவே இல்லை. ஆனால், வகுப்பறையில் இருந்து மதிப்பெண்கள்

விடுதலை ஆகாத வரையில், அவனே அவனை எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ள மாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தூக்கம் வரவில்லை. கனவை மீள் ஆய்வு செய்வது வேடிக்கையாக இருந்தது. விமலா, எனக்கு இரண்டு வருடம் சீனியர். இப்போது பேராசிரியை. இப்போதும் அவளுடைய தெருவில் படிப்புச் சத்தம். காரணம், அவள் மகள்.

மகேஸ்வரி என் க்ளாஸ்மேட்தான். எந்த போட்டித் தேர்விலும் அவளால் அற்புதங் களை நிகழ்த்த முடியவில்லை. அப்ளிகேஷன் வாங்கிக் குவித்த கணவனுக்கு ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு, ”நீ குடும்பத் தலைவியாகவே ஜொலி…” என்று கூறிவிட்டான். மகேஸ்வரியின் படிப்பொலி இன்னும் காதுகளில் இருக்கிறது. ராஜன், என் ஹவுஸ் ஓனர் மகன். பொறியிய லில் இறுதி ஆண்டு. என்னைவிட இருபது வயது சிறியவன். எல்லோரும் ஒரே கனவில் நுழைந்திருக்கிறோம்.

என் நாற்பது வயதில், இதுவரை எத்தனையோ முறை என் மூளையின் சந்துபொந்துகளில் சிக்குண்டு இருக்கும் ஃபைல்களின் பாஸ்வேர்டுகளைக் கனவுகளின் கரங்கள் திடீரென உபயோகித்துவிட்டு இருக்கின்றன. சம்பந்தமே இல்லாத தருணங்களில்… தேவையே இல்லாத பொழுதுகளில்… பூகம்பமோ, சுனாமியோ, பன்றிக் காய்ச்சலோ, இரு சக்கர – முச்சக்கர – நாற்சக்கர வாகன விபத்துகளோ ஏற்படாத வரையில் இன்னும் முப்பது வருடங்கள் உயிரோடு இருப்பேன் என்று வைத்துக்கொண்டாலும், அந்த வருடங்களில் பரீட்சை அன்று, கை ஒடிந்து நிற்கிற கனவு கள் வரவே வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்படித்தான் கடந்த காலக் கனவொன்றில், நான் கல்லூரியில் அமர்ந்திருக்கிறேன். பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஜோசப் வாத்தி யார் வருகிறார். மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களில் பழுது ஏற்படுவதை அவரால் நொடிப்பொழுதுகூடச் சகிக்க இயலாது. பிரம்பை மேலே உயர்த்துவது தான் தெரியும். காற்று கிழிபடும். எப்போது பிரம்பு கீழிறங்கியது என்பதை யாராலும் கூற இயலாது. மாணவர்கள் ‘ஸ்… ஆ…’ என்று கையை உதறுவதையே அனைவரும் காண்பர்.

மாணவிகளுக்கும் எவ்விதச் சலுகையும் கிடையாது. அவர்களுக்கும் ஐம்பது சத விகித அடி ஒதுக்கீடு உண்டு. பிரம்பு உற்பத்தியாளர்கள் பாராட்டு விழா நடத்திய விவரம் தெரியவில்லை.

அவர் பாடம் நடத்துவார் என எதிர்பார்த்தால், ‘இன்று எக்ஸாம்’ என்கிறார். பள்ளி ஆசிரியர், கல்லூரியில் எப்படிப் பாடம் எடுக்க முடியும்? அப்படியே எடுத் தாலும், எப்படித் திடீரென எக்ஸாம் என்று அறிவிக்க முடியும்? முன்கூட்டியே தெரிவிக்க வேண்டாமா என்றெல்லாம் வாதிடுகிறேன். பலன் இல்லை.

ஜோசப் வாத்தியார் கையை நீட்ட – பிரம்பை ஆர்வமுடன் எடுத்துத் தருவதற்கு என்றே சில மாணவர்கள் இருப்பார்கள் – பிரம்பு வழங்கப்படுகிறது. பிறகென்ன, பெருந் துன்பம், தூக்கம் கலைதல், திருதிரு என விழித்தல், பின்னர் பேரின்பம். அப்பாடா, நான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன்.

இன்னொரு நாள் பரீட்சை எழுதப் போகும்போது போக்குவரத்து நெரிசல். மீண்டு ஹாலுக்குள் செல்லும்போது, என்னை உள்ளே விட மறுக்கிறார்கள். ஐயோ, என் மதிப்பெண்கள்… ”என்னை எக்ஸாம் எழுதவிடுங்க. இல்லேன்னா, பஸ் கால் மணி நேரம் நிக்கும், டீ, வடை, டிபன், காபி சாப்பிடறவங்க சாப்பிடுங்கனு சொல்ற வேலைதாங்க கிடைக்கும்…” என்று அலறு கிறேன். ஒப்பாரிச் சத்தம் கேட்டு, என்னைக் கனவில் இருந்து மீட்டெடுக்கிறாள் மனைவி.

மனித மனம் விசித்திரமானது என்றான் என்னுள் இருந்த ஃப்ராய்டு.

இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும். ஏனென்றால், என் ஹவுஸ் ஓனர் பையன் ராஜனை இன்று ஒருகணம் வாழ்த்தினேன். அதே கணத்தின் இன்னொருபுறம், வயிறு எரிந்தேன். வாழ்த்துகள், அவனுடைய கேம்பஸ் இன்டர்வியூவின் வெற்றிக்காக வும்; வயிற்றெரிச்சல், அவனுடைய அபரி மிதமான சம்பளத்தின் பொருட்டும் நிகழ்ந்தது.

ராஜனை அவன் பத்தாவது படிக்கும் காலத்தில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பொறியியல் கல்லூரியில் அவன் சேர்ந்த முதல் இரண்டு வருடங்கள் அவனுடைய துறையின் எதிர்கால சாத்தி யங்கள்பற்றிப் பேசிக்கொண்டு இருப்பான். நிறையப் படித்து, ஆராய்ச்சி செய்து… என்றவன், திடீரென கேம்பஸ் இன்டர்வியூ பற்றியும் சம்பளம்பற்றியும் பேசத் துவங்கி விட்டான்.

வருட ஊதியமாக மூன்று லட்சம், நான்கு லட்சம் பெறுபவர்கள் ஏதோ வேலை பார்க்கிறார்கள் என்று வேண்டு மானால் சொல்லிக்கொள்ளலாம் என்றான். எட்டு முதல் பத்து லட்சம் வரை கிடைத் தால்தான் தனக்கு மதிப்பு என்றான்.

ஸ்வீட்டை எடுத்துக்கொண்டபோது சொன்னான், ”கேம்பஸ் இன்டர்வியூல நல்ல வேலை கிடைக்கணுமேனு ஒரே டென்ஷன் அங்கிள். இனி, நிம்மதியா இருப்பேன். இப்ப உள்ள டிரெண்ட் எப்படின்னா, கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைக்கலேன்னா, காலேஜை விட்டு வெளிய வந்த பிறகு, அவ்வளவு ஈஸியா ஜாப் கிடைக்கறதில்லை. கஷ்டப்பட வேண்டியிருக்கும்.”

நான் என் மகனை ஒரு கணம் பரிதாபமாகப் பார்த்தேன்.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *