Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைகள் பலவிதம்…

 

அடித்தம் திருத்தம் எனப் பாலன் பேனா விளையாடியது. ஜி.எம். ஒண்ணும் சொல்ல முடியாது. நாலைஞ்சு பேர் சுத்தி நின்னு ஜி.எம். செய்வதைப் பார்த்தபடியும் ஏளனமாக அவர் எதையோ சொல்வதைக் கேட்டபடியும் நின்றனர். பாவம்! ஃபைல் மூட்டைகளைத் தாங்கி நின்றதால் கைகளைக் கட்ட முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் பிரின்சிபல் முன்னால பசங்க நிக்கற மாதிரிதான் அந்தக் காட்சியும். ராகவன் கற்பனை வேகமாக விரிந்தது.

கதைகள் பலவிதம்என்னவெல்லாம் கம்பெனி செய்யலாம்னு கூடி விவாதிச்சப்பறம் தயார் செய்து கொண்டு போனாலும் ஆசை தீர அடித்துத் திருத்தும் வரை ஜி.எம்.மின் பேனா ஓயாது. உண்மையைச் சொன்னால் மேனேஜர்கள் எல்லாம் உள்ளே போகும்போதே பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டு ஜி.எம். தயாராக உட்கார்ந்திருப்பார்.

“”எந்தத் திட்டத்தையும் மொதல்ல எழுதிக் கொண்டு வாங்க! இல்லைன்னா பிரிண்ட் அவுட்டோட வரணும்” ஜி.எம்.மோட சட்டமாக இருந்தது. எல்லாம் நேர்த்தியாக இருந்தாலும் வார்த்தைகளை மாற்றிப்போடுவார்; பிழைகளைக் கண்டுபிடிப்பார்.

“”எந்தப் பிரச்னைக்காவது மொதல்ல அவர் மனசில இருக்கறது என்னன்னு எல்லா மேனேஜரும் போய்க் கேட்போம். அது பிரகாரம் திட்டம் போட்டுக் கொண்டு வரோம்னு சொல்லிப் பார்போமே! சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நேரத்துக்குத் தினமும் வீடு திரும்பலாம்” சக ஊழியர்களின் தீர்மானம்.

ஆனால் கடந்த அஞ்சு வருஷத்தில் ஜி.எம்.கிட்ட போய் “உங்க அபிப்ராயம் என்னன்னு’ யாரும் கேட்டதில்லை. போன மாசம்தான், “பிராஜெக்ட் செலவுகளைக் குறைங்கன்னு’ ஜி.எம். சொன்னப்ப, தைரியமாக அத்தனை பேரும் அவர் முன்னால் ஆஜரானார்கள். அவர் எல்லாரையும் பார்க்க எல்லாரும் சீனியரான ராகவனையே பார்த்தனர்.

“”சார் நீங்க மேஜர் பாயிண்ட்ஸ் ஏதாவது சொன்னீங்கன்னா அதுக்குத் தகுந்தபடி நாங்க விவரமா பண்ணிக் கொண்டு வரோம்!” வேறு வழியில்லாமல் ராகவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினார்.

“”நீங்கல்லாம் வந்து என்னை டெஸ்ட் பண்றீங்களா? ராகவன் நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல ரிடையராகப் போறீங்க. மத்தவங்களுக்கு வேலை சொல்லிக் கொடுத்து புத்திமதி சொல்வீங்கன்னு பாத்தா, அவங்களோட சேர்ந்து யூனியன் லீடர் மாதிரி வந்திருக்கீங்க…”ஜி.எம். பொரிந்து தள்ளினார். மற்றவர்கள் ஓசைபடாமல் நடையைக் கட்டினார்கள்.

ராகவன் மறுபடியும் ஓரக்கண்ணால் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ஜி.எம். எதிரில் மணி பார்த்தாலும் முறைப்பார். முட்கள் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தன. திருத்தி முடித்த வேலையை மீண்டும் சீர்திருத்திக் கொண்டு வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். வீடு போய்ச் சேர எட்டு இல்லேன்னா எட்டரை…இன்னிக்கும் ஒண்ணும் எழுத முடியாது. ராகவன் முகம் தொங்கலானது. ஜி.எம்.முன்னால் “உச்சு’க்கொட்டவும் முடியாது. வறுத்தெடுப்பதில் மன்னர்.

பத்து வருஷத்துக்கு முன்னாடிதான் ராகவனுக்குக் கதை எழுதற சபலம் வந்தது. முதல் கதை வெளியானபோது அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பத்துக்கு ஒண்ணுன்னு தேறினாலும் ஏதோ கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறமாதிரி அவ்வப்போது தெரிந்தது. உற்சாகம் அதிகமானது. “ஏன்டா! இவ்வளவு லேட்டா ஆரம்பிச்சோம். டி.வி., அரட்டைன்னு பொழுதைக் கழிச்சிட்டோமே!” ராகவன் தன்னைத் தானே நொந்து கொள்ளாமலும் இருந்ததில்லை.

குழந்தைகள் அப்போது பள்ளி முடிக்கும் பருவத்தில் இருந்தார்கள். எழுத உட்காரும்போது அவ்வப்போது கணக்கு, அறிவியல்னு சந்தேகங்கள் வந்து அவரைத் தொந்தரவு செய்வார்கள். பற்றிக்கொண்டு வரும்.

“”அப்பப்ப குழந்தைகளையும் கவனிக்கக் கூடாதா…? நீங்க இப்ப கதை எழுதலைன்னு யார் அழுதா?” சகதர்மிணியும் விட்டதில்லை.

அப்போதிலிருந்தே அவருக்கு “எப்படா ரிடையர் ஆவோம்?’ என்ற கனவுதான். நாட்களை ஆசையுடன் ராகவன் எண்ணிக் கொண்டிருந்தார். விருப்ப ஓய்வு பெற தைரியம் வந்ததில்லை.

ஏதாவது சிறுகதை, நாவல் போட்டின்னு எந்த பத்திரிகையிலாவது வந்துட்டா ராகவனுக்கு ரத்தக் கொதிப்பு எகிறிவிடும். வேலை முடிஞ்சு எப்படா வீட்டுக்கு ஓடுவோம் என்று நிலைகொள்ளாமல் தவிப்பார். எழுதற பழக்கம் இருக்குன்னு பெருமையா ஆபீசில சொல்லலாம்னுதான் மொதல்ல நெனைச்சார். இரண்டு வருஷம் முன்னாடி ஒரு கம்ப்யூட்டரை அவர் டேபிள் மேல ஜி.எம். வைக்கச் சொன்னப்பவே பக்கத்து சீட் திருமூர்த்திக்கு வயிறு எரிந்தது தெரிந்தது.

“சார்! ராகவன், ஆபிசில உட்கார்ந்து கதை எழுதறார்’னு ஜி.எம்.கிட்ட கோள் மூட்டிவிடலாம். ராகவனுக்கு என்னவோ அந்த நினைப்பு இருந்ததில்லை. “சார்! ராகவன் இப்பெல்லாம் பென் டிரைவ் கொண்டு வரார்! பிரிண்ட் ஜாஸ்தி எடுக்கறார்…என்ன வேலை செய்யறார்ன்னு தெரியல’ வத்தி வைக்கும் கூட்டமும் அதிகம்.

அதனால் ராகவன் எவரிடமும் மூச்சுவிட்டதில்லை. நல்ல வேளை எந்த பத்திரிகையிலும் புகைப்படத்துடன் அவர் கதை இதுவரை வெளி வந்ததில்லை!!

கடைசி நாள்கூட “பிரிவு உபசாரம், விழா, விருந்துன்னு ஒண்ணும் வேண்டாமே’ அலுவலகத்தில் மறுத்துப் பார்த்தார். அவர் ஏதோ மேலுக்குச் சொல்கிறார் என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். அன்னிக்கும் போய் வீட்டில் லேப்டாப் முன்னால் உட்கார முடியலையேன்னு ராகவனுக்குக் கொஞ்சம் வருத்தம். வளர்ந்து கல்யாணமாகி வேலை பார்க்கும் பையன்கள் அவரைக் கொஞ்சம் “ஹைடெக்’ ஆக மாற்றியிருந்தார்கள். பேப்பரில் குறிப்பு எழுதி. லேப்டாப்பில் விவரமாகப் பதிவு செய்து, பென் டிரைவை எடுத்துக்கொண்டு ஓடி, பிரிண்ட் எடுத்து…என்று ராகவனுக்கு பழக்கம் ஆகிவிட்டது. பத்திரிகைகள் எல்லாம் மெயிலிலேயே படைப்புகளைக் கேட்கும் காலம் சீக்கிரம் வந்திடாதா? என்றும் அவ்வப்போது வேண்டிக் கொள்வார்.

அவர் ரிடையரான வாரமே துக்கம் விசாரிக்கக் கூட்டம் வரத்தான் செய்தது. எல்லா நேரமும் போக்குவரத்து இருந்தது. வீடும் சொந்த வீடு! சகதர்மிணி காயத்திரியும் இன்னும் டீச்சர் வேலை பார்க்கறா! பென்ஷன், கிராஜூவிடின்னு இருக்கு…இப்ப நிம்மதிதான் வேணும். “என்ன எழுதவிட்டுட்டு நீங்கெல்லாம் சீக்கிரமா கிளம்பினாப் போதும்’ என்று மனசுக்குக்குள் நினைத்தபடி ராகவன் மலர்ந்த முகத்துடன் வழியனுப்பி வைத்தது வந்தவர்களிடையே பொறாமையைக் கிளப்பியிருக்கும்.

இரண்டொரு நாட்களில் ராகவன் ஆசையுடன் லேப்டாப்பைத் திறந்து மோட்டு வளையத்தைப் பார்த்தபோதுதான் காயத்திரியின் சன்னமான குரல் அவரை தட்டி எழுப்பியது.

“”என்னங்க! கொஞ்சம் நறுக்கிக் கொடுங்களேன்!” உரிமையுடன் காயத்திரி கத்தரிக்காய், வெங்காயக் கலவைகளையும் கத்தி, பலகையையும் அவர் அருகில் வைத்தார். நிமிர்ந்து அவர் சகதர்மிணியைப் பார்த்தபோது காயத்திரி முதலில் மிரண்டே போனாள். ராகவன் கண்களில் அவ்வளவு உஷ்ணம்.

கணவரைப்பற்றித் தெரியாதா என்ன? காயத்திரி சுதாரித்துக்கொள்ள நேரம் பிடிக்கவில்லை. “”பத்து நிமிஷம்தான் ஆகும் பாருங்கோ! இதுவரைக்கும் ஒரு கையில ரசத்துக்கு உப்பெடுத்திண்டு இன்னொரு கையில சாமிக்கும் பூப்போட்டு, உங்கள நேரத்துக்கு அனுப்ப அவசரப்பட்டேன். இப்ப கொஞ்ச நேரம் ஸ்லோகமாவது படிக்கிறேனே! உங்களுக்கும் சமைச்சு வச்சுட்டுப் போகலாம்தானே! வீட்டில மருமகளும் இல்ல. கல்யாணம் பண்ணிண்ட கையோட பையனோட போயாச்சு. இப்ப உங்கள விட்டா யாரக் கேப்பேன். சொல்லுங்கோ!… முடியலைன்னா நான் பேசாம வி.ஆர்.எஸ். வாங்கிடறேன். வர பென்ஷன் போறும். நிம்மதியா இருக்கலாம்.”

“”இல்ல இல்ல! நான் பண்ணித்தரேன்…நீ பாட்டுக்குப் பள்ளிக்கூடம் போயிட்டு வா! ஒருத்தருக்காவது இன்னும் கொஞ்ச நாளைக்கு முழுச் சம்பளம் இருந்தா நல்லது…”முனகியபடியே ராகவன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டார். நாம கொஞ்ச நேரம் தனியா இருக்கலாமேன்னும் மனசில இருந்தது. ஆனால் காயத்திரியிடம் மூச்சு விடவில்லை.

நாட்கள்…வாரங்கள்…நகர்ந்தன. ஒரு கதையும் முற்றுப் பெறவில்லை. ராகவனுக்குத் தாங்கொணாத வருத்தம்…என்ன ஆச்சு..? குழம்பினார்.

ஒரு மாறுதலுக்குப் பரவாயில்லை என்று தோன்ற அவ்வப்போது டி.வி. முன்னாலும் உட்கார்ந்தார். கிரிக்கெட் மேட்ச்தான் ஓர் ஈர்ப்பைத் தந்தது. “அடிக்ஷன் ஆயிடுமோ?’ மனம் சங்கடப்பட டி.வி.யை விட்டுவிட்டு வேற இடத்திலும் லேப்டாப் சகிதம் உட்கார்ந்து பார்த்தார்.

முன்னேற்றமேயில்லை. திடீரென ஒரு வெறுமை! ஒரு சூன்யம்! மணிக்கணக்கில உட்கார்ந்தும் ஓர் அட்சரம் கூடப் பெயரல…”பேனால மை தீர்ந்துபோற மாதிரி கற்பனைகளுக்கும் வயசு இருக்கா? இல்ல யோசனைகளுக்கும் ஒரு மெனோபாஸ் இருக்கா?’ ராகவனுக்குத் திடீரென ஒரு பயம் பற்றிக் கொண்டது.

காயத்திரியும் கணவரைக் கவனித்துக்கொண்டே இருந்தாள். கையைக் கையை ஆட்டுவதும்…தனக்குத் தானே பேசிக்கொள்வதும்…கதையெழுத ஆரம்பித்ததிலிருந்தே ராகவனிடம் அந்த நடவடிக்கைகள் இருந்தன. இப்போது என்னவோ அதிகம் ஆகிவிட்டதுபோல் அவளுக்குத் தோன்றியது. “”என்னங்க! ஏதாவது பேசணும்னா எங்கிட்டயும் பேசுங்களேன். உங்க கதாபாத்திரங்களோட மட்டும் பேசினாப் போதுமா?”

ராகவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பி காயத்திரியையே பார்த்தார். “”யார்கிட்டயும் பேசல… திடீர்னு கற்பனை ஓட மாட்டேங்கறது…அதனால என்ன பண்ணலாம்னு பாக்கறேன்…” குறைந்தபட்சம் காயத்திரி கிட்ட சொன்னாத் தேவலாம் என ராகவன் நினைத்தார்.

காயத்திரி கடகடவென்று சிரித்தாள்.

“”என்ன சிரிப்பு வேண்டியிருக்கு?”

“”தப்பா நெனைச்சுக்காதேங்கோ! ஆபிஸ் கூத்து, டென்ஷன், அரட்டை…அப்படீன்னு ரொம்ப நாளா இருந்தாச்சு! மன உளச்சல், உடம்பு அலைச்சல்னு எப்பவுமே இருக்கணும். உங்களுக்கு கரு அப்பப்ப அந்த மாதிரி வாழ்க்கையிலே கெடைச்சிண்டே இருந்தது. இப்ப வெறும் கூரையைப் பார்த்தா முடியுமா…? ஒரு வேளை கொஞ்ச நாள்ல சரியாக்கூட ஆயிடலாம். ஆனா இப்ப உங்கள நீங்க ஏன் அடைச்சு ஒரே இடத்தில வச்சுக்கணும்?”

“”நீங்க, குழந்தைங்க, சாப்பாடு, டிபன்னு என்னை பறந்து பறந்து வேலை வாங்கினப்ப அசதியாவும் எரிச்சலாவும் இருந்தது. ஆனா அந்த அவசரத்தில பண்ணின சாப்பாட்டைத்தான் ரசிச்சு சாப்பிட்டீங்க. இப்ப உங்க ஆரோக்கியத்துக்குப் பயந்து உப்பு கம்மி, எண்ணெய் கம்மின்னு மேலுக்குச் சமைக்கிறேன். நேரம்தான் நெறைய இருக்கு. பி.எச்.டி. பண்றவால்லாம் இருக்கிற பிரச்னைகளை எடுத்துத்தான் ஆராய்ச்சி தலைப்பா மாத்திப்பாளாம்…”

காயத்திரி சொல்லிக்கொண்டே போனாள்.

உண்மைதான்…இன்டர்வியூ, லஞ்ச் நேரப் பேச்சுக்கள், வாடிக்கையாளர் பழகும் விதம்…எத்தனையோ குறிப்பு வேலை பார்க்கிறப்ப கெடைச்சது. அதை நுணுக்கமா உள்வாங்கி எழுதறப்ப படைப்புகளுக்கும் ஒரு தகுதி கிடைக்கிறது. குட்டிக்குட்டியாக்கூட கதைகள் தேறின…ராகவன் பெருமூச்சுவிட்டார்.

“”இப்ப கூட ஒன்னும் குடி முழுகிப்போயிடல. நம்ம காலனி அசோசியேஷன் சரியா நடக்கலைன்னு எல்லாருக்கும் ஒரு குறை! எனக்கு வேண்டாம்…உனக்கு வேண்டாம்னு எல்லாரும் ஓடறதா கேள்விப்பட்டேன். மொதல்ல அங்க நீங்க செகரட்டிரியா ஆயிடுங்கோ! என்ன…கூர்க்கா, தண்ணீர், தெரு நாய்கள், சுத்தம், பராமரிப்புன்னு நெறைய பிரச்னைகள் வரலாம். சண்டையும் வரும். கொஞ்சம் பிபியும் எகிறும். ஆனா உங்கள பிசியா வச்சுக்கலாம். ஏதாவது கரு அப்பப்ப கெடைக்கும். இல்லைன்னா எங்கேயும் பார்ட் டைம் வேலை கெடைக்குமான்னு கூட பார்க்கலாம்” காயத்திரி தீர்வையும் காட்டி பேச்சையும் நிறுத்தவில்லை.

ராகவன் சட்டையை அணிந்து கொண்டு காலனி கிளப் ஹவுஸ் பக்கம் நடையைக் கட்டினார்.

ய்

சீதாராம்

- விசாகன், திருநெல்வேலி (அக்டோபர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
சென்னையின் மற்றொரு விடியற்காலை, ஒரு புதிய நாள். உலகம் முழுவதும் விடியல் அழகாகவே இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது பொழுது புலர்ந்து கொண்டே இருக்கிறது. சூரியன், மலை முகடுகளில் தவழ்ந்து எழுகிறான். மூழ்கியிருந்த கடலில் இருந்து துளி ஈரமில்லாமல் மேலே வருகிறான். ...
மேலும் கதையை படிக்க...
மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் ...
மேலும் கதையை படிக்க...
நமசிக் கிழவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல். வேலைக்குப் போகவில்லை. இன்று கஷாயம் காய்ச்சி குடித்துவிட்டு பார்க்குக்கு கிளம்பினான். அங்கே தோட்டப்பராமரிப்பு அவன் பணி. எதிரே வந்த பரமு, ‘’என்ன நமசி! ரண்டு நாளா உன்னைக் காணலே! பார்க்ல பயிர் பச்சை எல்லாம் உன்னைத் ...
மேலும் கதையை படிக்க...
பல்லி
கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய் ஆகப்போவது ஒன்றுமில்லை. சாவகாசமாக பத்திரிகைகள் விற்கும் கடை முகப்பில் மாலை தினசரிகளின் போஸ்டர்களைப் படித்தார். குட்ரோவிச்சி நிரபராதி! போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய ...
மேலும் கதையை படிக்க...
என் சூரியன்
பிச்சை
சட்டம், கடமை, பாசம்..! – ஒரு பக்க கதை
பல்லி
நண்பர்களற்றவனின் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)