கதவு தட்டப்பட்டது!

 

யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. தனியாக இருக்கிறாள். வீட்டில் ஒருவரும் இல்லை என்று தெரிந்து வந்திருக்கிறானா? யார் கதவை தட்டுவது, இந்த முறை கொஞ்சம் குரலை அதிகாரமாக வைத்து கேட்க முயற்சிக்கிறாள். பதிலில்லை.

இப்பொழுது கொஞ்சம் தைரியம் வந்த்தது போல் இருந்தது. யாரோ விளையாடுகிறார்களா? அதுவும் இரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும் போலிருக்கிறதே. இந்த நேரத்தில் எவன் விளையாடுவான்? கதவை அவ்வளவு சீக்கிரம் திறக்க முடியாது. பின்புறமும் நன்கு தாழ் போட்டது ஞாபகம் இருக்கிறது. வண்டி வாகனங்கள் போகும் ரோட்டை ஒட்டியே வீடு இருக்கிறது. வீட்டுக்குள் வேறு வழியாகவும் நுழைய முடியாது என்று மனதுக்குள் ஒரு தைரியம் வந்த்து. இருந்தாலும், அந்த இரவின் தனிமையில் இருக்கும்போது ஒன்றும் சொல்லாமல் இப்படி கதவை தட்டினால் எப்பேர்பட்ட ஆண் மகனாய் இருந்தாலும் பயந்து சாவான். நான் பெண் என்ன செய்யமுடியும்? இப்படி நினைத்தவள் சீ..சீ, நாம் எதற்கு பயப்பட வேண்டும்? இது ஐந்தாவது தடவை இந்த மாதிரி நடப்பது.

உடனே குரலை உயர்த்தினாள், வெளியூர் சென்றிருக்கும் கணவனை இருப்பது போல் உருவாக்கி , ஏங்க எந்திருங்க !, யாரோ கதவை தட்டறானுங்க, கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க, சீக்கிரம் எந்திரிங்க, இவளின் வெற்று கூச்சல் அந்த புறத்தில் ஒரு அமைதியை தோற்று வித்திருந்தது. இப்பொழுது கதவு தட்டும் சத்தம் நின்றிருந்தது.உற்று கேட்டாள்.யாரோ நடந்து செல்வது காதில் டம்..டம் என விழுந்தது. இது இவளின் பயத்தினால் கேட்கும் அவளின் இதயத்தின் சத்தமா? இல்லை உண்மையிலேயே வெளியில் நடப்பவன் சத்தமா என்று தெரியவில்லை. அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அதற்கு பின் அவளுக்கு தூக்கம் எட்டிப்பார்க்கவில்லை.

தட்..தட்..கதவு சத்தம் கேட்டவுடன்தான் விழித்தாள். வெளியே யேய்..மீனா என்ன இந் நேரம் வரைக்கும் தூக்கமா? குரலில் இருந்த அதிகாரம் அவளை வாரி சுருட்டி எழ வைத்தது. அரக்க பரக்க எழுந்தவள் இந்நேரம் வரைக்கும் தூங்கியிருக்கமா? மணி என்ன இருக்கும்? கேள்விகள் மனதில் ஓட அப்படியே உட்கார்ந்து இரவு கேட்ட மாதிரியா இதுவும் என சிந்தித்து கொண்டிருக்கும்போதே,

ஏய் மீனா, குரலின் கடுமை அவளை இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தது. தன்னுடைய கணவனின் குரல் அல்லவா? அப்படியானால், வாரி சுருட்டி எழுந்தவள் வேகமாய் வந்து கதவை திறந்தாள்.

வெளியே மூஞ்சியை கடு கடுவென வைத்துக்கொண்டு அவள் கணவன் நின்று கொண்டிருந்தான்.இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தே? கேள்வியில் உஷ்ணம். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். இந்த பதில் அவனுக்கு திருப்தி தரவில்லை.

எப்படியோ ஒரு வழியாய் குளித்து முடித்து இவள் அவசரம் அவசரமாய் செய்து வைத்த காலை உணவை சாப்பிட்ட பின் அக்கடாவென உட்கார்ந்தவன் முன்னால் போய் நின்றாள்.நீங்க வாரத்துக்கு மூணு நாள் வெளியூருக்கு போறேன்னுட்டு போயிடறீங்க, இங்க சரியா நீங்க வெளியில போயிட்டீங்கன்னு எப்படித்தான் தெரியுதோ, இராத்திரி பன்னெண்டு மணிக்கு மேலே யாரோ கதவை தட்டறாங்க, கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. தயவு செய்து இனி மேல் வெளியூர் போற வேலை எல்லாம் வேணாம்.

இவன் இவளை உற்றுப்பார்த்தான். இங்க பாரு இதை நாலைஞ்சு முறை சொல்லிட்டே இருக்க. அந்த மாதிரி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. வீணா கனவு ஏதாவது கண்டுட்டு இந்த மாதிரி பேசறே.

இவனின் பதிலை கேட்டவளுக்கு உள் மனதில் சுள்ளேன்று கோபம் வந்த்து, அப்ப நான் கனா கண்டுட்டு சொல்றேன்னு சொல்றீங்க, இல்லை கற்பனை பண்ணிட்டு சொல்றேன்னு சொல்றீங்க அப்படித்தானே?

இவளின் கோபத்தை கண்டு சற்று பதுங்கியவன், அப்படி இல்லை, உனக்கு மனசுல, நான் இல்லை, தனியா இருக்கறமே அப்படீங்கற பயத்தோட படுக்கறதுனால கூட இந்த கனவு வரலாமில்லையா?

இவனின் பேச்சை கேட்டு இவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. நன்கு படித்தவள், சேலத்திலிருந்து இவனை திருமணம் செய்து கோவைக்கு குடித்தனம் செய்ய வந்தவள். கல்யாணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகி இருந்தது. இவனுக்கு ஊர் ஊராய் சுற்றும் ரெப்ரசன்டேடிவ் வேலை. வாரம் மூன்று நாட்கள் வீட்டில் இருப்பான், மற்ற இரண்டு நாட்கள் வெளியூர், பிறகு இரண்டு நாட்கள் வீட்டில், இப்படி ஓடிக்கொண்டிருந்த்து இவர்கள் வாழ்க்கை. ஆரம்பத்தில் இவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கடந்த இரு மாதங்களாக இவன் வெளியூர் சென்று விட்டான் என்றால் இரவு யாரோ கதவை தட்டுவதும், யார் என்று கேட்டால் பதில் பேசாமல் போய் விடுவதும், இவளுக்கு மனதில் ஒரு பயத்தை தோற்று வித்தது. இருவர்களின் பெற்றோரும் சேலத்திலே அவரவர்கள் இடத்தில் இருப்பதால் அவர்கள் யாரையும் துணைக்கு கூப்பிட வழியில்லை. இவனையாவது வெளியூர் வேலையை தவிர்க்க சொன்னால், இவளுக்கு புத்தி சரியில்ல்லை என்று பேசுகிறான்.

அன்று மாலை தண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கிளம்பினாள். கோவிலில் கூட்டம் குறைவாக இருந்தது. சாமி கும்பிட்டு விட்டு அக்கடாவென உட்கார்ந்தவள் கணவனின் உறவுக்காரி,அவனுக்கு பெரியம்மா முறை ஆக வேண்டும், அவள் இவளை பார்த்து அருகில் வந்து கொண்டிருந்தாள்.

வாங்க அத்தை, என்று மரியாதையாக அழைத்து எழுந்து நின்றாள்.மீனா கோயிலுக்கு வந்தியா? என்று சம்பிராதயமாக கேட்டு விட்டு, உன் புருசன் வேலைக்கு போயிட்டானா? இந்த கேள்வி எதற்கு கேட்கிறாள், நினைத்து கொண்டே போயிட்டாருங்க, பதில் சொன்னாள்.

இல்லே, கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நம்ம வீட்டுல இருந்துதான் வேலைக்கு போவான், வாரத்துல இரண்டு மூணு நாளுதான் வீட்டுல இருப்பான், இப்பவும் அப்படித்தானா? இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இப்பவும் அப்படித்தான், சொன்னவளுக்கு சட்டென ஒரு யோசனை, இவர்களிடமே இந்த பிரச்னையை பற்றி கேட்டால் என்ன? அத்தை என்று இழுத்தாள். என்ன என்பது போல் இவளை பார்க்க, அவர் வெளியூரு போற நேரத்துல…என்று இரவு நேரம் யாரோ வந்து கதவை தட்டி விட்டு செல்வதை சொன்னாள். பெரியம்மாவின் முகம் யோசனையாயிற்று, அப்படீன்னா அவன் வெளியூருக்கு போன அன்னைக்கு என்னைய கூப்பிடு, நான் வந்து தங்கறேன், பாக்கலாம். அவளின் பதிலில் நிம்மதியான மீனா, சரிங்க அத்தை வாறேன், விடை பெற்றாள்.

கணவனிடம் இதை பற்றி சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் நினைத்து சென்றவள், அப்படியே மறந்து விட்டாள். வழக்கம்போல இவன் வெளியூர்ருக்கு அனுப்பி வைத்த பின் தான் இவளுக்கு ஞாபகம் வந்தது. அட்டா, பெரிய அத்தை வந்து தங்குவதாக சொன்னதை இவனிடம் சொல்ல மறந்து விட்டோமே என்று !.

இவள் பெரியம்மாவுக்கு போன் செய்ய அவள் வந்து இரவு தங்கினாள்.

இரவு ! கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முதலில் விழித்தவள் மீனாதான், மெல்ல பெரியம்மாவை உசுப்பினாள். திடுக்கிட்டு விழித்தவளை இவள் கைகளால் கதவை நோக்கி சைகை காட்டினாள்.மீண்டும் கதவு சத்தம் கேட்டவுடன் பெரியம்மா எழுந்து சென்றாள். மீனா பயத்துடன் இவள் கைகைளை பற்றி நிறுத்த முயற்சிக்க இவள் கைகளை மெல்ல உருவி விட்டு கதவருக்கில் சென்று அதன் சந்து வழியாக உற்று நோக்க ஆரம்பித்தாள். கதவு மற்றுமொருமுறை தட்டப்பட்டு, பின் . அமைதியானது. சற்று நேரம் உற்று பார்த்துக்கொண்டிருந்த பெரியம்மா திரும்பி வந்த போது அவள் முகம் ஏதோ யோசனையில் இருந்தது. அத்தை அத்தை இவள் இரு முறை அழைத்த பின்தான் அவள் என்ன ? என்று திடுக்கிடுவது போல் கேட்டாள். என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பேயறைஞ்சது மாதிரி இருக்கறீங்க. ஒண்ணுமில்லை, சரி சரி தூங்கலாம், மத்ததெல்லாம் நாளைக்கு காலையில பேசிக்கலாம்.

மறு நாள் பெரியம்மா சரி வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று கிளம்பும்போது உள்ளே வந்தான் மீனாவின் கணவன். வந்தவன் பெரியம்மாவை பார்த்து விட்டு பெரியம்மா நீ எப்ப வந்தே? கேட்டவனை உற்று பார்த்து நான் நேத்து இராத்திரியே வந்துட்டேன், மீனா வேற நீ இல்லாதப்ப யாரோ இராத்திரி வந்து கதவை தட்டிட்டு தட்டிட்டு போறான்னு சொல்லுச்சு, யாருன்னு பாக்கறதுக்கு நானே வந்துட்டேன்.

சரியா போச்சு போங்க, இவ சொன்னானு நீங்க வேற ! சொல்லி விட்டு சிரித்தவன் பேசாம இவளை சைக்கியட்டிரிஸ்டுகிட்டு கூட்டிட்டு போகணும். நானும், அதைத்தான் சொல்ல வந்தேன், மீனாவை அந்த டாகடர்கிட்டே கூட்டிட்டு போ, போகும்போது என்னையும் கூப்பிடு நானும் வாறேன். சொல்லி கொண்டிருந்தவளை ஆத்திரத்துடன் பார்த்தாள். மீனா, என்ன சொல்கிறாள் இந்த அத்தை? நேற்று இரவு நேரிடையாக பார்த்து விட்டு இன்று என்னை டாக்டருக்கு போக சொல்லுகிறாள்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அத்தை என்று கத்தியவளை, ஸ்.சத்தம் போடாதே, இவன் நாளைக்கே உன்னைய டாகடர் கிட்டே கூட்டிட்டு போகட்டும், நாளைக்கு நானும் உன் கூட வாறேன், இப்ப என்னை, டவுன் பஸ் ஏத்தி விட்டுட்டு வந்துடு, என்று சொல்லிவிட்டு, மீனாவை கையை பற்றிக்கொண்டு வர்றண்டா குமாரு சொல்லிக்கொண்டே கிட்டத்தட்ட மீனாவை இழுத்து கொண்டே சென்றாள்.

மீனா ஆத்திரத்துடனேயே அத்தையுடன் நடந்து வந்தாள். ஒன்றுமே பேசாமல் வந்த மீனாவை, என்ன மீனா பேசாமல் வாறே? கேட்டவளை முறைத்து பார்த்த மீனா பேசாட்டி என்ன? நீங்கதான் என்னைய பைத்தியக்காரி அப்படீன்னு சொல்லிட்டீங்களே.

மீனாவின் கையை மெல்ல பற்றிய அத்தை மீனா, டாக்டர் கிட்ட உன்னைய கூட்டிட்டு போகனும்னு சொன்னது உனக்காக இல்லை, குமாருக்காகத்தான், சொன்னவளை புரியாமல் திகைப்புடன் பார்த்தாள் மீனா !

ஆமா அவன்தான் நேத்து இராத்திரி வந்து கதவை தட்டிட்டு திரும்பி போனான். அவன் மனசுக்குள்ள ஏதோ ஒரு வியாதி வந்து ஒட்டியிருக்கு. அது என்ன வியாதின்னு டாக்டர்தான் கண்டு பிடிக்கணும். நீ பேசாம அவன் கூட வர்ற மாதிரி வா, நாம டாக்டர்கிட்டே பேசி இவனை சரி பண்ணனும்.

திகைப்புடன் அத்தையை பார்த்தாள் மீனா ! 

தொடர்புடைய சிறுகதைகள்
ராமசுப்பு இப்படி போவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் ஜனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டது என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் ராம சுப்பு ஒரு இந்திய குடிமகனாய் எல்லாவிதமான சட்ட திட்டங்களையும் சரிவர பின்பற்றி இருப்பவன், அவனைப்போய்…. வாசகர்கள் ஆவலுடன் இருக்கலாம், ...
மேலும் கதையை படிக்க...
வட இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரெயில் அது. சாதாரண வகுப்பில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தாள நயத்துடன் தடக்..தடக் என்ற சத்தம் கூட அந்த இரவில் படுத்து உறங்குபவர்களுக்கு தாலாட்டாக இருந்தது.. ஆயிற்று ஒன்றரை நாட்கள் ஆகி விட்டது. ...
மேலும் கதையை படிக்க...
கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை. நாளொரு தினம் இவரை புகழ்ந்து பேசி தன் காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. என்ன உழைத்து என்ன பயன்? ...
மேலும் கதையை படிக்க...
கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இப்பொழுது கணபதியப்பன் அமைதி இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார், அவரது பிள்ளைகளால் கோடி கணக்கில் பணம் அவரது நிலத்துக்கு கிடைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது. ஏன் அதையும் கணித்து சொல்லலாமே என்று கேட்கிறீகளா? சொல்லலாம், நானும் கணித்து பார்த்தேன் இப்போதைக்கு யாரும் இல்லை, எதிர் காலத்தில் உருவாகலாம் கோள்களின் கணக்கை வைத்து ...
மேலும் கதையை படிக்க...
"அம்மாவ்" குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து மனைவிக்கு குரல் கொடுத்தேன், சமையலறையில் இருந்த என் மனைவி என் குரல் கேட்டு வெளியே வந்தாள், இந்தப்பெண்ணை பார்த்தவுடன் முனியம்மா ...
மேலும் கதையை படிக்க...
புலியார் அன்று மகா கோபமாக இருந்தார். காலையில் அவர் கேட்ட செய்தி அவரை அவ்வளவு கோபப்பட வைத்து விட்டது. அதற்கு காரணம் நரியார் சொன்ன செய்திதான். விடிந்த பின் எழுந்த சூரியன் அப்பொழுதுதான் மேலேறிக்கொண்டிருந்தான். புலியார் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடி குட்டி ...
மேலும் கதையை படிக்க...
கடந்த இரண்டு மூன்று நாட்களாக காரணமில்லாமல் அலுவலகத்தில் எனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ராமசாமியின் மீது எரிச்சல்வந்தது. எதற்கு என்று காரணம் புரியவில்லை. நானும் யோசித்து யோசித்து அதனாலேயே எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம். இதற்கும் அவர் என்னிடம் எந்த விசயத்திற்கும் வந்ததில்லை. தானுண்டு தன் ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸை விட்டு இறங்கி சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான்.அதற்குள் “உறைபனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது.வலது கையால் துடைத்துவிட்டு பார்த்தான்.மணி பத்தை தொட ஒரு சில நிமிடத்த்துளிகளை காட்டியது. இந்நேரத்திற்கு மேல் என்ன செய்வது?, பஸ் நிலையத்தில் தங்கவும் முடியாது. ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, ...
மேலும் கதையை படிக்க...
இறந்தவன் திரும்பி வந்தான்
பட்டால் புரியும்
அவசரப்படாதே!
நிலம் விற்பனைக்கு அல்ல
தற்பெருமையில் கணிப்பு
உழைப்பு
புலிக்கு புலி
பொறாமை
ஊட்டிக்கு பயிற்சிக்கு சென்றவன்
மந்திரியின் தந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)