கண்மணி,இரவு,மற்றும் மழை

 

கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு வெளியே பெய்கின்ற மழை கண்மணியின் மனதை உறுத்தியபடியே இருந்தது. முதல் முறையாக சென்னைக்கு இந்த பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் வந்திருக்கிறாள். சித்தி வீட்டில் தங்க போகிறோம் என்பதை நினைத்ததும் அளவில்லா மகிழ்ச்சியில் நிறைந்துபோனாள். சித்தி மகள் இந்துமதி இவளை விட ஆறு வயது சிறியவள். இருவரும் சித்திவீட்டு மொட்டைமாடியில் விளையாடலாம். கண்மணியின் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் தன் வீட்டு மொட்டைமாடி பற்றி சிலாகிப்பாள் இந்து. பக்கத்துவீட்டு மாமரத்தின் அடர்ந்த கிளைகளும் அதில் வந்தமரும் கிளிக்கூட்டமும் பார்க்க அழகாக இருக்கும் என்பாள்.

சீக்கிரம் ஆட்டோ சித்திவீட்டிற்கு போய்விடாதா என்றிருந்தது. ஆனாலும் சித்திவீட்டில் இரவை கழிப்பதை நினைத்தவுடன் பயம் கவ்விக்கொண்டது. சித்திவீட்டிற்குள் நுழைந்ததும் இந்து ஓடி வந்து கட்டிக்கொண்டாள். அவள் அறைக்குள் அழைத்துச்சென்று புஸுபுஸுவென்றிருக்கும் கரடி பொம்மைகளை காண்பித்தாள். அறையெங்கும் சிதறிக்கிடக்கும் பொம்மைகளை கண்டவுடன் கண்மணிக்கு தான் விளையாடிய மரப்பாச்சி பொம்மையின் ஞாபகம் வந்தது. வீட்டின் நடு அறையில் ஜன்னலோர நார்க்கட்டிலில்தான் உறங்குவாள்.எப்போதும் அவளது இடப்பக்கம் மரப்பாச்சி பொம்மை படுத்திருக்கும். அது அவளது அம்மா பயன்படுத்தியது என்று பாட்டி சொல்வாள். சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால் மரப்பாச்சி மீதுஅதீத ப்ரியமுடன் இருந்தாள் கண்மணி. இந்து மொட்டைமாடிக்கு இவளை இழுத்துக்கொண்டு ஓடினாள். பகல் மொட்டைமாடியிலும் வீட்டருகே இருக்கும் பூங்காவிலும் கழிந்தது.

இருள் கவியத் துவங்கியிருந்தது. அப்பா மாலை ரயிலுக்கு புறப்பட்டு போய்விட்டார். சித்தியும் சித்தப்பாவும் அவர்களது படுக்கையறையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்து கரடி பொம்மையொன்றை கட்டிக்கொண்டு உறங்கி விட்டாள். இந்துவின் அருகே அமர்ந்திருந்தாள் கண்மணி. உறக்கம் வரவில்லை. வீட்டிற்கு வெளியே நாயொன்று குரைத்தபடி ஓடியது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது இரவுத்தெரு அழகாக இருந்தது. மனிதர்கள் வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. எல்லோரும் இன்றிரவு நிம்மதியாக உறங்குவார்கள். அனைவரது காலையும் அழகானதாக விடியும். எதற்காக தன் இரவு மட்டும் துயரமானதாக இருக்கிறது? நாளை அதிகாலை சித்தியும் இந்துவும் தன்னிடமிருந்து விலகி போய்விடுவார்களோ என்கிற கவலை அவளை சூழ்ந்துகொண்டது. வாடிய முகத்துடன் ஜன்னலில் முகம் புதைத்திருந்தாள்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வொன்று நினைவுக்கு வந்தது.

———————–o0o————————————o0o——————————————————–

கண்மணி பூத்திருந்தாள். முகத்தில் ஒன்றிரண்டு பருக்களும் ஒருவித கூச்சமும் குடிகொண்டிருந்தன. பூப்புனித நீராட்டு விழாவை வெகு சிறப்பாக செய்துமுடித்தார் அப்பா. விழா முடிந்த மறுநாள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தவுடன் தோழிகள் சூழ்ந்துகொண்டனர். ஏற்கனவே வயதுக்கு வந்த “சீனியர்”கள் இவளை கிண்டல் செய்தார்கள். “ஏ பிள்ள வெட்கமாக்கும்” என்று சிரித்தார்கள். வயதுக்கு வராத சிறுமிகள் இவர்களது கிண்டலை வியப்புடனும் புரியாமலும் பார்த்தபடி இருந்தனர். கண்மணி வேகமாக தன் வகுப்பிற்குள் நுழைய முயன்றபோது உள்ளிருந்து வெளியே வந்த செல்வம் மீது மோதிவிட்டாள். “மன்னிச்சிடுங்க” என்றபடி வகுப்புக்குள் வந்து அமர்ந்தவள் தன்னுடல் சன்னமாய் நடுங்கியதை உணர்ந்தாள். செல்வம் மீது தவறில்லை.

பள்ளி முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் செல்வம் எதிர்கடையில் நின்றிருப்பதை பார்த்தும் பார்க்காததுபோல் நடக்க ஆரம்பித்தாள். அவன் இவளை பார்த்தானா என்பது தெரியவில்லை.ஆனாலும் திரும்பி பார்க்க நினைத்து திரும்பாமல் வீடுவந்துவிட்டாள். “சடங்கான புள்ளய இனி எப்ப கரை சேர்ப்பானோ உங்கப்பன்” பூப்பெய்திய நாளிலிருந்து எல்லோரிடமும் இதே வரிகளை புலம்பிக்கொண்டிருந்தாள் பாட்டி. இவள் எதை செய்தாலும் “சடங்கான புள்ள இப்படி இருக்ககூடாது மூஞ்சியில பவுடரை குறைச்சுக்க கண்ணு” இப்படி ஏதாவது பாட்டி சொல்வது ஏனென்று புரியவே நாளானது கண்மணிக்கு. கறுப்பென்றாலும் களையான உருண்டை முகம் கொண்டவள் கண்மணி. சிரிக்கும்போது கன்னத்தில் விழுகின்ற குழியும் தெத்துப்பல்லும் பார்க்க அம்மன்கோவில் சிலை போலிருப்பது யாருக்குத்தான் பார்க்க தோன்றாது? செல்வத்திற்கும் கண்மணி தன்னை பார்க்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். வேண்டுமென்றே அவள் வகுப்பை கடந்து போவதும் எதிர்படும் ஆசிரியர்கள் கேட்டால் சாக்பீஸ் எடுக்க ஸ்டாப் ரூம் போறேன் சார் என்றும் சத்தமாக சொல்வான். இவன் சத்தம் கேட்டவுடன் கண்மணியின் பார்வை வராண்டாவின் பக்கம் திரும்பும்.

செல்வத்தின் தூரத்து உறவுக்கார பெண்ணொருத்தி கண்மணியின் வகுப்பில் படித்தாள். அரையாண்டு விடுமுறை ஆரம்பித்திருந்தது. டிசம்பர் மாத காலையொன்றில் தன் உறவுக்கார பெண்ணிற்கு ஏதோ நோட்டு வாங்க வேண்டும் என்று கண்மணியின் வீட்டு வாசலில் வந்து நின்றான் செல்வம். பாட்டிதான் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தாள். பின் ஏதோ தாழ்ந்த குரலில் அவளுக்குள் பேசியபடி உள்ளே சென்றுவிட்டாள். சிறிதுநேரம் நின்று பார்த்தான்.யாரும் வரவில்லை.ஏதோ தைரியம் வந்தவனாய் வீட்டிற்குள் நுழைந்தவன் சில நிமிடங்களில் கடகடவென்று வெளியேறி தெருவில் இறங்கி நடந்து போய்விட்டான்.

விடுமுறை கழிந்து பள்ளி ஆரம்பித்தபோது கண்மணிக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. செல்வம் இவளைக் கண்டதும் திரும்பிக்கொண்டான். அவனது உறவுக்கார பெண் இவளிடம் வந்து வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையை காண்பித்து ஏதோ கிசுகிசுத்தாள். சட்டென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.அன்றிலிருந்து மழை கண்டால் வெறுப்பும் கோபமும் அதிகரிக்க துவங்கியது. செல்வம் மீதான ஈர்ப்பு அந்நொடியில் எரிந்து சாம்பலானது.

———————–o0o————————————o0o——————————————————–

சித்தி ஹாலில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைப்பது தெரிந்தது. இந்துவின் அறைக்குள் சிறியதொரு இரவு விளக்கு எரிந்துகொண்டிருந்தது.எப்போது உறங்கினாள் என்பது தெரியவில்லை. காலையில் அழுகை சத்தம் கேட்டு கண் விழித்தாள் கண்மணி. கரடி பொம்மையை காண்பித்து அழுதுகொண்டிருந்த இந்துவை சமாதானபடுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள் சித்தி.இந்துவின் முன் கிடந்த கரடி பொம்மை நனைந்திருந்தது. செல்வத்தின் உறவுக்காரப் பெண் இவளிடம் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது ‘ஏ புள்ள நேத்து ஒங்க வீட்டுக்கு செல்வம் வந்திருந்தானாம். தூக்கத்துல நீ ஒண்ணுக்கு போனது நார்க்கட்டில்ல இருந்து அதோ அங்க பெய்யற மழை மாதிரியில்ல இருந்துச்சாம்.”

எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஓய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.

- Friday, February 11, 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
இரவு மணி இரண்டு. வேகமாய் நடந்துகொண்டிருந்த‌ மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை.. "சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான். அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில் நிழலாடியது... "அப்பா ...
மேலும் கதையை படிக்க...
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு. துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது. எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி ...
மேலும் கதையை படிக்க...
இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன் இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.. பத்து மணிக்கே வர்றேன்னு சொன்ன‌வ‌ன் இன்னும் வ‌ர‌லை. ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள திவ்யா.... என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்? உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம் மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன். அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே! காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்.... அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா" அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா? பயம்தான். பயம் மட்டும்தான் காரணம். காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவள். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
போனோமா வந்தோமான்னு இருக்கணும்
நினைவெல்லாம் நித்யா…
கறுப்பு வானவில்
வானவில்லோ நீ?
என் இனிய ஜெசினா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)