கண்ணாமூச்சிப் பிரார்த்தனை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 9,475 
 

காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று செüடேஸ்வரர் முன்னின்று பிரார்த்தனைச் செய்ய வேண்டுமென சரண் முடிவெடுத்திருந்தான். மனசு சஞ்சலமாய் இருக்கையில் கடவுள்தானே வழி காட்டணும்? கோயிலுக்குள் நுழையும்போது, கருவறை வரைக்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கண்ணாமூச்சிப் பிரார்த்தனை

பூஜை துவங்கியது. ஒருவர் சங்கு ஊத, சிலர் கோயில் மணிகளைக் கணீரென ஒலித்தனர். தீபம் காட்டும் போது பரவசம் உச்சக்கட்டம் அடைந்திருந்தது. கடவுளிடம் விண்ணப்பிக்க இதுதான் சரியான தருணம். “செüடேஸ்வரா! நான் வேண்டுவது மட்டும் சித்தி பெற்றால், பத்து செவ்வாய் விடாது வந்து உன்னைத் தொழுது, கடைசி செவ்வாயில் உண்டியில் பத்தாயிரம் ரூபாய் போடுறேன்…’ மனமுருகி வேண்டினான் சரண்.

வேண்டுதல் முடிந்து கண்ணைத் திறந்தான். எதிரே 30லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வெள்ளைச் சேலை உடுத்தியப் பெண்ணொருத்தி. அவள் முன் அவளது 8 வயது மகனும் கைக்கூப்பி நிற்க, கண்ணில் நீர் மல்க, பகவானை நோக்கி வணங்கி நின்றாள். பாழாய்ப் போன அவளது நெற்றியும், மெட்டியற்ற கால் விரல்களும், இளமை மீந்து இருக்கும் போதே, அவள் விதவை என்பதைப் பறைச் சாற்றியது.

செüடேஸ்வரரிடம் அவள் என்ன வேண்டியிருப்பாள்? மனசு குப்பையாய்ச் சிந்தித்தது. கண்டிப்பாகச் சரணுடைய வேண்டுதல் பலிக்கக்கூடாதென வேண்டியிருக்க மாட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் அவனது மனைவி மல்லிகா, தரைக்கும் வானத்திற்கும் பாய்ந்தாள்:

“”சாமிக்குப் பத்தாயிரம் போடுறேனு என்னைக் கலந்தாலோசிக்காமல், எப்படி நீங்களாகவே வேண்டிக்கலாம்?”

“”ஏதோ க்ஷணத்தில் தோணுச்சு, வேண்டிக்கிட்டேன்..!”

“”விரலுக்கேத்த மாதிரி வீங்கணும்! எந்தத் திட்டமும் இல்லாம, காரியமாற்றுவதே உங்க வேலையாப் போச்சு!”

“”நீ கூட லவ் பண்றேனு சொன்னதும், வேற எதையும் யோசிக்காம, நா ஏத்துக்கலையா? ரொம்ப யோசிச்சா எந்தக் காரியமும் செய்யமுடியாது, மல்லி. நமக்கு இவ்வளவு நாளும் வழிகாட்டின செüடேஸ்வரனே, என் வேண்டுதலை நிறைவேற்றவும் வழிகாட்டுவான், பாரேன்..!”

இவனைத் திருத்தவே முடியாது போலிருக்குது. இருந்தாலும் இப்படியே விட்டால் ஒண்ணும் சரியா வராது. அவனைச் சீண்டிப் பார்த்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்தாள் மல்லி.

“”இன்னும் நீங்க, நான் லவ் பண்ணப்ப இருந்த அதே பொறுப்பற்ற சரண் கிடையாது என்பதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க! இப்ப நம்ப கல்யாணம் முடிஞ்சு, பதினாறு வருசம் முடியப் போகுது. வயசுக்கு வந்தப் பொண்ணு இருக்கா, இருந்தாலும், பழைய மாதிரியே நீங்க கூரு கெட்டு அலையறீங்க..!”

எப்போதும் என்னை ஏன் இப்படி அலட்சியம் பண்ணி, எள்ளி நகையாடுகிறாள்? பள்ளியில் டீச்சர் பணியிடம் காலியாய் இருக்கென சொன்னதே மல்லிதானே? அரசு கோட்டாவில் கெமிஸ்டிரி டீச்சர் பணியிடத்தை நிரப்பச் சொல்லி அரசாணை வந்திருக்கிறது என்றாள். பள்ளி தாளாளருக்கு அம்பதாயிரம் கொடுத்தா வேலை கிடைச்ச மாதிரி என்று அடித்துச் சொன்னதே அவள்தானே? தாளாளருக்கு அம்பதாயிரம் கொடுக்க முன்வரும் போது செüடேஸ்வரனுக்கு பத்தாயிரம் கொடுத்தால் என்ன தப்பு? இதற்குப் போய் ஏன் இப்படிக் கத்தறா?

“”என்னடி சொன்னே… நானா கூரு கெட்டு அலையறேன்?” உறுமினான்.

தொனி மாறுபாட்டை வைத்து அவள் சுதாரித்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் சாதாரணமாய்தான் சொன்னாள்… “”ஆமாம்… சுட்டுப் போட்டாலும் கூரோட காரியம் உங்களால் செய்ய முடியாது…”

விழுந்த அறையில் பொறி கலங்கிவிட்டது. என் சரணா என்னை அறைந்தான்? அந்தக் கேள்விதான், இன்னும் ரொம்ப பொறியைக் கலக்கியது.

அறைந்தது தனது கைதானா என்பதை நம்ப முடியாதது போல், தனது வலக்கரத்தையே சரண் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த முரடனையா நாம் காதலித்துக் கல்யாணம் செய்தோம் என்பதை, நம்ப முடியாதது போல, மல்லிகாவும் சரணை வெறித்துப் பார்த்தாள். முட்டி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, வேகமாக படுக்கையறைக்குச் சென்று, கதவை அறைந்து மூடினாள்.

“”மல்லி.. மல்லி.. ஐயாம் வெரி சாரி..” என பின்னாலேயே ஓடிவந்த சரணை, அவள் சட்டைச் செய்யவில்லை.

நல்லவேளை, வீட்டில் மகள் ஜானவி இல்லை. இப்படி ஆத்திரத்தில் அம்மாவைத் தாக்கும் அப்பனைப் பார்த்தால், ஜானு இந்த ஜென்மத்திற்கு மன்னிக்க மாட்டாள்.

ஜானவியின் ஸ்கூல் டேயில் கலை நிகழ்ச்சியில், “சிறந்த பிராக்டிகல் கேர்ள்’ விருதுக்கு ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்து, அவளுக்குப் பட்டம் தருவதுடன், கிரீடமும் சூட்டுவதும், வருசா வருசம் வழக்கம். உலக அழகிப் போட்டியைப் பார்த்து, அதேமாதிரி ஒன்றை நம்ம கலாசாரத்தை விட்டு ரொம்ப விலகிப் போகாமல், ஆனால் அதே ஆடம்பரத்துடனும் பளபளப்புடனும் நடத்தும் செப்படி வித்தை இது.

அதில் ஜானவி கடைசி மூன்று பேர்களில் ஒருத்தியாகக் கடைசி சுற்றுக்குத் தேர்வாகி இருந்தாள். இதில் மல்லிக்குத் தாங்கமுடியாத பெருமை.

வெற்றி பெற்றாக வேண்டும். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற இறுக்கம், ஜானவியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. சரணும் ஜானுவும் முந்தைய நாள் போட்ட சண்டையை மூட்டைக் கட்டி வீட்டிலேயே வைத்துவிட்டு, ஒருவருக்கொருவர் அளவெடுத்துச் செய்யப்பட்ட தம்பதியினரைப் போல, அங்கே காட்சியளித்தனர்.

கடைசி சுற்றுக்கு வந்திருந்த மாணவிகளின் அறிவுத் திறமையைச் சோதிக்கும் கேள்வியை, விழாவுக்கு வந்திருந்த விருந்தினரின் மனைவி கேட்டார். அவர் கேட்ட கேள்வி இதுதான்:

“”ஜானவி! உன்னை ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என நினைத்துக் கொள்! (ஜானவி சிரித்துக் கொண்டே கேள்வியை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள். ஜானவியால் இப்படி உன்னிப்பாய் கவனிக்க முடியும் என்பதையே சரணால் நம்ப முடியவில்லை. அவள் இயல்பாய் இருக்கிறாளா அல்லது இயல்பாய் இருப்பது போல் நடிக்கிறாளா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.)

“”முறையில்லாத தகுதியற்ற ஒருவருக்கு நல்ல சம்பளம் தரும் வேலையைப் போட்டுக் கொடுப்பது என்று உன் கம்பெனி சேர்மன் முடிவெடுக்கிறார். உனக்கு அது சரியாப் படலை, அதுக்கு எப்படி நீ ரீயாக்ட் பண்ணுவே”

“”தப்புனு சேர்மனுக்குச் சொல்லிப் பார்ப்பேன். அவர் ஒத்துக்கலைனா, சினிமாவிலே வர மாதிரியெல்லாம் வேலையை ராஜினாமா பண்ணிடமாட்டேன். தேர்ந்தெடுக்கப்பட்டவரைக் கைகுலுக்கி வரவேற்றாலும், அவரிடம் ஜாக்கிரதையா நடந்துக்குவேன்” என்றாள் ஜானவி.

பதிலுக்குப் பெரும் கைத்தட்டல். இறுதியாக முதல்பரிசு ஜானவியின் காலடியில் வழியில்லாமல் விழுந்தது. பக்கத்தில் இருந்த இன்னொரு பெற்றோர், “இந்தக் காலத்துக் குழந்தைகள் ரொம்ப கியூட்..’ என்றனர்.

விடைபெறும்போது, பள்ளி முதல்வர், “”உங்கப் பொண்ணு பெஸ்ட் “பிராக்டிகல் கேர்ளா’கத் தேர்ந்தெடுக்கப்பட்டதில், உங்களுக்குச் சந்தோசம்தானே..?” என்று வினவினார்.

இக்கேள்விதான் சரணை உசுப்பியது: “”பச்சைச் சந்தர்ப்பவாத்திற்குப் பரிசுக் கொடுத்துப் பாராட்ட, உங்க பள்ளிக்கு வெட்கமாயில்லை?”

இதைக் கேட்டதும் முதல்வர் மல்லி, ஜானு என மூவரின் முகமும் பொசுங்கியது. அப்பா என்ன லூஸô என்ற கேள்வித் தொக்கி நிற்க, ஜானவி அம்மாவைப் பார்த்தாள். சரண் கோபத்தோடு அங்கிருந்து விலகிச் சென்றான்.

வீட்டிற்கு வந்ததும், பெரும் பூகம்பம். ஜானவி கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.

“”அம்மாவுக்குக் கெமிஸ்டிரி டீச்சர் போஸ்டிங் வாங்குறதுக்கு, அம்பதாயிரம் கொடுக்கத் தயாரா இருக்கீங்க! அதுக்காக அப்பாவுக்கு அந்த ஸ்கூல் கரஸ்பாண்டன்டைப் பாக்கப் போக எந்தத் தயக்கமும் இல்லை! ஆனா எங்க ஸ்கூலுக்கு வந்தா மட்டும் பெரிய மகாத்மா காந்தி மாதிரி வேஷம்! எனக்கு உங்கப் பொண்ணுன்னுச் சொல்லிக்கவே வெக்கமா இருக்குது!”

சரண் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.

“”பணம் கொடுத்தாவது இந்த வேலையை வாங்கணும்னு அம்மாவை முரண்டு பிடிக்க வச்சதே, நீதான் என்பதை மறந்துவிடாதே ஜானு! இன்னும் ஆடம்பரமா இருக்கணும்னா என் சம்பளம் போதாதுனு, அம்மாவையும் வேலைக்குப் போகத் தூண்டியதே நீதான். இப்ப அதுலே துளியும் சம்பந்தம் இல்லாதபடி, “பணம் குடுத்துதானே அந்த வேலையை வாங்க இருக்கீங்க’னு சொல்றே! இந்த வேலையை வாங்கித் தரலைன்னா நாண்டுகிட்டு சாவேனு உங்க அம்மா முரண்டு பிடிப்பதே உன்னால்தான்! இரட்டை வேஷம் போடறது நீ என்பதை மறந்துடாதே! உண்மையிலே நீ என்னை உன் அப்பனு சொல்லலைனா, அது நீ எனக்குச் செய்யும் பெரும் மரியாதை! அப்படிதான் அதை நான் பாக்கிறேன்!”

தாயும் மகளும் அவனின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால் நொறுங்கிப் போனார்கள். ஜானவி திகிலடித்து மல்லியைப் பார்க்க, மல்லிகாவும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.

அறையின் வாசலில் அழகுத் தமிழில் தாளாளர் என்று எழுதப்பட்டிருந்தது. உள்ளே அழைத்த போது, நுழைந்தால், அறையின் ஏ.சி. சுகமாய் இருந்தது. ஏதோ பாலிவுட் திரைப்படத்தில் வரும் ஆடம்பர அறைக்குள் தவறி நுழைந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு சரணுக்கு ஏற்பட்டது. அந்த ஆடம்பரத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத, பிரேம் செய்யப்பட்ட காந்தி, பாரதி, அரவிந்தர், காமராஜர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

“”தம்பீ சரண்! நம்பச் சாதிப் பொம்பளைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கணும்னுதான், இந்தப் பள்ளியையே நா நடத்துறேன்! இப்பக் கவர்ன்மென்ட் வேகன்சி ஒண்ணு வந்திருக்குது. அதுக்கு நிறைய காம்படீசன். இருந்தாலும் நம்ப டிரஸ்ட் செகரட்டரி உங்க பொண்டாட்டிக்குதான், இந்த வேலையைக் கொடுக்கணும்னு சொல்லிட்டார். அவர் உங்க மாமனாரோட கிளாஸ்மேட்டாம். செகரட்டரியே சொன்னப்புறம் நான் எப்படி மறுக்கமுடியும்?”

அதிகம் பேசியதில் தாளாளருக்கு இருமல் வந்தது. “”எல்லாம் நம்ப சாதி ஜனங்களுக்காதான் நா இப்படி ஓடா ஒழைச்சுத் தேஞ்சு போறேன்! கேட்டீயா? ஒரு பயலுக்கும் நம்ப உழைப்பின் அருமை தெரிய மாட்டேங்குது!”

சிறிது நேரத்துக்குக் கண்ணை மூடிக் கொண்டு எதையோ யோசித்தார்:

“”நம்ப ஸ்கூல் கமிட்டியிலே உள்ள ஒரு பய அவனுக்கும் பத்தாயிரம் வேணும்னு, புதுசா அடி போடறான். அதனாலே தம்பீ அறுபதாயிரம் கொடுத்துடுக. இந்தப் போஸ்டிங்குக்கு ஓர் அறுபதாயிரம் கொடுக்கறதாலே நீங்க ஒண்ணும் கொறைஞ்சிடமாட்டீங்க! நம்ப ஸ்கூலிலே, புள்ளைகளைச் சேக்க அவனவன் இருபதாயிரம் முப்பதாயிரம்னு டொனேஷன் தர தயாரா இருக்கான். இதெல்லாம் பாக்கிறச்ச, அப்பாயிண்ட்மெண்டுக்கு நா ஒங்கிட்டே கேக்கிற அமெüண்ட் ரொம்ப கொறைச்சலாக்கும்!”

அப்போது கதவு திடீரென திறந்து கொண்டது. காலையில் ஆலயத்தில் பார்த்த அதே வெள்ளைச் சேலை உடுத்திய விதவைப் பெண்! ஆங்காரமாய் வந்தாள்.

“”அய்யா! இந்த வேலை நிரந்தரமாகும்னுதான், கா வயிறும் அரை வயிறும் சாப்பிட்டு, ஏழு வருஷம் இங்கே டெம்பரரியா, கெமிஸ்ட்ரி டீச்சர் வேலை பார்த்தேன். இப்ப அந்த வேலை நிரந்தரமாகும் போது, அதை வேறவங்களுக்கு வாரிக் கொடுக்கிறது எப்படி ஞாயங்க?” கண்ணீர் கொட்டிக் கொண்டே, சரணை வெறுப்பாய்ப் பார்த்தாள்.

இதற்கு இடையில், தாளாளர் மூர்க்கமாய் தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.

“”ஏண்டி ஆத்தா அய்யாவுக்குத் தெரியாம சாதிவிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடினவதானே நீ? கட்டினவனை விபத்திலே பறிகொடுத்து, கைக்குழந்தையோட ஒத்தையா நின்னப்ப, ஒனக்கு வேலைப் போட்டுக் கொடுத்து, உன்னைக் காப்பாத்துனது நாங்க. அப்போ நாங்க பவிசா தெரிஞ்சோம். இப்ப எங்களப் பாத்தா அராஜகமா தெரியுதா? என்னக் குட்டிக் கரணம் போட்டாலும் ஒனக்கு இங்கு வேலை மட்டும் கெடையாது. எவனோ கண்ட சாதிக்காரனோட ஓடிப்போனவதானே நீ? உனக்கு எப்படி நிரந்தர போஸ்டிங் போடமுடியும்? நம்பச் சாதிக்குட்டிங்கறதுன்னாலே இங்கின ஸ்கூலிலே வேலை போட்டுத் தந்துட முடியுமா? நம்பச் சாதியிலே பொறந்து நம்பச் சாதி ஆம்பிளைகளை கல்யாணம் பண்ணிக்கிறவளுக்குதான் இங்க வேலை! நினைவில் வச்சுக்கோ!”

“”இந்த வேலை மட்டும் எனக்குக் கெடைக்கலனா, நா உம்ம வீட்டு முன்னாடியே, தீக்குளிச்சுச் சாவேன். எனக்கு மட்டும் அந்த வேலை கிடைக்காமப் போனா.. நா வயிறு எரிஞ்சு விடற சாபம் உம்மைச் சும்மா விடாது! உம்ம வம்சம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெளங்காம போகும்!”

அப்பெண்மணி பத்ரகாளி மாதிரி கோபாக்கினியைக் கக்கினாள். அதற்குள் இரண்டு காவலர்கள் வந்து அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றார்கள். சரணுக்கு அங்கே உட்கார்ந்திருப்பதே, அவமானமாக இருந்தது.

தாளாளர் உட்கார்ந்தாலும் அவரது உடல் ஆத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

“”நம்ப சாதிக்காக உழைக்கிறவனை, ஒழுங்கா வேலை பாக்க விடமாட்டான்ங்க போலிருக்கு! ஜப்பானிலே வந்த மாதிரி வருஷத்துக்கு ரெண்டு தபா சுனாமி வந்து இந்த மாதிரி ஆளுங்களைத் தூக்கிட்டுப் போகணும். அப்பதான் என்னை மாதிரி உண்மையான சமூகத் தொண்டர்கள் பிரதிபலன் பாக்காம வேலை பாக்க முடியும்” விடாமல் இருமிக் கொண்டே இருந்தார். மூலையில் இருந்த கோழைக்கும்பாவில் எழுந்து போய் துப்பினார்.

போன் ஒலித்தது. மல்லிகாதான் எடுத்தாள். “”மல்லிகா, ஸ்பீக்கிங்!”

எதிர்முனையில், ஆஸ்துமா குரல் ஒலித்தது.

“”மல்லிகா பொண்ணா? ஒம்புருசன் செய்றது கொஞ்சமாவது நல்லாயிருக்கா? நாங்க போஸ்டிங் போடறதுக்கு லஞ்சம் கேக்குறோம்னும், ஏழு வருஷம் வேலைப் பார்த்த அவளை நிரந்தரம் செய்யலைணும் புகார் எழுதி, கல்வி அதிகாரி கல்வி மந்திரி என எல்லாருக்கும் தந்தி அனுப்பியிருக்கான். அண்ணாச்சியோட மருமகங்கறதால்தான், விட்டு வச்சிருந்தோம்! மற்றச் சாதிகாரப் பயல்க போட்ட ஆட்டத்தினாலே, ஒனக்கு வரவேண்டிய போஸ்டிங், இப்ப அந்தக் கலப்பு ஈனச் சாதிப் பொம்பளைக்குப் போயிடுச்சு!”

இனி அந்த வேலை தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பது தெரிந்ததும் மல்லிகாவின் குரல் கம்மியது.

“”அப்படியா? இப்ப அவரிடம் என்னச் சொல்லணும்னு விரும்பறீங்களோ, அதைச் சொல்லுங்க! அவர் வந்ததும் சொல்லிடறேன்..”

“”அந்தச் சாதிக் கெட்டப்பயலுக்கு நான்தான் எமன்னு சொல்லி வை!”

இதைக் கேட்டதும், மல்லிகாவுக்குள் ஆத்திரம் தீ மாதிரிப் பற்றிக் கொண்டது.

“”என் புருசன் கூர் கெட்டவர்தான்! நானே ஒத்துக்கறேன்! கூர் கெட்டவன் பொண்டாட்டிதானே, அவகிட்ட எதுனாலும் பேசிடலாம்னு மட்டும் நெனைச்சிடாதீங்க, அங்கிள்! அவரால தன் மனசாட்சிக்கு விரோதமா நடக்க முடியல அவ்வளவுதான். விஷயத்தை அதோட விட்டுட்டுப் போங்க.. அதுக்கு மேல அவரைப் பற்றி ஏதாவது பேசினா நா மனுசியா இருக்கமாட்டேன்.. சொல்லிப்புட்டேன்…!”

“”ஓ… மல்லிகாப் பொண்ணு! ஒன்னைப் பாத்தா எனக்குப் பரிதாபமா இருக்கு! நீ உம்புருஷனுக்கு உருவிப் போடற கறிவேப்பிலை மாதிரி மட்டும்தான்! அவனை ஜாக்கிரதையா கண்காணி.. அவன் அந்தத் தாலியறுத்தவளோட சல்லாபம் பண்ணிட்டு அலையறதா, ஊருக்குள்ள பேச்சு நடமாடுது! சாதியைக் காட்டிக் கொடுத்தவன், பொண்டாட்டியை வச்சு, எங்கே உருப்படியா குடித்தனம் நடத்தப் போறான்?”

“”யோவ்.. வாயை மூடும்! அவரொண்ணும் வேற பொண்ணோட சல்லாபம் பண்ற ஈனத்தனமான ஆளு இல்லை. ஒருவேளை அவளோடுதான் வாழறதுனு அவர் முடிவெடுத்தால் அதையும் நேரடியா தைரியமா செய்ற தில்லு அவருக்கு இருக்கு! உங்கள மாதிரி இந்த தள்ளாத வயசுலேயும், ஆஸ்துமா ஒடம்பு தாங்காதுனு தெரிஞ்சும். அந்தம்மா வீட்டுக்குப் போய் ராத்திரி கதவைத் தட்டற பேடியில்ல என் கணவர்” எனச் சொல்லிவிட்டு அழுதாள் மல்லிகா.

“”ஏய் மல்லிகா! இந்த மீடியாக்காரங்க பரப்பிவிடுற பொய்யையும் புரளியையும் நீயும் நம்பிட்டியா? இதெல்லாம் வேற சாதிக்காரங்களோட சதி!”

“”என்ன அங்கிள்! நீங்க அப்பாவோட நண்பர்ங்கிறதுனாலதான், இவ்வளவு நேரமும் நிதானமா, பேசிட்டிருக்கேன். இனிமேலும் நீங்க இங்கே போன் பண்ணினா, நான் போலீஸ்லே புகார் செய்ய வேண்டியிருக்கும்!” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

“”ஏண்டி ஜானவி.. அப்பாவைக் காணுமே? எங்கே போனாருனு கொஞ்சம் தேடேன்..?”

“”ஏம்மா அவர் வீட்டுக்கு வர வழி தெரியாத பாப்பாவா? உனக்கு வேலைக் கிடைக்காம பண்ணிட்டார் இல்லை? குற்றம் உறுத்தும். ஒருவேளை செüடேஸ்வரர் சன்னதியில் பாவ மன்னிப்பு கேட்கப் போயிருக்கிறாரோ என்னவோ?”

“”ஜானு! வாயை அடக்கிப் பேசு! இந்த வேலையே கெடைக்காமப் போனாக் கூடப் பரவாயில்லை! ஆனா அவர் எனக்கு வேணும்! செüடேஸ்வரர் கோயிலுக்குப் போய் ஒருதபா பாத்துட்டு வந்துடுவோம்!”

“”புருஷன் பேருலே பச்சாதாபம் கொட்டுதோ? அம்மா உன்னை என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை..”

“”நீ கல்யாணம் பண்ணிட்டதும் எல்லாம் புரியும்!”

மல்லிகா கட்டிய புடவையோடு கொண்டையை மடித்துக் கட்டிக்கொண்டு செüடேஸ்வரர் ஆலயத்துக்குக் கிளம்பினாள். ஜானவி வருகிறாளா என எதிர்பார்க்காமலேயே கிளம்பிவிட்டாள். ஜானவிக்கு அம்மாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வேறு வழியில்லாமல் கூடவே சென்றாள்.

குளத்துக்கரை ஆலமரத்து ஆலயத்தில் செüடேஸ்வரர், இந்த உலகத்து லீலைகள் அனைத்தையும் கண்டும் காணாதது போல், பெரும் உணர்வுகளைத் தனக்குள்ளேயே பொதித்து மறைத்து வைத்துக்கொண்டு, சாந்தமே வடிவாக அமர்ந்திருந்தார்.

குளத்து நீரில் சில்லாங் கற்களை எறிந்துகொண்டு சரண் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். எப்படி மல்லிகாவின் முகத்தில் விழிப்பது என்பதுதான் அவன் முன் தொங்கும் கேள்வி.

நேராக ஓடிப் போய் மல்லிகா சரணைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“”ஏங்க நமக்கு அந்த டீச்சர் போஸ்டிங் கெடைக்காட்டாலும் பரவாயில்லை! அதை விட்டுத் தள்ளுங்க! வீட்டுக்கு வாங்க!”

எப்படி இந்த ரசாயன மாற்றம் நடந்தது என்று புரியாமல் சரணும் ஜானவியும் மல்லிகாவைக் குழப்பத்துடன் பார்த்தார்கள்.

“”இன்னைக்கு அந்த விதவை டீச்சர் நம்ப வீட்டுக்கு வந்திருந்தாங்க! அவங்களுக்கு அந்த வேலை நிரந்தரம் ஆயிடுச்சுதாம். செüடேஸ்வரர் உங்கள் ரூபத்தில் வந்துதான், நியாயத்தை நிலை நிறுத்தியிருக்கிறாராம். அப்பதான் என் செüடேஸ்வரரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, நான் செஞ்ச தப்பு எனக்குப் புரிஞ்சது…” சரணை இன்னும் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

தனது பிரார்த்தûனைக்குச் செவி சாய்க்காமல் தோற்கடித்து விட்டு, இப்ப ஒன்றும் தெரியாதவன் போல் அமர்ந்திருக்கும் செüடேஸ்வரனை, எந்தவித அசூயையும் இல்லாது சரண் நோக்கினான். சத்யம்தான் இந்த செüடேஸ்வரன் என்பது புரிந்தது. இவன் ஜெயிப்பதை யாரும் தடுக்க முடியாது!

ஜானவிக்கு எதையும் நம்பமுடியவில்லை.

“”அப்பா… இந்த அம்மாவுக்கு என்னாச்சுனு தெரியலை! திடீர்னு இப்படி உல்டா அடிச்சுட்டாங்க…”

“”நான் உல்டா அடிக்கலை! ஆனா “பிராக்டிக்கல்-வுமனாக’ இருக்கக் கூடாதுனு திட்டவட்டமா முடிவு பண்ணிட்டேன்..” என முறுவலித்தாள் மல்லிகா.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *