கணவனின் குழந்தை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 7,371 
 

”கலா டீச்சர்! உங்களுக்கு போன் வந்திருக்கு..!” என்று ஆயாம்மா வந்து சொன்னதும் திருத்திக் கொண்டிருந்த நோட்டுகளை மூடி வைத்துவிட்டு அலுவலக அறைக்கு விரைந்தாள் கலா.

புருவங்கள் முடிச்சிட, யோசனையுடன் திரும்பி வந்தவளை… ஏறிட்டாள் தோழியான சக ஆசிரியை பரமேஸ்வரி.

”யாரு கலா போன்ல..?”

”அப்பா…” என்றவள், கொஞ்சம் தயங்கி, ”வீட்டுக்கு விஷ்வா வந்திருக்காராம். கை, காலெல்லாம் கட்டோட… குழந்தையையும் தூக்கிக்கிட்டு வந்து… என்னோட பேசணும்னு சொன்னாரம்.”

”யாரு… விஷ்வாவா? அப்பா ஏண்டி அவனையெல்லம் படியேற விடறார்? எந்த முகத்தை வெச்சுட்டு பேச வந்திருக்கான் ராஸ்கல். சரி சரி, ஹெச்.எம்-கிட்ட போயி பர்மிஷன் கேளு. எனக்கும் லாஸ்ட் பீரியட் இல்லை. நானும் கூடவே வர்றேன்!”

கலாவுக்கும் பரமுவுக்கும் இடையேயான அந்த நட்பு, புரிதலும் பகிர்தலுமானது.

”இரண்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று. எதற்காக வந்திருப்பார்..?”

– கலாவின் மனசுக்குள் விஷ்வா உலவினான்.

‘நாலு வருஷம்… நீங்காத சந்தோஷங்கள். என்னை எப்படி விஷ்வா உங்களால் துச்சமாக உதற முடிந்தது..?’

கலாவுக்கும் விஷ்வாவுக்கும் கல்யாணமாகி நான்கு வருடங்கள் மிக இனிதே உருண்டன. அந்த வீட்டு உத்தரத்தில் அதுவரை தொட்டில் தொங்காதபோதுகூட, இன்னும் காலமிருக்கு என்பதால் கணவன், மனைவி இருவருமே அதை பிரச்னைக்குரிய விஷயமாக உணரவில்லை. விஷ்வாவின் தாயே மருத்துவரைப் பார்த்து வரும்படி கூறியபோதுகூட நம்பிக்கையோடுதான் சென்றனர். ஆனால், வந்த ரிசல்ட், வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

விஷ்வா ஆல்ரைட். பிரச்னை கலாவுக்குத்தான். குழந்தை தங்காது. தங்கினாலும் நிற்காது. அவளுடைய கருப்பையின் அமைப்பு அப்படி. இயற்கையின் தவறு.

புகுந்த வீடு, திடீரென்று தன் முகத்தை மாற்றிக்கொண்டது. ஏதோ கலாதான் வேண்டுமென்றே இப்படி செய்து கொண்டதுபோல அர்த்தமின்றி புலம்பி அரற்றினாள் மாமியார். எல்லாவற்றையும்விட, விஷ்வாகூட தன்னிடமிருந்து விலகியதைத்தான் தாளமுடியாமல் குமுறினாள் கலா. ஆதரவாக கரம் பிடித்து, ‘நானிருக்கேன் கண்ணம்மா..’ என்று அவன் சொல்வதைக் கேட்க மாட்டோமோ என்று மனது ஏங்கியது.

நாட்கள் நகர, விஷ்வாவின் தாய் ஒருநாள் விசுவரூபம் எடுத்தாள். ”கலா… என் வம்சம் விளங்க அவனுக்கு சொந்தத்துலேயே ஒரு பொண்ணை பார்த்து கட்டி வெச்சுட லாம்னு இருக்கேன். நீ இங்கயே ஒதுங்கினாப்பல இருந்துக்கோ. பெண் பாவம் வேண்டாம். படிச்சவ… புரிஞ்சுக்குவனு நினைக்கிறேன்…” என்றாள் பரிதாபப்படுபவளாக.

இரவு, விஷ்வாவைத் தனிமையில் ஏறிட்டபோது, ”அம்மா ஆசைப்படறாங்க, கலா. எனக்கும் ஒரு குழந்தை வேணாமா?” என்றதும், நெறுங்கிப் போனாள். இத்தனை வருட தாம்பத்யத்துக்கு என்னதான் அர்த்தம்? அர்த்தமில்லாத இரவுகளையா இத்தனை நாளும் வெறுமையாக சந்தித்து, சங்கமித்தோம்? ஆதரவாகப் பேச வேண்டாம், அன்பாக அரவணைக்க வேண்டாம்… குறைந்தபட்சம் இரண்டாவது யோசனை, பேச்சு என்று எதற்குமே இடம் இல்லாமல் பட்டு கத்தரித்தாற்போல விஷ்வாவால் எப்படி பேச முடிகிறது?

இன்னும் பற்பல அவமானங்கள், அழுகைகளுக்குப் பின், தானாகவே தாய் வீடு வந்துவிட்டாள்.

விஷ்வாவுக்குத் திருமணம்… குழந்தை… பேரப்பிள்ளையை பார்த்த சந்தோஷத்தில் நிம்மதியாக கண்மூடிய மாமியார்… என்று வந்த அடுத்தடுத்த செய்திகள் அவளை பெரிதாகச் சலனப்படுத்தவில்லை. வாழ்க்கை ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாற்போல இயல்பாகவே ஓடிக் கொண்டிருந்தது.

கலாவும் பரமுவும் உள்ளே நுழைந்தபோது… ஹாலில்தான் உட்கார்ந்திருந்தார் கலாவின் அப்பா. அவர்களைப் பார்த்ததும் மூடியிருந்த அறையின் பக்கமாக கண்களை ஓட்டினார்.

”காரில் குடும்பத்தோட சாமி கும்பிட்டு வரும்போது ஆக்ஸிடென்ட்டாம். அந்தப் பெண் ஸ்பாட்லேயே போயிட்டாளாம். இவனுக்கு பலமான அடியாம். குழந்தைக்கு அடி, கிடி படல. நேத்துதான் அந்த ஊர்ல இருந்து டிஸ்சார்ஜாகி இங்க வந்தானாம். அவனுக்கு முடியலங்கறதால கலாவை உதவிக்கு தன்னோட அனுப்பச் சொல்றான்…” மெல்லிய குரலில் விவரித்தார் அப்பா.

”பிள்ளை பெத்து தரமுடியலைனு தள்ளி வச்சுடுவானாம்! நர்ஸ் வேலைக்கு கூப்பிட்டு போய் வச்சுக்குவானாம். ஏன்.. காசு கொடுத்து ஒரு நர்ஸை போட்டுக்கிறது. ஊருலருந்து யாரையாவது கூப்பிடுறது. நீ இதுக்கு ஒப்புக்காதே கலா…” – பரமு பொருமினாள்.

கலாவோ மௌனத்தில். மூன்று மாதம் ஓடியிருந்தது. வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமாக அல்லாடியதில் கலாவுக்குத்தான் அலைச்சல் அதிகம். பரமுவுக்கும் அப்பாவுக்கும் கலாவின் முடிவில் அரை மனசுதான். கலாதான் உதவி என படியேறி வந்தவனை மறுதளிக்கக் கூடாது என்று பிடிவாதமாகக் கூறிவிட்டாள்.

விஷ்வாவுக்கு காயம் ஆறி, கால் எலும்பு கூடி, நன்றாக நடக்க முடிந்தது. குழந்தையும் கலாவிடம் ஒட்டிக் கொண்டாள்.

”கலா…” – விஷ்வாதான் அழைத்தான்.

”இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்குமா எதுக்கு இந்த அலைச்சல்? இதுவும் உன் வீடுதானே..? இங்கயே இருந்துடு..!”

கலா சாத்துக்குடி பழத்தை உரித்துக் கொண்டிருந்தாள்…

”ஏதோ குழந்தை ஆசையில அப்ப மனசு பேதலிச்சுப் போச்சு. இப்ப நீ இல்லாம என்னால வாழ முடியாது கலா. உன் அருமையை நல்லாவே உணர்ந்துட்டேன். இப்போ இந்த குழந்தைக்கும் ஒரு தாயா உன்னோட அரவணைப்பு தேவை. ப்ளீஸ்…”

கலாவின் மௌனம் தொடர்ந்தது.

”ஒண்ணுமே பேசாமலிருந்தா எப்படி? நீ எனக்கு வேணும்மா… ப்ளீஸ்” கொஞ்சம் நெருங்கி வந்து கைகளைப் பற்றினான். மெள்ள விடுவித்துக் கொண்டாள்.

”உன் வாழ்க்கை, உன் முன்னாலே என் ரூபத்துல நிக்குது. காலாலே உதைச்சு தள்ளாதே. இந்த வீட்டுல நீ வாழ முழு உரிமையையும் நான் தரேன்”

”ஸாரி விஷ்வா..” – என்று மௌனத்தை உடைத்தவளை… மறித்தது விஷ்வாவின் கோபக்குரல்.

”என்ன ஸாரி! இத்தனை தூரம் சொல்றேன்… மனுஷனை மதிக்கமாட்டியா..? பெரிய இவளாட்டம். ஊரு, உலகத்துல செய்யாததையா நான் செய்துட்டேன்? இதோ பார் கலா, பிடிவாதத்துல முடிவெடுத்துட்டு அப்பறம் வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவே. என் குழந்தைக்குத் தாயா… எனக்கு மனைவியா உன் வாழ்க்கையைத் திரும்பவும் ஆரம்பி” விஷ்வா ஏறக்குறைய கத்தினான்.

வெளியே அப்போதுதான் வந்து சேர்ந்த பரமுவும் கலாவின் அப்பாவும் பேச்சு சத்தம் கேட்டு அப்படியே நின்றுவிட்டனர்.

”என் வாழ்க்கை எங்கே முடிஞ்சுது விஷ்வா… ஆரம்பிக்கிறதுக்கு?” – குரலில் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்ட கலா,

”வாழ்க்கையை அதே பொறுப்போடும் ரசனையோடும் நான் வாழ்ந்துட்டுதானிருக்கேன். இந்தக் குழந்தைக்கு அம்மாவா நான் இருக்கணும்னு நீங்க நினைச்சீங்கனா, குழந்தை என்னோடு… என் மகளாக மட்டும் வளரட்டும். ஆனா, உங்களுக்கு மறுபடியும் மனைவியா வாழ எனக்கு விருப்பமில்ல. எனக்கு புருஷனா இருக்கக் கூடிய தகுதியை நீங்க எப்பவோ இழந்துட்டீங்க.

ஒரு பெண்ணோட பெண்மை எங்கே அடிபட்டு, அவமானப்பட்டு நிக்குதோ… அங்கே அவளை மென்மையும், அன்பும், அக்கறையுமா அள்ளி எவன் தன்னோடு அரவணைச்சுக்கறானோ, அவன்தான் உண்மையான புருஷன். அதுக்காக நான் ஏங்கி நின்னப்ப, எந்த உறுத்தலும் இல்லாம தூரமா தள்ளி வச்சுட்டீங்களே! யோசிச்சுப் பாருங்க… குறை உங்களுக்குனு ரிசல்ட் வந்திருந்தா..?”

விஷ்வாவுக்கு முகத்தில் அறைந்தாற்போலிருந்தது.

”நிச்சயமா உங்கள மாதிரி வேற கல்யாணம்னு யோசிச்சிருக்க மாட்டேன். ‘விஷ்வா… விஷ்வா…’னு உங்கள நெஞ்சோட அணைச்சு, மனசு வாடவிடாம உருகியிருப்பேன்…”

– கண்ணில் திரையிடப் பார்த்த நீரை நிறுத்தி, தொடர்ந்தாள்.

”சரி, பழசையெல்லாம் பேசி பிரயோஜனமில்ல. தாயாக முடியாத நிலைமையில என் உடலை இயற்கை படைச்சிருக்கலாம். ஆனா, மனசால நான் எப்பவுமே தாய்தான். இந்த மண், பெண்ணுக்கு தந்த மகத்தான வரம் இது…” என்று சொன்னவள், அவனுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல்… தூளியிலிருந்த குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு விடுவிடுவென வெளியே நடந்தாள்.

காத்திருந்த அப்பாவும், பரமுவும் அவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டனர்.

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *