கடைசி கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,204 
 

22 திசம்பர் 1902

என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் அறிய ஆவல். இப்போது எல்லாம் உன் நினைவுகள் என்னை அதிகம் வாட்டுகிறது. சீக்கிரமே உன்னை கல்யாணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்கை தொடங்க வேண்டும் என்று அதிக ஆசையாக உள்ளது. ஆனால் இங்கு என்னுடைய உத்தியோகமும் வருமானமும் நிரந்திரமில்லாமல் இருக்கிறது. இங்கு இருக்கும் நிலைமையை பார்த்தால்; எல்லாவற்றையும் உதறிவிட்டு நம்ம ஊருக்கே திரும்பி வந்து விடலாம் என்று தோன்றுகிறது.

நான் இப்போது புரன்வின்ஸ் வெல்லெஸ்லியில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்யவில்லை. என்னை செலாங்கோர் எனும் மாநிலத்துக்கு தமிழ் பாடம் கத்து தரும் வாத்தியாராக அனுப்பி விட்டார்கள். புரன்வின்ஸ் வெல்லெஸ்லியில் இருந்து தண்ணிக் கப்பலில் போர்ட்டு ஸ்வித்தன்ஹம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தேன்.

பிறகு அங்கிருந்து பிரிடிஷ் படையின் டிராக்கில் ரிவர்சைட்டு எஸ்டேட் போய் சேர்ந்தேன். சில பல காரணங்களால் நான் இங்கு வந்து சேர்ததும் உனக்கு உடனடியாக கடிதம் எழுத முடியாமல் போய் விட்டது. சம்பளம் நாள் ஒன்றுக்கு 80 சென் காசு. நானும் இன்னொரு மலையாளி வாத்தியாருமாக ரெண்டு வாத்தியார்கள். பெயர் பாலன் நாயர். அந்த மலையாளி வாத்தியார் அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார். தமிழ் எழுத படிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறார். தமிழ் இலக்கணங்களை அப்படியே மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார். அவருக்கு ஒரு வெள்ளி 10 காசு சம்பளம். ஒரே ஒரு வகுப்பு அறைத்தான். இருவரும் ரெண்டாக பிரித்து கொண்டோம்.

திடிரென்று இங்குள்ள ஸ்கூல் இன்ஸ்பெக்டர், பெயர் கூட ஏதோ ’டிரைவர்’ என்று பாலன் நாயர் சொன்னார். அவர் தமிழ்ப்பாடசாலைகளை எல்லாம் மூட சொல்லி விட்டாராம். இதனால் நான் தற்போது வேலை பார்க்கின்ற; செலாங்கோர் மாநிலத்தின் ரெசிரெண்டு ’திராட்சர்’ என்கிற இங்கிலீஷ்காரர் தமிழ்ப்பாடசாலைகளுக்கு கொடுத்து வந்த காசை நிறுத்த சொல்லிவிட்டார். நான் வேலை பார்க்கும் எஸ்டேட்டின் கங்காணி பொது மக்களிடம் இருந்து காசு வாங்கி வாத்தியார்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்று யோசனை செய்தார். அப்படியும் ஒரு வாத்தியாருக்கு தான் சம்பளம் தர முடியும் என்கிற நிலை வந்த போது என் காசை நிறுத்தி விட்டார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நல்ல வேளையாக பாலன் நாயர்தான் யார் யாரிடமோ பேசி என்னை இந்த கெம்சி எஸ்டேட்டுக்கு அனுப்பி வைத்தார். பாலன் நாயருக்கு நல்ல வெளி தொடர்ப்பு உண்டு. அவரிடம் ரேடியோ இருக்கு. நிறைய உலக சமாச்சாரங்கள் சொல்லுவார். சிங்கபூரிலும் அவருக்கு நிறைய தொடர்ப்புகள் உண்டு. அடிக்கடி குவாலாலம்பூர் போவார். குவாலாலம்பூர் என்பது நம்ம ஊருக்கு மதராஸ் பட்டிணம் போன்றது. பாலன் நாயருக்கும் பிரிடிஷ் அதிகாரிகளுக்கும் நல்ல உறவு உண்டு.

நான் இந்த கெம்சி எஸ்டேட்டுக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டது. போன ஆடி மாதத்தில் வந்தேன்.

இங்கு நம் தமிழ் மக்கள் படும் துயரங்களைப் பார்க்க மனம் கொள்ளவில்லை. இதை எல்லாம் பார்க்க நான் என்ன பாவம் செய்தேன் என்றே தெரியவில்லை. இங்குள்ள காடுகள் மிகவும் அடர்த்தியாக உள்ளது. தடி தடியாக பெரிய மரங்கள் இந்த காட்டில் இருக்கிறது. நம் தமிழ் மக்கள் இந்த காடுகளை அழிப்பதற்கு படும் கஷ்டத்தை பார்க்கும் போது மனம் பெரும் துயரம் அடைகிறது. ஆரம்பத்தில் லண்டனில் இருந்து காடுகளை அழிக்க மெஷின்கள் வருவதாக சொன்னார்கள். அப்படி எதுவும் இன்று வரை வரவே இல்லை.

பிரிடிஷ் படையின் பீரங்கி குண்டுகளையும், ஆகாயத்தில் இருந்து பெரிய பெரிய குண்டுகள் போட்டும் காட்டை அழிக்கிறார்கள். குண்டு போட்டும் அழிக்க முடியாத மரங்களை நம் தமிழர்கள் தான் ரம்பத்தால் அறுத்து எடுக்கிறார்கள். மூணு மாதத்திற்கு முன்பு ஆகாயத்தில் இருந்து குண்டு போட்ட போது ஆறு தமிழர்கள் செத்து போனார்கள். இங்கேயே அடக்கம் செய்து விட்டார்கள். ஊரில் உள்ள அவர்கள் குடும்பத்துக்கு சொன்னார்களா இல்லையா என்று தெரியவில்லை. இங்கு நடப்பதை எல்லாம் பார்க்கத்தான் முடியுமே தவிர கேள்வி கேட்க முடியாது.

நான் இந்த எஸ்டேட்டில் வந்து சேர்ந்த ஆடி மாதத்தில் மலேரிய சீக்கு வந்து ரெண்டு பேர் செத்து போனார்கள். இங்கு திடிர் திடிரென்று காய்ச்சல் வந்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அது மட்டும் இல்லை; காடுகள் அழிக்க போகும் போது பாம்புகள் கடிச்சு சிலர் செத்து போகிறார்கள். பூச்சிகள் கடித்து சலம் வைத்து கொள்கிறது. சிலருக்கு உடம்பு முழுக்க அரிப்பு நோய் வந்து விடுகிறது. காடுகளை அழிக்கும் கழிவுகள் ஆற்று தண்ணீரில் கலந்து விடுவதால்; இப்போது எல்லாம் சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை.

இந்த எஸ்டேட்டில் மண்டபம் ஏதும் இல்லை. கோவிலில்தான் பாடம் சொல்லி கொடுக்கிறேன். இங்கு எனக்கு நாள் ஒன்றுக்கு 80 சென் காசு சம்பளம் என்று தான் கூறி அனுப்பினார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு எனக்கு 60 சென் காசுதான் கொடுக்கிறார்கள். மண்டோரிடம் கேட்டேன் அவர் கங்காணியை கேட்க சொன்னார். கங்காணியை கேட்டேன் அவர் எஸ்டேட் முதலாளியிடம் கேட்க சொன்னார். யார் முதலாளி என்றே தெரியவில்லை. லண்டன்வாசி என்கிறார்கள். கள்ளுகடை வருமானத்தில் தான் எனக்கு சம்பளம் தருவதாக சொன்னார்கள். நானும் அதற்கு மேல் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

மொத்தம் 11 குழந்தைகளுக்கு தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். கோவிலில் தங்கி கொள்கிறேன். சாப்பாடுதான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. கோவிலுக்கு வரும் பொம்பளைங்க சில சமயம் மிச்சம் பட்ட சாப்பாட்டை கொண்டு வந்து கொடுப்பார்கள்.

எஸ்டேட் கடையில் கணக்கு இருக்கு. ரொட்டி,காப்பி போன்றவை வாங்கிக் கொள்வேன். ஆரம்பத்தில் சமைத்துத்தான் சாப்பிட்டேன். ஆனால் இந்த கோவிலின் பூசாரிக்கு என்னை சுத்தமாக பிடிக்கவில்லை. அடுப்பங்கறை பக்கம் போனாலே வல்லு வல்லுன்னு கத்துவார். என்னை பற்றி கங்காணியிடம் ஏகத்துக்கு புகார் சொல்லி வைத்திருக்கிறார்.

எஸ்டேட் கடைக்கார செட்டியார் கொஞ்சம் நல்ல மனிதர். அவர் சொல்லவும் தான் விசயம் என்னவென்று புரிந்தது. இந்த பூசாரி சிலோனில் இருந்து வந்த தமிழர். ஆரம்பத்தில் இந்த பூசாரிதான் இங்கு தமிழ் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். அதனால் கூடுதலாக 30 சென் காசு கொடுத்து கொண்டிருந்தார்கள். நான் வந்ததால் அந்த 30 சென் காசுக்கு மண் விழுந்தது. அந்த பொறாமையில் தான் இவ்வளவும் செய்து கொண்டிருக்கிறார்.

பாலன் நாயர் போலவே இந்த கடைக்கார செட்டியாருக்கும் பட்டணத்தில் நல்ல பழக்கம் உண்டு. அவர் ஜாதிக்காரர்கள் பலர் பட்டணத்தில் நிறைய வியாபாரங்கள் செய்கிறார்கள். சிலோனில் இருந்து வந்த தமிழர்கள் கோலாலம்பூரில் ரெண்டு தமிழ்ப்பாடசாலைகள் ஆரம்பிக்க உள்ளார்களாம். அதே போல் செட்டியார்களும் ஒரு தமிழ்ப்பாடசாலையை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளார்களாம். கிருஸ்துவ குருமார்களும் இங்கு தமிழ்ப்பாடசாலைகள் அமைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

கடைக்கார செட்டியார் பட்டிணத்தில் அவருக்கு தெரிந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் நான் குவாலாலம்பூருக்கு போய் விடுவேன் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் நல்ல செய்தியோடு உனக்கு கடிதம் எழுதுகிறேன். எப்போதும் உன் நினைவுடன் தான் இங்கு என் காலத்தை கழித்துக் கொண்டிருகிறேன். முழு நிலாவை பார்க்கும் போது எல்லாம் உன் அழகிய முகம் தான் என் நினைவுக்கு வரும். உன்னை பிரிந்து மனகஷ்டத்தை அனுபவித்து வருகிறேன். சீக்கிரமே நம் வாழ்வில் வசந்தம் வீசும். காத்திருக்கிறேன் அன்பே.

இப்படிக்கு உன் மாமன்

சுப்ரமணியம்.

***

பழனிசாமி

குச்சிபாளையம் கிராமம்

விழுப்புரம், மதராஸ்

22 திசம்பர் 1902

அன்புள்ள நண்பன் பழனிசாமிக்கு வணக்கம். இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திரும்பி வந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் சில விசயங்களை மரகதமிடம் சொல்லாமல் மறைத்து விட்டேன். சொன்னால் அவள் மனம் கஷ்டப்படும்.

புரவின்ஸ் வெல்லஸ்லியில் முன்பு என்னோடு வேலை செய்து வந்த குமாரசாமி என்பவர் கூச்சிங் என்கிற ஊருக்கு டெலிகிராப் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய போயிருக்கார். அந்த ஊர் ரொம்ப தூரத்தில் இருக்காம். ஏதோ போர்னியோ தீவு என்று சொன்னார். லெட்டர் போட்டிருந்தார். என்னை உடனே கிளம்பி வர சொல்கிறார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உன்னிடம் சொல்வதில் என்ன இருக்கிறது.

அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு. என் குணம் அவருக்கு பிடித்து போய்; அந்த பொண்ணை கட்டிக்க சொல்லி என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தினார். ஊரில் எனக்காக என் முறை பெண் காத்திருப்பாதாக சொன்னேன். அப்பவும் என் மனதை மாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

கூச்சிங்கில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாகவும்; நிரந்தரமாக அங்கேயே தங்கி விடலாம் என்றும் ஆசை காட்டி கூப்பிட்டு கொண்டிருக்கிறார். மலாயா போல் இல்லாமல் அமைதியான ஊர் என்றார். பாலன் நாயரும் கூச்சிங் ஊர் பற்றி மிகவும் நல்லவிதமாகத்தான் சொல்கிறார். பிரிடிஷ் ராஜ்ஜியம் இல்லாத ஊர் என்றார். அது தனி ராஜ்ஜியமாம். எனக்கும் கூச்சிங் போக ஆசையாகத்தான் இருக்கு. ஆனால் மரகதத்தை நினைத்தால் தான் கவலையாக உள்ளது.

ஆனால் இந்த எஸ்டேட்டில் இனி என்னால் இருக்க முடியாது. அந்த பூசாரியும் கங்காணியும் ஏகத்துக்கு துன்பம் கொடுக்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. விதி விட்ட வழி.

இப்படிக்கு உன் நண்பன்

சுப்ரமணியம்.

பி.கு.

இத்துடன் மரகதத்துக்கும் ஒரு கடிதம் இணைத்துள்ளேன். பத்திரமாக அவளிடம் சேர்த்துவிடவும். நன்றி.

***

13 நவம்பர் 1903

என் அன்புக்கும் காதலுக்கும் பாத்திரமான மாமா சுப்ரமணியத்துக்கு உங்கள் அன்பு காதலி மரகதம் எழுதிக் கொள்வது. நான் நலமாக இல்லை. உங்களையே நினைத்து வாடி வதங்கி நிற்கிறேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுதி ஓராண்டுக்கு மேல் ஆக போகிறது. நீங்கள் எனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில் 22 திசம்பர் 1902 என திகதியிட்டிருந்தீர்கள். அதன் பிறகு இப்போது வரை எந்த ஒரு தகவலும் உங்களிடமிருந்து எனக்கு கிடைக்கவில்லை. நானும் இதுவரை நான்கு கடிதம் எழுதிவிட்டேன். எதற்கும் பதில் இல்லை. என் கடிதம் உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. நான் இங்கு மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன்.

என் அன்புள்ள மாமா, இந்த கடிதம் கண்டவுடன் உடனே புறப்பட்டு வரவும். உங்கள் அண்ணனை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி என்னை வீட்டில் தொந்தரவு செய்கிறார்கள். மரண அவஸ்தையாக உள்ளது. நீங்கள் இன்றி என்னால் வாழ முடியாது. என்னை கல்யாணம் செய்து கையோடு கூட்டிக் கொண்டு போங்கள். என்னை இப்படி தவிக்க விடாதீர்கள். உங்களை நினைத்த இந்த மனதில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாது.

என் அன்புள்ள மாமா, நீங்களே என் மணாளன். நீங்களே என் வாழ்க்கை. நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஆசை வார்த்தைகள் காட்டி என்னை கலங்கடித்து விட்டு, இப்போது இப்படி தவிக்க விடலாமா? தகுமா?

ஒரு வேளை உங்களுக்கு ஏதும் ஆகிவிட்டதா என்று என் மனதில் சில வினோத எண்ணங்கள் தோன்றுவது உண்டு. அந்த எண்ணம் கவலையாக மாறி என்னை நொடிக்கு நொடி வாட்டுகிறது. பிறகு நீங்கள் நலமாகத்தான் இருப்பீர்கள் என சமாதானம் அடைந்தேன். உங்களுக்கு ஏதும் ஆகி இருந்தால் நான் எப்படி உயிரோடு இருப்பேன்? என் உயிர் அல்லவா நீங்கள். இனியும் என்னை தவிக்க விடாமல் ஒரு பதில் எழுதுங்கள். இந்த பேதை பெண் உயிரோடு இருப்பதும் செத்து மடிவதும் நீங்கள் எழுதும் பதில் கடிதத்தில் தான் உண்டு.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மரகதம்.

– தமிழ் நேசன் (ஜூன் 2018)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *