கடைசியில்

 

“ஏன் விசாலம், இன்னிக்குமா சாம்பார் பண்ணலை?”

“பண்ணலை …”

“அதான் தெரியறதே, ஏன்னு கேட்டா?”

“தொவரம்பருப்பு என்ன வெலை விக்கறது தெரியுமா? எட்டு ரூபா அறுபது பைசா! இந்த லட்சணத்துல தோட்டத்துல காய்ச்சுக் கொட்டற மாதிரி தெனமும் பருப்பு அள்ளிப் போட்டு சாம்பாரா வெக்கமுடியும்?”

“தெனம் எங்கடீ வெக்கறே? கடைசியா வெள்ளிக்கிழமை அன்னிக்கு வெச்சுக் குத்தினே… நாலைஞ்சு நாளாச்சேனு கேட்டாக்க…”

“நீங்க மாசம் இன்னும் ஆயிரம் ரூபா கூட சம்பாதிங்கோ, அப்பறம் தெனமும் ரெண்டு வேளையும் சாம்பாரா வெச்சு ஜமாய்க்கறேன்!”

பஞ்சு நிமிர்ந்து அவளை வெறுப்புடன் வெறித்தான்.

“கிழிச்சே… எத்தனை வந்தாலும், இல்லேப் பாட்டு பாடிண்டு தரித்திர நாராயணனா இருக்கறதைத் தவிர ஒனக்கு வேற என்ன தெரியும்?”

“என்ன மொணமொணங்கறேள்?”

“ஒண்ணுமில்லே, நீ மோரை ஊத்து…”

நீர்மோர். தொட்டுக்கொள்ள காய்ந்த நார்த்தங்காய்.

தினமும் கொட்டு ரசத்தையும் நீர்மோரையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்திருந்த நாக்கு அடம் பண்ண மீண்டும் நிமிர்ந்தான்.

“என்ன விசாலம், ரூபாய்க்குப் பத்துனு எலுமிச்சை விக்கறது… ரெண்டு ரூபாய்க்கு வாங்கி உப்பொரைப்பா ஊறுகா போடுனு நானும் எத்தனை நாளாச் சொல்றேன்?”

“ப்பா….நாக்கைப் பாரு மொழ நீளத்துக்கு! எட்டு தினுசு ஊறுகா போட்டு வெச்சாலும் சப்புக் கொட்டிண்டு சாப்பிட ஐயா ரெடி…ஆனாலும் இவ்வளவு நாக்கு சபலம் கூடாதுன்னா … வயசாயிட்டா அல்சர், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எல்லாம் எங்கேஎங்கேனு காத்துண்டு இருக்குமாம். வாயக் கட்டிட்டா பாதி வியாதி ஓடியே போயிடும்னு அன்னிக்கு எதிராத்து டாக்டர் மாமா சொல்லலை?”

“வயசாயிட்டப்புறம்தானே விசாலம்! இப்பவே என்ன?”

“அ? இப்பப் பழக்கலைன்னா கஷ்டம், ஞாபகம் வெச்சுக் கோங்கோ….அஞ்சுல வளையாதது அம்பதுல வளையுமா?”

“எக்கேடு கெட்டு ஒழி. உன் அல்ப குணத்துக்கு சப்பைக்கட்டு வேற! வாயத் திறந்தா பழமொழி, பெரிய விவேகியாட்டம்! உன்னைத் திருத்த அந்த பிரும்மா வந்தாலும் முடியாது. கஞ்சத் தனம்னா என்னனு உன்னைப் பார்த்து ஒரு டிக்ஷனரியே எழுதிடலாம்..தரித்திரம்….”

“என்ன, திரும்ப மொணமொணங்கறேள்? வரவர பைத்திய மாட்டம் தனக்குத்தானே பேசிக்கறேளே! சரி சரி, சாப்டாச்சுன்னா எழுந்திருங்கோ …எனக்கு வேலை தலைக்கு மேல கிடக்கு…”

“என்னடி அப்படி தலைக்கு மேல வேலை?”

“மூணாவதாத்து சுந்தரிக்கு அர்ஜெண்டா ஒரு ஒயர் பை வேணுமாம். ரெண்டு நாள்ல முடிச்சுத்தாங்கோ மாமினு சொல்லி யிருக்கா…அப்புறம் கோமதி பொண்ணுக்கு ஆண்டுநிறைவு வரதாம். ஃப்ராக் தைக்கணும்னு துணி கொடுத்துட்டுப் போயிருக்கா…மூணும் ரெண்டும் அஞ்சு. வர்ற வரும்படிய விடுவானேன்!”

நீயா காசை விடுவே… சோறு தண்ணி இல்லாம இருந்தாலும் இருப்பியே தவிர, இப்படி சம்பாதிச்சு சேர்க்கறதை விடுவியா?

ஆத்திரம் அதிகமாக பஞ்சு எழுந்து கைகளைக் கழுவிக் கொண்டான்.

ஏழு வருஷங்களுக்கு முன், திருமணமான புதுசில், விழுந்து விழுந்து வேலை செய்து, சிக்கனமாய் குடித்தனம் பண்ணி, நாலு காசு சேர்ப்பவளாக மனைவி அமைந்துபோனதில் அவனும் பெருமைப்பட்டிருக்கிறான்.

ஹா! என் பெண்டாட்டி மாதிரி ஊர் உலகில் உண்டா என்ற குஷியில் சம்பளத்தை அப்படியே விசாலத்திடம் கொடுத்து, ‘செட்டும் கட்டுமா நடத்துடீ’ என்று ஆசீர்வதித்து, அன்றாடம் பஸ், காபிக்காக இரண்டு ரூபாய் என்று அவள் தந்ததை நிறைவோடு வாங்கிச் சென்றிருக்கிறான்.

ஆனால் எல்லாம் பழக்கமாக இல்லாமல், வெறியாகவே விசாலத்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தபின் சந்தோஷம் போய் எரிச்சல்தான் மண்டத் துவங்கியது.

-சோப்பு விக்கற வெலைல தெனம் ரெண்டு வேளையும் தேச்சுக் குளிக்கறது நடக்கற காரியமா? ஒரு வேளை வெறும்மன கையால அழுத்தித் தேச்சுக் குளிங்கோ, போறும்.

-ஆபீஸ்ல காபி குடிக்கறதை மொதல்ல நிறுத்துங்கோ ! கண்டதைக் குடிச்சா பித்தம் வருங்கறதோட காசும் தண்டமாகாம இருக்கும்.

-லாண்டரிக்குத் துணியப் போடறது வேஸ்ட். சாக்கடை தண்ணில அலசி, துளி நீலத்தைப் போட்டு அவன் இஸ்திரி பண்றதை உடுத்திக்கறதைவிட, அழகா நாமளே ஆத்துல தோச்சுப் போட்டுக்கலாம்.

-என்னது! ஒரு டர்க்கி டவல் வெலை பதினெட்டு ரூபாயா? இந்தப் பணத்துக்கு மூணு வருஷத்துக்குக் காசித்துண்டு வாங்கி உபயோகிக்கலாமே! இனிமே இப்படி தாம்தூம்னு செலவு பண்றதை விட்டுடுங்கோ.

-சினிமா என்ன சினிமா? பார்க்குலயும், ரோடுலயும் ஆம்பிளையும் பொம்பளையும் கையப் புடிச்சிண்டு கெக்கே பிக்கேனு பாடிண்டு ஓடும்! இதைக் காசு கொடுத்து யாராவது பாப்பாளா? எதிராத்துல டி.வி. இருக்கு. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை சினிமாவும் பார்த்துண்டா போச்சு! போனா, போடி, வராதேனு யாராவது கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி விடுவாளா என்ன!

-பழசா? இதுவா? இந்த பனியனா? ஒண்ணு ரெண்டு பொத்தல் இருக்கு, அவ்வளவுதானே! இன்னும் ஒரு மாசம் தாராளமா போட்டுக்கலாம். பெரிய மகாராஜாங்கற நினைப்புல தூக்கி எரிஞ்சுடாதீங்கோ ….

இப்படிப் போகவர விசாலம் குளவியாய்க் கொட்டினதில் ரொம்ப சீக்கிரமே தன்னையும் அறியாமல் பஞ்சு மாறித்தான் போனான். சோப்பு போட்டுத் தேய்த்துக் குளிப்பதை விட்டான். ஆபீஸ் நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடித்துக்கொண்டு இங்கே அங்கே போவதை நிறுத்தினான். லாண்டரிக்குத் துணி போடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தான்.

மஞ்சள் ஏறின வேட்டி, சிவப்புக் காசித்துண்டு சகிதம் எதிர் வீட்டுக்குப் போய் ஓஸியில் டி.வி. பார்க்கக்கூடப் பழகிப் போனான்.

ஆனால், எல்லாவற்றையும் விட்டொழித்து முக்கால் விசாலமாக மாறிவிட்டாலும், நாக்கைக் கட்டுப்படுத்த மட்டும் அவன் தவித்துதான் போனான்.

வக்கணையாய் சமைத்துப்போட மறுப்பதுடன், எல்லாம் தெரிந்த கிழவி மாதிரி விசாலம் தன் கஞ்சத்தனத்துக்கு சப்பைக் கட்டு கட்டி, அறிவுரை வேறு தரும்போது ஆத்திரம் கலந்த கையா லாகாத்தனம் குபுகுபுவென்று பொங்கும்.

“ஏண்டி சனியனே..இது காபியா இல்ல தேத்தாங்கொட்டைத் தண்ணியா? வெந்நீர்ல ஒரு ஸ்பூன் பாலையும் வெல்லத்தையும் கலந்து கொடுத்த மாதிரி என்னடி காபி இது, எழவு?”

விசாலம் பதில் சொல்லமாட்டாள். முறைப்பாள், கடுவன் பூனை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு.

பஞ்சுவுக்கு நன்றாகத் தெரியும், காபியின் லட்சணம் ஏன் இப்படி இருக்கிறது என்று.

இரண்டு பேர் இருக்கும் குடித்தனத்திற்கு விசாலம் ஒரு நாளைக்கு வாங்கும் பாலின் அளவு, சிரிக்காதீர்கள், அரை லிட்டர்.

இதற்குள்தான் இரண்டு வேளை காபியும், சாப்பாட்டுக்கு ஊற்றிக்கொள்ளும் மோரும் அடக்கம்.

கால் கிலோ காபிப் பொடியை பதினைந்து நாட்களுக்குத் தார்காட்டி வைத்துக்கொண்டு, தினம் ஒரே ஒரு ஸ்பூன் பொடியை பில்டரில் போட்டு, கொடகொடவென்று ஜலத்தை விட்டு நீர்க்க இறங்கப் பண்ணி, டிகாக்ஷன் என்ற பெயரைச் சூட்டி, கரண்டி பாலுடன் கலந்தால் அந்தக் காபி தேத்தாங்கொட்டைக் கஷாயம் மாதிரி இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

தரித்திரம். மகா தரித்திரம்.

உழைத்துக் கொட்டுகிற புருஷனின் வயிற்றுக்குச் சரியாகப் போடாமல் அது என்ன கஞ்சத்தனமோ?

பஞ்சுவுக்குப் பற்றிக்கொண்டு வரும்.

ஆரம்பகாலத்தில் தாங்கமுடியாது போய் விசாலத்திடம் சண்டை போட்டது உண்டுதான். ஆனால் அன்றைக்கெல்லாம் இந்தத் தேத்தாங்கொட்டை காபியும், சீரக ரசமும்கூடக் கிடைக் காமல் போனதுதான் நடந்திருக்கிறது. அக்கடா என்று ஈரத் துணியை வயிற்றில் பிழிந்து போட்டுக்கொண்டு, பூனையை அடுப்பில் தூங்க வழி பண்ணிவிட்டு ஜடமாய்ப் படுத்துவிடுவாள் மகராசி.

சரியான அமுக்கு… அழுத்தம்.

ஆரம்பத்தில் ஆஹா என் பெண்டாட்டி பெண்டாட்டிதான் என்று புகழ்ந்து தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வேண இடம் கொடுத்தாயிற்று.

இப்போது, அடியைப் பிடிடா பாரதபட்டா என்று திரும்பத் துவங்கி, அதட்டி, வழிக்குக் கொண்டுவருவது எங்ஙனம்?

சுபாவத்தில் பஞ்சு சாது வேறு!

முதல் வருஷம் தாண்டுவதற்குள்ளாகவே பஞ்சுவுக்குத் தன் நிலைமை தெள்ளெனப் புரிந்துபோயிற்று.

இது தானாகவும் திருந்தாது, நம்மையும் திருத்த விடாது என்று.

மன்றாடிப் பார்த்துவிட்டு, தாலி கட்டிவிட்ட தோஷத்துக் காக விட்டுக்கொடுக்க ஆரம்பித்து, அப்புறம் ஓரளவுக்குப் பழக்க மாகி, இந்தச் சிக்கனம் இவனுக்கும் இயல்பாகிப் போனதும், நண்பர்கள், உறவினர் நடுவில் இவன் கிள்ளுக்கீரையாகப் போனது நிஜம்.

- டேய், தப்பித் தவறி பஞ்சு வீட்டுக்கு யாரும் வெயிலுக்கு ஒதுங்கக்கூடப் போயிடாதீங்கோ! அவன் பொண்டாட்டி அதுக்கும் காசு கேப்பா-என்றார்கள்.

- எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டாங்கறது பஞ்சு ஆத்துக் காரிக்குப் பொருந்தாது. ஈரக்கையால்கூட ஓட்டமாட்டாங்கறது தான் சரி என்றார்கள்.

- என்னடா பஞ்சு, ஷர்ட் ஆறு வருஷம் முன்னால தீபாவளிக்கு வாங்கினதுதானே! பரவாயில்லடா, லாண்டரிக்குப் போடாம வெச்சுக்கறதுல ஒரு சௌகரியம், அழுக்குப் படை படையா படர்ந்து சட்டையக் கிழியவிடாம கெட்டியாக்கிடுத்து என்றார்கள்.

இப்படி ஊரும் உறவும் சதாசர்வகாலம் கேலி பண்ணுகிற மாதிரி குடித்தனம் செய்யும் தன் அருமை சகதர்மிணி, சேர்க்கும் பணத்தையெல்லாம் பாங்கில் போட்டு பத்திரப்படுத்தி வைக்காமல், கால் அரை சவரன்களாக வாங்கி இரண்டாம் பேர் அறியாமல் வருஷத்துக்கு ஒரு நகையாகச் செய்துகொண்டு வருவது மட்டும், பஞ்சுவுக்கு நினைக்கநினைக்க ஆச்சர்யம் தரும் சமாச்சாரம்.

வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி மாசம் முன்னூறு நானூறு சேர்த்து, தெரிந்த நகைக்கடை செட்டியாரிடம் சொல்லி நாலு மாசத்துக்கொரு தரம் ஒரு பவுன் வாங்கி, வருஷ இறுதியில் ஒரு செயினோ, ஒரு ஜதை வளையலோ பண்ணி, தன் பழைய ட்ரங்குப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுவாள். -

“எதுக்காக இப்படி நகை சேர்க்கறே?” என்றால்,

“அ? நாளைக்குப் பொண் பொறந்தா எல்லாம் தானா வந்து மொளைக்குமாக்கும்?” என்பாள் அழுத்தமான குரலில்.

“ஏண்டி, எனக்குக் கிட்டத்தட்ட எட்டு நூறு ரூபா சம்பளம் வர்றது…நாளைக்கு இன்னும் அதிகமாகாதா? அதை வச்சுண்டு பொண்ணைக் கரையேத்த முடியாதா? இப்ப இப்படி தரித்திரமா இருந்தாவது சேர்க்கணுமா?”

“தரித்திரம், தரித்திரம்னு ஒரு நாளைக்கு நாலு தரம் சொல்லிக் காட்டாட்டா சாப்பிடற சாதம் உங்களுக்கு ஜரிக்கா தான்னா?”

ஆமா…நீ தினுசு தினுசா பண்ணிப் போட்டு நா வெட்டறேன் பாரு, ஜரிக்காமப் போறதுக்கு! பத்திய சமையலாட்டம் சீரக ரசமும், வத்தக் குழம்பும் சாப்பிட்டுசாப்பிட்டு, நாக்கும் வயிறும் செத்துப் போச்சுடி, சனியனே! இப்படி வயித்தை ஒடுக்கி, காய வெச்சு உன் கர்ப்பப்பைகூட சுருங்கிப் போச்சோனு எனக்கு சந்தேகமா இருக்கு! அதான் நீ உண்டாகவே மாட்டேங்கறே…. அல்பம்!

மனசின் குமுறலை வெளியில் காட்டாமல் அவன் நின்றால் அவள் சிடுசிடுப்பாள். “இடிச்சபுளி மாதிரி இங்க நின்னுண்டு என்ன பண்ணறேள்? முன்ரூம்ல வெட்டியா லைட் எரியறது, போய் அணைச்சுட்டுப் படுத்துக்கோங்கோ…”

லைட் எரியக்கூடாது, புஸ்தகம் படிக்கக்கூடாது, கச்சேரி கேட்கக்கூடாது. காசு செலவாகும் ஒரு காரியத்தையும் பண்ணக் கூடாது.

என்ன வாழ்க்கை இது? சனியன்.

ஒழி நாயே…என்று தள்ளிவிடவும் தைரியம் இல்லை ! நீ எக்கேடு கெட்டுப் போ, நான் போகிறேன்…என்று உதறிக்கொண்டு போகவும் மனமில்லை.

இவள் மனுஷியா, இல்லை மிஷினா?

நாலைந்து தினுசு நகை பண்ணி வைத்திருக்கிறாளே, அதை யாவது ஆசை தீர வெளியே வாசலில் போட்டுக்கொண்டு செல்வாளா என்றால், அதுவும் இல்லை…

“எல்லாரும் திருஷ்டி போட்டுடுவான்னா! ஒவ்வொருத்தியும் ஆங்காரம் புடிச்சவன்னா!”

ஆமாம்… ஒட்டடைக்குச்சி மாதிரி இவள் இருக்கும் அழகுக்குக் கண் திருஷ்டி ஒன்றுதான் குறைச்சல்.

தினமும் பீச்சுக்குப் போய் உட்கார்ந்துவிட்டு வருவதென்றால் விசாலம் ஆர்வத்துடன் கிளம்புவாள்.

காற்று வாங்கக் காசு வேண்டாமே!

எதிர்வீட்டில் சென்று வெட்கமில்லாமல் ஓஸியில் டி.வி. படம் பார்ப்பது போல, யாராவது தப்பித் தவறி கல்யாணம், விசேஷம் என்று கூப்பிட்டுவிட்டாலும் போயிற்று! துளி சங்கோஜம் இல்லாமல் மூன்று வேளையும் போய் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பஞ்சுவையும் சென்றுவரச் சொல்லி வற்புறுத்துவாள்.

இன்னொருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டால் மட்டும் டயபடீஸ், கொலஸ்ட்ரால் வராதா?

தத்… வெட்கங்கெட்ட ஜன்மம்.

கை கழுவிக்கொண்டு முன்னறைக்கு வந்த பஞ்சு, கண்ணாடிக்கெதிரில் நின்று தலை வாரிக்கொண்டான்.

உள்ளங்கை அகலக் கண்ணாடியை குனிந்து வெறிக்கையில், விசாலத்தின் ஒட்டின முகரக்கட்டையின் சாயல் தன் முகத்துக்கும் வந்துவிட்ட மாதிரி தோன்ற, அவசரமாய் நகர்ந்து பேண்டை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

நிம்மதி இல்லாமல் அல்லாடிய மனசைக் கொஞ்சம் தேற்றும் வகையில், அன்றைக்கு அவனை செங்கல்பட்டு வரை சென்று, ஒரு வேலையைக் கவனித்து வரும்படி மேனேஜர் பணிக்க, சந்தோஷத்தோடு புறப்பட்டான்.

போக வர செலவு, பாட்டா எல்லாம் உண்டு என்பதோடு, ஒரு நாளாவது விசாலத்தின் சீரக ரசத்திலிருந்து தப்பிக்கலாமே!

செங்கல்பட்டில் வேலை முடிய ஏழு மணி ஆகிவிட்டது. அவசரப்படாமல் உடுப்பி ஹோட்டலில் ரொம்ப நாட்கள் கழித்து ஸ்வீட் காரத்தோடு சாப்பிட்டான். அங்கமுத்து தியேட்டரில் இரவு ஆட்டம் ‘முந்தானை முடிச்சு’ படம் பார்த்தான். இரவு ஒரு மணிக்கு வாழைப்பழம் தின்று மசாலாப் பால் குடித்து, பகலையும் இரவையும் திருப்தியாகக் கழித்துவிட்டு மூணு மணி பஸ் பிடித்து விடிகாலை ஐந்தரைக்கு பஸ் ஸ்டாண்டில் இறங்கி, வீட்டை அடைந்தால், போர்ஷன் வாசலில் சின்னக் கூட்டம்.

என்னாயிற்று?

உள்ளே நுழையும் முன் விசாலத்தின் கதறல் ‘ஹா’வென்று வரவேற்றது.

“ஐயோ போச்சே…போச்சே…எல்லாம் போச்சே…பதினெட்டு பவுன்…ஐயோ..ஐயோ….ஏழு வருஷமா சேர்த்தது போச்சே..நா என்ன பண்ணுவேன்? எந்தக் கட்டைல போறவன் எடுத்தானோ…அவன் கை அழுகிப்போக…ஐயோ–ஐயோ…ஐயோ…”

தான் ஊரில் இல்லாத ஒரு இரவில் எந்தத் திருடனோ மூக்கில் வியர்க்க வந்து, தரித்திரமாய்க் குடும்பம் நடத்தி, பெட்டி நிறைய விசாலம் சேர்த்து வைத்திருந்த நகைகளை லட்டு போல வெட்டிக்கொண்டு போய்விட்டான் என்பது புரிய பஞ்சுவுக்கு முழுசாய் இரண்டு நிமிஷங்கள் பிடித்தன.

பதினெட்டு பவுன்…

ஏழு வருஷமாய் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வெறும் வத்தல் குழம்பு, நீர்மோர் சாப்பிட்டுச் சிறுகச்சிறுக சேர்த்த நகைகள்.

தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பைத்தியக்காரி மாதிரி அழும் விசாலத்தை ஏறிடுகையில் உள்ளுக்குள் என்னமோ நமநமவென்றது.

அடிவயிற்றில் பிரசவித்து, பஹ்ஹென்ற சப்தத்துடன் வாயில் சிரிப்பு வெடிக்க, சங்கிலியாய் எழுந்த சப்தங்களை அடக்கத் தெரியாமல், அப்படியே சரிந்து உட்கார்ந்து பஞ்சு சிரிக்க, “ஐயோ! சேதி கேட்ட அதிர்ச்சில மூளை கீளை கலங்கிடுத்தான்னா?” என்று தன் நசுங்கிப்போன தகர டப்பா முகத்தைக் கோணிக்கொண்டு விசாலம் பதற, அவன் இன்னும் இன்னும் பெரிசாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

- அமுதசுரபி-தீபாவளி மலர், 1983 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ...
மேலும் கதையை படிக்க...
நல்ல இருட்டு. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரொம்ப தூரத்துக்கு நெடுஞ்சாலை தெரிந்தது. எதிரே அவ்வப்போது தொடர்ந்து வந்த லாரிகளின் எதிர் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, விளக்குகளை அணைத்து அணைத்து ஓட்டுவது குமரனுக்குப் பெரும் துன்பமாய் இருந்தது. சில லாரிக்காரர்கள் தங்கள் ஹெட்லைட்டுகளை ...
மேலும் கதையை படிக்க...
மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி ...
மேலும் கதையை படிக்க...
கங்கா நசுங்கின குட்டியூண்டு அலுமினியக் கிண்ணத்தில் எண்ணையுடன் கோவிலுக்குள் நுழையும்போது கூட்டம் அடி, பிடி என்று முண்டத் தொடங்கிவிட்டது. தூரத்தில் வரும்போதே காரிலிருந்து அந்த மாமி, பெண், பிள்ளையுடன் இறங்கி உள்ளே போவதைப் பார்த்துவிட்டு வேகவேகமாய் வந்ததால் அவளுக்கு லேசாய் மூச்சிரைத்தது. இந்த மாமியும் ...
மேலும் கதையை படிக்க...
ஸரஸு எச்சில் இட்டுக் கொண்டிருந்தபோது அப்பா உள்ளே நுழைந்து சமையல்கட்டு வாசப்படியில் தலையை வைத்துப் படுத்திருந்த அம்மாவிடம் வந்து நின்றார். பாதி எச்சில் இடுகையில் கையை எடுத்தாலோ தலையை நிமிர்த்தினாலோ அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். “எச்சில் இடறப்போ பராக்கு என்னடீ?” என்பாள். “அந்தக் காலத்துலே நாங்கள்ளாம் ...
மேலும் கதையை படிக்க...
தாய்மை..ஒரு கோணம்
உறுத்தல்
போணி
அம்மாவுக்காக ஒரு பொய்
ஜனனம் இல்லாத ஆசைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)