கடவுள் சொன்ன ரகசியம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,556 
 

கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற உறுத்தலும் இல்லாம இல்லை… அம்மா..! சொல்றதைக் கேட்டு நல்லா படிச்சிருந்தா.. இன்னிக்கு இப்படி அல்லாட வேண்டியிருக்குமா..?

அம்மாவோட கண்ணீர் புரிய வைக்காததை நேர நேரத்திற்கு வருகிற பசி புரிய வைச்சிடுச்சி..! எந்த வேலைக்கும் போகமுடியல மூட்டை தூக்கிறது, கூலி வேலைன்னு போனா..! சரியான சாப்பாடு இ்ல்லாததால செய்ய முடியமாட்டேங்குது. இரண்டு மூட்டைக்கு மேல தூக்க முடியலன்னா… யாருதான் வேலை கொடுப்பாங்க..?

சும்மா சுத்தி சுத்தி வரது ஒரு கொடுமைன்னா… நாலு வீடு வேலை செஞ்சி மூனு வேளைக்கும் அம்மா போடுற சோறை சாப்பிடும்போது ரொம்ப கஷ்டமாயிருக்கு… சில சமயம் தொண்டையில இருந்து சாப்பாடு உள்ளேயே..! இறங்காது. கண்ணுல இருந்து தண்ணி கொட்டும், அம்மாதான் ஆறுதலா… பேசுவாங்க…

நிலமை இப்படியே போனா என்ன செய்ய முடியுமுன்னு புரியல… தங்கச்சி வேற படிச்சிட்டு இருக்கா..! அவளுக்கு மாப்பிள்ளை பாக்கனும், கல்யாணம் செய்யனும், இப்ப ஒன்பதாம் வகுப்புதான் படிக்கிறாள். இருந்தாலும் காலம் கட கடன்னு ஓடிடுமே..! கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைக்கவும், தோணாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

என்ன.. ராசா..! எதுக்கு அழற..? பதட்டமாய் அம்மாவின் குரல் வர அவசரமாய் கண்களைத் துடைத்தவன் இல்லமா..! ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்லமா..!

வாஞ்சையாய் தலையைத் தடவியவளின் கைகளை பிடித்தவன் அதில் தன் முகத்தை வைத்து தாங்க முடியாமல் கதறி அழுதான். என்னை மன்னிச்சிடுங்கம்மா..! உங்க பேச்சை கேட்காம… ஊரு சுத்தி வந்ததுக்கு கடவுள் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரு…

எந்த வேலையும் கிடைக்கல.. தெண்டமா.. உட்கார்ந்து சாப்பிடறதை நினைச்சா.. எனக்கு வெக்கமா.. இருக்கு. இந்த வயசுல… உன்னை கஷ்டப்படுத்திட்டு இருக்கேனே..! விடுப்பா.. நடந்ததை நினைச்சி வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தா.. எதுவும் செய்ய முடியாது.

அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்.

என்ன செய்யறது..? எதுவுமே.. எனக்குத் தெரியாதே.. சரி.. சாப்பிட்டு முடி, கடவுள் ஏதாவது வழிகாட்டுவாரு… உங்கப்பா..! திடீர்னு செத்ததும் 2 புள்ளைங்கள வைச்சிக்கிட்டு என்ன செய்யப்போறோமுன்னு திகைச்சி நின்னேன். இதோ ஐந்து வருஷம் ஓடிடுச்சி. அவரு இல்லன்னா… வாழ்க்கையே இல்லேன்னு நினைச்சேன். செத்துப் போயிடலாமுன்னு நெனைச்சப்ப உங்க ரெண்டு பேரையும் என்ன செய்யறதுன்னு புரியல. விஷம் வாங்க கூட கையில காசு இல்ல.

அம்மா..! பசிக்குதுன்னு நீங்க காலைப்புடிச்சிக்கிட்டு அழுதப்ப ஐயோ..! கடவுளே..! அந்த நிமிஷத்தை நினைச்சா… இப்பவும் எனக்கு சொர சொரங்குது. எப்படியோ..! இரண்டு வீட்டுல பாவம் பார்த்து வேலைக்கு கூப்பிட்டாங்க. ஏதோ பொழப்பு ஓடுது,

ஆனா அப்பா சாவர வரைக்கும் ஊரைச் சுத்திக்கிட்டு இருந்த நீ சடாருன்னு புத்தி வந்து வேலைக்குப் போவேனும்னு நினைச்சே.. பாரு..! கடவுள் நம்மளை கைவிடலன்னு ஆறுதலாயிருச்சி. நீயும் என்னென்னவோ செய்யுற..! ஆனா படிப்பு இல்ல, திறமை இல்லன்னு நிரந்தரமா எதுவும் செய்ய முடியல. பார்க்கலாம் மனைசைப் போட்டு அலட்டிக்காத. எனக்கு கொஞ்சம் மயக்கமா..! இருக்கு. செத்த தலையை சாய்க்கிறேன். நீயும் படு, பாப்பா..! வந்ததும் என்னை எழுப்பு…

மகனை சமாதானப்படுத்தினாலும், மகளின் நிலமை இப்படி இருக்கேன்னு தவிக்கிற நாளில்லை. இந்த கலையிலேயே..? அடிக்கடி நெஞ்சுவலி வருது. திடீர்னு நமக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா..? இந்த புள்ளைங்களோட..! கதி என்னன்னு புரியலையே..! கடவுளே..!

இத்தனை வறுமையிலும் எண்ணெய் வாங்கி இரண்டு விளக்கை ஏத்தி காப்பாத்துப்பா..? என கண்களை மூடிக்கிட்டு நிக்கிறப்போ..! கடவுள் என்னவோ சொல்லற மாதிரி இருக்கு… ஆனா என்னன்னுதான் புரியல…

அம்மா..! எந்திரிங்கம்மா..! பாப்பா..! வந்திருச்சி,

அடக்கடவுளே..! இப்படியா..! தூங்குவேன்..? வாடிசெல்லம் கை காலு கழுவிட்டியா..?

அம்மா..! நான் வந்து அரை மணி நேரமாச்சி, அப்புறம் அசந்து தூங்கினியா அதான் எழுப்பல, அப்புறம் இப்ப பசிக்குது அதான். அம்மா..! இன்னிக்கு நீ கொடுத்த சாப்பாட்டை எல்லாம் எங்க பிரண்சுங்களே..! சாப்பிட்டுட்டாங்க… ரொம்ப நல்லா இருந்திச்சின்னு சொன்னாங்க, நீ சமைச்சா எல்லாமே சூப்பரா இருக்குதும்மா..! எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு சாப்பிட்டாங்க, நாளைக்கு கூட கொஞ்சம் சமைச்சிக் கொடும்மா..?

சரிம்மா செல்லம்..! ஆனா..? அரிசி, பருப்பு எல்லாம் வேணுமே; காய்கறி வாங்கனும் மூனு பேருக்கே இங்க முடியல, இதுல எப்படி..? யோசனையோடு முந்தானையில இருக்கிற முடிச்சி அவிழ்த்து பார்த்தப்போ..! அதுல இரண்டு ஐந்து ரூபா காசு அவளை பார்த்து சிரித்தது…

இருந்த இரண்டு கரண்டி மாவுல ஒரு முட்டையை உடைச்சி ஊத்தி அதுல, கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாயை அறிஞ்சி போட்டு, கூட கொஞ்சமா கடலை மாவு சேர்த்து அடையாகத்தட்டி இருவரும் சாப்பிடுவதை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

அம்மா..! சூப்பர் சூப்பர்மா..! உன் கை பட்டாலே எல்லாமே நல்லா இருக்கு என்றவள், அம்மா..! என் பிரண்ட்ஸ் சுசிலாவுக்கு இன்னிக்கு பொறந்தநாளு புதுசா சொக்கா போட்டு வந்துச்சு… ரொம்ப அழகா இருந்திச்சி… அவ போட்டுட்டு வந்த தோடு அழகா இருந்துச்சிம்மா..! எனக்கும் அதுபோல வேணும்மா.. வாங்கித்தருவிங்களா..?

என்ன தோடா..? அது என்ன ஐந்து பைசாவா.. பத்து பைசாவா..? சாப்பிடறதுக்கே.. தடுமாற்றமா.. இருக்கு, நீ வேற.. போய் படி,

பாரும்மா அண்ணாவை..! நீங்க சொல்லுங்கம்மா..! நீங்க மட்டும் தோடு போட்டிருக்கீங்கல்ல… எனக்கு ஏன் குச்சி போட்டுவிட்டிங்க//- எனக்கு தோடு வேணும். சரி..! சரி..! நீ அழாதே..? என்றவள் தனது காதுகளை தடவிக் கொண்டாள். அவள் கணவன் முதன் முதலில் சீட்டுக்கட்டி வாங்கிப்போட்டது. எத்தனை கஷ்டம் வந்தபோதும் அதை மட்டும் கழட்டவில்லை…
தூக்கம் வருவேன் என்றது, கைகள் காதுகளைத் தடவிக்கொண்டே இருந்தது. எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. விடியலில் எழுந்து காயெல்லாம் போட்டு ஒரே சமையலா செய்து மகளுக்கு கட்டி கொடுத்துவிட்டு அரக்க பறக்க வேலைக்கு ஓடினாள்… வேலை முடிய மணி 12 ஆகிவிடும். எத்தனை வேலை செய்தாலும் ஆயிரத்து ஐநூறுக்குமேல் கொடுக்கவே மாட்டார்கள்.வேலை முடிஞ்சி அவரச அவசரமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த கண்ணமாவின் கால்கள், தானாகவே சேட்டுக் கடை முன் போய் நின்றது.
என்ன வேணும்? ஐயா இந்த தோட்டை வைச்சிக்கிட்டு காசு கொடுக்க முடியுமா..? அடகு வைக்கனுமா..? இல்லைங்கையா..? வித்திடலாங்க… பணம் வேணுங்க… இதுக்கு ஆயிரத்து ஐநூறுதான் வரும். ஐயா..! தயவு பன்னுங்க, வாங்கும்போது நாலாயிரம் ஆச்சு. மறுநாளே வித்தாக்கூட பாதி காசுதான் வரும். இது வாங்கி ஒரு ஆறு ஏழு வருஷம் ஆகியிருக்கும். கத்தாதம்மா..! வேற எங்காயாச்சும் வித்துக்க…

ஐயா..! எனக்கு எதுவுமே தெரியாதுங்க… தயவு செஞ்சி கூட கொஞ்சம்போட்டுக் கொடுங்க… சரிம்மா! உங்கள எனக்கு நல்லா தெரியும். இரண்டு புள்ளைங்கள வைச்சிக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கீங்க… சரி..! இரண்டாயிரம் ரூபா தர்றேன். இது கம்மலுக்கு இல்ல… உங்க சுய கவுரவத்துக்கு. இந்தாங்க, ரொம்ப நன்றிங்க. பாப்பா..! தோடு வாங்க ஆசைப்படுது, இந்த இரண்டாயிரத்துல தோடு வாங்க முடியுமா..?

உங்க பொண்ணு பள்ளிக்கூடந்தானே போவுது..? இப்ப எதுக்கு தோடு..? உங்க நிலமை தெரிஞ்சதால நான் ஒரு யோசனை செல்றேன். கேட்கிறீங்களா..? சொல்லுங்கயா..! நீங்க நல்லா சமையல் செய்வீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த காசை வைச்சி கொஞ்சம் அரிசி, உளுந்து வாங்கி காலையில இட்லி சுட்டு வியாபாரம் செய்யுங்க… வெறும் சப்பாத்தி சாப்புட்டு, வாயி செத்து கிடக்குது. எங்க ஆளுங்க ஒரு இருபது குடும்பங்கள் இருக்கு. எங்க சொந்தக்காரங்க வீட்ல நீங்க செஞ்ச சாப்பாட்டை நான் சாப்பிட்டிருக்கேன். அப்படி ஒரு ருசி..! ஒரு சாம்பாரு, ஒரு சட்டினி செஞ்சீங்கன்னா போதும், இப்பயே அட்வான்சா..? ஒரு 500 ரூபாய் கொடுக்கிறேன். இரண்டு வீட்ல செய்யற வேலையை உங்க வீட்டிலயே செஞ்சா… நல்ல லாபம் கிடைக்கும். உங்க பையனுக்கும் ஒரு வேலையை நீங்க உருவாக்கிக் கொடுக்கலாம். யோசிங்கம்மா..! அப்புறம் ஒரு தோடு என்ன நெக்லசே வாங்கிக் கொடுக்கலாம். இந்தாங்க 2500 ரூபாய, காலையில… எனக்கு இட்லி, சாம்பார் கிடைக்குமா..?

ஐயோ..! தெய்வமே..! எல்லாரும் வாங்குவாங்களா..? நீங்களெல்லாம் வசதி படைச்சவங்க.. இந்த ஏழை வீட்டுல செய்யற சாப்பாட்டை சாப்பிடுவீங்களா..? சுத்தமா..? சுகாதாரமா..? நீங்க செய்யுங்க… இங்க உள்ளவங்களை வாங்க வைக்கிறது என்னோட பொறுப்பு…

நன்றிங்க..! எங்க வாழ்க்கையில ஒரு விளக்கு ஏத்தி வச்சிருக்கீங்க… காலையில இட்லி, சாம்பாரோட..! வீட்டுக்கு வாங்க…

சோர்வுடன் வந்தவள் தெம்பாக நடந்தாள் வீட்டுக்கு… ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது அவள் மனக்கண்ணில் கடவுள் சொல்ல வந்த ரகசியம் இப்போது புரிந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *