கடலுக்கு போன மச்சான்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 18,273 
 

“ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன்.

“என்னய்யா பேசுறே? போன மாசம் உடம்பு முடியாம வீட்ல உழுந்து கிடந்தியே …அப்பா நீ நல்லாயிரணும்னு வேண்டிகிட்ட நேர்த்திக்கடன். அதை தீர்த்தது தப்புங்கிரியா?”

“நேர்த்திகடனை தீர்த்துட்டில்ல, இன்னைக்கு அந்த சாமிகிட்ட போய் கடன் கேட்டு மண்ணெண்ணெய் வாங்கி, அடுப்பை எரியவுடுடி, போக்கத்தவளே சாமிதான் படியளக்கிராப்பில”

“தா, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் புள்ளையார் சாமிதான்யா படியளக்குது .போன மாசம் பூரா தொழிலுக்குப் போகாம படுத்துக்கிடந்தியே, அப்பா யாரு படியளந்தா, சாமிதான்”

“என் உயிரை பணயமா வைச்சு கடலுக்குள்ளே போய் நான் மீன் புடிக்கிறேன் நீ என்னடான்னா சாமின்றியா……கையிலே பைசா காசில்லே ,போயி சுள்ளி பொறுக்கி சோறாக்கு ….இன்மேலாவது புத்தியா பொழச்சுக்க, போடி, பிரசங்கம் பண்ண வந்துட்டா”

பவுனுக்கு அழுகையாக வந்தது, தன்னைப்பற்றி பேசினதுக்குக்கூடஅவள் வருத்தப்படவில்லை. தான் கும்பிடும் சாமியை திட்டுகிறானே, நம்ப மாட்டேனென்கிறானே என்றுதான் ஆதங்கம்.

முருகேசன் நாத்திகவாதி, மற்றபடி நல்லவன்தான்.எந்த ஒரு விஷயத்தில்தான் இருவருக்குள்ளும் முரண்பாடு. மற்றபடி எல்லா விசயங்களிலும் ஒற்றுமை இருவருக்குள்ளும்.

முருகேசன் மீன் பிடிக்க கிளம்பினான்.

“என்னடா முருகேசு, இன்னைக்கு வெள்ளெனவே கிளம்பிட்டே?”, என்றான் தோழன் பக்கிரி.

“நேத்து ஜனங்க விநாயகர் சதுர்த்தின்னு புள்ளையார் பொம்மைகளை தூக்க்கிட்டுவந்து கடல்ல கரைச்சதுல எடைஞ்சலாகி, மீனே பிடிக்க முடியலே. அதான் இன்னைக்கு வெள்ளெனவே கிளம்பிட்டேன். சாமீன்னு சொல்றானுங்க …அதையே கடல்ல போட்டு அடிக்கிறானுங்க..என்ன சாமியோ, என்ன பக்தியோ”, ஆதங்க பட்ட முருகேசு கரையில் நின்ற படகை தண்ணீருக்குள் தள்ளி ஏறி அமர்ந்து துடுப்பை போட்டான்.

கடனுக்கு வாங்கிய வஞ்சிர மீனை கழுவியபடியே பவுனு அவள் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வேண்டினாள், “சாமி என் புருஷன் ஒத்தையிலே மீனு புடிக்க போயிருக்கு. அதுக்கு நிறைய மீனு கிடைச்சு நல்லபடியா வரணும் புள்ளையாரே, உனக்கு இரண்டு தேங்காய் உடைக்கிறேன்”

முருகேசு வலையை போட்டான், கொத்துகொத்தாக மீன்கள் வலையில் சேர்ந்தன. பூரித்துபோனான். நடுக்கடலை தாண்டியும் போய் மீன்களை அள்ளினான். எல்லையற்ற சந்தோசத்தோடு கரை திரும்புகையில் திடீரென பெரிய சுனாமி அலை வந்து படகையே திருப்பிபோட்டது. அதற்கப்புறம் நடந்தது அவனுக்கு நினைவில்லை..கரையில் நின்ற பவுனு, முருகேசை காணாமல்,அக்கம்பக்கம் உள்ள மீனவர்களை கூப்பிட்டு முருகேசை தேடச்சொன்னாள்.

போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பினார்கள். நேரம் ஓட, ஓட பவுனு அழுதழுது தன் பிள்ளையாரை வேண்டியபடி கரையிலேயே அமர்ந்து விட்டாள், “‘எம் புருஷன் சொன்னது மாதிரி புள்ளையாருக்கு சக்தி இல்லையோ?சாமி என்பதெல்லாம் பொய்யா?” குழம்பிதவித்தாள்.

விடியற்காலையில்……பக்கிரி ஓடிவந்தான் ,”பவுனக்கா, ஓடியாங்க .நம்ம முருகேசு கரை ஒதுங்கி கிடக்கான். உசிரு இருக்கு. சீக்கிரம் வாங்கக்கா”

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குப்பத்தில் வைத்து வழிபடப்பட்டு, முதல் நாள் கடலில் தூக்கி வீசப்பட்ட பிள்ளையார் சிலை அருகே கிடக்க, முருகேசன் கரை ஒதுங்கி கிடந்தான்.

குப்பத்தார் கூடி அவன் மூர்ச்சையை தெளிய வைத்தார்கள். முருகேசு விழிகளால் பவுனை தேடினான், “மச்சான் ” என்று அழுதாள்.

“பவுனு, சாமிதான் காப்பத்துதுன்னு நீ சொன்னப்ப மறுத்தேன். அதுக்காகத்தான் அந்த சாமி எனக்கு பாடம் சொல்லிக் குடுக்க, நேராவே வந்துட்டாரு”, நெகிழ்ந்து போனான் முருகேசு.

“என்ன மச்சான் சொல்றே?”, புரியாமல் கேட்டாள் பவுனு.

“என்னை காப்பாத்தினது யாரு தெரியுமா? நீ கும்பிட்ட புள்ளையார்தான், மூழ்கிப்போன நான் நீந்தி நீந்தி கலைச்சு போய் மயக்கமா ஆயிட்டேன். இந்த கட்டை புள்ளையார் சிலைதான் என்னை ஏந்தி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது. நேரில் வந்து புரிய வெச்சுட்டாரு உன் சாமி பவுனு”, நெகிழ்ந்துருகினான். முருகேசனை கண்ணீரோடு அணைத்துக்கொண்டாள் பவுனு.

– 27-2-2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *