கடன் பிள்ளை

 

என் மனைவி பிரசவித்து மயக்கத்தில் கண் மூடி படுத்திருந்தாள். சொல்லி வைத்தது மாதிரி பெண் குழந்தை. மகிழ்ச்சி. ஆனால் துக்கத்துடன் வார்டை விட்டு வெளியே வந்தேன்.

காரணம்…

‘இது கடன் தீர்க்க வேண்டிய குழந்தை!’ – மனதில் கனம் ஏறியது.

எங்களுக்கு இரண்டும் ஆண் குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டாவது பெண் பிறக்குமென்று எதிர்பார்த்தோம். ஆணொன்று, பெண்ணொன்று என்கிற கணக்கில்லை. எங்களுக்குப் பெண் பிள்ளை மீது பிரியம்.

அது செக்கப் செவேலென்று சின்ன இதழுடன் ரோஜாவாக பிறக்க ஆசை. விதவிதமான உடையலங்காரம், முடியலங்காரமும் செய்து பார்க்க கொள்ளைப் பிரியம். கோடி கனவு . அதனால்தான் இரண்டாவதாகப் பெண் எதிர்பார்த்தோம். மூக்கும் குழியுமாக விமல் பிறந்து விட்டான். என்னைவிட என் மனைவி முகத்தில்தான் ஏமாற்றம். ஏமாந்து போய் விட்டாள்.

“போனாப் போகட்டுமடி. நமக்கென வயசா ஆயிதுச்சி. அவனை வளர்த்து ஆளாக்கி மூணு வருசம் கழிச்சி பெண் பெத்துக்கலாம். குடும்பக்கட்டுப்பாடு செய்துக்கலாம்!” ஆறுதல் சொன்னேன்.

“அதுவும் ஆணாகப் பிறந்தால்..?” என்றாள்.

“ஆண்டவன் சித்தம்!” முற்றுப்புள்ளி வைத்தேன்.

நிர்மல், விமல் இருவரையும் ஆசாபாசமாக வளர்த்தோம். ஆனாலும் எங்களுக்குள் பெண் ஏக்கம்!

விளைவு..?…சிலபல சமயங்களில் தற்காலிகத் தாக்கம் தீர, சின்னவனுக்குச் சடை பின்னி, பூச்சூட்டி, புது கவுன் போட்டு அழகு பார்த்தோம். பெண் பிள்ளை நளினமில்லை. பெண் பெண்தான்! ஆண் ஆண்தான்! என்றாலும் வேறு வழி இல்லை. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை!

என் மனைவி செல்வி மழலை வகுப்பு ஆசிரியை. ஒரு நாள் சாயந்தரம் அவளை அழைக்க பள்ளிக்கூட வாசலில் நான் நிற்கும்போது…கைகால்கள் முளைத்த சின்ன ரோஜா பூ ஒன்றைக் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தாள்.

நல்ல சிகப்பு. குறுகுறு கண்கள். ரோஜா உதடுகள். சுருள் முடி. சத்தியமாக அந்த சின்னஞ்சிருசு குழந்தை கை கால் முளைத்த ரோஜாதான்!

நான் அசந்து போனேன்.

“யாரடி இவ..?” கண்கள் விரிய திகைப்புடன் கேட்டேன்.

“சஞ்சனா. இந்த வருசம் சேர்ந்தாள். வயசு மூணு. என்கிட்டே ரொம்ப ஒட்டுதல். வீட்டுக்கு வர்றீயான்னு கேட்டேன். ‘ம்ம்’ ன்னு தலையாட்டினாள். இவ அம்மாக்கிட்ட கேட்டு கூட்டிக்கிட்டு வர்றேன். போகலாமா கேள் சஞ்சனா.!” ரோஜாவின் முகவாயை ஆசையாய்த் தூக்கிக் கேட்டாள்.

“போகலாம் டாடி !” முகம் மலர்ந்து -சொல்லி உதட்டில் சிரிப்புக்காட்டி பார்த்தது.

எனக்குள் குப்பென்று காதை அடைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, புல்லரிப்பு. வானத்தில் பறக்கும் உணர்வு.

என் கற்பனையில் முகிழ்த்து நின்றுலாவும் பெண் இவள்தான்.

சஞ்சனா..! பெயர் கூட புதுமை. கேள்விப்படாதது.

அவளை அப்படியே அள்ளி, முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு ஸ்கூட்டரை விட்டேன். எனக்கு ஆனந்தமாக இருந்தது.

ஸ்கூட்டருக்கும் ஒரு புது பொலிவு, பெருமை வந்தது மாதிரி இருந்தது.

அம்மா, அப்பாவைத் தவிர வேறு மனிதர்களுடன் வருகின்றோம் என்கிற உணரவில்லை அந்தக் குழந்தைக்கு. கலகலவென்று வந்தாள்.

‘அது என்ன? இது என்ன டாடி!?’ என்று வேறு சொந்த அப்பனைக் கேட்டுக் கொண்டு வருவது போல கேட்டுக்கொண்டே வந்தாள். எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

வீட்டிற்கு வந்ததும் மாற்றான் பிள்ளை என்கிற உணர்வு, புது இடமென்கிற தயக்கமில்லாமல் வண்டியை விட்டு இறங்கியதும் சொந்த வீடுபோல் உள்ளே ஓடினாள். எங்கள் குழந்தை மாதிரியே நிர்மல், விமலுடன் விளையாடினாள். ஆனாலும்…எனக்கு உள்ளுக்குள் கலக்கம்.

“ஏன்டி! ராத்திரியில அம்மா, அப்பா வேணும்ன்னு அழப்போறாள்டி…” திகிலுடன் மனைவி முகத்தைப் பார்த்தேன்.

“அழ மாட்டா. இவளைப் பெத்தவள் பாவம். இப்போ பிறந்த இரண்டாவதும் பெண். சஞ்சனா பக்கத்து வீட்டுலதான் படுப்பாளாம். நானும் ஆசையாய் அழைச்சிக்கிட்டுப் போய் அவதிப்படக் கூடாதுன்னு இதே கேள்வியைப் பெத்தவளிடம் கேட்டேன். அதெல்லாம் அழமாட்டாள். சமத்தா இருப்பாள்ன்னு சொன்னாள். அப்படியே அழுதாலும் வண்டியில தூக்கிப் போய் அரைமணி நேரத்துல விட்டுடலாம்.” செல்வி தைரியம் சொன்னாள்.

எனக்கு அப்புறம்தான் மனசு நிம்மதியானது.

என் மனைவி சொன்னது போலவே சஞ்சனா ராத்திரி அடம் பண்ணவில்லை. எங்களிருவருக்கும் இடையில் படுத்து எங்கள் மேல் கால்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கினாள். இடையில் படுக்க எங்கள் குழந்தைகளுக்கும் அவளுக்கும் கடுமையான போட்டி !

“டேய்! அவ சின்னப் பொண்ணுடா. இன்னைக்கு மட்டும் படுத்துக்கிடக்கட்டும்டா” கெஞ்சினோம்.

நிர்மல், விமல் தங்கள் உரிமை, பழக்கத்தை விட்டுக்கொடுக்கத் தயாராய் இல்லை. முடிவில் ஒரு வழியாக சமாதானம் செய்து மூவரையும் நடுவில் போட்டுக் கொண்டு படுத்தோம். நிர்மல், விமல் தூங்கியதும் அவர்களைத் தூக்கி ஆளுக்கொரு பக்கம் போட்டுக் கொண்டு சஞ்சனாவை நடுவில் படுக்க விட்டுத் தூங்கினோம். அவள் ஆளுக்கொரு காலைப் பிரித்து போட்டு நிம்மதியாகத் தூங்கினாள்.

எங்களுக்கும் திருப்தி. கொஞ்சம்கூட உசும்பவில்லை.

அன்றிலிருந்து சஞ்சனா எங்களுக்குச் செல்லப் பிள்ளை.! தத்துப்பிள்ளை!!

நினைத்துக் கொண்டால் மாலையில் அழைத்து வந்து காலையில் விட்டுவிடுவோம். கண்டிப்பாய் சனி, ஞாயிறு வாரம் ஒரு முறை எங்கள் வீட்டிலிருப்பாள்.

காலையில் இவளைப் பெற்றவள் கண்ணில் காட்டவில்லை என்றால் அவள் துடித்துப் போய்விடுவாள். இவ்வளவு அழகானக் குழந்தையைக் காணாமலிருக்க யாருக்குத்தான் மனசு வரும்..?!

எங்களுக்கும் பெண் பிறக்கும் வரைக்கும் அவள்தான் குழந்தை என்று கூட்டி வருவோம்.

அன்றும் அப்படித்தான் அழைத்து வந்திருந்தோம். காலையில் பெற்றவளிடம் விட அழைத்துச் சென்றோம். வழக்கம் போல் சஞ்சனா ஸ்கூட்டர் முன்னால் நின்றாள். என் மனைவி பின்னால் இருந்தாள்.

எங்களுடைய பொல்லாத வேளையோ, சஞ்சனாவிற்கு ஆகாத வேளையோ, இல்லை…பெற்றவர்களுக்குத்தான் சரி இல்லாத நேரமோ..?!! எது தெரியவில்லை. அது நடந்துவிட்டது.

எங்கள் உல்லாச, உற்சாக பயணத்தில் லாரி ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

ஸ்கூட்டர் மீது உரசி…தூக்கி எறியப்பட்டோம்.

எங்களுக்குப் பலத்தக் காயமில்லை. பரிதவித்து, துடித்து எழுந்து பார்த்தால்…

சஞ்சனா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

உயிர் பறிக்கப்பட்டுவிட்டது!!

அழுது புரண்டோம். எங்களைவிட மோசம் பெற்றவர்கள். பேச்சு மூச்சில்லை. இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. எவர் மீதும் தவறில்லாத உயிர் பறிப்பு. யாரை யார் நோவது..?!

ஒருநாள் துவண்ட கொடியாய்க் கிடைக்கும் பெற்றவளைப் பார்த்து நிறைய ஆறுதல் சொன்னோம்.

முடிவில்….

“நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களுக்கு ஒரு பெண்ணைப் பெத்துத் தர்றோம்” தழுதழுத்தோம்.

அவள் சரி என்று சொல்லவுமில்லை. வேண்டாமென்று மறுக்கவுமில்லை. பாவம் குழந்தையைப் பறிகொடுத்த சோகம், துக்கம்! பிரமைப் பிடித்து இருந்தாள். வெளியே வெறித்தாள். வெற்றிடத்தைப் பார்த்தாள்.

தற்காலத் தடையை நீக்கிவிட்டு நாங்கள் பிள்ளைப் பேற்றிற்குத் தயாரானோம்.

காலவெள்ளத்தில் சஞ்சனாவைப் பெற்றவள் சரியாகிவிட்டாள்.

“எப்போ பெண்ணைப் பெத்துத் தரப்போறீங்க..” என்று கேட்குமளவிற்குச் சகஜமாகிவிட்டாள்.

அந்த அளவிற்கு இடைப்பட்டக் காலத்தில் இரண்டு குடும்பங்களும் ஒன்றாகிவிட்டோம்.

கடனுக்குப் பெர்றேடுக்கும் பிள்ளை! – கருவைச் சுமக்கையில் கூட ஆசை வைக்கவில்லை. வெறுப்பும் விதைக்கவில்லை.

அந்தக் குழந்தை இப்போது பிறந்து விட்டது. கடன் தீர்க்க சொல்லி வைத்தது போல பெண்ணாகப் பிறந்து விட்டது.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் ! – தளர்வுடன் வார்டு திரும்பினேன்.

இப்போது என் மனைவி விழித்திருந்தாள். ரோஜாப்பூ நிறத்தில் பிஞ்சு குழந்தை அவளை ஓட்டிப் படுத்திருந்தது. கண்கள் மூடி தூங்கிக் கொண்டிருந்தது.

“என்ன செல்வி! நாம சொன்னபடி செய்ஞ்சிட வேண்டியதுதானே..!” பரிதாபமாகப் பார்த்து அருகில் அமர்ந்தேன். மனசே இல்லை.

“ஏங்க..! கொடுக்கணுமா..?” அவளுக்கும் தொண்டை கமறியது. கண் கலங்கினாள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மனம், உடல். கலங்காமல் என்ன செய்யும்..?

“எனக்கு மட்டும் மனசிருக்கா.? சொன்னபடி செய்யனும். அதுதான் சரி. வளர்த்துக் கொடுத்தா நமக்குக் கஷ்டம். பிரியற பிள்ளைக்குக் கஷ்டம். இப்பவே தூக்கிக் கொடுத்துடலாம். !” கரகரத்தேன்.

அவள் தலையாட்டினாள்.

பின்னால் காலடிச் சத்தம் கேட்டு திரும்பினோம்.

பத்தடி தூரத்தில்…சஞ்சனாவைப் பெற்றவர்கள்.

என் மனைவி அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.

குழந்தையைப் பார்த்ததும் மலர்ந்து…

“ஹை! சொன்ன மாதிரி பெண்ணைப் பெத்துட்டீங்களே..!” சொல்லி சிரித்தார்கள்.

“ஆமாம் !” நான் உள்ளே உயிரில்லாமல் ஒப்புக்குச் சிரித்தேன்.

“அடடே! சஞ்சனா மாதிரியே இருக்கா..!” சஞ்சனா தாய் தொட்டுப் பார்த்து சந்தோசப்பட்டாள்.

செல்வி முறுவலித்தாள்.

சஞ்சனா தகப்பன் தன் கையிலிருந்த பழக்கூடையைப் பக்கத்தில் வைத்தான்.

“இவளை நீங்க இப்பவே எடுத்துப் போகலாம்!” சொன்னேன். குரல் என்னையுமறியாமல் பிசிறடித்தது.

அவன் திகைப்புடன்…

“என்ன சார்..! விளையாட்டாய்ப் பேசினா வினையமா செய்யுறீங்க..?” சொன்னான்.

நான் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

“எங்க இழப்பு எங்களோடேயே இருக்கட்டும். உங்களுக்கும் அது தொத்த வேண்டாம். விதி வந்து சஞ்சனா போய்ட்டாள். நாங்க மனசை மாத்திக்கிட்டோம். அவளை மறந்துட்டோம். இது உங்க சொத்து. உங்க குழந்தை. எங்களுக்கு வேணாம். நீங்களே வைச்சுக்கோங்க. என்ன மாலினி..!” என்று சொல்லி அவன் மனைவி – சஞ்சனா தாயைப் பார்த்தான்.

“அதுதான் சரி!” அவளும் சந்தோசமாக சொல்லி தலையாட்டினாள்.

நான் சட்டென்று பூத்து என் மனைவியைப் பார்த்தேன். அவள் முகத்தில் பிரகாசம்.

“சார்!” தழுதழுத்தேன்.

அவன் ஆதரவாய் என் தோள் பற்றினான்.

சஞ்சனா தாய் என் மனைவி தலையை ஆதுரமாய் வருடி, குழந்தையின் கையை பாசமாய்த் தொட்டாள்!! 

தொடர்புடைய சிறுகதைகள்
அழகாக வளைந்து நெளிந்து செல்லும் கொடைக்கானல் செல்லும் மலைகளின் சாலை. வழியில் காரை ஓரம் கட்டி நிறுத்தி இறங்கிய ரகுராமன் தன்னோடு வந்திருக்கும் மனைவி ராணியை ' வா ' வென்று அழைக்காமல் சாலையோர தடுப்புச் சுவரில் ஏறினான். எதிரே... பச்சைப் பசேல் காடு. ...
மேலும் கதையை படிக்க...
1 இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான முடிவிற்கு வந்து அருகில் படுத்திருந்த மனைவி நித்யாவைப் பார்த்தான். அவள் கருமமே கண்ணாய்ப் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். எலுமிச்சை நிறம். அழகான வட்ட ...
மேலும் கதையை படிக்க...
பெரியம்மா இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி விடுவாரென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவள் இறப்பு இத்தனை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சொத்துக்கு எவ்வளவு போட்டி. .? எனக்குள் வியப்பு, திகைப்பு. அப்பா வீட்டுக் கொடுக்கலாம். எதிராளியும் தழைந்து போய் ஒருவருக்கொருவர் சமரசம் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து உருமாறி, படித்து.... திருமணத்தி;ற்குப் பிறகு அப்பன் சாவில் சந்தித்ததோடு சரி. இதோ உஸ்மான் சாலை ஒரம் நடந்து செல்ல...அருகில் ஊர்ந்து உரசியபடி ...
மேலும் கதையை படிக்க...
' பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ' தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத் தங்கமான ஆள். முதல் படத்திலேயே சூப்பர், டூப்பர் கொடுத்து பணத்தை ஒன்றுக்குப் பத்தாக அள்ளி குறுகிய காலத்திலேயே பெரிய தாயாரிப்பாளராக வளர்ந்தவர். அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
முந்தானையால் மூடிய குழந்தையை இன்னும் நெருக்கி மார்போடணைத்து ஜன்னலோரம் இன்னும் நெருக்கி அமர்ந்து, வெளியே வெறித்தாள் தனலட்சுமி. பேருந்து ஏறி இவளுக்குப் பக்கத்தில் அமர்ந்த அம்புஜம் இவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். தனலட்சுமியின் அழுதழுது வீங்கிய முகமும், பரட்டைத் தலையும், அழுக்கில் கசங்கிய புடவையுமாக இருந்தவளை ...
மேலும் கதையை படிக்க...
ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும் அதில் ஒருவனாக வெளி வந்தான். நேற்று வெளியான படம். நண்பன் ஒருவன் அதில் நடித்திருப்பதால் பார்த்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். அண்ணா ...
மேலும் கதையை படிக்க...
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ''உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !'' நெகிழ்ந்தார். ''பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.'' ...
மேலும் கதையை படிக்க...
அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ' அம்மா.....ஆ...! ' வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக் கொண்டு சுவரை வெறித்தாள். அம்மா இருந்தவரைக்கும் இவளுக்கு அல்லலில்லை, அக்குதொக்குகளில்லை. அவள் இறந்து எடுத்த பிறகுதான் பிரச்சனை படலம் ஆரம்பமாயிற்று. பதினாறு படத்திறப்பு ...
மேலும் கதையை படிக்க...
'இன்றைக்கு ஏமாறாமல் இரண்டிலொன்று பார்க்க வேண்டும் !' கதிர் மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டு சட்டையை மாட்டினான். விளக்கை அனைத்து விட்டு வீட்டுக் கதவைச் சாத்தி பூட்டிக் கொண்டு வெளியே வந்தான். பதினைந்து நிமிட நேர கால் நடைப் பயணத்தில் ஒதுக்குப் புறமான புறநகர்ப் பகுதி. தனியே ...
மேலும் கதையை படிக்க...
தண்டனை…!
அப்பாவைத் தேடி…
பெரியம்மா சொத்து…!
சம்பாதிப்பு……!
யாருப்பா அது? – ஒரு பக்க கதை
என்னாச்சு இவளுக்கு?!
கடவுள் பாதி மிருகம் பாதி…
ஆளவந்தவர்..! – ஒரு பக்க கதை
அம்மா..!
இப்படியும் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)